Saturday, December 6, 2014

சுன்னத்தான இல்லறம்! - நூல் வடிவில்.....

சுன்னத்தான இல்லறம்!

(உன் மனைவி ஒரு பொக்கிஷம்!)

S.A  மன்சூர் அலி

முன்னுரை

இன்னும், நீங்கள் அவர்களிடம் மன அமைதி பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே மவத்தத் எனும் அன்பையும், இரக்கத்தையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (குர்ஆன்: 30:21)

Friday, December 5, 2014

தொலைபேசி தலாக்!

இஸ்லாமிய மாத இதழ்களில் இப்படி சில கேள்விகள் கேட்கப் படுகின்றன:

“எஸ்.எம்.எஸ் வழியே அல்லது தொலைபேசி வழியே தலாக் சொன்னால் தலாக் நிகழ்ந்து விடுமா?” ஆம்! நிகழ்ந்து விடும் என்று ஒரே வரியில் பதில் அளிக்கப் படுகிறது.

ஆனால் பின்னணி என்ன என்பது புரிந்து கொள்ளப் படாமலே பதில்கள் அளிக்கப் படுவதால், பலரது வாழ்க்கை பாதிக்கப் படுகிறது என்பதை ஏனோ புரிந்து கொள்ளத் தவறி விடுகிறோம். சாதாரணமாக மருத்துவம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மருத்துவர்கள் கூட, தங்கள் ஆலோசனைகளை எழுதி விட்டு, இறுதியில் அருகில் உள்ள மருத்துவரை அணுகவும் என்று முடிக்கிறார்கள்.

Tuesday, November 18, 2014

இது யார் சொல்லித்தந்ததோ தெரியவில்லை!

"பெண்களைப் போல் அழாதே?!"

"உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்! அதனை வெளிக்காட்டாதே!

"உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என்பதெல்லாம் பெண்களுக்கு மட்டும் தான். ஆண்களுக்கு அது பலவீனம்!"

"ஆண்களைப் பொருத்தவரையில் - அவர்கள் - வெளிப்படுத்திடத் தக்க  ஒரு உணர்ச்சி இருக்கிறதென்றால் அது கோபம்மட்டும் தான்!"

Thursday, November 13, 2014

மாய சுழற்சி மறைந்து விட்டதா?

ஒரு ஆண் - தன் மனைவியிடமும், தான் பெற்ற பிள்ளைகளிடமும், மற்றவர்களிடமும் மிக மிக முக்கியமாக எதிர்பார்ப்பது என்ன?

மற்றவர்களால் - தான் - கண்ணியப்படுத்தப்பட வேண்டும்! (To be respected). இதுவே ஒவ்வொரு ஆண்மகனின் முதன்மையான தேவையும், எதிர்பார்ப்பும் ஆகும்! (Primary Need for men).

இதனை அனைவருக்கும் முதலாக ஒரு மனைவி புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதாவது ஒரு கணவனின் முதல் தேவையே - அவன் கண்ணியப் படுத்தப்படுவது தான்!

Sunday, November 9, 2014

பாடம் படித்துக் கொள்ள வேண்டியது கணவன் மனைவி இருவரும் தான்!

கணவன் மனைவி குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பும் நேரம்.

"ஏங்க! லேட்டாயிடுச்சுங்க! ஏதாவது ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டு விட்டுப் போயிடலாங்க!" - இது மனைவி.

"ஓக்கே!" - ஒரே வார்த்தையில் பதில்! - இது கணவன்.

"எந்த ஹோட்டல் போகலாம்னு நீங்களே சொல்லுங்க!" - இது மனைவி.

"எதுவானாலும் பரவாயில்லை!" -  நீயே முடிவு பண்ணு!"

Thursday, November 6, 2014

கணவன் மனைவியருக்குள் விவாதமா?

கணவன் மனைவி விவாதங்களின் போது மூன்று விஷயங்களைக் கடைபிடிப்பது அவசியம் என்று இஸ்லாமிய அறிஞரும், குடும்ப நல ஆலோசகருமான ஷேஃக் யாசிர் ஃபஸாஃகா அவர்கள் கற்றுத் தருகிறார்கள்:

1 நாம் சொல்ல வருகின்ற கருத்து ஒன்றும் அவ்வளவு முக்கியம் அல்ல! நாம் யாரிடம் அந்தக் கருத்தைச் சொல்ல வருகின்றோமோ அந்தத் துணை நமக்கு முக்கியம். இதனையே அவர் - "The person is always more important than the point!" என்கிறார்.

சூழ்நிலை அறிந்து பேசுங்கள்!

கணவன் மனைவி இருவருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் கடுமையான கருத்து வேறுபாடு. கோப உணர்ச்சி கொப்பளிக்கிறது. அது குறித்துப் பேசி விடலாம் என்று கணவனோ அல்லது மனைவியோ நினைக்கிறார்கள். 

ஆனால் கருத்து வேறுபாடுகள் குறித்துப் பேசிடத் தகுந்த சூழல் அந்த சமயத்தில் அங்கு இல்லையெனில் - கணவனும் மனைவியும் சற்றே பொறுமை காப்பது நல்லது. தகுந்த சூழல் ஒன்று உருவாகும் வரை அவர்கள் அது குறித்து வாய் திறக்காமல் இருப்பதே சாலச் சிறந்தது. 

இவர் கிட்ட பகிர்ந்து கொள்ளாமல் நான் யாரிடம் பகிர்ந்து கொள்வது?

இன்னொரு சம்பவம்.

கணவனுக்கு டின்னர் பரிமாறுகிறார் மனைவி. தோசை தான். மனைவி பேசத்தொடங்குகிறார். கணவன் சாப்பிட்டுக் கொண்டே – மனைவி பேசுவதைக் காதில் வாங்குகிறார்.

“ஏங்க, சம்சாத் மச்சி வந்திருந்திச்சா? எல்லாத்தையும் மச்சி கிட்ட நான் சொன்னேங்க. அவங்க நேரா அம்மாகிட்ட போய், “ஏம்மா, மச்சி தான் உங்களை நல்லா கவனிச்சுக்குதே; ஏங்க, அவங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டாமா? ஏன் இப்படி அவங்கள தொந்தரவு பண்ணுகிறாயாம்?" - என்று கேட்டாங்களாம். அதுக்கு உங்க அம்மா சொல்றாங்களாம்…

உங்க கிட்ட எதையுமே ஷேர் பண்ணிக்க முடியாதே!

பொதுவாக ஆண்களைப் பொருத்தவரை - அவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் அதன் முடிவுக்கே (result) முக்கியத்துவம் அளிப்பார்கள். அந்த முடிவுக்கு முன்னால் நடக்கின்ற எந்த விஷயமும் ஆண்களுக்கு அவ்வளவாக இனிப்பதில்லை! 

சான்றாக - குடும்பத்தினர் - ஊர் போய்ச் சேர்ந்து விட்டார்களா என்பதை அறிந்திட மட்டுமே ஆவல். எப்படிப்போய்ச் சேர்ந்தார்கள் என்பது அவர்களுக்கு முக்கியம் அல்ல. 

Friday, May 30, 2014

என்னிடம் திரும்பு! என்னைக் கவனி! நான் சொல்வதைக் கேள்! அது போதும் எனக்கு!

சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள் மனைவியருக்கு நிறைய இருக்கும். கணவன்மார்களுக்கோ – “இது ஒரு பெரிய விஷயமா? இதற்குப் போய் ஏன் இவள் இப்படி அலட்டிக் கொள்கிறாள்?” என்றே எண்ணத் தோன்றும்.

ஆனால் தமது சின்னச் சின்ன ஆசைகள் – கணவனால் – தொடர்ச்சியாக அலட்சியப்படுத்தப் படும்போது மனைவி என்ன நினைக்கிறாள்? “நான் இவ்வளவு சொல்லியும் இவர் கேட்கவில்லை என்றால் என்ன பொருள்? எனது உணர்வுகளை இவர் மதிப்பதே இல்லை!” என்பது தான்!

"தவறு அவர் மீது மட்டும் அல்லவே!"

குற்றம் சுமத்திக் கொண்டே இருக்கும் கெட்டப் பழக்கத்திலிருந்து விடுபட ஒரு உதாரணம் சொல்லப்படுகின்றது.

ஒரு கொடிய விஷப்பாம்பு அது! வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அது மற்றவர்களைக் கொட்டி விடும்! அந்தப் பாம்பு கொட்டினால் எப்படி வலிக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியும்; அது மரணத்துக்கும் வழி வகுக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியும்; அப்படிப்பட்ட பாம்பு ஒன்றிடம் போய் நீங்கள் உங்கள் கையை நீட்டுவீர்களா?

Thursday, May 22, 2014

குற்றம் சுமத்திக் கொண்டே இருந்தால் குடும்பத்தில் அமைதி குலைந்து விடும்!

எதற்கெடுத்தாலும் குற்றம் பிடிப்பவரின் மனநிலை என்ன தெரியுமா?

"எடுத்துக் கொண்ட காரியம் ஒன்றில் எனக்குத் தோல்வி ஒன்று ஏற்பட்டு விட்டால் அதன் பொருள் என்ன? அந்தக் காரியத்தை செய்வதற்கு நான் இலாயக்கானவன் இல்லை என்றல்லவா ஆகி விடும்?

Wednesday, May 21, 2014

என் தோல்வி அனைத்துக்கும் என் கணவனே காரணம்!


முந்தைய பதிவில் சொல்லப்பட்ட அதே போன்ற உதாரணத்தை மனைவிக்கும் நாம் சொல்லலாம்.

மனைவியின் உறவினர் அன்று மாலை வீட்டுக்கு வருவதனால், டின்னருக்காக, மனைவி கொஞ்சம் முந்திரிப்பருப்பும் திராட்சைப்பழமும் வாங்கிக் கொண்டு வரச்சொல்ல, மாலையில் அதனை வாங்க மறந்து விட்டுக் கணவன் வீட்டுக்கு சற்று தாமதமாகவே வந்து நிற்க – மனைவி “எங்கே முந்திரியும் திராட்சையும்?” என்று கேட்க,

"என் தோல்வி அனைத்துக்கும் என் துணைவியே காரணம்??"

ஆங்கிலத்தில் Blaming என்று ஒரு சொல், இதன் பொருள் என்ன?

கடுமையான சொற்களால் ஒருவரை குற்றம் சுமத்துவதற்குப் பெயர் தான் Blaming!

இதில் வார்த்தைகளாலேயே ஒருவரை தண்டிப்பதும், மட்டம் தட்டுவதும், இழிவு படுத்துவதும் அடங்கும். பார்க்கின்ற பார்வையினாலும், முகம் காட்டும் கோணல்களாலும் ஒருவரைத் தண்டிப்பதும் அடங்கும்!

Monday, May 19, 2014

முதன் முதலாக உங்கள் மனைவியின் பெற்றோர் வீட்டுக்குச் செல்கிறீர்களா?


திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு முதன் முதலாக நீங்கள் செல்கிறீர்கள். அங்கே நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

Tuesday, May 13, 2014

உங்கள் மனைவி - குழந்தையையும் உங்களையும் சேர்த்தே கவனித்துக் கொள்கிறார்!!

சுன்னத்தான இல்லறம்: 

சென்ற பதிவில் "குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் சோகம்" (postpartum depression) - பற்றி எழுதியிருந்தோம்.  இப்படிப்பட்ட சோகத்துக்கு 67% இளம் பெற்றோர்கள் ஆளாகிறார்களாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  

ஒரு குழந்தையின் வருகைக்குப் பின்...

சுன்னத்தான இல்லறம்:

குழந்தை ஒன்று வீட்டுக்குள் வருவது மிகவும் குதூகலமான ஒரு நிகழ்வு தான். அந்த இளந்தாயும் தந்தையும் தங்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து விட்டதாக எண்ணத் தொடங்குகின்றனர். தாங்கள் சிறந்த பெற்றோர்களாக விளங்கிட வேண்டும் என்று எண்ணுகின்றனர். குழந்தைக்காக இருவரும் மனம் உவந்து சிரமங்களை ஏற்றுக் கொள்கிறார்கள்.

Sunday, May 11, 2014

திருமணம் தாமதமானால்?

சிலருக்கு அல்லது பலருக்கு தனிப்பட்ட அல்லது குடும்ப சூழல் காரணமாக அவர்களின் திருமணம் தாமதமாகி கொண்டே போகலாம்.

ஆனால் அது வரை அவர்கள் தங்களது திருமண உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமே! என்ன செய்வது?

Saturday, May 10, 2014

பாலுறவுக்கு மென்மை மிக மிக அவசியம்!

சுன்னத்தான இல்லறம்:

(Tips on Sex)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “மென்மை ஒரு விஷயத்திலிருந்தால் அதை அலங்கரிக்கவே செய்யும். மென்மை எந்த விஷயத்தில் அகற்றப்பட்டுள்ளதோ அதைக் கோரப்படுத்திவிடும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

மென்மை கடைபிடிக்கப்பட்டால் பாலுறவு கூட அலங்காரம் தான்!


**

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஜரீர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எவர் மென்மையை இழந்தாரோ அவர் நன்மையை இழந்தார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

பாலுறவில் போய் நன்மையை இழப்பார்களோ?

**

முதலிரவில்....

குறிப்பாக - முதலிரவில் கணவன் மென்மையை அவசியம் கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் முதல் அனுபவமே கசந்து போய் விட்டால்? சற்றே சிந்தியுங்கள்.

திருமணம் செய்து வைக்கும் இமாம், திருமணம் முடிந்தவுடன் மாப்பிள்ளையை அழைத்து இது சம்பந்தமாக அறிவுறுத்தி அனுப்பி வைத்தல் மிக நன்று!

**

பாலுறவில் முரட்டுத் தனம் வேண்டாம்!

அனஸ்(ரலி) அறிவிக்க்கிறார்கள்: (ஒரு பயணத்தில் என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்கள் பயணப் பொருட்களுடன் (அவற்றின் காவலராக) இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் அடிமையான ‘அன்ஜஷா’ (நபியவர்களுடைய) துணைவியரின் ஒட்டகங்களைப் பாட்டுப் பாடி ஓடச் செய்து கொண்டிருந்தார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அன்ஜஷ்! நிதானமாக ஓட்டிச் செல்! (ஒட்டகச் சிவிகைக்குள் இருக்கும்) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே!’ என்றார்கள். (புகாரி – 6202)

பாடம்: பெண்கள் மென்மையானவர்கள். அவர்களை மென்மையாகவே காயாண்டிட வேண்டும்:

**
பாலுறவில் அவசரம் வேண்டாம்!

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார்கள்: தபூக் போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த என்னிடம் நபி(ஸல்) அவர்கள், ‘நீ இரவில் மதீனாவுக்குள் நுழைந்த கையோடு உன் வீட்டாரிடம் சென்றுவிடாதே!

வெளியூர் சென்ற கணவரைப் பிரிந்திருக்கும் பெண் சவரக்கத்தியைப் பயன்படுத்தித் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் வரை, தலைவிரி கோலமாயிருக்கும் பெண் தலைவாரிக்கொள்ளும் வரை பொறுமையாயிரு!” என்று கூறிவிட்டு, ‘புத்திசாலித்தனமாக நடந்து கொள்; புத்திசாலித்தனமாக நடந்துகொள்!” என்று கூறினார்கள். (புகாரி 5246)

கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போய் விடும்? எதற்கு அவசரம்?

**

பாலுறவில் நிதானமான அணுகுமுறை தேவை!

"நிதானம் என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருவது; அவசரம் என்பது ஷைத்தானிடமிருந்து வருவது!" (திர்மிதி)

பாலுறவுக்கும் நிதானம் தேவை தான்! இதில் உங்களை அவசரப்படுத்துவதெல்லாம் ஷைத்தான் தான்!

**

முன் விளையாட்டு – வலியுறுத்தப்பட்ட சுன்னத்!

இமாம் முனவி ரஹ்மதுல்லாஹி அலைஹி உரைக்கிறார்கள்: “பாலுறவுக்கு முன் – முன்விளையாட்டும் அழுத்தமான காதல் முத்தங்களும் வலியுறுத்தப்பட்ட நபிவழியாகும். (ஸுன்னா முஅக்கதா) .

அதற்கு மாற்றமாக நடப்பது விரும்பத்தகாததாகும் (மக்ரூஹ்)”. (ஆதாரம்: ஃபைழ் அல்-காதிர் ஷரஹ் அல்-ஜாமிஃ அல்-ஸகீர் 5:115)

முன் விளையாட்டு இல்லாத உறவில் கணவனின் தேவை விரைவில் நிறைவேறிவிடும்! ஆனால் மனைவியின் தேவை நிறைவேறவே செய்யாது! கவனம்!!

**

தேவை முழு திருப்தி!

பாலுறவில் திருப்தி என்பது உங்களுக்கு எந்த அளவு முக்கியமோ, அவர்களுக்கும் அதேபோன்று திருப்தி என்பது மிக முக்கியம்!

கணவர்களுக்குத் தம் மனைவியரிடம் இருக்கும் உரிமைகள் போன்றே, முறைப்படி அந்தக் கணவர்கள் மீது அவர்களின் மனைவியருக்கும் சமமான உரிமைகள் உண்டு; (2:228)

பாலுறவும் பெண்ணுரிமைகளுள் ஒன்று தான் என்பதை மறந்து விட வேண்டாம்!

பாலுறவு கசந்து போவதும் கூட – மன விலக்கு கோருவதற்கு ஒரு வலிமையான காரணமாக அமைந்து விடுவதுண்டு!

**

அனுபவியுங்கள்!

பாலுறவு என்பது குழந்தை பெற்றுக் கொள்வதற்கு மட்டும் அல்ல! பாலுறவின் முக்கியமான நோக்கமே இன்பம் அனுபவிப்பது தான்! அதற்கு வயது ஒரு தடையே கிடையாது!

இதனைப் புரிந்து கொண்டவர்களே புத்திசாலிகள்!

பிரிவும் ஏக்கமும்


உமர் (ரலி) அவர்களின் ஆட்சிகாலம்,

கலீஃபா உமர் (ரலி) அவர்கள் வழக்கம் போல் மக்களின் நிலைமைகளை அறிய இரவில் உலா வருகிறார்கள். அப்போது ஒரு பெண்மணி வீட்டுக்குள்ளிருந்து சோகமான ஒரு பாடலைப் பாடுகிறாள்.


தன் கவலையையும், மன ஆதங்கத்தையும் “என் நேசர் (கணவர்) என் அருகே இல்லாத இரவுதான் எவ்வளவு நீளமானது?” என கவிதை மூலம் தெரிவித்துக் கொண்டிருந்தார்.

அருகே சென்ற உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் அழுததற்கான காரணம் கேட்டார்கள்.

வந்தவர் உமர் (ரலி) தான் என்று தெரியாத அப்பெண்மணி ‘எங்கள் தனிமையை கொஞ்சம் இலகுவாக்கூடாதா; நீண்ட நாட்கள் எங்கள்
கணவன்மார்கள் பிரிந்திருப்பதை சற்று குறைக்கக்கூடாதா இந்த ஆட்சியாளர் உமர் (ரலி) என்று கூறினார்கள்.

