Thursday, May 23, 2013

உங்கள் மனைவியின் நிலையில் நீங்கள் இருந்தால்...?

ஆங்கிலத்தில் Empathy என்று ஒரு அருமையான சொல்.

Empathy என்றால் என்ன?

To be empathic is having the ability to identify with and understand another person's situation, feelings, attitudes, or motives.

ஒருவர் - மற்ற இன்னொருவரின் நிலையிலிருந்து கொண்டு அவருடைய சூழ்நிலைகளையும், உணர்வுகளையும், மனோபாவத்தையும், எண்ணங்களையும் புரிந்து கொள்ளும் தன்மைக்கு empathy என்று பெயர்.
இந்தத் தன்மையை மிக அழகாக விளக்குகிறது ஒரு கதை.


இதோ அந்தக் கதை!

அது ஒரு குளிர்காலம். அது ஒரு சிறிய நகரம். அங்கே ஒரு சமூக நல மையம். அங்கே சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்! அந்நகரத்தில் வீடில்லாதோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்தும், அதற்கு தாங்கள் என்ன செய்திடலாம் என்பது குறித்தும் தான் பேச்சு!

பல்வேறு கருத்துக்களை முன் வைத்து கவலையுடன் அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென்று கதவைத் திறந்து கொண்டு ஒரு வயதான மூதாட்டி உள்ளே நுழைந்தார். வளைந்து விட்ட முதுகு. முகத்தில் களைப்பு. கந்தல் துணிகளே அவருடைய ஆடைகள்.

சேவை மையத்தின் தலைவி வியப்புடன் கேட்டார்: "என்ன உதவி வேண்டும் உங்களுக்கு?"

"முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் - இவ்வாறு அனுமதி இன்றி உள்ளே நுழைந்து உங்களுக்குச் சிரமம் தந்ததற்காக! இங்கே மிக அருகில் உள்ள இராணுவ மையம் எங்கிருக்கின்றது என்று உங்களால் சொல்ல முடியுமா? எனக்கு அங்கே போய் ஒரு ஜோடி காலணிகள் கிடைக்குமா என்று பார்த்திட வேண்டும்?"

அந்த மையத்தின் தலைவி முதலிலேயே பார்த்து விட்டார் - அந்த மூதாட்டியின் பாத அணிகள் இரண்டிலும் நிறைய ஓட்டைகள்! எந்த நேரத்திலும் அவை பிய்ந்து விடும் நிலையில்.

"உங்கள் அளவு என்னம்மா?" - கேட்டார் அந்தத் தலைவி.

"எட்டரை அம்மா!' என்றார் மூதாட்டி.

உடனே அந்தத் தலைவி கீழே குனிந்து தனது காலணிகளைக் கழற்றி அவர் கையில் கொடுத்து, "இது உங்களுக்கு சரியாக இருக்கிறதா, பாருங்கள்", என்றார்.

"இதனை நான் எப்படி அணிந்திட முடியும்? இது விலை உயர்ந்த புத்தம் புதிதான காலணியாக அல்லவா இருக்கிறது!" என்றார் மூதாட்டி.

தலைவி, "பரவாயில்லை, போட்டுப் பாருங்கள்!" என்றார்.

அந்த மூதாட்டி அந்த புத்தம் புதிய காலணிகளை அணிந்து பார்க்கிறார். "என்ன ஒரு மிருதுவாக கதகதப்பாக இது இருக்கின்றது!" என்று வியக்கிறார். லேசான ஒரு புன்சிரிப்பு அவர் முகத்தில்.

தலைவி அம்மூதாட்டியின் கரம் பிடித்துச் சொன்னார்: "இவை உங்களுக்குத் தான்! எனக்கு வீட்டில் இன்னொன்று இருக்கின்றது!"

அந்த ஏழை மூதாட்டி நன்றி சொல்லி விட்டு அங்கிருந்து  புறப்பட்டார். "இறைவன் உங்களை வாழ்த்துவானாக!" என்று கூறியவராக.

