Saturday, June 29, 2013

விலை மதிப்பற்ற பொருள்! அற்பமான விலைக்கு!!

 

"You sold the most precious item for the cheapest price!"

"விலை மதிப்பற்ற ஒரு பொருளை, அற்பமான விலைக்கு நீ விற்று விட்டாய்!

இது இமாம் இப்னுல் கய்யிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் சொற்களில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு சொல்.

இன்றைய சூழலில் - இதனை சிந்திக்கும்போது எனக்குள் தோன்றியது:



அற்புதமான திருமண வாழ்வைத் துவக்குவதற்கு முன்னாலேயே

தன் விலை மதிப்பற்ற கற்பை

அற்பமான சுகத்துக்காகப் பறி கொடுத்து விடும்

இன்றைய இளம்பெண்களே!

விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இன்னும்

உங்களுக்கு வரவில்லையா?

திருமணம் என் இலட்சியத்துக்குத் தடையானால்?

கேள்வி:

என் இலட்சியம் நிறைவேறுகின்ற வரை திருமணத்தை ஒத்திப் போடலாமா? (ஒரு இளைஞி)

பதில்:

திருமணத்தை ஒத்திப் போடத் தேவையில்லை. உங்கள் கணவரே உங்கள் இலட்சியத்துக்கும் துணை நிற்கலாம் அல்லவா?

ஆனால் திருமணத்துக்கு முன்னரே நீங்கள் மணம் செய்து கொள்ள விரும்புபவரிடம் உங்கள் இலட்சியம் குறித்து உங்கள் நிலை என்ன என்பதை பேசிக் கொள்வது நல்லது.

திருமணம் முடிந்ததும் பேசிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டால்.....

பின்னர் கருத்து வேறுபாடுகள் காரணமாக உள ரீதியாகத் துன்பப்பட வேண்டியிருக்கும்.

புதிதாக திருமணம் முடித்த ஒரு பெண்மணியின் தாயார் சொன்னார்:

"மகள் படிக்கிறாள்; எனவே படிப்பு முடிந்ததும் தான் திருமணம் என்று சொன்னோம். திருமணம் முடித்துக் கொண்டு படிப்பையும் தொடரட்டுமே என்று சொல்லி எங்களைத் திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தார்கள். ஆனால் திருமணம் முடிந்ததும் படிப்பைத் தொடர அனுமதிக்கவில்லை."

இப்படிப்பட்ட பிரச்னைகள் வராமல் இருக்க, திருமண ஒப்பந்தத்திலேயே மணமகளின் எதிர்பார்ப்புகளை எழுதி மணமகன் வீட்டாரின் சம்மதத்தைப் பெற்றுக்கொண்டு மணம் முடித்தல் நலம் என்கிறார் இஸ்லாமிய திருமண ஆலோசகர் ஒருவர்.

கணவனின் இலட்சியத்துக்கு மனைவி துணை நிற்பதும், மனைவியின் இலட்சியத்துக்கு கணவன் துணை நிற்பதும் தான் இனிக்கும் இல்லறத்தின் மிக முக்கியமான தேவைகளுள் ஒன்று ஆகும்.

மாப்பிள்ளையிடம் பேசுவது சரியா? தவறா?

கேள்வி:

பெற்றோர் பார்த்து முடிவு செய்ததற்குப் பிறகு தனக்குப் பார்த்த மாப்பிள்ளையிடம் பேசுவது சரியா? தவறா?

பதில்:

வருங்காலக் கணவன் என்பவன் – திருமணம் ஆகும் வரை ஒரு அன்னிய மனிதனே! பெற்றோர் பார்த்து முடிவு செய்ததற்குப் பிறகும் கூட திருமணம் நின்று போய் விட வாய்ப்புகளே இல்லை என்று சொல்லிட இயலாது! எனவே ஒரு மனைவி கணவனுடன் பேசுவது போல், திருமணத்துக்கு முன்னர் இருவரும் பேசிக்கொள்ள அனுமதி இல்லை.

எனினும் – திருமணத்துக்கு முன்னர் மணப்பெண், தான் மணக்க இருக்கும் மாப்பிள்ளையுடன் பேசுவதற்கு இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி உண்டு.



ஒன்று: பெற்றோர் முடிவு செய்திடுவதற்கு முன்னரேயே, ஒரு பெண் அல்லது ஆண் – தான் திருமணம் செய்து கொள்ள இவர் பொறுத்தமானவர் தானா என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், திருமணத்தின் வழியே இருவரின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது பற்றியும் பேசிக் கொள்வதற்கு அவ்விருவருக்கும் அனுமதி உண்டு.

இரண்டு: அப்போதும் கூட அவ்விருவரும் தனிமையில் பேசிக் கொள்வதற்கு இறைவன் அனுமதிக்கவில்லை என்பதை இறையச்சம் உள்ள மணமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தன் குடும்பத்தார்கள் முன்னிலையில் தான் அப்படிப்பட்ட உரையாடலுக்கு அனுமதி உண்டு.

மற்ற படி – திருமணம் தான் நிச்சயமாகி விட்டதே என்று – இருவரும் – தனிமையில் சந்தித்துப் பேசிக் கொள்வது, காதல் பேச்சுக்களில் ஈடுபடுவது, அன்பளிப்புகள் பரிமாறிக் கொள்வது – இவை எல்லாம் – அறியாமைக்காலப் பண்பாட்டு வகையைச் சேர்ந்ததாகும்.

இன்னொரு கருத்தையும் இங்கே வலியுறுத்த வேண்டியுள்ளது. திருமணம் செய்வது என்று முடிவு செய்து விட்டால் திருமணத்தைச் செய்திட வேண்டியது தானே? ஏன் திருமணத்தை மாதக் கணக்கில் ஒத்திப் போட வேண்டும்? ஒரு சிலர் – ஆண்டுக் கணக்கில் கூட ஒத்திப் போடுகின்றனர்.

பேசி முடித்த பின்னர் – விரைவிலேயே – திருமணத்தை எளிமையாக முடித்துக் கொள்ளுங்கள். பிறகு யாரிடமும் எதற்கும் நீங்கள் அனுமதி கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது!

தொடர்ந்து படிப்பதா? அல்லது திருமணம் முடிப்பதா?

கேள்வி:

இந்தக் காலத்தில் படித்த பெண்களைத் தான் திருமணத்தின் போது விரும்புகிறார்கள். இந்த நிலையில் படித்து பட்டம் வாங்க விரும்பினால் திருமணம் தாமதமாகிறது. இந்த சூழ்நிலையில் தொடர்ந்து படிப்பதா? அல்லது திருமணம் முடிப்பதா? இவற்றில் எது சிறந்தது?