மறுநாள் காலை நபியவர்களின் துணைவியாரும், உமர் (ரலி) அவர்களின் மகளுமான அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்று, ஒருபெண் தன் கணவனை விட்டுப்பிரிந்து எத்தனை நாள் பொறுமையாக இருக்க முடியும் என்று கேட்டார்கள்.

அன்னை ஹஃப்ஸா (ரலி) ஒரு மாதம், இரண்டு மாதம், மூன்று மாதம் கூடிபோனால் நான்கு மாதம் பொறுமை காக்க இயலும் என்று பதில் கூறினார்கள்.

உடனே "இறைப்பாதையில் போர்புரிய களம் புகும் வீரன் தன் மனைவியைப் பிரிந்து நான்கு மாதங்களுக்குமேல் யுத்த களத்தில் தங்கியிருக்கக் கூடாது" என கலீஃபா உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அதனுடைய முதல் நகலை அந்தப் பென்மணியின் கணவனுக்கு அனுப்பிவைத்தார்கள்.

நூல்: குலஃபாவுர்ரசூல் (ஸல்) பக்கம்: 155

Wednesday, May 7, 2014

நம்பிக்கை மோசம் – நினைத்துக் கூடப் பார்க்க வேண்டாம்!

சுன்னத்தான இல்லறம்:

கணவன் மனைவியருக்குள் அசைக்க முடியாத நம்பிக்கை (trust) என்பது மிக அவசியம். ஒருவர் தனது வாழ்க்கைத்துணையை – “இனி நான் இவரை நம்பிடத் தயாரில்லை” – என்று முடிவெடுத்து விட்டால் – அவர்களின் உறவு (relationship) மிகவும் ஆட்டம் கண்டு விட்டது என்று பொருள். அவர்களின் இல்லற எதிர்காலம் இருண்டு விட்டதாக பொருள்.


இவ்வுறவை நீடிப்பதா அல்லது முடித்துக் கொள்வதா – என்று மகா குழப்பத்துக்கு ஆளாகிறார்கள் கணவன் மனைவியர்.

“இவளுடன் இல்லாமல் நான் வேறு ஒருத்தியைத் திருமணம் முடித்திருந்தால் என் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்” – என்று தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கும் கணவன் தான் – வேறு பெண்களை நாடுகிறான். அது போலத்தான் மனைவியரும்.

மனைவியின் குறைகளையே துருவிக் கொண்டிருக்காமல் – அவளுடைய நிறைகளை நினைத்து – அவைகளால் தான் அடையும் “பலன்களுக்கு” நன்றியுணர்ச்சி உடையவனாக கணவன் நடந்து கொள்ளும்போது – கணவன் மனைவி நம்பகத் தன்மை உறுதி செய்யப்படுகின்றது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு இறை நம்பிக்கையுள்ள ஆண் (கணவன்) ஒரு முஃமினான பெண்ணை (அவன் மனைவியை) வெறுக்க வேண்டாம்.அவன் அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால்,அவளிடமுள்ள வேறொரு நற்குணத்தைக் கொண்டு பொருந்திக்கொள்வானாக! என நபி (ஸல்) அவர்கள் ௬றினார்கள்.(முஸ்லிம்-2672)

இதற்குப் பெயர் தான் POSITIVE APPROACH!

மனைவியை வெறுப்பதற்கு பதிலாக –

“நீயே என் எதிர்காலம்! நீ இல்லாவிட்டால் என் வாழ்க்கை ஒரு பாலைவனம்; எனக்கு அற்புதமான குழந்தைகளைத் தந்தவள் நீ! நீ அன்பைப் பொழிகின்ற ஒரு அருமையான தாய்! நீ எனக்கு சிறந்த நண்பன். ஆலோசகன். நீ கொடுத்துக் கொண்டே இருப்பவள். கிடைப்பது பற்றிக் கவலைப்படாதவள்!” – என்றெல்லாம் உளமாற மனமாறப் பாராட்டிப் பாருங்கள்!

இதுவே நபிவழியாகும்! அப்புறம் – நம்பகத்தன்மை வலிமை பெறுகிறதா இல்லையா என்று பாருங்கள்.

ஆனால் – இல்லற வாழ்க்கை குறித்து சரியான வழிகாட்டுதலை அறியாத, நல்லெண்ணம் கொண்ட நமது சகோதர குடும்பங்களில் கூட இந்த நம்பிக்கை மோசடி – தலை விரித்து ஆடுகிறது! பல அவமானகரமான பின் விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது!

அவர்களுக்கு நம் ஆலோசனைகள்:

A. உங்கள் துணை உங்களை மோசம் செய்து விடாமல் இருப்பதற்கு:

ஏழையாக இருந்தாலும், இறையச்சமுள்ள நற்குணம் மிக்க ஒரு துணையைத் தேர்வு செய்யுங்கள்.

பயணம் சென்று பிரிந்து வாழும் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப் புள்ளி வையுங்கள்.

நெருங்கி வாழுங்கள்; நேரம் ஒதுக்குங்கள்; ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்;

துணையின் தேவைகளை நன்றாக நிறைவேற்றிக் கொடுங்கள். வெளியில் அழைத்துச் செல்லுங்கள்; பேசுங்கள்; சிரியுங்கள்; பேச விட்டுக் கேளுங்கள்; விளையாடுங்கள்.

வேலைப்பளுவைக் காரணம் காட்டி – அவர்களின் உணர்வுகளைப் புறக்கணிக்காதீர்கள்.

பாலுறவில் சுய நலம் வேண்டாம்; உங்கள் துணையின் திருப்தியை அலட்சியம் செய்து விடாதீர்கள்!

எதிர்மறைப் பேச்சுக்களை முற்றாகத் தவிர்த்திடுங்கள். இது தான் நம்பிக்கை மோசடிக்கு இட்டுச் செல்ல ஷைத்தான் தேர்வு செய்திடும் முதல் ஸ்டெப்!

சந்தேகம் ஏற்படுகின்றதா? வெளிப்படையாகப் பேசி விடுங்கள்; நீங்களும் வெளிப்படையாக நடந்து கொள்ளுங்கள்.

B. ஏதோ – காரணங்களால் உங்கள் துணையை வெறுத்து – அவருக்கு நம்பிக்கை மோசடி செய்திட ஷைத்தான் உங்களைத் தூண்டுகின்றானா? ஒரு தடவை நீங்கள் ஷைத்தானின் வலையில் வீழ்ந்து விட்டாலும் – அதன் விளைவுகளை சற்றே எண்ணிப் பாருங்கள்:

அனுதினமும் பொய் சொல்ல வேண்டிய அவல நிலைக்கு ஆளாக நேரிடும்.

தெரிந்து போய் விடுமோ என்ற அச்ச உணர்வு அலைக்கழித்துக் கொண்டே இருக்கும்.

யாருடைய வலையில் விழுகின்றீர்களோ – அவர்களின் மிரட்டலுக்கு ஆளாக வேண்டி வரும். திருந்தி வாழும் வாய்ப்பு கூட கடினமாகி விடும்.

வெட்க உணர்வு அற்றுப்போக நேரிடும்.

எதிர்காலம் இருண்டதாகி விடும், மற்ற உறவுகளும் கூட வர மாட்டார்கள்.

இதுவெல்லாம் ஒரு புறம் இருக்க – உங்கள் தாயின் மனநிலை என்னவாகும்? தந்தையின் தலைகுனிவுக்கு என்ன மருந்து? உங்கள் சகோதரர்களின் கண்ணியம் என்னவாகும்? சகோதரிகளின் திருமண வாழ்க்கை என்னவாகும்? நீங்கள் பெற்ற செல்வங்களின் மன நிலை என்ன பாடுபடும்? என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

வெளியே தலை காட்டிட முடியாமல் – கூனிக் குறுகி வாழ்ந்திட வேண்டிய அவல நிலைக்கு உங்கள் சுற்றம் ஆளாக நேரிடும்.

இறுதியாக ஒரு அறிவுரை: தப்பு செய்து விட்டு அது தெரிந்த பின்னரும் – உங்கள் துணைவர் உங்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் அது கண்ணாடி ஒன்றை உடைத்து விட்டு – மீண்டும் அதனை ஒட்ட வைப்பது போலத்தான்! கண்ணாடியின் பழைய தோற்றம் வரவே வராது!

எனவே – இறையச்ச மிக்க சமுதாயமே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஹம்மதின் சமுதாயமே!

தன் அடியார்களில் ஆணோ பெண்ணோ யார் விபசாரத்தில் ஈடுபடுவதைக் கண்டாலும் அல்லாஹ்வைவிடக் கடுமையாக ரோஷம் கொள்பவர் வேறெவருமிலர். முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதையெல்லாம் நீங்களும் அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள் - என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி 5221)

வல்லோன் அல்லாஹ் நம் சகோதரர்களையும் சகோதரிகளையும் நம்பிக்கை மோசம் செய்வதிலிருந்தும், செய்யப்படுவதிலிருந்தும் பாதுகாப்பானாக! ஆமீன்!

Tuesday, May 6, 2014

இல்லறம் காக்கப்பட இறைவன் போட்டுத் தரும் பாதுகாப்பு வளையங்கள்!

சுன்னத்தான இல்லறம்:

கணவன் மனைவி உறவை பலப்படுத்துவது எது? அவர்களுக்குள் காதல் உணர்வை நிலைத்திருக்கச் செய்வது எது? அது தான் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் “நம்பிக்கை” (trust)!


ஆனால் இந்த நம்பகத் தன்மையை உடைத்தெறிந்திடப் புறப்பட்டவன் தான் ஷைத்தான் – மனிதனின் பொது எதிரி! அவன் கங்கணம் கட்டினான். அல்லாஹ் அனுமதி கொடுத்தான்.

கணவன் மனைவியரைப் பிரித்து வைப்பது தான் மிகச் சிறந்த ஷைத்தானிய வேலை என்று தன் சகாக்களுக்கு “சான்றிதழ்” வழங்கினான். (பார்க்க: முஸ்லிம் 5419)

கணவன் மனைவி நல்லுறவை உடைத்தெறிவதற்கு ஷைத்தான் மேற்கொள்ளும் வழிமுறைகள் என்னென்ன?

கணவன் மனைவி நம்பகத்தன்மையை உடைப்பது; சந்தேக விதைகளை விதைப்பது; சந்தேக சூழலைத் தனக்குச் சாதகமாக்குவது. அதனைப் பரப்பி விடுவது; கணவன் மனைவியருக்குள் சண்டை மூட்டுவது; பெரிது படுத்தி வேடிக்கை பார்ப்பது;

இதனை நாம் நுணுக்கமாக ஆய்வு செய்திட வேண்டியுள்ளது: ஏனெனில் ஷைத்தானின் அடிச்சுவட்டைப் பின் பற்ற வேண்டாம் என்பது இறை கட்டளை!

ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; (24:21)

அடிச்சுவடு என்பது சின்ன சின்ன ஸ்டெப்!

அதாவது ஷைத்தான் நம்மை வழிகெடுக்கும் முறை – நம்மை சின்ன சின்ன “தவறுகளில்” விழ வைத்து – அப்படியே அவன் வழியில் நம்மை வழி கெடுத்து – இறுதியில் ஒரேயடியாக நம்மைப் பாவப் படுகுழியில் தள்ளி விட்டு வேடிக்கை பார்ப்பது தான்!

ஆனால் – அல்லாஹு தஆலா – தன் அடியார்களாகிய நமக்கெல்லாம் மிகத் தெளிவாகவும் மிக விரிவாகவும், மிக விளக்கமாகவும் வழி காட்டியிருக்கின்றான்.

எந்தெந்த வழிகளில் எல்லாம் அவன் வழி கெடுக்க வருவானோ அத்தனை வழிகளையும் அடைத்துக் கொள்ளச் சொல்லி வழிகாட்டியுள்ளான் அல்லாஹு தஆலா.

வல்லோன் அல்லாஹ்வின் விரிவான வழிகாட்டுதல்கள் என்னென்ன?

சுருக்கமாகப் பட்டியலிடுவோம் இங்கே.

1. பருவம் அடைந்ததும் – தாமதிக்காமல் திருமணம் செய்து வைத்து விடுதல்

2. திருமணம் தாமதமானால் கற்பைப் பாதுகாத்துக் கொள்தல்

3. தூய்மையான துணையைத் தேர்வு செய்தல்

4. திருமணத்தை எளிமையாக்குதல்

5. கணவன் மனைவியரின் திருப்திகரமான பாலுறவுக்கு (sex life) ஊக்கம் அளித்தல்; அதனை உறுதி செய்தல்

6. மகிழ்ச்சிகரமான இல்லற வாழ்வுக்கு எளிமையான வழிகாட்டுதல்கள் (முத்தம்; விளையாட்டு, சேர்ந்து குளித்தல்; சேர்ந்து உண்ணுதல்; வேலைகளைப் பகிர்ந்து கொள்தல்; மென்மையைக் கடைபிடித்தல், நேரம் ஒதுக்குதல்)

7. வாழ்க்கைத் துணையை மதித்தல்; கண்ணியமாக நடத்துதல்; நகைச்சுவை உணர்வு; மன்னிக்கும் மனப்பான்மை; உணர்வுகளை மதித்தல்; தனிமையில் மட்டும் கண்டித்தல்; இரக்கம் காட்டுதல்

8. கண்ணியமாக பேசுதல்; திட்டுவதைத் தவிர்த்தல்; வாக்குறுதிகளைக் காப்பாற்றுதல்; தவறுகளை ஒத்துக் கொள்தல்; கருத்து வேறுபாடுகளை அழகான முறையில் தீர்த்துக் கொள்தல்

9. கண்ணியமான ஆடை (ஹிஜாப்) அணிதல்; அலங்காரத்தை மறைத்துக் கொள்தல்

10. ஆணும் பெண்ணும் தங்கள் கண் பார்வையைத் தாழ்த்திக் கொள்தல்

11. (அன்னியரான) ஆண் – பெண் தனிமையைத் தவிர்த்தல் / பயணத்தைத் தவிர்த்தல்

12. ஒருவர் வீட்டுக்குள் நுழைவதில் கட்டுப்பாடுகளைக் கடைபிடித்தல்; எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்தல்

13. நடந்து செல்லும்போதும் கட்டுப்பாடு

14. அன்னியருடன் பேசும்போதும் கட்டுப்பாடு

15. சந்தேகமான சூழ்நிலைகளைத் தவிர்த்துக் கொள்தல்

16. கற்புள்ள பெண்கள் மீது அவதூறு பரப்பினால் கடுமையான தண்டனை

17. நம்பிக்கை மோசடி செய்த பெண்ணுக்கு கணவனே – இறைச்சாபமிட்டுப் பிரித்து விடுதல் எனும் கடுமையான சட்டம்

18. விபச்சாரத்துக்கு கடுமையான தண்டனை

இல்லறம் பாதுகாக்கப்பட இறைவன் போட்டுத் தந்திருக்கும் இந்தப் பாதுகாப்பு வளையங்களைப் பேணிக்கொள்தல் மிக அவசியம்!

Saturday, May 3, 2014

திருமணத்துக்கு நீங்கள் தயாரா?

சுன்னத்தான இல்லறம்: 

திருமணம் செய்து கொள்வதற்கு முன்னால் ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் தம்மை அதற்கெனத் தயார் படுத்திக் கொள்வது அவசியம். திருமணத்துக்கு ஒருவர் தம்மைத் தயார் படுத்திக் கொள்வது என்றால் என்ன? அது எப்படி என்பதை ஒவ்வொன்றாக இங்கே பார்ப்போம்.


ஒன்று:
இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் திருமணம் என்றால் என்ன, அது கொண்டு வரும் பொறுப்புகள் யாவை என்பது குறித்த தெளிவான அறிவைப் பெற்றுக் கொள்தல்.

இரண்டு:
திருமணம் செய்து கொண்டு - இல்லற வாழ்வைத் தொடங்கி - இல்லறத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் நிறைவேற்றிடும் தகுதி தமக்கு முழுவதும் இருக்கின்றதா என்று சுய பரிசோதனை செய்து கொள்தல்; தனது பலம் பலவீனம் குறித்த மதிப்பீட்டினை தெளிவாக உணர்ந்து கொள்தல்.

மூன்று:
கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டு இல்லற வாழ்வை மகிழ்ச்சியுடன் கொண்டு செல்வது எப்படி என்ற அறிவைப் பெற்றுக் கொள்தல்; திருமணத்தின் சவால்கள் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்தல்.

நான்கு:
ஒருவரை திருமணம் செய்திட நமக்குப் பரிந்துரைக்கப்பட்டால் - அவர் நமக்குப் பொருத்தமானவர் தானா என்று அறிந்து கொள்வது எப்படி என்ற வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்தல்.

ஐந்து:
திருமண சட்டங்களையும், திருமண ஒப்பந்தம் குறித்த மார்க்க வழிகாட்டுதலையும் நன்றாக அறிந்து கொள்தல்.

**

நாம் மேலே சொன்ன வழிகாட்டுதல்கள் அனைத்தையும் முழுமையாக பெற்றுக் கொள்ளும் வழிகள்:

திருமணம் குறித்த ஆழமான அறிவைப் பெற்றுக் கொள்ள இங்கே நான்கு அறிஞர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கின்றோம்:
.
அ. யாஸிர் ஃபஸாகா (Yasssir Fazaga) எனும் இஸ்லாமிய அறிஞர்; இவருடைய சொற்பொழிவுகளை YouTube ல் சென்று கேளுங்கள். குறிப்பாக குடும்ப நலன் குறித்த இவரது பேச்சுக்களை அவசியம் கேளுங்கள்.

ஆ. யாவர் பைஃக் (Yawar Baig) எனும் அறிஞர். இவர் திருமணம் குறித்து எழுதிய நூல் ஒன்று இணைய தளத்தில் கிடைக்கிறது. அவசியம் படியுங்கள்.

Link: http://www.yawarbaig.org/yawarbaig/my-books/marriage-the-making-and-living-of-it

மேலும் இவருடைய சொற்பொழிவுகளையும் YouTube ல் சென்று கேளுங்கள்.

இ. கமால் ஸஹ்ராவி (Kamal Zahraawi) எனும் அறிஞர். இவர் நடத்தும் இணைய தளம்:

http://salaamhearts.com/

திருமணம் இல்லறம் குறித்த வழிகாட்டுதலுக்கு இது ஒரு மிக முக்கியமான இணையதளம் ஆகும்.

அவருடைய "Dwell in Tranquility: an Islamic roadmap to the vibrant marriage " - எனும் நூலையும் வாங்கிப் படிக்கலாம்.

