Tuesday, April 15, 2014

கணவன் மனைவியருக்குள் அசைக்க முடியாத நம்பிக்கை! எவ்வாறு?

சுன்னத்தான இல்லறம்: 

கணவன் மனைவியருக்குள் அசைக்க முடியாத நம்பிக்கை என்பது இனிக்கும் இல்லற வாழ்வுக்கு மிக அவசியமான ஒன்று!

கணவன் மனைவியரின் நம்பகத் தன்மை குறைந்து விடும்போது அது உடல் நலத்தையும் கெடுக்கின்றது! மன நலத்தையும் கெடுக்கின்றது. மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் அவர்கள்.


இதுவே ஒரு தொடர்கதையானால் அது நமது மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பு லேசானதல்ல! ஹார்மோன்கள், இதயம், இதய நாளங்கள், நரம்பு மண்டலம் அனைத்தையும் பாதிப்புக்குள்ளாக்கி விடுகிறது இந்த மன அழுத்தம். வாழ்நாள் அருகி விடுகிறது அவர்களுக்கு.

அதே நேரத்தில் இன்னொரு உண்மையையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நம்பிக்கைக்குரிய கணவன் மனைவியர் – உடல் நலமும் பாதுகாக்கப்படுகிறது; மன நலமும் பாதுகாக்கப்படுகிறது என்பது தான் அது. நீண்ட நாள் வாழ்கிறார்கள் அவர்கள் – அதுவும் மகிழ்ச்சியுடன்.

எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் – என் துணையின் நம்பிக்கையை நான் பெறுவது எப்படி? நம்பிக்கை மோசம் எப்படி உருவாகிறது? அப்படி ஒன்று உருவானால் அதனை முளையிலேயே கிள்ளி எறிவது எப்படி? – ஆகியவற்றைத்தான்!

ஐந்து விஷயங்களைச் சொல்வோம்:

ஒன்று: நிறையப் பேசிட வேண்டும். மனம் திறந்து பேசிட வேண்டும். கருத்து வேறுபாடுகள் வரும்போது கூட நம் துணையின் கண்ணோட்டம் என்ன என்பதை– தெளிவான மன நிலையுடன் கேட்கத் தயாராக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பேச்சு (communication) தடைபடக்கூடவே கூடாது.

இரண்டு: ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நம் துணை எப்படிப்பட்டவர்? நம் துணையின் விருப்பங்கள் என்னென்ன? அவரது கவலைகள் என்ன? அவருக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயங்கள் என்னென்ன? பாலுறவு விஷயம் உட்பட! எல்லாவற்றையும் தெரிந்து கொள்வது அவசியம்.

மூன்று: உங்கள் துணையின் சிறப்புகளை நீங்களும் அங்கீகரிக்க வேண்டும். பாராட்ட வேண்டும். ஊரே பாராட்டும் உங்கள் துணையை! ஆனால் நீங்கள் பாராட்டா விட்டால்? உங்கள் துணையின் சிறப்புகளை நீங்கள் அங்கீகரிக்காவிட்டால், அலட்சியப் படுத்தினால், இந்நிலை தொடர்ந்து கொண்டே இருந்தால் - கணவன் மனைவியர் நம்பகத்தன்மை பறிபோய் விடும்!

நான்கு: சின்னச் சின்ன ஆசைகள் ஒவ்வொரு கணவனுக்கும் உண்டு! மனைவிக்கும் உண்டு! அன்றாடம் உண்டு! துணையின் ஒவ்வொரு ஆசையையும் தெரிந்து வைத்துக் கொண்டு – அதனை இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டிட வேண்டும். அதுவும் அன்றாடம்! உங்கள் துணைக்குச் செய்திட வேண்டிய “கடமைகளை” நிறைவேற்றினால் மட்டும் போதாது.

ஐந்து: கருத்து வேறுபாடுகள் தலை தூக்கும் தான்! கடுமையான திட்டல்கள் கூடாது; அவமானப்படுத்தும் சொற்கள் கூடவே கூடாது; பேசிப் பயனில்லை என்று ஒதுங்கி விடவும் கூடாது! நேரம் காலம் பார்த்து – பொறுமையைக் கையாண்டு, உங்கள் துணையின் நிலையில் உங்களை வைத்து சிந்தித்து, விட்டுக் கொடுக்க வேண்டியவற்றை விட்டுக் கொடுத்து ஒரு முடிவுக்கு வருவதே சாலச் சிறந்தது!

இவைகளையெல்லாம் உளவியல் அறிஞர்கள் ஒரு பக்கம் அழுத்தி அழுத்திச் சொல்லிக் கொண்டிருந்தாலும் – வருத்ததுடன் ஒன்றை நாம் சொல்ல வேண்டியுள்ளது:

மருத்துவம் படித்தோம், பொறியியல் படித்தோம். வணிகம் படித்தோம். ஆனால் கணவன் மனைவியாக மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவது எப்படி என்று படித்துக் கொடுக்காமலேயே – பொருள் பார்த்து, அழகு பார்த்து, “படிப்பையும்” பார்த்து – திருமணம் செய்து கொடுத்து விடுவோம். கஷ்டப் படுவோம்.

நிலைமை எப்போது மாறும்?

No comments:

Post a Comment