பதில்:

இக்கேள்விக்கு எல்லோருக்கும் பொருந்தி வரக்கூடிய பொதுவான ஒரு பதிலைத் தர இயலாது.

பருவ வயதை எட்டுகின்ற ஒவ்வொரு பெண்ணும் - இக்கால சூழ்நிலையையும், நமது மார்க்கத்தின் எதிர்பார்ப்புகளையும் கவனத்தில் கொண்டு தன் திருமணம் மற்றும் தனது மேற்படிப்பு குறித்து தன் குடும்பத்தினருடன் மனம் திறந்து பேசி, அவர்களுடன் கலந்தாலோசித்து நல்லதொரு நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.
திருமணம் ஆகாத ஒரு பெண்ணைப் பொறுத்தவரை மார்க்கம் எதிர்பார்ப்பதென்ன? உங்களில் திருமணம் ஆகாதவருக்கு திருமணம் செய்து வைத்து விடுங்கள் என்பதே நபிமொழி.

ஆனால் இக்கால சூழ்நிலைகள் ஒரு பெண்ணை எவ்விதங்களில் பாதிக்கின்றன?



படித்து பட்டம் வாங்கினால் தான் நல்ல மாப்பிளை கிடைப்பார்கள் என்கின்ற ஒரு கருத்தோட்டம் நிலவுகின்ற ஒரு காலம்.

மார்க்கத்தை பின்பற்றி வாழத் துடிக்கும் பெண்ணுக்குக் கூட, மார்க்கத்தைப் பின்பற்றி நடக்கும் மாப்பிள்ளை கிடைப்பது அரிதான ஒரு காலகட்டம்.

என்ன படித்திருந்தாலும் ஒரு பெண்ணின் திருமணச் செலவுக்காக பொருள் சேர்த்தாக வேண்டியிருப்பதால் திருமணம் தாமதமாகும் நிலை.

திருமணம் தாமதமாவதால், திருமண உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு நிலை.

ஒரு பெண் இவ்வாறு முடிவு செய்தால் அது நல்லதே:

"எனக்குப் படிப்பில் மிகுந்த ஆர்வம் இருக்கின்றது. நான் மேற்படிப்பு படிக்கவே ஆசைப்படுகின்றேன். எனது படிப்பு என் எதிர்காலத்துக்கு மிகவும் அவசியம் எனக் கருதுகிறேன்".

ஆனால் குடும்பத்தினர், தங்கள் பெண்ணுக்கு உடன் திருமணம் செய்து விட விரும்புகிறார்கள். மார்க்கத்தின் விருப்பமும் அது தான். இந்தச் சூழலில் அந்தப் பெண் என்ன செய்யலாம்?

திருமண ஏற்பாடுகளைத் தொடங்கி விடலாம். பெண் கேட்டு வருகின்ற மாப்பிள்ளை வீட்டாரிடம் - திருமணத்திற்குப் பிறகு, தங்கள் மகள் படிப்பைத் தொடர்ந்திட அனுமதி அளித்திட வேண்டும் என்பதை திருமண ஒப்பந்தத்திலே எழுதிக் கொண்டு விடலாம்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

ஆனால் - இன்னொரு குடும்பத்தின் நிலை வேறு:

பெண் படிக்க ஆசைப் படுகிறாள். குடும்பமோ போதுமான வசதி இல்லாத குடும்பம். தங்கள் பெண்ணுக்கு உடன் திருமணம் செய்து வைக்க இயலாது.
இந்தச் சூழலில் ஒரு பெண் மேற்படிப்பைத் தேர்வு செய்திடலாம்.

ஆனால் ஒரே ஒரு பிரச்னை தான்.

அது என்ன? திருமண உணர்வுகள் தலை தூக்கினால் என்ன செய்வது?

கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின் பற்றலாம்:

1. உள்ளச்சத்துடன் தொழுதிட வேண்டும். ஆனால் தொழுகை சடங்காகிப் போய்விடக் கூடாது.

2. உபரியான நோன்புகளை வைத்துக் கொள்ள வேண்டும்.

3. வெளியே செல்லும்போது - கண் பார்வையைத் தாழ்த்திக்கொண்டு செல்ல வேண்டும்.

4. ஹிஜாப் - முழுமையாகப் பேணிட வேண்டும்.

5. ஆண்கள் கூடுகின்ற பகுதிக்கு செல்வதைத் தவிர்த்திட வேண்டும். குறிப்பாக இருபாலர் படிக்கின்ற கல்லூரியில் சேர்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

6. பாலியல் சம்பந்தப்பட்ட பேச்சுக்களைப் பேசுகின்ற இடங்களைத் தவிர்க்க வேண்டும்.

7. பாலியல் சம்பந்தப்பட்ட வார மாத இதழ்கள், வலைதளங்கள் இவற்றை முற்றாகத் தவிர்த்திட வேண்டும்.

8. உடற்பயிற்சி அவசியம்.

9. திருமணம் ஆகும் வரையிலான கால கட்டம் வரை - ஒரு குறிப்பிட்ட லட்சியத்தை நிறைவேற்றிட தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

10. இறைவனைப் பற்றி அதிகம் அதிகம் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். எப்போதும் திருக்குர்ஆனும் கையுமாக இருந்திட வேண்டும்.

கணவன்-மனைவியரே! நெருங்கி வாழுங்கள்!!



திருக் குர் ஆனை நாம் ஆழமாக புரிந்து கொள்ள - அதன் மொழிபெயர்ப்புகள் போதாது என்பது ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். ஒரு எடுத்துக் காட்டு: வ ஆஷிரூஹுன்ன பில் ம'-ரூஃப்! - இது சூரத்துன் நிஸாவின் 19 வது வசனத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே. இதற்கு எப்படி மொழிபெயர்க்கப் படுகிறது என்று பார்ப்போமா?


"இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - இது தமிழில் குர் ஆன் வலை தளத்தின் மொழிபெயர்ப்பு. ஜான் ட்ரஸ்ட் மொழிபெயர்ப்பும் இதுவே.

"மேலும் அவர்களுடன் அழகான முறையிலும் நடந்து கொள்ளுங்கள்" - இது சவூதி அரசால் வெளியிடப்பட்டுள்ள சங்கைமிக்க குர் ஆன் மொழிபெயர்ப்பில் இருந்து.

"அவர்களோடு நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள்." - இது IFT - யின் திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பிலிருந்து.

"மேலும் அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத்தன்மையுடனும்) நடந்து கொள்ளுங்கள்" - இது அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்களின் மொழிபெயர்ப்பு.

ஆனால் அரபி மூலத்தில்.....

உள்ள இரண்டு சொற்களையும் நாம் சற்று ஆழமாக இங்கே பார்ப்போம்.