அம்மூதாட்டி சென்றதும் அங்கே ஒரு பெரிய அமைதி! யாரும் வாய் திறக்கவே இல்லை! அனைவரும் நெகிழ்ந்து போய் விட்டனர்! ஒருவர் மட்டும் கேட்டார்:

"மேடம், ஆனால் நீங்கள் எப்படி வீட்டுக்குச் செல்வீர்கள்?" பனி கொட்டிக் கொண்டிருக்கின்றது; காலணிகள் இல்லாமல் எப்படி நீங்கள் செல்வீர்கள்?"

கருணை உள்ளம் படைத்த அந்தத் தலைவி சொன்னார்: "எனது காலுறைகள் சற்று கனமானவை தான்! பரவாயில்லை! மேலும் எனக்கு இங்கே ஒரு ஜோடி காலணியும் இருக்கத் தானே செய்கிறது!"

அந்த வயதான மூதாட்டி விட்டுச் சென்ற கந்தலான காலணியை அணிந்தவராக புறப்பட்டார் அவர் வீட்டுக்கு!

"மேடம், ஜாக்கிரதை! காலணிகள் ஓட்டையாக இருக்கின்றன! பனிப்பொழியும் பாதையில் எச்சரிக்கையுடன் செல்லுங்கள்! - என்றார் இன்னொருவர்.

புன்சிரிப்புடன் பதில் சொன்னார் அந்தத் தலைவி: "ஆமாம்! நான் பார்த்துக்கொள்கிறேன்; வயதான ஏழை மூதாட்டி ஒருவர் = ஓட்டைக் காலணிகளை அணிந்து கொண்டு எப்படித் தான் நடப்பார் என்பதை நான் அனுபவித்துப் பார்த்திட முடியும் அல்லவா?

ஆம்! இது தான் இரக்கமுள்ள இதயம்!

இந்தக் கதை கணவன் மனைவியருக்கு மிக அற்புதமான ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது.

இல்லறத்தில் பிரச்னை! கணவனும் மனைவியும் ஆலோசனை கேட்க வருகின்றனர். அங்கே கணவனும் மனைவியும் ஆலோசகரிடம் என்ன சொல்வார்கள் தெரியுமா?

கணவன் என்ன சொல்வார்?

தனக்கும் தன் மனைவிக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை அடுக்குவார்; தன் மீது தவறே இல்லை என்று அடித்துப் பேசுவார். மனைவி செய்கின்ற தவறுகளைப் பட்டியல் போடுவார். பேசுவார், பேசுவார், அடுக்கிக் கொண்டே போவார் மனைவியின் குறைகளை!


பதிலுக்கு மனைவி என்ன சொல்வார்?

கணவனுக்கு சற்றும் தான் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்திடும் வண்ணம் அவரும் அடுக்குவார் - கணவனின் குறைகளை!

ஆலோசகர் (counselor) கேட்பார்: "உங்கள் மனைவியின் நிலையில் நீங்கள் இருப்பதாக எண்ணிக் கோண்டு - உங்கள் மனைவியைப் பற்றிப் பேசுங்கள்" என்றாலோ... அல்லது "உங்கள் கணவனின் நிலையில் உங்களை வைத்துக்கொண்டு உங்கள் கணவரைப் பற்றிப் பேசுங்கள்" என்றாலோ.... பதில் சொல்வதற்குத் தடுமாறுகிறார்களாம். இருவருமே அமைதியாகி விடுகிறார்களாம்!

அங்கே பேசுவதற்கு ஒன்றும் இருப்பதில்லை! ஏனெனில் ஒருவர் மற்றவரின் மன நிலையில் இருந்து கொண்டு பிரச்சனைகளைப் பார்த்திடும் போது - அவைகளெல்லாம் பிரச்சனைகளே இல்லை என்றாகி விடுகின்றன!

எனவே தான் சொல்கிறோம். கணவன் மனைவியருக்குள் பிரச்சனைகள் தோன்றினால் - உடனே உங்கள் துணைவரின் நிலையில் உங்களை வைத்து சிந்தியுங்கள். உங்கள் கண்ணோட்டம் முழுவதும் மாறிப்போய் விடும்!

இரக்க உணர்வு மேலிடும்! குறைகளைப் பொறுத்துக் கொள்வீர்கள்! மன்னிக்கத்தொடங்கி விடுவீர்கள்! அன்பும் நேசமும் மேலோங்கும்!

