Saturday, December 6, 2014

சுன்னத்தான இல்லறம்! - நூல் வடிவில்.....

சுன்னத்தான இல்லறம்!

(உன் மனைவி ஒரு பொக்கிஷம்!)

S.A  மன்சூர் அலி

முன்னுரை

இன்னும், நீங்கள் அவர்களிடம் மன அமைதி பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே மவத்தத் எனும் அன்பையும், இரக்கத்தையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (குர்ஆன்: 30:21)


மனித இனத்தை ஆண்களாகவும் பெண்களாகவும் படைத்த இறைவன் அவர்களுக்குள் இயல்பாகவே ஒரு ஈர்ப்புத்தன்மையை வைத்தே படைத்திருக்கின்றான். அந்த ஈர்ப்புத்தன்மைக்குத் தூய்மையான வடிவம் ஒன்றை அளித்து ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ஒரு நீண்ட கால உறவை ஏற்படுத்தித் தருவதே – திருமணம்.

அப்படிப்பட்ட தூய்மையான உறவுக்கு வழி வகுக்கும் இல்லற வாழ்க்கையையே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் – திருமணம் எனது வழிமுறை; இதனை வெறுப்பவர் என்னைச் சார்ந்தவர்கள் இல்லை! – என்று வலியுறுத்திச் சொல்லியிருக்கின்றார்கள்.

திருமணம் எனது வழிமுறை ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல. அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) (நூல் : புகாரி)

யாருக்கு அல்லாஹ் நல்ல மனைவியைக் கொடுக்கின்றானோ அவனது மார்க்கத்தின் பாதி நிறைவு பெற அல்லாஹ் உதவி விட்டான்; அடுத்த பாதியில் அல்லாஹ்வை அவன் பயந்து நடந்து கொள்ளட்டும்! -  என்பதும் நபிமொழி. (நூற்கள்: தபரானி, பைஹகி, ஹாகிம்)

இஸ்லாத்தின் பார்வையில் திருமணம்  என்பது மனப்பூர்வமாக நிறைவேற்றப்பட வேண்டிய ஒப்பந்தம்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் ஏற்றுக்கொண்ட நிபந்தனையே ஆகும்”. (நூல்: முஸ்லிம்)

நல்லதொரு துணையைத் தேர்வு செய்து, திருமணம் செய்து கொண்டு சிறப்பான வாழ்க்கை ஒன்றை அமைத்துக் கொள்ளவும், திருமணத்தின் பொறுப்புகள் அனைத்தையும் செவ்வனே நிறைவேற்றிடவும், புதிய தலைமுறைக்கு வழிகாட்டிடும் ஒரு சிறந்த நூலாக இந்நூல் அமைந்திட வல்லோன் அல்லாஹு தஆலாவிடம் இறைஞ்சுகிறோம்.

இவண்
S.A  மன்சூர் அலி

பொருளடக்கம்

புதுக் கணவன்மார்களே! உங்கள் புது மனைவியைப் பேச விடுங்கள்!

மனைவி ஒரு பொக்கிஷம்!

மனைவியின் சிறப்பியல்புகளைக் கொண்டாடுங்கள்!

மனைவியைக் காதலிப்பது எப்படி?

மூன்று காதல் மொழிகள்!

எங்கள் துணைவர்களை எங்களின் கண்களுக்குக் குளிர்ச்சியாக ஆக்கி வைப்பாயாக!

அவர்களுடன் நீங்கள் நெருங்கிய நண்பர்களாக நடந்து கொள்ளுங்கள்!"

பாலுறவு குறித்து மனம் திறந்து பேசுங்கள்!

பாலுறவுக்கு மென்மை மிக மிக அவசியம்!

இரக்க உணர்வும் இல்லற உறவும்!

தீய்ந்து போன ரொட்டி!

இது யார் சொல்லித்தந்ததோ தெரியவில்லை!

திருமணத்துக்குப் பின்னர் அசையவும் கூடாது! அலையவும் கூடாது!

ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண்! பெண்ணின் வெற்றிக்குப் பின் ஒரு ஆண்!

உங்கள் மனைவியை நீங்கள் புரிந்து வைத்திருக்கின்றீர்களா?

மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி?

மனைவியின் உணர்வுகளை மதித்து நடந்து கொள்ளுங்கள்!

நபி (ஸல்) அவர்கள் ஏன் தன் மனைவியைக் கடிந்து கொள்ளவில்லை?

முகத்தைத் திருப்பிக் கொள்ளாதீர்கள்!

எது எதற்கெல்லாம் கணவன் தன் மனைவி மீது கோபப்படலாம்?

பெண்கள் - ஆண்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள்!

ஆண்கள் என்ன உயர்ந்தவர்களா?

ஆண்கள் என்ன அதிகாரிகளா?

குடும்பச் சண்டைகள் குறைந்திட!

அவர்கள் மட்டும் எப்படிக் குடித்தார்கள்?

Part 2

என்னுடைய பணத்தை இவர் எடுத்து எப்படி செலவு செய்யலாம்?

"என் தோல்வி அனைத்துக்கும் என் துணைவியே காரணம்??"

என் தோல்வி அனைத்துக்கும் என் கணவனே காரணம்!

குற்றம் சுமத்திக் கொண்டே இருந்தால் குடும்பத்தில் அமைதி குலைந்து விடும்!

தவறு அவர் மீது மட்டும் அல்லவே!

என்னிடம் திரும்பு! என்னைக் கவனி! நான் சொல்வதைக் கேள்! அது போதும் எனக்கு!

உங்க கிட்ட எதையுமே ஷேர் பண்ணிக்க முடியாதே!

இவர் கிட்ட பகிர்ந்து கொள்ளாமல் நான் யாரிடம் பகிர்ந்து கொள்வது?

புரிந்துணர்வு உள்ள கணவரா நீங்கள்?

சீரியஸான பிரச்னையா? நேரிடையாக எதிர்கொள்க!

ஆமைகள் மட்டுமல்ல! மனிதர்களும் அப்படித்தான்!

செயலை விமர்சியுங்கள்! செய்தவரை விமர்சிக்க வேண்டாம்!

உங்கள் மனைவியின் நிலையில் நீங்கள் இருந்தால்...?

மாய சுழற்சி மறைந்து விட்டதா?

இல்லறம் காக்கப்பட இறைவன் போட்டுத் தரும் பாதுகாப்பு வளையங்கள்!

நம்பிக்கை மோசம் – நினைத்துக் கூடப் பார்க்க வேண்டாம்!

உணர்ச்சி வெள்ளத்தில் கணவன்-மனைவி!

எவ்வளவு தான் கத்திப் பேசினாலும், சுவர் பதில் தருமா?

கணவன் மனைவியருக்குள் விவாதமா?

சூழ்நிலை அறிந்து பேசுங்கள்!

பாடம் படித்துக் கொள்ள வேண்டியது கணவன் மனைவி இருவரும் தான்!

சுன்னத்தான ஆறு அறிவுரைகள்!

தாய்மையின் சிறப்பு!

தந்தைக்கும் சிறப்பு உண்டு!

ஒரு குழந்தையின் வருகைக்குப்பின்!

உங்கள் மனைவி - குழந்தையையும் உங்களையும் சேர்த்தே கவனித்துக் கொள்கிறார்!!

Part Three/ Page131

நமது குடும்பங்களில் மகிழ்ச்சி தொலைந்து போனது ஏன்?

பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாமா?

Part Four

வாழ்க்கைத்துணையைத் தேர்வு செய்வது எப்படி?

கண்ணியம் காதலாய் மலரட்டும்!

வாழ்க்கைத்துணையாக வர இருப்பவருடன் பேசிப் பார்க்கிறீர்களா?

சாதகப் பொருத்தம் பார்ப்பது அவசியம்!

பொருத்தம் பார்ப்பது ஒரு சுன்னத்!

பொருத்தம் பார்த்து மணந்து கொண்டால் - இங்கேயும் சொர்க்கம் தான்!

திருமணம் ஒரு திருப்பு முனை!

பிற்சேர்க்கை: 1- திருமணம் தாமதமானால்?

பிற்சேர்க்கை: 2- முதன் முதலாக உங்கள் மனைவியின் பெற்றோர் வீட்டுக்குச் செல்கிறீர்களா?

பிற்சேர்க்கை: 3  - தேவை: குடும்ப நல ஆலோசகர்கள்!

பிற்சேர்க்கை: 4 நீங்கள் வலைதளங்களில் மூழ்கிக் கிடப்பவரா?

பிற்சேர்க்கை 5: பெற்றோர் குறுக்கிடுவதன் பின்னணி

பிற்சேர்க்கை 6: தொலைபேசி தலாக்!
பிற்சேர்க்கை 7: தேவை: திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையம்!



புதுக் கணவன்மார்களே! உங்கள் புது மனைவியைப் பேச விடுங்கள்!

அன்புள்ள இளம் கணவன் – மனைவியரே! நீங்கள் நல்லதொரு வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்து திருமணம் முடித்திருக்கின்றீர்கள். அல்ஹம்து லில்லாஹ்!
“பாரகல்லாஹு லக வபாரக் அலைக்க வ ஜம அ பைனகுமா ஃபீ ஃகைர்!”
திருமணம் செய்து கொண்டதன் மூலம் – நீங்கள் மார்க்கத்தின் சரிபாதியை நிறைவேற்றிட அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கின்றான்! அதற்காக நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருங்கள்!  வல்லோன் அல்லாஹ் உங்களுக்கு மேலும் நன்மைகளையும் அருள் வளங்களையும் வழங்குவானாக! ஆமீன்!
**
திருமணத்தைத் தொடர்ந்து - புதுக் கணவன் – மனைவியராகிய  நீங்கள் அடுத்து செய்திட வேண்டியது என்ன?
புதுக் கணவன்மார்களே! உங்கள் புது மனைவியைப் பேச விடுங்கள்!
இது தான் நீங்கள் செய்திட வேண்டிய முதல் வேலை. பல புதுக் கணவன்மார்கள் – தங்கள் புது மனைவியைச் சந்தித்ததும் – தங்களைப் பற்றிய பெருமைகளை, தங்கள் சாதனைகளை அள்ளிக் கொட்டத் தொடங்கி விடுகிறார்கள்.
நீங்கள் முந்திக் கொள்ள வேண்டாம். மாறாக – அவர்கள் பேசட்டும் முதலில்.
எப்படிப் பேச வைப்பது?
கேள்விகளைக் கேளுங்கள்!
எதைப் பற்றிக் கேட்க வேண்டும்?
உங்கள் மனைவியைப் பற்றித் தான்!
கேள்விகள் கேட்பதன் நோக்கம் என்ன?
உங்கள் மனைவியைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வதற்காக! தெரிந்து கொள்வதற்காக! புரிந்து கொள்வதற்காக!
எப்படிக் கேட்க வேண்டும்?
ஒரு வரியில் அல்லது ஒரு சொல்லில் பதில் சொல்லி விடுகின்ற கேள்விகள் வேண்டாம்;
எடுத்துக்காட்டு: உனக்கு தேநீர் பிடிக்குமா? காபி பிடிக்குமா?
ஒரு கேள்வி கேட்டால் – அவர்கள் அதற்கு விரிவாக பதில் அளித்திடுமாறு கேள்விகளைத் தேர்வு செய்யுங்கள்!
ஹனி! உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் சொல் பார்க்கலாம்?
கேள்வி கேட்டு விட்டு கணவன்மார்கள் செய்யக் கூடாதது என்ன?
அவர்கள் பதில் சொல்லும்போது உங்கள் கவனத்தை வேறு பக்கம் திருப்புதல்!
இது கூடவே கூடாது! அவர்கள் முகத்தை நேருக்கு நேர் பார்த்து அவர்கள் தருகின்ற பதில்களை நீங்கள் ரசித்துக் கேட்டிட வேண்டும்!
வேறு எது பற்றியெல்லாம் கேட்டிட வேண்டும்?
உங்கள் மனைவியின் குடும்பத்தைப் பற்றி, அவருடைய உறவினர்கள் பற்றி,  அவர் வளர்ந்த சூழல் பற்றி, அவருடைய கல்வி பற்றி, அவருடைய சிறு வயது அனுபவங்களைப் பற்றி, அவருடைய சாதனைகள் பற்றி, அவருடைய ஆர்வங்களைப் பற்றி, எப்படிப்பட்டவர்களை அவருக்குப் பிடிக்கும் என்பது பற்றி, அவர் எதிர்காலத்தில் தான் என்ன செய்திட விரும்புகிறார் என்பது பற்றியெல்லாம்!
அது போலவே – உங்கள் மனைவியரும் உங்களிடம் கேள்விகள் கேட்பார்கள்!
அப்போது நீங்களும் பேசுங்கள்! உங்களைப் பற்றி நீங்கள் பேசிடத் தான் வேண்டும்; உங்களைப் பற்றி புரிய வைத்திட வேண்டும்!
ஆனால் நீங்கள் பேசும்போது கடைபிடிக்க வேண்டிய நுட்பங்கள் கொஞ்சம் இருக்கின்றன!
அது என்ன நுட்பங்கள்?
மிகக் குறைவாகவே நீங்கள் பேசிட வேண்டும்!
விலாவாரியாக நீங்கள் பேசிடவே கூடாது! (இது ஒரு நுட்பமான சுன்னத்!)
உங்களைப் பற்றி நீங்கள் தம்பட்டம் அடித்துக் கொள்ளக் கூடாது! உங்கள் குடும்பத்தைப் பற்றிய தற்பெருமை கூடவே கூடாது! எதனையும் மிகைப்படுத்திடக் கூடாது! மனைவியிடம் தன்னை உயர்வாகக் காட்டிக் கொள்வதற்காக (to impress) - செய்யாத சாதனைகளை செய்து காட்டியதாக பொய் சொல்லி விடக் கூடாது! சுருக்கமாகச் சொன்னால் சற்றே அடக்கி வாசியுங்கள்!
இவ்வாறு கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முயற்சிப்பது என்பது ஒரே நாளில் நடந்து விடுவது அல்ல!
கொஞ்சம் கொஞ்சமாக ஒருவர் துணையைப் பற்றி மற்றவர் அறிந்து கொள்தல் அவசியம்;
இது தான் இளம் கணவன்மார்கள் திருமணத்துக்குப் பின்னர் செய்திட வேண்டிய மிக முக்கியமான வேலை முதல் வேலை என்று நான் சொல்வேன். இதனால் ஏற்படும் நன்மைகள் அளப்பரியது! நம்புங்கள்!

மனைவி ஒரு பொக்கிஷம்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? அவள் தான்- நல்லதொரு மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது தன்னுடைய கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள். (நூல்: அபூதாவூத்)

இது ஆழமாக ஆய்ந்திட வேண்டிய நபிமொழியாகும்.

பொக்கிஷம் என்றால் என்ன? பொன்னும் பொருளும் குவித்து வைக்கப்பட்ட விலை மதிப்பிட முடியாத சொத்தைத் தான் நாம் பொக்கிஷம் என்கிறோம்.
இந்த நபிமொழியில் நல்லதொரு மனைவியை ஒரு பொக்கிஷத்துடன் ஒப்பிடுகிறார்கள் நபியவர்கள். ஒரு பொக்கிஷத்துக்குள் – பொன்னும் பொருளும் புதைந்து கிடப்பது போல – நல்லதொரு மனைவி என்பவள் – விலை மதிப்பில்லா அதிசயங்களையும் அற்புதங்களையும்-  தன்னகத்தே பொதித்து வைத்திருப்பவள் என்று நாம் சொல்லலாம்!

எனவே நல்லதொரு மனைவியை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக் கொண்டவன் – ஒரு பொக்கிஷத்தை பெற்றுக் கொண்டவன் அதனைக் கொண்டாடுவது போல – தன் மனைவியை மதித்து நடக்க வேண்டும். மதிப்பளித்திட வேண்டும். குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது.

மனைவியின் நல்ல அம்சங்கள் அனைத்தையும் கண்டுபிடித்து அவைகளை அங்கீகரித்திட வேண்டும். பாராட்டிட வேண்டும். அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திட வேண்டும். ஊருக்கும் உலகத்துக்கும் அதனை எடுத்துச் சொல்லிட வேண்டும்! உச்சி குளிர்ந்து போய் விடுவார் உங்கள் துணை!
நிறைகளைக் கவனித்திடும் போது – உறவு பலப்படுகிறது! முதுமை வரை! நம்பகத்தன்மை (Trust) ஏற்படுகிறது! அது வலிமை பெறுகிறது. தன்னை அப்படியே அர்ப்பணித்து  விடுவார் மனைவி! பிறகு எல்லாமே உங்களுக்குத்தான்!

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்திருக்கும் நபி மொழி ஒன்றை இங்கே சுருக்கமாகப் பார்ப்போம்:
முற்காலத்தில் பதினொன்று பெண்கள் ஓரிடத்தில் கூடி அமர்ந்து கொண்டு ஒவ்வொருவரும் தத்தம் கணவர் குறித்த செய்திகளில் எதையும் மூடி மறைக்காமல் எடுத்துரைப்பதென உறுதிமொழியும் தீர்மானமும் எடுத்துக்கொண்டனர்.

பின்பு – ஒவ்வொரு பெண்ணும் தத்தம் கணவர் குறித்து சொல்லிக் கொண்டே வந்தனர். இறுதியாக பதினொன்றாவது பெண் கூறினார்: என் கணவர் பெயர் அபூ ஸர்உ. அபூ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? ஆபரணங்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கிறார். (ஆசையாசையாக உணவளித்து) என் கொடுங்கைகளை கொழுக்கச் செய்துள்ளார்.

அவர் என்னைப் பூரிப்படையச் செய்திருக்கிறார். என் மனம் நிறைந்திருக்கிறது.  ஒரு மலைக் குகையில் சிறிது ஆடுகளுடன் திரிந்துகொண்டு இருந்த குடும்பத்தில் என்னைக் கண்ட அவர், என்னை மனைவியாக ஏற்று குதிரைகளும் ஒட்டகங்களும் உள்ள, தானியக் களஞ்சியமும் கால்நடைச் செல்வங்களின் அரவமும் நிறைந்த வீட்டில் என்னை வாழச் செய்தார்.
நான் அவரிடம் எதையும் பேசுவேன்; நான் அலட்சியப்படுத்தப் பட்டதில்லை. நான் தூங்கினாலும் நிம்மதியாக முற்பகல் வரைத் தூங்குகிறேன். நான் உண்டாலும் பருகினாலும் பெருமிதப்படும் அளவிற்கு உண்ணுகிறேன் பருகுகிறேன்.

எனது குறைகள் எல்லாவற்றையும் அவர் மறைத்து விடுவார். அவர் உளப்பூர்வமாக எனக்கு முற்றிலும் கட்டுப்பட்டு விட்டார்! எந்த அளவுக்கு எனில், நான் அவ்வளவு சிறப்பானவளா என்று என்னையே நான் விரும்பத் தொடங்கி விட்டேன்! ( ”I LOVE MYSELF!”)

ஆயிஷா(ரளி) அவர்கள் கூறுகிறார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள், (ஆயிஷாவே!) ‘உம்மு ஸர்விற்கு அபூ ஸர்உ எப்படியோ - அப்படியே உனக்கு நானும்  இருப்பேன்’ என்றார்கள்.

இந்த நபிமொழியிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள்:

1. மனைவிக்கு இயன்ற வரையில் தாராளமாகச் செலவு செய்யுங்கள்.

2. வசதிக்குத் தகுந்தவாறு மனைவிக்கு நன்றாக உணவளியுங்கள். (எல்லாரும் உண்ட பின்பு மீதம் இருக்கும் உணவை சாப்பிடும் மனைவியா உங்கள் மனைவி?)

3. உங்கள் வீட்டினிலே முழுமையான சுதந்திரம் கொடுங்கள் உங்கள் மனைவிக்கு! அந்த சுதந்திரத்தில் உங்கள் பெற்றோர் மற்றும் சகோதரிகள் தலையிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

4. மனைவியைப் பேச விட்டுக் கேளுங்கள்; காது கொடுத்துக் கேளுங்கள்; முகம் பார்த்துக் கேளுங்கள்; கேட்டுக் கொண்டே இருங்கள். நீங்கள் பேசுவதை விட அவரைப் பேச விடுங்கள்.

5. உங்கள் மனைவியின் குறைகளையும் தவறுகளையும் பொருட்படுத்தாதீர்கள்.

6. உங்கள் மனைவியிடம் உங்களை முழுமையாக ஒப்படைத்து விடுங்கள்.

இவ்வாறு நீங்கள் – உங்கள் மனைவியை ஒரு பொக்கிஷம் போல் நடத்தினீர்கள் என்றால்

உங்களுக்கு கிடைப்பது மூன்று!

ஒன்று: அவளை நீங்கள் நோக்கினால் உங்களை மகிழ்விப்பாள்!

இரண்டு: நீங்கள் கட்டளை இட்டால் கட்டுப்பட்டு விடுவாள்!

மூன்று: நீங்கள் அவரிடம் இல்லாமல் இருக்கும் போது தன் கற்பை உங்களுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள்.

மனைவியின் சிறப்பியல்புகளைக் கொண்டாடுங்கள்!

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்கள்: ”தரீத் என்னும் உணவு மற்ற உணவுகளை விட சிறப்பாக இருப்பது போன்று மற்ற பெண்களைவிட ஆயிஷா(ரளி) அவர்கள் சிறப்பானவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” (நூல்: திர்மிதி)
அண்ணலார் (ஸல்) அவர்களின் இந்த வழிமுறையை நாம் பின்பற்றுவது எப்படி?

ஒரு நோட்புத்தகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனைவியின் சிறப்பியல்புகளை இன்றே பட்டியல் போடத் துவங்கி விடுங்கள்!
அறிவு சார்ந்த விஷயங்களில் - உங்கள் மனைவியின் தனித்தன்மை என்ன? அது போலவே ஆன்மிக விஷயங்களில் – உங்கள் மனைவியின் தனித்தன்மை என்னென்ன? அன்பு செலுத்துதல், பாசம் காட்டுதல், இரக்கப்படுதல் போன்ற உணர்வு சார்ந்த விஷயங்களில் உங்கள் மனைவி எப்படி? என்னென்ன நற்குணங்கள் உங்கள் மனைவியிடத்தில் குடிகொண்டிருக்கின்றன?
இவை அனைத்தையும் ஒரு சேரப் பெற்றிருக்கின்ற ஒரு பெண்ணை – “எனக்கே எனக்காக!” – என்று வல்லோன் அல்லாஹு வழங்கியிருக்கின்றான் என்று எண்ணும்போது – இரண்டு விஷயங்கள் ஏற்படும்!

ஒன்று: அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் உணர்வு!

இரண்டு: உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் அற்புதமான நெருக்கம் ஒன்று ஏற்பட்டு விடும்! அதுவும் இயல்பாகவே!

இவ்வாறு உங்கள் மனைவியின் சிறப்பியல்புகளை  அனு தினமும் உங்கள் பேச்சின் மூலமாகவும், செயல்பாடுகள் மூலமாகவும் – கொண்டாடுங்கள்! கொண்டாடுங்கள்! கொண்டாடிக் கொண்டே இருங்கள்!

இந்தக் கொண்டாட்டத்துக்கு நடுவிலே இயல்பாக - ஏற்படுகின்ற உடல் ரீதியான நெருக்கம் இருக்கின்றதே – அது –கணவன் மனைவி பாலுறவை அற்புதமான அனுபவமாக ஆக்கிக் காட்டி விடும்!

