Thursday, April 17, 2014

விழித்துக் கொள்ள வேண்டியது இளைய ஆண் வர்க்கமே!

சுன்னத்தான இல்லறம்:

பாலுறவு குறித்து வெளிப்படையாகப் பேசிட நமக்கு மிகப்பெரிய தயக்கங்கள் உண்டு!

நமது இறையச்சம் தான் இதற்குக் காரணமா என்றால் நிச்சயமாக இல்லை! நாம் ஒன்றும் நபியவர்களின் மனைவியர்களான நமது அன்னையர்களை விட இறையச்சம் உடையவர்களா என்ன?


அடுத்து நமது வெட்க உணர்ச்சி தான் காரணமா என்றால் – அதனை நாம் உடைத்துத் தான் ஆக வேண்டும்.

“பெண்களில் அன்ஸார்களின் பெண்களே நல்லவர்கள். அவர்கள் மார்க்கத்தைக் கேட்டு தெளிவு பெறுவதிலிருந்து அவர்களது வெட்கம் அவர்களை தடுக்கவில்லை” என ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லது – சொல்லித்தெரிவது அல்ல இந்தக் கலை – என்ற அலட்சியமா என்றால் – ஆம்! அந்த அலட்சியம் தான்!

ஆனால் இந்த அலட்சியம் தான் நமது சமூகத்தின் கணவன் மனைவியர் உறவுகளை மிகுந்த அளவுக்கு பாதித்திருக்கின்றது! இதனை நாம் உணர்ந்து தான் ஆக வேண்டும்.

நாம் ஒன்றும் பாலியல் கல்வியை “சொற்பொழிவு மன்றங்களில்” ஒலிபெருக்கி வைத்து பரப்புங்கள் என்று சொல்லவில்லை! அது தேவையும் இல்லை. நாம் சொல்ல வருவது – இது குறித்த “கல்வியறிவை” மஸ்ஜித்களில் வைத்து நமது இளைய சமூகத்துக்கு ஊட்டுங்கள் என்பது தான்.

அடுத்து நாம் நமது இளைய தலைமுறை கணவன்மார்களுக்கும், மனைவியருக்கும் வலியுறுத்திச் சொல்வது என்னவென்றால் - கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் தங்களின் பாலுறவுத் தேவைகள் குறித்து மனம் திறந்துப் பேசிக் கொள்ளுங்கள் என்பது தான்.

இது விஷயத்தில் – பெண்கள் தயங்குவதற்குக் காரணம் இருக்கிறது. அது அவர்களின் இயல்பான வெட்க உணர்ச்சி. இந்த வெட்கத்தையும் கணவன்மார்களே உடைத்தெறிந்திட வேண்டும். இதனை நாம் வலியுறுத்துவதற்குக் காரணம் – மனைவியின் பாலுறவுத் தேவைகள் சரிவர நிறைவேறாத நிலையில் தமது அளவுக்கு மீறிய வெட்க உணர்ச்சியினால் அது குறித்துக் கணவனிடம் பேசத் தயங்குவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன?

மண முறிவு! அல்லது திருப்தியற்ற இல்லற வாழ்க்கை! அல்லது கணவனுக்கே துரோகம்!

ஆனால் இன்றைய பெண்களோ – இந்த விஷயத்தை வெளியே கொண்டு வரத் தொடங்கி விட்டார்கள். அவர்கள் பெண் கவுன்ஸலர்களை அணுகுகிறார்கள். ஒரு இஸ்லாமியப் பெண் அறிஞரே இது குறித்து விரிவாக – குறிப்பாக இளைஞர்களுக்கு பாலியல் அறிவுரைகளை விரிவாகவும் வெளிப்படையாகவும் எழுதியிருக்கிறார்கள். அவர் பெயர்: ருகையா வாரிஃத் மக்ஸூத் அவர்கள்.

விழித்துக் கொள்ள வேண்டியது இளைய ஆண் வர்க்கமே!