அங்கே இருவரும் சேர்ந்தே பிரச்சனையைத் தீர்ப்பது எப்படி என்று பேசத் தொடங்குவார்கள். கருத்துக்கள் அங்கே தாராளமாக பரிமாறப்படும்!

ஒருவர் மற்றவரின் மன நிலையிலிருந்து கொண்டு பிரச்சனைகளைப் பார்த்திடும்போது கருணை தானாகவே சுரக்கும் - அந்த சமூக மையத்தின் தலைவியைப் போல!

இத்தகைய கருணை உள்ளம் கணவன் மனைவி இருவருக்கும் வேண்டும்!

"கருணை உணர்வு எதனையும் அழகாக்கி விடும்!" (முஸ்லிம்)

ஆம்! கருணை உணர்வு திருமண உறவையும் அழகாக்கிவிடும்! தேவை - Empathy மட்டுமே!

கருத்து வேறுபாடுகள் தலைதூக்கும்போது!

கணவன்-மனைவி இருவர். என்னதான் எல்லாப் பொருத்தங்களையும் பார்த்துப் பார்த்துத் திருமணம் முடித்தாலும் ஆண் என்பவன் வேறு, பெண் என்பவள் வேறு என்பதால், இருவரும் வளர்ந்து வந்த சூழல்கள் வேறு வேறு என்பதால் இருவரின் ஆளுமையும் வேறு வேறு என்பதால் இல்லற வாழ்வில் கருத்து வேறுபாடுகள் வரத் தான் செய்யும்.


அது ஏன் இப்படி என்று கேட்க வேண்டியதில்லை. அது அப்படித்தான்!

கருத்து வேறுபாடுகள் எந்தெந்த விஷயங்களில் தலையெடுக்கலாம்?

பொருளாதாரம் காரணமாக இருக்கலாம். அல்லது மாமியார்-நாத்தனார் காரணமாக இருக்கலாம். குழந்தை வளர்ப்பு குறித்ததாக இருக்கலாம். இஸ்லாமிய மரபுகளைப் பேணுவதில் இருக்கலாம். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் இருக்கலாம். அது சிறியதாகவும் இருக்கலாம். பெரியதாகவும் இருக்கலாம்.

ஆனால் கருத்து வேறுபாடு தோன்றி விட்டால் அடுத்து கணவன் மனைவியர் என்ன செய்திட வேண்டும். அது குறித்து மனம் திறந்து பேசிட வேண்டும்.

ஆனால், பல கணவன் மனைவியர் அவ்வாறு பேசிடுவதில்லை. மனதுக்குள் போட்டு அடக்கி வைத்திருப்பார்கள். கோபம் வரும். சோகம் தலையெடுக்கும். அநியாயம் இழைக்கப்பட்டதாக, அவமானப்படுத்தப் பட்டதாக, காயப்படுத்தப்பட்டதாக எண்ணுவார்கள். ஆனால் வாயைத் திறக்க மாட்டார்கள்.

இதற்குப் பெயர் தான் ஆங்கிலத்தில் Resentment என்கிறார்கள். இதனை "அடக்கி வைக்கப்பட்ட கோபம்" எனலாம். இது பாட்டிலில் அடைக்கப்பட்ட உணர்வு ஆகும். இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அழுத்தம் கொடுக்கத் தொடங்கும்.

கணவன் மனைவியரிடையே இந்த கோபம் உருவாகி வளர்ந்தால் என்ன விளைவுகளை இது ஏற்படுத்திடும்?

முதலில் தனது கணவனைப் பற்றிய அல்லது மனைவியைப் பற்றிய "உயர்ந்த எண்ணம்" அடி பட்டுப்போகும். நம்பிக்கை குறைந்து விடும். முன்னர் எவ்வாறு தமக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று அவர் எண்ணிக் கொண்டாரோ  அதே கோணத்திலேயே அடுத்து நிகழும் அனைத்து சம்பவங்களையும் கற்பனை செய்யத் தொடங்கி விடுவார்.

இங்கே ஒரு கணவன் மனைவி கதையை எடுத்துக் கொள்வோம்.