அது போலவே மனைவியர்களும் தங்கள் கணவன்மார்களின் சிறப்பியல்புகளைப் பட்டியல் போடுங்கள்! அவைகளை சொல்லாலும் செயலாலும் கொண்டாடிக் கொண்டே இருங்கள்! கணவனின் நெருக்கத்தை உணர்வு பூர்வமாக அனுபவிக்கத் தவறி விடாதீர்கள்!

இது நுட்பம் நிறைந்த ஒரு சுன்னத் ஆகும்!


மனைவியைக் காதலிப்பது எப்படி?

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (குர்ஆன் 30:21)

“And among His wonders is this: He creates for you mates out of your own kind, so that you might incline towards them, and He engenders love and tenderness between you: in this, behold, there are messages indeed for people who think! ” (Qur’an 30:21)

மேற்கண்ட இறைவசனத்தில் இடம் பெற்றிருக்கும் “மவத்தத்” என்ற சொல்லை நாம் இப்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.
மவத்தத் என்பதற்கு தமிழில் “அன்பு”, “உவப்பு”, “நேசம்” என்று மொழி பெயர்த்திருக்கின்றார்கள்.

சற்று ஆழமாக இச்சொல் தரும் கருத்தை நாம் ஆய்வோம்.

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணத்தின் மூலம் இணைவதனால் ஏற்படுகின்ற நீண்ட கால உறவுதனைப் பாதுகாப்பதற்காக அல்லாஹ் அமைத்துக் கொடுத்துள்ள மிக மிக அடிப்படையான அத்திவாரம் (foundation) தான் மவத்தத் எனும் அபரிமிதமான காதல்! அன்பு! நேசம்! அதாவது LOVE!
இதுவே அல்லாஹ் கற்றுத் தரும் காதல்!

இந்தக் காதல் இனக் கவர்ச்சிக் காதல் அன்று! இனக் கவர்ச்சியினால் ஏற்படும் காதலுக்கு அற்ப ஆயுள்! இதனை “மவத்தத்” என்று குறிப்பிட முடியாது!
அப்படியானால் மவத்தத் கொண்டு வருகின்ற காதல் என்பது எது? மவத்தத் என்ற நேசம் என்பது உடலாலும் உள்ளத்தாலும் நேசிப்பதைக் குறிக்கும்.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வோம் இங்கே.

நமக்கு ஏதாவது ஒன்று பிடித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் மற்றவர்கள் நம்மிடம் வந்து நீங்கள் விரும்புகின்ற அந்த ஒன்றின் குறைகளை எடுத்துச் சொன்னால் நாம் என்ன சொல்வோம்?

அந்தக் குறைகளை மறுப்போம்! அதாவது அந்தக் குறை அதற்குக் கிடையாது என்று மறுத்து விடுவோம். அல்லது அவைகளைக் குறையெனவே எடுத்துக் கொள்ள மாட்டோம். “இதுவெல்லாம் ஒரு குறையா?” என்று ஒதுக்கித் தள்ளி விடுவோம்.அல்லது அந்தக் குறையைப் பொருட்படுத்திட மாட்டோம். “அப்படியா! இருந்து விட்டுப் போகட்டுமே!” என்று மற்றவர்கள் வாயை அடைத்து விடுவோம்.

இது ஏன்?

ஏனெனில் நமக்கு “அது” பிடித்துப்போய் விட்டது! அது தான் காதல்! காதலுக்குக் கண்ணில்லை என்பது இதனால் தான்!
இதைத்தான் நாமும் சொல்கிறோம்! இதே நிலையை அப்படியே கணவன் மனைவி உறவில் பிரதிபலித்துக் காட்டிட வேண்டியது தானே! .
உங்கள் மனைவியின் மீது உனக்கு அன்பிருக்கின்றதா? காதல் இருக்கின்றதா? நேசம் இருக்கின்றதா? இருக்கிறது தானே!
காதல் இருந்து விட்டால் போதுமே! உங்கள் மனைவியின் குறைகள் உங்களுக்குக் குறைகளாகவே தெரியாதே!

அதாவது மவத்தத் எனும் காதல் எதிர்பார்ப்பது குறைகளைக் கண்டுகொள்ளாத தன்மையைத் தான்! இதனை ஒரு நற்குணமாகவே ஆக்கியிருக்கின்றான் வல்லோன் அல்லாஹ்! இந்த நற்பண்புக்கு “அஃப்வுன்” – ‘afwun’ – என்று பெயர்.
அதாவது குறைகளைப் பொருட்படுத்தாமல் விட்டு விடும் தன்மை!
ஒரு பணியாளரை ஒரு நாளைக்கு எழுபது தடவை மன்னிக்கச் சொல்கிறது மார்க்கம். பணியாளரை மன்னிப்பீர்கள். மனைவியை மன்னிக்க மாட்டீர்களா? கணவரை மன்னிக்க மாட்டீர்களா?

எனவே கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவரின் நல்லவைகளையே, நற்பண்புகளையே கவனத்தில் கொள்ள வேண்டும். குறைகளை பொருட்படுத்தாது புறக்கணித்து விட்டு விட வேண்டும்.
நமது வாழ்க்கைத்துணை செய்திடுகின்ற நல்லவைகளை கல்லில் பொறித்தது போல் ஆழமாக நம் நினைவில் வைத்திட வேண்டும். கசப்பானவைகளை நீரில் எழுதியது போல் மறந்து விட வேண்டும்.

அடுத்து மவத்தத் எதிர்பார்க்கும் இன்னொரு தன்மை – “மரியாதை”. அதாவது Respect. நேசம் என்பது ஒருவர் மீது நாம் வைத்திருக்கின்ற மதிப்பின் வெளிப்பாடு ஆகும். யார் மீது நமக்கு மதிப்பு இல்லையோ, அவரை நாம் நேசித்திட முடியாது.

ஆனால் நாம் அன்பு செலுத்துகின்ற மனைவியை நாம் எப்படி மரியாதைக் குறைவாக நடத்திட முடியும்? அதுவும் மற்றவர்கள் முன்னிலையில்? வீட்டுக்கு வெளியில்?

உன் மனைவியை வீட்டிலே தவிர கண்டிக்காதீர்கள் என்பது நபிமொழி!
கணவன் மனைவிக்கிடையேயான இந்த நேசத்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக “ஊட்டி வளர்த்திட வேண்டும்”! இது தானாக வளர்ந்திடாது! எந்த அளவுக்கு ஊட்டி வளர்க்கின்றோமோ அந்த அளவு அறுவடை செய்யலாம்!

கணவன் மனைவி நேசத்தை எவ்வாறு ஊட்டி வளப்பது?

இருவரும் ஒன்று சேர்ந்து நேரத்தைச் செலவிடுங்கள். உங்கள் நண்பர்களுடன் வெளியே நீங்கள் அதிக நேரம் செலவிடுவதை விட இது சிறந்தது!
ஒருவர் ஆர்வத்துடன் ஒன்றில் ஈடுபட்டால், மற்றவர் அதற்கு துணை செய்யட்டும். ஒத்துழைக்கட்டும். பாராட்டட்டும்.

காதலை வளர்ப்பதற்கு ஒருவர் மீது ஒருவர் “நம்பிக்கை” (trust) வைப்பது மிக அவசியம். இந்த நம்பிக்கை தொலைந்தால் நேசம் குழிதோண்டி புதைக்கப்படும்!

காதலை வளர்ப்பதற்கு இன்னொரு மிக முக்கியமான வழி – ஒருவரின் உணர்வுகளை மற்றவர் புரிந்து கொள்வதும், அதற்கு மதிப்பளிப்பதுவும் தான். துணைவரின் பார்வைக்கு என்ன பொருள், சமிக்ஞைக்கு என்ன பொருள், முக பாவனைக்கு என்ன பொருள் என்பதெல்லாம் மற்றவர் புரிந்து வைத்திருக்க வேண்டும்.

இந்தக் காதல் அதிகரித்திடும் இன்னொரு வழி துணைவருக்கு ஒரு சோதனை; ஒரு காய்ச்சல், மனரீதியான ஒரு பிரச்சனை என்றால், அதனை புரிந்து கொண்டு துணைவருக்கு ஆறுதலாக நடந்து கொள்வது தான் அது.
இந்தக் காதல் குறித்து நாம் இன்னும் ஆய்வு செய்திட வேண்டியுள்ளது.
இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்.

மூன்று காதல் மொழிகள்!

திருமணம் என்பது ஒரு நீண்ட கால உறவு என்பதை நாம் முன்னரே விளக்கியிருந்தோம்.
திருமண வாழ்வை ஒரு கப்பலுக்கு ஒப்பிட்டால், கணவன் மனைவியரின் இல்லற வாழ்க்கைப் பயணம் சுமுகமாக சென்றிட இருவருக்குமிடையிலான "மவத்தத்" எனும் அபரிமிதமான காதல் என்பது கடல் நீர் அளவுக்கு இருந்திட வேண்டும்!
இந்தக் காதலுக்கு என்னென்ன பொருள்கள் எல்லாம் உண்டு தெரியுமா?

affection - இதயபூர்வமான அன்பு

appreciation -  உயர்வாக மதித்தல்

attention - கவனம் (எந்நேரத்திலும்)

commitment - அர்ப்பணிப்பு

joy - மகிழ்ச்சி

respect - கண்ணியம்

responsibility - பொறுப்பு

sacrifice - தியாகம்,

security - பாதுகாவல்

trust - நம்பிக்கை

intimacy – நெருக்கம்

இந்தக் காதலை நாம் ஒரு அழகிய பூஞ்செடிக்கு ஒப்பிட்டால், எவ்வாறு ஒரு செடி வளர்ந்து பூத்துக் குலுங்குவதறகு தினமும் நாம் நீரூற்றி வளர்க்கிறோமோ அது போலவே, கணவன் மனைவி காதலையும் அனுதினமும் அவர்கள் புதுப்பித்துக் கொண்டே இருந்திட வேண்டும்!
நீரூற்றுவது நிறுத்தப்பட்டால், எவ்வாறு அந்தச் செடி வாடி வதங்கி விழுந்து விடுமோ, அது போலவே கணவன் மனைவி காதலுக்குப் புத்துயிர் ஊட்டுதல் நிறுத்தப்பட்டால், இல்லற வாழ்வும் வாடி வதங்கி வெறுமையானதாக ஆகி விடும்.

கணவனும் மனைவியும் தாம் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பதாக உணர வேண்டும். தாங்கள் ஒருவருக்கொருவர் மதிக்கப்படுவதாக உணர வேண்டும். இதனை எப்படி சாதிப்பது?

மூன்று வழிமுறைகளை சொல்லித் தருவோம்: இம்மூன்றும் - "மூன்று காதல் மொழிகள்" Three Languages of Love - என்று அழைக்கப்படுகின்றது.
ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:

என்னிடம் சொல்!

முதலாவது காதல் மொழி – என்னிடம் சொல்! (Tell Me!)
உங்கள் துணையிடம் நீங்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருங்கள்! நீங்கள் எந்த அளவுக்கு அவரை நேசிக்கிறீர்கள் என்பதை!
காதல் என்பது உங்கள் இதயத்தில் இருந்தால் மட்டும் போதாது! அது உங்கள் வார்த்தைகளால் வெளிப்படுத்தப்பட வேண்டியதும் அவசியம்.
உங்களில் யாராவது ஒருவர் தனது சகோதரரை நேசித்தால், அதனை அவரிடம் தெரிவித்து விடுங்கள்." (அபூ தாவூத்)

ஆனால் நமது சமூகத்தில் இவ்வாறு கணவன் மனைவியரிடையே அன்பை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொள்வதற்கு நாம் இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லை! அதிலும் குறிப்பாக கணவன்மார்கள்!
நபியவர்களின் வாழ்க்கையில் இருந்தாவது பாடம் கற்போமே!
நபியவர்கள் தம் மனைவி ஆயிஷா (ரளி) அவர்கள் மீது தமக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்திக் காட்டிட சிறப்பான பெயரொன்றைச் சூட்டி அவர்களை அழைப்பார்கள்.

நீங்கள் உங்கள் மனைவிக்கும், உங்கள் மனைவி உங்களுக்கும் இவ்வாறு அழகிய பெயர்களை சூட்டி அவர்களை அழைத்து உங்கள் அன்பை பரஸ்பரம் வெளிப்படுத்திக் கொள்ளலாம் தானே!

உங்கள் துணை உங்களுக்கு ஒரு உதவி செய்து விட்டாரா? "ஜஸாகல்லாஹ் க்ஹைர்" சொல்லலாம் தானே! அதுவும் உங்கள் உள்ளத்திலிருந்து! என்னது? கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருப்பார்களா, என்ன?" என்று கேட்காதீர்கள்! நன்றி சொல்லிப்பாருங்கள்! காதல் வெளிப்படுகிறதா என்றும் சோதித்துப் பாருங்கள்! அதிசயம் நடக்கும் உங்கள் இல்லற வாழ்வில்!

உங்கள் துணைவர் ஃ துணைவி எங்காவது பயணம் புறப்படுகிறாரா? ஃபீ அமானில்லாஹ், அல்லது ஃபீ ஹிஃப்ஸில்லாஹ் என்று முகம் மலர்ந்து சொல்லி அனுப்புங்களேன்!

திடீரென்று ஒரு ளுஆளு அனுப்புங்களேன், உங்கள் துணைவரை நீங்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பதை அதன் மூலம் சொல்லுங்களேன்!
நீங்கள் வேலை நிமித்தம் வெளியே சென்றிருக்கும்போது தொலைபேசியில் அழைத்து விசாரியுங்களேன்! அவரை நீங்கள் பிரிந்திருப்பது உங்களை எவ்வளவு வாட்டுகிறது என்று அழகிய வார்த்தைகளால் தெரிவியுங்களேன்!

எனக்குப்புரிய வை!

இரண்டாவது காதல் மொழி: எனக்குப்புரிய வை! (Show Me!)
ஒரு அன்பளிப்பை பரிசாக வழங்குங்கள் உங்கள் துணைக்கு! அது அப்படி ஒன்றும் பெரிதாக இருந்திட வேண்டும் என்ற அவசியம் இல்லை! அவர்களுக்கு எது மகிழ்ச்சியூட்டுமோ அது போதும். ஒரு முழம் பூ, அல்லது அவர்களுக்குப் பிடித்த ஒரு இனிப்பு அல்லது பண்டம், அவர்களுக்குப் பிடித்த கலரில் ஒரு கைக்குட்டை, ஒரு புத்தகம்.....

"அன்பளிப்புகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள், அது அன்பை வளர்க்கும்" என்பது நபிமொழி

உங்கள் துணைவரை நீங்கள் பார்க்கும்போதெல்லாம் புன்சிரிப்பு ஒன்றைத் தவழ விடுங்களேன்!

"உங்கள் சகோதரரை புன்புறுவலுடன் சந்திப்பதும் ஒரு தர்மம்" என்பதும் நபிமொழி தானே!

"மிகச் சிறிய நற்செயல்தானே என்று குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம்; அது உங்கள் சகோதரரைப் புன்முறுவலுடன் பார்ப்பதாயினும் சரியே!" (ஸஹீஹ் முஸ்லிம்)

புன்புறுவல் காட்டுவது, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது, நகைச்சுவை உணர்வுடன் நடந்து கொள்வது - இவையெல்லாம் வீட்டுக்கு வெளியே மட்டுமே என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோம் நாம்!

வீட்டில் கலந்துரையாடல்கள் எல்லாம் பெரிய சீரியஸ் சமாச்சாரமாக ஆக்கி விட்டிருக்கின்றோம்!

மனைவி, வீட்டு வேலைகள் அனைத்தையும் தானே சுமந்து கொண்டு கஷ்டப்படுகின்றாரா? நீங்கள் அவற்றுள் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம் தானே?

பாத்திரங்களைக் கழுவுவது ஒன்று போதுமே!
உங்கள் துணைக்கு உடல் நலம் இல்லையா? உங்கள் அன்பை வெளிப்படுத்திடும் அருமையான வாய்ப்பு அது!
அருகில் அமர்ந்து கொண்டு ஆதரவாகக் கரம் பிடித்து, தலையைத் தடவிக்கொடுத்தால் உங்கள் துணை விரைவில் உடல் நலம் பெற்று விடுவார் தானே!

என்னைத் தொடு!

மூன்றாவது காதல் மொழி : என்னைத் தொடு! (TOUCH ME!)
கணவன் மனைவியர் தொடுதலைப் பற்றி சொல்லியா தெரிய வேண்டும் என்று கேட்பீர்கள்! ஆம்! நிறைய சொல்ல வேண்டியிருக்கின்றது!
ஏனெனில் - திருமணமான புதிதில் இருக்கும் தொடுதல்கள் எல்லாம் நாட்களாக ஆக படிப்படியாகக் குறைந்து போய் விடுகிறது பலருக்கு! பெரும்பாலும் இதில் ஏமாற்றத்துக்கு ஆளாவோர் மனைவியர்களே!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும், கணவன் மனைவியருக்குள் தொடுதல் என்பது கொஞ்சமும் குறைந்து போய் விடக்கூடாது.
இனி அன்றாடம் இதனை செயல்படுத்துவது பற்றி கொஞ்சம் எழுதுவோம். தவறாக எண்ண வேண்டாம்!
உங்கள் கணவர் வேலைக்குப் புறப்படுமுன்பு, அவரை அப்படியே அணைத்து ஒரு முத்தம் கொடுத்து அனுப்புங்களேன்! இது உங்கள் வழக்கமாகவே ஆகி விட வேண்டும்!!
வேலையை விட்டு வீட்டுக்குத் திரும்பி விட்டால், கை கால்களைப் பிடித்து விட்டு, கழுத்துப் பகுதியிலும், முதுகிலும் மஸாஜ் (massage) செய்து விடுங்களேன். நாள் முழுவதும் ஏற்படுத்திய களைப்பு அடியோடு பறந்து போய் விடுமே!
ஒரே பாத்திரத்தில் இருவரும் சேர்ந்து குளியுங்கள்! ஒரே குவளையில் வாய் வைத்து அருந்துங்கள்! இவைகளும் நபிவழிகள் தான் என்பதை மறந்து விட வேண்டாம்.
மனைவியுடன் பேசும்போது கூட கையைப் பிடித்துக் கொண்டு பேசுங்களேன்!
உறவுக்கு முன் – “முன் விளையாட்டு”  (FOREPLAY) கூட நபி வழிதானே!
நபிமொழிகள் நிறைய இருக்கின்றன; விரிவஞ்சி ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்வோம்:
அண்ணலார் (ஸல்) அவர்களின் நபித்துவப் பணியின் சுமையை நாமெல்லாம் அறிவோம்.
அழைப்புப்பணி, ஷரீஅத் சட்டங்களை நிலைநிறுத்துதல், நபித்தோழர்களுக்குக் கல்வி, இஸ்லாமிய அரசைப் பாதுகாத்தல் - இவை மட்டுமல்லாமல் - அவர்களுடைய தொழுகை, நோன்பு, மற்றும் குர்ஆன் ஓதுதல், கால் வலிக்க இரவில் எழுந்து தொழுதல்... இவை எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்கியது போக தம் மனைவியருக்கென்று ஒதுக்கிட என்ன நேரம் மிச்சமிருந்திருக்கும் நபியவர்களுக்கு?
இது குறித்து இமாம் இப்னுல் கைய்யும் அவர்கள் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:

When he prayed `Asr he used to pass by his wives and be informed of their affairs, and when night came he would go to the one whose turn it was.

`A'ishah said, 'He never stayed with any of us more than the others, and it rarely happened that he did not visit all of us and come closer to each of us without touching until he reached the one who had the turn so he would stay overnight with her.'

நபியவர்கள் அஸ்ர் தொழுகை தொழுததும் - தம் மனைவியர் அனைவரிடமும் அவர்கள் செல்வார்கள்; அவர்களின் நலன் குறித்து கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்; இருள் சூழ்ந்ததும் - எந்த மனைவி வீட்டில் அன்று தங்க வேண்டுமோ அங்கே சென்று தங்குவார்கள்!

ஆயிஷா அவர்கள் சொல்கிறார்கள்: நபியவர்கள் எந்த ஒரு மனைவியிடமும் மற்றவர்களை விட சற்றே அதிகமாக தங்கி விட மாட்டார்கள்; எங்கள் அனைவரையும் சந்திக்காமல் அவர்கள் ஒருநாளும் இருந்ததில்லை! எங்கள் ஒவ்வொருவரிடமும் மிக நெருக்கமாக இல்லாமல் அவர்கள் செல்வதே இல்லை! எங்கள் ஒவ்வொருவரையும் தொடாமலும் அவர்கள் சென்றது கிடையாது! இவ்வாறு அனைத்து மனைவியரிடமும் நேரத்தைச் செலவிட்ட பிறகே - அன்று எந்த மனைவியின் வீட்டில் தங்க வேண்டுமோ அங்கே சென்று தங்குவார்கள்!

இதில் கவனிக்க வேண்டியது இது தான்:

எங்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் தொடாமல் சென்றதே இல்லை!
அப்படியானால் ஒவ்வொரு நாளும் மனைவியைத் தொடுவது என்பது சுன்னத் என்றல்லவா ஆகிறது!

ஒரு நிமிடம் - மேலே படிப்பதை நிறுத்து விட்டு - இது விஷயத்தில் உங்களை நீங்களே - எடை போட்டு விட்டு மேலே தொடருங்கள்.
அடுத்து நடந்த சம்பவம் ஒன்று - சற்றே கற்பனையுடன்!
ஒரு பெண் - மண விலக்கு கேட்டு (ஃகுலா) விண்ணப்பிக்கிறார்; ஜமாஅத்தில் விசாரிக்கிறார்கள்; கொடுக்கல் வாங்கலில் பிரச்னையாம்; வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய கணவன் - மனைவியைத் தொடக்கூடாது என்று "அம்மா" உத்தரவு போட்டு விட்டார்களாம்;
அந்த இளம் மனைவி சொல்கிறார்: அவர் பயணம் வந்து பதினைந்து நாட்கள் ஆகி விட்டன! அவருடைய விரல் நுனி கூட இன்னும் என் மீது படவில்லை!!! இவருடன் நான் எப்படி வாழ்வது?
நீங்கள் - இந்தத் தொடுதல் குறித்து இன்னும் நிறைய சிந்திக்க வேண்டும்!


எங்கள் துணைவர்களை எங்களின் கண்களுக்குக் குளிர்ச்சியாக ஆக்கி வைப்பாயாக!

