Wednesday, April 2, 2014

"அந்தப் பணம் என்னுடையது! அதனை இவர் எடுத்து எப்படி செலவு செய்யலாம்?"

சுன்னத்தான இல்லறம்:

இனி கணவன் மனைவியர் கருத்து வேறுபாடுகளைக் கலைவது சம்பந்தமாக கொஞ்சம் எழுதுவோமே!

கணவன்-மனைவி இருவர். என்னதான் எல்லாப் பொருத்தங்களையும் பார்த்துப் பார்த்துத் திருமணம் முடித்தாலும் ஆண் என்பவன் வேறு, பெண் என்பவள் வேறு என்பதால், இருவரும் வளர்ந்து வந்த சூழல்கள் வேறு வேறு என்பதால் இருவரின் ஆளுமையும் வேறு வேறு என்பதால் இல்லற வாழ்வில் கருத்து வேறுபாடுகள் வரத் தான் செய்யும்.


அது ஏன் இப்படி என்று கேட்க வேண்டியதில்லை. அது அப்படித்தான்!

கருத்து வேறுபாடுகள் எந்தெந்த விஷயங்களில் தலையெடுக்கலாம்?

பொருளாதாரம் காரணமாக இருக்கலாம். அல்லது மாமியார்-நாத்தனார் காரணமாக இருக்கலாம். குழந்தை வளர்ப்பு குறித்ததாக இருக்கலாம். இஸ்லாமிய மரபுகளைப் பேணுவதில் இருக்கலாம். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் இருக்கலாம். அது சிறியதாகவும் இருக்கலாம். பெரியதாகவும் இருக்கலாம்.

ஆனால் கருத்து வேறுபாடு தோன்றி விட்டால் அடுத்து கணவன் மனைவியர் என்ன செய்திட வேண்டும். அது குறித்து மனம் திறந்து பேசிட வேண்டும்.

ஆனால், பல கணவன் மனைவியர் அவ்வாறு பேசிடுவதில்லை. மனதுக்குள் போட்டு அடக்கி வைத்திருப்பார்கள். கோபம் வரும். சோகம் தலையெடுக்கும். அநியாயம் இழைக்கப்பட்டதாக, அவமானப்படுத்தப் பட்டதாக, காயப்படுத்தப்பட்டதாக எண்ணுவார்கள். ஆனால் வாயைத் திறக்க மாட்டார்கள்.

இதற்குப் பெயர் தான் ஆங்கிலத்தில் Resentment என்கிறார்கள். இதனை "அடக்கி வைக்கப்பட்ட கோபம்" எனலாம். இது பாட்டிலில் அடைக்கப்பட்ட உணர்வு ஆகும். இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அழுத்தம் கொடுக்கத் தொடங்கும்.

கணவன் மனைவியரிடையே இந்த கோபம் உருவாகி வளர்ந்தால் என்ன விளைவுகளை இது ஏற்படுத்திடும்?

முதலில் தனது கணவனைப் பற்றிய அல்லது மனைவியைப் பற்றிய "உயர்ந்த எண்ணம்" அடி பட்டுப்போகும். நம்பிக்கை குறைந்து விடும். முன்னர் எவ்வாறு தமக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று அவர் எண்ணிக் கொண்டாரோ அதே கோணத்திலேயே அடுத்து நிகழும் அனைத்து சம்பவங்களையும் கற்பனை செய்யத் தொடங்கி விடுவார்.

இங்கே ஒரு கணவன் மனைவி கதையை எடுத்துக் கொள்வோம்.

இருவருக்கும் திருமணம் ஆன போது மனைவியின் நெருங்கிய உறவினர் ஒருவர் திருமண நன்கொடையாக ஒரு தொகையை அந்தப் பெண்ணிடம் கொடுக்கிறார். ஆனால் மனைவியிடம் பணம் இருப்பது தெரிந்த கணவன் அந்தப் பணத்தை மனைவியிடம் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்டு வாங்கி முழுவதையும் செலவு செய்து விடுகிறார்.