ஈ. ருகையா வாரிஸ் மக்ஸூத் (Ruqayya Warith Maqsood) எனும் அறிஞர். இவருடைய Marriage guide அவசியம் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று. இணைய தளத்தில் கிடைக்கிறது.

http://www.biharanjuman.org/MarriageGuide.pdf

இங்கு நான்கு அறிஞர்களின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப் பட்டுள்ளன. அவைகளை ஆழ்ந்து படியுங்கள்; சிந்தியுங்கள். அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்து நீங்கள் பெற வேண்டிய பயிற்சிகள்:

அ. இறையச்சம் மற்றும் இஸ்லாமிய வாழ்க்கை நெறிக்கான பயிற்சி ( Providing Tarbiyyah and Tazkiyah training )

ஆ. முறையான இஸ்லாமியத் திருமணம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் (Bringing an awareness about Islamic Marriage); பொருத்தமான திருமணத் தேர்வுக்கு வழிகாட்டுதல் (Guidance for making a compatible marital choice);

இ. சிறப்பான மகிழ்ச்சியான இல்லறம் நடத்துவது குறித்த தெளிவான வழி காட்டுதலை வழங்குதல் (Guidance for a happy married life); கருத்து வேறுபாடுகளின் போது நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்த அறிவைப் பெறுதல்;
கவுன்ஸலிங் பற்றிய விழிப்புணர்ச்சியை வழங்குதல் (Counselling for conflict resolution).

ஈ. மனித உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் பயிற்சி (developing inter-personal skills); கருத்துப் பரிமாற்றப் பயிற்சி (communciation skill).

உ. மனித வள மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் வாழ்க்கையின் இலட்சியம் (human resource development and life goal);  உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திடும் பயிற்சி (soft skills / emotional skills)

இப்பயிற்சிகளை தமிழில் வழங்குபவர்களுள் ஒருவர் தான் நீடூர் மன்சூர் அலி அவர்கள்.

**

அடுத்து உங்களுடைய ஆளுமை குறித்த மதிப்பீட்டை நீங்கள் அறிந்து கொண்டு உங்களை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகளைக் கற்றுக் கொள்தல் அவசியம்!

தனிப்பட்ட ஒருவரின் ஆளுமை மதிப்பீடு அவரை எப்படிப்பட்டவர் என்று தெளிவு படுத்திக் கொள்ள பெரிதும் உதவும். ஓருவர் தனிமை (introvert) விரும்பியா? அல்லது வெளியே சென்று (extrovert) மற்றவர்களுடன் பழகுவதை விரும்பக்கூடியவரா என்பதை மதிப்பீடு செய்து தரும். ஒருவர் உணர்வுக்கு (feeling oriented) மதிப்பளிப்பவரா? அல்லது அறிவின் (thinking oriented) அடிப்படையிலேயே செயல்படுபவரா என்பதை எடுத்துச் சொல்லும்!
ஒருவருடைய பலம் என்னென்ன, பலவீனங்கள் என்னென்ன என்பதை கோடிட்டுக் காட்டும்.

இப்படிப்பட்ட ஆளுமை மதிப்பீட்டின் அடிப்படையில் - ஒருவர் தன் பலங்களை வலுப்படுத்திக் கொண்டு பலவீனங்களை வெல்வது எப்படி என்பதை நமக்குக் கற்றுத் தரும்.

http://salaamhearts.com/

இந்த இணைய தளம் 65 கேள்விகளைக் கொண்டு தனிப்பட்ட ஒருவரின் ஆளுமை பற்றிய மதிப்பீடு ஒன்றை (personality assessment) வழங்குகிறது. முன்னேற்றத்திற்கான வழிமுறைகளையும் சொல்லித் தருகிறது அந்த இணைய தளம்.

அது போலவே ஒவ்வொருவருடைய ஆளுமைகளை வகைப்படுத்தித் தரும் (personality types) இணைய தளங்கள் நிறைய இருக்கின்றன. பின் வரும் இணைய தளம் அவற்றுள் ஒன்று:

http://www.myersbriggs.org/my-mbti-personality-type/mbti-basics/

இவைகளைப் பயன்படுத்தி - உங்களின் ஆளுமைகளைப் பற்றிய மதிப்பிடுகளை அறிந்து கொள்ளுங்கள்.

இப்படிப்பட்ட பயிற்சிகளுக்குப் பிறகே நீங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடிடும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

கவனம் இல்லாத தொழுகை; கவனம் இல்லாத பாலுறவு - இரண்டிலும் எந்தப் பயனும் இல்லை!

சுன்னத்தான இல்லறம்: 

கவனம் இல்லாத தொழுகை; கவனம் இல்லாத பாலுறவு - இரண்டிலும் எந்தப் பயனும் இல்லை!

திருமறையின் 23 வது அத்தியாயத்தின் முதல் 11 வசனங்களின் தமிழ் மொழிபெயர்ப்பைக் கீழே தந்துள்ளோம் உங்கள் சிந்தனைக்கு.



ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். இன்னும், அவர்கள் வீணானவற்றை விட்டு விலகியிருப்பார்கள். ஸகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.

மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர –  நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள். ஆனால், இதற்கு அப்பால் எவர் நாடுகிறாரோ அவர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.

இன்னும், அவர்கள் தங்கள் அமானிதங்களையும், வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளைப் பேணுவார்கள். இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள். இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். (23:1-11)

இந்த இறை வசனங்களில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?

வெற்றி, ஈமான், தொழுகை, உள்ளச்சம், ஸகாத், ”வீணானவை”, பாலியல், அமானத், வாக்குறுதி, சுவனம் - இவை தான்!

இவற்றுள் ஈமான், தொழுகை, ஸகாத், சுவர்க்கம் - ஆகிய சொற்கள் திருமறையில் பல இடங்களில் திரும்பவும் திரும்பவும் சொல்லப்படுபவை.

வெற்றி, அமானத், வாக்குறுதி - ஆகிய சொற்கள் கூட ஒரளவு திரும்பவும், திரும்பவும் திருமறையில் இடம் பெறும் சொற்கள் தாம்!

ஆனால் நாம் எடுத்துக் கொண்ட மேற்கண்ட வசனங்களில் நம் கவனத்தை ஈர்ப்பது - உள்ளச்சம், "வீணானவை" மற்றும் வெட்கத் தலங்களைப் பாதுகாத்துக் கொள்தல் (பாலியல்) - ஆகியவை தாம்!

இந்த மூன்று விஷயங்களுக்கும் ஒரு விதமான நெருங்கிய தொடர்பு உண்டு!

முதலில் உள்ளச்சம். அதாவது தொழுகையின் போது வல்லோன் அல்லாஹ்வுக்கு முன்னால் அடிபணிந்து நிற்கும் ஒரு அடிமையின் மன நிலைக்குப் பெயர் தான் உள்ளச்சம். தொழுகையில் இந்த மனநிலையை நிலை நிறுத்திட தொழுகையில் நமக்கு கவனக் குவிப்பு அவசியம். அதாவது concentration, mindfulness and attention - இவையெல்லாம் அவசியம் என்று சொல்லலாம்.    

ஆனால் நமது தொழுகையில் நமக்குக் கவனக்குவிப்பு மிகவும் கடினமாக இருக்கிறதே அது ஏன்? காரணம் வேறு ஒன்றுமில்லை! நாம் வீணானவற்றில் மூழ்கிக் கிடக்கின்றோம் என்பது தான் அது!!

“இன்னும், அவர்கள் வீணானவற்றை விட்டு விலகியிருப்பார்கள்.”

வீணானவை என்பது எவற்றையெல்லாம் குறிக்கும்? நமக்குப் பயனளிக்காத அனைத்தையும் குறிக்கும்! நண்பர்களுடன் அரட்டை அடித்தல், சினிமா, கிரிக்கெட், இசை, தேவையற்ற விவாதங்கள், வெட்டிப் பேச்சுக்கள் எல்லாமே - வீணானவை தான்!  

வீணானவற்றில் மூழ்கியிருப்பவர்களுக்கு - தொழுகையில் கவனக் குவிப்பு இருக்காது! எனவே அவர்களால் உள்ளச்சத்துடன் தொழ முடியாது! இதே கவனச் சிதறல் இவர்களின் பாலுறவு வாழ்க்கையையும் சிதைத்து விடுகிறது.  

ஆனால் "ஈமான்" கொண்டவர்கள், "வீணானவற்றில்" மூழ்கி விடாமல் விலகி விடுவதால், அவர்கள் "உள்ளச்சத்தோடு" "தொழுகிறார்கள்! இவர்களின் "பாலுறவு வாழ்க்கையும்" மிகச் சிறப்பாக இருக்கும்; காரணம் என்ன தெரியுமா? தொழுகை தரும் கவனக்குவிப்பு, பாலுறவிலும் பிரதி பலிக்கும்; எனவே அவர்கள் தங்கள் வெட்கத் தலங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

இதனை மீண்டும் வரிசைப் படுத்துவோம்.

வெற்றியுடன் துவங்குகிறது இறை வசனம். வெற்றியை இறை நம்பிக்கையோடு சேர்த்துச் சொல்கிறான் வல்லோன் அல்லாஹ்! ஈமான் தொழுகையுடன் இணைக்கப்படுகிறது. தொழுகை உள்ளச்சத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளச்சம் நமக்கு கவனக் குவிப்பை (concentration and mindfulness) வழங்குகிறது. ஐந்து வேளை தொடர்ந்து தொழுபவர்கள் “வீணானவற்றில்” மூழ்கிட மாட்டார்கள்.

தொழுகை தரும் கவனக் குவிப்பு – இறை நம்பிக்கையாளனின் தாம்பத்திய வாழ்க்கையைச் சிறப்பாக ஆக்கி விடுகின்றது. எனவே அவன் தன் திருமண பந்தத்தைத் தவிர்த்த வழிகளில் செல்வதில் இருந்து காக்கப்படுகின்றான்.
மனைவியிடம் தரும் "வாக்குறுதிகளை" அவை மிகச் சிறியதாக இருந்தாலும் தவறாது நிறைவேற்றுகிறான். மனைவி குளிர்ந்து போய் விடுகின்றாள். கணவன் எந்நேரத்திலும் தனக்காகவே இருக்கின்றான் என்று நம்புகிறாள் (trust). இது தான் உலகிலேயே அவர்களுக்குச் சுவர்க்கம்! இவர்களே சுவனத்தின் வாரிசுதாரர்கள்!

பாடம் என்ன? கவனம் இல்லாத தொழுகை; கவனம் இல்லாத பாலுறவு - இரண்டிலும் எந்தப் பயனும் இல்லை!    
அடிக்குறிப்பு:

பாலுறவு சிறப்பாக இருந்தால் அதன் "விளைவு" என்ன"

சூரத்துல் முஃமினூன் அத்தியாயத்தின் இதற்கு அடுத்து வரும் மூன்று வசனங்களைப் படியுங்கள்; புரியும்! 

Friday, May 2, 2014

இப்படிப்பட்ட பெற்றோர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சுன்னத்தான இல்லறம்: 

இப்படியும் சில பெற்றோர்கள்! இப்படியும் சில பிள்ளைகள்!

இவர்கள் - மார்க்கத்தைப் பின்பற்றும் பிள்ளைகள். இப்போது திருமணம் ஆகி விட்டது. அதே நேரத்தில் பெற்றோர்களும் மார்க்கத்தை உறுதியாகப் பின்பற்றுபவர்கள்!

இந்தப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் திருமண விஷயங்களில் தலையிடுவதை விரும்பாமல் - அவர்களை சற்று தூரவே வைத்து அழகு பார்ப்பவர்கள்.


பிள்ளைகளும் அடிக்கடி வந்து பெற்றோர்களை கவனித்துக் கொள்கின்றார்கள். பெற்றோருக்குச் செய்திட வேண்டிய  கடமைகளை நிறைவேற்றித் தருவதில் எந்தக் குறையும் இவர்கள் வைப்பதில்லை! மாமியார், நாத்தனார் பிரச்னைகள் இங்கு அறவே கிடையாது!

எனது நண்பர் ஒருவர். அவருடைய தாயும் தந்தையும் சொந்த ஊரில் தனியே தான் வசிக்கிறார்கள். இரண்டு மகன்கள், ஒரு மகள். மகள் திருமணமாகி கணவன் வீட்டுக்குச் சென்று விட்டார். மூத்த மகன் அதே ஊரிலேயே வீடு கட்டி தனிக்குடித்தனம் நடத்துகிறார்.

தம்பி தான் எனது நண்பர். அவருக்கும் அதே ஊரிலேயே பெண் பார்த்து, திருமணம் முடிந்த உடனேயே வாடகைக்கு வீடு ஒன்று பார்த்து இரண்டாம் மகனையும் மருமகளையும் தனிக்குடித்தனம் இருக்குமாறு வலியுறுத்தி வாழ
வைத்திருக்கிறார் அந்த அருமையான தாய்.

நான் என் நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்த போது காலையில் அவருடைய தாயும் தந்தையும் அங்கு வந்திருந்தார்கள். மாலையில் அவர்கள் வீட்டுக்குச் சென்று விட்டார்கள். மூத்த மகன் வீட்டுக்குச் சென்றாலும் அப்படித்தானாம்!

பிள்ளைகளின் திருமண வாழ்வில் கொஞ்சம் கூடத் தலையிடாமல், அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதை சற்று தூரத்திலேயே இருந்து கொண்டு ரசிக்கின்ற மனப்பக்குவம் நம்மை மலைக்க வைக்கிறது!

இப்படிப்பட்ட பெற்றோர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

இவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சுன்னத்தான இல்லறம்: 

இவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இவர்கள் சில இளைஞர்கள்.

திருமண விஷயத்தில் இவர்கள் பெற்றோர்கள் வரதட்சனையை வலியுறுருத்துகிறார்கள். ஆனால் இவர்கள் அதனை மறுக்கிறார்கள்.


மார்க்கத்தில் அதற்கு அனுமதியில்லை என்பதை எடுத்துச் சொல்லி பெற்றோர்களை சம்மதிக்க வைக்க முயற்சி செய்கின்றார்கள். ஆனால் பெற்றோர்கள் முரண்டு பிடிக்கிறார்கள். அவர்கள் மசிவதாகத் தெரிவதில்லை! அவர்களுக்கு பெற்ற மகனின் நலனும் கண்ணுக்குத் தெரிவதில்லை! மார்க்கத்தின் நலனும் கண்ணுக்குத் தெரிவதில்லை!

பெற்றோர்கள் இத்தகைய இளைஞர்களிடம் முகம் கொடுத்துப் பேசுவதைக்கூட நிறுத்திக் கொள்கின்றனர்; பெற்றவர்களின் சொத்து இந்த இளைஞர்களுக்கு மறுக்கப்பட்டு விடும் என்று எச்சரிக்கப்படுகின்றனர்.

ஆனால் - அந்த இளைஞர்களோ பெற்றோர் விருப்பத்துக்கெல்லாம் ஆடுவதில்லை என்று திட்டவட்டமாக முடிவு செய்து கொள்கிறார்கள். பொறுமையைக் கடைபிடித்துப் பார்க்கிறார்கள்; எந்த மன மாற்றத்துக்கும் பெற்றவர்கள் வரத் தயாரில்லை!

இறுதியில் இறைவனை அஞ்சும் அந்த இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்?

வீட்டை விட்டு வெளியேறி விடுகின்றார்கள்! தான் விரும்பிய இறையச்சமிக்க பெண்ணை மணம் முடிக்கிறார்கள்! மஹர் கொடுத்துக் கரம் பிடிக்கிறார்கள்! இறை விருப்பத்துக்கேற்ற முறையில் திருமணத்தை நடத்துகிறார்கள்!

இறையச்சம் மிக்க ஒரு சில சகோதரர்கள் இத்தகைய இளைஞர்களுக்கு அனைத்து உதவிகளையும்  செய்து தருகின்றார்கள். குறிப்பாக பொருளாதார உதவியை மனம் உவந்து செய்து தருகின்றார்கள்.

இவர்கள் எளிமையாக வாழ்கிறார்கள்; ஆனால் அடிமைகளாக வாழவில்லை! பெரிய சொத்துக்கள் இல்லை தான்! ஆனால் சுதந்திரம் இருக்கின்றது! பெரிய வீடு என்று ஒன்று இல்லை தான்! ஆனாலும் வாடகை வீட்டில் மன நிம்மதியுடன் வாழ்கிறார்கள்! தலை நிமிர்ந்து வாழ்கின்றார்கள்!

இவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

Thursday, May 1, 2014

திருமணம் ஒரு திருப்பு முனை!

சுன்னத்தான இல்லறம் 

திருமணம் ஒரு திருப்பு முனை!

உங்களுக்கு நீண்ட கால இலட்சியம் எதுவும் இருக்கின்றதா? குறிப்பாக உங்களுக்கு ஏதேனும் ஒரு விஷயத்தில் மிகுந்த ஆர்வம் (passion) உண்டா?


அப்படியெனில் அதே விஷயத்தில் ஆர்வமும், இலட்சியமும் உள்ளவராக உங்கள் வாழ்க்கைத்துணை அமைந்திட்டால் - உங்கள் இலட்சியத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் உங்களால் செயல்பட முடியும்!

அப்படி அமைந்திடாவிட்டால் உங்கள் இலட்சியப் பயணத்தில் நீங்கள் தனித்து விடப்படுவீர்கள்; போதாததற்கு நிறைய நேரம் உங்கள் துணையுடன் சண்டை போட வேண்டியிருக்கும்!

உங்கள் வாழ்வின் இலட்சியம் - அது உலகத்தையே "மாற்றிக் காட்டுவதாக" இருந்தாலும் சரி அல்லது..... உங்கள் குழந்தைகளை வல்லவர்களாக வளர்த்தெடுப்பதாக இருந்தாலும் சரி (இரண்டுமே ஒன்று தானாமே!) - எந்நேரத்திலும் ஆதரவுக்கரம் நீட்டுபவரே உங்களுக்குத் தேவை!

உங்கள் இலட்சியத்தில் உங்களது மகிழ்ச்சியையும், அல்லது வலியையும், பகிர்ந்து கொள்ள ஒரு துணை தேவை! உங்களுக்கு ஆலோசனை வழங்கிடவும், நீங்கள் சொல்ல வருவதை ஆவலுடன் கேட்டிடவும், ஒரு துணை அவசியம்! "இதுவெல்லாம் ஒரு இலட்சியமா?" என்று அலட்சியம் செய்து அதற்கு முட்டுக்கட்டை போட்டு விடாமல் இருப்பவர்களே உங்களுக்குத் தேவை!

திருமணத்துக்கு முன் இளம் வயதில் சாதித்துக் காட்டிய ஒரு சிலர் - திருமணத்திற்குப் பின் சிகரம் தொட்டிருக்கின்றார்கள் என்பதும் உண்மை!

அதற்கு நேர் மாற்றமாக - இளம் வயதில் சாதித்துக் காட்டிய இன்னும் பலர் - திருமணத்திற்குப் பின் காணாமல் போயிருக்கின்றார்கள் என்பதும் கசப்பானதொரு உண்மை!

எனவே தான் சொன்னார் எகிப்தில் உள்ள ஓர் இஸ்லாமிய அறிஞர்:

"திருமணம் ஒரு திருப்பு முனை!"

அது போலவே - தனக்கென்று ஒரு இலட்சியம் வைத்திருக்கும் துணையே உங்களுக்குத் தேவை!