நாம் அடிக்கடி கேட்கின்ற துஆக்களுள்  ஒன்று திருமறை - அத்தியாயம் 25 வசனம் 74 - ல் வரும் பின் வரும் துஆ தான்:
மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா!  எங்கள் மனைவியரிடமும், எங்கள் குழந்தைகளிடமும்; இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் இறையச்சம் உடையவர்களுக்கு  எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!” என்று பிரார்த்தனை செய்வார்கள். (குர்ஆன் 25: 74)

மேற்கண்ட திருமறை வசனத்தில் "மின் அஸ்வாஜினா" ( min azwaajinaa) என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு என்ன?
அஸ்வாஜினா என்பதற்கு எங்களின் மனைவியர் என்று மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. இது சரியா என்பதே நம் கேள்வி.
ஸவ்ஜ் என்பது ஒருமை. அஸ்வாஜ் என்பது பன்மை. ஸவ்ஜ் என்பதன் முழுமையான பொருள் என்ன?
ஆங்கிலத்தில் ஸவ்ஜ் என்பதற்கு one of a pair, partner, couple, mate, husband, wife - என்றெல்லாம் மொழிபெயர்க்கப்படுகின்றது.
"ஜோடி" என்பது பொருத்தமான மொழிபெயர்ப்பாக தெரிகிறது. தமிழில் இதற்கு - துணை, துணைவர், துணைவி - என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம்.
மேற்கண்ட திருமறை வசனத்தின் முதல் பகுதியை -
மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் துணைவர்களிடமும், எங்கள் குழந்தைகளிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!”
என்று மொழி பெயர்ப்பதே சரியானது.  (அல்லாஹ்வே மிக அறிந்தவன்.)
முஹம்மது அஸத் அவர்கள் தமது ஆங்கில மொழிபெயர்ப்பில் azwaaj - என்பதற்கு spouses - என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.
"and who pray: "O our Sustainer! Grant that our spouses and our offspring be a joy to our eyes, and cause us to be foremost among those who are conscious of Thee!"
Spouses  என்பதற்கு துணைவர்கள் என்பதே சரியான மொழிபெயர்ப்பு!
எனவே - கணவர்கள்  துஆ செய்திடும்போது “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் குழந்தைகளிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!"  - என்றும்,
அது போலவே - மனைவியர் துஆ செய்திடும்போது “எங்கள் இறைவா! எங்கள் கணவர்களிடமும், எங்கள் குழந்தைகளிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!" - என்றும் பொருள் எடுத்துக் கொள்ளலாம்.
துணைவர்கள் என்ற மொழிபெயர்ப்பை நாம் வலியுறுத்துவதற்கு இன்னொரு காரணம்: அல்லாஹு  தஆலா கணவனையும் மனைவியையும் இங்கே ஒரே "அந்தஸ்தில்" வைத்து துஆ கேட்கச் சொல்லியிருக்கும் அழகினை நமது மனைவிமார்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்!
அடுத்து - கண்களுக்குக் குளிர்ச்சி – என்பதன் பொருளை சற்றே ஆழமாகப் பார்ப்போம்:

அந்தக் கால அரபுக்கள் - பாலைவனத்தில் பயணிக்கும்போது மணல் புயல் வீசினால் தங்களைக் காத்துக் கொள்ள ஏதாவது குகை போன்ற ஒதுங்குமிடம் கிடைத்து விட்டால் - "என் கண்கள் குளிர்ந்து விட்டன!" – என்பார்களாம் (குர்ரத ஐனைய! “qurrata ‘ainayya”).

இந்தப் பின்னணியில் நாம் மேலே சுட்டிக்காட்டிய துஆவை எடுத்துக் கொண்டோம் என்றால் – கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ, குழந்தைகள் பெற்றோர்களையோ அல்லது பெற்றோர்கள் குழந்தைகளையோ பார்த்த மாத்திரத்திலேயே – தங்களுக்கு “அடைக்கலம்” கிடைத்து விட்டது போன்று அவர்கள் உணர வேண்டும்!

இதனை – இன்றைய சூழலோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். கணவன் பொருள் ஈட்டவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெளியே செல்கிறார். வெளி உலகம் என்பது “பாலைவனப் புயல்” போன்றது எனில் அவர் வீட்டுக்குத் திரும்பும் போது – தனக்கு அடைக்கலம் தரும் இல்லத்துக்கு வந்து விட்டதாக அவர் உணர வேண்டும். இதனை மனைவியர் புரிந்து கொள்வது நலம்.
அது போலவே - மனைவியர் வீட்டிலிருக்கும்போது - சில உறவுகள் - வீட்டிலேயே ஒரு பாலைவனப் புயலைக் கிளப்பி விட்டுப் போயிருப்பார்கள். மனைவி சோர்ந்து போயிருப்பார். கணவர் வரட்டும் என்று காத்திருப்பார். கணவனைக் கண்ட மாத்திரத்திலேயே - தனது உணர்வுகளைக் கொட்டித் தீர்க்க முன் வருவார். கணவன் அடைக்கலம் தந்து அரவணைத்துக் கொள்ள வேண்டும் மனைவியை!
சரி தானே!

"அவர்களுடன் நீங்கள் நெருங்கிய நண்பர்களாக நடந்து கொள்ளுங்கள்!"

திருக் குர்ஆனை நாம் ஆழமாக புரிந்து கொள்ள - அதன் மொழிபெயர்ப்புகள் போதாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும்.
ஒரு எடுத்துக் காட்டு:
வ ஆஷிரூஹுன்ன பில் மஃரூஃப்!
- இது சூரத்துன் நிஸாவின் 19 வது வசனத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே. இதற்கு எப்படி மொழிபெயர்க்கப் படுகிறது என்று பார்ப்போமா?
"இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - இது தமிழில் குர்ஆன் வலை தளத்தின் மொழிபெயர்ப்பு. ஜான் ட்ரஸ்ட் மொழிபெயர்ப்பும் இதுவே.
"மேலும் அவர்களுடன் அழகான முறையிலும் நடந்து கொள்ளுங்கள்" - இது சவூதி அரசால் வெளியிடப்பட்டுள்ள சங்கைமிக்க குர் ஆன் மொழிபெயர்ப்பில் இருந்து.
"அவர்களோடு நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள்." - இது இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்டின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பிலிருந்து.
"மேலும் அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத்தன்மையுடனும்) நடந்து கொள்ளுங்கள்" - இது அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்களின் மொழிபெயர்ப்பு.
திருமண ஃகுத்பா ஒன்றில் உரையாற்றும் போது - இவ்வசனத்துக்கு - "உங்கள் இல்லறத்தை நல்லறமாக ஆக்கிக் கொள்ளுங்கள்!" என்று மொழியாக்கம் செய்தார் அறிஞர் ஒருவர்! ஆனால் இவ்வசனத்தில் இல்லறம் என்ற சொல்லும் இல்லை! நல்லறம் என்ற சொல்லும் இல்லை!
அரபி மூலத்தில். இந்த இரண்டு சொற்களுக்கும் என்ன பொருள் என்று பார்ப்போம்:
ஒன்று: ஆஷிர் (அய்ன் - ஷீன் - ரா)
ஆஷிர் என்பதற்கு - நெருக்கம், நெருங்கியிருப்பவை, நெருங்கிய தோழமை, நெருக்கமான நண்பன் – என்றெல்லாம் பொருள் செய்யப்படுகின்றன.
அடுத்து இச்சொற்றொடரில் இடம் பெற்றுள்ள இன்னொரு சொல்: மஃரூஃப்!
மஃரூஃப் - என்ற இச்சொல்லுக்கு "அறியப்பட்டது" என்பதே சரியான பொருளாகும்.
அதாவது - இஸ்லாம் கட்டளையிட்டுள்ள எல்லாவிதமான நன்மைகளையும் குறிக்கும் சொல் இது என்கிறது ஜவாஹிருல் குர்ஆன் எனும் திருக்குர்ஆன் விரிவுரை நூல்.
இவ்வாறு - இந்த இரு சொற்களின் விரிவான பொருள்களை கவனித்துப் பார்க்கும் போது
"(மார்க்கம் அனுமதித்துள்ள) நன்மையான காரியங்கள் அனைத்திலும் அவர்களுடன் மிக நெருங்கிய உற்ற நண்பர்களாக நடந்து கொள்ளுங்கள்"
- என்று மொழிபெயர்க்கலாமோ என்று தோன்றுகிறது.
"behave with them as intimate companions in all the good things that are allowed in Islam "
- என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என்றும் தெரியவில்லை.
ஆனால் முஹம்மத் அஸத் அவர்கள் மட்டுமே ஆங்கிலத்தில் மிக அழகாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள்:
"And consort with your wives in a goodly manner;"
Consort - என்பதற்கு companion என்று ஒரு பொருள் உண்டு!
சரி, நெருக்கம் என்றால் என்ன?
கணவன் – மனைவியர் தங்களின் இல்லற வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களிலும் நெருங்கி வாழ்வதைத் தான் நெருக்கம் என்ற சொல் பொதுவாகக் குறிக்கின்றது.
அறிவு பூர்வமான நெருக்கம்,ஆன்மிக விஷயங்களில் உணர்வு பூர்வமான நெருக்கம், அன்பு, காதல், இரக்கம் போன்ற விஷயங்களில் இதய பூர்வமான நெருக்கம், கணவன் மனைவி – இருவரிடமும் சிறப்பாக அமைந்திருக்கின்ற நற்குணங்களினால் (unique positive qualities) ஏற்படுகின்ற நெருக்கம், இறுதியாக – இவை அனைத்தும் ஒன்று சேர்வதால் ஏற்படுகின்ற உடல் ரீதியான நெருக்கம்  - இவை அனைத்திலும் ஏற்படுகின்ற நெருக்கமே பரிபூரணமான நெருக்கம் ஆகும்!
கணவன்மார்களே! மனைவிமார்களே! நாம் கேட்க விரும்பும் கேள்வி இது தான்:
நாம் நமது வாழ்க்கைத் துணையுடன் நெருங்கிய நண்பர்களாகத் தான் வாழ்க்கை நடத்துகின்றோமா?  நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய கேள்வி இது?

பாலுறவு குறித்து மனம் திறந்து பேசுங்கள்!

அன்னை ஆயிஷா ரலி அவர்கள் ஒரு மிகச் சிறந்த அறிவாளி! Super Intellect! நபி ஸல் அவர்கள் ஆயிஷா ரலி அவர்களை மிகவும் நேசித்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். நபியவர்கள் ஒரு முறை சொன்னார்கள்:
“ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு) எனக்கு வருவதில்லை….” (நூல்: புகாரி)
அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் வடிகட்டிப் பேசுவதில் வல்லவர்கள். எதைப் பேச வேண்டும்; எதனை மறைத்து விட வேண்டும். எதனை சூசகமாக உணர்த்திட வேண்டும் என்பதில் கை தேர்ந்தவர்கள்.
இரண்டு சான்றுகள்:

ஒன்று:

ஒரு நீண்ட நபிமொழியில் இவ்வாறு வருகிறது:
“…..ஆகவே, அவர்கள் (தம் சார்பாக) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் அவர்களை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, (சற்று) கடுமையாகப் பேசி, உங்கள் மனைவிமார்கள் – அபூபக்ருடைய மகளான ஆயிஷாவின் விஷயத்தில் தாங்கள் நடந்து கொள்வது போன்றே பிற மனைவிமார்களிடமும் நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றார்கள் என்று கூறினார்கள்.
நான் (ஆயிஷா) அமர்ந்து கொண்டிருக்க, அவரது குரல் உயர்ந்தது. அவர் என்னைக் குறை கூறித் திட்டினார். எந்த அளவுக்கென்றால், அல்லாஹ்வின் தூதர் நான் பதில் பேசுவேனா என்று எதிர்பார்ப்பது போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே, நான் ஸைனபுக்கு பதில் சொல்லி, இறுதியில் அவரை வாயடைக்கச் செய்து விட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, இவள் (உண்மையிலேயே) அபூபக்ருடைய மகள் தான் என்று கூறினார்கள். (நூல்: புகாரி)

ஆயிஷா அவர்கள் ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் அவர்களிடம் எப்படிப் பேசினார்கள்? என்ன சொன்னார்கள், எப்படி வாயடைக்கச் செய்தார்கள் – என்பதையெல்லாம் வெளிப்படையாகப் பேசாமல் மறைத்து விட்டார்கள் பார்த்தீர்களா?

இரண்டு:

இன்னொரு நீண்ட நபிமொழியின் ஒரு பகுதி இது:
அபூ பக்ர்(ரளி) (என்னருகே) வந்தபோது நபி (ஸல்) அவர்கள் தங்களின் தலையை என்னுடைய மடி மீது வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ‘நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் தங்க வைத்துவிட்டாயே? அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களிடமும் தண்ணீர் இல்லை’ என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, தங்களின் கையால் என்னுடைய இடுப்பில் குத்தினார்கள்.(நூல்: புகாரி)

அபூபக்ர் அவர்கள் அன்னை ஆயிஷாவை எப்படியெல்லாம் விமர்சித்தார்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் – “அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு” – என்கிறார்கள். எவ்வளவு அறிவு நுட்பம் பார்த்தீர்களா?

ஆனால் – அதே அன்னை ஆயிஷா அவர்கள் அண்ணலாருடன் தனது பாலுறவு வாழ்க்கையை பற்றிய குறிப்புகளை ஏன் மறைக்காமல் இந்த உம்மத்துக்கு வெளிப்படுத்திக் காட்டினார்கள் என்பது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்.

பின் வரும் நபிமொழிகளைக் கவனியுங்கள்:
அன்னை ஆயிஷா (ரளி) அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியர்களில் ஒருவரை முத்தமிட்டுவிட்டு, ஒளூச்செய்யாமலே தொழச் சென்றார்கள். ஆயிஷா (ரளி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் உர்வா கூறுகிறார், “நான் ஆயிஷாவிடம் ‘அது நீங்களாகத்தான் இருக்கும்?’ என்றேன். அதற்கு அவர்கள் புன்னகைத்தார்கள்.”         (ஸுனன் திர்மிதீ, ஸுனன் அபூதாவூத்)

தன் கணவர் தன்னை முத்தமிட்டதை மறைமுகமாக ஏன் அறிவிக்கின்றார்கள்? உர்வா அவர்களும் விடாமல் அது அன்னை ஆயிஷா அவர்கள் தாம் என்பதை விளக்க வைத்து விட்டார்களே!
நபி அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியை) முத்தமிடுவார்கள். மேலும், நோன்பு நோற்ற நிலையில் கட்டியணைப்பார்கள். ஆனால், அவர்கள் தம் இச்சையைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் சக்தியுடையவராக இருந்தார்கள் என, ஆயிஷா(ரளி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும்-எனக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள ஒரு பாத்திரத்திலிருந்து குளிக்கக் கூடியவர்களாக இருந்தோம். எனக்காக கொஞ்சம் தண்ணீரை விட்டு வையுங்கள்; எனக்காக கொஞ்சம் விட்டு வையுங்கள் என நான் கூறுகின்ற வரை அவர்கள் என்னை முந்திக் கொள்வார்கள் என ஆயிஷா (ரளி) அவர்கள் கூறியதாக மூஆதா (ரளி) அறிவிக்கிறார்கள். அவ்விருவரும் கடமையாகக் குளிக்க வேண்டியவர்களாக இருந்தனர் எனவும் கூறுகிறார்கள்.

நான் மாதவிடாய் வந்த நிலையில் (ஒரு பாத்திரத்தில்) பருகிவிட்டு பிறகு நபி (ஸல்)  அவர்களுக்கு அப்பாத்திரத்தைக் கொடுப்பேன். நான் எங்கு வாய் வைத்தேனா அதே இடத்தில் தங்களது வாயை வைத்து குடிப்பார்கள். எலும்புடன் ஒட்டியிருக்கும் இறைச்சியை நான் கடித்துவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொடுப்பேன். நான் எங்கு வாய் வைத்திருந்தேனோ அங்கேயே வாயை வைப்பார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா (நூல்: முஸ்லிம்)

அன்னை ஆயிஷா (ரளி) அவர்களிடம் ‘அதா’வு என்பவர் கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா என்று நேரடியாக கேட்ட போது, பார்ப்பதற்கு அனுமதி உள்ளதாக சூசகமாக உணர்த்தினார்கள் என்ற ஹதீஸ் இப்னு ஹப்பானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணலார் அவர்கள் – தம்மை முத்தமிடுவது பற்றி, கட்டியணைத்துக் கொள்வது பற்றி, உடலுறவு கொள்வது பற்றி, குளிப்பது பற்றி, மாத விலக்கு நேரத்தில் நபியவர்களின் செயல்கள் பற்றியெல்லாம் ஏன் அவர்கள் வெளிப்படையாகப் பேசிட வேண்டும். இவை அனைத்தும் அவர்களது தனிப்பட்ட “இல்லற விஷயங்கள்” என்று மூடி மறைத்திருக்கலாமே? ஆனால் அப்படி செய்யவில்லை! அதற்குக் காரணம் இருக்கின்றது!
இந்த உம்மத் – பாலுறவு குறித்து அலட்சியம் செய்து விடக்கூடாது என்பதே அதற்கான வலுவான காரணமாக இருக்க முடியும்.
ஆனால் நமது நிலை என்ன? பாலுறவு குறித்து வெளிப்படையாகப் பேசிட நமக்கு மிகப்பெரிய தயக்கங்கள் உண்டு!

நமது இறையச்சம் தான் இதற்குக் காரணமா என்றால் நிச்சயமாக இல்லை! நாம் ஒன்றும் நமது அன்னையர்களை விட இறையச்சம் உடையவர்களா என்ன?

அடுத்து நமது வெட்க உணர்ச்சி தான் காரணமா என்றால் – அதனை நாம் உடைத்துத் தான் ஆக வேண்டும்.

“பெண்களில் அன்ஸார்களின் பெண்களே நல்லவர்கள். அவர்கள் மார்க்கத்தைக் கேட்டு தெளிவு பெறுவதிலிருந்து அவர்களது வெட்கம் அவர்களை தடுக்கவில்லை” என ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

அல்லது – சொல்லித்தெரிவது அல்ல இந்தக் கலை – என்ற அலட்சியமா என்றால் – ஆம்! அந்த அலட்சியம் தான்!

ஆனால் இந்த அலட்சியம் தான் நமது சமூகத்தின் கணவன் மனைவியர் உறவுகளை மிகுந்த அளவுக்கு பாதித்திருக்கின்றது! இதனை நாம் உணர்ந்து தான் ஆக வேண்டும்.

நாம் ஒன்றும் பாலியல் கல்வியை “சொற்பொழிவு மன்றங்களில்” ஒலிபெருக்கி வைத்து பரப்புங்கள் என்று சொல்லவில்லை! அது தேவையும் இல்லை. நாம் சொல்ல வருவது – இது குறித்த “கல்வியறிவை” மஸ்ஜித்களில் வைத்து நமது இளைய சமூகத்துக்கு ஊட்டுங்கள் என்பது தான்.

இதன் அடுத்த கட்டம் தான் – கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் தங்களின் பாலுறவுத் தேவைகள் குறித்து மனம் திறந்துப் பேசிட வேண்டிய கட்டமாகும். கணவனும் தன் தேவைகளை மனைவியிடம் பேசிட வேண்டும். மனைவியும் கணவனிடத்தில் பேசிட வேண்டும். இதுவே நாம் நமது இளைய தலைமுறை கணவன்மார்களுக்கும், மனைவியருக்கும் வலியுறுத்திச் சொல்வதாகும்.

இது விஷயத்தில் – பெண்கள் தயங்குவதற்குக் காரணம் இருக்கிறது. அது அவர்களின் இயல்பான வெட்க உணர்ச்சி. இந்த வெட்கத்தையும் கணவன்மார்களே உடைத்தெறிந்திட வேண்டும். இதனை நாம் வலியுறுத்துவதற்குக் காரணம் – மனைவியின் பாலுறவுத் தேவைகள் சரிவர நிறைவேறாத நிலையில் தமது அளவுக்கு மீறிய வெட்க உணர்ச்சியினால் அது குறித்துக் கணவனிடம் பேசத் தயங்கியதால் ஏற்பட்ட விளைவுகள் என்ன?
மண முறிவு! அல்லது திருப்தியற்ற இல்லற வாழ்க்கை! அல்லது கணவனுக்கே துரோகம்!

ஆனால் இன்றைய பெண்களோ – இந்த விஷயத்தை வெளியே கொண்டு வரத் தொடங்கி விட்டார்கள். அவர்கள் பெண் கவுன்ஸலர்களை அணுகுகிறார்கள். ஒரு இஸ்லாமியப் பெண் அறிஞரே இது குறித்து விரிவாக – குறிப்பாக இளைஞர்களுக்கு பாலியல் அறிவுரைகளை விரிவாகவும் வெளிப்படையாகவும் எழுதியிருக்கிறார்கள். அவர் பெயர்: ருகையா வாரிஃத் மக்ஸூத் அவர்கள்.

விழித்துக் கொள்ள வேண்டியது இளைய ஆண் வர்க்கமே!

குறிப்பாக நாம் இங்கே கணவன்மார்களுக்கு வலியுறுத்தும் பாலுறவுப் பாடங்கள்:

1. முத்தமிடுங்கள் – உங்கள் மனைவியை! அடிக்கடி முத்தமிடுங்கள்! எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முத்தமிடுங்கள்! ஒரு ஐந்து வினாடியாவது தொடரட்டும் உங்கள் முத்தம்.

2. முன் விளையாட்டு இன்றி பாலுறவு வேண்டாம்! முத்தமும் இன்சொற்களும் – பாலுறவுக்கு முன் மிக அவசியம். முன் விளையாட்டின் மூலமே மனைவி நனைகிறார் (becoming wet). பாலுறவுக்குத் தயாராகிறார். முன் விளையாட்டு இன்றி பாலுறவைத் துவக்கினால் – மனைவியருக்கு அது சிரமம் ஆகி விடும். மேலும் மனைவியின் தேவை நிறைவேற்றபடாமலேயே கணவன் தன் தேவையை முடித்துக் கொண்டு விடுவான். எச்சரிக்கை!

3. நேரம் வாய்க்கும்போதெல்லாம் – மனைவியைக் கட்டிப்பிடித்துக் கொள்ளுங்கள். – அது சமையல் அறையாக இருந்தாலும் சரியே! தனிமை கிடைக்கும்போதெல்லாம் கட்டியணைத்துக் கொஞ்சுங்கள்!

4. பாலுறவில் உங்கள் துணைக்கு என்னென்னவெல்லாம் பிடிக்கும் என்பதை வெளிப்படையாகப் பேசித்தெரிந்து கொள்ளுங்கள். தயக்கம் வேண்டாம் என்று உங்கள் துணையை ஊக்கப் படுத்துங்கள்.

5. நான்கு மாதங்களுக்கு மேலாக உங்கள் மனைவியைப் பிரிந்து செல்ல வேண்டாம்! அது எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் சரி! ஷரீஅத்தில் அதற்கு இடமில்லை!

6. சந்தேகங்களை – உடனுக்குடன் மார்க்க அறிஞர்கள் அல்லது திருமண ஆலோசகர்களை அணுகி – விளக்கம் பெற்றுக் கொள்ளுங்கள். பாலுறவு குறித்து பல தவறான “நம்பிக்கைகள்” குறிப்பாக கணவன்மார்களிடத்தில் உண்டு. இவை களையப்பட வேண்டும்.

7. ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் உணவுப்பழக்கங்களைக் கை விடுங்கள். குறை ஏற்படின் தகுந்த மருத்துவரை மட்டும் அணுகுங்கள்.

8. உடலை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். மனைவியர் தம் கணவன்மார்களுக்காகத் தங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். எத்தனை வயதானாலும் சரியே! அலட்சியம் வேண்டாம்.

9. படுக்கையறையில் விவாதங்கள் வேண்டாம்! ஒரே ஒரு மிகச்சிறிய சொல் கூட ஒரு இரவையே வீணாக்கி விடும்.