இருவருக்கும் திருமணம் ஆன போது மனைவியின் நெருங்கிய உறவினர் ஒருவர் திருமண நன்கொடையாக ஒரு தொகையை அந்தப் பெண்ணிடம் கொடுக்கிறார். ஆனால் மனைவியிடம் பணம் இருப்பது தெரிந்த கணவன் அந்தப் பணத்தை மனைவியிடம் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்டு வாங்கி முழுவதையும் செலவு செய்து விடுகிறார்.

அந்தப் பெண்ணுக்குக் கோபமோ கோபம்!

"அந்தப் பணம் என்னுடையது! அதனை இவர் எடுத்து எப்படி செலவு செய்யலாம்?" என்று தனக்குள்ளேயே அடிக்கடிக் கேட்டுக் கொள்கிறார்.

ஆனால், வேறு சில தருணங்களில், "சே! இது ஒரு பெரிய தொகையா? இவர் எனக்கு செய்கின்ற செலவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது ஒரு சாதாரண தொகை தானே! இதற்கு ஏன் போய் நான் இப்படி அலட்டிக் கொள்கிறேன்?" - என்றும் எண்ணிக் கொள்கிறார்.

இந்த சிந்தனை வட்டத்தில் சிக்கிக் கொண்ட அந்தப் பெண்மணிக்கு இது குறித்து கணவனிடம் பேசிட இயலவில்லை!

அடுத்து என்ன நடந்தது?

"நீ ஏன் பகுதி நேர வேலை ஒன்றில் சேர்ந்திடக் கூடாது?" என்று கணவன் ஆலோசனை சொல்கிறார். ஆனால் மனைவி அவரது நோக்கத்தையே சந்தேகிக்கிறார்.

கணவன், மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு மனைவியையும் அழைத்துச் செல்கிறார். போகும்போது சில பரிசுப் பொருட்களையும் வாங்கிச் செல்கிறார். மனைவி இதனையும் சந்தேகிக்கிறார். "எதற்காக இவர் இப்படி ஐஸ் வைக்கிறார்?"

மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே செல்கிறார். மனைவிக்காக செலவுகள் செய்கிறார். "இதுவெல்லாம் வெறும் நடிப்பு" என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறார்.

இவ்வாறு எவ்வளவு காலம் இந்த உணர்வுகளை அடக்கிக் கொண்டிருந்தார் இவர் தெரியுமா? நான்கு ஆண்டுகள்! பின்னர் தான் அது வெடிக்கிறது!

இவ்வாறு மவுனமானதொரு கோபம் ஏற்பட்டு, அது அடக்கப்பட்டு, அதற்கு அழுத்தம் தரப்பட்டு பின்னர் வெடித்திட ஏன் அனுமதித்திட வேண்டும்?

இந்த நிலை ஏன் ஏற்படுகின்றது என்பதை அறிந்து கொண்டால் தான் இந்நிலையிலிருந்து கணவன் மனைவியர் தம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

காரணங்கள்:

1. வெளிப்படையாகப் பேசிடத் தயக்கம். தனது கருத்துக்களில் உண்மை இருக்கின்றது என்று தெரிந்தால் பேசிவிட வேண்டியது தானே?

2. தம்மை ஒரு பலிகடாவாக (victim) கற்பனை செய்து கொள்தல்.

3. மற்றவர்களுடைய சின்னச் சின்ன சொற்களுக்கும் செயல்களுக்கும் கூட பெரிதாக அலட்டிக் கொள்தல்; தப்பர்த்தம் செய்தல்.

4. தன்னைப் பாதுகாக்க யாரும் இல்லை என்ற கழிவிரக்க உணர்வு.

5. எல்லாவற்றையும்  "தீய கண்ணோட்டத்துடனேயே" பார்த்துக் கொண்டு மற்றவர் செய்கின்ற நன்மைகளுக்குக் கூட  நன்றி செலுத்தத் தவறுவது.

இதற்குத் தீர்வு என்ன?

1 உங்கள் துணைவரின் எல்லா சொல் செயல்களையும் "தவறான கண்ணோட்டத்தில்" துருவிக் கொண்டிருக்காதீர்கள்.