ஒன்று: ஆஷிர் (அய்ன் - ஷீன் - ரா)

இம்மூலச் சொல்லிலிருந்து பிரிகின்ற பல சொற்களுடன் திருமறை வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

முதலில் ஆங்கில அகராதி மொழிபெயர்ப்பை எடுத்துக் கொள்வோம்.

'Ashara - to divide into tenths; to be on intimate terms, associate (closely with someone). associate with one another

'Ishrah - (intimate) association, intimacy, companionship, relations, (social) intercourse. company. conjugal community, community of husband and wife

'Ishaar - with young, pregnant(animal)

'Asheer - companion, fellow, associate, friend, comrade

'Asheerah - clan, kinsfolk, closest relatives, tribe

அகராதியில் காணப்படும் அனைத்து பொருள்களையும் நாம் உற்று நோக்கினால் - ஆஷிர் என்ற சொல்லின் பொருள் - நெருக்கம், நெருங்கியிருப்பவை, நெருங்கிய தோழமை ஆகியவற்றைச் சுற்றியே இருக்கின்றன என்றே புரிகிறது.  இது ஏன் மொழிபெயர்ப்புகளில் பிரதிபலித்திடவில்லை என்பதே எம் கேள்வி.

அடுத்து இச்சொல் இடம் பெறுகின்ற சில திருமறை வசனங்களைப் பார்ப்போம்.


"எவனது தீமை, அவனது நன்மையை விட மிக நெருங்கியிருக்கிறதோ அவனையே அவன் பிரார்த்திக்கிறான் - திடமாக (அவன் தேடும்) பாதுகாவலனும் கெட்டவன்; (அப்பாதுகாவலனை அண்டி நிற்பவனும்) கெட்ட தோழனே. (22: 13)

கெட்ட தோழனைக் குறித்திட அஷீர் என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது.
"இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!" (26: 214)

நெருங்கிய உறவினர்களைக் குறித்திட - அஷீரதக - என்ற சொற்பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 58: 22 வசனத்தில் இதே போன்று அஷீரதஹும் என்று வருகிறது.

"சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-" (81: 4)
இங்கே கருவுற்றிருக்கும் ஒட்டகங்களைக் குறித்திட - இஷார் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தாயும் சேயும் நெருங்கியிருப்பதால் இச்சொல் பயன்படுத்தப் படுகிறதோ என்று தோன்றுகிறது.

அடுத்து இச்சொற்றொடரில் இடம் பெற்றுள்ள இன்னொரு சொல்: ம'-ரூஃப்!
ம'-ரூஃப் - என்ற இச்சொல்லுக்கு "அறியப்பட்டது" என்பதே சரியான பொருளாகும்.

அதாவது - இஸ்லாம் கட்டளையிட்டுள்ள எல்லாவிதமான நன்மைகளையும் குறிக்கும் சொல் இது என்கிறது ஜவாஹிருல் குர் ஆன்.

இவ்வாறு - இந்த இரு சொற்களின் விரிவான பொருள்களை கவனித்துப் பார்க்கும் போது

"அவர்களோடு கனிவோடு நடந்து கொள்ளுங்கள்" என்று பொத்தம் பொதுவாக மொழிபெயர்ப்பதை விடுத்து

" (மார்க்கம் அனுமதித்துள்ள) நன்மையான காரியங்கள் அனைத்திலும் அவர்களுடன் மிக நெருங்கிய உற்ற நண்பர்களாக நடந்து கொள்ளுங்கள்"

- என்று மொழிபெயர்க்கலாமோ என்று தோன்றுகிறது.

"behave with them as intimate companions in all the good things that are allowed in Islam "

- என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என்றும் தெரியவில்லை.

ஆனால்  முஹம்மத் அஸத் அவர்கள் மட்டுமே ஆங்கிலத்தில் மிக அழகாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள்:

"And consort with your wives in a goodly manner;" 

Consort - என்பதற்கு companion என்று ஒரு பொருள் உண்டு.

இப்படி நாம் இந்த இறைவசனத்தை சற்று ஆழமாக புரிந்து கொண்டால் - பின் வரும் நபி மொழிகளின் முக்கியத்துவம் நமக்குப் பளிச்சென்று விளங்கும்.

நானும் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களும் குளிப்புக் கடமையானவர்களாக இருக்கும் போது ஒரே பாத்திரத்தில் சேர்ந்து குளிப்போம் என அன்னை ஆயிஷா (ரளி) அறிவிக்கிறார்கள். (அபூதாவுது, முஸ்லிம், நஸயீ, அஹ்மது)

'ஒரே பாத்திரத்தில் இருந்து நானும் நபி (ஸல்) அவர்களும் உலூச் செய்யும் போது எனது கையும் ரஸுல் (ஸல்) அவர்களின் கையும் போட்டி போட்டுக் கொள்ளும்' என்று உம்மு சுமைய்யா (ரளி) அறிவிக்கிறார்கள். (அபூதாவுது)

"நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கிற எதுவாயினும் அதற்குரிய பலன் உங்களுக்கு அளிக்கப்பட்டே தீரும். உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் (ஒரு கவளம்) உணவாயினும் சரியே" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி)

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: யூதர்கள் மாதவிடாய்க்காரியுடன் வீட்டில் சேர்ந்து அமர மாட்டார்கள், பருக மாட்டார்கள். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடமும் கூறப்பட்டது. அப்போது, 'மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அது தொல்லை தரும் தீட்டு ஆகும். எனவே மாதவிடாய் சமயத்தில் பெண்களை விட்டு விலகி இருங்கள்' என்ற 2:222 வசனம் இறங்கியது. அதை நபி (ஸல்) அவர்கள் விளக்கும் போது, 'உடலுறவைத் தவிர மற்ற அனைத்தையும் செய்து கொள்ளுங்கள்' என்றார்கள். (நூல்கள்: முஸ்லிம், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அபூதாவூது)

நாம் இங்கே வலியுருத்திச் சொல்ல விரும்புவது என்னவெனில் -

கணவன்மார்களே! உங்கள் மனைவியுடன் நெருங்கிய நண்பனைப் போல நடந்து கொள்ளுங்கள் என்ற இறைவனின் அறிவுரையை அப்படிக்கு அப்படியே செயல்படுத்துங்கள். அப்போது தான் உங்கள் மனைவிமார்கள் உங்களுக்கு "கண் குளிர்ச்சியாகத்" தெரிவார்கள்.

சரிதானே!

Friday, June 28, 2013

கற்புக்கு சோதனை வந்தால்?