உங்கள் துணையின் லட்சியத்தில் அவர் வெற்றி பெற, நீங்கள் உறுதுணையாக விளங்கிடவும்; உங்களின் நேரத்தையும், அறிவையும், ஆற்றலையும் அதற்கென செலவழித்து அவர் சாதிக்கும் போது தட்டிக் கொடுத்திடவும், சோதனைகள் வரும்போது - அவருக்கு ஆறுதல் அளித்திடவும் - ஒரு துணையாக நீங்கள் விளங்கினால் உங்கள் இல்லறவாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை!

அது ஒரு மகிழ்ச்சிக் கடல்!!

இதனை எழுதிடும்போது - அன்னை கதீஜா (ரலி) அவர்களே நம் மனக்கண் முன்னால் தோன்றுகிறார்கள்!!

தேடுங்கள் - அப்படி ஒரு துணையை!

துணையைத் தேர்வு செய்வதில் இரண்டு முக்கியமான விஷயங்கள்!

சுன்னத்தான இல்லறம்: 

துணையைத் தேர்வு செய்வதில் இரண்டு முக்கியமான விஷயங்கள்!

ஒருவர் தனது வாழ்க்கைத்துணையைத் தேர்வு செய்திடும் போது கவனித்திட வேண்டிய மிக முக்கியமான இரண்டு விஷயங்கள்:


1. இறைவனுக்கும் அவருக்கும் உள்ள உறவு

2. அவருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள உறவு

1. இறைவனுக்கும் அவருக்கும் உள்ள உறவு:

“ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக மணம் முடிக்கப்படுகிறாள். அவளின் செலவத்திற்காக, அவளது குடும்ப கௌரவத்திற்காக, அவளது அழகிற்காக, அவளது மார்க்க விழுமியங்களுக்காக. நீர் மார்க்கமுடையவளைப் பற்றிக் கொள். உன் கரத்தை அழிவிலிருந்து பாது காத்துக்கொள்வாய்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள நபி மொழி அறிவுறுத்துவது போல = மார்க்கப்பற்றுள்ள ஒரு பெண்ணையே தேர்வு செய்யுங்கள். அது போல - மார்க்கப்பற்றுள்ள ஆண்மகனையே பெண்கள் தேர்வு செய்திடட்டும்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

A . ஐந்து வேளை தொழுபவரா அவர்? நோன்பு வைப்பவரா? தங்கு தடையின்றி அவருக்குக் குர்ஆன் ஓதத் தெரிகிறதா? இது பற்றிக் கேட்டு விடுங்கள் அவரையே!

B. தோற்றம்: ஹிஜாப் அணியும் பெண், தாடி வைத்திருக்கும் ஆண் (பெண்கள் இதனை வலியுறுத்தட்டும் - ஏன் ஒரு பெண்ணைப் போல் தோற்றமுடையவரை மணக்கிறீர்கள்?). இவை தவிர்த்த "ஸ்டைல்"களில் மயங்கி விட வேண்டாம்!

C. நற்குணங்கள்: உண்மையைப் பேசுவதற்கு தைரியம், கண்ணியம், தன்னம்பிக்கை, கம்பீரம் (ஆண்களிடத்தில்), நாணம் (பெண்களிடத்தில்), வெட்க உணர்ச்சி (இருவருக்கும்), பதற்றமடையாத நிதானம், அமைதியில் அழகு காணும் நேர்த்தி, நடுநிலையான பேச்சு.

எச்சரிக்கை:

ஆணோ அல்லது பெண்ணோ - அல்லாஹு தஆலா என்ன சொல்கிறான் என்பது பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை என்றால் - திருமணத்திற்குப் பின் - அவர்கள் - நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது பற்றிக் கவலைப் படுவார்கள் என்றா எண்ணுகிறீர்கள்? ம்ஹூம்!

இறையச்சம் என்ற ஒன்று இருந்து விட்டால் அது போதும் - உங்கள் திருமணத்தை இனிமையாக்கிட! பாதுகாத்திட! பிரச்னை என்று ஒன்று வந்து விட்டால் தீர்வு ஒன்றைக் கண்டிட!

திருமணம் ஆன புதிதில் இருக்கும் அழகு, ஈர்ப்பு, கவர்ச்சி - இவைகளெல்லாம் சில மாதங்களுக்குத் தான்! அதன் பிறகு, உங்கள் வாழ்க்கைக்கு அழகு கூட்டிட உதவிக்கு வருவது தக்வா எனும் இறையச்சமே!

எனவே தான் சொல்கிறோம்! துவக்கத்திலேயே இது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்! மார்க்கத்தைப் பற்றிக் கவலைப்படாத வாழ்க்கைத் துணை வேண்டவே வேண்டாம்! அவர்கள் எவ்வளவு கவர்ச்சியாக இருந்தாலும் சரியே!

2. அவருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள உறவு

மார்க்கப் பற்று என்பதனைத் தொடர்ந்து - நீங்கள் அடுத்து கவனித்திட வேண்டிய விஷயம் - அவர் மற்றவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறார் - என்பதனைத் தான்.

ஒரு ஆணோ அல்லது பெண்ணோ - ஒருவரை "நல்லவர் இவர்" என்று அறிவது எப்படி? அவருடைய தொழுகை, நோன்பு, குர்ஆன் ஓதுதல், அவருடைய தோற்றம் - இவைகளை வைத்தா என்றால் நிச்சயம் இல்லை! பின் எதனை வைத்து? அவர் பிறருடன் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை வைத்துத் தான்!

உமர் (ரலி) அவர்கள் கேட்கும் நிபந்தனைகள்:

"நீ அவர் பக்கத்து வீட்டுக்காரரா?" அல்லது " நீ அவருடன் பயணம் செய்திருக்கிறீர்களா?" அல்லது "நீ அவருடன் கொடுக்கல் வாங்கல் செய்ததுண்டா?"

இம்மூன்று கேள்விகளிலும் காணப்படும் பொதுவான ஒரே அம்சம் - "நீ மற்றவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறாய்?" - என்பது தான்!

நீங்கள் தேர்வு செய்திடும் வாழ்க்கைத் துணைவர் / துணைவி - அவர்களுடைய பணியாளர்களுடன், பெற்றோர்களுடன், உடன் பிறந்தவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனியுங்கள்.

மற்றவர்களுடன் பழகும் போது, மென்மையாக நடக்கிறார்களா (குறிப்பாக அவர்களுக்குக் கீழே பணியாற்றுகின்ற வேலையாட்கள், கார் டிரைவர்) என்பதை நன்கு கவனியுங்கள்;

அவர்களுக்கு இரக்க உணர்வு இருக்கிறதா? மற்றவர் நிலை குறித்து (empathy) அக்கரைப் படுகிறாரா? கண்ணியமாக மற்றவர்களிடம் பேசுகின்றாரா? நன்றி சொல்கின்றாரா? சிறிய தவறுகள் ஏதாவது நிகழ்ந்தால் "மன்னிக்கவும்" என்று சொல்கிறாரா? புன்முறுவல் முகம் காட்டுகின்றாரா? சிடுசிடுவென்று பேசுகின்றாரா? நகைச்சுவை உணர்வு இருக்கின்றதா?- என்பதையெல்லாம் அவசியம் கவனியுங்கள்!

எச்சரிக்கை:

பிறருடன் பழகுதல் எனும் விஷயம் மிக முக்கியம். ஏனெனில் ஒருவருடைய தொழுகை, தொப்பி, தாடி (அல்லது ஹிஜாப்) - இவற்றையெல்லாம் பார்த்து ஏமாந்து விட வேண்டாம். வேடதாரிகள் அங்கிங்கெனாத படி எங்கும் நிறைந்து காணப்படுகின்றார்கள்!

உங்கள் எதிர்காலத் துணைவர் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பார்ப்பது மிகவும் அவசியம், ஏனெனில் - பிறரிடம் அவர் எவ்வாறு நடந்து கொள்கிறாரோ exactly அவ்வாறே தான் அவர் உங்களிடமும் நடக்க இருக்கின்றார் என்பதனை மறந்து விட வேண்டாம்!

கண்ணியம் காதலாய் மலரட்டும்!

சுன்னத்தான இல்லறம்: 

கண்ணியம் காதலாய் மலரட்டும்!

பின் வரும் மூன்று திருமணங்களையும் குறித்து சற்று ஆழமாக சிந்தியுங்கள்:

1. நபியவர்கள் அன்னை கதீஜாவை எவ்வாறு மணம் முடித்தார்கள்?


அன்னை கதீஜா அவர்கள் நபியவர்களை ஒரு மேலாளராகத் தான் சிரியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இன்னொரு பணியாளரும் நபியவர்கள் கூடவே சிரியாவுக்குச் செல்கிறார். மக்காவுக்குத் திரும்பியதும் - அந்தப் பணியாளர் நபியவர்களின் குண நலன்களை அன்னை கதீஜாவுக்கு எடுத்து விளக்குகின்றார்.

அத்துடன் மக்காவிலே நபியவர்களுக்கு அல் அமீன், அஸ் ஸாதிக் என்ற நற்பெயர்களெல்லாம் ஏற்கனவே உண்டு. அண்ணலார் வணிகப் பயணம் முடிந்து திரும்பியதும், நபியவர்களின் குணநலன் பற்றி (அந்தப் பணியாளர் மூலம்) அறிந்ததும் மேலும் ஒரு மதிப்பு வருகிறது.

தாமும் நபியவர்களின் நடைமுறைகளை உற்று நோக்குகிறார்கள். கண்ணியம் அதிகரிக்கிறது. அந்தக் கண்ணியமே காதலாய் மாறிட நாம் ஏன் இவர்களைத் திருமணம் முடித்திடக் கூடாது என்று எண்ணுகிறார்கள்! தூது அனுப்புகிறார்கள். எல்லாம் நல்லபடியாய் முடிகிறது!

2. நபியவர்கள் தன் அன்பு மகள் பாத்திமாவுக்கு அலீ அவர்களை மணம் முடித்துக் கொடுத்தது எப்படி?

அண்ணல் நபியவர்கள் தன் அன்பு மகளுக்கு ஹள்ரத் அலீ அவர்களைத் திருமணம் முடித்திட விரும்புகிறார்கள். தன் விருப்பத்தை தன் மகளிடம் தெரிவிக்கிறார்கள். அன்னை பாத்திமா (ரலி) அவர்களின் கண்களில் கண்ணீர். அது அவர்களின் தயக்கமா? அல்லது அலீ அவர்கள் குறித்து அச்சமா? என்றெல்லாம் தெரியவில்லை. அப்போது நபியவர்கள் மகள் பாத்திமாவிடம் அலீ அவர்களின் குண நலன் பற்றி எடுத்துச் சொல்கிறார்கள்:

அலீ அவர்கள் அறிவில் சிறந்தவர் என்றும், பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை நிறைந்தவர் என்றும், வீரம் மிக்கவர் என்றும் எடுத்துரைக்கிறார்கள்; பாத்திமா (ரலி) அவர்கள் சம்மதித்திட திருமணம் நடந்தேறுகிறது!

3. உ,மர் (ரலி) அவர்கள் தன் மகன்களில் ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தது எப்படி?

ஒரு தாய் மற்றும் அவருடைய மகள். பாலில் தண்ணீர் கலப்பதைக் கூட அனுமதித்திடாத இறையச்சம் அந்த மகளுக்கு. உமர் (ரலி) அவர்கள் இதனை நேரிடையாகவே அறிந்து கொண்ட பின் தன் மகன்களை அழைத்து அந்தப் பெண்மணியின் இறையச்ச உணர்வை எடுத்துச் சொல்லி "அறிமுகம்" செய்து வைக்கிறார்கள். ஒரு மகன் முன் வர திருமணம் நடந்தேறுகிறது!

இம்மூன்று திருமணங்களிலும் - தான் யாரைத் திருமணம் முடிக்க விரும்புகிறாரோ அவருடைய குணநலன்கள் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன என்பதை உன்னிப்பாக கவனியுங்கள்:

படித்துக் கொள்ள வேண்டிய படிப்பினைகள்:

திருமணத்துக்கு முன்னரேயே - பெண் மற்றும் மாப்பிள்ளை - இவர்களின் குண நலன்கள் (character) எப்படிப் பட்டது என்பது பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.

தான் மணக்க இருக்கும் துணைவர் எப்படிப்பட்ட குணமுடையவர் என்பதை இருவருமே அறிந்து கொள்தல் மிக அவசியமான ஒன்றாகும்!

வாழ்க்கைத்துணையாக வர இருப்பவருடன் பேசுங்கள்!

சுன்னத்தான இல்லறம்: 

வாழ்க்கைத்துணையாக வர இருப்பவருடன் பேசுங்கள்!

வாழ்க்கைத்துணையாக வர இருப்பவருடன் பேசிப் பார்க்கிறீர்களா?

பெற்றோர் முன்னிலையில் உங்கள் வாழ்க்கைத் துணையாவதற்காக அறிமுகம் செய்து வைக்கப்பட்டவருடன் பேசுதல் அவசியம்.


அப்படி ஒரு வாய்ப்பை வலியுறுத்தி ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பின்பு அவர்களுடன் பேசுங்கள்; அவர்கள் பேசுவதைக் கேளுங்கள். நீங்கள் பேசுவதை விட அவரைப் பேச விட்டுக் கேளுங்கள். இந்தப் பேச்சை வைத்துத் தான் "இவர் நமக்குப் பொருத்தமானவர் தானா?" என்று பார்த்திட வேண்டியுள்ளது.

எந்த விஷயங்களை எல்லாம் அவர் அறிந்து வைத்திருக்கிறார்; அவருடைய கண்ணோட்டங்கள் எப்படி இருக்கின்றன; அவருடைய சிந்திக்கும் பாங்கு; சூழ்நிலைகளை சரியாக எடைபோடும் ஆற்றல்... இவைகளை கவனியுங்கள்.

.அவர் சொந்தமாக சிந்திக்கக்கூடியவரா? அல்லது பிறரைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுபவரா என்பதையும் பாருங்கள்!

அவர் என்னவெல்லாம் படிக்கிறார் என்று கேளுங்கள்; எந்த நூலாசிரியரைப் பிடிக்கும் என்று கேளுங்கள்;

பிரச்னைகளைப் பற்றி அதிகம் பேசுபவரா அல்லது தீர்வுகளை முன் வைத்துப் பேசுபவரா என்று கவனியுங்கள்!

எல்லாவற்றிலும் குறை கண்டுபிடிப்பவரா என்று பாருங்கள்; மன்னிக்கும் மனப்பான்மை இருக்கிறதா என்று பாருங்கள்!

அவருடைய மார்க்கப் பற்று எப்படிப்பட்டது என்பதனையும் பாருங்கள். பொருளாசை மிக்கவரா அல்லது மறுமைச் சிந்தனை மிக்கவரா என்றும் எடை போடுங்கள்.

மற்றவர்களை அதிகமாக விமர்சிக்கின்றாரா அல்லது தன்னை திருத்திக் கொள்வது பற்றிப் பேசுகின்றாரா என்றும் பாருங்கள்!

குறிப்பாக அவர் பேசும்போது, பிறர் நலன் (concern for others) பேணுபவரா அல்லது சுயநலம் தென்படுகிறதா என்பதை அவசியம் கண்டுணருங்கள். மேலும் பிறர் பேசும்போது பொறுமையாக (active listening) காது கொடுத்துக் கேட்கக் கூடியவரா அல்லது அடிக்கடி குறுக்கிட்டு மற்றவர் பேசுவதை அலட்சியம் செய்பவரா என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள்

ஏன் இப்படிப்பட்ட உரையாடலை நாம் வலியுறுத்துகிறோம் என்றால் - திருமண வாழ்வின் மிக முக்கியமான பகுதிகளுள் ஒன்று மனம் விட்டு ஒருவருக்கொருவர் பேசிக்கொள்தல் தான்!

ஒரு அறிஞர் சொல்கிறார்: "Conversation is the lifeblood of a marriage."

அதாவது: " கலந்துரையாடுதல் என்பது திருமண வாழ்க்கைக்கு உயிரூட்டும் இரத்தம்!"

உரையாடலைத் தவிர்த்து விட்டால் திருமண வாழ்வு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!

ஆனால் - பெரும்பாலான கணவன் மனைவியர் - திருமணமான ஆறு மாதங்களிலேயே தங்களுக்குள் பேசுவதையே நிறுத்திக் கொள்கிறார்கள்.

உங்களுக்கு அந்த நிலை வேண்டுமா?

வாழ்க்கைத்துணை என்பது - ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவதற்காக; தமது ஆர்வங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக; ஒன்றை மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்வதற்காக; இந்தப் பரிமாற்றம் இருவருக்குள் ஒரு நெருக்கத்தை உண்டாக்கி விடும்! இந்த நெருக்கத்தினை ஆங்கிலத்தில் intellectual intimacy என்கிறார்கள்.

இது இல்லாவிட்டால் - திருமணம் ஒரு குறுகிய வட்டத்துக்குள் வந்து நின்று விடும்!!

"ஆமாம்......? இதெல்லாம் யாருக்காக இப்படி எழுதிக்கிட்டு இருக்கீங்க? இதெல்லாம் நடக்கற காரியமாங்க?" - என்று கேட்கிறீர்களா?

நிலைமை மாறித்தான் ஆக வேண்டும்! முயற்சி செய்யுங்கள்!

வல்லோன் உதவி நிச்சயம் உங்களுக்கு உண்டு!

பொருத்தம் பார்ப்பது ஒரு சுன்னத்!

சுன்னத்தான இல்லறம்: 

பொருத்தம் பார்ப்பது ஒரு சுன்னத்!

ஆதாரம் பின் வரும் நபிமொழி தான்:

பாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களை அவர்களது கணவர் விவாகரத்துச் செய்து விட்டார். இத்தா முடிந்ததும் இரண்டு நபித் தோழர்கள் அவரை மணம் முடிக்க விரும்பினார்கள். இந்நிகழ்ச்சியை அவர் பின் வருமாறு விவரிக்கிறார்.


நான் "இத்தா'வை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), "முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்'' என்று சொன்னேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்க மாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்து விடுபவர்). முஆவியோ ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்து கொள்'' என்று கூறினார்கள்.

நான் உசாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீ உசாமாவை மணந்து கொள்'' என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்து கொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன்.

அறிவிப்பவர்: ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2953

பெண் கேட்ட இரண்டு நபித்தோழர்களும் - பாத்திமா பின்த் கைஸ் அவர்களுக்குப் பொருத்தமானவர்கள் அல்ல என்பதனாலும், அவருக்கு உசாமா பின் ஸைத் அவர்களே மிகவும் பொருத்தமானவர் என்பதால் தான் அவரைத் திருமணம் முடித்துக் கொள்ளுமாறு நபியவர்கள் பரிந்துரைத்தார்கள் என்றும் நாம் விளங்கிக் கொண்டால் - பொருத்தம் பார்ப்பதும் சுன்னத் என்றாகிறது அல்லவா?

அல்லாஹ்வே மிக அறிந்தவன்!

பொருத்தம் பார்ப்பது அவசியம்!

சுன்னத்தான இல்லறம்: 

பொருத்தம் பார்ப்பது அவசியம்!