10. பாலுறவு – உங்கள் இல்லறத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்பதை எப்போதும் மறந்து விட வேண்டாம்.

11. அனைத்து விஷயங்களிலும் கணவன் மனைவி இருவரும் நெருக்கமான நண்பர்களாக வாழுங்கள். ஏனெனில் – பாலுறவு என்பது – இரண்டு உடல்கள் சேர்வது மட்டும் அல்ல! இரண்டு இதயங்களும் சேர்வது தான்!

பாலுறவுக்கு மென்மை மிக மிக அவசியம்!

(Tips on Sex)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “மென்மை ஒரு விஷயத்திலிருந்தால் அதை அலங்கரிக்கவே செய்யும். மென்மை எந்த விஷயத்தில் அகற்றப்பட்டுள்ளதோ அதைக் கோரப்படுத்திவிடும்.” (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)
மென்மை கடைபிடிக்கப்பட்டால் பாலுறவு கூட அலங்காரம் தான்!
**
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஜரீர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எவர் மென்மையை இழந்தாரோ அவர் நன்மையை இழந்தார்.” (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)
பாலுறவில் போய் நன்மையை இழப்பார்களோ?
**
முதலிரவில்....
குறிப்பாக - முதலிரவில் கணவன் மென்மையை அவசியம் கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் முதல் அனுபவமே கசந்து போய் விட்டால்? சற்றே சிந்தியுங்கள்.
திருமணம் செய்து வைக்கும் இமாம், திருமணம் முடிந்தவுடன் மாப்பிள்ளையை அழைத்து இது சம்பந்தமாக அறிவுறுத்தி அனுப்பி வைத்தல் மிக நன்று!
**
பாலுறவில் முரட்டுத் தனம் வேண்டாம்!
அனஸ்(ரளி) அறிவிக்க்கிறார்கள்: (ஒரு பயணத்தில் என் தாயார்) உம்மு சுலைம்(ரளி) அவர்கள் பயணப் பொருட்களுடன் (அவற்றின் காவலராக) இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் அடிமையான ‘அன்ஜஷா’ (நபியவர்களுடைய) துணைவியரின் ஒட்டகங்களைப் பாட்டுப் பாடி ஓடச் செய்து கொண்டிருந்தார்.
அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அன்ஜஷ்! நிதானமாக ஓட்டிச் செல்! (ஒட்டகச் சிவிகைக்குள் இருக்கும்) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே!’ என்றார்கள். (நூல்: புகாரி)
பாடம்: பெண்கள் மென்மையானவர்கள். அவர்களை மென்மையாகவே காயாண்டிட வேண்டும்:
**
பாலுறவில் அவசரம் வேண்டாம்!
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரளி) அறிவிக்கிறார்கள்: தபூக் போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த என்னிடம் நபி(ஸல்) அவர்கள், ‘நீ இரவில் மதீனாவுக்குள் நுழைந்த கையோடு உன் வீட்டாரிடம் சென்றுவிடாதே!
வெளியூர் சென்ற கணவரைப் பிரிந்திருக்கும் பெண் சவரக்கத்தியைப் பயன்படுத்தித் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் வரை, தலைவிரி கோலமாயிருக்கும் பெண் தலைவாரிக்கொள்ளும் வரை பொறுமையாயிரு!” என்று கூறிவிட்டு, ‘புத்திசாலித்தனமாக நடந்து கொள்; புத்திசாலித்தனமாக நடந்துகொள்!” என்று கூறினார்கள். (நூல்: புகாரி)
கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போய் விடும்? எதற்கு அவசரம்?
**
பாலுறவில் நிதானமான அணுகுமுறை தேவை!
"நிதானம் என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருவது; அவசரம் என்பது ஷைத்தானிடமிருந்து வருவது!" (நூல்: திர்மிதி)
பாலுறவுக்கும் நிதானம் தேவை தான்! இதில் உங்களை அவசரப்படுத்துவதெல்லாம் ஷைத்தான் தான்!
**
முன் விளையாட்டு – வலியுறுத்தப்பட்ட சுன்னத்!
இமாம் முனவி அவர்கள் இவ்வாறு வலியுறுத்துகிறார்கள்: “பாலுறவுக்கு முன் – முன்விளையாட்டும் அழுத்தமான காதல் முத்தங்களும் வலியுறுத்தப்பட்ட நபிவழியாகும். (ஸுன்னா முஅக்கதா) . அதற்கு மாற்றமாக நடப்பது விரும்பத்தகாததாகும் (மக்ரூஹ்)”. (ஆதாரம்: ஃபைழ் அல்-காதிர் ஷரஹ் அல்-ஜாமிஃ அல்-ஸகீர் 5:115)
முன் விளையாட்டு இல்லாத உறவில் கணவனின் தேவை விரைவில் நிறைவேறிவிடும்! ஆனால் மனைவியின் தேவை நிறைவேறவே செய்யாது! கவனம்!!
**
தேவை முழு திருப்தி!
பாலுறவில் திருப்தி என்பது உங்களுக்கு எந்த அளவு முக்கியமோ, அவர்களுக்கும் அதேபோன்று திருப்தி என்பது மிக முக்கியம்!
கணவர்களுக்குத் தம் மனைவியரிடம் இருக்கும் உரிமைகள் போன்றே, முறைப்படி அந்தக் கணவர்கள் மீது அவர்களின் மனைவியருக்கும் சமமான உரிமைகள் உண்டு; (குர்ஆன் 2:228)
பாலுறவும் பெண்ணுரிமைகளுள் ஒன்று தான் என்பதை மறந்து விட வேண்டாம்!
பாலுறவு கசந்து போவதும் கூட – மன விலக்கு கோருவதற்கு ஒரு வலிமையான காரணமாக அமைந்து விடுவதுண்டு!
**
அனுபவியுங்கள்!
பாலுறவு என்பது குழந்தை பெற்றுக் கொள்வதற்கு மட்டும் அல்ல! பாலுறவின் முக்கியமான நோக்கமே இன்பம் அனுபவிப்பது தான்! அதற்கு வயது ஒரு தடையே கிடையாது!
இதனைப் புரிந்து கொண்டவர்களே புத்திசாலிகள்!

இரக்க உணர்வும் இல்லற உறவும்!

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே  அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (குர்ஆன் 30:21)
அடுத்து - நாம் "ரஹ்மத்" எனும் இரக்க உணர்வு குறித்து இங்கே பார்ப்போம்.
ரஹ்மத் - இரக்கம் - என்பது அல்லாஹு  தஆலாவுடைய அரும்பண்புகளுள் ஒன்று!

இதே கருணையை - திருமணத்தின் மூலம் கணவன் மனைவியருக்கிடையே பதிய வைத்திருக்கின்றான் வல்லோன் அல்லாஹு தஆலா!
இரக்க சிந்தனை வரும்போது மனிதனுக்கு பொறுப்புணர்ச்சி தானாக வந்து விடும்.

திருமண உறவைப் பொறுத்தவரை இந்த இரக்க உணர்ச்சி, கணவன் மனைவியருக்குள் கொண்டு வருவது பொறுப்புணர்ச்சியைத் தான்!
கணவன்  மனைவிக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான்! மனைவி கணவனுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறாள்!

இரக்க உணர்வு ஏற்படுத்தும் இன்னொரு அதிசயம் - துணைவர் தனது துணைவிக்குச் செய்திட வேண்டிய கடமைகளைச் செய்திட இயலாத சூழ்நிலையில் கூட, துணைவர் மீது துணைவி இரக்கம் காட்டுகிறார்.
கருணை என்பது கொடுப்பது மட்டுமே! அது பதிலுக்கு திரும்பவும் எதனையும் எதிர்பார்க்காதது! ஏனெனில் கொடுப்பதில் கிடைக்கின்ற இன்பம் ஒன்றைத் திரும்பப் பெறுவதில் இல்லை!

கணவன் மனைவி உறவில் - இரக்கம் என்பது இன்னும் பல ஆழ்ந்த அர்த்தங்களைக் கொண்டது.

துணைவி அல்லது துணைவரின் தவறுகளையும் பலவீனங்களையும் மன்னித்து அவைகளை மற்றவர் பார்வையிலிருந்து மறைக்கவும் செய்கிறது இரக்க உணர்வு!

ரஹ்மத் எனும் சொல்லின் வேர்ச்சொல் "ரஹ்ம்" ஆகும். ரஹ்ம் என்பது தாயின் கருவறையைக் குறிக்கும் சொல்லாகும். இது கருணை என்பதன் பொருளை இன்னும் விரிவாக்கி விடுகிறது.

கருவறை பாதுகாப்பானது; அது குழந்தையைப் பாதுகாக்கிறது! அது குழந்தையை வளர்க்கிறது! அது போலவே கணவன் மனைவி - இருவரும் ஒருவருக்கொருவரைப் பாதுகாக்கிறார்கள்! ஒருவரின் வளர்ச்சிக்கு இன்னொருவர் பொறுப்பேற்கிறார்! கருவறையில் குழந்தைக்கு எந்த பயமும் இல்லை! அது போலவே துணையின் நெருக்கத்தில் இன்னொரு துணை பயமின்றி பாதுகாப்புடன் வளர்கிறது!

கணவனும் மனைவியும் அல்லும் பகலும் சேர்ந்தே வாழ்வதால், கணவனின் குறைகள் மனைவிக்கும், மனைவியின் குறைகள் கணவனுக்கும் வெள்ளிடை மலை! அதாவது அவை வெளிப்படையாகத் தெரிந்து விடுகிறது! அவைகளை ஒருவருக்கொருவர் மறைத்துக் கொண்டிடவும் முடியாது! மறைத்திடவும் தேவையில்லை! ஏனெனில் முகமூடி அணிந்து கொண்டு இருவரும் இல்லறத்தை இனிமையாகக் கொண்டு செல்ல இயலாது!

கருணை உணர்வு மட்டும் இருவரிடத்திலும் இல்லை என்றால் நிலைமை என்னவாகும்?

ஒருவரின் குறைகளை இன்னொருவர் ஆராய ஆரம்பித்தால், அதனை பெரிது படுத்தினால் நிலைமை என்னவாகும்?

திருமண வாழ்வு என்பது தினசரிப் போராட்டமாக வெடிக்கும்! சில நேரங்களில் அது சோகமயமாக (depression)  மாறும்! மன அழுத்தத்துக்கு (chronic stress) வழி வகுக்கும்! இன்னும் உடல் நலமும் பாதிக்கப்படும்! வீட்டுக்குள்ளேயே பிரச்னைகள் இப்படி என்றால், வீட்டுக்கு வெளியிலிருந்து வருகின்ற பிரச்சனைகள் வந்தால் நிலைமை என்னவாகும்?

கருணையில் குறை ஏற்பட்டால் - கணவன் மனைவி நல்லுறவே பாதிக்கப்பட்டு விடும். தனது குறைகள் பற்றி மனம் திறந்து இருவரும் பேசிட இயலாது! குறைகளை துணைவரிடமிருந்து மறைக்கத் தொடங்குவர். குறைகளைச் சுட்டிக்காட்டினால் அதனை ஒத்துக் கொள்ளாமல் மறுக்கின்ற நிலை ஏற்பட்டு விடும்.  பின்னர், எவ்வாறு ஒருவர்  குறையைக் களைந்திட இன்னொருவர் உதவி செய்திட முடியும்?
கருணை உள்ளமே, வீட்டுக்குள் மன அமைதியைக் கொண்டு வரும் சாதனமாகும். நிம்மதியான (relaxed) இல்லற வாழ்வுக்கு இரக்க உணர்வு மிக அவசியம்.

என்னைப் புரிந்து கொள்ளும்போதும் என் பலவீனங்களை சகித்துக் கொள்ளும்போதும் தான் வீடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. இது என் மனைவிக்கும் பொருந்தும்! என்னை அப்படியே எனது நிறைகளுடனும் குறைகளுடனும் எனது துணை ஏற்றுக் கொண்டால் தான் நான் முழுமையாக வளர்வேன்! இது என் மனைவிக்கும் பொருந்தும்!
சரி! இந்தக் கருணை உணர்வை இல்லற வாழ்வில் கணவனும் மனைவியும் எவ்வாறு வெளிப்படுத்துவது?

சிறிய சிறிய குறைகளா? கண்களை மூடிக் கொண்டு விடுங்கள்! அவைகளைக் கண்டு கொள்ளாதீர்கள்! மனைவிக்கு ஏதேனும் உடல் நல அல்லது மன நலக் குறைவா? அவர்களின் தேவைகளை நீங்கள் நிறைவேற்றுங்கள்! அவர்களின் வேலைகளை நீங்களே செய்து கொடுங்கள்! அது எதுவாயினும் சரியே. வேலைக்கு விடுப்பு எடுத்திட வேண்டுமா? தயங்காமல் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டுப் பணிகளில் நீங்களே இறங்கி விடுங்கள். உங்கள் மனைவியின் தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் செலுத்துவதும் கருணையே!

விட்டுக் கொடுத்து நெகிழ்ச்சியுடன் நடந்து கொள்ளுங்கள். உங்கள் துணை களைத்துப் போயிருக்கின்றாரா? புரோட்டாவும் சிக்கன் ரோஸ்ட்டும் தான் வேண்டும் என்று அடம் பிடிக்க வேண்டாம்! "மதியம் என்ன உணவம்மா? அதை நானே சூடு காட்டி சாப்பிட்டுக் கொள்கிறேன்; உனக்கென்ன வேண்டும் அதைச் சொல்!" என்று சொன்னால் அது தான் இரக்க உணர்ச்சியின் வெளிப்பாடு!

இந்த விட்டுக் கொடுக்கும் தன்மை உணவுக்கு மட்டுமல்ல! கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் எல்லாவிதமான கருத்து வேறுபாடுகளுக்கும் இதுவே அருமருந்து!

உங்கள் மனைவிக்கு ஒரு பிரச்னை! ஆனால் அது குறித்து தாமே பேசுவதற்கு அவர் அஞ்சுகிறார் எனில் அவருக்காக நீங்களே குரல் கொடுங்கள்! குறிப்பாக உங்கள் தாய் மூலமாகவோ அல்லது உங்களின் சகோதரிகள் மூலமாகவோ உங்கள் மனைவி பாதிக்கப் பட்டிருந்தால் உங்கள் மனைவிக்காகக் குரல் கொடுப்பவர் யார்? அது நீங்கள் தான்! உங்கள் மனைவியை உங்களின் தாய்க்கோ உங்கள் சகோதரிகளுக்கோ அடிமையாக்கி  விடாதீர்கள்!
உங்கள் மனைவியின் குடும்ப விஷயங்களில் அக்கரை செலுத்துவதும் உங்களின் கருணைப் பண்புக்கு அடையாளமாகும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் கருணை என்ற ஒரே ஒரு நற்பண்பு இருந்தால் போதும். குடும்பத்தின் எல்லாப் பிரச்னைகளையும் அதனைக் கொண்டே தீர்த்துக் கொண்டு விடலாம்! இரக்க குணம் இருந்தால் போதும்! இல்லறம் தானே இனிக்கும்!

தீய்ந்து போன ரொட்டி!

நான் சிறுவனாக இருந்த போது நடந்தது இது.
எனது அம்மாவும் அப்பாவும் காலை சிற்றுண்டி சாப்பிட மேஜையில் அமர்ந்தார்கள். நான் அருகே விளையாடிக் கொண்டிருந்தேன். காலைச் சிற்றுண்டிக்கு அம்மா ரொட்டியை வாட்டி வைத்திருந்தார். ஆனால் அது தீய்ந்து விட்டது என்று நான் நினைத்தேன். ஏனெனில் தீய்ந்து போன அதன் வாசனையை நான் நுகர்ந்து பார்க்க முடிந்தது.
எனக்கு ஒரு ஆவல். அப்பா என்ன செய்யப் போகிறார் என்பதை அறிந்திட ஆவல். அம்மாவைத் திட்டப்போகிறாரா அல்லது அப்படியே சாப்பிடப்போகிறாரா என்று அப்பாவைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
ஆனால் அப்பா செய்ததெல்லாம் - அந்த ரொட்டியை எடுத்துக் கொண்டே அம்மாவைப் பார்த்து சிரித்தது தான்! அப்பா அந்த ரொட்டித் துண்டுகளை  ஒவ்வொன்றாக எடுத்து அதில் வெண்ணையையும் பழக்கூழையும் தடவி ரசித்து சாப்பிட்டது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.
அம்மா அப்பாவிடம் மன்னிப்புக் கேட்டார். ஆனால் அப்பா அதற்கு சொன்ன பதிலை என்னாளும் நான் மறக்க மாட்டேன்.
"கண்ணே! இந்த ரொட்டி எனது வயிரைத் தான் நிரப்பும். ஆனால் நீயோ என் இதயத்தையல்லவா நிரப்பியிருக்கின்றாய்!" என்று சொல்லிக் கொண்டே அம்மாவின் கையைப் பற்றிப்பிடித்தார் என் ஆருயிர் அப்பா.
நானோ - "இந்த உலகிலேயே மிகவும் கொடுத்து வைத்த குழந்தை நான் தான்!" - என்று என் இதயத்தின் ஆழத்தில் உணர்ந்தேன்!
படிப்பினைக்குரிய இன்னொரு கதை இது.

இது யார் சொல்லித்தந்ததோ தெரியவில்லை!

"பெண்களைப் போல் அழாதே?!"
"உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்! அதனை வெளிக்காட்டாதே!
"உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என்பதெல்லாம் பெண்களுக்கு மட்டும் தான். ஆண்களுக்கு அது பலவீனம்!"
"ஆண்களைப் பொருத்தவரையில் - அவர்கள் - வெளிப்படுத்திடத் தக்க  ஒரு உணர்ச்சி இருக்கிறதென்றால் அது கோபம்மட்டும் தான்!"
"கோபத்தை வெளிப்படுத்துவது மட்டும் தான் "ஆண்மையின்" அடையாளம்!"
மற்ற உணர்வுகளையெல்லாம் உள்ளுக்குள்ளேயே வைத்து அடக்கிக் கொள்!"
இப்படிச் சொல்லித் தான் நாம் ஆண் பிள்ளைகளை  வளர்த்து வந்திருக்கின்றோம்.
**
இது யார் சொல்லித்தந்ததோ தெரியவில்லை! பெரும்பாலான ஆண்கள் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்!

ஆனால் - நபியவர்களின் சுன்னத் இதற்கு நேர் மாற்றமாக இருக்கின்றது!
ஆனால் உணர்வுகள் உணர்ச்சிகள் விஷயத்தில் - நபியவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் பாருங்கள்:

நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் (ரளி) மரண வேளையில் நபி (ஸல்) அவர்கள் தூக்கி முத்தமிட்டார்கள் முகர்ந்தார்கள் அவரது உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்களின் இரு கண்களும் கண்ணீரை சிந்தின.
அப்போது அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரளி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே தாங்களுமா என்று கேட்டார்.

அதற்கு அவ்ஃபின் மகனே இது கருணையாகும் என்று கூறிவிட்டு கண்கள் கண்ணீரை சொரிகின்றது உள்ளம் மிகவும் வருந்துகின்றது என்றாலும் எங்கள் இறைவன் பொருந்திக் கொள்ளாத வார்த்தைகளை நாம் சொல்ல மாட்டோம்.
இப்ராஹீமே உன் பிரிவால் நாங்கள் பெரும் கவலையில் இருக்கிறோம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அனஸ்(ரளி); நூற்கள்: புஹாரி முஸ்லிம்)

கண்ணீர் சிந்துவது கருணையின் அடையாளம் என்று நவில்கிறார்கள் காருண்ய நபியவர்கள்!

அது போலவே பாசம், அன்பு போன்ற நல்ல (POSITIVE) உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதும் நம்மைப் பொருத்தவரை ஆண்களுக்கும் நபி வழி தான்!
ஒரு நாள் கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் “நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்கள் முத்தமிடுவதில்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா?” (நூற்கள்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

கவனியுங்கள். அந்த அறியாமைக் காலத்திலும் - ஆண்மக்கள் - உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பதைப் பெருமையாகவே கருதி வந்திருப்பதும் இங்கே தெரிய வருகின்றது!  ஆனால் நபியவர்கள் அறியாமைக் காலத்து நடைமுறையை மறுத்து - அன்பை வெளிப்படுத்துவதை இறைக் கருணையோடு இணைத்துச் சொல்கின்றார்கள்.

அது போலவே கோபத்தில் எரிந்து விழுகின்ற கெட்டதொரு (NEGATIVE) உணர்ச்சியை எடுத்துக் கொள்வோம். இன்றைய நவ நாகரிக உலகில் - ஆண்கள் கோபத்தை வெளிப்படுத்துவதை ஒரு "வீரச்செயலாக" எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் - கோபத்தை வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்திக் கொள்வதையே வீரம் என்று வர்ணிக்கிறார்கள் - அண்ணல் நபியவர்கள்.

“மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரளி) அறிவித்தார். (நூல்: புகாரி)

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் - இறை விருப்பத்திற்கு நேர் மாறாகவே ஆண்களில் பெரும்பாலோர் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தான்!

எனவே நாம் படித்துக் கொள்ள வேண்டியது நபியவர்களின் முன்மாதிரியையே தவிர - மற்றவைகளை அல்ல!
ஆண் மக்களே! உங்கள் இல்லற வாழ்க்கை சிறந்து விளங்கிட - உங்கள் மனைவி மக்களிடத்தில் - நல்ல உணர்வுகளைத் தவறாமல் வெளிப்படுத்துங்கள்! கெட்ட உணர்ச்சிகளை மட்டும் கட்டுப் படுத்திக் கொள்ளுங்கள்!

பின் வரும் ஒரே ஒரு நபிமொழி போதும்.  ஆண்கள் தங்களை மாற்றிக் கொள்ள!

அம்ர் பின் அல்ஆஸ் (ரளி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தாத்துஸ் ஸலாஸில்' எனும் படைப் பிரிவுக்கு என்னை அனுப்பிவைத்தார்கள். அப்போது அவர்களிடம் நான் சென்று, "மக்களிலேயே உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆயிஷா' என்று பதிலளித்தார்கள். நான், "ஆண்களில் யார்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆயிஷாவின் தந்தை" -  என்று பதிலளித்தார்கள். "பிறகு யார்?'' என்று கேட்டதற்கு, "உமர்''என்று கூறிவிட்டு, மேலும் பலருடைய பெயர்களைக் குறிப்பிட்டார்கள்.
இந்த நபிமொழியில் ஒரு நுணுக்கமாக இழையோடக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது!
அது என்ன?

மக்களிலேயே உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்? என்ற கேள்விக்கு, "ஆயிஷா'' என்று பதிலளிக்கிறார்கள் நபியவர்கள்.
அடுத்து "ஆண்களில் உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்?'' என்ற கேள்விக்கு - "ஆயிஷாவின் தந்தை" -  என்று பதிலளிக்கிறார்கள் நபியவர்கள்.
ஏன்? அது அபூ பக்ர் அவர்கள் தான் என்று அவருடைய பெயரைச் சொல்லிக் குறிப்பிட்டிருக்கலாமே?
அவ்வாறு அவருடைய பெயரைச் சொல்லிக் குறிப்பிடாமல் - தன் மனைவியின் பெயரோடு சேர்த்து - "ஆயிஷாவின் தந்தை" என்று ஏன் குறிப்பிட வேண்டும்?
அபூ பக்ர் அவர்களைக் கூட - "ஆயிஷாவின் தந்தை" என்று குறிப்பிடுவதன்மூலம் - அன்னை ஆயிஷா அவர்களை மேலும் கண்ணியப்படுத்தியதாக ஆகி விடுகிறது அல்லவா?
உணர்வுகளை வெளிப்படுத்தும் விஷயத்தில் நபிவழியை நாம் பின்பற்றினால் - நமது இல்லறம் - இனிக்கும் இல்லறம் தான்!

