Thursday, April 24, 2014

மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மனநல நோயாளிகள் இவர்கள்!

சுன்னத்தான இல்லறம்: 

(பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாமா?)

சென்ற பதிவில் நாம் எழுதியிருந்த உதாரணச் சம்பவங்களை வைத்து எல்லாப் பெற்றோர்களுமே இப்படித்தானோ என்று நினைத்து விட வேண்டாம்! ஒரு சில நல்ல பெற்றோர்களும் நமக்கு மத்தியில் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட நல்ல பெற்றோர்கள் நம்மிடம் மிகக் குறைவு என்பதே வருத்தத்துக்குரிய கசப்பான உண்மை!


இறையச்சம் மிக்க ஒரு சில பெற்றோர்களை விட்டு விட்டு, நம் முகத்தை சற்றே திருப்பி நம் சமூகத்தில் இருக்கும் பெரும்பாலான தாய்மார்களைப் பார்த்தால் - ஒரு தாய் இப்படியெல்லாம் கூட நடந்து கொள்வாரா என்று வியக்கும் அளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டு அமைந்திருக்கின்றன! இத்தகைய மனிதத் தன்மையற்ற தாய்மார்களைப் பற்றித்தான் நாம் ஆய்வு செய்திட இருக்கின்றோம்.

இப்போது கொஞ்சம் உளவியல். அதாவது - psychology!

மகள்கள் விஷயத்தில் ஒரு விதமாக நடந்து கொள்ளும் தாய்மார்கள் மகன்கள் விஷயத்தில் மட்டும் வேறொரு விதமாக ஏன் நடந்து கொள்கிறார்கள்?

நாம் இதற்கு முன்னர் empathy பற்றி சில கட்டுரைகளில் எழுதியிருக்கின்றோம். அடுத்தவர் நிலையில் நம்மை வைத்து சிந்தித்தால் அவருடைய உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள முடியும். இதற்கு ஆங்கிலத்தில் empathy என்று பெயர்.

இவ்வாறு மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்வது நபி வழியாகும். நபியவர்கள் மற்றவர்கள் உணர்வுகளுக்கு எந்த அளவுக்கு மதிப்பளிப்பவர்கள் என்பதை சில நபிமொழிகளைக் கொண்டு ஆய்வோம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக்கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக்கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ‘ஒரு பிடி அல்லது இருபிடிகள்’ அல்லது ‘ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள்’ உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார். (ஸஹீஹுல் புகாரி)

இன்னொரு நபிமொழியைப் பார்ப்போம்:

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”நீங்கள் மூவர் இருந்தால் ஒருவரைத் தவிர்த்து இருவர் மட்டும் உரையாட வேண்டாம், நீங்கள் மக்களுடன் கலக்கும்வரை. ஏனெனில் அது மூன்றாமவரைக் கவலையில் ஆழ்த்திவிடும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இந்த மனநலம் சார்ந்த நற்பண்பை குழந்தைகளுக்கு ஊட்டி வளர்த்திட வேண்டியது பெற்றோர் கடமை!

இந்தப் பண்பு எப்படிப்பட்டவர்களை உருவாக்கிடும்?

இந்த நற்பண்பு அடுத்தவர் மீது அக்கரை காட்டுபவர்களை உருவாக்கிடும்! (care for others); இந்த நற்பண்பை உடையவர்கள் அடுத்தவர்களுக்கு எந்தத் தீங்கையும் செய்திட மாட்டார்கள்.

நியாய உணர்வு இவர்களிடத்தில் மிகைத்திருக்கும்; இவர்கள் - நியாய உணர்வு அற்றவர்களை - அவர்கள் தங்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் - விரும்பிட மாட்டார்கள்! எதிரியாக இருந்தாலும் அவர்கள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துப்பேசிடத் தயங்க மாட்டார்கள். எப்போதும் இவர்கள் நியாயத்தின் பக்கமே நிற்பார்கள்!

இவர்கள் பொது நலம் மிக்கவர்களாக விளங்குவார்கள்! சமூக சேவை செய்பவர்களாக இருப்பார்கள்! நன்றி உடையவர்களாக இருப்பார்கள்!

அடுத்தவர் உணர்வைப் புரிந்து கொண்டு செயல் பட உதவுகின்ற empathy எனப்படும் இந்த நற்பண்பு இல்லாதவர்கள் எப்படிப்பட்டவர்களாக விளங்குவார்கள்?

நியாய உணர்வு சுத்தமாக இவர்களிடத்தில் இருக்காது; நியாயம் பேசுபவர்களை இவர்களுக்குப் பிடிக்காது! நியாயம் பேசுபவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் அவர்களை இவர்கள் விரும்பிட மாட்டார்கள்.

குழு உணர்வே இவர்களிடத்தில் மிகைத்திருக்கும்! தாங்கள் செய்வதையெல்லாம் நியாயப் படுத்துவார்கள்!