2. உங்கள் எல்லாவிதமான் உணர்வுகளையும் உங்கள் துணைவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்- இதைத் தொடர்ந்து செய்து வாருங்கள்.

3. துணைவரின் குறைகளை மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

4. உங்களை நீங்களே - "நான் கண்ணியமானவன்!" என்று சொல்லிக் கொள்ளுங்கள். உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ளுங்கள்.

5. அல்லாஹ்வின் அருளை நாடி துஆ செய்து கொண்டே இருங்கள்.

இனிக்கட்டும் இல்லறம்!

ஆண் - பெண் உளவியல் வேறுபாடுகள்!

உடலளவில் மட்டுமல்ல, மனத்தளவிலும் கூட பெண்கள் ஆண்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்களே என்பது ஒரு மகத்தான உளவியல் உண்மை ஆகும்!

அறிவாற்றலில், சிந்திக்கும் முறையில், உணர்வுகளைப் புரிந்து கொள்வதில்  ஆண்களும் பெண்களும் முற்றிலும் வேறுபட்டவர்கள்!


ஒரு பெண்ணின் ஒவ்வொரு செல்லும் (cell) பெண்மையின் முத்திரையைத் தாங்கித்தான் நிற்கிறது! அது போலவே ஒரு பெண்ணின் ஒவ்வொரு உறுப்பும் கூட ஆண்களிடமிருந்து வேறுபட்டே காணப்படுகின்றது. ஏன்? பெண்களின் நரம்பு மண்டலத்துக்குக் கூட பெண்மையின் சின்னம் உண்டு!

இதனைத் திருமணம் முடிக்கின்ற ஆண்களும் பெண்களும் தெளிவாக விளங்கியிருக்க வேண்டும்.

இது குறித்த அறிவு ஒன்றே கூட பல இல்லற சிக்கல்களை எழ விடாமல் தடுத்து விடும்! தவறான புரிதல்கள் (misunderstanding) குறைந்து விடும்.

எனவே அந்த வேறுபாடுகளைக் குறித்த சில கருத்துக்களை மட்டும் இங்கே பார்ப்போம்.

ஆண்களின் அறிவாற்றல் வேறு; பெண்களின் அறிவாற்றல் வேறு! பெண்கள், ஆண்களின் வளைந்த விலா எலும்பினால் படைக்கப்பட்டவர்கள் என்பதாலும், அதுவும் அந்த வளைவு என்பது அதன் மேல் பகுதியில் என்பதால் அவர்கள் ஆண்களை விட அறிவில் சற்றே குறைந்தவர்கள் என்பதும் இஸ்லாத்தின் கருத்தோட்டமாகும்.

இது பெண்களைக் குறைத்து மதிப்பிடுவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது!

ஏனெனில் பெண்களுக்கென்று வேறு சில சிறப்பம்சங்களை அமைத்துக் கொடுத்திருக்கின்றான் வல்லோன் அல்லாஹ்!

அவைகளுள் ஒன்று தான் - உணர்வுகளும் உணர்ச்சிகளும்! பெண்கள் ஆண்களை விட உணர்வுகளைப் புரிந்து கொள்வதில் வல்லவர்கள். உணர்வுகளை மிகச் சரியாக வெளிப்படுத்தக் கூடியவர்கள். எந்த ஒரு உணர்வையும் வார்த்தைகளால் வடித்துக் காட்டுவதில் மிகுந்த திறன் படைத்தவர்கள்!

கணவனின் முக பாவனைகளை கவனித்தே, மனைவி கணவனின் மனநிலையை அப்படியே புரிந்து கொள்கிறார். ஆனால் மனைவியின் முக பாவனைகளை கணவன் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறான். எனவே கணவன் தானாகவே புரிந்து கொண்டு செயல்படுவார் என்று விட்டு விடாமல், மனைவியே தனது மன நிலையை வார்த்தைகளால் கணவனுக்கு விளக்கிட வேண்டும்.