திருமணத்துக்குப் பின்னர் அசையவும் கூடாது! அலையவும் கூடாது!

மவத்தத் மற்றும் ரஹ்மத் ஆகிய இரண்டு பண்புகளைத் தொடர்ந்து அடுத்து நாம் ஆய்வு செய்திட இருப்பது – பின் வரும் இறை வசனத்தில் இடம் பெற்றுள்ள சகீனத் என்ற சொல்.

இன்னும், நீங்கள் அவர்களிடம் மன அமைதி பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (குர்ஆன் 30:21)

லி தஸ்குனூ இலைஹா - என்பது இவ்வசனத்தில் உள்ள ஒரு சிறு சொற்றொடர்.

இதன் பொருள் என்ன?

So that you might find contentment (sukoon) with them,

அவர்களிடத்தில் நீங்கள் ஆறுதல் பெறுவதற்காக - என்பது ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு.

அவர்களிடத்தில் மன நிம்மதி பெறுவதற்காக என்பது இன்னொரு மொழிபெயர்ப்பு.
அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக என்பது இன்னுமொரு மொழிபெயர்ப்பு.

சகீனத் என்ற அரபிச் சொல்லுக்கு நாம் இன்னும் ஆழமாக பொருள் காண வேண்டியிருக்கின்றது.

சகீனத் என்பதன் பொருள் என்ன?

சகீனத் என்பதன் மூலச்சொல் - சுகூன்.

சுகூன் என்பது நாம் அடிக்கடி கேள்விப்பட்ட சொல் தான். நாம் அரபி பாடசாலையில் குர் ஆன் ஓதக் கற்றுக் கொள்ளும்போது - முதலில் அரபி எழுத்துக்களைக் கற்றுத் தருவார்கள் அல்லவா?

அப்போது எந்த ஒரு எழுத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த எழுத்துக்கு மேலேயோ அல்லது கீழேயோ ஃபதஹ், ஜர், ளம் (அல்லது ஜபர், ஜேர், பேஷ்) போன்ற ஏதாவது சிறு குறியீடு ஒன்றை எழுதும் போது - அந்த எழுத்தை எப்படி உச்சரிப்பது என்று சொல்லிக் கொடுப்பார்கள்.

சான்றாக "த அல்லது தே" என்ற எழுத்தின் மேலே ஃபதஹ் எனும் குறியைப் போட்டால் "த" என்றும்; எழுத்தின் கீழே ஜர் எனும் குறியைப் போட்டால் "தி" என்றும் உச்சரிக்க வேண்டும். ஆனால் அதே "தே" எழுத்துக்கு மேலே சுகூன் எனும் குறியைப் போட்டால் அந்த எழுத்தை அசைத்திடாமல் "த்" என்றே உச்சரித்திட வேண்டும்.

இங்கே நாம் கவனித்திட வேண்டியது என்னவெனில் இந்த ஃபதஹ், ஜர், ளம் போன்ற குறியீடுகளுக்கு "ஹரகத்" என்று பெயர். ஹரகத் என்றால் அசைத்தல் என்று பொருள். ஹரகத் எனும் சொல்லுக்கு எதிர்ப்பதம் தான் சுகூன். அதாவது அசைக்காமல் இருத்தல்!

இப்போது ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்குச் செல்வோம்.
சகன என்பதன் பொருள்: to be still, to become still, peaceful, to calm down, repose, rest, to be vowel-less, to remain calm,

சுகூன் என்பதன் பொருள்: calm, tranquility, peace, silence, quiet.
இப்பொது உங்களுக்கு புரிந்திருக்கும் சுகூன் என்று அல்லாஹு தஆலா எதனைச் சொல்ல வருகிறான் என்று.

"அசையாமல் நிறுத்தப்படுதல்" என்ற பொருளை சகீனாவுக்கு நாம் எடுத்துக் கொண்டால் கணவன் மனைவி இருவருமே - திருமணத்துக்குப் பின்னர் எவ்வாறு நடந்து கொண்டால் அமைதியும் ஆறுதலும் கிடைக்கும் என்பதுவும் புரிந்து விடும்.

அதாவது - திருமணத்துக்குப் பின் கணவனது கண்கள் வேறு எங்கும் அசைந்திடக் கூடாது!

னது கண்களால் மனைவியை மட்டுமே ரசித்திட வேண்டும். கண் பார்வையை வேறெங்கும் அசைய விட்டு விடக் கூடாது. மனைவியும் அப்படித்தான். தமது கண்களால் கணவனின் அழகை மட்டுமே ரசித்திட வேண்டும். திருமணம் கண்பார்வையைத் தாழ்த்துகிறது என்பது நபிமொழி.
கால்கட்டு என்று தமிழில் சொல்வார்கள்!

ஆனால் அது அப்படி அல்ல! எல்லாவற்றுக்குமே கட்டுப்பாடு தான்!
கைகள் - உங்கள் துணையை மட்டுமே தொட வேண்டும்!
கால்கள் உங்கள் துணையை நோக்கியே ஓடிட வேண்டும்!
இதயத்தில் உங்கள் துணைக்கு மட்டுமே இடம் அளித்திட வேண்டும்!
இவ்வாறு இல்லற வாழ்வின் அனைத்துத் தேட்டங்களுக்கும் - நாம் நமது துணையை மட்டுமே நாடிட வேண்டுமே தவிர வேறு எங்கும் அசைய விட்டு விடக் கூடாது. அலைய விட்டு விடக் கூடாது.

பாலுறவையே எடுத்துக் கொள்வோம். அது உங்கள் துணையுடன் மட்டும் தான்! வீட்டுக்கு வெளியே நீங்கள் இருக்கும்போது பாலுணர்வால் தூண்டப்பட்டால் உடனே நீங்கள் உங்கள் மனைவியிடம் சென்று விடுங்கள் என்பதும் நபிமொழி.

ஒரு தடவை அண்ணல் நபியவர்களுக்கும் இந்நிலை ஏற்பட அவர்கள் தமது மனைவி ஒருவரிடம் உடனே சென்றார்கள் என்பதும் நபிமொழி நூல்களில் காணக் கிடைக்கின்ற செய்தி தான்.

உங்கள் கணவன் உங்களை அழைத்தால் நீங்கள் என்ன நிலையில் இருந்தாலும் கணவனின் அழைப்பை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு விடுங்கள் என்ற நபிமொழியின் அற்புதமான நுட்பம் இப்போது புரிகின்றதா?

அது போலவே வாழ்வில் கணவனோ மனைவியோ உணர்ச்சிச் சிக்கலில் சிக்கித் தவிப்பார்கள் சில பொழுதுகளில். அந்த சமயங்களில் எல்லாம் உங்கள் துணையை மட்டுமே நீங்கள் நாடிட வேண்டும்! துணைவி தக்க துணை புரிந்திட வேண்டும். அன்னை கதீஜா (ரளி) அவர்கள் இதற்கு ஈடு இணையற்ற ஒரு முன்மாதிரி!

இப்படி உங்கள் துணையை மட்டுமே முன்னிறுத்தி உங்கள் இல்லறத்தை அமைத்துக் கொண்டால் - அல்லாஹு தஆலா உங்களுக்கு வழங்குவது தான் சகீனத் எனும் மன நிம்மதி! மன அமைதி!

ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண்!
பெண்ணின் வெற்றிக்குப் பின் ஒரு ஆண்!

நம்மில் ஒவ்வொருவருக்கும் தனித்தனிச் சிறப்பியல்புகள் இருக்கின்றன. அது போலவே நம் ஒவ்வொருவரிடத்திலும் சில பல குறைபாடுகளும் இருக்கின்றன.

ஒரு சில குறிப்பிட்ட சிறப்பியல்புகளுடனும் சில குறைகளையும் கொண்ட ஒரு ஆண்மகனும் அதே போல சில சிறப்பியல்புகளுடன் சில குறைகளையும் கொண்ட ஒரு பெண்மணியும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் ஒன்றை அமைக்கின்றனர்.

அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்கின்றன. அது போலவே ஒவ்வொரு குழந்தைக்கும் சில சிறப்பியல்புகளும் உண்டு. சில குறைபாடுகளும் உண்டு.
இப்படிப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் ஒரு டீம்!

இக்குடும்பத்தில் உள்ள உறுப்பினர் ஒவ்வொருவரின் தனித்தனிச்  சிறப்பியல்புகளைக் கொண்டு அவரவரும் முன்னேறிச் சென்று வெற்றி பெற்று சாதனைகள் புரிந்திட அக்குடும்பத்தின் மற்ற  உறுப்பினர்கள் அனைவரும் உதவியாக ஒத்தாசையாக இருக்கின்றார்கள் எனில் அக்குடும்பத்தில் மகிழ்ச்சிக்குப் பஞ்சமே இருக்காது.

குறிப்பாக கணவனின் சிறப்பியல்புகளை மனைவி அங்கீகரிக்கின்றார், பாராட்டுகின்றார், அவருக்கு உதவி செய்கின்றார், உறுதுணையாக விளங்குகிறார் எனில் கணவன் மகிழ்ச்சி அடைகின்றான். கணவன் மனைவி உறவு மிகச்சிறப்பாக அமைகின்றது.

அது போலவே மனைவியின் சிறப்பியல்புகளை கணவர் அங்கீகரிக்கின்றார், பாராட்டுகின்றார், அவருக்கு உதவி செய்கின்றார், உறுதுணையாக விளங்குகிறார் எனில் மனைவி மகிழ்ச்சி அடைகின்றாள். இங்கேயும் கணவன் மனைவி உறவு மிகச்சிறப்பாக அமைகின்றது.

இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவெனில் கணவனும் மனைவியும் தனது துணையின் சிறப்பியல்புகளை மட்டுமே பார்த்திடும் போது மகிழ்ச்சியான குடும்பம் அமைகின்றது.
ஆனால் இங்கே பெரும்பாலான கணவன்மார்களும் மனைவிமார்களும் தத்தமது துணையின் குறைகளை அல்லவா பார்த்துக் கொண்டிருக்கின்றோம். பின் எப்படி வரும் மகிழ்ச்சி?

எனவே கணவன்மார்களே! மனைவிமார்களே! உங்கள் துணைவரின் சிறப்பியல்புகளை, அறிவுத்திறனை, குணநலன்களை, திறமைகளை முதலில் அங்கீகரியுங்கள்! அவர்களை மனம் திறந்து பாராட்டுங்கள். அவர்களை ஊக்கப்படுத்துங்கள்! உறுதுணையாக விளங்குங்கள்!

இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கின்றது. அது - பொதுவாக கணவனின் திறமைகளுக்கு மனைவி ஊக்கமளிக்கும் நிலையை நாம் பரவலாகக் காண முடியும். ஆனால் மனைவியின் திறமைகளை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் கணவன்மார்களைக் காண்பது தான் அரிதினும் அரிதாக இருக்கின்றது!

மனிதர்கள் சுரங்கங்கள்! தங்கத்தைப் போல! வெள்ளியைப் போல! – என்றார்கள் நபியவர்கள். இதன் அடிப்படையில் - உங்கள் துணைவியும் ஒரு சுரங்கம் தான்! அந்தச் சுரங்கத்திலிருந்து பொன்னையும் வெள்ளியையும் இன்னும் அவைகளைவிடவும் சிறந்தவற்றை வெளியே கொண்டு வர வேண்டியது உங்கள் கரங்களில் தான் இருக்கிறது!

உங்கள் மனைவி ஒரு பொக்கிஷம்! பொக்கிஷங்களை விட மதிப்பு மிக்க உங்கள் மனைவியின் திற்மைகளைக் கண்டுணர்ந்து அவற்றை மெருகேற்றி அவர்களை வெற்றிபெறச் செய்திட வேண்டியது உங்கள் கரங்களில் தான் இருக்கிறது!

அதில் தான் உங்கள் மகிழ்ச்சி அடங்கியுள்ளது! அதில் தான் உங்கள் உறவின் பலமும் அடங்கியுள்ளது!

எனவே கணவன்மார்களே! உங்கள் மனைவியின் சிறப்பியல்புகளை, திறமைகளை, நற்குணங்களை - இன்றே உட்கார்ந்து பட்டியலிடுங்கள்.
அது போலவே மனைவியரும் தங்கள் கணவன்மார்களின் திறமைகளை உட்கார்ந்து பட்டியல் இடட்டும்!

"ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண்! பெண்ணின் வெற்றிக்குப் பின் ஒரு ஆண்!" என்பதே சுன்னத்தான இல்லறத்தின் இன்னும் ஒரு இலக்கணமாகும்!

இதனைத் தான் ஆங்கிலத்தில் இப்படிச் சொல்கிறார்கள்:
"Bring out the best in each other!"

அண்ணலாரின் நபித்துவ ஆளுமைக்குப் பின்புலமாக நின்றவர்கள் அன்னை கதீஜா (ரளி) அவர்களே!

அன்னை ஆயிஷா (ரளி) அவர்களின் அறிவாற்றலை அங்கீகரித்து அவ்வறிவை முஸ்லிம் சமூகம் அள்ளிப்பருகிட வழியமைத்துத் தந்தவர்கள் அண்ணலார் அவர்களே!

உங்கள் மனைவியை நீங்கள் புரிந்து வைத்திருக்கின்றீர்களா?

நமது வாழ்க்கைத்துணையின் உள் உணர்வுகளைப் புரிந்து கொள்தல் சிறப்பானதொரு இல்லற வாழ்க்கைக்கு மிக அவசியம்.

நமது துணை – கோபமாக இருக்கின்றாரா?
கவலையுடன் இருக்கின்றாரா?
அவர் மனம் புண்பட்டிருக்கின்றதா?
- என்பதையெல்லாம் மிகத்துல்லியமாகக் கணித்து விடுதல் – கணவன் – மனைவி உறவை மிக அழகாக்கி விடும்.

அழகான நபிமொழி ஒன்றை வைத்து இதனைப் புரிந்து கொள்வோம்.
அன்னை ஆயிஷா(ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்” என்று கூறினார்கள்.
அதற்கு நான், ‘எப்படி நீங்கள் அறிந்துகொள்வீர்கள்?’ என்று கேட்டேன்.அதற்கவர்கள், ‘என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும்போது, ‘முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்! என் மீது கோபமாய் இருந்தால், ‘இப்ராஹீம்(அலை) அவர்களின் அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்” என்று கூறினார்கள்.
நான், ‘அல்லாஹ்வீன் மீதாணையாக! ஆம் (உண்மைதான்,) இறைத்தூதர் அவர்களே! நான் தங்களின் பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்களின் மீதுன்று)” என்று கூறினேன். (நூல்: புகாரி)

இது ஆழமாக சிந்தித்திட வேண்டிய ஒரு நபிமொழியாகும். இந்த நபிமொழி நமக்கு உணர்த்தும் பாடம் என்னவெனில் – கணவன்-மனைவியர் ஒவ்வொருவரும் – தம் துணையின் உள் மனத்து உணர்வுகளை மிகச்சரியாக புரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதுதான்!

இவ்வாறு புரிந்து கொள்வதை ஆங்கிலத்தில் attunement என்று சொல்கிறார்கள். தமிழில் “புரிந்துணர்வு” என்று சொல்லலாம்.

உணர்வுகளைப் புரிந்து கொள்வது தான் புரிந்துணர்வு!

நாம் இங்கே சொல்ல வருவது – உங்கள் கணவருக்குப் பிடித்த கலர் எது? உங்கள் மனைவிக்குப் பிடித்த உணவுப் பண்டம் எது? என்பன போன்ற சாதாரண விஷயங்கள் குறித்து அன்று.

நாம் இங்கே வலியுறுத்திச் சொல்ல வருவது – “உணர்வுகள்” சம்பந்தப்பட்ட ஒரு சூழலை – உங்கள் துணைவர் எவ்வாறு எதிர்கொள்வார்? அவர் எப்படி நடந்து கொள்வார் என்பது குறித்துத் தான்.

உணர்வு சம்பந்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட சூழலில் உங்கள் துணைவர் ஒன்றைப் பேசிட நினைக்கிறார். அவர் என்ன பேசுவார் என்பது உங்களால் ஊகித்து விட இயல வேண்டும்.

ஒரு விஷயம் உங்கள் துணையை எவ்வாறு பாதிக்கும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஒரு தோல்வியை அவர் எவ்வாறு எடுத்துக் கொள்வார்?
ஒருவரால் அவமானப்படுத்தப் படுவதை (hurt) எவ்வாறு எதிர்கொள்வார்?
எந்த விஷயங்கள் எல்லாம் அவரைக் கோபப்படுத்தும்? – இவை எல்லாம் உங்களுக்குத் தெள்ளெனத் தெரிந்து இருக்க வேண்டும்.

ஆனால் பெரும்பாலான கணவன் மனைவியருக்கு இப்படிப்பட்ட புரிதல் இல்லை என்பது கசப்பான ஒரு உண்மை.

கணவன் மனைவியருக்கு இடையே இப்படிப்பட்ட புரிந்துணர்வு இல்லாமல் போய் விட்டால் – அது அவர்களின் உறவில் விரிசலை நிச்சயம் ஏற்படுத்தும்!
சரி, அப்படியானால் ஒருவர் தன் துணையின் உள் மன உணர்வுகளை புரிந்து கொள்ள என்ன செய்திட வேண்டும்?

மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி?

ஒருவர் தன் துணையின் உள் மன உணர்வுகளை புரிந்து கொள்ள என்ன செய்திட வேண்டும்?

உங்கள் துணையின் பக்கம் நீங்கள் முழுமையாகத் திரும்பிட வேண்டும்! அவர்களுக்கென்று நேரம் ஒதுக்கிட வேண்டும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகை முடிந்தவுடன் தம் துணைவியரிடம் செல்வார்கள். அப்போது அவர்களில் சிலருடன் நெருக்கமாக இருப்பார்கள். அவ்வாறே (ஒருநாள்) தம் துணைவியாரான ஹஃப்ஸாவிடம் சென்று வழக்கமாகத் தங்கும் நேரத்தைவிட அதிக நேரம் தங்கினார்கள். (நூல்: புகாரி)

உங்களவருடன் நீங்கள் அனுசரணையாகப் பேசிட வேண்டும். அவர் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்டிட வேண்டும்.

நபியவர்களிடம் யாராவது பேசினால் – அவர் பேசி முடியும் வரை – அமைதியாகக் காது கொடுத்துக்கேட்பார்கள் என்பது நபிமொழி.
உங்களவர் பேசும்போது – குறுக்கிட்டுப் பேசக்கூடாது. அவர் கருத்துக்களை மறுத்துப் பேசிடக்கூடாது. பேச்சைத் திசைத் திருப்பிடக் கூடாது.

உங்களவர் உங்களிடம் பகிர்ந்து கொள்ள எடுத்துக் கொள்ளும் விஷயம் உங்களுக்கு “அற்பமானதாக” இருக்கலாம்! ஆனால் அதனை அப்படியே அலட்சியப் படுத்தி விடக்கூடாது. “இதற்குப்போய் ஏன் அலட்டிக் கொள்கிறார் இவர்?” – என்று எண்ணி விடக் கூடாது.

மாறாக – அந்தச் சின்ன விஷயம் உங்கள் துணையை எப்படிப் பாதித்திருக்கின்றது என்பதையே நீங்கள் கவனித்திட வேண்டும்.
உங்களவருடைய உணர்வுகளை உதாசீனம் செய்திடக் கூடாது. அவர் நிலையில் உங்களை வைத்து (empathy) – அவர் தம் மன நிலையைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

உங்களவரின் முக பாவனை, பேச்சின் தொனி, கண்கள் சொல்லும் சேதி, உடல் மொழி (body language) – அனைத்தையும் உற்று கவனித்திட வேண்டும். அவருடைய உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிப்பதை அவர் உணரச் செய்திட வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்திட்டால் – உங்கள் துணையின் உள் மனத்து உணர்வுகளை நீங்கள் துல்லியமாகக் கணித்திட முடியும். அதற்குத் தக நடந்து கொள்ளவும் முடியும்.

உங்களுக்குள் காதலை வளர்த்திடவும், நம்பிக்கையை (trust) உருவாக்கிடவும், உறவை சிறக்க வைத்திடவும் – இதுவே மிகச் சிறந்த வழியாகும்!

மனைவியின் உணர்வுகளை மதித்து நடந்து கொள்ளுங்கள்!
மனைவி என்பவள் ஒரு பொக்கிஷத்தைப் போல! பொக்கிஷம் என்றாலே அது பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று!

அதாவது – உங்கள் மனைவியை நீங்கள் தான் பாதுகாத்திட வேண்டும். இந்த
பாதுகாவல் அவரது உடலுக்கும் உடமைகளுக்கும் மட்டும் அன்று! அவர்களுடைய உணர்வுகளுக்கும் நீங்களே பாதுகாப்பு!

ஒரு தடவை நபியவர்கள் ரமளான் இஃதிகாஃபின் போது தம் மனைவியர் அனைவரையும் அவர்களின் பெற்றோர்கள் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். ஆனால் சஃபிய்யா பின்த் ஹுயை என்ற ஒரே ஒரு மனைவி மட்டும் செல்லவில்லை. காரணம் அன்னை சஃபிய்யா அவர்கள் யூதக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அன்னை சஃபிய்யா அவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். மற்ற மனைவியர் அனைவரும் அவரவர் பெற்றோர் வீடுகளுக்குச் சென்று விட்ட பிறகு - தாம் அவ்வாறு செல்ல முடியவில்லையே என்று அவர்கள் வருத்தம் அடைந்து விடக்கூடாது என்பதற்காகவே – நபியவர்கள் – இஃதிகாஃபில் இருக்கும்போதே பள்ளிக்கருகில் மனைவியை வரவழைத்து நீண்ட நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்களாம். பிறகு அவர்கள் வீடு வரை அழைத்துச் சென்று விட்டு விட்டு வந்தார்களாம்! (பார்க்க: புகாரி ஹதீஸ் எண் 3281)
புரிகின்றதா?

உங்கள் மனைவியின் முகம் வாடியிருக்கிறதா? சோகம் அப்பியிருக்கிறதா? வாய் திறக்கவில்லையா? உணவு உண்ணவில்லையா? தூங்கிடவில்லையா? மன உளைச்சலா? மன அழுத்தமா?

மன ரீதியாக அவருக்கு என்ன தேவை? அவருடைய முகத்தைக் கனிவுடன் உற்று நோக்க வேண்டும். அது உங்களுக்கு செய்தி சொல்லும்! அவர் ஏதோ ஒன்றைச் சொல்ல வருகின்றாரா? கூட அமர்ந்து அவரைப் பேச விட வேண்டும். அமைதியாக "இதயம்" கொடுத்துக் கேட்டிட வேண்டும். அவரது உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த உணர்வுகளை நீங்கள் அங்கீகரித்திட வேண்டும். அதற்குத் தக நடந்து கொள்ளவும் வேண்டும்!
மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு - அதற்குத் தக நடந்து கொள்ள வேண்டியதும் சுன்னத்தான இல்லறத்தின் தேட்டங்களுள் ஒன்று தான்!


