Sunday, April 13, 2014

நபி (ஸல்) அவர்கள் ஏன் தன் மனைவியைக் கடிந்து கொள்ளவில்லை?

சுன்னத்தான இல்லறம்: 

நபியவர்கள் அவர்கள் தங்களின் மனைவியர்களில் ஒருவரிடம் இருந்தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் இன்னொருவர் உணவுப் பண்டமுள்ள தட்டு ஒன்றை (நபியவர்களுக்காகப் பணியாள் ஒருவரிடம்) கொடுத்தனுப்பினார்கள்.


(அப்போது) நபி(ஸல்) அவர்கள் எவருடைய வீட்டில் தங்கியிருந்தார்களோ அந்தத் துணைவியார் (ரோஷத்தில்) அந்தப் பணியாளரின் கையைத் தட்டிவிட்டார். அந்தத் தட்டு (கீழே விழுந்து) உடைந்துவிட்டது.

உடனே (ஆத்திரப்படாமல்) நபி(ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்கள். பிறகு தட்டிலிருந்த உணவை (மீண்டும்) அதிலேயே ஒன்று சேர்க்கலானார்கள். மேலும், (அங்கிருந்த தோழர்களை நோக்கி), 'உங்கள் தாயார் ரோஷப்பட்டுவிட்டார்'' என்று கூறினார்கள்.

பின்னர் அந்தப் பணியாளை (அங்கேயே) நிறுத்திவிட்டு தாமிருந்த துணைவியாரிடமிருந்து மற்றொரு தட்டைக்கொண்டு வரச் செய்து, உடைபட்ட தட்டுக்குரியவரிடம் நல்ல தட்டை (மாற்றாக)க் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்துவிட்டார்கள். (புகாரி 5225)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் வீட்டில் இருந்த போது தான் இச்சம்பவம் நடந்தது. நபியவர்களுக்கும், நபியவர்களின் தோழர்கள் சிலருக்கும் - ஆயிஷா அவர்களே உணவு சமைத்துக் கொண்டிருந்த நேரம் அது. அந்நேரத்தில் இன்னொரு மனைவியின் வீட்டிலிருந்து உணவு வந்ததும் ஆயிஷா அவர்களுக்குக் கோபம் வந்து விட்டது.

இந்தச் சமயத்தில் நபியவர்களின் செயலை சற்று கூர்ந்து கவனியுங்கள்.

உணவுத் தட்டை தட்டி விடுகின்றார்கள் அன்னை ஆயிஷா அவர்கள். தட்டு உடைகிறது. உணவுப்பண்டம் சிதறுகிறது. நபியவர்கள் அமைதியாக அதை ஒன்று சேர்க்கிறார்கள். தோழர்களை உண்ணச் செய்கின்றார்கள். உடைந்த தட்டுக்குப் பதிலாக நல்ல தட்டு ஒன்றை கொடுத்து அனுப்புகிறார்கள். அவ்வளவு தான் நடந்தது!

"என்ன செய்கிறாய் நீ?" என்று அன்னை ஆயிஷா அவர்களை நபியவர்கள் கடிந்து கொள்ளவில்லை!

"நபித்தோழர்கள் வீட்டுக்கு விருந்தினர்களாக வந்திருக்கும் சமயத்தில் இப்படித்தான் நடந்து கொள்வதா?" - என்று கோபப்படவும் இல்லை!

வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசிடவும் இல்லை! அமைதி காக்கிறார்கள் நபியவர்கள்!

அதே நேரத்தில் மனைவி அவ்வாறு நடந்து கொண்டதற்குக் காரணம் அவர்களது ரோஷ உணர்வே என்பதனை நபித்தோழர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் நபியவர்கள். அவ்வாறு அவர்கள் ரோஷப்பட்டது தவறு என்று கூடச் சொல்லிடவில்லை!

அந்த ரோஷ உணர்வை அன்னையவர்கள் வெளிப்படுத்திய விதம் தான் தவறு என்பதைத் தனது வாயினால் சொல்லாமல் - உடைந்த தட்டை வைத்துக் கொண்டு நல்ல தட்டை கொடுத்தனுப்புவதன் மூலம் - தனது அமைதியான செயலாலேயே அன்னைக்கு உணர்த்துகிறார்கள் நபியவர்கள்!

கணவன்மார்களுக்கு மிக நுட்பமான படிப்பினைகள் இருக்கின்றன இந்த ஒரு நபிமொழியில்!

No comments:

Post a Comment