அது போலவே - ஆண்கள் எந்த ஒரு சாதனையையும் தனித்தே செய்து காட்ட விரும்புபவர்கள்; தனித்தன்மை (independance) அவர்களுக்கு முக்கியம். ஆனால் பெண்கள் ஒரு குழுவாக இருந்து சாதிக்க விரும்புபவர்கள். கூட்டு உறவு (relationship) அவர்களுக்கு முக்கியம்!

ஆண்களுக்கு முடிவே (result) முக்கியம். பெண்களுக்கோ செய்முறை (process) மிக முக்கியம். ஆண்கள் தொலைபேசியில் முடிவைப் பற்றி மட்டும் பேசுவதால் சுருக்கமாகப் பேசுவார்கள். பெண்கள் விலாவாரியாக நடந்தவைகளை விளக்கிட விரும்புவதால் அவர்கள் அதிகமாகப் பேசிட வேண்டியுள்ளது. தாம்பத்திய உறவிலும் இந்தத் தன்மை பிரதிபலிக்கிறது. கணவன்மார்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது.

ஆண்களுக்கு காதால் கேட்கும் ஆற்றல் குறைவு. பெண்களுக்கு இந்த ஆற்றல் (சம வயதுடைய) ஆண்களை விட நான்கு மடங்கு அதிகம். அதனால் தான், "ஏன் கத்துகிறீர்கள்?" என்பது மனைவிமார்களின் சொல்லாடல்களுள் ஒன்று! கணவன்மார்கள் தங்கள் மனைவியிடம் மெதுவாகவே பேசலாம்!

ஆண்களுக்குப் "பார்த்தல்" பிடிக்கும். பெண்களுக்கு "நுகர்தல்" அதிகம் பிடிக்கும். மனைவியர் தோற்றத்தால் கணவனைக் கவரலாம். கணவன் மனைவிக்குப் பிடித்த வாசனை திரவியத்தை பயன்படுத்தி மனைவியைக் கவரலாம்.

ஆண்கள் தங்களுக்கு வரும் சவால்களை நேருக்கு நேர் நின்று எதிர்நோக்குபவர்கள். பெண்களோ சற்றே பின்வாங்கி மறைந்திருந்து மறைமுகமாக தாக்குதல் தொடுப்பதில் வல்லவர்கள்! வேண்டாதவர்களை ஒதுக்கி வைத்தல், அவர்கள் மீது பொய்யான வதந்திகளைப் பரப்புதல், மறைமுகமாகப் பழி வாங்குதல் எல்லாவற்றையும் பருவ வயதிலேயே கற்றுக்கொண்டு விடுகிறார்கள் இளைஞிகள்! (இறையச்சம் ஒன்றே இவர்களை இது போன்ற தீய பழக்கங்களில் இருந்து பாதுகாத்திட வல்லது).

ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதிலும், அதனைப் பயன்படுத்துவதிலும் பெண்களே சம வயதுடைய ஆண்களை விட ஆறு ஆண்டுகள் முன்னணியில் நிற்கிறார்கள். எனவே பெண்கள் தங்கள் கருத்துக்களுக்கு மொழி வடிவம் கொடுத்து தங்கள் கணவன்மார்களிடம் பேசிடுவதில் வல்லவர்களாக விளங்குகிறார்கள். ஆண்களுக்கு இது வியப்பாக இருக்கலாம்!

ஆண்களுக்கு - நடந்த ஒன்றை நினைவுபடுத்தி அப்படியே விவரிக்கின்ற (spatial memory) ஆற்றல் அதிகம். பெண்கள் மறந்து விடுவார்கள் - குறிப்பாக பண விஷயங்களிலும், பயண விஷயங்களிலும் பெண்களுக்கு நினைவாற்றல் குறைவே!

புதிதாகத் திருமணம் முடிக்கும் ஆண்களும் பெண்களும் இத்தகைய ஆண்-பெண் உளவியல் வேறுபாடுகளை அறிந்து கொள்தல் மிக அவசியம்.

இவர் நமக்குப் பொருத்தமானவர் தான்!

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே  அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)

"And among His wonders is this: He creates for you mates out of your own kind, so that you might incline towards them, and He engenders love and tenderness between you: in this, behold, there are messages indeed for people who think! "  (30:21)

இக்கட்டுரையில் மேற்கண்ட இறைவசனத்தில் இடம் பெற்றிருக்கும் "மவத்தத்" என்ற சொல்லை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

மவத்தத் என்பதற்கு தமிழில் "அன்பு", "உவப்பு", "நேசம்" என்று மொழிபெயர்த்திருக்கின்றார்கள்.

