Monday, April 14, 2014

உன்னுடைய கோபத்தை என்னால புரிஞ்சுக்க முடியுது டியர்!

சுன்னத்தான இல்லறம்: 

சூழ்நிலை ஒன்றை கவனியுங்கள்: (பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே)

இங்கே ஒரு மனைவி – காமிலா. கணவன் ஜமால்.

ஜமாலின் சகோதரி – நபீலா.


காமிலாவுக்கு தன் கணவனின் சகோதரி நபீலாவின் பல செயல்பாடுகள் எரிச்சலை உண்டாக்கும். சூழ்நிலை அறிந்து பேசத் தெரியாதவர்.

ஒரு தடவை நபீலா தனது அண்ணன் ஜமால் வீட்டுக்கு வருகிறார். வீட்டில் ஜமால் இல்லை. காமிலா மட்டுமே வீட்டில். உரையாடல் நபீலாவுக்கும் காமிலாவுக்கும் தான்.

நபீலா: காமிலா! நேற்று ஆஸ்பிட்டல் போயிருந்தேனா, ஒரே கூட்டம். அம்மாவுக்கு முதுகு வலி. ஆஸ்பிட்டல் வர இயலவில்லை; லேடி டாக்டரிடம் மருந்து எழுதி வாங்கி வா என்று என்னை அனுப்பி விட்டார்கள். டோக்கன் போடச் சொன்னார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் – ஒரு ஐடியா வந்தது. உன் வாப்பா பெயரைச் சொல்லி டக்கென்று உள்ளே நுழைந்து விட்டேன். (காமிலாவின் வாப்பாவுக்கு அந்த டாக்டர் குடும்பம் மிகவும் பழக்கமான குடும்பம்.) டாக்டர் டோக்கன் கேட்கவில்லை. ஒரு மாதிரி பார்த்து விட்டு மருந்து எழுதித் தந்தார். உடனே திரும்பி விட்டேன். இல்லாவிட்டால் மணிக்கணக்கில் யார் அங்கே காத்திருப்பது?

காமிலா: (சற்றே எரிச்சல் அடைந்தவராக) – ஏன்? என் வாப்பா பெயரை நீங்க தப்பா பயன் படுத்தினீங்க? அதுவும் டோக்கன் வாங்காமலேயே?

நபீலா: அதுவெல்லாம் ஒரு அர்ஜென்டுக்குத் தான் காமிலா; இதுக்கு ஏன் உனக்கு இப்படி கோபம் வருது? இதுவெல்லாம் ஒரு தப்பா? ஒரு சமயத்துக்கு இப்படி செய்றதெல்லாம் தப்பே கிடையாது! தேவைப்பட்டா உங்க வாப்பா பெயரையும் பயன்படுத்துவேன்; உங்க உம்மா பெயரையும் பயன்படுத்துவேன்!

காமிலாவுக்குக் கோபம் தலைக்கேற – பேச்சு வாக்குவாதமாக மாற – நபீலா காமிலாவைத் திட்டிக் கொண்டே வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்.

என்ன திமிர் இவளுக்கு? – என்று மனதுக்குள்ளேயே புழுங்குகிறார் காமிலா.

கணவர் வீட்டுக்கு வந்ததும் மனைவியைக் கவனிக்கிறார். மனைவியின் முகத்தில் ஒரு வாட்டம்.

காமிலா தன் கணவனிடம் அனைத்தையும் சொல்கிறார். "காலையிலே உங்க தங்கை வந்திருந்தாங்களா…. டாக்டர்கிட்ட மாமிக்கு மருந்து எழுதி வாங்குவதற்கு – டோக்கன் வாங்காமலேயே – என் வாப்பா பெயரை பயன்படுத்தி மருந்து வாங்கிட்டு வந்தாங்களாம். ஏங்க என் வாப்பா பெயரைத் தவறாக பயன்படுத்தினீங்கன்னு கேட்டா – இதுவெல்லாம் ஒரு தப்பா? ஒரு சமயத்துக்கு இப்படி செய்றதெல்லாம் தப்பே கிடையாது! தேவைப்பட்டா உங்க வாப்பா பெயரையும் பயன்படுத்துவேன்; உங்க உம்மா பெயரையும் பயன்படுத்துவேன் – என்று அவங்க இஷ்டத்துக்குப் பேசுறாங்க! இது நல்லாவா இருக்கு?"

ஜமால்: நபீலாவப் பத்தித் தான் உனக்கு நல்லா தெரியுமில்ல? ஏன் அவளிடம் போய் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிற! விடும்மா அத! போய் நல்லா ரெண்டு டீ போட்டு எடுத்துக்கிட்டு வா! குடிப்போம்!

இந்த பதில் காமிலாவுக்கு திருப்தி அளிக்குமா?

நிச்சயமாக அளிக்காது! இங்கே கணவன் மனைவிக்குச் சொன்னது “அறிவுரை!”. மனைவியின் உள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் வழங்கப்பட்ட அறிவு+உரை!

காமிலா என்ன பதில் சொல்வார்?

“உங்க அட்வைஸ்க்காகவா இதனை நான் உங்களிடம் சொன்னேன்?”

விருட்டென்று எழுந்து அடுக்களைக்குச் சென்று விடுகிறார். “இவருக்குத் தேவையெல்லாம் டீயும் சாப்பாடும் தான்!”

ஆனால் ஜமால் இப்படிப் பேசியிருந்தால்?

“ஏன் இப்படி நபீலா நடந்துக்கிறா? ஒருவருடைய பெற்றோர் பெயரைத் தவறாகப் பயன்படுத்தினால் யாருக்குத் தான் கோபம் வராது? உன்னுடைய கோபத்தை என்னால புரிஞ்சுக்க முடியுது டியர்! உன் பெற்றோர்களை நீ எப்படி மதிக்கிறாய் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

காமிலா சற்றே ஆறுதல் அடைகிறார்.

“சரி, விட்டுத் தள்ளுங்க! என்ன, டீ போட்டு எடுத்துக்கிட்டு வரவா?

இங்கே என்ன நடந்தது?

கணவன் முற்றிலும் தன் மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு உரையாடியதால் – அந்த விஷயம் அத்துடன் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது.

மனைவி என்ன நினைக்கிறார்? என் கணவன் என்னைப் புரிந்து வைத்திருக்கின்றார்! என் உணர்வுகளைப் புரிந்து வைத்திருக்கிறார். என்னையும் என் பெற்றோர்களையும் மதிக்கிறார். நான் ஏதாவது எதிர்மறை உணர்வுகளுக்கு ஆட்பட்டால் நான் ஆறுதல் அடைய என் கணவன் எப்போதுமே எனக்கென்று இருக்கின்றார்!!

இங்கே கவனித்திட வேண்டியது என்னெவென்றால் – கணவன் ஜமால் தன் மனைவி காமிலாவுக்கு “அறிவுரை” வழங்கவே இல்லை! மனைவி அப்படிப்பட்ட ஒரு அறிவுரையை எதிர்பார்க்கவும் இல்லை!

இது தான் விவேகம் பொதிந்த சுன்னத்!

No comments:

Post a Comment