சோதனை ஒன்று:

உங்கள் குடும்பத்தினரிடமிருந்து நீங்கள் திடீரென்று பிரிக்கப்படுகிறீர்கள். உங்கள் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டிட எவ்வித வாய்ப்பும் இல்லை. எப்போது மீண்டும் உங்கள் குடும்பத்தினருடன் போய் சேர்வீர்கள் என்றும் தெரியாது. குடும்பத்தினரை மீண்டும் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதே சந்தேகம் தான். எதிர்காலம் என்ன என்பதுவும் மிகப்பெரியதொரு கேள்விக்குறி!

சோதனை இரண்டு:

நீங்கள் ஒரு வரண்ட பாலைவனத்தின் நடுவில் திடுதிப்பென்று இறக்கி விடப்படுகிறீர்கள். அடுத்த வேளைக்கு உண்ண உணவோ, குடிக்கத் தண்ணீரோ இல்லை. உயிர் பிழைப்போமா என்பதே சந்தேகம் தான்.

இப்படிப்பட்ட சோதனைகளின் போது அடுத்து நாம் என்ன செய்வோம் என்பது ஒரு புறம் இருக்கட்டும். இச்சூழ்நிலைகளை நாம் எப்படி எடுத்துக்கொள்வோம் என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

நம்மில் பலருடைய நிலை என்னவாக இருக்கும்?


ஒன்று: நம்மை நாமே நொந்து கொள்வோம். நமக்கு இந்நிலையை ஏற்படுத்தியவர்களை வசை பாடுவோம். அல்லது நம்மைப் படைத்து பரிபாலிக்கக்கூடிய இறைவனையே குறை சொல்லத் தொடங்கி விடுவோம்.
ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா? பொறுமை! அழகிய பொறுமை!

கிட்டத்தட்ட - இதே போன்ற இரண்டு சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு ஏற்பட்டது. நபி யூசுஃப் (அலை) அவர்கள், அவர்களுடன் கூடப்பிறந்த சகோதரர்களாலேயே குடும்பத்தை விட்டுப் பிரிக்கப்படுகின்றார்கள். பாழும் கிணற்றில் தள்ளப்படுகின்றார்கள்.

நபி யூசுஃப் (அலை) அவர்கள், இச்சூழ்நிலைகளில் மிக அழகாக பொறுமையைக் கடைபிடிக்கின்றார்கள்.

நாமும் பாடம் படித்துக் கொள்வோம்.

அடுத்து பின்வரும் சோதனையான சூழல் ஒன்றை சற்று ஆழமாக சிந்தியுங்கள்:

சோதனை மூன்று:

நீங்கள் திருமணம் ஆகாத ஒரு கட்டிளம்காளை. நீங்கள் வந்து சேர்ந்திருப்பதோ உங்களுக்கு முற்றிலும் அந்நியமானதொரு நகரம்; உங்களை ஆதரிப்பார் அங்கு யாருமில்லை; உங்கள் மீது இரக்கப்பட்டு உங்களுக்கு ஒரு வேலை தருகிறார் ஒரு பணக்காரர்; உங்கள் முதலாளியின் மனைவியோ கொள்ளை அழகு; கணவன் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து அவருடைய இளமை ததும்பும் மனைவி தன்னை முழுமையாக அலங்கரித்துக் கொண்டு உங்களை உல்லாசத்துக்கு அழைக்கிறார்; வற்புறுத்துகிறார்.
இந்த சோதனையை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்?

அல்லாஹு த ஆலா நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு இந்த மூன்றாவது சோதனையையும் முன் வைத்தான்!

இச்சோதனையின்போதும் நபி யூசுஃப் (அலை) அவர்கள் பொறுமை காக்கின்றார்கள்; தன்னையும் தன் கற்பையும் காத்துக் கொள்கின்றார்கள்.

நபி யூசுஃப் (அலை) அவர்களின் மிக அழகான வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள திருக்குர்ஆனின் - 12- வது அத்தியாயத்தைப் பொறுமையாகப் படித்துப்பாருங்கள்.

இப்போது கேள்வி என்னவெனில் - மேற்கண்ட மூன்று சோதனைகளிலே, எந்த சோதனையை எதிர்கொள்வதற்கு மிக அதிக பொறுமை தேவை?

குடும்பத்தை, நம் மீது அளவு கடந்த பாசத்தைக் கொட்டி வளர்த்து வந்த தந்தையைப் பிரிந்து விட்டதற்காகவா?

பாழும் கிணற்றில் கிடக்கின்றோமே; அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது? உயிர் பிழைப்போமா, மாட்டோமா - என்ற சூழ்நிலைக்காகவா?

தம் எஜமானருக்கே துரோகம் செய்யத் தூண்டும் மிக இக்கட்டான சூழ்நிலைக்காகவா?

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் சொல்வார்களாம்:

இம்மூன்று சோதனைகளில் நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு மிக அதிக பொறுமை தேவைப்பட்ட சோதனை தம் எஜமானனின் மனைவி மூலமாக வந்த சோதனை தான்!

ஏன்?

தன் குடும்பத்தை விட்டுப் பிரிக்கப்பட்ட சோதனையில், நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு தம் சகோதரர்களிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ள எந்த ஒரு வாய்ப்பும் (Choice)  இல்லை!

அது போலவே கிணற்றில் தள்ளப்பட்ட போதும் நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு அதிலிருந்து வெளியேறி தம்மைக் காத்துக் கொள்ள எந்த ஒரு வாய்ப்பும் இல்லை!

ஆனால் - தமது கற்புக்கு ஒரு கடினமான சோதனை வந்த போது - அதனை எதிர்கொண்டிட அல்லாஹு த ஆலா நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருந்தான். அந்தப் பெண்ணின் இச்சைக்கு அடிபணிந்து விடலாம், அல்லது அப்பெண்ணின் இச்சைக்கு அடிபணிய மறுத்து தம்மைத் தாமே தற்காத்துக் கொள்ளவும் செய்யலாம்.

இச்சமயத்தில் தான் நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு மிக மிக மிக அதிகமான பொறுமை தேவைப்பட்டது!

ஏன்?

அந்த சூழ்நிலையை சற்று ஆழமாக சிந்தித்துப் பாருங்கள்:

1. நபி யூசுஃப் (அலை) அவர்கள் - ஒரு கட்டிளம் காளை! உணர்வுகள் கொப்பளிக்கும் இளமைப்பருவம். சற்றே வயதானவர்கள் கூட தடுமாறும் சூழ்நிலை; நபி யூசுஃப் (அலை) அவர்கள் திருமணம் ஆகாதவர் என்பதையும் கவனியுங்கள்; திருமணம் ஆன ஒருவர் கூட இன்னொரு பெண்ணால் தூண்டப்பட்டால், தம் இச்சையைத் தீர்த்துக்கொள்ள தம் மனைவியை நாட முடியும். ஆனால் நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லாத நிலை.