குறிப்பாக நாம் இங்கே கணவன்மார்களுக்கு வலியுறுத்தும் பாலுறவுப் பாடங்கள்:

1. முத்தமிடுங்கள் – உங்கள் மனைவியை! அடிக்கடி முத்தமிடுங்கள்! எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முத்தமிடுங்கள்! ஒரு ஐந்து வினாடியாவது தொடரட்டும் உங்கள் முத்தம்.

2. முன் விளையாட்டு இன்றி பாலுறவு வேண்டாம்! முத்தமும் இன்சொற்களும் – பாலுறவுக்கு முன் மிக அவசியம். முன் விளையாட்டின் மூலமே மனைவி நனைகிறார் (becoming wet). பாலுறவுக்குத் தயாராகிறார். முன் விளையாட்டு இன்றி பாலுறவைத் துவக்கினால் – மனைவியருக்கு அது சிரமம் ஆகி விடும். மேலும் மனைவியின் தேவை நிறைவேற்றபடாமலேயே கணவன் தன் தேவையை முடித்துக் கொண்டு விடுவான். எச்சரிக்கை!

3. நேரம் வாய்க்கும்போதெல்லாம் – மனைவியைக் கட்டிப்பிடித்துக் கொள்ளுங்கள். – அது சமையல் அறையாக இருந்தாலும் சரியே! தனிமை கிடைக்கும்போதெல்லாம் கட்டியணைத்துக் கொஞ்சுங்கள்!

4. பாலுறவில் உங்கள் துணைக்கு என்னென்னவெல்லாம் பிடிக்கும் என்பதை வெளிப்படையாகப் பேசித்தெரிந்து கொள்ளுங்கள். தயக்கம் வேண்டாம் என்று உங்கள் துணையை ஊக்கப் படுத்துங்கள்.

5. நான்கு மாதங்களுக்கு மேலாக உங்கள் மனைவியைப் பிரிந்து செல்ல வேண்டாம்! அது எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் சரி! ஷரீஅத்தில் அதற்கு இடமில்லை!

6. சந்தேகங்களை – உடனுக்குடன் மார்க்க அறிஞர்கள் அல்லது திருமண ஆலோசகர்களை அணுகி – விளக்கம் பெற்றுக் கொள்ளுங்கள். பாலுறவு குறித்து பல தவறான “நம்பிக்கைகள்” குறிப்பாக கணவன்மார்களிடத்தில் உண்டு. இவை களையப்பட வேண்டும்.

7. ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் உணவுப்பழக்கங்களைக் கை விடுங்கள். குறை ஏற்படின் தகுந்த மருத்துவரை மட்டும் அணுகுங்கள்.

8. உடலை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். மனைவியர் தம் கணவன்மார்களுக்காகத் தங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். எத்தனை வயதானாலும் சரியே! அலட்சியம் வேண்டாம்.

9. படுக்கையறையில் விவாதங்கள் வேண்டாம்! ஒரே ஒரு மிகச்சிறிய சொல் கூட ஒரு இரவையே வீணாக்கி விடும்.

10. பாலுறவு – உங்கள் இல்லறத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்பதை எப்போதும் மறந்து விட வேண்டாம்.

11. அனைத்து விஷயங்களிலும் கணவன் மனைவி இருவரும் நெருக்கமான நண்பர்களாக (intimate friendship) வாழுங்கள்.

12. திருமண உறவுக்கு அப்பால் பாலுறவை நாடி விடாதீர்கள்; ஏனெனில் அது வெறும் இரண்டு உடல்களின் சேர்க்கை மட்டுமே! ஆனால் திருமண வரம்புக்குட்பட்ட உறவு என்பது இரண்டு உடல்களை மட்டும் சேர்த்து வைப்பது அல்ல! இரண்டு இதயங்களையும் சேர்த்து வைப்பது தான்!

No comments:

Post a Comment