திருமணத்துக்கு முன்பு – இல்லற வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்திடும் முன்பு – ஆணுக்கும், பெண்ணுக்கும் பல பொருத்தங்கள் – பார்த்துத் தான் திருமணம் முடிவு செய்திட வேண்டும்.


அவை என்னென்ன?

மார்க்கப் பொருத்தம் (Religious Compatibility): மார்க்கத்தைப் பின் பற்றும் மணமகன், மார்க்கத்தைப் பின் பற்றாத மண மகள் – அல்லது மார்க்கத்தைப் பின் பற்றும் மணமகள், மார்க்கத்தைப் பின் பற்றாத மண மகன் – இவை சாதகமான பொருத்தம் அன்று. பாதகமே விளையும்.

எல்லாம் திருமணத்திற்குப் பின் “அவரை” நீ திருத்தி விடலாம்” என்பார்கள். ஆனால் அதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது

கல்விப் பொருத்தம் (Educational Compatibility): படித்த மணமகன், படிக்காத மணமகள், அல்லது படித்த பெண் படிக்காத பையன் – இதுவும் பொருந்தாத ஜோடியே!

“என்ன படித்த திமிரில் பேசுகிறாயா?” -என்று கணவன் பேசும் நிலை ஏற்படலாம்.

அல்லது அறிவு பூர்வமான கணவன் ஒன்றைச் சொல்லும் போது, படிக்காத மனைவி அதனை ஏற்காமல், ஊரில் உள்ளவர்கள் எல்லாம் இப்படியா இருக்கிறார்கள் என்று வாதாடும் நிலை ஏற்படலாம்.

பொருளாதாரப் பொருத்தம் (Economic Compatibility): பணக்காரப் பையன், ஏழைக் குடும்பத்துப் பெண் அல்லது பணக்கார வீட்டுப் பெண், ஏழை வீட்டு மாப்பிள்ளை – இதுவும் பொருந்தாது.

“என்னை மதிக்கவே இல்லை” எனும் பிரச்னை பூதாகாரமாக உருவெடுக்கும்.

கலாச்சாரப் பொருத்தம் (Cultural Compatibility): நமது சமூகம் உலகளாவிய சமூகம் எனினும் பல் வேறு கலாச்சார சூழலில் நமது வாழ்க்கை பின்னப் பட்டிருக்கின்றது எனபதை மறுக்க முடியாது. இப்படிப்பட்ட நிலையில், மாறு பட்ட இரு கலாச்சாரங்களில் வளர்க்கப் பட்டவர்கள் திருமணம் செய்திடும் போது – பொருத்தமற்ற நிலையையே அது உருவாக்கிடும்.

குடும்பப் பொருத்தம் (Family Compatibility): மணமக்கள் எப்படிப் பட்ட குடும்ப சூழலில் வளர்க்கப் பட்டவர்கள் என்பதும் கவனிக்கப் பட வேண்டியதே.

ஆளுமைப் பொருத்தம் (Temperamental Compatibility): மணமக்கள் எப்படிப் பட்ட ஆளுமை கொண்டவர்கள் என்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட வேண்டும். வேறு பட்ட ஆளுமை கொண்ட மண மக்கள் இல்லற வாழ்வில் நுழையும் போது அதுவும் பல சிக்கல்களைக் கொண்டு வரலாம்.

இவையே சாதகமான விளைவுகளை ஏற்படுத்த வல்ல நல்ல பொருத்தங்கள்.

திருமணத்துக்கு பெண் அல்லது மாப்பிள்ளை தேடுபவர்கள் இவைகளைக் கவனத்தில் கொண்டால் நல்லது

பொருத்தம் பார்த்து மணந்து கொண்டால் - இங்கேயும் சொர்க்கம் தான்!

சுன்னத்தான இல்லறம்: 

பொருத்தம் பார்த்து மணந்து கொண்டால் - இங்கேயும் சொர்க்கம் தான்!

நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி; அப்பெண்களைக் கன்னிகளாகவும்; பாசமுடையோராகவும், சம வயதினராகவும், வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்). (56:35-38)


சூரத்துல் வாகியாவின் 37 - ஆம் வசனத்தில் வரும் ஒரு சொல் தான்: "அத்ராப்"

அத்ராப் என்பதற்கு - "சம வயதினர்" என்று பொருள். அதே வேளையில் மேலதிக விளக்கம் ஒன்றைத் தருகிறார்கள் திருமறை விரிவுரையாளர் முஹம்மத் அஸத் அவர்கள்:

Muhammad Asad: “As regards the term atrab, it primarily denotes "[persons] of equal age“; however, as pointed out by all philological authorities, this term is also used in the sense of "[persons] equal in quality that is, "well-matched":

முஹம்மத் அஸத் அவர்கள்: "அத்ராப் என்ற சொல் முதன்மையாக சம வயதுடையவர்களையே குறிக்கும் சொல்லாகும்; எனினும் எல்லா மொழியியல் வல்லுனர்களும் சுட்டிக் காட்டுவது போல் - இந்தச் சொல் ஒரே விதமான பண்புடையவர்களைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்படும். அதாவது - மிகச் சிறப்பான பொருத்தம் உடையவர்களையும் (well matched) இச்சொல் குறிக்கும் என்பதாம்."

அதாவது நாளை மறுமையில் - இறைவனின் நாட்டப்படி நீங்கள் வலப்புறத்தார்களில் ஒருவராக இருந்தால் - உங்களுக்கு மட்டுமே பொருத்தமான, உங்கள் மீது பாசம் உள்ள, புத்தம் புதிய ஒரு கன்னிப் பெண்ணை வல்லோன் உங்களுக்கென்றே படைத்துத் தருகிறான் என்பது தான் இதன் விளக்கம்!

சந்தோஷம் தானே!

இதிலிருந்து நாம் இன்னொரு கருத்தையும் எடுக்கலாம்:

அதாவது - உங்களுக்கு முற்றிலும் பொருத்தமான ஒரு பெண்ணை (made for each other) நீங்கள் திருமணம் முடித்தீர்கள் என்றால் - இவ்வுலக வாழ்க்கையே உங்களுக்குச் சொர்க்கம் தான்!! சரிதானே?

Couples who are compatible live a Heavenly life in this world!

இமாம் இப்னு தைமிய்யா அவர்களின் பின் வரும் கூற்றை சற்றே சிந்தித்துப் பாருங்கள். மேலும் உங்களுக்கு அது விளங்கும்!

இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் சொல்கிறார்கள்: நிச்சயமாக இந்த பூமியிலேயே ஒரு சொர்க்கம் இருக்கின்றது; யாரெல்லாம் இந்தப் பூவுலக சுவர்க்கத்தில் நுழைந்திடவில்லையோ, அவர்கள் மறு உலக சுவர்க்கத்திலும் நுழைந்திட மாட்டார்கள்!

And Imam Ibn Taymiyyaah said, "Indeed, there is a paradise here on earth and whoever does not enter it here, will not enter the Paradise of the hereafter."

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? அவள் தான்- நல்லதொரு மனைவியாவாள். (அறிவிப்பவர்: உமர் (ரலீ); நூல்: அபூதாவூத் 1412)

உலகம் அனைத்தும் இன்பமானது. அதில் தலைசிறந்த இன்பம் நற்குணமுள்ள மனைவி. (ஸஹீஹ் முஸ்லிம்)

மனதுக்குப் பிடித்தவரை மணம் முடியுங்கள்!

சுன்னத்தான இல்லறம்: 

மனதுக்குப் பிடித்தவரை மணம் முடியுங்கள்!


فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ

“ஃபன்கிஹூ மா தாப லகும் மினன்-னிஸாஇ”


இதன் பொருள்: “உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள்!” (4:3)

இச்சொற்றொடரில் “பிடித்தமான” என்ற சொல்லுக்குரிய அரபிச்சொல் “தாப” என்பதாகும்

ஆனால் இந்தத் “தாப” என்ற சொல் மிகவும் அருமையான ஒரு சொல் ஆகும்.

இந்தச் சொல்லுக்கு விரிவான பல பொருள்கள் உண்டு.

அதன் விரிவான பொருள்களையெல்லாம் உள்ளடக்கினால் - இவ்வசனத்தின் பொருள் எப்படியெல்லாம் விரிவடையும் பார்ப்போமா?

உங்கள் மனதிற்கு இன்பம் அளிக்கின்ற (pleasant);

உங்கள் மனதிற்கு ஒத்துப்போகின்ற (agreeable);

உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்ற (to please someone);

உங்களுக்கு இனிப்பான (to make something sweet);

உங்களுக்கு நறுமணம் அளிக்கின்ற (to scent, to perfume, to spice);

உங்கள் மனதிற்கு அமைதி அளிக்கின்ற (to set someone’s mind at rest);

நகைச்சுவையால் உங்களை மகிழ்விக்கின்ற (to joke, jest, make fun with someone)

- பெண்களை மணந்து கொள்ளுங்கள்!”

**

என்ன ஒரு அற்புதமான அறிவுரை இது!

அல்லாஹு தஆலாவுக்கு நன்றி செலுத்த வேண்டாமா நாம்?

பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்களே!

சுன்னத்தான இல்லறம்: 

பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்களே!

உங்களுக்கு ஒரு செய்தி!


என் மகளை எத்தகைய ஆணுக்கு மணம் முடிக்கட்டும் என இமாம் ஹசன் பசரி (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட து .

அதற்கு இமாம் அவர்கள் சொன்னார்கள்:

"அல்லாஹ்வை அஞ்சுபவனுக்குக் மணம் முடியுங்கள்

ஏனென்றால், அவளை நேசித்தால் அவளை கண்ணியப் படுத்துவான்;

அவளின் மீது கோபம் கொண்டால் அவளுக்கு அநீதிஇழைக்க மாட்டான்"

Thursday, April 24, 2014

ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கும் செய்திகள் என்ன?

சுன்னத்தான இல்லறம்:

திருமணத்துக்குப் பின்னர் கொஞ்ச காலம் அவர்களை அப்படியே விட்டு விடுவோம்; அவர்களுக்காக நாம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து துஆ செய்வோம்.


"பாரகல்லாஹு லக வ பாரக 'அலைக்க வ ஜம'அனா பைனகுமா ஃபீ ஃக்ஹைர்!"

சரியாக ஒரு ஆண்டு கழித்து - மீண்டும் அவர்களை திருமண வழிகாட்டும் மையத்துக்கு தனித்தனியே அழைப்போம்.

இதற்கென ஒரு கேள்விப்படிவம் தயாரிக்கப்பட்டு அது அந்த தம்பதியரால் தனித்தனியாக நிரப்பப்பட வேண்டும்.

அந்தப் படிவங்களும் அமானத்தாக பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு ஒரு சில ஆண்டுகளிலேயே நம்மிடம் பயிற்சி பெற்றுத் திருமணம் செய்து கொண்ட அனைவரின் இல்லற வாழ்க்கை குறித்த மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு விடலாம்.

இறுதியாக நமது ஆய்வின் முடிவில் நமக்குத் தெரிய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

திருமணம், இல்லறம் குறித்து வழிகாட்டப்பட்ட இளைஞர்கள், இளைஞிகளில் எத்தனை சதவிகிதம் பேர் - மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்கின்றார்கள்; ஒருவருடைய உரிமைகளை இன்னொருவர் மதித்து வாழ்கிறார்கள்; ஒருவருடைய உணர்வுகளை மற்றவர் மதித்து வாழ்கின்றார்கள்?

திருமணத்துக்குப் பின் எந்தெந்த விஷயங்களில் எல்லாம் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றின?

எத்தனை சதவிகிதம் பேர் தங்களுக்குள் தோன்றக்கூடிய கருத்துவேறுபாடுகளின் போது தொடர்ந்து பேசிக் கொண்டு கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க வேண்டிய முறையில் தீர்த்துக் கொண்டார்கள்?

மேலும் அவர்களுக்குள் சவாலாக விளங்கக் கூடிய பிரச்னைகள் என்னென்ன? (அந்தப் பிரச்னைகளுக்கு கவுன்ஸலிங் மூலம் தீர்வு காணவும் வழி வகை செய்யப்படலாம்).

இன்னும்... இன்னும்..

**

அதன் பின்னர் - நமது ஆய்வுகள் தெரிவிக்கின்ற செய்திகளை நமது முஸ்லிம் சமூகத்துடன் பரிமாறிக் கொள்ளலாம்.

இப்படிப்பட்ட ஆய்வுகளிலிருந்து முஸ்லிம்களின் புதிய தலைமுறை எண்ணற்ற பாடங்களை நிச்சயமாகப் படித்துக் கொள்ளும்! நல்லதொரு மாற்றம் ஏற்படும் இன்ஷா அல்லாஹ்!!

மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான். (29:69)

எனது சொந்தக் கருத்து ஒன்று!

சுன்னத்தான இல்லறம்

திருமண ஆய்வு மையம் பற்றி எழுதி வருகிறோம் அல்லவா? தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளைஞிகளுக்கு திருமணப் பயிற்சி அளிப்பது குறித்தும் எழுதி வருகிறோம் அல்லவா? அவர்களுடைய ஆளுமை மதிப்பீடுகளையும் கோப்புகளில் தயாராக வைப்பது பற்றியும் எழுதியிருக்கிறோம் அல்லவா?


எல்லாவிதமான பயிக்சிகளையும் வழங்கிய பின்பு - அடுத்து என்ன செய்திட வேண்டும் என்றால் -

ஆய்வு செய்திடும் உயர்மட்ட மேலாண்மைக் குழு ஒன்று பதிவு செய்யப்பட்ட ஆண்களின் கோப்புகளையும் பெண்களின் கோப்புகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஆணுக்குப் பொருத்தமான பெண் யார் யார் எல்லாம் நம்மிடம் இருக்கின்றார்கள் என்று பார்த்திட வேண்டும்; அது போலவே ஒரு பெண்ணுக்குப் பொருத்தமான மணமகன்கள் யார் யார் நம்மிடம் உள்ளார்கள் என்றும் பார்த்திட வேண்டும்.

பொருத்தப் பட்டு வரும் ஒரு பெண் பற்றிய தகவல்களை அவருடைய பெற்றோர் அனுமதியுடன் குறிப்பிட்ட இளைஞனுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும். இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க ஏற்பாடு செய்யப்படலாம். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள அந்த சந்திப்பு உதவிட வேண்டும். இருவர் குடும்பங்கள் பற்றிய தகவல்களும் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டும்.

அந்தக் கருத்துப் பரிமாற்றம் திருமணத்தை நோக்கி அழைத்துச் சென்றால் அல்ஹம்து லில்லாஹ். இல்லாவிட்டால் - இப்படி ஒரு ஏற்பாடு நடந்தது என்று கூட யாருக்கும் தெரியாமல் (confidential) பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் நிபந்தனைகள்:

இது விஷயத்தில் யாருக்கும் எந்த ஒரு நிர்ப்பந்தமும் இருக்கக் கூடாது!

மிக மிக முக்கியமாக - இது விஷயத்தில் எடுக்கப்படும் முயற்சிகள் அனைத்தும் முற்றிலும் confidential - ஆக அமானத்தாக பாதுகாக்கப்பட வேண்டும்; மேலாண்மைக் குழு - இது விஷயத்தில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர்களுக்கு உறுதியான வாக்குறுதியை வழங்கிட வேண்டும்.

இது எனது சொந்தக் கருத்து மட்டுமே!

"நல்ல தூய்மையுள்ள பெண்கள் நல்ல தூய்மையான ஆண்களுக்கும், நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் ( உரியவர்கள் ஆவார்கள்)". (24: 26)

திருமணத்துக்கு ஒருவர் தயாராவது எப்படி?

சுன்னத்தான இல்லறம்

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:

இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் திருமணம் என்றால் என்ன, அது கொண்டு வரும் பொறுப்புகள் யாவை என்பது குறித்து தெளிவான அறிவைப் பெற்றுக் கொள்தல்;


திருமணம் செய்து கொண்டு - இல்லற வாழ்வைத் தொடங்கி - இல்லறத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் நிறைவேற்றிடும் தகுதி தமக்கு முழுவதும் இருக்கின்றதா என்று சுய பரிசோதனை செய்து கொள்தல்;

தனது பலம் பலவீனம் குறித்த மதிப்பீட்டினை தெளிவாக உணர்ந்து கொள்தல்;

திருமணம் தாமதமானால் தனது கற்பைப் பாதுகாத்துக் கொள்தல்; கண் பார்வையைத் தாழ்த்திக் கொள்தல்; நஃபிலான நோன்புகளை வைத்துக் கொள்தல்; ஆண்களிடமிருந்து பெண்களும், பெண்களிடமிருந்து ஆண்களும் இயன்ற வரை ஒதுங்கியே இருத்தல்;

ஒருவரை திருமணம் செய்திட நமக்குப் பரிந்துரைக்கப்பட்டால் - அவர் நமக்குப் பொருத்தமானவர் தானா என்று அறிந்திட நேர்மையான முயற்சிகளை மேற்கொள்தல்; அவருடைய கல்வி பற்றி, மார்க்கம் பற்றி, பொருளாதார நிலை பற்றி, அவருடைய ஆளுமை பற்றி, அவருடைய குண நலன் பற்றி, அவர் மற்றவர்களுடன் பழகிடும் விதம் பற்றி - இயன்ற வரை தகவல்களை அறிந்து கொள்ள முயற்சி செய்தல்;

அவ்வாறு ஒருவர் நமக்குப் பொருத்தமானவர் தான் என்று நமக்குத் தோன்றி விட்டால் - அவரை - மற்ற உறவினர்கள் முன்னிலையில் சந்தித்து - மேலும் அவரைப்பற்றியும், அவருடைய ஆளுமை பற்றியும், அவருடைய எதிர்பார்ப்புகள் பற்றியும், அவர் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் பற்றியும், திருமணத்துக்குப்பின் எந்தெந்த விஷயங்களில் எல்லாம் கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்று சந்தேகம் வருகிறதோ - அவை அனைத்தையும் பற்றியும் - எந்த ஒரு தயக்கமும் இன்றி - கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்தல்;

திருமண சட்டங்களையும், திருமண ஒப்பந்தம் குறித்த மார்க்க வழிகாட்டுதலையும் நன்றாக அறிந்து கொள்தல்;

இஸ்திஃகாரா நஃபில் தொழுது வல்லோன் அல்லாஹு தஆலாவிடம் உதவி கேட்டல்;

பின் திருமண ஏற்பாடுகளில் - அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து காரியமாற்றுதல்;

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட இளைஞர் / இளைஞிகள் அனைவருக்கும் நாம் மேலே சொன்ன வழிகாட்டுதல்கள் அனைத்தையும் முழுமையாக வழங்குதல் அவசியம்!

http://salaamhearts.com/ - இணைய தளம் மிக விளக்கமாக வழிகாட்டுகிறது இவ்விஷயத்தில்!

திருமண வழிகாட்டும் ஆய்வு மையத்தை நிர்வகிப்பவர்கள் இந்த இணைய தளத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.

