Wednesday, April 16, 2014

பாலுறவு குறித்து மனம் திறந்து பேசுங்கள்!

சுன்னத்தான இல்லறம்:

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மிகுந்த அறிவு நுட்பத்துக்குச் சொந்தக்காரர்! Super Intellect! நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை மிகவும் நேசித்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.


நபியவர்கள் ஒரு முறை சொன்னார்கள்: “ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு) எனக்கு வருவதில்லை….” (புகாரி)

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் எந்த ஒன்றையும் "வடிகட்டிப் பேசுவதில்" வல்லவர்கள். எதைப் பேச வேண்டும்; எதனை மறைத்து விட வேண்டும். எதனை சூசகமாக உணர்த்திட வேண்டும் என்பதில் கை தேர்ந்தவர்கள்.

இரண்டு சான்றுகள்:

ஓன்று: ஸஹீஹுல் புகாரியில் உள்ள ஒரு நீண்ட நபிமொழியிலிருந்து...

அண்ணலார் (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷாவின் வீட்டில் இருக்கும் நேரத்தில் - குடும்பப் பிரச்னை ஒன்றை விவாதிக்க நபியவர்களின் இன்னொரு மனைவியான ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் அவர்கள் வருகின்றார்கள். அவர்கள் குரலை உயர்த்தி ஆயிஷா அவர்களைக் குறை கூறிக் கடுமையாகப் பேசி விடுகின்றார்கள்.

இந்த நபிமொழியை அறிவிக்கும் அன்னை ஆயிஷா அவர்கள் கூறுகின்றார்கள்: "உடனே, நான் ஸைனபுக்கு பதில் சொல்லி, இறுதியில் அவரை வாயடைக்கச் செய்து விட்டேன்!"

ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்கள் அன்னை ஆயிஷா பற்றி என்ன குறை கூறினார்கள்? ஆயிஷா அவர்கள் ஸைனப் அவர்களுக்கு என்ன பதில் சொன்னார்கள்? எப்படி வாயடைக்கச் செய்தார்கள்? – என்பதையெல்லாம் வெளிப்படையாகப் பேசாமல் மறைத்து விட்டார்கள்!

இரண்டு:

இதுவும் ஸஹீஹுல் புகாரியில் உள்ள ஒரு நீண்ட நபிமொழியிலிருந்து தான்:

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: என் தந்தை அபூபக்ர் (ரலி) என்னருகே வந்தபோது நபி (ஸல்) அவர்கள் தங்களின் தலையை என்னுடைய மடி மீது வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். என் தந்தை "நபி (ஸல்) அவர்களையும் மக்களையும் தங்க வைத்துவிட்டாயே? அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களிடமும் தண்ணீர் இல்லை" என்று கூறினார்கள்.

அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, தங்களின் கையால் என்னுடைய இடுப்பில் குத்தினார்கள்.

அபூபக்ர் அவர்கள் அன்னை ஆயிஷாவை எப்படியெல்லாம் விமர்சித்தார்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் – “அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு” – என்கிறார்கள். எவ்வளவு அறிவு நுட்பம் பார்த்தீர்களா?

ஆனால் – அதே அன்னை ஆயிஷா அவர்கள் அண்ணலாருடன் தனது பாலுறவு வாழ்க்கையை பற்றிய குறிப்புகளை ஏன் மறைக்காமல் இந்த உம்மத்துக்கு வெளிப்படுத்திக் காட்டினார்கள் என்பது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்.

பின் வரும் நபிமொழிகளைக் கவனியுங்கள்:

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியர்களில் ஒருவரை முத்தமிட்டுவிட்டு, ஒளூச்செய்யாமலே தொழச் சென்றார்கள். (ஆயிஷா அவர்களிடமிருந்து அறிவிக்கும்) உர்வா கூறுகிறார், “நான் ஆயிஷாவிடம் ‘அது நீங்களாகத்தான் இருக்கும்?’ என்றேன். அதற்கு அவர்கள் புன்னகைத்தார்கள்:.” (ஆதாரம் ஸுனன் திர்மிதீ, ஸுனன் அபூதாவூத்)

தன் கணவர் தன்னை முத்தமிட்டதை மறைமுகமாக ஏன் அறிவிக்கின்றார்கள்? உர்வா அவர்களும் விடாமல் அது அன்னை ஆயிஷா அவர்கள் தாம் என்பதை விளக்க வைத்து விட்டார்களே!

நபி அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியை) முத்தமிடுவார்கள். மேலும், நோன்பு நோற்ற நிலையில் கட்டியணைப்பார்கள். ஆனால், அவர்கள் தம் இச்சையைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் சக்தியுடையவராக இருந்தார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)

நான் மாதவிடாய் வந்த நிலையில் (ஒரு பாத்திரத்தில்) பருகிவிட்டு பிறகு நபி (ஸல்) அவர்களுக்கு அப்பாத்திரத்தைக் கொடுப்பேன். நான் எங்கு வாய் வைத்தேனா அதே இடத்தில் தங்களது வாயை வைத்து குடிப்பார்கள். எலும்புடன் ஒட்டியிருக்கும் இறைச்சியை நான் கடித்துவிட்டு நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். நான் எங்கு வாய் வைத்திருந்தேனோ அங்கேயே வாயை வைப்பார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (முஸ்லிம்)

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ‘அதா’வு என்பவர் கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா என்று நேரடியாக கேட்ட போது, பார்ப்பதற்கு அனுமதி உள்ளதாக சூசகமாக உணர்த்தினார்கள் என்ற ஹதீஸ் இப்னு ஹப்பானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்ணலார் அவர்கள் – தம்மை முத்தமிடுவது பற்றி, கட்டியணைத்துக் கொள்வது பற்றி, உடலுறவு கொள்வது பற்றி, குளிப்பது பற்றி, மாத விலக்கு நேரத்தில் நபியவர்களின் செயல்கள் பற்றியெல்லாம் ஏன் அவர்கள் வெளிப்படையாகப் பேசிட வேண்டும். இவை அனைத்தும் அவர்களது தனிப்பட்ட “இல்லற விஷயங்கள்” என்று மூடி மறைத்திருக்கலாமே? ஆனால் அப்படி செய்யவில்லை! அதற்குக் காரணம் இருக்கின்றது!

இந்த உம்மத் – பாலுறவு குறித்து அலட்சியம் செய்து விடக்கூடாது என்பதே அதற்கான வலுவான காரணமாக இருக்க முடியும்.

ஆனால் நமது நிலை என்ன?

No comments:

Post a Comment