அந்தப் பெண்ணுக்குக் கோபமோ கோபம்!

"அந்தப் பணம் என்னுடையது! அதனை இவர் எடுத்து எப்படி செலவு செய்யலாம்?" என்று தனக்குள்ளேயே அடிக்கடிக் கேட்டுக் கொள்கிறார்.

ஆனால், வேறு சில தருணங்களில், "சே! இது ஒரு பெரிய தொகையா? இவர் எனக்கு செய்கின்ற செலவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது ஒரு சாதாரண தொகை தானே! இதற்கு ஏன் போய் நான் இப்படி அலட்டிக் கொள்கிறேன்?" - என்றும் எண்ணிக் கொள்கிறார்.

இந்த சிந்தனை வட்டத்தில் சிக்கிக் கொண்ட அந்தப் பெண்மணிக்கு இது குறித்து கணவனிடம் பேசிட இயலவில்லை!

அடுத்து என்ன நடந்தது?

"நீ ஏன் பகுதி நேர வேலை ஒன்றில் சேர்ந்திடக் கூடாது?" என்று கணவன் ஆலோசனை சொல்கிறார். ஆனால் மனைவி அவரது நோக்கத்தையே சந்தேகிக்கிறார்.

கணவன், மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு மனைவியையும் அழைத்துச் செல்கிறார். போகும்போது சில பரிசுப் பொருட்களையும் வாங்கிச் செல்கிறார். மனைவி இதனையும் சந்தேகிக்கிறார். "எதற்காக இவர் இப்படி ஐஸ் வைக்கிறார்?"

மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே செல்கிறார். மனைவிக்காக செலவுகள் செய்கிறார். "இதுவெல்லாம் வெறும் நடிப்பு" என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறார்.

இவ்வாறு மாதக் கணக்கில் தனது கோபத்தை அடக்கிக் கொண்டிருந்த அவருக்கு ஒரு நாள் அந்த கோபம் திடீரென்று வெடிக்கிறது!

இவ்வாறு மவுனமானதொரு கோபம் ஏற்பட்டு, அது அடக்கப்பட்டு, அதற்கு அழுத்தம் தரப்பட்டு பின்னர் வெடித்திட ஏன் அனுமதித்திட வேண்டும்?

இந்த நிலை ஏன் ஏற்படுகின்றது என்பதை அறிந்து கொண்டால் தான் இந்நிலையிலிருந்து கணவன் மனைவியர் தம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

காரணங்கள்:

தன்னைப் பற்றிய குறைவான சுய மதிப்பீடு (low self esteem)

எதனையும் வெளிப்படையாகப் பேசிடத் தயக்கம் மற்றும் பயம்.

தம்மை ஒரு பலிகடாவாக (victim) கற்பனை செய்து கொள்தல்.

தன்னைப் பாதுகாக்க யாரும் இல்லை என்ற கழிவிரக்க உணர்வு.

இதற்குத் தீர்வு என்ன?

தனது சுய மதிப்பீட்டை உயர்த்திக் கொள்தல்; வல்லோன் அல்லாஹு தஆலாவிடம் உங்கள் நெருக்கத்தை அதிகரித்துக் கொள்ளும்போது - சுய மதிப்பு தானாக உயரும்!

உங்களின் எல்லாவிதமான உணர்வுகளையும் - எப்போதுமே உங்கள் துணைவரிடமே பகிர்ந்து கொள்தல்;

கருத்து வேறுபாடு மிகச் சிறிய விஷயமாக இருந்தால் - அதனைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுதல்;

ஆனால் கருத்து வேறுபாடு ஒரு பெரிய விஷயமாக இருந்தால் அது குறித்து வெளிப்படையாக அதே நேரத்தில் மென்மையாகப் பேசி விடுதல் (open and assertive communication with your spouse).

பொதுவாகவே கணவன் மனைவியர் தங்களுக்குள் "பேசிக் கொள்வது எப்படி?" (communication skills) எனும் கலையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொண்டாக வேண்டும்! கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ள இது மிகவும் அவசியம்!

No comments:

Post a Comment