2. அழைப்பு விடுத்த பெண்ணோ - மிக அழகான பெண்மணி! அழகற்ற பெண் அழைத்திருந்தால் விலகி விடுவது சுலபம்; ஆனால் அழைப்பதோ மிக அழகான ஒரு இளம்பெண்!

3. அழைப்பு விடுக்கப்பட்ட சூழ்நிலை என்ன? நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு எகிப்து என்பது ஒரு அந்நிய தேசம். யாரையும் நபி யூசுஃப் அவர்கள் அறிந்திருக்கவில்லை; உறவினர்கள், நண்பர்கள் என்று யாருமே  கிடையாது அங்கே;  அவர்கள் தவறிழைத்தால் கூட மானம் பரிபோய்விட வாய்ப்பு இல்லை!

4. இன்னொரு சூழல் - தனிமை! நபி யூசுஃப் (அலை) அவர்களும் அப்பெண்மணியும் தான்! அந்தப் பெண்மணி எல்லாக் கதவுகளையும் மூடி விட்டாள்; யாருக்கும் தெரிந்து விட வாய்ப்பே இல்லை; மிக சுலபமாக மறைத்துக் கொண்டு விடலாம்!

ஆனாலும் தம்மைக் காத்துக் கொள்கின்றார்கள் நபி யூசுஃப் (அலை) அவர்கள்.
இளைஞர்களே! பாடம் படித்துக் கொள்வோம் நபி யூசுஃப் (அலை) அவர்களிடமிருந்து!

குறிப்பு: இக்கட்டுரையை எழுதும் சமயம் - டெல்லியில் கற்பு சிதைக்கப்பட்ட ஐந்து வயது சிறுமி பற்றிய செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நேரம் ஆகும்.

மனம் அழுகின்றது!

மத்திய மாநில அரசுகளே! நபி யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கையை பள்ளிக்கூட மாணவர்களுக்குப் பாடமாக்குங்கள்!

திருமணம் ஒரு திருப்பு முனை!

உங்களுக்கு நீண்ட கால இலட்சியம் எதுவும் இருக்கின்றதா? குறிப்பாக உங்களுக்கு ஏதேனும் ஒரு விஷயத்தில் மிகுந்த ஆர்வம் (passionate about) உண்டா?

அப்படியெனில் அதே விஷயத்தில் ஆர்வமும், இலட்சியமும் உள்ளவராக உங்கள் வாழ்க்கைத்துணை அமைந்திட்டால் - உங்கள் இலட்சியத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் உங்களால் செயல்பட முடியும்!


அப்படி அமைந்திடாவிட்டால் உங்கள் இலட்சியப் பயணத்தில் நீங்கள் தனித்து விடப்படுவீர்கள்; போதாததற்கு நிறைய நேரம் உங்கள் துணையுடன் சண்டை போட வேண்டியிருக்கும்!

உங்கள் வாழ்வின் இலட்சியம் - அது உலகத்தையே "மாற்றிக் காட்டுவதாக" இருந்தாலும் சரி அல்லது.......
உங்கள் குழந்தைகளை வல்லவர்களாக வளர்த்தெடுப்பதாக இருந்தாலும் சரி (இரண்டுமே ஒன்று தானாமே!) -

எந்நேரத்திலும் ஆதரவுக்கரம் நீட்டுபவரே உங்களுக்குத் தேவை!

உங்கள் இலட்சியத்தில் உங்கள் மகிழ்ச்சியையும், அல்லது வலியையும், பகிர்ந்து கொள்ள ஒரு துணை தேவை! உங்களுக்கு ஆலோசனை வழங்கிடவும், நீங்கள் சொல்ல வருவதை ஆவலுடன் கேட்டிடவும், ஒரு துணை அவசியம்!  "இதுவெல்லாம் ஒரு இலட்சியமா?" என்று அலட்சியம் செய்து அதற்கு முட்டுக்கட்டை போட்டு விடாமல் இருப்பவர்களே உங்களுக்குத் தேவை!

திருமணத்துக்கு முன்  இளம் வயதில் சாதித்துக் காட்டிய ஒரு சிலர் - திருமணத்திற்குப் பின் சிகரம் தொட்டிருக்கின்றார்கள் என்பதும் உண்மை!

அதற்கு நேர் மாற்றமாக - இளம் வயதில் சாதித்துக் காட்டிய இன்னும் பலர் - திருமணத்திற்குப் பின் காணாமல் போயிருக்கின்றார்கள் என்பதும் கசப்பானதொரு உண்மை!

எனவே தான் சொன்னார் எகிப்தில் உள்ள ஓர் இஸ்லாமிய அறிஞர்:

"திருமணம் ஒரு திருப்பு முனை!"

அது போலவே - தனக்கென்று ஒரு இலட்சியம் வைத்திருக்கும் துணையே உங்களுக்குத் தேவை! உங்கள் துணையின் லட்சியத்தில் அவர் வெற்றி பெற, நீங்கள் உறுதுணையாக விளங்கிடவும்; உங்களின் நேரத்தையும், அறிவையும், ஆற்றலையும் அதற்கென செலவழித்து அவர் சாதிக்கும் போது தட்டிக் கொடுத்திடவும், சோதனைகள் வரும்போது - அவருக்கு ஆறுதல் அளித்திடவும் - ஒரு துணையாக நீங்கள் விளங்கினால் உங்கள் இல்லறவாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை! அது ஒரு மகிழ்ச்சிக் கடல்!!

இதனை எழுதிடும்போது - அன்னை கதீஜா (ரலி) அவர்களே நம் மனக்கண் முன்னால் தோன்றுகிறார்கள்!!

தேடுங்கள் - அப்படி ஒரு துணையை!

வாழ்க்கைத்துணையாக வர இருப்பவருடன் பேசுங்கள்!

வாழ்க்கைத்துணையாக வர இருப்பவருடன் பேசிப் பார்க்கிறீர்களா?

பெற்றோர் முன்னிலையில் உங்கள் வாழ்க்கைத் துணையாவதற்காக அறிமுகம் செய்து வைக்கப்பட்டவருடன் பேசுதல் அவசியம்.

அப்படி ஒரு வாய்ப்பை வலியுறுத்தி ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பின்பு அவர்களுடன் பேசுங்கள்; அவர்கள் பேசுவதைக் கேளுங்கள். நீங்கள் பேசுவதை விட அவரைப் பேச விட்டுக் கேளுங்கள். இந்தப் பேச்சை வைத்துத் தான் "இவர் நமக்குப் பொருத்தமானவர் தானா?" என்று பார்த்திட வேண்டியுள்ளது.

