Saturday, April 19, 2014

இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா?

சுன்னத்தான இல்லறம்: 

ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்தால் நற்பாக்கியங்கள் உண்டு என்கிறான் வல்லோன் அல்லாஹ்!

எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு (எல்லா) நற்பாக்கியங்களும் உண்டு; இன்னும் அழகிய இருப்பிடமும் உண்டு. (13:29)

நமது குடும்பங்களிலிருந்து எங்கே போனது (தூபா எனும்) நற்பாக்கியங்கள் அனைத்தும்?

**

இஸ்லாம் மார்க்கம் பின்பற்றுவதற்கு எளிதானது!

இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; (22:78)

இலகுவான (யுஸ்ர்) பாதையை நாம் உமக்கு எளிதாக்கித் தருவோம்! (87:8)

நம் இல்லற வாழ்க்கை இலகுவாகப் போய்க் கொண்டிருக்கின்றதா? அல்லது சிக்கல் நிறைந்து காணப்படுகின்றதா?

சிக்கலாக்கியது யார்? தெரிந்து தானே வைத்திருக்கின்றோம்! பின் ஏன் நாம் இஸ்லாத்தைப் பின்பற்றுவது போல் நடித்துக் கொண்டிருக்கின்றோம்?

**

அல்லாஹு தஆலா நம்மை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்ததன் நோக்கமே மன நிம்மதி, காதல் மற்றும் கருணைக்காகத் தான்!

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.

எங்கே போனது சகீனா எனும் மன நிம்மதியும் ஆறுதலும்?

எங்கே போனது மவத்தத் எனும் காதலும் ரஹ்மத் எனும் கருணையும்?

**

எல்லாவற்றையும் சேர்த்துப்பார்த்தால் - நமது இல்லற வாழ்வில் மகிழ்ச்சி இல்லை! அமைதி இல்லை! கண் குளிர்ச்சி இல்லை! ஆறுதல் இல்லை! அன்பு இல்லை! கருணை இல்லை! நற்பாக்கியங்கள் இல்லை!

உள்ளத்தின் ஆழத்தில் ஒரு கேள்வி ஒலித்துக் கொண்டே இருக்கின்றது:

இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா?

ஆதங்கம் ஒன்று இருக்கின்றது:

மீண்டும் நல் இல்லங்களில் மகிழ்ச்சியை, அமைதியை, கண் குளிர்ச்சியை, ஆறுதலை, அன்பை, கருணையை நம்மால் கொண்டு வர முடியாதா?

நம்மை நாம் மாற்றிக் கொள்வதற்கு இன்னுமா நேரம் வரவில்லை? 

No comments:

Post a Comment