Sunday, April 6, 2014

இஸ்லாத்தில் ஆண் ஆதிக்கம் உண்டா? - பகுதி 1

சுன்னத்தான இல்லறம்: 

ஆண்கள் என்ன உயர்ந்தவர்களா?

ஒரு கணவன்-மனைவி. திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் தான் ஆகின்றன. ஆனாலும் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்திடவில்லை. மனைவி சொல்கிறாள்: என் கணவன் என்னிடத்தில் ஒரு “அதிகாரியைப் போல் நடந்து கொள்கிறார்; என்னை அவமானப்படுத்துகிறார். என்னை மதிப்பதே இல்லை. கேட்டால் தான் ஒரு ஆண் மகன் என்றும் ஆண்களுக்கே இஸ்லாம் உயர்வைத் தந்துள்ளது என்றும் அதற்கேற்பவே தான் நடந்து கொள்வதாகவும் சொல்கிறார்.”


முஸ்லிம் கணவன்மார்களில் பெரும்பாலோரும் இப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்:

“நாம் தான் குடும்பத்தின் தலைவர்கள். நாம் சொல்வதைத் தான் மனைவி கேட்க வேண்டும். ஏன், எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்டிட அவர்களுக்கு அனுமதி இல்லை. மார்க்கமும் இவ்வாறு தான் கணவன்மார்களுக்கு இந்த உயர்வையும் அதிகாரத்தை வழங்கியுள்ளது.”

ஆனால் – இது மிகவும் தவறான ஒரு கண்ணோட்டம்!

பெண்களை விட ஆண்களே உயர்ந்தவர்கள் என்றால், ஆண்களுக்கே எல்லா உரிமைகளும் சலுகைகளும் என்றால், குடும்பத்தில் எல்லா விஷயங்களிலும் எதேச்சையாக முடிவெடுப்பவர்கள் ஆண்கள் தாம் என்றால், அவர்கள் தாங்கள் வைத்ததே சட்டம் என்று கருதிக் கொண்டால், கணவனும் மனைவியும் எவ்வாறு “உற்ற நண்பர்களாக” விளங்க முடியும்? உற்ற துணைவர்களாக விளங்கிட முடியும்?

முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; (9:71)

இவ்வசனம் முஃமினான கணவன்-மனைவி இருவருக்கும் பொருந்தும் தானே?

“அவர்களுடன் மிக நெருங்கிய உற்ற நண்பர்களாக நடந்து கொள்ளுங்கள்”(4:19)

கணவனும் மனைவியும் நெருங்கிய நண்பர்களே எனும்போது ஆண்கள் தங்களை உயர்ந்தவர்களாக எப்படிக் காட்டிக்கொள்ள முடியும்?

“அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; (2: 187)

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடையாக விளங்கிட வேண்டும் எனும்போது – இருவருக்கும் இங்கே சம அந்தஸ்தினை உயர்ந்தோன் அல்லாஹ் வழங்கிடவில்லையா?

கணவனுக்கு மனைவி கண்குளிர்ச்சி என்பது போலவே மனைவிக்கும் கணவன் கண்குளிர்ச்சியாக விளங்கிட வேண்டும் என்று இருவருக்கும் இறைவன் துஆ கற்றுத்தந்திடவில்லையா?

பின்னர் எப்படி ஆண்கள் தங்களை உயர்த்திக் கொள்ள முடியும்?

உண்மைதான்! கணவன் தான் குடும்பத்தின் தலைவன் (அமீர்) என்பது உண்மையே!

“ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளியாவார். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார். பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளது பொறுப்புக்குட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்…. ” (ஸஹீஹுல் புகாரி- 2558)

ஆனால் குடும்பத்தின் பொறுப்பு (guardianship) ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் ஆண்களே உயர்ந்தவர்கள் (gender superiority) என்றாகி விடுமா? ஒரு போதும் ஆகாது!

உயர்வையும் சிறப்பையும் அல்லாஹு தஆலா ஆண்-பெண் பாலைப் பொறுத்து வழங்குவதே இல்லை!

இதனை சற்று ஆழமாக நாம் பார்த்திட வேண்டியுள்ளது. பின் வரும் இறை வசனங்களை சற்று நிதானமாகப் படித்து சிந்தியுங்கள்:

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்……… (4:34).

மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்; ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு; (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு; (4:32)

மேற்கண்ட இரண்டு இறை வசனங்களிலும் – “அல்லாஹ் சிலரை சிலரை விட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான்” என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. இந்த “மேன்மைப்படுத்துதல்” என்பது திருமறையில் வேறு சில இடங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது எதனைக் குறிக்கின்றது என்றால் -

அல்லாஹு தஆலா ஒரு சிலருக்கு வேறு சிலரை விட சிலவற்றை சற்று அதிகமாக “வெகுமதியாக” (gifts) வழங்கியிருக்கின்றான்.

இது எதற்காக என்றால் அல்லாஹு தஆலா எவைகளை ஒருவருக்கு வெகுமதியாக வழங்கியிருக்கின்றானோ அவற்றை (திறமைகள், ஆற்றல்கள்) பயன்படுத்திட வேண்டிய முறையில் பயன்படுத்தி அல்லாஹு தஆலாவின் திருப் பொருத்தத்தை அவர் “சம்பாதித்துக் கொள்ள வேண்டும்”! அவ்வளவு தான்!

இங்கே நாம் கவனித்திட வேண்டியது என்னவெனில்-

மனிதர்கள் என்ற அடிப்படையில் கணவனும் மனைவியும் ஒரே நேர்கோட்டில் தான் நிற்கிறார்கள்!

குடும்பத்தின் பொறுப்பாளர்கள் என்ற அடிப்படையிலும் கணவனும் மனைவியும் சம அந்தஸ்தில் தான் இருக்கின்றார்கள்!

இறைவனுக்கு முன்னால் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் எனும் அடிப்படையிலும் அவர்கள் சமமானவர்களே!

இறைப் பொறுத்தத்தைச் சம்பாதித்திடும் இலக்கில் முன்னேறிச் சென்றிட வேண்டும் எனும் ஊக்கத்திலும் அவர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அன்று!

அல்லாஹு தஆலா அவர்களுக்கு வழங்கியுள்ள தனிப்பட்ட ஆற்றல்களில் மட்டுமே அவர்களுக்குள் வேறுபாடு! இந்த வேறுபாடு ஒருவரை விட ஒருவர் தம்மை உயர்த்திக் கொள்வதற்காக நிச்சயமாக அன்று!

உயர்வும் கண்ணியமும் எதனைப் பொறுத்தது?

உங்களில் எவர் மிகவும் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். (49:13)

மேலும் எழுதுவோம் இன்ஷா அல்லாஹ்...

No comments:

Post a Comment