இயன்றால் - இஸ்லாமிய அறிஞரும் ஆலோசகருமாகிய கமால் ஸஹ்ராவி அவர்களை வைத்தே - இப்பயிற்சியை நமது இளைஞர் இளைஞிகளுக்குத் தரலாம் என்பது என் கருத்து!

அவருடைய "Dwell in Tranquility: an Islamic roadmap to the vibrant marriage " - எனும் நூலையும் வாங்கிப் படிக்கலாம்.

ஒவ்வொருவரின் ஆளுமை குறித்த மதிப்பீடும் அவசியம்!

சுன்னத்தான இல்லறம்:


ஒவ்வொருவரின் ஆளுமை குறித்த மதிப்பீடும் அவசியம்!

http://salaamhearts.com/

இந்த இணைய தளம் 65 கேள்விகளைக் கொண்டு தனிப்பட்ட ஒருவரின் ஆளுமை பற்றிய மதிப்பீடு ஒன்றை (personality assessment) வழங்குகிறது. முன்னேற்றத்திற்கான வழிமுறைகளையும் சொல்லித் தருகிறது அந்த இணைய தளம்.


அது போலவே ஒவ்வொருவருடைய ஆளுமைகளை வகைப்படுத்தித் தரும் (personality types) இணைய தளங்கள் நிறைய இருக்கின்றன. பின் வரும் இணைய தளம் அவற்றுள் ஒன்று:

http://www.myersbriggs.org/my-mbti-personality-type/mbti-basics/

இவைகளைப் பயன்படுத்தி - நமது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இளைஞர்களின் ஆளுமைகளை தனித்தனியே மதிப்பீடு செய்து கோப்புகளில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட ஒருவரின் ஆளுமை மதிப்பீடு அவரை எப்படிப்பட்டவர் என்று தெளிவு படுத்திக் கொள்ள பெரிதும் உதவும்.

ஓருவர் தனிமை (introvert) விரும்பியா? அல்லது வெளியே சென்று (extrovert) மற்றவர்களுடன் பழகுவதை விரும்பக்கூடியவரா என்பதை மதிப்பீடு செய்து தரும்.

ஒருவர் உணர்வுக்கு (feeling oriented) மதிப்பளிப்பவரா? அல்லது அறிவின் (thinking oriented) அடிப்படையிலேயே செயல்படுபவரா என்பதை எடுத்துச் சொல்லும்!

ஒருவருடைய பலம் என்னென்ன, பலவீனங்கள் என்னென்ன என்பதை கோடிட்டுக் காட்டும்.

இப்படிப்பட்ட ஆளுமை மதிப்பீட்டின் அடிப்படையில் - ஒருவர் தன் பலங்களை வலுப்படுத்திக் கொண்டு பலவீனங்களை வெல்வது எப்படி என்பதை நமது பயிற்சிகளின் வழியே அவர்களுக்கு வழிகாட்டலாம்.

இவ்வாறு நமது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இளைஞர்கள் - குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு தடவை நேர்காணல் செய்யப்பட வேண்டும்; அவர்களின் முன்னேற்றம் குறித்த மதிப்பீடுகளும் கோப்புகளில் சேர்க்கபட வேண்டும். அவர்கள் மேலும் முன்னேறிச் சென்றிட ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு ஒரு ஆண்டு கால பயிற்சிக்குப் பிறகே அவர்கள் திருமணத்துக்குத் தயாராக வேண்டும்.

தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்ட இளைஞர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பயிற்சிகள்:

சுன்னத்தான இல்லறம்:  

தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்ட இளைஞர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பயிற்சிகள் பற்றி பார்ப்போம்:

அ. இறையச்சப் பயிற்சி (tazkiyah and tarbiyyah);

ஆ. திருமணத்துக்கு அவர்களைத் தயார் படுத்தும் பயிற்சி (preparation for marriage)
இ. மனித உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் பயிற்சி (developing inter-personal skills)

ஈ. கருத்துப் பரிமாற்றப் பயிற்சி (communciation skill)

உ. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திடும் பயிற்சி (soft skills / emotional skills)

ஊ. கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ளும் பயிற்சி (conflict resolution skill)

எ. மனித வள மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் வாழ்க்கையின் இலட்சியம் (human resource development and life goal)

இவை அனைத்தும் சொற்பொழிவுகளாக அல்லாமல் பயிலரங்கங்களாக வைத்து நடத்தப்பட வேண்டும்.

பயிற்சிகள் குறித்து மேலும் நாம் விரிவாக விவாதிக்க வேண்டியுள்ளது. பிறகு பார்ப்போம்.

அதனைத் தொடர்ந்த செயல்பாடுகள் குறித்து மேலும் சிந்திப்போம் இன்ஷா அல்லாஹ்.

திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையத்தின் மிக முக்கியமான ஒரு செயல்பாடு!

சுன்னத்தான இல்லறம்:

திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையத்தின் விரிவான செயல்பாடுகள் குறித்து பின்னர் நாம் சிந்திபோம்.

இப்பகிர்வில் மிக முக்கியமான ஒரு செயல்பாடு குறித்து மட்டும் பார்ப்போம்:

இது ஒரு ஆய்வுக்கான செயல் திட்டம்!


என்ன செய்திட வேண்டும்?

இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட அல்லது ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ள திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு ஒரு அழைப்பு விடுங்கள். திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையத்தின் நோக்கம் என்ன என்பதைக் குறித்து அவர்களுக்கு விளக்குங்கள்.

சுருக்கமாக மீண்டும் சொல்வோம்: ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள திருமணம் ஆகாத இளைஞர்களை அழைக்கிறோம்; அவர்களைப் பதிவு செய்து கொள்கிறோம்; பயிற்சி அளிக்கிறோம்; திருமணத்துக்கு அவர்களைத் தயார் செய்கிறோம்; நல்லதொரு துணையைத் தேர்வு செய்திட வழிகாட்டுகிறோம்; திருமணத்துக்குப் பின் அவர்களின் வாழ்வின் திருப்தி குறித்து ஆய்வு செய்கிறோம்; மேலும் அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறோம்; அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். அவ்வளவு தான்!

ஆர்வத்துடன் முன் வருபவர்களை முறைப்படி பதிவு செய்து கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்து கேள்விப்படிவம் (Questionnaire) ஒன்று தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்; அதில் பின் வரும் கேள்விகளை சேர்த்துக் கொள்ளுங்கள்:

இஸ்லாமிய மார்க்கம் குறித்த உங்கள் பார்வை என்ன?

நீங்கள் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றிடத் தயாரா?

இஸ்லாமிய திருமணம் குறித்து உங்கள் கண்ணோட்டம் என்ன?

நீங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றும் ஒரு பெண்ணையே மனைவியாகத் தேர்வு செய்திடத் தயாரா?

உங்கள் கணவராக / மனைவியாக வர இருப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

நீங்கள் விரும்பும் நற்பண்புகள் என்னென்ன?

என்னென்ன நற்பண்புகளை உங்கள் வருங்காலத் துணையிடம் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

உங்கள் பெற்றோர்கள் மார்க்கத்தை முழுமையாகப் பின்பற்றுபவர்களா?

இஸ்லாத்தில் பெண்ணுரிமை குறித்து உங்கள் கருத்து என்ன?

எமது திருமண வழிகாட்டும் மையம் உங்களைப்போன்ற திருமணம் ஆகாதவர்களை வைத்து ஒரு ஆய்வை மேற்கொள்ள இருக்கின்றது. அந்த ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு தரத் தயாரா?

மேலும் தேவைக்கேற்ப கேள்விகளை சேர்த்துக் கொள்ளலாம்.

படிவங்களை நிரப்பி வாங்கி கோப்புகளில் வரிசைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

இதே போன்று திருமணம் ஆகாத இளைஞிகளுக்கும் தனியே அழைப்பு அனுப்பப்பட்டு ஆர்வத்துடன் வருபவர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து திருமணத்துக்கு முன் அவர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகள் குறித்து சிந்திப்போம் இன்ஷா அல்லாஹ்..

திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையத்தின் நோக்கம் மற்றும் அமைப்பு விதிமுறைகள்

சுன்னத்தான இல்லறம்:

நோக்கம்:

அ. திருமணம் ஆகாதவர்களுக்கு

முறையான இஸ்லாமியத் திருமணம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் (Bringing an awareness about Islamic Marriage)


இளைஞர்களுக்கு இஸ்லாமிய வாழ்க்கை நெறிப் பயிற்சி அளித்தல் ( Providing Tarbiyyah and Tazkiyah training )

இளைஞர்களையும் இளைஞிகளையும் திருமணத்துக்கு முன் தயார் படுத்துதல் (Preparing the youth before marriage)

பொருத்தமான திருமணத் தேர்வுக்கு வழிகாட்டுதல் (Guidance for making a compatible marital choice)

கணவன் மனைவி இல்லறம் குறித்த தெளிவான வழி காட்டுதலை வழங்குதல் (Guidance for a happy married life)

கருத்து வேறுபாடுகளின் போது நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து கணவன் மனைவி இருவருக்கும் கவுன்ஸலிங் வழங்குதல் (Counselling for conflict resolution)

பயிற்சி பெற்று திருமணம் முடித்த தம்பதியர்களின் திருப்தியான இல்லற வாழ்வை ஆய்வு செய்தல் (Conducting surveys on the lives of couples who were trained)

குழந்தை வளர்ப்பில் வழிகாட்டுதல் (Guidance on Islamic parenting)

ஆ. திருமணம் ஆனவர்களுக்கு

கணவன் மனைவி இல்லறம் குறித்த தெளிவான வழி காட்டுதலை வழங்குதல் (Guidance for a happy married life)

குழந்தை வளர்ப்பில் வழிகாட்டுதல் (Guidance on Islamic parenting)

கருத்து வேறுபாடுகளின் போது நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து கணவன் மனைவி இருவருக்கும் கவுன்ஸலிங் வழங்குதல் ம்(Counselling for conflict resolution)

அமைப்பு:

திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையத்தின் அமைப்பு ஒரு இயக்கம் சாராத அமைப்பாக விளங்கிட வேண்டும். சமூகத்தின் அனைத்து அங்கத்தினர்களுக்கும் அது பயன்படக் கூடியதாக விளங்கிட வேண்டும். பல்கலைக்கழகம் ஒன்றுடன் இணைந்து செயல்படுதல் மிக நன்று! அல்லது பொதுவான சமூக நல அமைப்பு ஒன்றுடன் இணைந்து செயல்படலாம்.

இந்த ஆய்வு மையம் இரண்டு பிரிவுகளாக செயல் பட வேண்டும். ஆண்களுக்கு என்று ஒரு பிரிவு; பெண்களுக்கென்று ஒரு பிரிவு.

இவ்விரண்டு பிரிவுகளும் தனித்தனியே இயங்க வேண்டிய தளங்களில் தனித்தனியாகவே இயங்கிட வேண்டும்; ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தளங்களில் - இஸ்லாமிய விழுமியங்களுக்கு உட்பட்டு ஒருங்கிணைந்து செயல்படலாம்.

இங்கே நாம் சில குறிப்புகளை மட்டுமே வழங்கியிருக்கின்றோம். இவைகளை களத்தில் இறங்குவோர் விரிவு படுத்திக் கொள்வார்களாக!

அடுத்து - திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்து சிந்திப்போம் இன்ஷா அல்லாஹ்....

தேவை: திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையம்!

சுன்னத்தான இல்லறம்:

முதலில் - ஒத்த கருத்துடைய, ஆய்வுக் கண்ணோட்டம் மிக்க, குடும்ப நல சீர்திருத்தத்தில் மிகுந்த ஆர்வமுடைய ஒரு சிலர் ஒன்று சேருங்கள்.

திருமண சீர்திருத்தம் குறித்த ஆழமான அறிவைப் பெற்றுக் கொள்ளுங்கள். நான் இங்கே நான்கு அறிஞர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கின்றேன்.


அ. யாஸிர் ஃபஸாகா (Yasssir Fazaga) எனும் இஸ்லாமிய அறிஞர்; இவருடைய சொற்பொழிவுகளை YouTube ல் சென்று கேளுங்கள். குறிப்பாக குடும்ப நலன் குறித்த இவரது பேச்சுக்களை அவசியம் கேளுங்கள்.

ஆ. யாவர் பைஃக் (Yawar Baig) எனும் அறிஞர். இவர் திருமணம் குறித்து எழுதிய நூல் ஒன்று இணைய தளத்தில் கிடைக்கிறது. அவசியம் படியுங்கள்.

Link: http://www.yawarbaig.org/yawarbaig/my-books/marriage-the-making-and-living-of-it

மேலும் இவருடைய சொற்பொழிவுகளையும் YouTube ல் சென்று கேளுங்கள்.

இ. கமால் ஸஹ்ராவி (Kamal Zahraawi) எனும் அறிஞர். இவர் நடத்தும் இணைய தளம்:

http://salaamhearts.com/

திருமணம் இல்லறம் குறித்த வழிகாட்டுதலுக்கு இது ஒரு மிக முக்கியமான இணையதளம் ஆகும்.

ஈ. ருகையா வாரிஸ் மக்ஸூத் (Ruqayya Warith Maqsood) எனும் அறிஞர். இவருடைய Marriage guide அவசியம் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று. இணைய தளத்தில் கிடைக்கிறது.

http://www.biharanjuman.org/MarriageGuide.pdf

எனக்குத் தெரிந்த பெயர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். ஆழ்ந்து படியுங்கள்; சிந்தியுங்கள்; ஒத்த கருத்துடையவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அடுத்து ஒத்த கருத்துடைய நீங்கள் ஒன்று சேர்ந்து திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையம் (Marriage Research and Guidance Centre) ஒன்றைத் துவங்குங்கள்; அதனை இஸ்லாமியக் கல்லூரி அல்லது பல்கலைக் கழகம் ஒன்றுடன் இணைத்தல் நலம்.

இந்த ஆய்வு மையத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் என்னென்ன?

சிந்திப்போம் இன்ஷா அல்லாஹ்! 

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு....

சுன்னத்தான இல்லறம்:

இதற்கு முன்னர் நாம் எழுதிய பதிவுகளில் விவாதிக்கப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வுகள் எதனையும் நீங்கள் முன் வைக்கவில்லையே என்று சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.


இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டு என்பது "பிரச்னைகளின் உலகமாக" மாறி விட்டிருக்கின்றது.

எந்த ஒரு பிரச்னையை எடுத்துக் கொண்டாலும் அது தீர்க்கப்படவே முடியாத சிக்கலாக (crisis) மாறி மனித சமூகத்தை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது.

ஆனால் புதிய தலைமுறை ஒன்று முளைத்து வந்து இதோ பிரச்னைகளுக்கு நாங்கள் தீர்வு சொல்கிறோம் என்று புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது.

Critical thinking, creative thinking, lateral thinking, complex thinking, - என்று புதுப்புது வழிமுறைகளை எல்லாம் கையிலெடுத்துக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றது இந்தப் புதிய தலைமுறை!

இறை வழிகாட்டுதல் என்றால் என்னவென்றே தெரியாத இந்தத் தலைமுறை, ஏதோ அவர்களுக்குத் தெரிந்த அறிவை வைத்துக் கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டு - எடுத்துக் கொண்ட பிரச்னைகளுக்குத் தீர்வும் சொல்கிறார்கள்; தீர்த்தும் வைக்கின்றார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

அவர்கள் முன் வைக்கும் எல்லாத் தீர்வுகளுமே சரியானவை என்று நம்மால் சொல்ல முடியாது தான்! அதே நேரத்தில் அவர்களின் எல்லாத் தீர்வுகளுமே தவறானவை என்றும் சொல்லி விட முடியாது!

அவர்கள் தரும் தீர்வுகளுள் சிலவற்றை நாம் ஆய்வு செய்து பார்த்தால் அது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கண்ட தீர்வுகளை ஒத்திருப்பது தெரிய வருகிறது!

ஆனால் - எங்களிடம் குர்ஆன் இருக்கின்றது, நபிவழி இருக்கின்றது என்று சொல்லிக் கொண்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காண இயலாதவர்களாக நாம் இருந்து கொண்டு இருக்கின்றோம்.

இது உண்மையா? இல்லையா?

இங்கே - நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பிரச்னை - சாதாரணமானதாக ஒன்றாக இருந்தால் - ஒரு வரியில் தீர்ப்பு சொல்லி விடலாம் தான்!

நாம் இங்கே பேசிக் கொண்டிருப்பது சாதாரணப் பிரச்னை அல்லவே! சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்ற ஆழமான தீமை ஒன்றைப் பற்றியல்லவா நாம் விவாதித்துக் கொண்டிருக்கின்றோம்!

உன்னைப் பார்த்து நான், என்னைப்பார்த்து என் பக்கத்து வீட்டுக்காரன் என்று - தலைமுறை தலைமுறையாய் ஒரு தொடர்கதையாய்ப் போய் விட்ட தொற்று நோய் அல்லவா இது!

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒட்டு மொத்த சமூகத்தையும் அழிவின் விளிம்பிற்கு இட்டுச் சென்று "அடித்தளத்தில் ஓட்டை போடப்பட்ட கப்பலாய்" நம்மை மாற்றியிருக்கும் பிரச்னை தானே இது!

எனவே நாம் - குர் ஆன் மற்றும் நபிவழி ஆகியவற்றுடன் - Critical thinking, creative thinking, lateral thinking, complex thinking - போன்ற நவீன வழிமுறைகளையும் கையிலெடுத்துக் கொண்டு நடைமுறையில் சாத்தியப்படுத்திக் காட்டிடும் அழகிய தீர்வு ஒன்றை சுன்னத்தான இல்லறத்தில் எழுத உள்ளோம் இன்ஷா அல்லாஹ்.

இதற்கு ஆய்வுக் கண்ணோட்டம் மிக்க சகோதர சகோதரிகளின் கருத்து ரீதியான பங்களிப்பு மிகவும் அவசியம்.

நமது நோக்கமெல்லாம் நமது சகோதர சகோதரிகளின் இல்லற வாழ்வில் மகிழ்ச்சியையும், குதூகலத்தையும், மன நிம்மதியையும், நேசத்தையும், கருணையையும் மீண்டும் கொண்டு வந்து சேர்ப்பது தான்!

இதற்காகத் துவக்கப்பட்டதே சுன்னத்தான இல்லறம்!

தீர்வு - விரைவில்!! 

பெற்றவங்க சொல்லும் போது அத மீறி செயல்பட முடியுமா?

சுன்னத்தான இல்லறம்: 

(பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாமா?)

ஒரு வழியாக தங்கைகளுக்கெல்லாம் திருமணம் முடித்து, அடுத்து உங்கள் வீட்டில் இப்போது தான் உங்கள் திருமணத்தைப் பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.


இப்போது தான் மிக முக்கியமான திருப்பு முனை உங்கள் வாழ்வில்! அல்லாஹு தஆலா உங்களுக்கு வைக்க இருக்கின்ற மகத்தான சோதனை இதோ!

மார்க்கம் காட்டியிருக்கின்ற வழியில் நீங்கள் மணம் முடிக்கப் போகின்றீர்களா? பெற்றோர் காட்டித் தருகின்ற வழியில் திருமணம் செய்யப் போகின்றீர்களா? இந்த இரண்டில் நீங்கள் எதனைத் தேர்வு செய்திடப் போகின்றீர்கள்?