ஆங்கிலத்தில் மவத்தத் என்பதற்கு "Love" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மேலும் அகராதியில் "wadda" என்ற மூலச்சொல்லுக்கு

- to love, to like, be fond, to make friends, to show love or affection, to attract, to love each other, be on friendly terms etc.,

என்றெல்லாம் பொருள் தருகிறார்கள்.

wadud என்ற பெயர்ச்சொல்லுக்கு - favourably disposed, attached, devoted, fond, friendly என்றெல்லாம் பொருள் படுகிறது.

அல்லாஹ்வின் அழகிய பெயர்களில் ஒன்று தான் - அல் வதூத் - the Loving One என்பதுவும் இங்கே நினைவு கூறத் தக்கது.

சற்று ஆழமாக இச்சொல் தரும் கருத்தை நாம் ஆய்வோம்.

ஆணாகவும் பெண்ணாகவும் மனித இனத்தைப் படைத்த இறைவன் அவர்களுக்குள் இயல்பாகவே ஒரு ஈர்ப்புத் தன்மையை உண்டாக்கியிருக்கிறான்.

அந்த ஈர்ப்புத் தன்மை ஒரு ஆழமான நட்புக்கும், உறவுக்கும் வழி வகுக்கிறது. அந்த ஈர்ப்புத்தன்மை வெறும் உடலளவில் என்று மட்டும் இல்லாமல், இருவரின் அறிவிலும், இருவரின் இதயத்திலும், இருவரின் ஆன்மாக்களிலும் - ஒரு நெருக்கத்தை, ஒரு நட்பை, ஒரு காதலை உண்டாக்கி விடுகிறது. அந்த இருவரும் நீண்ட கால நண்பர்களாக ஆகி விடுகிறார்கள். இந்த நீண்ட கால உறவுக்கு (long term relationship) வழி வகை செய்வதே திருமணம்,

இங்கே ஒரு நபிமொழியை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

Imaam al-Bukhaari (may Allaah have mercy on him) reported in his Saheeh that ‘Aa’ishah (may Allaah be pleased with her) said: “I heard the Prophet (peace and blessings of Allaah be upon him) saying: ‘Souls are like conscripted soldiers; those whom they recognize, they get along with, and those whom they do not recognize, they will not get along with.’” (Saheeh al-Bukhaari).

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: " ஆன்மாக்கள் என்பவை பணிக்கு அமர்த்தப்பட்ட படை வீரர்களைப் போல. அவர்களில் யாரெல்லாம் ஒருவரை ஒருவர் இலகுவாக புரிந்து கொள்கிறார்களோ, அவர்கள் மிக இலகுவாக நண்பர்களாகி விடுகிறார்கள்; அவர்களில் யாரெல்லாம் முன்பின் தெரியாதவர்கள் போல் தெரிகிறாகளோ, அவர்கள் விலகிப்போய் விடுகின்றார்கள்." (புகாரி, முஸ்லிம்)

இதிலிருந்து தெரிய வருவது என்னவெனில், நம்மில் சிலர், நம்மை ஒத்த சிலருடன் பழகுவதும், நண்பர்களாகி விடுவதும், வேறு சிலரிடமிருந்து நாம் விலகி விடுவதும் இவையெல்லாம் - வல்லோன் இறைவனின் இயல்பான படைப்பின் இரகசியங்களில் உள்ளவையாகும்.

இது திருமண உறவில் இணையும் ஆண்-பெண்ணுக்கும் பொருந்தும் தானே! அதனால் தானோ என்னவோ அண்ணல் நபியவர்கள் நீங்கள் திருமணம் முடிக்க விரும்பும் பெண்ணைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று நம்மை அறிவுறுத்தியிருக்கின்றார்கள்.

மாஷா அல்லாஹ்!