சுயநலம் மிக்கவர்களாக விளங்குவார்கள்! இத்தகையவர்களிடம் "உண்மையான நட்பை" எதிர்பார்க்க முடியாது! நயவஞ்சகத்தனமே இவர்களிடத்தில் குடிகொண்டிருக்கும்!

இந்த நற்பண்பு இல்லாதவர்கள் அடுத்தவர்களுக்கு எந்தத் தீங்கையும் செய்திடத் தயங்க மாட்டார்கள். சில சமயங்களில் குற்றம் (crime) புரிவதற்குக் கூடத் தயங்க மாட்டார்கள். சதி செய்வார்கள்.

குற்றவாளிகளின் மனநிலையை ஆய்வு செய்பவர்கள் சொல்வது: lack of empathy leads to crimes! அதாவது அடுத்தவர் உணர்வுகளை ஒரு பொருட்டாகக் கருதாதவர்கள் தான் குற்றவாளிகளாக மாறுகிறார்கள்.

இத்தகையவர்கள் என்னென்ன குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் தெரியுமா?

கற்பழிப்புக் குற்றங்கள், குழந்தைகள் பலாத்காரம் (child molesters) மற்றும் குடும்ப வன்முறை (domestic violence) இவற்றில் ஈடுபடுபவர்கள் அனைவருமே அடுத்தவர் உணர்வைப் புரிந்து கொள்ள மறுப்பவர்கள் தாம்.

இவர்களால் பாதிப்புக்குள்ளானவர்கள் (victims) எப்படிப்பட்ட உணர்வுகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள இயலாதவர்கள்; அல்லது புரிந்து கொள்ள மறுப்பவர்கள்.

தங்களுக்குத் தாங்களே, தாங்கள் செய்கின்ற கொடுமையான குற்றங்களை நியாயப் படுத்திக் கொள்வார்களாம்.

குழந்தையை மானபங்கப் படுத்துபவன் அதனை எப்படி நியாயப் படுத்துகிறான் தெரியுமா?

"இதுவும் ஒரு விதமான அன்பு செலுத்துதல் தான்!" (just showing love!)

"அந்தக் குழந்தைக்கு நான் செய்வது பிடிக்கவில்லை என்றால் என்னைத் தடுத்திருக்கும் தானே? தடுக்கவில்லையே!"

வீட்டில் மனைவியையும் குழந்தைகளையும் அடித்து நொறுக்குபவன் கூட அதனை எப்படி நியாயப் படுத்துகிறான்?

"இது ஒரு வகையில் "அவர்களை சீர்திருத்திடத் தான்!" (this is just good discipline!)

இப்படிப்பட்டவர்கள் ஒரு விதத்தில் "மனநலக் குறைபாடு" உடையவர்களே!

சரி, இப்போது நம் விஷயத்துக்கு வருவோம். பெற்றோர்கள் தங்கள் மகனின் இல்லற விஷயங்களில் தேவையின்றித் தலையிடுவதை எவ்வாறு "நியாயப் படுத்திக்" கொள்கிறார்கள் தெரியுமா?

"என் மகள் மட்டும் அங்கே கொடுமைப் படுத்தப் படுகிறாளே! நான் இவளை அந்த அளவுக்கா கொடுமைப் படுத்துகிறேன்?"

"நம் மகளுக்கு நாம் வாரி வாரிக் கொடுத்திருக்கும்போது, நம் மகனுக்கு வாங்குவதில் என்ன தப்பு?"

"என் மகள் அவள் மாமியார் வீட்டில் எவ்வளவு வேலை பார்க்கிறாள் தெரியுமா? என் மருமகள் மட்டும் இங்கே சுகமா தூங்க விட்டு விடுவோமா?" (தனியொரு சம்பவமே இருக்கிறது; பின்னர் பகிர்ந்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ்)

இப்போது சொல்லுங்கள்! தங்கள் செயல்களை நியாயப் படுத்திக் கொண்டு பெரும் குற்றங்களைச் செய்பவர்கள் மன நலக் குறைபாடு உடையவர்கள் என்றால் - அதே போன்று தங்கள் செயல்களை நியாயப்படுத்திக் கொண்டு கணவன் மனைவியர் உரிமைகளைப் பறித்திடும் பெற்றோர்களும் மன நலக்குறைபாடு உடையவர்கள் தானே?

இது தான் நாம் எடுத்துக் கொண்ட பிரச்னையின் ஆணி வேர்!

அதாவது - அடுத்தவர் உணர்வுகளுக்கு எந்த மதிப்பும் அளிக்காத மனநலக் குறைபாடே (lack of empathy) பிரச்னையின் ஆணிவேர்!

சரி! நமது பெற்றோருக்கு இந்த empathy எனும் உணர்வு இருக்கிறதா இல்லையா என்பதை எப்படி அறிவது?

No comments:

Post a Comment