எந்த விஷயங்களை எல்லாம் அவர் அறிந்து வைத்திருக்கிறார்; அவருடைய கண்ணோட்டங்கள் எப்படி இருக்கின்றன; அவருடைய சிந்திக்கும் பாங்கு; சூழ்நிலைகளை சரியாக எடைபோடும் ஆற்றல்... இவைகளை கவனியுங்கள்.

.அவர் சொந்தமாக சிந்திக்கக்கூடியவரா......

அல்லது பிறரைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுபவரா என்பதையும் பாருங்கள்!

என்ன அவர்கள் படிக்கிறார்கள் என்று கேளுங்கள்; எந்த நூலாசிரியரைப் பிடிக்கும் என்று கேளுங்கள்;

பிரச்னைகளைப் பற்றி அதிகம் பேசுபவரா அல்லது தீர்வுகளை முன் வைத்துப் பேசுபவரா என்று கவனியுங்கள்!

எல்லாவற்றிலும் குறை கண்டுபிடிப்பவரா என்று பாருங்கள்; மன்னிக்கும் மனப்பான்மை இருக்கிறதா என்று பாருங்கள்!

அவருடைய மார்க்கப் பற்று எப்படிப்பட்டது என்பதனையும் பாருங்கள். பொருளாசை மிக்கவரா அல்லது மறுமைச் சிந்தனை மிக்கவரா என்றும் எடை போடுங்கள்.

மற்றவர்களை அதிகமாக விமர்சிக்கின்றாரா அல்லது தன்னை திருத்திக் கொள்வது பற்றிப் பேசுகின்றாரா என்றும் பாருங்கள்!

குறிப்பாக அவர் பேசும்போது, பிறர் நலன் (concern for others)  பேணுபவரா அல்லது சுயநலம் தென்படுகிறதா என்பதை அவசியம் கண்டுணருங்கள். மேலும் பிறர் பேசும்போது பொறுமையாக (active listening) காது கொடுத்துக் கேட்கக் கூடியவரா அல்லது அடிக்கடி குறுக்கிட்டு மற்றவர் பேசுவதை அலட்சியம் செய்பவரா என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள்

எச்சரிக்கை:

ஏன் இப்படிப்பட்ட உரையாடலை நாம் வலியுறுத்துகிறோம் என்றால் - திருமண வாழ்வின் மிக முக்கியமான பகுதிகளுள் ஒன்று மனம் விட்டு ஒருவருக்கொருவர் பேசிக்கொள்தல் தான்!

ஒரு அறிஞர் சொல்கிறார்: "Conversation is the lifeblood of a marriage."

அதாவது: " கலந்துரையாடுதல் என்பது திருமண வாழ்க்கைக்கு உயிரூட்டும் இரத்தம்!"

உரையாடலைத் தவிர்த்து விட்டால் திருமண வாழ்வு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!

ஆனால் - பெரும்பாலான கணவன் மனைவியர் - திருமணமான ஆறு மாதங்களிலேயே தங்களுக்குள் பேசுவதையே நிறுத்திக் கொள்கிறார்கள்.

உங்களுக்கு அந்த நிலை வேண்டுமா?

வாழ்க்கைத்துணை என்பது - ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவதற்காக; தமது ஆர்வங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக; ஒன்றை மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்வதற்காக; இந்தப் பரிமாற்றம் இருவருக்குள் ஒரு நெருக்கத்தை உண்டாக்கி விடும்! இந்த நெருக்கத்தினை ஆங்கிலத்தில் intellectual intimacy என்கிறார்கள்.

இது இல்லாவிட்டால் - திருமணம் ஒரு குறுகிய வட்டத்துக்குள் வந்து நின்று விடும்!!
"
ஆமாம்......? இதெல்லாம் யாருக்காக இப்படி எழுதிக்கிட்டு இருக்கீங்க? இதெல்லாம் நடக்கற காரியமாங்க?" - என்று கேட்கிறீர்களா?

நிலைமை மாறித்தான் ஆக வேண்டும்! முயற்சி செய்யுங்கள்!

வல்லோன் உதவி நிச்சயம் உங்களுக்கு உண்டு!

கண்ணியம் காதலாய் மலரட்டும்!

இன்று வழக்கத்தில் நாம் பார்க்கின்ற திருமண முறைகள் இரண்டு:

1. பெற்றோர் செய்து வைக்கின்ற பாரம்பரியத் திருமணம் (arranged marriage)

2. காதல் திருமணம் (love marriage)

இந்த இரண்டு முறைகளுமே மிகத் தவறானவை!


பெற்றவர்கள் ஒரு மாப்பிள்ளையைப் (அல்லது பெண்ணை) பார்த்திட - ஒருவரைப் பற்றி மற்றவர் அறிந்து கொள்ளாமலே - "என் பெற்றோர் யாரைத்திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்களோ அவரே என் துணைவர்!" என்று கண்ணை மூடிக்கொண்டு செய்யப் படுகின்ற பாரம்பரியத் திருமண முறையில் - அடிப்படையில் ஒரு மிகப்பெரிய கோளாறு இருந்து வந்துள்ளதை - நமது புதிய தலைமுறையின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமும், அவசரமும் இப்போது ஏற்பட்டுள்ளது என்றால் அதில் மிகை இல்லை!

ஏனெனில் இன்றைய நமது முஸ்லிம்களின் இல்லற வாழ்க்கை முறையில்.....

பல குளறுபடிகள் காணப்படுகின்றன.  ஒரு நெருக்கடியின் நிமித்தமாகவே கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்கிறார்கள்! அவர்களுக்குள் அன்பு, காதல், நேசம், பரிவு, இரக்கம், கருணை, அனுசரித்துப் போகும் பண்பு (adjustment), மன்னிக்கும் பண்பு - இவைகளெல்லாம் அரிதாகி விட்டன!

அது போலவே பெற்றோர் ஆலோசனைகள் ஏதுமின்றி நடக்கின்ற காதல் திருமணமும் வெற்றி பெறுவதில்லை!  உடற் கவர்ச்சியினால் காதலில் விழுந்து தனது வாழ்க்கைத் துணை எப்படிப்பட்டதாய் இருந்திட வேண்டும் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படாமல் திருமணம் செய்து கொண்டு பின்னர் வருந்துகின்ற இல்லற ஜோடிகளையும் நாம் பார்த்தே வருகின்றோம்.

எனவே தான் சொல்கிறோம்:

உடற்கவர்ச்சியினால் உருவாகின்ற காதல் திருமணமும் வேண்டாம்! குடும்பத்தில் பெண் / மாப்பிள்ளை பார்த்து பெற்றோர் செய்து வைக்கின்ற பாரம்பரியத் திருமணமும் (arranged marriage) வேண்டாம்!

