Thursday, April 24, 2014

நீங்கள் இன்னும் சின்னஞ்சிறுசுகள் அல்ல!

சுன்னத்தான இல்லறம்:

(பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாமா?)

இஸ்லாமிய அறிஞர் ஒருவரிடம் பின் வருமாறு ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது:

கணவனின் பெற்றோர்களும், மனைவியின் பெற்றோர்களும் எந்த அளவுக்கு தங்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாம்?

ஒளிவு மறைவின்றி அந்த அறிஞரிடமிருந்து வந்த பதில் இதோ:


தலையிடுதல் கூடவே கூடாது! தங்களுடைய பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடுவதற்கு இரு பெற்றோர்களுக்கும் எந்த ஒரு உரிமையும் கிடையாது! ஒரு திருமணத்தை நாசம் செய்வதற்கு இதனை விட வேறொன்றும் கிடையாது!

பெற்றோர்கள் தங்கள் திருமண வாழ்வில் (மட்டும்) கவனம் செலுத்தட்டும். உங்களுடைய "குழந்தைகளுக்கு" நீங்கள் திருமணம் செய்து வைத்து விட்டால் - அவர்கள் இன்னும் "சின்னஞ்சிறுசுகள்" அல்ல! அவர்களை அவர்கள் வழிக்கு விட்டு விடுங்கள்! அவர்களுடைய "திருமண மாளிகையை" அவர்களே கட்டி எழுப்பிக் கொள்ளட்டும்! அவர்களும் வயதுக்கு வந்து விட்ட பெரியவர்கள் (adults) தான்! அதனால் தானே நீங்கள் அவர்களுக்குத் திருமணமே செய்து வைத்தீர்கள்?

இங்கே நம் சமூகத்தில் உள்ள பெற்றோர்களுக்கு (குறிப்பாக அம்மாக்களுக்கு) ஒரு பெரிய "சங்கடம்" என்னவென்றால் - தங்களின் மகனுக்குத் திருமணம் ஆகி ஒரு மருமகள் வீட்டுக்கு வந்து விட்டால் - தான் "அவசியமற்ற ஒரு பிறவியாக" ஆகி விட்டது போல் அஞ்சுகிறார்கள்! இந்த அச்சத்தினால் - "தன் மகனிடமிருந்து தன்னைப் பிரிக்க வந்திட்ட எதிரியாக" தனது மருமகளைப் பார்க்கிறார்கள்.

மகனை உங்கள் பக்கம் வைத்துக் கொள்வதற்காக - நீங்கள் உங்கள் மருமகளையே ஒரு எதிரியாக்கி அதில் வெற்றி பெற்றாலும் நீங்கள் தோற்று விட்டீர்கள்! அதில் நீங்கள் தோற்று விட்டாலும் உங்களுக்குத் தோல்வி தான்! என்னவாயினும் தோல்வி உங்களுக்குத்தான்!

எனவே "அவர்களை அவர்கள் வழியே விட்டு விடுங்கள்! அவர்கள் திருமண வாழ்வில் குறுக்கிடாதீர்கள்! ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் மகனையும் மருமகளையும் போய்ப் பார்த்து வாருங்கள்! வருடத்துக்கு ஒரு முறை என்றால் அது இன்னும் நல்லது! (என்ன விழிக்கிறீர்கள்?)

தொலைபேசியில் பேசினால் ஒரு ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேசாதீர்கள்! கம்ப்யூட்டர் உரையாடல்களை எல்லாம் குறைத்துக் கொள்ளுங்கள். மகளிடம் பேசினால், "சந்தோஷமாக இருக்கிறாயா?" என்று மட்டும் கேட்கவே செய்யாதீர்கள். "அவர் இன்னின்ன விஷயம் குறித்து என்னென்ன சொன்னார்?" என்றெல்லாம் துறுவிக் கொண்டிருக்காதீர்கள்.

இளம் மனைவியரே! உங்கள் அம்மாக்கள் இப்படி எதையாவது உங்களிடம் கேட்டால் - "சாரிம்மா! அவர் சொல்வதை எல்லாம் உன்னிடம் சொல்ல முடியாதம்மா!" என்று அழகாக மறுத்து விடுங்கள்! திருமணம் ஆன பின்னர், கணவனுக்கே முன்னுரிமையும் முதல் உரிமையும்! இப்படிச் சொல்வதால் உங்கள் பெற்றோர்களை உதாசீனப்படுத்துங்கள் என்று சொல்வதாக ஆகாது!
இளம் தம்பதியர்களுக்கு மேலும் நாம் சொல்வது:

உங்கள் பெற்றோர்கள் உங்கள் திருமண வாழ்வில் தேவையின்றி குறுக்கிட்டால் அதனை விவேகமான முறையில் தவிர்த்து விடுங்கள்! உங்கள் திருமண வாழ்வின் சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கெல்லாம், உங்கள் பெற்றோர்களிடம் ஓடிக் கொண்டிருக்காதீர்கள்!

உங்களுக்குத் திருமணம் செய்வதற்குத் தகுதி வந்து விட்டதென்றால், உங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் உங்களுக்குத் தகுதி இருக்கின்றது! உங்கள் பிரச்னைகளை உங்களால் தீர்த்துக் கொள்ள முடியாது என்றால், பின்னர் ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள்? (அதாவது நீங்கள் இன்னும் திருமணத்துக்குத் தயாராகவில்லை என்பதே அதன் பொருள்).

நாம் மேலே எழுதியிருப்பவை அனைத்தும் அந்த இஸ்லாமிய அறிஞரின் கருத்துக்களே!

(இக்கட்டுரை ஆசிரியரான எமக்கு இதில் முழு உடன்பாடு என்பதாலேயே தமிழில் மொழி பெயர்த்து இங்கே தந்திருக்கின்றோம்).

இந்தக் கருத்துக்களை என் உறவினர் வீட்டுப்பெண்மணி ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் கேட்டார்:

அப்படியானால் பிள்ளைகளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட்டு எங்களைச் செத்துப் போகச் சொல்கிறீர்களா?

காலா காலமாகப் பின்பற்றப்பட்டு வருகின்ற "கலாச்சார" வாழ்வு தரும் "சுகத்தை" அனுபவித்துக் கொண்டு அடுத்த தலைமுறையையும் அதன் அடிப்படையிலேயே வார்த்தெடுக்க விரும்பும் இத்தகைய பெற்றோர்கள் இஸ்லாம் காட்டித் தரும் வழிகாட்டுதல்களை முற்றிலும் புறக்கணித்து விடுகிறார்கள்!

பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்த பிறகு பெற்றோர்கள் பிள்ளைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்; பிள்ளைகள் பெற்றோர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்; இதில் கணவன்-மனைவி உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப் பட வேண்டும் - என்பதெல்லாம் இஸ்லாத்தின் அடிப்படையில் விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள்

இன்ஷா அல்லாஹ் விவாதிப்போம் - அழகிய முறையில்!

No comments:

Post a Comment