Wednesday, April 2, 2014

தேவை: குடும்ப நல ஆலோசகர்கள்!

சுன்னத்தான இல்லறம்:

ஆமாம்! திருமணமான புதிதில் எல்லா ஜோடிகளும் மகிழ்ச்சிக் கடலில் தான் மிதப்பார்கள். தனக்கு ஒரு பொக்கிஷமே கிடைத்து விட்டதாகத் தான் பூரிப்படைந்து விடுவார்கள். (எடை கூட அதிகரிக்கும்!)

ஆனால் இதுவெல்லாம் எவ்வளவு காலத்துக்கு? ஒரு ஆண்டு? அல்லது இரண்டு ஆண்டுகள்? அதே நேரத்தில் வேறு சிலருக்கோ துவக்க கால மகிழ்ச்சியெல்லாம் ஒரு சில மாதங்கள் தான்!


பின்னர் கருத்து வேறுபாடுகள் தலை தூக்கும். ஒருவருடைய குறைகள் மற்றவருக்குத் தெரியத் துவங்கும். இல்லறம் அதற்கே உரித்தான சவால்களை இருவருக்கும் முன் வைத்திடும். பிரச்சனைகள் பூதாகாரமாக உருவெடுப்பதாக எண்ணிக் கொள்வார்கள் இளம் கணவன் மனைவியர்.

கருத்து வேறுபாடுகள் எதற்காகவெல்லாம் ஏற்படும்?

ஒன்றுமில்லாத சிறு விஷயத்திலும் ஏற்படலாம். பெரிய விஷயங்களிலும் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம்.

விவரம் அறியாத அந்த இளம் கணவனும் மனைவியும் செய்வதறியாது தவிப்பார்கள். பிரச்சனைகளை வெளியில் சொல்ல மாட்டார்கள். "எல்லாம் தானாகவே சரியாகி விடும்" என்று நினைப்பார்கள். ஆனால் சரியாகாது!

யாரிடமாவது சொல்லலாமா என்று எண்ணுவார்கள்.

பெரும்பாலான கணவன்மார்கள் யாரிடமும் போய் தங்களின் பிரச்சனைக்கு தீர்வு கேட்க மாட்டார்கள். வெகு சிலர் தங்களின் (சற்று விபரமுள்ள) தந்தையிடம் போய் பேசுவார்கள். இன்னும் சிலர் மார்க்க அறிஞர்களின் உதவியை நாடுவார்கள்.

மனைவிமார்கள் தங்கள் தாயிடமோ, சகோதரியிடமோ போய் அடைக்கலம் தேடுவார்கள்.

பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால் - அல்ஹம்து லில்லாஹ்! ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பிரச்சனைகள் தீர்வதில்லை!

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கணவன் மனைவியர் எவ்வாறு இல்லறத்தை வழிநடத்துகிறார்கள்?

ஒன்று: ஒருவர் மீது ஒருவர் கோபத்தை அள்ளிக் கொட்டுகிறார்கள். (emotional outburst)

அல்லது: கோபத்தை அடக்கிக் கொள்கிறார்கள். (resentment)

அல்லது: ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக் கொள்கிறார்கள் (blaming). இது அனுதினமும் தொடர்கிறது.

அல்லது: "மவுனமே" சிறந்தது என்று வாயைப் பொத்திக் கொண்டு (stone walling) "தேமே" என்று வாழ்ந்து விட்டுப் போய் விடலாம் என்று முடிவு கட்டி விடுகின்றார்கள்.

ஆனால் இவை அனைத்துமே தீர்வுகள் அல்ல! இது அவர்களுக்குத் தெரிவதும் இல்லை!

இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து கணவன் - மனைவியரைக் காப்பாற்றுவதற்காக உண்டாக்கப்பட்டதே - marital counselling - அதாவது "குடும்ப நல ஆலோசனை".

இது குறித்த விழிப்புணர்ச்சி இன்னும் நமது மக்களுக்குச் சென்றடையவில்லை!

குடும்ப நல ஆலோசனைக்கு என்ன தகுதிகள் தேவை?

ஒன்று: ஏழாண்டு அல்லது ஐந்தாண்டு மதரஸா மார்க்கக் கல்வி அல்லது இஸ்லாமியக் கல்வியில் ஒரு முதுகலைப்பட்டம் (M.A. Islamic Studies).

இரண்டு: உளவியலில் ஒரு முதுகலைப்பட்டம். (M.Sc., Psychology / Clinical Psychology / Counseling Psychology)

இந்த இரண்டு தகுதிகளையும் பெற்றுக் கொண்டு கணவன் மனைவியருக்கு ஆலோசனை சொல்லக் கூடியவர்கள் நமக்கு நூற்றுக் கணக்கில் தேவைப்படும் காலம் இது!

எனினும் தகுதிமிக்க ஆலோசகர்கள் நமக்குக் கிடைக்கும் வரை நாம் செய்திட வேண்டியதெல்லாம் -

ஒன்று: இது குறித்த விழிப்புணர்ச்சியை மக்களிடத்தில் ஏற்படுத்துதல்

இரண்டு: குடும்ப உறவுகளை மேம்படுத்துவது குறித்த இஸ்லாமிய நூல்களை வாங்கிப் படித்தல், கணவன் மனைவியர் தங்களது கருத்து வேறுபாடுகளை அழகாகத் தீர்த்துக் கொண்டு மன நிம்மதியுடன் மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி என்று வழிகாட்டுகின்ற இஸ்லாமிய - உளவியல் கட்டுரைகளை (ஆங்கிலத்திலும் மற்றும் தமிழிலும்) இணைய தளங்களில் இருந்து படித்து கருத்துக்களை சேகரித்தல், அக்கருத்துக்களை முன் வைத்து உறவினர்கள் வட்டத்திலும், நண்பர்கள் வட்டத்திலும் கலந்துரையாடுதல்;

மூன்று: குடும்ப உறவுகளை மேம்படுத்திட வழிகாட்டும் பயிலரங்கங்களை கணவன் மனைவியருக்கு நடத்துதல்.

இளம் கணவன் மனைவியர் விழித்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்!

No comments:

Post a Comment