இறை வழிகாட்டுதல் என்ன?

இறையச்சத்தின் அடைப்படையில் மணப்பெண்ணைத் தேர்வு செய்யுங்கள்! மஹர் கொடுத்துத் திருமணம் முடியுங்கள்! எளிமையாகத் திருமணத்தை நடத்திக் கொள்ளுங்கள்!

இவையே மிக முக்கியமான இறை வழிகாட்டுதல்கள்!

ஆனால் பெற்றோர் சொல்வதென்ன?

பொருளாதார வசதியின் அடிப்படையில் பெண்ணெடுப்போம்! முடியுமட்டும் வரதட்சணை வாங்கிக் கொள்வோம்! நன்றாக செலவு செய்து திருமணத்தை நடத்துவோம்!

"அவ்வளவு பணம் என்னிடம் இல்லையே!" என்று சொல்லிப் பாருங்கள். "சம்பாதித்துக் கொண்டு வா! அப்புறம் திருமணம் செய்து கொள்ளலாம்", என்பார்கள்.

"வரதட்சணையெல்லாம் கேட்க வேண்டாம் அம்மா!" என்று சொல்லிப் பாருங்கள். அதனை நியாயப் படுத்தி உங்களை சம்மதிக்க வைப்பார்கள்! நீங்களும் சம்மதித்து விடுவீர்கள்!

நாம் கேட்போம் இப்படிப்பட்ட மணமகன்களைப் பார்த்து: "ஏனப்பா வரதட்சணைக்கு ஒத்துக் கொண்டாய்?"

அவர்கள் சொல்வார்கள்: "என்னண்ணே செய்றது? பெற்றவங்க சொல்லும் போது அவங்களை மீறி நாம செயல்பட முடியுமா?"

இறுதியில் உங்கள் பெற்றோருக்கே வெற்றி! மார்க்கம் தோற்றுப் போய் விடுகிறது! (நஊது பில்லாஹி மின்ஹா!)

திருமணத்துக்கு முன்னரேயே உங்கள் திருமணத்தின் கடிவாளத்தை உங்கள் பெற்றோர்கள் உங்களிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு விடுகிறார்கள் என்பது ஏன் உங்களுக்குப் புரிவதில்லை?

ஏன் பெற்றோர் தோண்டிய படுகுழியில் போய் நீங்களாகவே வழுக்கி விழுந்து விடுகின்றீர்கள்?

நீங்கள் விழுந்து விட்டதை நீங்கள் உணராமல் இருக்கலாம்; ஆனால் உங்கள் பெற்றோர்கள் அதனை நன்றாக உணர்ந்திருக்கின்றார்கள்!

"பையன் நம்ம கையில் தான்!"

பிறகு என்ன நடக்கும்?

"ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா"

உங்கள் இல்லற வாழ்வின் சிறிய பெரிய விஷயங்கள் அனைத்திலும் உங்கள் பெற்றோர் சொல்வதே வேத வாக்கு! உங்கள் மனைவியின் உரிமைகள்??

இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள்! - ஆம் - அது ஒரு அழகிய தலைப்பு! எங்களைப் போன்றவர்கள் அழகாக மேடையில் பேசிடுவதற்கு!!

பெற்றோர் விருப்பங்களின் அடிப்படையில் வரதட்சணை வாங்கி திருமணம் முடிக்கும் இளைஞர்கள் எப்படிப்பட்டவர்களாக விளங்குவார்கள்?

சாட்சாத் அவர்கள் பெற்றோர்களைப் போலவே உருவெடுப்பார்கள்! இவர்களும் அடுத்தவர் உணர்வைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்! இவர்களிடத்திலும் நியாய உணர்வு இருக்காது! சுய நலம் மிகுந்திருக்கும்! நன்றி உணர்ச்சி அற்றுப் போய் விடும்! நயவஞ்சகம் குடிகொண்டு விடும்!! தவறுகளை நியாயப் படுத்திக் கொள்வார்கள்!

Exactly - இவர்களும் இவர்களுடைய பெற்றோர்களும் இப்போது ஒன்று போலத்தான்!

நியாய உணர்வற்ற, அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொள்ள மறுக்கின்ற, lack of empathy எனும் மன நலக் குறையுடன் அடுத்த தலைமுறை இதோ தயார்!

இந்த இழி நிலையிலிருந்து இந்த சமூகத்தை மீட்டெடுப்பது எப்படி? சிந்தியுங்கள்!

மூன்று தங்கைகளுக்கும் திருமணம் முடிந்த பிறகே உனக்குத் திருமணம்!

சுன்னத்தான இல்லறம்:

(பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாமா?)

ஒரு இளைஞன். பெயர் பஷீர் அஹமத். அவனுக்கு மூன்று தங்கைகள். பஷீருக்கு பதினைந்து வயதாகும் போது தந்தை மாரடைப்பில் இறந்து விட்டார். சொத்துக்கள்? வீடு, கட்டிடம், வயல் என்று - அது ஒரு கோடிக்கு மேல் தேறும்.


பஷீருக்கு படிப்பு வரவில்லை. (எதிர்பார்த்தது தானே!). ஒரு சில ஆண்டுகளிலேயே பயணம் புறப்பட்டு விட்டான், அதாவது அனுப்பி வைக்கப் பட்டு விட்டான். துவக்கத்தில் மாதச் சம்பளம் குறைவாக இருந்தாலும், தொடர்ந்து வந்த ஆண்டுகளில் சம்பளம் கணிசமாக உயர்ந்து கொண்டே சென்றது. எல்லாவற்றையும் தன் அம்மாவுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தான் பஷீர். ஆண்டுகள் உருண்டோடுகின்றன.

பஷீருக்கு இருபத்து ஐந்து வயது ஆன போது மூத்த தங்கை பாத்திமா நஸ்ரினுக்குத் திருமணம் நடந்தேறியது. மாப்பிள்ளைக்கும் வயது இருபத்து ஐந்து தான்.

பஷீருக்குத் திருமணம் எப்போது? அம்மா அவர்கள் சொல்லி விட்டார்கள் - மூன்று தங்கைகளுக்கும் திருமணம் முடிந்த பிறகே பஷீருக்குத் திருமணம் என்று!

பாத்திமா நஸ்ரினுக்கு வேறு சில இடங்களில் இருந்து பெண் கேட்டு வந்த போது, "மாப்பிள்ளைக்கு முப்பது வயது இருக்கும்போல் தெரிகிறதே" என்று பஷீரின் தாயார் மறுத்து விட்டதெல்லாம் தனி விஷயம். ஏன் இந்த இரட்டை நிலை?

தங்கைகள் அனைவருக்கும் திருமணம் முடித்து விட்டுத் தான் அண்ணன் ஒருவன் தனது திருமணம் குறித்து சிந்தித்திட வேண்டும் என்பது என்ன நியாயம்?

"வயதுக்கு வந்த தங்கைகளை வீட்டில் வைத்துக் கொண்டு அண்ணன்காரனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிறீர்களா?" - என்பது பெற்றோரின் நியாயமற்ற வாதம்!

பெண்மக்களை எப்படி "குமரிகளாகப்" பார்க்கிறோமோ அதுபோல் ஆண்மகன்களை ஏன் நாம் "குமரர்களாகப்" பார்க்க மறுக்கின்றோம்? மகளுக்கு காலா காலத்தில் திருமணம் செய்து வைப்பதை எப்படி பெற்றோர்கள் விரும்புகிறார்களோ அது போலவே மகனுக்கும் காலா காலத்தில் திருமணம் செய்து வைப்பது தானே நியாயம்?

நியாய உணர்வற்ற பெற்றோர்கள் - இதற்கு சொல்கின்ற இன்னொரு காரணத்தைப் பாருங்கள்:

மகனுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டால், அதன் பிறகு அவன் தன் தங்கைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதில் அலட்சியம் வந்து விடுமாம்!?

ஒரு இளைஞனுக்கு வயது இருபத்தியேழு! அவன் தனது திருமணத்தைப் பற்றி சிந்தித்துக் கூட பார்ப்பதற்கு இயலாத சூழலாம்! ஆனால் நாம் கேட்பது என்னவென்றால் - அவனுக்குத் திருமண ஆசை இருக்குமா,இருக்காதா?

உளவியல் அறிஞர்கள் சொல்வது என்னவென்றால் - அந்த வயதில் ஆண்களுக்கான செக்ஸ் ஹார்மோனாகிய - டெஸ்டோஸ்டரோன் - இரண்டு மடங்கு (200%) சுரக்கின்றதாம்!

இப்படிப்பட்ட பாலியல் தூண்டல் (sexual urge) ஒரு இளைஞனுக்கு வந்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் அதை யாரிடம் போய் சொல்வான்? திருமணம் குறித்தெல்லாம் சிந்தித்திட முடியாத "சூழ்நிலை" குடும்பத்தில்!

அவன் தனது பாலியல் தூண்டல்களை எப்படித் தணித்துக் கொள்வான்? அவன் கெட்ட வழிகளை நாடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது பெற்றோர்களுக்குச் சம்மதம் தானா?

என்ன செய்கிறார்கள் நம் இளைஞர்கள்? நோன்பு வைத்துக் கொள்கிறார்கள்! பெற்றோர் பேச்சை மீற முடியாமல் முப்பது வயதைத் தாண்டியும் தன் கடைசித் தங்கைக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கின்றார்கள்!

தனது திருமணம் குறித்து வீட்டில் பேசத் தயங்குகின்றார்கள். மனம் புழுங்குகின்றார்கள்! வெளியே சொல்ல முடியவில்லை! பிரச்னை எதுவும் இல்லாதது போல் நடித்துக் கொண்டு தங்கள் இளமையை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்!

என் அருமை இளைஞர்களே! நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ உங்கள் திருமணத்தை - ஒத்திப் போட்டு விடுவதன் மூலம் - உங்கள் பெற்றோர்கள் வெற்றி பெற்று விடுகிறார்கள்! நீங்களோ தோற்றுப் போய் விடுகிறீர்கள்!

YOU LOSE! THEY WIN!!

அப்படியானால் இப்பிரச்னைக்குத் தீர்வு என்ன?

யார் பக்கம் நியாயம்?

சுன்னத்தான இல்லறம்: 

இங்கே ஒரு இளைஞர். வெளி நாடு சென்று சம்பாதித்து வந்தவர். அவர் தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்னார்:

"கடந்த எழுபது எண்பதுகளில் (1970 - 1980) நான் முதன் முதலில் பயணம் சென்ற போது மாதா மாதம் இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பி வைப்பேன் அம்மாவுக்கு. இரண்டு வருடம் கழித்து ஊருக்கு வந்து அம்மா எவ்வளவு பணம் பாக்கி வைத்துள்ளார் என்று பார்த்தால் எல்லாம் செலவாகி யிருக்கும்.


தந்தை தான் (இன்னொரு வெளி நாட்டிலிருந்து) குடும்ப செலவுக்குப் பணம் அனுப்புகிறார்களே, நாம் அனுப்பி வைப்பதை சேமிக்கலாமே என்றால் அது அம்மாவால் முடியாது.

"நான் வேறு திறமைகளை வளர்த்துக் கொண்டதால் பின்னர் எனது சம்பளம் உயர்ந்தது. மாதா மாதம் ஐந்தாயிரம் ரூபாய் அனுப்பிக் கொண்டிருப்பேன். மீண்டும் விடுமுறையில் ஊருக்கு வந்து பார்த்தால் அம்மா அவ்வளவையும் செலவு செய்து விட்டிருப்பார்.

"ஏனம்மா, ஐந்தாயிரத்தில் செலவுக்கு இரண்டாயிரம் போக மீதி மூவாயிரம் ரூபாயை சேமித்திருக்கலாம் தானே என்றால், அம்மா கணக்கு சொல்வார்கள்.

குடும்ப செலவுகள் போக - மீதமிருந்த பணத்தை, "மாமா மகன் கல்யாணத்துக்கு ஆயிரம் ரூபாய் வைத்தேன், மச்சி மகள் வயதுக்கு வந்ததுக்கு ஒரு பவுன் போட வேண்டியிருந்தது.....கொழுந்தனுக்கு பேரன் பிறந்து நாற்பதுக்கு அரை பவுன் போட்டேன், வீட்டிலே "இந்த" விருந்துக்கு நூறு பேருக்கு சாப்பாடு ஆக்கிப் போட்டதில் மூவாயிரம் செலவு.....

இப்படி - சேமித்து வைக்கத் தெரியாத பெற்றோருக்கு எல்லாவற்றையும் அனுப்பி வைத்த அவருக்கு - ஒரு முறை பணம் அனுப்ப இயலாமல் போய் விட்டது. அவருக்கே சில முக்கியமான செலவுகள். ஊருக்கு வரும் முன்னர் மூன்று மாத சம்பளத்தை சேர்த்து - "பயண சாமான்களை" வாங்கிக் கொண்டு ஊர் வந்து சேர்கின்றார் நமது உறவினர்.

பயணக் களைப்பு கூட நீங்கியிருக்காது. கணக்குக் கேட்கத் தொடங்கி விட்டனர் பெற்றவர்கள். அருகில் இருந்து கொண்டு மூட்டி விட்டுக் கொண்டிருக்கிறாள் தங்கை.

ஏன் இந்த விசாரிப்பு தெரியுமா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் முடிந்திருந்தது! பெற்றோருக்கு வந்த சந்தேகம் - மகன் பணத்தை தங்களுக்கு அனுப்பி வைக்காமல், மனைவிக்கு அனுப்பி விட்டான்!!!

"இல்லையம்மா! நான் கன ரக வாகனங்களை ஓட்டுவதற்காக பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது; உரிமம் பெற வேண்டியிருந்தது. விசா புதுப்பிக்க வேண்டி "இவ்வளவு" பணம் தேவைப் பட்டது. அதற்கு முன்னர் நாற்பதாயிரம் அனுப்பி வைத்தேனே. ஊருக்கு வரும் முன்பு மூன்று மாத சம்பளத்தில் தான் பயண சாமான்கள் வாங்கி வந்துள்ளேன்... இது தானம்மா கணக்கு...."

பெற்றோர் இந்தக் கதையை நம்பிடத் தயாராக இல்லை!

"எல்லாப் பணத்தையும் எடுத்துக் கொண்டு வருவதாக இருந்தால் வீட்டுக்கு வா.... இல்லாவிட்டால் உன் மனைவி- குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விடு...."

இரவு நேரம். கொட்டுகின்ற மழை. மனைவியையும், கைக்குழந்தையையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான் நம் இளைஞன். மாமனார் வீட்டுக்குச் செல்கிறான். சில தினங்களில் வாடகை வீடு ஒன்றை பிடித்துக் குடியேறுகிறான். பயணம் சென்று தனக்கென்று புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்குகிறான்.

மகனைத் துரத்தியடித்த பெற்றவர்கள் தங்களது சொத்துக்களை மகள்கள் பேருக்கு எழுதி வைத்து விடுகின்றனர்....

இப்போது சொல்லுங்கள்! இதிலே யார் பக்கம் நியாயம்?

இதைப் போன்ற நிறைய "உண்மைச் சம்பவங்கள்" உங்களைச் சுற்றியே நிறைய நடந்து கொண்டிருக்கும். எல்லாவற்றையும் பற்றியும் உங்கள் பெற்றோர்களிடமும், சகோதரிகளுடனும் பேசிப்பாருங்கள். கலந்தரையாடுங்கள். விவாதமாக்குங்கள்.

கொஞ்ச நாட்களிலேயே அவர்களின் மன நிலையை நீங்கள் துல்லியமாக அறிந்து கொண்டு விடலாம்.

உங்கள் பெற்றோர்கள் நியாய உணர்வு மிக்கவர்களாக இருந்தால் அல்ஹம்துலில்லாஹ்!

ஆனால் அவர்களிடம் நியாய உணர்வு இல்லையெனில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் - "நம் பெற்றோர்கள் மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர்கள் அன்று"- என்பதைத் தான்!

உங்கள் பெற்றோர்கள் அடுத்தவர் உணர்வுகளை மதிப்பவர்களே இல்லை; அவர்களிடம் நியாய உணர்வும் இல்லை எனில் என்ன செய்வது?

மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மனநல நோயாளிகள் இவர்கள்!

சுன்னத்தான இல்லறம்: 

(பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாமா?)

சென்ற பதிவில் நாம் எழுதியிருந்த உதாரணச் சம்பவங்களை வைத்து எல்லாப் பெற்றோர்களுமே இப்படித்தானோ என்று நினைத்து விட வேண்டாம்! ஒரு சில நல்ல பெற்றோர்களும் நமக்கு மத்தியில் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட நல்ல பெற்றோர்கள் நம்மிடம் மிகக் குறைவு என்பதே வருத்தத்துக்குரிய கசப்பான உண்மை!


இறையச்சம் மிக்க ஒரு சில பெற்றோர்களை விட்டு விட்டு, நம் முகத்தை சற்றே திருப்பி நம் சமூகத்தில் இருக்கும் பெரும்பாலான தாய்மார்களைப் பார்த்தால் - ஒரு தாய் இப்படியெல்லாம் கூட நடந்து கொள்வாரா என்று வியக்கும் அளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டு அமைந்திருக்கின்றன! இத்தகைய மனிதத் தன்மையற்ற தாய்மார்களைப் பற்றித்தான் நாம் ஆய்வு செய்திட இருக்கின்றோம்.

இப்போது கொஞ்சம் உளவியல். அதாவது - psychology!

மகள்கள் விஷயத்தில் ஒரு விதமாக நடந்து கொள்ளும் தாய்மார்கள் மகன்கள் விஷயத்தில் மட்டும் வேறொரு விதமாக ஏன் நடந்து கொள்கிறார்கள்?

நாம் இதற்கு முன்னர் empathy பற்றி சில கட்டுரைகளில் எழுதியிருக்கின்றோம். அடுத்தவர் நிலையில் நம்மை வைத்து சிந்தித்தால் அவருடைய உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள முடியும். இதற்கு ஆங்கிலத்தில் empathy என்று பெயர்.

இவ்வாறு மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்வது நபி வழியாகும். நபியவர்கள் மற்றவர்கள் உணர்வுகளுக்கு எந்த அளவுக்கு மதிப்பளிப்பவர்கள் என்பதை சில நபிமொழிகளைக் கொண்டு ஆய்வோம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக்கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக்கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ‘ஒரு பிடி அல்லது இருபிடிகள்’ அல்லது ‘ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள்’ உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார். (ஸஹீஹுல் புகாரி)

இன்னொரு நபிமொழியைப் பார்ப்போம்:

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”நீங்கள் மூவர் இருந்தால் ஒருவரைத் தவிர்த்து இருவர் மட்டும் உரையாட வேண்டாம், நீங்கள் மக்களுடன் கலக்கும்வரை. ஏனெனில் அது மூன்றாமவரைக் கவலையில் ஆழ்த்திவிடும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இந்த மனநலம் சார்ந்த நற்பண்பை குழந்தைகளுக்கு ஊட்டி வளர்த்திட வேண்டியது பெற்றோர் கடமை!

