Sunday, April 6, 2014

மனைவியிடம் மென்மை!

சுன்னத்தான இல்லறம்: 

பொதுவாகவே எல்லா விஷயங்களிலுமே மென்மையை வலியுறுத்துகின்றான் வல்லோன் அல்லாஹு தஆலா.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையையே நேசிக்கிறான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


“அல்லாஹ் மென்மையானவன். மென்மையையே நேசிக்கிறான். கடினத் தன்மைக்கும், வேறெந்த பண்புகளுக்கும் அளிக்காத நற்கூலியை மென்மைக்கு அளிக்கிறான். (ஸஹீஹ் முஸ்லிம்)

அதே நேரத்தில் குறிப்பாக இல்லற வாழ்க்கையிலும் மென்மையைக் கடைபிடிக்கும்படி மார்க்கம் நமக்கு போதிக்கிறது:

அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ஆயிஷாவே! மென்மையாக நடந்துகொள். அல்லாஹ் ஒரு குடும்பத்தினருக்கு நன்மையை நாடினால் அவர்களுக்கு மென்மையின்பால் வழிகாட்டுகிறான்.”

மற்றோர் அறிவிப்பில்: “ஒரு குடும்பத்தினருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால் அவர்களிடம் மென்மையைப் புகுத்துகிறான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

பொதுவாகவே கணவன் மனைவியருக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் அனு தினமும் தோன்றும். சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கெல்லாம் சட்டென்று கோபப்பட்டு சீற்றத்தைக் கொட்டி விடுவார்கள் கணவன்மார்கள். எனவே மனைவியைக் கண்டிக்கும் சமயத்திலும் மென்மையைக் கடைபிடிக்க வேண்டும்.

“பெண், விலா எலும்பைப் போன்றவள். அவளை நீ நிமிர்த்தினால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால், அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

கடினமாக நடந்து கொண்டால் – அதாவது மென்மை போய் விட்டால்…கணவன் மனைவி உறவு முறிந்து விட வாய்ப்பளித்ததாக ஆகி விடும்!

பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மென்மை பற்றி நாம் அறிந்தே இருக்கின்றோம்! ஆனால் ஏன் நம்மால் செயல் படுத்திட முடியவில்லை? சிந்திப்போமா?

"உங்கள் உள்ளத்திலும் அறிவிலும் சுமந்திருக்கும் சிந்தனைகளை மக்கள் மயப்படுத்துவதற்கு சிறந்த வழி, அதை நீங்கள் செயட்படுத்துவதுதான். இதை தவிர வேறு குறுக்கு வழிகள் எதுவும் ஒரு சிந்தனையின், கோட்பாட்டின் வெற்றிக்கு காரணமாக இருக்க முடியாது."

- உஸ்தாத் முஹம்மத் குத்ப்(ரஹ்)

No comments:

Post a Comment