பின் எப்படித் தான் வாழ்க்கைத் துணையைத் தேடுவது?

மூன்று உதாரணங்கள் தருகிறோம்:

1. நபியவர்கள் அன்னை கதீஜாவை எவ்வாறு மணம் முடித்தார்கள்?

அன்னை கதீஜா அவர்கள் நபியவர்களை ஒரு மேலாளராகத் தான் சிரியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இன்னொரு பணியாளரும் நபியவர்கள் கூடவே சிரியாவுக்குச் செல்கிறார். மக்காவுக்குத் திரும்பியதும் - அந்தப் பணியாளர் நபியவர்களின் குண நலன்களை அன்னை கதீஜாவுக்கு எடுத்து விளக்குகின்றார்.

அத்துடன் மக்காவிலே நபியவர்களுக்கு அல் அமீன், அஸ் ஸாதிக் என்ற நற்பெயர்களெல்லாம் ஏற்கனவே உண்டு. அண்ணலார் வணிகப் பயணம் முடிந்து திரும்பியதும், நபியவர்களின் குணநலன் பற்றி (அந்தப் பணியாளர் மூலம்) அறிந்ததும் மேலும் ஒரு மதிப்பு வருகிறது.

தாமும் நபியவர்களின் நடைமுறைகளை உற்று நோக்குகிறார்கள். கண்ணியம் அதிகரிக்கிறது. அந்தக் கண்ணியமே காதலாய் மாறிட நாம் ஏன் இவர்களைத் திருமணம் முடித்திடக் கூடாது என்று எண்ணுகிறார்கள்!  தூது அனுப்புகிறார்கள். எல்லாம் நல்லபடியாய் முடிகிறது!

2. நபியவர்கள தன் அன்பு மகள் பாத்திமாவுக்கு அலீ அவர்களை மணம் முடித்துக் கொடுத்தது எப்படி?

அண்ணல் நபியவர்கள் தன் அன்பு மகளுக்கு ஹள்ரத் அலீ அவர்களைத் திருமணம் முடித்திட விரும்புகிறார்கள். தன் விருப்பத்தை தன் மகளிடம் தெரிவிக்கிறார்கள். அன்னை பாத்திமா (ரலி) அவர்களின் கண்களில் கண்ணீர். அது அவர்களின் தயக்கமா? அல்லது அலீ அவர்கள் குறித்து அச்சமா? என்றெல்லாம் தெரியவில்லை. அப்போது நபியவர்கள் மகள் பாத்திமாவிடம் அலீ அவர்களின் குண நலன் பற்றி எடுத்துச் சொல்கிறார்கள்:

அலீ அவர்கள் அறிவில் சிறந்தவர் என்றும், பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை நிறைந்தவர் என்றும், வீரம் மிக்கவர் என்றும் எடுத்துரைக்கிறார்கள்; பாத்திமா (ரலி) அவர்கள் சம்மதித்திட திருமணம் நடந்தேறுகிறது!

3. உ,மர் (ரலி) அவர்கள் தன் மகன்களில் ஒருவருக்குத்  திருமணம் செய்து வைத்தது எப்படி?

ஒரு தாய் மற்றும் அவருடைய மகள். பாலில் தண்ணீர் கலப்பதைக் கூட அனுமதித்திடாத இறையச்சம் அந்த மகளுக்கு. உமர் (ரலி) அவர்கள் இதனை நேரிடையாகவே அறிந்து கொண்ட பின் தன் மகன்களை அழைத்து அந்தப் பெண்மணியின் இறையச்ச உணர்வை எடுத்துச் சொல்லி "அறிமுகம்" செய்து வைக்கிறார்கள். ஒரு மகன் முன் வர திருமணம் நடந்தேறுகிறது!

இம்மூன்று திருமணங்களிலும் - தான் யாரைத் திருமணம் முடிக்க விரும்புகிறாரோ அவருடைய குணநலன்கள் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன என்பதை உன்னிப்பாக கவனியுங்கள்:
படித்துக் கொள்ள வேண்டிய படிப்பினைகள்:

திருமணத்துக்கு முன்னரேயே - பெண் அல்லது மாப்பிள்ளை - இவர்களின் குண நலன்கள்  (character) எப்படிப் பட்டது என்பது பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். தான் மணக்க இருக்கும் துணைவர் எப்படிப்பட்ட குணமுடையவர் என்பது இருவருக்குமே தெரிதல் நலம். அதுவே கண்ணியமாய் மாறும்.

காதலாய் மாறும். இதுவே திருமணத்துக்கு இட்டுச் செல்லும். இதுவே வெற்றித் திருமணத்தின் இலக்கணமும் ஆகும்!

வாழ்க்கைத்துணையைத் தேர்வு செய்வது எப்படி?

ஒருவர் தனது வாழ்க்கைத்துணையைத் (கணவன் அல்லது மனைவி) தேர்வு செய்திடும் போது கவனித்திட வேண்டிய விஷயங்கள் என்னென்ன? -   

1. இஸ்லாம்:

“ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக மணம் முடிக்கப்படுகிறாள். அவளின் செலவத்திற்காக, அவளது குடும்ப கௌரவத்திற்காக, அவளது அழகிற்காக, அவளது மார்க்க விழுமியங்களுக்காக. நீர் மார்க்கமுடையவளைப் பற்றிக் கொள். உன் கரத்தை அழிவிலிருந்து பாது காத்துக்கொள்வாய்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)


மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள நபி மொழி அறிவுறுத்துவது போல = மார்க்கப்பற்றுள்ள ஒரு பெண்ணையே தேர்வு செய்யுங்கள். அது போல - மார்க்கப்பற்றுள்ள ஆண்மகனையே பெண்கள் தேர்வு செய்திடட்டும்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் என்னென்ன?


A . ஐந்து வேளை தொழுபவரா அவர்? நோன்பு வைப்பவரா? தர்மம் செய்பவரா? (இது பற்றிக் கேட்டு விடுங்கள் அவரையே!). குர்ஆன் அவருக்கு ஓதத் தெரிகிறதா? (தங்கு தடை இல்லாமல் ஓத வேண்டிய - தஜ்வீத் - முறைப்படி).

B. தோற்றம்: ஹிஜாப் அணியும் பெண், தாடி வைத்திருக்கும் ஆண் (பெண்கள் இதனை வலியுருத்தட்டும் - ஏன் ஒரு பெண்ணைப் போல் தோற்றமுடையவரை மணக்கிறீர்கள்?). இவை தவிர்த்த "ஸ்டைல்"களில் மயங்கி விட வேண்டாம்!