இந்தப் பண்பு எப்படிப்பட்டவர்களை உருவாக்கிடும்?

இந்த நற்பண்பு அடுத்தவர் மீது அக்கரை காட்டுபவர்களை உருவாக்கிடும்! (care for others); இந்த நற்பண்பை உடையவர்கள் அடுத்தவர்களுக்கு எந்தத் தீங்கையும் செய்திட மாட்டார்கள்.

நியாய உணர்வு இவர்களிடத்தில் மிகைத்திருக்கும்; இவர்கள் - நியாய உணர்வு அற்றவர்களை - அவர்கள் தங்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் - விரும்பிட மாட்டார்கள்! எதிரியாக இருந்தாலும் அவர்கள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துப்பேசிடத் தயங்க மாட்டார்கள். எப்போதும் இவர்கள் நியாயத்தின் பக்கமே நிற்பார்கள்!

இவர்கள் பொது நலம் மிக்கவர்களாக விளங்குவார்கள்! சமூக சேவை செய்பவர்களாக இருப்பார்கள்! நன்றி உடையவர்களாக இருப்பார்கள்!

அடுத்தவர் உணர்வைப் புரிந்து கொண்டு செயல் பட உதவுகின்ற empathy எனப்படும் இந்த நற்பண்பு இல்லாதவர்கள் எப்படிப்பட்டவர்களாக விளங்குவார்கள்?

நியாய உணர்வு சுத்தமாக இவர்களிடத்தில் இருக்காது; நியாயம் பேசுபவர்களை இவர்களுக்குப் பிடிக்காது! நியாயம் பேசுபவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் அவர்களை இவர்கள் விரும்பிட மாட்டார்கள்.

குழு உணர்வே இவர்களிடத்தில் மிகைத்திருக்கும்! தாங்கள் செய்வதையெல்லாம் நியாயப் படுத்துவார்கள்!

சுயநலம் மிக்கவர்களாக விளங்குவார்கள்! இத்தகையவர்களிடம் "உண்மையான நட்பை" எதிர்பார்க்க முடியாது! நயவஞ்சகத்தனமே இவர்களிடத்தில் குடிகொண்டிருக்கும்!

இந்த நற்பண்பு இல்லாதவர்கள் அடுத்தவர்களுக்கு எந்தத் தீங்கையும் செய்திடத் தயங்க மாட்டார்கள். சில சமயங்களில் குற்றம் (crime) புரிவதற்குக் கூடத் தயங்க மாட்டார்கள். சதி செய்வார்கள்.

குற்றவாளிகளின் மனநிலையை ஆய்வு செய்பவர்கள் சொல்வது: lack of empathy leads to crimes! அதாவது அடுத்தவர் உணர்வுகளை ஒரு பொருட்டாகக் கருதாதவர்கள் தான் குற்றவாளிகளாக மாறுகிறார்கள்.

இத்தகையவர்கள் என்னென்ன குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் தெரியுமா?

கற்பழிப்புக் குற்றங்கள், குழந்தைகள் பலாத்காரம் (child molesters) மற்றும் குடும்ப வன்முறை (domestic violence) இவற்றில் ஈடுபடுபவர்கள் அனைவருமே அடுத்தவர் உணர்வைப் புரிந்து கொள்ள மறுப்பவர்கள் தாம்.

இவர்களால் பாதிப்புக்குள்ளானவர்கள் (victims) எப்படிப்பட்ட உணர்வுகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள இயலாதவர்கள்; அல்லது புரிந்து கொள்ள மறுப்பவர்கள்.

தங்களுக்குத் தாங்களே, தாங்கள் செய்கின்ற கொடுமையான குற்றங்களை நியாயப் படுத்திக் கொள்வார்களாம்.

குழந்தையை மானபங்கப் படுத்துபவன் அதனை எப்படி நியாயப் படுத்துகிறான் தெரியுமா?

"இதுவும் ஒரு விதமான அன்பு செலுத்துதல் தான்!" (just showing love!)

"அந்தக் குழந்தைக்கு நான் செய்வது பிடிக்கவில்லை என்றால் என்னைத் தடுத்திருக்கும் தானே? தடுக்கவில்லையே!"

வீட்டில் மனைவியையும் குழந்தைகளையும் அடித்து நொறுக்குபவன் கூட அதனை எப்படி நியாயப் படுத்துகிறான்?

"இது ஒரு வகையில் "அவர்களை சீர்திருத்திடத் தான்!" (this is just good discipline!)

இப்படிப்பட்டவர்கள் ஒரு விதத்தில் "மனநலக் குறைபாடு" உடையவர்களே!

சரி, இப்போது நம் விஷயத்துக்கு வருவோம். பெற்றோர்கள் தங்கள் மகனின் இல்லற விஷயங்களில் தேவையின்றித் தலையிடுவதை எவ்வாறு "நியாயப் படுத்திக்" கொள்கிறார்கள் தெரியுமா?

"என் மகள் மட்டும் அங்கே கொடுமைப் படுத்தப் படுகிறாளே! நான் இவளை அந்த அளவுக்கா கொடுமைப் படுத்துகிறேன்?"

"நம் மகளுக்கு நாம் வாரி வாரிக் கொடுத்திருக்கும்போது, நம் மகனுக்கு வாங்குவதில் என்ன தப்பு?"

"என் மகள் அவள் மாமியார் வீட்டில் எவ்வளவு வேலை பார்க்கிறாள் தெரியுமா? என் மருமகள் மட்டும் இங்கே சுகமா தூங்க விட்டு விடுவோமா?" (தனியொரு சம்பவமே இருக்கிறது; பின்னர் பகிர்ந்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ்)

இப்போது சொல்லுங்கள்! தங்கள் செயல்களை நியாயப் படுத்திக் கொண்டு பெரும் குற்றங்களைச் செய்பவர்கள் மன நலக் குறைபாடு உடையவர்கள் என்றால் - அதே போன்று தங்கள் செயல்களை நியாயப்படுத்திக் கொண்டு கணவன் மனைவியர் உரிமைகளைப் பறித்திடும் பெற்றோர்களும் மன நலக்குறைபாடு உடையவர்கள் தானே?

இது தான் நாம் எடுத்துக் கொண்ட பிரச்னையின் ஆணி வேர்!

அதாவது - அடுத்தவர் உணர்வுகளுக்கு எந்த மதிப்பும் அளிக்காத மனநலக் குறைபாடே (lack of empathy) பிரச்னையின் ஆணிவேர்!

சரி! நமது பெற்றோருக்கு இந்த empathy எனும் உணர்வு இருக்கிறதா இல்லையா என்பதை எப்படி அறிவது?

மகனின் இல்லற வாழ்வில் பெற்றோர் குறுக்கிடுவதன் பின்னணி என்ன?

சுன்னத்தான இல்லறம்:

(பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாமா?)

ஒரு குடும்பத்தில் தந்தைக்கு அடுத்த படி, குடும்பப் பொறுப்புகள் அனைத்தும் யார் மீது சுமத்தப் படுகிறது? அக்குடும்பத்தின் ஆண் மகன்களிடத்தில் தான்!

நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்த தந்தை உடல் நலம் குன்றி விட்டாலோ, அல்லது அவரால் போதுமான அளவுக்கு பொருளீட்ட இயலாமல் போய் விட்டாலோ, அல்லது தந்தை இறந்து போய் விட்டாலோ - அக்குடும்பத்தின் எல்லாப் பொறுப்புகளையும் அவரது மகன் அல்லது மகன்கள் சுமந்து கொள்கிறார்கள்.


அந்த சுமையை ஒரு சுமையாகக் கருதாமல் ஒரு சுகமாகக் கருதுகின்ற பல இளைஞர்களை நாம் பார்க்கலாம்.

இப்படிப் பட்ட குடும்பப் பொறுப்பு, ஒரு இளைஞனுக்கு எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். பள்ளிக் கூடத்திலோ கல்லூரியிலோ படித்துக் கொண்டிருக்கும் போது கூட வரலாம். குடும்பப் பொறுப்புக்காக தன் படிப்பைக் கை விட வேண்டிய நிலை ஏற்படலாம்.

தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு விட்டது என்பதால், ப்ளஸ் டூ படித்து விட்டு மேற்படிப்புக் கனவைத் தூக்கி எறிந்து விட்டு ஜவுளிக்கடை வேலை ஒன்றுக்கு வருகிறான் ஒரு இளைஞன்.

தன் தந்தைக்கு அடுத்த படி ஒரு இளைஞன் தன் குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய "கடமைகள்" என்று எவைகளைத் தன் தலை மீது சுமத்திக் கொண்டிருக்கின்றான்?

- தன் தந்தை வாங்கிய கடனை அடைப்பது. (அவர் அடகு வைத்த சொத்துக்களை மீட்பது)

- குடும்பச் செலவுகளை கவனித்துக் கொள்வது.

- தன் கூடப் பிறந்த சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைப்பது.

- குடும்பத்தின் இதர செலவுகளையும் கவனித்துக் கொள்வது.

இப்படி எந்த ஒரு சுய நலமும் இல்லாமல் - குடும்பத்தின் எல்லாப் பொறுப்புகளையும் தன் தலை மீது சுமந்து கொள்கின்ற அந்த மகனிடம் அவரது தாயும் சகோதரிகளும் - எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

நன்றாகவே நடந்து கொள்கிறார்கள்! "எங்கள் அண்ணனைப் போல் வருமா?" என்கிறார்கள்! குறிப்பாக அண்ணன் பயணம் போய் வருபவனாக இருந்து விட்டால் நன்றாக ஆக்கிப் போட்டு விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள்!

ஆனால் அது எது வரை? அந்த இளைஞன் தான் சம்பாதிப்பதை எல்லாம் தன் தாயையும் சகோதரிகளையும் "கவனித்துக் கொள்கின்ற" காலம் வரை தான்!

அவனுக்குத் திருமணம் ஆகி , குழந்தை குட்டிகள் பெற்றுக் கொண்ட பின்பு அவன் தன் எதிர் காலத்துக்கு என்று திட்டமிடத் தொடங்கி விட்டால் வந்து விடும் பேராபத்து!

பயணம் சென்றவன் முன்பு போல் பணம் அனுப்புவதில்லை என்றால் அவ்வளவு தான்! மனைவிக்கு ஏதாவது நகை செய்து போட்டு விட்டாலோ அவ்வளவு தான்! நிலைமை தலை கீழாக மாறி விடும்.

தாயைப் பார்க்க வந்தால், முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ளுவார்கள். தந்தை வீட்டில் இருந்தால் மகனிடம் "கணக்குக்" கேட்கத் துவங்கி விடுவார்.

அப்படியானால் ஒரு தாய் தன் மகனிடம், இன்னும் என்ன தான் எதிர் பார்க்கிறாள்?

தன் மகன் "கடைசி வரைக்கும்" குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டுமாம். சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டு தானும் திருமணம் செய்து கொண்டு வாழத் தொடங்கும் இளைஞன், தன் மனைவி மக்கள் குறித்து சிந்தித்திடக் கூடாது; தன் சகோதரிகளுக்கும், ஏன், இன்னும் ஒரு படி மேலே போய் சகோதரிகளின் குழந்தைகளுக்கும் "செலவு" செய்திட வேண்டும் என்று தாயும் சகோதரிகளும் எதிர் பார்க்கிறார்கள், இது எந்த விதத்தில் நியாயம்?

மகனிடமிருந்து காசு பறித்து அவற்றை தன் மகள்கள் வீட்டுக்கு சேர்த்து வைப்பதில் ஒரு தாய்க்கு இருக்கும் சுகம் அலாதியானது! அடடா!

மகன் சொத்து சேர்த்து விடக் கூடாது! அவன் சிறிது சேமித்து வைத்து விடக் கூடாது! மனைவிக்கு ஒரு நகை நட்டு செய்து விடக் கூடாது!

தன் எதிர் காலம் குறித்துத் திட்டமிடத் தொடங்கும் ஒரு மகனை - அவனது தாய் எப்படி "மூளைச் சலவை" செய்கிறாள் தெரியுமா?

இதோ - வெளி நாட்டில் இருக்கும் மகனிடத்திலிருந்து தொலைபேசி அழைப்பு. மனைவியிடத்தில் பேசலாம் என்று அழைக்கிறான் இளைஞன். ஆனால் போனை எடுத்துப் பேசுவது தாய்.....!

"தம்பீ! எப்படி இருக்கே! நல்லா இருக்கியா?" போன்ற நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு....

"தம்பீ! அவசரப் பட்டு ஊருக்கு இப்ப வந்துடாதேப்பா! அக்கா மகள் சமீமாவை பெண் கேட்டு வர்ராங்கப்பா! நல்ல இடமெல்லாம் நிறைய வருது. மச்சானைப் பத்தித் தான் உனக்குத் தெரியுமே! அவரை நம்ப முடியாதுப்பா! நம்ம தாம்ப்பா எப்படியாவது தோது செய்து ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கணும்"

அடுத்து அக்கா போனை வாங்கி "ஆமாம் தம்பி, அல்லாஹ்வுக்கு அடுத்த படி, உன்னைத் தான் தம்பி நான் மலை போல் நம்பியிருக்கேன்.... எப்படியாவது தோது பண்ணி பணம் அனுப்பி வை தம்பி...... "

மனைவியிடம் பேசுவதை மறந்தே போய் போனை வைத்து விடுகிறான் நமது இளைஞன்!

மகனின் இல்லற வாழ்வில் பெற்றோர் குறுக்கிடுவதன் பின்னணி என்ன என்பது இப்போது புரிகிறதா?

இது நமது சமூகத்தில் புரையோடிப் போய் விட்ட ஆழமான ஒரு நோய்!

இந்த ஆழமான நோய்க்கு நாம் மருந்து கண்டு பிடித்தே ஆக வேண்டும்!

எப்படி கண்டுபிடிப்பது?

மகன் மருமகள் உறவுக்கு இடம் அளிக்க மறுத்த தாய்!

சுன்னத்தான இல்லறம்:

(பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாமா?)

புதிதாகத் திருமணம் முடித்த கணவன் மனைவியருக்கு இரு தரப்புப் பெற்றோர்களும் தாங்கள் பெற்ற அனுபவங்களிலிருந்து நேர்மையான நல்ல அறிவுரைகளை வழங்கி வழிகாட்டுதல் நல்லதே! நன்மையே!

ஆனால் .....
இங்கே பெரும்பாலான பெற்றோர்களின் நிலை வேறு விதமாகவே இருக்கின்றது! அளவுக்கு அதிகமான குறுக்கீடுகளையும், (interference), உள் நோக்கத்துடன் கொடுக்கப்படும் அறிவுறுத்தல்களையுமே இங்கே நாம் காண முடிகின்றது!

பெற்றோர்களின் இப்படிப்பட்ட தேவையற்ற குறுக்கீடுகள் - திருமண வாழ்வையே இறுக்கமானதாக (stressful) ஆக்கி விடுகின்றன! கணவன் மனைவி புரிந்துணர்வையே சிதைத்து விடுகின்றன!

இதனை எல்லோருக்கும் முன்னதாக கணவனும் மனைவி இருவருமே புரிந்து கொள்தல் அவசியம்.

கணவனும் மனைவியும் மிக அருகில் உள்ள நகரத்துக்குச் சென்று தாங்கள் புதிதாகக் குடியேற இருக்கும் வீட்டுக்கு ஜன்னல் திரைகளை வாங்கிடப் புறப்படுகின்றனர்!

"ஜன்னல் திரைகளை வாங்குவதற்கு ஆண்கள் போனால் போதாதா? நீ வேறு எதற்குப் போக வேண்டும்?"

துப்பட்டியைப் போட்டுக் கொண்டு புறப்பட்டு விட்ட மருமகள் - அப்படியே மனம் குன்றி அமர்ந்து விடுகிறார்!!

அருகில் உள்ள ஊரில் ஒரு விஷேசம்! அண்ணன், அண்ணன் மனைவி, தம்பி, தம்பி மனைவி, இரண்டு சகோதரிகள், குழந்தைகளுடன் காரில் புறப்பட இருக்கும் சமயம். திடீரென்று செல்போன் அழைப்பு அம்மாவிடமிருந்து.

"ஏன் இத்தனை பேர்? தம்பி மனைவி போக வேண்டாம்! மற்றவர்கள் போய் வந்தால் போதும்!"

அந்தத் தம்பி மனைவிக்கு எப்படி இருக்கும்? இத்தனைக்கும் இந்தத் "தம்பி" தான் காருக்கு வாடகை தருபவர்!

"இல்லையம்மா! நான் மனைவியை அழைத்துக் கொண்டுதான் போகிறேன்!" என்று அந்தத் தம்பி சொல்லலாம் அல்லவா?

ஏன் சொல்லவில்லை என்பதே நம் கேள்வி!

திருமணம் முடித்து பயணம் சென்று விட்டு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் பயணத்திலிருந்து வருகிறார் பெற்ற மகன்! இரண்டு மாத விடுமுறை; இரு வீட்டாருக்கும் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை! மகனை மாமியார் வீட்டுக்கு (அதாவது மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு) அனுப்பவில்லை தாய்!

மனைவி வீட்டார் தங்கள் மகளை அனுப்பி வைக்கிறார்கள்;

ஆனால் மகன் மருமகள் உறவுக்கு இடம் அளிக்க மறுத்து விட்டார் அந்தத் தாய்!

தாய் பேச்சைத் தட்டாத அருமை மகன் - இரண்டு மாதங்களையும் கூடத்திலேயே பாய் போட்டுப் படுத்து விட்டு பயணம் புறப்பட்டுப் போய் விடுகிறார்! என்ன செய்வது? பெற்ற தாயின் பேச்சை எப்படி மீறுவது?

கணவன் வெளி நாட்டில் வேலை பார்க்கிறார்; குடும்பத்துடன் தங்குவதற்கு வீடும் கம்பெனியில் தருகிறார்கள்; மனைவியுடன் சேர்ந்து வாழவும், நல்ல உணவுக்காகவும் மனைவியை அங்கு அழைத்துக் கொள்ள கணவன் விரும்பினால் அதில் தலையிட பெற்றோர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

இங்கேயும் பெற்ற தாய்மார்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றேன் என்று தாம் ஏதோ பெரிய தியாகம் செய்வதாக எண்ணிக் கொள்கின்றனர் ஆண்மகன்கள்!

மனைவியின் உரிமை? அது பற்றி யாருக்குக் கவலை?

தன் மகனுக்கு அழகான ஒரு பெண்ணைத் தேடுகிறார் ஒரு தாய்! உறவினர் ஒருவர் அந்தத் தாயிடம் கேட்ட கேள்வி: "நீ உனக்கு ஒரு மருமகளைப் பார்க்கிறாயா? உன் மகனுக்கு அழகு சுந்தரி ஒருவரைப் பார்க்கிறாயா?"

என்ன எச்சரிக்கை இது?

ஏன் இப்படி விளையாடுகிறார்கள் – பெற்றோர்களும் சகோதரிகளும்?