இவ்வாறு ஒருவரை ஒருவர் இலகுவாகப் புரிந்து கொண்டு, "இவர் நமக்குப் பொருத்தமானவர் தான்" என்று ஒருவர்   முடிவுக்கு வந்து திருமணம் முடித்தலே சிறப்பான திருமண உறவுக்கு வழி வகுக்கும். அங்கு தான் அன்பு, நட்பு, காதல், ஈர்ப்பு, நேசம், நீண்ட கால உறவு - எல்லாம் மிக இயல்பாகவே நடந்தேறிவிடும்.

இதற்கு நபியவர்களுக்கும் அன்னை கதீஜா (ரலி) அவர்களுக்கும் நடைபெற்ற திருமணமே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

ஆனால் நமது நிலை என்ன? நமது திருமணங்கள் எல்லாம் எப்படி நிச்சயிக்கப்படுகின்றன? பொன்னும், பொருளும் தானே நமது அளவுகோள்கள்?

இயல்பான ஈர்ப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பே அளிக்கப்படாமல் நடக்கும் நம்முடைய திருமண வாழ்க்கையில் அன்பையும், காதலையும் எதிர்பார்க்க முடியுமா? இன்றைய பெரும்பாலான கணவன் மனைவியர் "பெயருக்குத் தான்" இல்லற வாழ்வை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

புதிய தலைமுறை பாடம் படித்துக் கொள்ளுமா?

இந்தக் காதல் (மவத்தத்) பற்றி நாம் நிறைய ஆய்வு செய்திட வேண்டியுள்ளது.

இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்.

Thursday, May 9, 2013

எங்கள் கணவர்களை எங்களின் கண்களுக்குக் குளிர்ச்சியாக ஆக்கி வைப்பாயாக!

நாம் அடிக்கடி கேட்கின்ற துஆக்களுள்  ஒன்று திருமறை – அத்தியாயம் 25 வசனம் 74 – ல் வரும் பின் வரும் துஆ தான்:

மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள். (25: 74)


மேற்கண்ட திருமறை வசனத்தில் “மின் அஸ்வாஜினா” / min azwaajinaa / என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு என்ன?

அஸ்வாஜினா என்பதற்கு எங்களின் மனைவியர் என்று மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. இது சரியா என்பதே நம் கேள்வி.


ஸவ்ஜ் என்பது ஒருமை. அஸ்வாஜ் என்பது பன்மை.

ஸவ்ஜ் என்பதன் முழுமையான பொருள் என்ன?

ஆங்கிலத்தில் ஸவ்ஜ் என்பதற்கு  one of a pair, partner, couple, mate, husband, wife என்றெல்லாம் மொழிபெயர்க்கப்படுகின்றது.

“ஜோடி” என்பது பொருத்தமான மொழிபெயர்ப்பாக தெரிகிறது.

தமிழில் இதற்கு – துணை, துணைவர், துணைவி – என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம்.

மேற்கண்ட திருமறை வசனத்தை -

மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் துணைவர்களிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.” -

என்று மொழி பெயர்ப்பதே சரியானது.  (அல்லாஹ்வே மிக அறிந்தவன்.)

முஹம்மது அஸத் அவர்கள் தமது ஆங்கில மொழிபெயர்ப்பில் azwaaj என்பதற்கு spouses என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.

“and who pray: “O our Sustainer! Grant that our spouses and our offspring be a joy to our eyes, and cause us to be foremost among those who are conscious of Thee!”

Spouses  என்பதற்கு துணைவர்கள் என்பதே சரியான மொழிபெயர்ப்பு!
எனவே – கணவர்கள் துஆ செய்திடும்போது “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!”  – என்றும்,

அது போலவே – மனைவியர் துஆ செய்திடும்போது “எங்கள் இறைவா! எங்கள் கணவர்களிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!” – என்றும் பொருள் எடுத்துக் கொள்ளலாம்.

துணைவர்கள் என்ற மொழிபெயர்ப்பை நாம் வலியுறுத்துவதற்கு இன்னொரு காரணம்:

அல்லாஹு தஆலா கணவனையும் மனைவியையும் இங்கே ஒரே “அந்தஸ்தில்” வைத்து துஆ கேட்கச் சொல்லியிருக்கும் அழகினை நமது மனைவிமார்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்!