Sunday, April 13, 2014

என்ன இருந்தாலும் உனக்கு பத்திரிகை வைக்காதது தப்பு தான்!"

சுன்னத்தான இல்லறம்:

இங்கே ஒரு கணவன் - மனைவி: கணவன் - நாசர்; மனைவி - ஷாகிரா;

ஷாகிரா மிகவும் நல்லவர்; ஆனால் சற்றே உணர்ச்சி வசப்படுபவர்; குறிப்பாக உறவினர்கள் வருகை விஷயத்தில்; யாராவது ஒரு உறவினர் - இவர் இருக்கும் பகுதிக்கு வந்து விட்டு - ஆனால் இவர் வீட்டுக்கு மட்டும் வராமல் போய் விட்டால் அவ்வளவு தான்!

"ஏங்க! இதப் பாருங்க! சாபிரா மாமி இன்னைக்கு சாயங்காலம் வந்திருந்தாங்களா! உங்க அக்கா வீட்டுக்கு வந்தவங்க நம்ம வீட்டுக்கு வராம போயிட்டாங்கங்க!"

இது போன்ற "சாதாரண" விஷயங்களையெல்லாம் மிகச் "சீரியஸாக" தன் மனைவி எடுத்துக் கொள்வதை நாசர் தொடர்ந்து கவனித்தே வந்திருக்கின்றார். ஒரு நாள். ஷாகிரா ஓடி வந்து கணவன் நாசரிடம் இன்னொரு ஆற்றாமை சம்பவத்தை விவரிக்கின்றார்:

"ஏங்க! முப்பது வருஷமா இந்த "மீன்காரம்மா" கிட்ட நாம் மீன் வாங்கிக் கிட்டிருக்கோம்; அவங்க மகனுக்குக் கல்யாணமாங்க! தோழி சுமையா வீட்டுக்குப் போயிருந்தேனா! அங்க அவங்க கல்யாணப் பத்திரிகை வைத்து அழைச்சிருக்காங்கங்க! நமக்கும் ஒரு பத்திரிகை வைக்கிறதுக்கென்னங்க! அவங்க வரட்டும்; பேசிக்கிறேன்!"

இப்போது புரிந்துணரிவுள்ள கணவன் நாசர் தன் மனைவி ஷாகிராவுக்கு என்ன பதில் சொல்வார்?

சிந்தியுங்கள் முதலில்!

*****

பிறகு படியுங்கள் இதனை:

மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி?

1. முதலில் ஒன்றை நினைவில் வைப்போம். அது - ஒரே நாளில் ஒருவர் தன் துணையின் உள் மனத்து உணர்வுகளையெல்லாம் புரிந்து கொள்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் தான் கணவன் மனைவியருக்குள் இந்தப் புரிந்துணர்வு (attunement) ஏற்படும்!

2. தினமும் உங்கள் துணைவிக்கென்று செலவிட தனியொரு நேரத்தை ஒதுக்குங்கள்! ( to spend quality time with your spouse - on a daily basis); நீங்கள் பணி நிமித்தம் வெளியூர் சென்றிருக்கும் நேரங்கள் தவிர்த்து மற்ற காலங்களில் - இதனை ஒரு வழக்கமாகவே ஆக்கிக் கொண்டிட வேண்டும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகை முடிந்தவுடன் தம் துணைவியரிடம் செல்வார்கள். அப்போது அவர்களில் சிலருடன் நெருக்கமாக இருப்பார்கள். அவ்வாறே (ஒருநாள்) தம் துணைவியாரான ஹஃப்ஸாவிடம்
சென்று வழக்கமாகத் தங்கும் நேரத்தைவிட அதிக நேரம் தங்கினார்கள். (புகாரி – 5216)

3. உங்கள் துணையின் பக்கம் நீங்கள் முழுமையாகத் திரும்பிட வேண்டும்! உங்கள் துணைவர் எதையாவது சொல்ல முன் வந்தால் அவர் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்டிட வேண்டும். நபியவர்களிடம் யாராவது பேசினால் – அவர் பேசி முடியும் வரை – அமைதியாகக் காது கொடுத்துக் கேட்பார்கள் என்பது நபிமொழி; உங்கள் துணை பேசும்போது – குறுக்கிட்டுப் பேசக்கூடாது. அவர் கருத்துக்களை மறுத்துப் பேசிடக்கூடாது. பேச்சைத் திசைத் திருப்பிடக் கூடாது.

4. உங்கள் துணை உங்களிடம் பகிர்ந்து கொள்ள எடுத்துக் கொள்ளும் விஷயம் உங்களுக்கு “அற்பமானதாக” இருக்கலாம்! ஆனால் அதனை அப்படியே அலட்சியப் படுத்தி விடக்கூடாது. “இதற்குப்போய் ஏன் அலட்டிக் கொள்கிறார் இவர்?” – என்று எண்ணி விடக் கூடாது. மாறாக – அந்தச் சின்ன விஷயம் உங்கள் துணையை எப்படிப் பாதித்திருக்கின்றது என்பதையே நீங்கள் கவனித்திட வேண்டும்.

5. உங்களவருடைய உணர்வுகளை உதாசீனம் செய்திடக் கூடாது. அவர் நிலையில் உங்களை வைத்து (empathy) – அவர் தம் மன நிலையைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். புரிந்துணர்வுக்கு இது மிகவும் அவசியம்.

6. உங்கள் துணையின் முக பாவனை, பேச்சின் தொனி, கண்கள் சொல்லும் சேதி, உடல் மொழி (body language) – அனைத்தையும் உற்றுக் கவனித்திட வேண்டும். மேலோட்டமாக அல்லது அலட்சியமாகக் கவனித்தால் - சொல்லுகின்ற அந்தச் செய்திக்குப் பின்னே மறைந்திருக்கின்ற அவரது உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தவறி விடுவீர்கள்.

7. இவ்வாறு தொடர்ந்து செய்திட்டால் – எந்த ஒரு சூழலிலும் - உங்கள் துணை ஒரு குறிப்பிட்ட உணர்வின் பின்னணியில் என்ன பேசுவார் அல்லது என்ன செய்திடுவார் என்பதை உங்களால் மிகத் துல்லியமாகக் கணித்திட முடியும். அதற்குத் தக நடந்து கொள்ளவும் முடியும்.

(RAS - என்றழைக்கப்படும் Reticular Activating System என்று ஒன்று இருக்கின்றது. இது நமது மூளையில் அமைந்துள்ள ஒரு அமைப்பு. எந்த ஒரு தூண்டுதலையும் (impulse) ஒருவர் எவ்வாறு எதிர்கொள்வார் (response) என்பதைத் தீர்மானிப்பது இந்த RAS தான். இது பற்றி பின்னர் இன்ஷா அல்லாஹ் எழுதுவோம்.)

***

இப்போது சொல்லுங்கள்!

புரிந்துணரிவுள்ள கணவன் நாசர் தன் மனைவி ஷாகிராவுக்கு என்ன பதில் சொல்வார்?

"இதுக்குப் போய் ஏம்மா அலட்டிக்கிறே! விட்டுத் தள்ளு!" - என்று சொல்வாரா?

அல்லது -

"ஆமாம்ல! உங்க வாப்பா காலத்துலேந்து இவங்க கிட்ட தானே மீன் வாங்கிக்கிட்டுருக்கோம்! என்ன இருந்தாலும் உனக்கு பத்திரிகை வைக்காதது தப்பு தான்!" - என்று சொல்வாரா?

No comments:

Post a Comment