Friday, April 4, 2014

ஆமைகள் மட்டுமல்ல! மனிதர்களும் அப்படித்தான்!

சுன்னத்தான இல்லறம்: 

இது ஒரு கதை...

சிறுவன் ஒருவன் கடல் ஆமை ஒன்றைக் கண்டானாம். அவன் அதைச் சோதித்துப் பார்க்க ஆசைப்பட்டானாம். ஆனால் அதனை இவன் தொட்டவுடனேயே அந்த ஆமை தன் தலையையும் கால்களையும் தனது ஓட்டுக்குள்ளே இழுத்துக் கொண்டு விட்டதாம்.


என்னென்னவோ செய்து பார்த்தும் அந்த ஆமை தன் தலையையோ கால்களையோ வெளியே நீட்டிடவே இல்லை!

உடனே ஒரு குச்சியை எடுத்து வந்து அதனைக் குத்திப் பார்க்கலாம் என்று அதனை மீண்டும் நெருங்கினானாம்.

அப்போது அவனது மாமா அங்கே வந்தாராம். அவர், "அது அப்படி இல்லையப்பா! நீ அதனைக் குச்சியால் குத்தினாலும், அது செத்துப் போனாலும் போகுமே தவிர, அது தன் தலையையோ, கால்களையோ வெளியில் நீட்டிடவே நீட்டாது!

உடனே மாமா அந்த ஆமையை அப்படியே எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று கதகதப்பாக இருந்த அடுப்படிக்கு அருகில் சென்று அதனை வைத்தாராம்.

ஒரு சில நிமிடங்களிலேயே அந்த ஆமை, தனது தலையையும் கால்களையும் வெளியே நீட்டி ஊர்ந்து செல்லவும் ஆரம்பித்து விட்டதாம்.

அதனை ஆச்சரியத்துடன் பார்த்த சிறுவனை நோக்கி மாமா, "ஆமைகள் மட்டுமல்ல! மனிதர்களும் அப்படித்தான்!" என்றாராம்.

மாமா மேலும் சொன்னாராம்: "உன்னைச் சுற்றியிருப்பவர்களை நீ மாற்ற விரும்பினால், உனது இனிய முகத்தைக் கொண்டும், உனது கனிவான இரக்கத்தைக் கொண்டும் அவர்களின் இதயத்தைக் "குளிர வை!" அப்போது அவர்கள் தாங்களாகவே முன் வந்து தங்களை உன்னிடம் ஒப்படைத்து விடுவார்கள்! நீ விரும்பும் மாற்றத்தை அவர்களிடம் மிக இலகுவாகக் கொண்டு வந்திட முடியும்!"

கணவன்மார்களே! இந்தக் கதையில் உங்களுக்கு நல்லதொரு பாடம் இருக்கின்றது!

தடியெடுத்து ஒரு கனியைக் கனிய வைத்திட முடியாது! அது பழுத்துக் கனிந்திட வேண்டிய சூழலையை உருவாக்கினாலே போதும். தானே அது கனிந்து விடும்!

மனைவியைப் பொறுத்தவரை கனிவான சூழல் என்பது அன்பும், ஆசை வார்த்தைகளும், காதலும், கனிமொழிகளும், இரக்கமும், மன்னித்தலும் தான்!

ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள்! உங்கள் மனைவி தம்மை அப்படியே உங்களிடம் ஒப்படைத்து விடுகிறாரா இல்லையா என்று பாருங்களேன்!

No comments:

Post a Comment