நபி (ஸல்) அவர்கள் ஏன் தன் மனைவியைக் கடிந்து கொள்ளவில்லை?

நபியவர்கள் அவர்கள் தங்களின் மனைவியர்களில் ஒருவரிடம் இருந்தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் இன்னொருவர் உணவுப் பண்டமுள்ள தட்டு ஒன்றை (நபியவர்களுக்காகப் பணியாள் ஒருவரிடம்) கொடுத்தனுப்பினார்கள்.

அப்போது  நபி(ஸல்) அவர்கள் எவருடைய வீட்டில் தங்கியிருந்தார்களோ அந்தத் துணைவியார் அந்தப் பணியாளரின் கையைத் தட்டிவிட்டார். அந்தத் தட்டு கீழே விழுந்து உடைந்துவிட்டது.

உடனே நபி(ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்கள். பிறகு தட்டிலிருந்த உணவை அதிலேயே ஒன்று சேர்க்கலானார்கள். மேலும், (அங்கிருந்த தோழர்களை நோக்கி), 'உங்கள் தாயார் ரோஷப்பட்டுவிட்டார்'' என்று கூறினார்கள்.

பின்னர் அந்தப் பணியாளை நிறுத்திவிட்டு தாமிருந்த துணைவியாரிடமிருந்து மற்றொரு தட்டைக்கொண்டு வரச் செய்து, உடைபட்ட தட்டுக்குரியவரிடம் நல்ல தட்டைக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்துவிட்டார்கள். (நூல்: புகாரி 5225)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரளி) அவர்கள் வீட்டில் இருந்த போது தான் இச்சம்பவம் நடந்தது. நபியவர்களுக்கும், நபியவர்களின் தோழர்கள் சிலருக்கும் - ஆயிஷா அவர்களே உணவு சமைத்துக் கொண்டிருந்த நேரம் அது. அந்நேரத்தில் இன்னொரு மனைவியின் வீட்டிலிருந்து உணவு வந்ததும் ஆயிஷா அவர்களுக்குக் கோபம் வந்து விட்டது.

இந்தச் சமயத்தில் நபியவர்களின் செயலை சற்று கூர்ந்து கவனியுங்கள்.
உணவுத் தட்டை தட்டி விடுகின்றார்கள் அன்னை ஆயிஷா அவர்கள். தட்டு உடைகிறது. உணவுப்பண்டம் சிதறுகிறது. நபியவர்கள் அமைதியாக அதை ஒன்று சேர்க்கிறார்கள். தோழர்களை உண்ணச் செய்கின்றார்கள். உடைந்த தட்டுக்குப் பதிலாக நல்ல தட்டு ஒன்றை கொடுத்து அனுப்புகிறார்கள். அவ்வளவு தான் நடந்தது!

"என்ன செய்கிறாய் நீ?" என்று அன்னை ஆயிஷா அவர்களை நபியவர்கள் கடிந்து கொள்ளவில்லை!

"நபித்தோழர்கள் வீட்டுக்கு விருந்தினர்களாக வந்திருக்கும் சமயத்தில் இப்படித்தான் நடந்து கொள்வதா?" - என்று கோபப்படவும் இல்லை!
வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசிடவும் இல்லை! அமைதி காக்கிறார்கள் நபியவர்கள்!

அதே நேரத்தில் மனைவி அவ்வாறு நடந்து கொண்டதற்குக் காரணம் அவர்களது ரோஷ உணர்வே என்பதனை நபித்தோழர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் நபியவர்கள். அவ்வாறு அவர்கள் ரோஷப்பட்டது தவறு என்று கூடச் சொல்லிடவில்லை!

அந்த ரோஷ உணர்வை அன்னையவர்கள் வெளிப்படுத்திய விதம் தான் தவறு என்பதைத் தனது வாயினால் சொல்லாமல் - உடைந்த தட்டை வைத்துக் கொண்டு நல்ல தட்டை கொடுத்தனுப்புவதன் மூலம் - தனது அமைதியான செயலாலேயே அன்னைக்கு உணர்த்துகிறார்கள் நபியவர்கள்!
நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் - நபியவர்கள் ஏன் வாயைத் திறக்கவே இல்லை?எதிர்மறை உணர்வுகளுள் ஒன்றுக்கு ஆளாகி இருக்கும் ஒருவருக்கு - அறிவுரை சொல்வதில் எந்தப் பயனும் இல்லை!
கணவன்மார்களுக்கு மிக நுட்பமான படிப்பினைகள் இருக்கின்றன இந்த ஒரு நபிமொழியில்!

முகத்தைத் திருப்பிக் கொள்ளாதீர்கள்!
இங்கே ஒரு மனைவி:

“ஏங்க! இன்றைக்கு மாலை சற்றே காலாற கடற்கரையில் (ஜோடியாகத் தான்!) நடந்து போய் வரலாம்; வருகிறீர்களா?”

கணவனுக்கு இதில் சற்றும் ஆர்வம் இல்லை. பதில் எதுவும் சொல்லாமல் பேச்சைத் திசை திருப்பி விடுகிறான். அமைதியாக மனதுக்குள் – “இது ஒன்னு தான் பாக்கி!” – என்று சொல்லிக் கொண்டு – “ஆமா! இன்னைக்கு உங்க அண்ணன் வந்திருந்தாரில்ல; என்ன சொன்னார்?”
மனைவிக்கு இது எப்படி இருக்கும்?

மனைவி கணவனோடு சேர்ந்து நடக்க மிகவும் ஆசைப் படுகிறார். இது உணர்வு பூர்வமான ஒரு அழைப்பு! ஆனால் முகத்தைத் திருப்பிக் கொள்கிறான் கணவன்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது – இப்படிப்பட்ட உரையாடல்கள் – கணவன் மனைவியருக்குள் அன்றாடம் நடப்பவை தானே என்று நாம் நினைத்து விடலாம். ஆனால் இப்படிப்பட்ட உரையாடல்களில் – முக்கியமான செய்தி ஒன்று உள்ளே பொதிந்திருக்கின்றது!

இந்த உரையாடலை – ஏதோ மனைவி ஆசைப்பட்டுக் கேட்டாள்; கணவனுக்கு அதில் விருப்பம் இல்லை! அவ்வளவு தான் என்று எடுத்துக் கொள்ள முடியாது,
இங்கே – இந்தக் கணவன் சொல்லாமல் சொல்கின்ற செய்தி என்ன?
- உன் ஆசைகளை நிறைவேற்ற எனக்கு நேரம் இல்லை!
- அதற்கு எனக்கு அவசியமும் இல்லை!
- எனக்கு நீ முக்கியமில்லை!
- நீ என்ன நினைப்பாய் என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை!
- என்னை விட்டு விடு!
இது எதனை உணர்த்துகிறது என்றால் – கணவன் – மனைவி உறவு மிகவும் பாதிப்படைந்திருக்கிறது என்பதைத் தான்!
மாறாக – முகம் கொடுத்துப் பேசும் கணவன் என்ன பதில் தருவான் மனைவிக்கு?
நல்ல ஐடியா! நானும் தான் நினைத்துக் கொண்டிருந்தேன்! நான்கு மணிக்கெல்லாம் தயாராக இரு ஹனீ! இரவு உணவு தயாரிக்க வேண்டாம்; அப்படியே வெளியிலேயே சாப்பிட்டு விட்டு வரலாம்; ரொம்ப நாளாச்சு இல்ல?
இந்த பதில் எதனை உணர்த்துகிறது? இதில் என்ன செய்தி இருக்கின்றது?
கணவன் மனைவி உறவு மிகச் சிறப்பாக இருக்கின்றது என்பதைத் தானே!
- நீ சொல்வதை நான் கேட்கிறேன் – கண்ணே!
- உன்னுடைய தேவைகளை நான் நன்றாகப் புரிந்து வைத்திருக்கின்றேன்!
- உனது விருப்பம் தான் எனது விருப்பமும்!
- நான் எப்போதுமே உன் பக்கம் தான்!
- உன் விருப்பத்தை நிறைவேற்றுதே என் மகத்தான ஆசை!
- உன் விருப்பத்தை நிறைவேற்றுவதை விட எனக்கு இப்போது வேறு எந்த வேலையும் முக்கியம் இல்லை!
மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கணவன் முகம் கொடுத்துப் பேசும்போது – மனைவிக்கு ஏற்படுவது மன அமைதி! – அதாவது சகீனா!
அது போலவே தான் கணவனின் உணர்வுகளுக்கு மனைவி முகம் கொடுக்கும்போது கணவனுக்கு ஏற்படுவது மன அமைதி!
சகீனா என்றால் என்ன? மன நிம்மதி என்றும் மன அமைதி என்றும் மொழிபெயர்க்கிறோம்.
திருமண வாழ்க்கை என்பதன் அடிப்படை நோக்கமே – ஒருவருக்கொருவர் மன நிம்மதி பெறுவதற்காகத் தான் என்பதையும் அறிந்து வைத்திருக்கின்றோம்.
இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)
மேற்கண்ட இறை வசனத்தில் சகீனா என்பது (தஸ்குனூ) வினைச்சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்குப் பொருள் – மன அமைதியை ஏற்படுத்துவதற்காக – என்பதாகும். ஆங்கிலத்தில் – REASSURE – to set somebody’s mind at rest – என்று மொழி பெயர்க்கலாம்.
இந்த மன நிம்மதி என்பது – ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் முடித்து விட்டாலே போதும் – அவர்களுக்குள் இந்த மன நிம்மதி என்பது தானாகவே வந்து விடும் என்று சொல்ல முடியாது!
திருமணம் முடித்த பின் ஒருவருக்கொருவர் மன நிம்மதியை அளித்திடும் வண்ணம் கணவனும் மனைவியும் நடந்து கொள்வதால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.
என் மனைவிக்கு மன நிம்மதி அளிக்கும் வண்ணம் நான் நடந்து கொள்ள வேண்டிய கடமை எனக்கு உண்டு என்று கணவன் நினைத்திட வேண்டும்!
அது போலவே – என் கணவனுக்கு மன நிம்மதி அளிக்கும் வண்ணம் நான் நடந்து கொள்ள வேண்டிய கடமை எனக்கு உண்டு என்று மனைவியும் நினைத்திட வேண்டும்!

நினைப்பது மட்டும் போதாது! அதனை செயல் படுத்திக் காட்டிடவும் வேண்டும்!

கணவனின் அழைப்புக்கு மனைவியோ, மனைவியின் அழைப்புக்குக் கணவனோ – முகம் திருப்பிக் கொள்ளும்போது – மன நிம்மதி குலைகிறது!
பின் வரும் நபி மொழிகள் நாம் அறிந்தவை தானே?

அன்னை ஆயிஷா அவர்கள் சொல்கிறார்கள்: ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, ”நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?” எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) ”அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். நான் பார்த்து சலித்த போது, ”உனக்கு போதுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ”அப்படியானால் (உள்ளே) போ!” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரளி) (நூல்: புகாரி)

நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல் துண்டால் மறைத்துக் கொண்டிருக்க பள்ளிவாசலில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக சடைந்து விடும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகள் மீது பேராவல் கொண்ட இளம் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்! அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) (நூல்: புகாரி)
நாம் கேட்பது என்னவென்றால் – நபியவர்களை விட நாம் ஒன்றும் “பிஸி”யானவர்கள் அல்லவே?

எது எதற்கெல்லாம் கணவன் தன் மனைவி மீது கோபப்படலாம்?

பின் வரும் சூழ்நிலைகளில் – எது எதற்கெல்லாம் கணவன் தன் மனைவி மீது கோபப்படலாம்.?
1. வெளியூர் புறப்பட வேண்டும். வாசலில் கால் டாக்ஸி காத்திருக்கிறது. மனைவி புறப்பட தாமதிக்கிறார்.
2. நீங்கள் வெளியூர் பயணம் புறப்படுகிறீர்கள். ரயிலுக்கு நேரமாகிக் கொண்டிருக்கிறது. டின்னர் இன்னும் ரெடியாகவில்லை என்கிறார் மனைவி.
3. முதல் நாள் இரவே சட்டையை அயர்ன் பண்ணி வைக்கச் சொல்லியிருந்தீர்கள். காலையில் புறப்படும்போது எங்கே சட்டை என்கிறீர்கள். மறந்து விட்டது என்கிறார் மனைவி.
4. சரியான பசியுடன் நீங்கள். தீய்ந்து போன தோசையைப் பரிமாறுகிறார் மனைவி.
5, ஒரு செல்ஃபோன் அழைப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மனைவி உங்கள் செல்ஃபோனை எடுத்து உறவினர் ஒருவரிடம் நீண்ட நேரம் பேசுகிறார். நீங்கள் செல்ஃபோனைக் கேட்கிறீர்கள். இருங்கள் கொஞ்ச நேரம் என்கிறார். நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது.
6. பீரோவில் முக்கிய ஆவணம் ஒன்றை நீங்கள் அவசரமாக எடுத்திட வேண்டும். சாவி எங்கே என்று மனைவியைக் கேட்கிறீர்கள். “எங்கே வைத்தேன் என்று தெரியவில்லைங்க!” – என்கிறார் அவர்.
7. விருந்தினர் வந்திருக்கின்றனர். மனைவி சமைத்த உணவில் உப்பு மிக அதிகம். வந்த விருந்தினர்கள் – ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே சாப்பிடுகின்றனர்.
8. எண்ணை பாட்டில் கீழே தவறி விழுந்து உடைந்து விடுகிறது. அவ்வளவு எண்ணையும் வீணாகி விட்டது.
9. உங்கள் மீதுள்ள கோபத்தில் – குரலை உயர்த்திப் பேசுகிறார் மனைவி.
10. உங்கள் தம்பி மனைவி அருகில் இருக்கும்போதே – உங்களைத் திட்டுகிறார் மனைவி.
மேற்கண்ட சூழ்நிலைகளில் எது எதற்கெல்லாம் கணவன் கோபப்படுவது “நியாயம்” என்று நினைக்கிறீர்களோ அந்த எண்ணைச் சுற்றி ஒரு சிறிய வட்டமிடுங்கள்.
என்ன? பயிற்சியை முடித்து விட்டீர்களா?
________________

இப்போது கீழ்வரும் நபிமொழியைப் படியுங்கள்:

நாங்கள் ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களுடன் சென்றோம். ‘பைதாவு’ அல்லது ‘தாத்துல் ஜைஷ்’ என்ற இடத்தை வந்தடைந்ததும் என்னுடைய கழுத்தணி அறுந்து (தொலைந்து)விட்டது.
அதைத்தேடுவதற்காக நபி(ஸல்) அவர்களும் மற்றவர்களும் அந்த இடத்தில் தங்கினோம். நாங்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் இல்லை.
அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சிலர் வந்து, ‘(உங்கள் மகளான) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் இங்கே தங்கச் செய்துவிட்டார். அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களுடனும் தண்ணீர் எடுத்து வரவில்லை’ என்று முறையிட்டனர்.
அபூ பக்ர்(ரலி) (என்னருகே) வந்தபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலையை என்னுடைய மடி மீது வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ‘நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் தங்க வைத்துவிட்டாயே?
அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களிடமும் தண்ணீர் இல்லை’ என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, தங்களின் கையால் என்னுடைய இடுப்பில் குத்தினார்கள்.
நபி(ஸல்) அவர்களின் தலை என் மடியின் மீது இருந்ததால் நான் அசையாது இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் காலையில் விழித்தெழிந்தபோதும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ் தயம்மும் பற்றிய வசனத்தை அருளினான். எல்லோரும் தயம்மும் செய்தார்கள்.
இது பற்றிப் பின்னர் உஜைத் இப்னு ஹுளைர்(ரலி) ‘அபூ பக்ரின் குடும்பத்தார்களே! உங்களின் மூலமாக ஏற்பட்ட பரக்கத்துக்களில் இது முதலாவதாக இல்லை. (இதற்கு முன்பும் உங்களின் மூலம் எத்தனையோ பரக்கத்துக்கள் ஏற்பட்டுள்ளன)’ எனக் கூறினார். அப்போது நான் இருந்த ஒட்டகத்தை எழுப்பியபோது அதனடியில் (காணாமல் போன) என் கழுத்தணி கிடந்ததைக் கண்டோம்”என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (புகாரி 334).

என்ன புரிகிறது?

பெண்கள் - ஆண்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள்!

உடலளவில் மட்டுமல்ல, மனத்தளவிலும் கூட பெண்கள் ஆண்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்களே என்பது ஒரு மகத்தான உளவியல் உண்மை ஆகும்!

அறிவாற்றலில், சிந்திக்கும் முறையில், உணர்வுகளைப் புரிந்து கொள்வதில் ஆண்களும் பெண்களும் முற்றிலும் வேறுபட்டவர்கள்!

ஒரு பெண்ணின் ஒவ்வொரு செல்லும் (cell) பெண்மையின் முத்திரையைத் தாங்கித்தான் நிற்கிறது! அது போலவே ஒரு பெண்ணின் ஒவ்வொரு உறுப்பும் கூட ஆண்களிடமிருந்து வேறுபட்டே காணப்படுகின்றது. ஏன்? பெண்களின் நரம்பு மண்டலத்துக்குக் கூட பெண்மையின் சின்னம் உண்டு!

இதனைத் திருமணம் முடிக்கின்ற ஆண்களும் பெண்களும் தெளிவாக விளங்கியிருக்க வேண்டும்.

இது குறித்த அறிவு ஒன்றே கூட பல இல்லற சிக்கல்களை எழ விடாமல் தடுத்து விடும்! தவறான புரிதல்கள் (misunderstanding) குறைந்து விடும்.
எனவே அந்த வேறுபாடுகளைக் குறித்த சில கருத்துக்களை மட்டும் இங்கே பார்ப்போம்.

ஆண்களின் அறிவாற்றல் வேறு; பெண்களின் அறிவாற்றல் வேறு! பெண்கள், ஆண்களின் வளைந்த விலா எலும்பினால் படைக்கப்பட்டவர்கள் என்பதாலும், அதுவும் அந்த வளைவு என்பது அதன் மேல் பகுதியில் என்பதால் அவர்கள் ஆண்களை விட அறிவில் சற்றே குறைந்தவர்கள் என்பதும் இஸ்லாத்தின் கருத்தோட்டமாகும்.

இது பெண்களைக் குறைத்து மதிப்பிடுவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது!
ஏனெனில் பெண்களுக்கென்று வேறு சில சிறப்பம்சங்களை அமைத்துக் கொடுத்திருக்கின்றான் வல்லோன் அல்லாஹ்!

அவைகளுள் ஒன்று தான் - உணர்வுகளும் உணர்ச்சிகளும்! பெண்கள் ஆண்களை விட உணர்வுகளைப் புரிந்து கொள்வதில் வல்லவர்கள். உணர்வுகளை மிகச் சரியாக வெளிப்படுத்தக் கூடியவர்கள். எந்த ஒரு உணர்வையும் வார்த்தைகளால் வடித்துக் காட்டுவதில் மிகுந்த திறன் படைத்தவர்கள்!

கணவனின் முக பாவனைகளை கவனித்தே, மனைவி கணவனின் மனநிலையை அப்படியே புரிந்து கொள்கிறார். ஆனால் மனைவியின் முக பாவனைகளை கணவன் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறான். எனவே கணவன் தானாகவே புரிந்து கொண்டு செயல்படுவார் என்று விட்டு விடாமல், மனைவியே தனது மன நிலையை வார்த்தைகளால் கணவனுக்கு விளக்கிட வேண்டும்.

அது போலவே - ஆண்கள் எந்த ஒரு சாதனையையும் தனித்தே செய்து காட்ட விரும்புபவர்கள்; தனித்தன்மை (independance) அவர்களுக்கு முக்கியம். ஆனால் பெண்கள் ஒரு குழுவாக இருந்து சாதிக்க விரும்புபவர்கள். கூட்டு உறவு (relationship) அவர்களுக்கு முக்கியம்!

ஆண்களுக்கு முடிவே (result) முக்கியம். பெண்களுக்கோ செய்முறை (process) மிக முக்கியம். ஆண்கள் தொலைபேசியில் முடிவைப் பற்றி மட்டும் பேசுவதால் சுருக்கமாகப் பேசுவார்கள். பெண்கள் விலாவாரியாக நடந்தவைகளை விளக்கிட விரும்புவதால் அவர்கள் அதிகமாகப் பேசிட வேண்டியுள்ளது. தாம்பத்திய உறவிலும் இந்தத் தன்மை பிரதிபலிக்கிறது. கணவன்மார்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது.
ஆண்களுக்கு காதால் கேட்கும் ஆற்றல் குறைவு. பெண்களுக்கு இந்த ஆற்றல் (சம வயதுடைய) ஆண்களை விட நான்கு மடங்கு அதிகம். அதனால் தான், "ஏன் கத்துகிறீர்கள்?" என்பது மனைவிமார்களின் சொல்லாடல்களுள் ஒன்று! கணவன்மார்கள் தங்கள் மனைவியிடம் மெதுவாகவே பேசலாம்!

ஆண்களுக்குப் "பார்த்தல்" பிடிக்கும். பெண்களுக்கு "நுகர்தல்" அதிகம் பிடிக்கும். மனைவியர் தோற்றத்தால் கணவனைக் கவரலாம். கணவன் மனைவிக்குப் பிடித்த வாசனை திரவியத்தை பயன்படுத்தி மனைவியைக் கவரலாம்.

ஆண்கள் தங்களுக்கு வரும் சவால்களை நேருக்கு நேர் நின்று எதிர்நோக்குபவர்கள். பெண்களோ சற்றே பின்வாங்கி மறைந்திருந்து மறைமுகமாக தாக்குதல் தொடுப்பதில் வல்லவர்கள்! வேண்டாதவர்களை ஒதுக்கி வைத்தல், அவர்கள் மீது பொய்யான வதந்திகளைப் பரப்புதல், மறைமுகமாகப் பழி வாங்குதல் எல்லாவற்றையும் பருவ வயதிலேயே கற்றுக்கொண்டு விடுகிறார்கள் இளைஞிகள்! (இறையச்சம் ஒன்றே இவர்களை இது போன்ற தீய பழக்கங்களில் இருந்து பாதுகாத்திட வல்லது).

ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதிலும், அதனைப் பயன்படுத்துவதிலும் பெண்களே சம வயதுடைய ஆண்களை விட ஆறு ஆண்டுகள் முன்னணியில் நிற்கிறார்கள். எனவே பெண்கள் தங்கள் கருத்துக்களுக்கு மொழி வடிவம் கொடுத்து தங்கள் கணவன்மார்களிடம் பேசிடுவதில் வல்லவர்களாக விளங்குகிறார்கள். ஆண்களுக்கு இது வியப்பாக இருக்கலாம்!

ஆண்களுக்கு - நடந்த ஒன்றை நினைவுபடுத்தி அப்படியே விவரிக்கின்ற (spatial memory) ஆற்றல் அதிகம். பெண்கள் மறந்து விடுவார்கள் - குறிப்பாக பண விஷயங்களிலும், பயண விஷயங்களிலும் பெண்களுக்கு நினைவாற்றல் குறைவே!

