Friday, April 4, 2014

கருத்து வேறுபாடுகளின் போது கடைபிடிக்க வேண்டிய சுன்னத்தான அணுகுமுறைகள்!

சுன்னத்தான இல்லறம்: 

1. சூழ்நிலை அறிந்து பேசிட வேண்டும்! தவறான சூழ்நிலைகளில் பேச்சைத் துவக்கிடக் கூடாது;

2. பேசுகின்ற நேரத்தைத் தேர்வு செய்வதிலும் கவனம் தேவை; துணைவரின் மனநிலை அறிந்து பேச்சைத் துவக்கும் நேரத்தை முடிவு செய்திட வேண்டும்;


3. உரையாடல் முழுவதிலும் மென்மை கடைபிடிக்க வேண்டும்! மென்மை குறித்து ஏராளமான நபிமொழிகள் உண்டு!

4. இருவரில் ஒருவர் மென்மையைத் தவறவிட்டு விட்டாலும் - உடனே - உரையாடல் நிறுத்தப்பட வேண்டும். "நாம் இந்தப் பேச்சை பிறகு வைத்துக் கொள்வோம்!" என்று விட்டு விட வேண்டும். "இப்போதே பேசி விடுவோம்!" என்று அடம் பிடிக்கக் கூடாது!

5. திட்டுதல் என்பது சுன்னத்துக்கு எதிரானது! நபியவர்கள் யாரையும் திட்டியதில்லை! செய்து விட்ட ஒரு தவறைத் தான் விமர்சிக்க வேண்டுமே தவிர - தவறு செய்திட்ட துணைவரை கடுமையாக விமர்சித்து விடக் கூடாது!

5. கணவனையும் மனைவியையும் - ஒருவருக்கொருவர் ஆடை என்று உவமானம் தருகின்றான் வல்லோன் அல்லாஹு தஆலா! அதாவது ஒருவருடைய மானத்தை மற்றவர் காத்திட வேண்டும் என்பதற்காக! அப்படியிருக்க நீங்களே எப்படி உங்கள் துணைவரை அவமானப் படுத்தத் துணிவீர்கள்?

6. நாம் செய்து விட்ட தவறு ஒன்றை நமது துணை சுட்டிக் காட்டுகிறார்; அந்தத் தவறு நம்மிடம் இருக்கின்றது என்றால் அதனை ஒத்துக் கொண்டு விட வேண்டும்! "என் மீது தவறே கிடையாது!" என்று நாம் நமது நாவினால் பேசி விட முடியும்; ஆனால் உள்ளம் உறுத்துமே! தவறை ஒத்துக் கொண்டால் பிரச்னை அத்துடன் தீர்ந்து போய் விடுமே!

7. ஒருவர் பேசும்போது - அண்ணல் நபியவர்கள் (ஸல்) தங்கள் உடல் முழுவதையும் அவர் பக்கம் முன்னோக்கி அவர் பேசி முடிக்கும் வரை தாங்கள் பேசிட மாட்டார்களாம்! துணை பேசி முடிக்கும் வரை பொறுமை தேவை! ஆனால் ஒருவரே தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கக்கூடாது! ஒரு ஐந்து நிமிடம் ஒருவர் பேசலாம்; அடுத்து உங்கள் துணையைப் பேச விடுங்கள்; இவ்வாறு இருவருக்கும் சம வாய்ப்பு தரப்பட வேண்டும்; கணவன் முழுவதுமாக காதில் வாங்கிக் கொண்டாலே பிரச்னை தீர்ந்து விட்டதாக மனைவியர் எடுத்துக் கொள்கிறார்களாம்!

8. தவறு என்று தெரிந்த பின்பும் தன்னைத் திருத்திக் கொள்ள முன்வராமல் அதே தவறினை மீண்டும் மீண்டும் செய்தால் - சின்னச் சின்ன பிரச்னை கூட பெரிய சண்டையாக மாறத்தான் செய்யும்! நாம் மாறிடத் தயார் இல்லையெனில் அல்லாஹ்வும் நம்மை மாற்றிட மாட்டான் தெரியுமா?

9. சிறிய சிறிய தவறுகளை துணைவர் மன்னித்து விட வேண்டும்; பணியாளரை ஒரு நாளைக்கு எழுபது முறை மன்னிக்கச் சொல்லும் மார்க்கம் நமது மார்க்கம்; துணையை மன்னிக்க மாட்டீர்களா?

10. பேசாமல் ஒதுங்கிப் போய் விடுவது பிரச்னைக்குத் தீர்வே அல்ல! கணவன் மனைவி உரையாடல் என்பது இடை நிறுத்தப்படல் கூடவே கூடாது; உரையாடல்களில் உணர்ச்சிகள் மேலோங்கினால் சற்றே ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம் (relaxation). ஆனால் பல கணவன்மார்கள் பேசுவதையே நிறுத்திக் கொள்கிறார்கள். அது மிகவும் தவறு!

11. ஒரு பிரச்னை ஏற்பட்டு விட்டால் அதனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு - பல பிரச்னைகள் ஒன்று
சேர்ந்து கொண்ட பின் எல்லாவற்றையும் - ஒரே நேரத்தில் - தீர்த்திட முயற்சித்தல் கூடாது! தீரவும் தீராது! அவ்வப்போது வரும் பிரச்னைகளை அவ்வப்போதே தீர்த்துக் கொண்டு விட வேண்டும்;

12. அது போலவே - ஒரு தவறை விமர்சிக்கும்போது எப்போதோ நடந்து விட்ட தவறுகளையெல்லாம் மீண்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது! முஃமினுக்கு முஃமின் கண்ணாடி! கண்ணாடி பழைய குறைகளை சுட்டிக் காட்டாது!

13. பிரச்னை தீர்க்கப்பட்ட பின் - இருவரும் சேர்ந்து அதனைக் கொண்டாட வேண்டும்! தங்களின் காதலை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்!

14. இரு வேறுபட்ட ஆளுமைகள் கொண்ட இருவருக்கு மத்தியில் சில கருத்து வேறுபாடுகள் அப்படியே தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்! அடிப்படையான விஷயங்களில் கருத்து வேறுபாடு என்பது நீங்கவே நீங்காது! உங்கள் துணையை நீங்கள் அப்படியே ஏற்றுக் கொண்டு விட வேண்டியது தான்! துணையை வளைத்து விட நினைத்தால் அது முறிந்து விட வாய்ப்பு ஏற்பட்டு விடும்!

மேலே நாம் குறிப்பிட்ட இந்த அணுகுமுறைகளைக் குறித்து விரிவாகவும் சில பதிவுகள் வரும் - இன்ஷா அல்லாஹ்!

No comments:

Post a Comment