C. நற்குணங்கள்: உண்மையைப் பேசுவதற்கு தைரியம், கண்ணியம், தன்னம்பிக்கை, கம்பீரம் (ஆண்களிடத்தில்), நாணம் (பெண்களிடத்தில்), வெட்க உணர்ச்சி (இருவருக்கும்), பதற்றமடையாத நிதானம், அமைதியில் அழகு காணும் நேர்த்தி, மடை திறந்த வெள்ளம் போல் பேசாமை.

எச்சரிக்கை:   

ஆணோ அல்லது பெண்ணோ - அல்லாஹு தஆலா என்ன சொல்கிறான் என்பது பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை என்றால் - அவர்கள் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது பற்றிக் கவலைப் படுவார்கள் என்றா எண்ணுகிறீர்கள்?  ம்ஹூம்!

இறையச்சம் என்ற ஒன்று இருந்து விட்டால் அது போதும் - உங்கள் திருமணத்தை இனிமையாக்கிட! பாதுகாத்திட! பிரச்னை என்று ஒன்று வந்து விட்டால் தீர்வு ஒன்றைக் கண்டிட!

இந்த ஒன்று மட்டும் இல்லாவிட்டால் - என்னவாகும்? திருமண வாழ்வில் ஒரு பிரச்னை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். எதனை வைத்துக் கொண்டு அதனைத் தீர்த்துக் கொள்வீர்கள்? இறையச்சம் இருப்பவர்களுக்கு - குர்ஆன் மற்றும் ஹதீஸ் - இவைகளே "அடைக்கலம்"! வேறு எதுவுமே தேவையில்லை! ஆனால் திருமண வாழ்வுக்கு இது அவசியம் இல்லை என்போரின் நிலை என்ன தெரியுமா? துடுப்பு இல்லாமல் படகு சவாரி செய்பவர்களின் நிலை தான்!

திருமணம் ஆன புதிதில் இருக்கும் அழகு, ஈர்ப்பு, கவர்ச்சி - இவைகளெல்லாம் சில மாதங்களுக்குத் தான்! அதன் பிறகு, உங்கள் வாழ்க்கைக்கு அழகு கூட்டிட உதவிக்கு வருவது தக்வா எனும் இறையச்சமே!

அழகு இருக்கட்டும்! இறையச்சம் இல்லை எனில், உங்களின் குழந்தைகளை எதன் அடிப்படையில் வளர்ப்பீர்கள்?

இந்தக் குழந்தைகளைக் கொண்டு தானே உங்களின் எதிர்காலம்? சுவர்க்கம் வேண்டுமா? அல்லது நரகம் வேண்டுமா?

எனவே தான் சொல்கிறோம்! துவக்கத்திலேயே இது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்! மார்க்கத்தைப் பற்றிக் கவலைப்படாத பெண்ணும் வேண்டாம் / மாப்பிள்ளையும் வேண்டாம்! விலகி ஓடி விடுங்கள்! அவர்கள் எவ்வளவு கவர்ச்சியாக இருந்தாலும் சரியே!

"நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் தகுதியானவர்கள்".(24:26)

நாம் இக்கட்டுரையில் மிகவும் வலியுறுத்திச் சொல்லி இருக்கும் இந்த ஒன்றில் உங்களுக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லையென்றால் - இத்தொடரைப் படிப்பதை நிறுத்தி விடுங்கள்! இதன் பிறகு நாம் இங்கே எழுதுவது எதுவும் உங்களுக்குப் பொருந்தாது!

2. பிறரிடம் நல்லுறவு:

மார்க்கப் பற்று என்பதனைத் தொடர்ந்து - நீங்கள் அடுத்து கவனித்திட வேண்டிய விஷயம் - அவர் மற்றவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறார் - என்பதனைத் தான்.

ஒரு ஆணோ அல்லது பெண்ணோ - ஒருவரை "நல்லவர் இவர்" என்று அறிவது எப்படி? அவருடைய தொழுகை, நோன்பு, குர்ஆன் ஓதுதல், அவருடைய தோற்றம் - இவைகளை வைத்தா என்றால் நிச்சயம் இல்லை! பின் எதனை வைத்து? அவர் பிறருடன் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை வைத்துத் தான்!

உமர் (ரலி) அவர்கள் கேட்கும் நிபந்தனைகள்:

"நீ அவர் பக்கத்து வீட்டுக்காரரா?" அல்லது " நீ அவருடன் பயணம் செய்திருக்கிறீர்களா?" அல்லது "நீ அவருடன் கொடுக்கல் வாங்கல் செய்ததுண்டா?"

இம்மூன்று கேள்விகளிலும் காணப்படும் பொதுவான ஒரே அம்சம் - "நீ மற்றவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறாய்?" - என்பது தான்!

நீங்கள் தேர்வு செய்திடும் வாழ்க்கைத் துணைவர் / துணைவி - அவர்களுடைய பணியாளர்களுடன், பெற்றோர்களுடன், உடன் பிறந்தவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனியுங்கள்.

மற்றவர்களுடன் பழகும் போது, மென்மையாக நடக்கிறார்களா (குறிப்பாக அவர்களுக்குக் கீழே பணியாற்றுகின்ற வேலையாட்கள், கார் டிரைவர்) என்பதை நன்கு கவனியுங்கள்; அவர்களுக்கு இரக்க உணர்வு இருக்கிறதா?

மற்றவர் நிலை குறித்து (empathic) அக்கரைப் படுகிறாரா? கண்ணியமாக மற்றவர்களிடம் பேசுகின்றாரா? நன்றி சொல்கின்றாரா? சிறிய தவறுகள் ஏதாவது நிகழ்ந்தால் "மன்னிக்கவும்" என்று சொல்கிறாரா? புன்முறுவல் முகம் காட்டுகின்றாரா? சிடுசிடுவென்று பேசுகின்றாரா? நகைச்சுவை உணர்வு இருக்கின்றதா?- என்பதையெல்லாம் அவசியம் கவனியுங்கள்!

எச்சரிக்கை:

பிறருடன் பழகுதல் எனும் விஷயம் மிக முக்கியம். ஏனெனில் ஒருவருடைய தொழுகை, தொப்பி, தாடி (அல்லது ஹிஜாப்) - இவற்றையெல்லாம் பார்த்து ஏமாந்து விட வேண்டாம். வேடதாரிகள் அங்கிங்கெனாத படி எங்கும் நிறைந்து காணப்படுகின்றார்கள்!

உங்கள் எதிர்காலத் துணைவர் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பார்ப்பது மிகவும் அவசியம், ஏனெனில் - பிறரிடம் அவர் எவ்வாறு நடந்து கொள்கிறாரோ exactly அவ்வாறே தான் அவர் உங்களிடமும் நடக்க இருக்கின்றார் என்பதனை மறந்து விட வேண்டாம்!