புதிதாகத் திருமணம் முடிக்கும் ஆண்களும் பெண்களும் இத்தகைய ஆண்-பெண் உளவியல் வேறுபாடுகளை அறிந்து கொள்தல் மிக அவசியம்.


ஆண்கள் என்ன உயர்ந்தவர்களா?

ஒரு கணவன்-மனைவி. திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் தான் ஆகின்றன. ஆனாலும் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்திடவில்லை. மனைவி சொல்கிறாள்: “என் கணவன் என்னிடத்தில் ஒரு அதிகாரியைப் போல் நடந்து கொள்கிறார்; என்னை அவமானப்படுத்துகிறார். என்னை மதிப்பதே இல்லை. கேட்டால் தான் ஒரு ஆண் மகன் என்றும் ஆண்களுக்கே இஸ்லாம் உயர்வைத் தந்துள்ளது என்றும் அதற்கேற்பவே தான் நடந்து கொள்வதாகவும் சொல்கிறார்.”
முஸ்லிம் கணவன்மார்களில் பெரும்பாலோரும் இப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்:

"நாம் தான் குடும்பத்தின் தலைவர்கள். நாம் சொல்வதைத் தான் மனைவி கேட்க வேண்டும். ஏன், எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்டிட அவர்களுக்கு அனுமதி இல்லை. மார்க்கமும் இவ்வாறு தான் கணவன்மார்களுக்கு இந்த உயர்வையும் அதிகாரத்தை வழங்கியுள்ளது."

ஆனால் - இது மிகவும் தவறான ஒரு கண்ணோட்டம்!

பெண்களை விட ஆண்களே உயர்ந்தவர்கள் என்றால், ஆண்களுக்கே எல்லா உரிமைகளும் சலுகைகளும் என்றால், குடும்பத்தில் எல்லா விஷயங்களிலும் எதேச்சையாக முடிவெடுப்பவர்கள் ஆண்கள் தாம் என்றால், அவர்கள் தாங்கள் வைத்ததே சட்டம் என்று கருதிக் கொண்டால்,

கணவனும் மனைவியும் எவ்வாறு “உற்ற நண்பர்களாக” விளங்க முடியும்? உற்ற துணைவர்களாக விளங்கிட முடியும்?

முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர். (குர்ஆன் 9 : 71)

இவ்வசனம் முஃமினான கணவன்-மனைவி இருவருக்கும் பொருந்தும் தானே?
அவர்களுடன் மிக நெருங்கிய உற்ற நண்பர்களாக நடந்து கொள்ளுங்கள்.( குர்ஆன் 4:19)

கணவனும் மனைவியும் நெருங்கிய நண்பர்களே எனும்போது ஆண்கள் தங்களை உயர்ந்தவர்களாக எப்படிக் காட்டிக்கொள்ள முடியும்?
அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (குர்ஆன் 2: 187)

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடையாக விளங்கிட வேண்டும் எனும்போது - இருவருக்கும் இங்கே சம அந்தஸ்தினை உயர்ந்தோன் அல்லாஹ் வழங்கிடவில்லையா?
கணவனுக்கு மனைவி கண்குளிர்ச்சி என்பது போலவே மனைவிக்கும் கணவன் கண்குளிர்ச்சியாக விளங்கிட வேண்டும் என்று இருவருக்கும் இறைவன் துஆ கற்றுத்தந்திடவில்லையா?
பின்னர் எப்படி ஆண்கள் தங்களை உயர்த்திக் கொள்ள முடியும்?
உண்மைதான்! கணவன் தான் குடும்பத்தின் தலைவன் (அமீர்) என்பது உண்மையே!
"ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளியாவார். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார். பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளது பொறுப்புக்குட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.... " (நூல்: ஸஹீஹுல் புகாரி - 2558)
ஆனால் குடும்பத்தின் பொறுப்பு  (guardianship) ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் ஆண்களே உயர்ந்தவர்கள் (gender superiority) என்றாகி விடுமா? ஒரு போதும் ஆகாது!
உயர்வையும் சிறப்பையும் அல்லாஹு  தஆலா ஆண்-பெண் பாலைப் பொறுத்து வழங்குவதே இல்லை! இதனை சற்று ஆழமாக நாம் பார்த்திட வேண்டியுள்ளது. பின் வரும் இறை வசனங்களை சற்று நிதானமாகப் படித்து சிந்தியுங்கள்:
(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்......... (குர்ஆன் 4:34).
மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்; ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு; (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு; (குர்ஆன் 4:32)
மேற்கண்ட இரண்டு இறை வசனங்களிலும் - "அல்லாஹ் சிலரை சிலரை விட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான்" என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. இந்த "மேன்மைப்படுத்துதல்" என்பது திருமறையில் வேறு சில இடங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எதனைக் குறிக்கின்றது என்றால் - அல்லாஹு தஆலா ஒரு சிலருக்கு வேறு சிலரை விட சிலவற்றை சற்று அதிகமாக "வெகுமதியாக" (gifts) வழங்கியிருக்கின்றான்.
இது எதற்காக என்றால் அல்லாஹு  தஆலா எவைகளை ஒருவருக்கு வெகுமதியாக வழங்கியிருக்கின்றானோ அவற்றை (திறமைகள், ஆற்றல்கள்) பயன்படுத்திட வேண்டிய முறையில் பயன்படுத்தி அல்லாஹு தஆலாவின் திருப் பொருத்தத்தை அவர் "சம்பாதித்துக் கொள்ள வேண்டும்"! அவ்வளவு தான்!
இங்கே நாம் கவனித்திட வேண்டியது என்னவெனில்-
மனிதர்கள் என்ற அடிப்படையில் கணவனும் மனைவியும் ஒரே நேர்கோட்டில் தான் நிற்கிறார்கள்!
குடும்பத்தின் பொறுப்பாளர்கள் என்ற அடிப்படையிலும் கணவனும் மனைவியும் சம அந்தஸ்தில் தான் இருக்கின்றார்கள்!
இறைவனுக்கு முன்னால் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் எனும் அடிப்படையிலும் அவர்கள் சமமானவர்களே!
இறைப் பொருத்தத்தைச் சம்பாதித்திடும் இலக்கில் முன்னேறிச் சென்றிட வேண்டும் எனும் ஊக்கத்திலும் அவர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அன்று!
அல்லாஹு  தஆலா  அவர்களுக்கு வழங்கியுள்ள தனிப்பட்ட ஆற்றல்களில் மட்டுமே அவர்களுக்குள் வேறுபாடு! இந்த வேறுபாடு ஒருவரை விட ஒருவர் தம்மை உயர்த்திக் கொள்வதற்காக நிச்சயமாக அன்று!
உயர்வும் கண்ணியமும் எதனைப் பொறுத்தது?
உங்களில் எவர் மிகவும் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். (குர்ஆன் 49:13)
மேலும் எழுதுவோம் இன்ஷா அல்லாஹ்...

ஆண்கள் என்ன அதிகாரிகளா?
காலாகாலமாகவோ அல்லது தலைமுறை தலைமுறையாகவோ ஒரு தவறை முஸ்லிம் கணவன்மார்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அது - உயர்ந்தோன் அல்லாஹ் - பெண்களுக்கு அளித்திருக்கும் கண்ணியத்தையும், உரிமைகளையும் அவர்களுக்குத் தர மறுப்பது தான்!
ஏனோ தெரியவில்லை. முஸ்லிம் கணவன்மார்கள் தங்களின் மனைவியர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனை இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை!
தங்களின் உரிமைகளைப் பெறுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் கணவன்மார்கள், தங்களின் மனைவியரின் உரிமைகளைக் காற்றில் பறக்க விட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள்.
திருமணம் முடித்து கணவன் வீட்டுக்கு வந்த பிறகு கணவன் மனைவியிடம் என்ன எதிர்பார்க்கின்றான் தெரியுமா? தன் மனைவி தனது தாய்க்கும், சகோதரிகளுக்கும் (அதாவது அவளது மாமியாருக்கும், நாத்தனார்களுக்கும்) அடங்கிய பெட்டிப் பாம்பாக இருந்திட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கின்றார்.
இளம் மனைவி ஒருவர் சொல்கிறார்:
"நான் சொல்வதை என் கணவன் கேட்பதில்லை. அவரின் அக்காள், தங்கை, குடும்பத்தார் பேச்சை மட்டுமே கேட்கிறார். என்னுடைய பெற்றோரிடம் பேசுவதை வெறுக்கிறார். பெற்றோர் வேண்டுமா, கணவன் வேண்டுமா நீயே தீர்மானித்துக்கொள் என்று என் கணவன் கூறுகிறார். யாரைத் தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் நான் இருந்து வருகிறேன்."
கணவனும் மனைவியும் இப்படித்தான் வாழ்ந்திட வேண்டும் என்று அல்லாஹ் கற்றுத் தந்திருக்கின்றானா?
இவ்வாறு குழப்பத்தில் இருக்கின்ற மனைவியிடம் கணவன் நடத்தும் இல்லறம் இனிக்குமா?
ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.(குர்ஆன்  4: 34).
ஆனால்  இந்தத் திருமறை வசனத்தை, புரிந்து கொள்ள வேண்டிய விதத்தில் புரிந்து கொள்ளாமல் நமது கணவன்மார்கள் காலா காலமாக தமது மனைவிமார்களுக்கு அநீதி இழைத்து வந்திருக்கிறார்கள். இந்த அநீதி இன்றும் தொடர்கிறது! அதுவும் மார்க்கத்தைப் பின்பற்றுகிறோம் என்ற பெயரிலேயே!?
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுவது என்ன?
ஆண்களே பெண்களை நிர்வகிப்போர் ஆவர். அவர்களில் சிலரை விட வேறு சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி இருப்பதும், ஆண்கள் தங்கள் செல்வங்களை பெண்களுக்காகச் செலவு செய்வதுமே இதற்குக் காரணம்.  (குர்ஆன் 4: 34)
முஹம்மத் அஸத் என்ற அமெரிக்க இஸ்லாமிய அறிஞர் இவ்வசனத்தின் இப்பகுதிக்கு இவ்வாறு மொழி பெயர்த்துள்ளார்கள்:
"Men shall take full care of women with the bounties which God has bestowed more abundantly on the former than on the latter> and with what they may spend out of their possessions.
இதன் கருத்து என்னவெனில் அல்லாஹ் பெண்களை விட ஆண்களுக்கு எந்தெந்த விஷயங்களில் மேன்மையைத் தந்துள்ளானோ  அவைகளைக் கொண்டு பெண்களை ஆண்கள் முழுமையாகப் பாதுகாத்திட வேண்டும்; அது போலவே ஆண்கள் தங்கள் செல்வங்களை பெண்களுக்காகச் செலவு செய்வதைக் கொண்டும் பெண்களை  முழுமையாகப் பாதுகாப்பவர்களாக விளங்கிட வேண்டும்; இவற்றைத்தான் வல்லோன் அல்லாஹ் ஆண்களிடம் எதிர்பார்க்கின்றான்.
இவ்வசனத்தில் - "ஆண்களே பெண்களை நிர்வகிப்போர் ஆவர். " - என்ற சொற்றொடருக்கான அரபிச் சொற்றொடர் - "அர்ரிஜாலு கவ்வாமூன 'அலன்-னிஸாஇ".
இதில் உள்ள “கவ்வாமூன” என்ற அரபிச்சொல்லுக்கு என்ன பொருள்?
The expression qawwam is an intensive form of qa'im ("one who is responsible for" or "takes care of" a thing or a person).
அதாவது - கவ்வாமூன என்பதற்கு "பொறுப்பேற்றிட வேண்டிய ஒருவர்" என்றும் "ஒன்றை அல்லது ஒருவரைப் பாதுகாப்பவர்” என்றும் பொருள் படும்.
பொறுப்பேற்றுக் கொள்ளும் ஒருவரையே நாம் தலைவர் என்கிறோம். இவ்வாறு பெண்கள் விஷயத்தில்; அவர்களைப் பாதுகாத்திடும் பொறுப்பேற்றுக் கொண்ட ஆண்கள்  தாங்களே குடும்பத்தின் தலைவர்கள் என்று மட்டும் எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் அது ஒரு மகத்தான பொறுப்பு என்பதனை வசதியாக மறந்து விடுகிறார்கள்!!
சரி, அவ்வாறே எண்ணிக் கொள்ளட்டும்! தலைவன் என்பதால் தன்னை ஒரு "சர்வ அதிகாரி" என்று அவர் நினைத்துக் கொண்டால் அந்தக் குடும்பம் எப்படி இருக்கும்? அங்கே மனைவியின் கண்ணியம் என்னவாகும்? மனைவியின் கருத்துக்களுக்கு அங்கே என்ன மதிப்பு இருக்கும்?
ஒரு நபி மொழியை இங்கே நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும். "உங்களில் தலைவன் என்பவன் மக்களுக்கு சேவை செய்பவனே!" - இது அண்ணலார் வாக்கு அல்லவா?
அண்ணலார் அவர்கள் தமது குடும்பத்தாரிடம் வந்து விட்டால், ஒரு சர்வாதிகாரியைப் போலவா தங்கள் மனைவியரிடம் நடந்து கொண்டார்கள்?
உமர் (ரளி) அவர்கள் பற்றி அவரது குடும்பத்தார் சொல்வது என்ன தெரியுமா?  - “உமர் (ரளி) அவர்கள் மிக உறுதியான மனிதர் தான்! ஆனால் அவர் எங்களிடம் வந்து விட்டால், அவர் ஒரு குழந்தையைப் போலவே நடந்து கொள்வார்!”
கணவன்மார்களே! உடனே வீட்டுக்குச் செல்லுங்கள்! அண்ணலாரின் முன்மாதிரியைச் செயல்படுத்திப் பாருங்கள். சிரித்த முகத்துடன் மனைவியைச் சந்தியுங்கள். போகும்போது உங்கள் மனைவிக்குப் பிடித்த ஏதாவது ஒரு பொருளை பரிசாக வாங்கிச் செல்லுங்கள்.
மனைவி ஒரு பொக்கிஷம் என்றார்கள் நபியவர்கள். அந்தப் பொக்கிஷம் உங்களுக்காகக் காத்திருக்கும். உங்களை வரவேற்கும். அதன் அளப்பரிய செல்வங்களை உங்கள் காலடியில் கொண்டு வந்து கொட்டும்.
வீணடித்து விடாதீர்கள் உங்கள் பொக்கிஷத்தை! உங்கள் தாயும் உங்கள் சகோதரிகளும் அந்தப் பொக்கிஷத்தை நீங்கள் அடைவதிலிருந்து உங்களைத் தடுத்திட அனுமதிக்காதீர்கள்!
இல்லறம் இனிக்கட்டும்!

