Tuesday, April 15, 2014

கணவன் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்!

சுன்னத்தான இல்லறம்:

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்திருக்கும் நபி மொழி ஒன்றை இங்கே சுருக்கமாகப் பார்ப்போம்:

(முற்காலத்தில்) பதினொன்று பெண்கள் (ஓரிடத்தில் கூடி) அமர்ந்து கொண்டு ஒவ்வொருவரும் தத்தம் கணவர் குறித்த செய்திகளில் எதையும் மூடி மறைக்காமல் (உள்ளதை உள்ளபடி) எடுத்துரைப்பதென உறுதிமொழியும் தீர்மானமும் எடுத்துக்கொண்டனர்.


பின்பு - ஒவ்வொரு பெண்ணும் தத்தம் கணவர் குறித்து சொல்லிக் கொண்டே வந்தனர்.

இறுதியாக பதினொன்றாவது பெண் கூறினார்:

என் கணவர் (பெயர்) அபூ ஸர்உ. அபூ ஸர்உ எத்தகையவர் தெரியுமா?

ஆபரணங்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கிறார்.

(ஆசையாசையாக உணவளித்து) என் கொடுங்கைகளை கொழுக்கச் செய்துள்ளார். அவர் என்னைப் பூரிப்படையச் செய்திருக்கிறார். என் மனம் நிறைந்திருக்கிறது.

ஒரு மலைக் குகையில் (அல்லது) 'ஷிக்' எனுமிடத்தில்) சிறிது ஆடுகளுடன் (திரிந்துகொண்டு) இருந்த குடும்பத்தில் என்னைக் கண்ட அவர், என்னை (மனைவியாக ஏற்று) குதிரைகளும் ஒட்டகங்களும் உள்ள, தானியக் களஞ்சியமும் கால்நடைச் செல்வங்களின் அரவமும் நிறைந்த (அவரின் பண்ணை) வீட்டில் என்னை வாழச் செய்தார்.

நான் அவரிடம் எதையும் பேசுவேன்; நான் அலட்சியப்படுத்தப்பட்டதில்லை. நான் தூங்கினாலும் (நிம்மதியாக) முற்பகல் வரைத் தூங்குகிறேன். (என் தூக்கத்தை யாரும் கலைப்பதில்லை.) நான் (உண்டாலும்) பருகினாலும் பெருமிதப்படும் அளவிற்கு (உண்ணுகிறேன்) பருகுகிறேன்.

எனது குறைகள் எல்லாவற்றையும் அவர் மறைத்து விடுவார். அவர் உளப்பூர்வமாக எனக்கு முற்றிலும் கட்டுப்பட்டு விட்டார்! எந்த அளவுக்கு எனில், நான் (அவ்வளவு சிறப்பானவளா என்று) என்னையே நான் விரும்பத் தொடங்கி விட்டேன்! ( "I LOVE MYSELF!")

ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(என்னருமைக் கணவரான) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்), '(ஆயிஷாவே!) உம்மு ஸர்விற்கு அபூ ஸர்உ எப்படியோ அப்படியே உனக்கு நானும் (அன்பாளனாக) இருப்பேன்' என்றார்கள்.

இந்த நபிமொழியிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள்:

1. மனைவிக்கு இயன்ற வரையில் தாராளமாகச் செலவு செய்யுங்கள்.

2. வசதிக்குத் தகுந்தவாறு மனைவிக்கு நன்றாக உணவளியுங்கள்.(எல்லாரும் உண்ட பின்பு மீதம் இருக்கும் உணவை சாப்பிடும் மனைவியா உங்கள் மனைவி?)

3. ஒரு பெண்ணை உங்களுக்குப் பிடித்து விட்டால் , அவள் பொருளாதாரத்தில் உங்களை விட மிகவும் குறைந்த நிலையில் இருந்தாலும் அதனைப் பொருட்படுத்த வேண்டாம்.

4. உங்கள் வீட்டினிலே முழுமையான சுதந்திரம் கொடுங்கள் உங்கள் மனைவிக்கு . அந்த சுதந்திரத்தில் உங்கள் பெற்றோர் மற்றும் சகோதரிகள் தலையிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

5. மனைவியைப் பேச விட்டுக் கேளுங்கள்; காது கொடுத்துக் கேளுங்கள்; முகம் பார்த்துக் கேளுங்கள்; கேட்டுக் கொண்டே இருங்கள். நீங்கள் பேசுவதை விட அவரைப் பேச விடுங்கள்.

6. உங்கள் மனைவியின் குறைகளையும் தவறுகளையும் பொருட்படுத்தாதீர்கள்.

7. உங்கள் மனைவியிடம் உங்களை முழுமையாக ஒப்படைத்து விடுங்கள்.

8. உங்கள் மனைவியை நீங்கள் ஒரு பொக்கிஷமாக மதிப்பதை அவர் உணரும்படி நடந்து கொள்ளுங்கள்.

"உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்லபடி நடந்து கொள்பவர்களே!"(அபூஹுரைரா (ரலி); நூல்: திர்மிதி)

No comments:

Post a Comment