Tuesday, April 1, 2014

முகத்தைத் திருப்பிக் கொள்ளாதீர்கள்!

சுன்னத்தான இல்லறம்: 

இங்கே ஒரு மனைவி:

“ஏங்க! இன்றைக்கு மாலை சற்றே காலாற கடற்கரைப் பக்கமாக (ஜோடியாகத் தான்!) நடந்து போய் வரலாம்; வருகிறீர்களா?”

கணவனுக்கு இதில் சற்றும் ஆர்வம் இல்லை. பதில் எதுவும் சொல்லாமல் பேச்சைத் திசை திருப்பி விடுகிறான். அமைதியாக மனதுக்குள் – “இது ஒன்னு தான் பாக்கி!” – என்று சொல்லிக் கொண்டு – “ஆமா! இன்னைக்கு உங்க அண்ணன் வந்திருந்தாரில்ல; என்ன சொன்னார்?”


மனைவிக்கு இது எப்படி இருக்கும்?

மனைவி கணவனோடு சேர்ந்து நடக்க மிகவும் ஆசைப் படுகிறார். இது உணர்வு பூர்வமான ஒரு அழைப்பு! ஆனால் முகத்தைத் திருப்பிக் கொள்கிறான் கணவன்.

இங்கே – இந்தக் கணவன் சொல்லாமல் சொல்கின்ற செய்தி என்ன?

- உன் ஆசைகளை நிறைவேற்ற எனக்கு நேரம் இல்லை!
- அதற்கு எனக்கு அவசியமும் இல்லை!
- எனக்கு நீ முக்கியமில்லை!
- நீ என்ன நினைப்பாய் என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை!
- என்னை விட்டு விடு!

இது எதனை உணர்த்துகிறது என்றால் – கணவன் – மனைவி உறவில் "நட்பு" (companionship) என்பது அறவே இல்லை என்பதைத் தான்!

மாறாக – முகம் கொடுத்துப் பேசும் கணவன் என்ன பதில் தருவான் மனைவிக்கு?

"நல்ல ஐடியா! நானும் தான் நினைத்துக் கொண்டிருந்தேன்! நான்கு மணிக்கெல்லாம் தயாராக இரு ஹனீ! இரவு உணவு தயாரிக்க வேண்டாம்; அப்படியே வெளியிலேயே சாப்பிட்டு விட்டு வரலாம்; ரொம்ப நாளாச்சு இல்ல?"

இந்த பதில் எதனை உணர்த்துகிறது? இதில் என்ன செய்தி இருக்கின்றது?

கணவன் மனைவி உறவும் நெருக்கமும் மிகச் சிறப்பாக இருக்கின்றது என்பதைத் தானே!

- நீ சொல்வதை நான் கேட்கிறேன் – கண்ணே!

- உன்னுடைய தேவைகளை நான் நன்றாகப் புரிந்து வைத்திருக்கின்றேன்!

- உனது விருப்பம் தான் எனது விருப்பமும்!

- நான் எப்போதுமே உன் பக்கம் தான்!

- உன் விருப்பத்தை நிறைவேற்றுதே என் மகத்தான ஆசை!

- உன் விருப்பத்தை நிறைவேற்றுவதை விட எனக்கு இப்போது வேறு எந்த வேலையும் முக்கியம் இல்லை!

மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கணவன் முகம் கொடுக்கும் போது – மனைவிக்கு கணவன் மீது ஏற்படுவது அசைக்க முடியாத நம்பிக்கையும் (trust), பிரிக்க முடியாத நெருங்கிய நட்பும் (intimate friendship)!

அது போலவே தான் கணவனின் உணர்வுகளுக்கு மனைவி முகம் கொடுக்கும்போது அதே நம்பிக்கையும் நட்பும் கணவனுக்கும் ஏற்படுவது உறுதி!

கணவனின் அழைப்புக்கு மனைவியோ, மனைவியின் அழைப்புக்குக் கணவனோ – முகம் திருப்பிக் கொள்ளும்போது – ஒருவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை குலைகிறது! நெருக்கம் குறைகிறது!

இது ஏதோ "நேரமில்லாப்" பிரச்னை என்று எடுத்துக் கொண்டு விடக் கூடாது! அப்படி சில சமயங்களில் நேரம் ஒதுக்க முடியவில்லை என்றால் கூட கணவன் அது குறித்து வெளிப்படையாகப் பேசி விடலாம் தானே!

"ஸாரிம்மா! இன்னைக்கு வேண்டாமே! வியாழன் மாலையில் வைத்துக் கொள்ளலாமே!" - என்றால் மனைவி உங்களைப் புரிந்து கொள்ளாமலா போய் விடுவார்?

பின் வரும் நபி மொழிகள் குறித்து ஆழமாக சிந்தியுங்கள்:

அன்னை ஆயிஷா அவர்கள் சொல்கிறார்கள்: ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, ”நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?” எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) ”அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். நான் பார்த்து சலித்த போது, ”உனக்கு போதுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ”அப்படியானால் (உள்ளே) போ!” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ 950

நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல் துண்டால் மறைத்துக் கொண்டிருக்க பள்ளிவாசலில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக சடைந்து விடும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகள் மீது பேராவல் கொண்ட இளம் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்! அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ 5236

நாம் கேட்பது என்னவென்றால் – நபியவர்களை விட நாம் ஒன்றும் “பிஸி”யானவர்கள் அல்லவே?

No comments:

Post a Comment