குடும்பச் சண்டைகள் குறைந்திட!
ஸஹீஹுல் புகாரி எனும் நபி மொழி நூலிலிருந்து ஒரே ஒரு ஹதீஸை எடுத்து ஆய்வோம் – இங்கே:
ஆயிஷா (ரளி) அவர்கள் கூறியதாவது; அல்லாஹ்வின் தூதருடைய மனைவிமார்களான நாங்கள் இரு குழுக்களாக இருந்தோம். ஒரு குழுவில் நானும் ஹஃப்ஸா, ஸஃபிய்யா, மற்றும் சவ்தா ஆகியோரும் இருந்தோம். மற்றொரு குழுவில் உம்மு சலமா அவர்களும் அல்லாஹ்வின் தூதருடைய மற்ற மனைவிமார்களும் இருந்தனர்.
அல்லாஹ்வின் தூதர் என்னை எவ்வளவு (ஆழமாக) நேசித்து வந்தார்கள் என்பதை முஸ்லிம்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே, அன்பளிப்பு செய்பவர் தம்மிடம் பரிசுப் பொருள் ஏதும் இருந்தால், அதை அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்புச் செய்ய அவர் விரும்பினால், அதை தள்ளிப் போட்டு, என் வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தங்கும் நாள்) வரும்போது என் வீட்டிற்கு அன்பளிப்பு கொடுத்தனுப்புவார்.
ஆகவே, (இது தொடர்பாக) உம்மு சலமா குழுவினர் (தங்களிடையே கலந்து) பேசினர். பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் பேசி, எவர் எனக்கு ஓர் அன்பளிப்பைத் தர விரும்புகிறாரோ அவர், நான் என் மனைவிமார்களின் வீடுகளில் எங்கிருந்தாலும் அங்கு அந்த அன்பளிப்பை அனுப்பி வைக்கட்டும் என்று கூறும்படி (அல்லாஹ்வின் தூதரை) கேட்டுக் கொள் என்று உம்மு சலமா அவர்களிடம் அவர்களின் குழுவினர் கூறினர்.
அவ்வாறே உம்மு சலமா அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் தம் குழுவினர் கூறியதை எடுத்துச் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் ஏதும் கூறவில்லை. பிறகு, உம்மு சலமா அவர்களின் குழுவிலிருந்த மற்ற மனைவிமார்கள் உம்மு சலமா அவர்களிடம், (நமது கோரிக்கையை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்களா? என்று) கேட்டனர். உம்மு சலமா அவர்கள், எனக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை என்று சொன்னார்கள்.
அவர்கள், மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் (இது பற்றிப்) பேசு என்று கூறினர். உம்மு சலமா அவர்களும் அடுத்து தமது முறை வந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் அது குறித்துப் பேசினார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை. மீண்டும் உம்மு சலமா (ரலி) அவர்களின் குழுவினர், அவர்களிடம் (நபி (ஸல்) அவர்கள் என்ன பதில் சொன்னர்கள் என்று) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எனக்கு பதில் எதுவும் கூறவில்லை என்று உம்மு சலமா அவர்கள் கூறினார்கள்.
அதற்கு அவர்கள், அவர்கள் உனக்கு பதில் தரும்வரை நீ அவர்களிடம் (இது குறித்துப்) பேசிக் கொண்டேயிரு என்று கூறினார்கள். மீண்டும் உம்மு சலமா (அவர்களின் முறை வந்தபோது) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். உம்மு சலமா அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மீண்டும் (இது குறித்துப்) பேசினார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், ஆயிஷாவின் விஷயத்தில் எனக்குத் துன்பம் (மன வேதனை) தராதே. ஏனெனில், ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு) எனக்கு வருவதில்லை என்று கூறினார்கள்.
உம்மு சலமா அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்குத் துன்பம் தந்ததற்காக அல்லாஹ்விடம் நான் பாவ மன்னிப்புக் கோருகிறேன் என்று கூறினார்கள்.
பிறகு, அந்த மனைவியர் அல்லாஹ்வின் தூதருடைய மகள் ஃபாத்திமா (ரளி) அவர்களை அணுகி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், உங்கள் மனைவிமார்கள் அபூபக்ர் (ரளி) அவர்களுடைய மகள் ஆயிஷா (ரளி) அவர்களின் விஷயத்தில் (தாங்கள் நடந்து கொள்வது போன்றே பிற மனைவியரிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறார்கள் எள்று கூறுமாறு (சொல்லி) அனுப்பினார்கள். (அவ்வாறே) ஃபாத்திமாவும் நபி (ஸல்) அவர்களிடம் பேசினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், என் அன்பு மகளே! நான் நேசிப்பதை நீயும் நேசிக்கவில்லையா? என்று கேட்டார்கள். அதற்க அவர்கள், ஆம் (தாங்கள் நேசிப்பதை நானும் நேசிக்கிறேன்) என்று கூறிவிட்டு திரும்பிச் சென்று அவர்களிடம் (தன் சின்னம்மாக்களிடம்) செய்தியைத் தெரிவித்து விட்டார்கள். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் மறுபடியும் போ(ய்ச் சொல்) என்று கூறினார்கள். மீண்டும் (இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம்) செல்ல ஃபாத்திமா அவர்கள் மறுத்து விட்டார்கள்.
ஆகவே, அவர்கள் (தம் சார்பாக) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் அவர்களை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, (சற்று) கடுமையாகப் பேசி, உங்கள் மனைவிமார்கள் அபூ குஹாஃபாவின் மகனுடைய (அபூபக்ருடைய) மகளின் (ஆயிஷா) விஷயத்தில் (நடந்து கொள்வது போன்றே பிற மனைவிமார்களிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றார்கள் என்று கூறினார்கள்.
நான் (ஆயிஷா) அமர்ந்து கொண்டிருக்க, அவரது குரல் உயர்ந்தது. அவர் என்னைக குறை கூறித் திட்டினார். எந்த அளவுக்கென்றால், அல்லாஹ்வின் தூதர் நான் பதில் பேசுவேனா என்று எதிர்பார்ப்பது போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே, நான் ஸைனபுக்கு பதில் சொல்லி, இறுதியில் அவரை வாயடைக்கச் செய்து விட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, இவள் (உண்மையிலேயே) அபூபக்ருடைய மகள் தான் என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது, ஃபாத்திமா அனுமதி கேட்டு உள்ளே வந்தார் என்று ஆயிஷா(ரலி) கூறியுள்ளார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி)
என்ன அற்புதமான காட்சிகள் – நபியவர்களின் குடும்பத்தில்!
பெண்களின் இயல்புகளைப் புரிந்துகொள்ளவும், அதற்கொப்ப அவர்களிடம் நடந்து கொள்வது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ளவும் – இந்த ஒரு நபி மொழியில் இருந்தே நாம் நிறைய பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
பாடங்களுக்குச் செல்வோமா?
1. குழுவாக செயல்படுவது பெண்களின் இயல்பு! (தனி ஆவர்த்தனம் வாசிப்பது எல்லாம் ஆண்கள் தாம்!). குடும்பத்தில் பிரச்னை ஏதும் ஏற்பட்டால் – அதன் பின்னணியில் “பெண்கள் குழு” ஒன்று இருந்திட அதிக வாய்ப்பு உள்ளது. அதைக் கேள், இதைக் கேட்டு வாங்கு – என்று மாமியாரைச் சுற்றி – மகள், அக்கா, தங்கை – போன்ற உறவினர் கூட்டம் ஒன்று போட்டுக் கொடுத்துக் கொண்டே இருப்பதனால் தான் வரதட்சனைப் பிரச்னைகள்.
2. பெண்கள் நம்மிடம் என்ன செய்தி கொண்டு வந்தாலும் – ஆண்கள் – அதனை சீர்தூக்கிப் பார்த்தே முடிவு செய்திட வேண்டும். கொண்டு வரப் படும் செய்தியில் நேர்மை இல்லை எனில் – ஆண்கள் உறுதியாக மறுத்து விட வேண்டும். நபியவர்களைப் போல! “நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றார்கள்” என்ற குற்றச்சாட்டில் என்ன நியாயம் உள்ளது? ஒவ்வொரு மனைவிக்கும் ஒவ்வொரு நாளை ஒதுக்கியது நபியவர்களின் நீதியை உணர்த்திடவில்லையா? அதில் ஏதும் குறை வைத்தார்களா நபியவர்கள்?
3. உம்மு சலமா அவர்களிடம் நபியவர்களின் மனைவியர் “அவர்கள் உனக்கு பதில் தரும் வரை நீ அவர்களிடம் இது குறித்துப் பேசிக் கொண்டே இரு” என்று கூறினார்கள் என்பதைக் கவனியுங்கள். உம்மு சலமாவைத் தொடர்ந்து அன்னை ஃபாத்திமா அவர்களை அணுகுகின்றார்கள். தொடர்ந்து ஸைனபையும் அனுப்பி வைக்கிறார்கள்! தங்களுக்குச் சாதகம் ஏற்படும் வரை – தொடர்ந்து – முயற்சி செய்து கொண்டே இருப்பது – பெண்களின் கை வந்த கலை.
4. பெண்களிடம் – மறுத்துப் பேசுவதை விட மவுனத்துக்கு வலிமை அதிகம். இரண்டு தடவை மவுனம் காக்கிறார்கள் நபியவர்கள். இதுவும் சுன்னத் ஆகி விடுகிறது நமக்கு.
5. பெண்களிடம் பேசும்போது நமது பேச்சோ அல்லது மறுப்போ – சுருக்கமாக நறுக்கென்று அமைந்திட வேண்டும். வள வள என்று பேசி – அது ஒரு விவாதமாக மாறிட நாம் அனுமதிக்கக்கூடாது.
6. பெண்களை – இது போன்ற “நச்சரிப்பு” வேலைகளில் இருந்து காக்கக் கூடியது – இறையச்சம் ஒன்று மட்டுமே. உம்மு சலமா அவர்கள் இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டு. உம்மு சலமா அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்குத் துன்பம் தந்ததற்காக அல்லாஹ்விடம் நான் பாவ மன்னிப்புக் கோருகிறேன் என்று கூறினார்களே- அது தான் பாராட்டப் பட வேண்டும்.
7. முகத்தில் தெரிகின்ற உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதிலும், அந்த உணர்ச்சிகளை சொற்களால் விவரித்துக் காட்டுவதிலும் பெண்களே ஆண்களை விட சிறந்தவர்கள். எவ்வளவு அழகாக ஹதீஸை விவரிக்கிறார்கள் அன்னை ஆயிஷா அவர்கள்! நபியவர்களின் முகக் குறிப்பை எவ்வளவு துல்லியமாகவும் விரைவாகவும் புரிந்து கொண்டு விடுகிறார்கள்.
8. ஒன்றை கவனித்தீர்களா? எல்லாவற்றையும் விலா வாரியாக விவரித்த அன்னையவர்கள் – ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்கள் நபியவர்களைக் கடுமையாக என்ன பேசினார்கள் என்பதையோ, தம்மைத் திட்டியதையோ, இறுதியில் அவர்களை எப்படி வாயடைக்கச் செய்தார்கள் என்பதையோ – விவரிக்காமல் விட்டு விட்டார்கள் – பார்த்தீர்களா? இப்படித் தான் பெண்கள் “வடிகட்டிப் பேசிடத்” பழகிக் கொள்ள வேண்டும்! வடிகட்டிப் பேசினாலே பல பிரச்னைகளைத் தவிர்த்து விடலாம்.
9. இந்த ஹதீஸிலே வருகின்ற சம்பவம் போன்று நம் வாழ்வில் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆண்களாகிய நாம் எப்படி நடந்து கொண்டிருப்போம்? வீட்டில் ரகளை ஒன்றை நடத்தி முடித்து விடுவோம். இதற்குக் காரணம் ஆண்களின் ஈகோ தான்! இந்த ஒட்டு மொத்த சம்பவத்திலும் – நபியவர்களின் மவுனத்தையும் ஒரே ஒரு கருத்தையும் மட்டுமே இங்கே நாம் காண்கிறோம். தம்மிடம் கடுமையாகப் பேசும் மனைவிக்கு எதிராகக் கூட அவர்கள் வாயைத் திறக்கவேயில்லை!
10. பெண்களின் தன்மைகளை ஆண்கள் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தால் – கணவன் – மனைவி சண்டைகள் வெகுவாகக் குறைந்து விடும் குடும்பங்களில்.
11. ஒரு உணர்ச்சிகரமான சூழலில் நமது குடும்பம். கடுமையான வாக்குவாதம். ஆளுக்கு ஆள் பேசுகின்றார்கள். சப்தம் உயர்ந்து கொண்டே போகிறது. இந்தச் சூழ்நிலையை உங்களால் மாற்றிட முடியுமா? உணர்ச்சிகள் தணிந்து – குடும்பத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு எப்படிக் கொண்டு வருவீர்கள்? நபியவர்களிடமே கற்றுக் கொள்வோம். என்ன செய்கிறார்கள்?
அன்னை ஆயிஷா அவர்கள் ஸைனப் அவர்களை வாயடைக்கச் செய்தவுடன் நபியவர்கள் “இவர் உண்மையிலேயே அபூ பக்ரின் மகள் தான்” என்று நகைச் சுவையாக ஒரு போடு போடுகின்றார்கள். அவ்வளவு தான். சூழ்நிலை மாறி விடுகிறது! உணர்ச்சித் திறன் (Emotional Wisdom) உள்ளவர்களால் தான் இது சாத்தியப் படும்.
12. இறுதியாக – இன்னொரு பாடமும் இங்கே நாம் படித்துக் கொள்வோம். கணவனும் மனைவியும் ஒரே போர்வையில் தூங்குவது தான் அது! அதாவது இதுவும் ஒரு சுன்னத் எனபதை மறந்து விட வேண்டாம்.
(அல்லாஹு  தஆலா – நபியவர்களின் மனைவியர் – நமது அன்னையர் – அனைவரையும் பொருந்திக் கொள்வானாக! அவர்களைக் குறித்த நமது எழுத்துக்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!)
அவர்கள் மட்டும் எப்படிக் குடித்தார்கள்?
எப்படிப்பட்ட கணவனும் மனைவியும் சுவர்க்கம் செல்வார்கள்? எப்படிப்பட்ட கணவனும் மனைவியும் நரகம் செல்வார்கள்? எழுத்தாளரும் கதை சொல்வதில் வல்லவருமான ஸப்ரினா யு. அக்பர் அவர்கள் சொன்ன ஒரு கற்பனைக் கதையைக் கீழே தருகிறோம். நீங்களும் படித்துப் பாருங்கள்:
ஒரு ஊரில் ஒரு தாத்தாவும் பேரனும் இருந்தார்களாம். ஒரு நாள் பேரன் தாத்தாவிடம் கேட்டானாம். ஏன், தாத்தா, ஒரு சிலர் மட்டும் சுவர்க்கம் சென்று விடும்போது மற்ற சிலரால் ஏன் சுவர்க்கம் செல்ல முடியவில்லை?
தாத்தா தனது பேரனிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஆனால் பேரனின் புத்திக்கூர்மையை வியந்தவராக பேரனுக்குப் பொருத்தமான பதில் ஒன்றை சிந்திக்கத் தொடங்கினார்.
தாத்தா சொன்னார்:
சுவர்க்கத்துக்கு வாசல்கள் உள்ளது போலவே நரகத்துக்கும் வாசல்கள் உண்டு. உனக்கு அது தெரியும் தானே! கொஞ்சம் கற்பனை செய்து பார.;; நரகத்தின் கதவு ஒன்றை நாம் திறப்போம். அங்கே என்ன தெரிகிறது? ஒரு பெரிய கூடம் அது. நடுவிலே ஒரு பெரிய சாப்பாட்டு மேஜை. மேஜையின் நடுவிலே ஒரு பெரிய பாத்திரம். அதில் மூக்கைத் துளைத்தெடுக்கும் வாசனையுடன் ஒரு அருமையான பாயாசம். நாக்கில் எச்சில் ஊற வைக்கும் வாசனை அது. ஆனால் அந்த மேஜையைச் சுற்றியிருந்த அனைவரும் நோயாளிகளைப் போல ஒல்லியாகக் காட்சியளிக்கின்றனர். அவர்கள் பட்டினியால் பல நாட்கள் வாடியிருப்பது தெரிந்தது.
அவர்கள் கைகளில் ஆளுக்கொரு கரண்டியை வைத்திருந்தார்கள். ஆனால் அதன் கைப்பிடிதான் மிக நீளமானதாக இருந்தது. எந்த அளவுக்கு எனில் அந்தக் கரண்டியினால் பாயாசத்தை எடுத்து தம் வாய்க்கு அருகே ஒருவராலும் கொண்டு செல்ல முடியவில்லை!  ஏனெனில் அவர்களின் கைகளை விட அந்தக் கரண்டிகளின் கைப்பிடி மிக நீளமானதாக இருந்தது! அதனால் யாராலும் அந்தப் பாயாசத்தைக் குடிக்க முடியவில்லை!
இப்போது சுவர்க்கத்தின் கதவு ஒன்றை நாம் திறந்து பார்ப்போம். அங்கே என்ன தெரிகிறது? அதே போலவே இங்கேயும் ஒரு பெரிய கூடம்; நடுவிலே ஒரு பெரிய சாப்பாட்டு மேஜை. மேஜையின் நடுவிலே அதே போல ஒரு பெரிய பாத்திரம். அதில் மூக்கைத் துளைத்தெடுக்கும் அதே வாசனையுடன் ஒரு அருமையான பாயாசம். நாக்கில் எச்சில் ஊற வைக்கும் வாசனை தான் இதுவும். அதே போல கரண்டியைத் தான் இங்கேயும் ஆளுக்கொன்று வைத்திருந்தார்கள். ஆனால் இங்கே அந்த மேஜையைச் சுற்றியிருந்த அனைவரும் மிக நன்றாக கொழு கொழு என்று வாட்ட சாட்டமாக இருந்தார்கள். அவர்கள் அனைவரும் அங்கே சிரித்துக் கொண்டும் பேசிக்கொண்டும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டிருந்தார்கள்.
சிறுவன் கேட்டான்: எனக்கு இது புரியவில்லையே!
சிம்பிள்! இதற்கு ஒரே ஒரு திறமை மட்டும் தான் வேண்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் ஊட்டி விட வேண்டியது தான் அந்த சின்ன டெக்னிக்!
மற்றவர்க்கு உதவும் மனப்பான்மை மிக்கவர்கள், எப்போதும் மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.  சுவர்க்கத்தில் நீ பார்த்தது இவர்களைத் தான்!
ஆனால் பேராசை பிடித்தவர்களும், சுயநலம் பிடித்தவர்களும் தங்களைப்பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். மற்றவர் நலன் குறித்து இவர்களுக்கு அக்கரையே கிடையாது. நரகத்தில் நீ பார்த்தது இவர்களைத் தான்!
இது கணவன்-மனைவி உறவுக்கு மிகவும் பொருந்தும்!
குடும்ப வாழ்க்கையில் கணவனும் மனைவியும் வைத்திருப்பது பெரிய கைப்பிடி உள்ள கரண்டிகளைத் தான்! கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் ஊட்டி விடுவதில் தான் இல்லற சுவர்க்கமே அடங்கியுள்ளது. சுயநலம் பிடித்த கணவன் மனைவியர் இல்லற வாழ்வில் பட்டினி கிடந்து மெலிந்து போய் நரக வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டிருப்பர்.
படிப்பினை பெறுவார்களா இக்கதையிலிருந்து?

Part 2

என்னுடைய பணத்தை இவர் எடுத்து எப்படி செலவு செய்யலாம்?
கணவன்-மனைவி இருவர். என்னதான் எல்லாப் பொருத்தங்களையும் பார்த்துப் பார்த்துத் திருமணம் முடித்தாலும் ஆண் என்பவன் வேறு, பெண் என்பவள் வேறு என்பதால், இருவரும் வளர்ந்து வந்த சூழல்கள் வேறு வேறு என்பதால் இருவரின் ஆளுமையும் வேறு வேறு என்பதால் இல்லற வாழ்வில் கருத்து வேறுபாடுகள் வரத் தான் செய்யும்.
அது ஏன் இப்படி என்று கேட்க வேண்டியதில்லை. அது அப்படித்தான்!
கருத்து வேறுபாடுகள் எந்தெந்த விஷயங்களில் தலையெடுக்கலாம்?
பொருளாதாரம் காரணமாக இருக்கலாம். அல்லது மாமியார்-நாத்தனார் காரணமாக இருக்கலாம். குழந்தை வளர்ப்பு குறித்ததாக இருக்கலாம். இஸ்லாமிய மரபுகளைப் பேணுவதில் இருக்கலாம். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் இருக்கலாம். அது சிறியதாகவும் இருக்கலாம். பெரியதாகவும் இருக்கலாம்.
ஆனால் கருத்து வேறுபாடு தோன்றி விட்டால் அடுத்து கணவன் மனைவியர் என்ன செய்திட வேண்டும். அது குறித்து மனம் திறந்து பேசிட வேண்டும். ஆனால், பல கணவன் மனைவியர் அவ்வாறு பேசிடுவதில்லை. மனதுக்குள் போட்டு அடக்கி வைத்திருப்பார்கள். கோபம் வரும். சோகம் தலையெடுக்கும். அநியாயம் இழைக்கப்பட்டதாக, அவமானப்படுத்தப் பட்டதாக, காயப்படுத்தப்பட்டதாக எண்ணுவார்கள். ஆனால் வாயைத் திறக்க மாட்டார்கள்.
இதற்குப் பெயர் தான் ஆங்கிலத்தில் – resentment -  என்கிறார்கள். இதனை “அடக்கி வைக்கப்பட்ட கோபம்” எனலாம். இது பாட்டிலில் அடைக்கப்பட்ட உணர்வு ஆகும். இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அழுத்தம் கொடுக்கத் தொடங்கும்.
கணவன் மனைவியரிடையே இந்த கோபம் உருவாகி வளர்ந்தால் என்ன விளைவுகளை இது ஏற்படுத்திடும்?
முதலில் தனது கணவனைப் பற்றிய அல்லது மனைவியைப் பற்றிய “உயர்ந்த எண்ணம்” அடி பட்டுப்போகும். நம்பிக்கை குறைந்து விடும். முன்னர் எவ்வாறு தமக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று அவர் எண்ணிக் கொண்டாரோ  அதே கோணத்திலேயே அடுத்து நிகழும் அனைத்து சம்பவங்களையும் கற்பனை செய்யத் தொடங்கி விடுவார்.
இங்கே ஒரு கணவன் மனைவி கதையை எடுத்துக் கொள்வோம்.
இருவருக்கும் திருமணம் ஆன போது மனைவியின் நெருங்கிய உறவினர் ஒருவர் திருமண நன்கொடையாக ஒரு தொகையை அந்தப் பெண்ணிடம் கொடுக்கிறார். ஆனால் மனைவியிடம் பணம் இருப்பது தெரிந்த கணவன் அந்தப் பணத்தை மனைவியிடம் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்டு வாங்கி முழுவதையும் செலவு செய்து விடுகிறார்.
அந்தப் பெண்ணுக்குக் கோபமோ கோபம்! “அந்தப் பணம் என்னுடையது! அதனை இவர் எடுத்து எப்படி செலவு செய்யலாம்?” என்று தனக்குள்ளேயே அடிக்கடிக் கேட்டுக் கொள்கிறார்.
ஆனால், வேறு சில தருணங்களில், “சே! இது ஒரு பெரிய தொகையா? இவர் எனக்கு செய்கின்ற செலவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது ஒரு சாதாரண தொகை தானே! இதற்கு ஏன் போய் நான் இப்படி அலட்டிக் கொள்கிறேன்?” – என்றும் எண்ணிக் கொள்கிறார்.
இந்த சிந்தனை வட்டத்தில் சிக்கிக் கொண்ட அந்தப் பெண்மணிக்கு இது குறித்து கணவனிடம் பேசிட இயலவில்லை!
அடுத்து என்ன நடந்தது?
“நீ ஏன் பகுதி நேர வேலை ஒன்றில் சேர்ந்திடக் கூடாது?” என்று கணவன் ஆலோசனை சொல்கிறார். ஆனால் மனைவி அவரது நோக்கத்தையே சந்தேகிக்கிறார்.
கணவன், மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு மனைவியையும் அழைத்துச் செல்கிறார். போகும்போது சில பரிசுப் பொருட்களையும் வாங்கிச் செல்கிறார். மனைவி இதனையும் சந்தேகிக்கிறார். “எதற்காக இவர் இப்படி ஐஸ் வைக்கிறார்?”
மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே செல்கிறார். மனைவிக்காக செலவுகள் செய்கிறார். “இதுவெல்லாம் வெறும் நடிப்பு!” என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறார்.
இவ்வாறு எவ்வளவு காலம் இந்த உணர்வுகளை அடக்கிக் கொண்டிருந்தார் இவர் தெரியுமா? நான்கு ஆண்டுகள்! பின்னர் தான் அது வெடிக்கிறது! இவ்வாறு மவுனமானதொரு கோபம் ஏற்பட்டு, அது அடக்கப்பட்டு, அதற்கு அழுத்தம் தரப்பட்டு பின்னர் வெடித்திட ஏன் அனுமதித்திட வேண்டும்? இந்த நிலை ஏன் ஏற்படுகின்றது என்பதை அறிந்து கொண்டால் தான் இந்நிலையிலிருந்து கணவன் மனைவியர் தம்மைக் காத்துக் கொள்ள முடியும்.
காரணங்கள்:
1. வெளிப்படையாகப் பேசிடத் தயக்கம். தனது கருத்துக்களில் உண்மை இருக்கின்றது என்று தெரிந்தால் பேசிவிட வேண்டியது தானே?
2. தம்மை ஒரு பலிகடாவாக (victim) கற்பனை செய்து கொள்தல்.
3. மற்றவர்களுடைய சின்னச் சின்ன சொற்களுக்கும் செயல்களுக்கும் கூட பெரிதாக அலட்டிக் கொள்தல்; தப்பர்த்தம் செய்தல்.
4. தன்னைப் பாதுகாக்க யாரும் இல்லை என்ற கழிவிரக்க உணர்வு.
5. எல்லாவற்றையும்  “தீய கண்ணோட்டத்துடனேயே” பார்த்துக் கொண்டு மற்றவர் செய்கின்ற நன்மைகளுக்குக் கூட  நன்றி செலுத்தத் தவறுவது.
இதற்குத் தீர்வு என்ன?
1 உங்கள் துணைவரின் எல்லா சொல் செயல்களையும் “தவறான கண்ணோட்டத்தில்” துருவிக் கொண்டிருக்காதீர்கள்.
2. உங்கள் எல்லாவிதமான் உணர்வுகளையும் உங்கள் துணைவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்- இதைத் தொடர்ந்து செய்து வாருங்கள்.
3. துணைவரின் குறைகளை மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
4. உள்ளத்தில் - உங்கள் மதிப்பை (self-esteem) உயர்த்திக் கொள்ளுங்கள்.
இனிக்கட்டும் இல்லறம்!



"என் தோல்வி அனைத்துக்கும் என் துணைவியே காரணம்?"
ஆங்கிலத்தில் Blaming என்று ஒரு சொல், இதன் பொருள் என்ன?
கடுமையான சொற்களால் ஒருவரை குற்றம் சுமத்துவதற்குப் பெயர் தான் Blaming!
இதில் வார்த்தைகளாலேயே ஒருவரை தண்டிப்பதும், மட்டம் தட்டுவதும், இழிவு படுத்துவதும் அடங்கும். பார்க்கின்ற பார்வையினாலும், முகம் காட்டும் கோணல்களாலும் ஒருவரைத் தண்டிப்பதும் அடங்கும்!
ஏன் கணவனோ அல்லது மனைவியோ இவ்வாறு ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ள வேண்டும்?
ஒரு சான்று:
கணவன் அவசரமாக அலுவலகம் சென்றிட வேண்டும். மனைவியிடம் ஒரு சட்டை மற்றும் ஒரு பேண்ட்ஸ் அயர்ன் செய்து சீக்கிரம் ரெடி பண்ணி வைக்கச் சொல்கிறான்.
மனைவி அயர்ன் செய்வதற்குத் தயாராகும்போது, தொலைபேசி அழைப்பு ஒன்று வருகிறது. அது மனைவியின் நெருங்கிய தோழி ஒருவரிடமிருந்து வந்த வெளிநாட்டு அழைப்பு. அவர்கள் பேசி நீண்ட நாட்களாகி விட்டன.
பல தடவை போன் செய்த போது இணைப்பு கிடைக்கவில்லை. இப்போது கிடைத்திருக்கிறது.
ஒரு பத்து நிமிடம் பேசி விட்டு விரைவில் பெட்டி போட்டுக் கொடுத்து விடுவோம் - என்று பேசுகிறார் தோழியிடம். பேச்சு சுவாரசியத்தில் நேரம் போனது தெரியவில்லை! அரை மணி நேரம் பேச்சு தொடர்கிறது.
கணவன் குளித்து விட்டு ரெடியாகி வரும்போது, மனைவி கையில் செல் போன்! தோளில் சட்டை பேன்ட்ஸ்.
கோபம் வருமா வராதா கணவனுக்கு?
"உன்னைப் போய் அயர்ன் பண்ணிக் கேட்டேனே! .......... .................. .......................!"
சட்டை பேன்ட்ஸை தானே எடுத்துப்போய் தானே அயர்ன் செய்து கொண்டு, அவசர அவசரமாகப் பசியாறி விட்டு, அவசர அவசரமாக அலுவலகம் சென்றால் முக்கியக் கோப்புகளை வீட்டிலேயே மறந்து விட்டு வந்தது நினைவுக்கு வர... அலுவலகத்தில் மேல் அதிகாரியிடம் திட்டு வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினால்.... தனது தோல்வி அனைத்துக்கும் மனைவியே காரணம் என்று நினைக்கும் கணவன்மார்களே குற்றம் சுமத்தும் கணவன்மார்கள்!
எப்போதாவது தான் இது போன்று நடக்கிறது என்றால் மறந்து போகலாம். ஆனால் இரண்டு நாளைக்கு ஒரு முறை அல்லது ஒரு நாளிலேயே பல முறை என்று ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயத்துக்கும் குற்றம் சுமத்திக் கொண்டிருந்தால் என்னவாகும்?
இன்ஷா அல்லாஹ் இதனை நாம் தொடர்ந்து பார்ப்போமே..

என் தோல்வி அனைத்துக்கும் என் கணவனே காரணம்!
இதற்கு முன் சொல்லப்பட்ட அதே போன்ற உதாரணத்தை - மனைவிக்கும் நாம் சொல்லலாம்.
மனைவியின் உறவினர் அன்று மாலை வீட்டுக்கு வருவதனால், டின்னருக்காக, மனைவி கொஞ்சம் முந்திரிப்பருப்பும் திராட்சைப்பழமும் வாங்கிக் கொண்டு வரச்சொல்ல, மாலையில் அதனை வாங்க மறந்து விட்டுக் கணவன் வீட்டுக்கு சற்று தாமதமாகவே வந்து நிற்க – மனைவி “எங்கே முந்திரியும் திராட்சையும்?” என்று கேட்க,
“அடடா, மறந்து விட்டேனே!” என்று கணவன் சொல்ல..
- கோபம் வருமா வராதா மனைவிக்கு?
“உங்கள நம்பிக் காத்துக்கிட்டு இருந்தேனே! ................................ .................. ....................!
மனைவி முந்திரியும் திராட்சையும் இல்லாமலேயே இனிப்பு செய்து சமாளிக்க அது திருப்தியில்லாமல் போக – (“அவர்கள் வீட்டுக்கு நான் போயிருந்த போது என்னமாய் என்னைக் கவனித்தார்கள்!) இந்த அவமானமான சூழ்நிலைக்குக் கணவனே முழுக் காரணம் என்று நினைக்கும் மனைவிமார்களே குற்றம் சுமத்தும் மனைவிமார்கள்!
எப்போதாவது தான் இது போன்று நடக்கிறது என்றால் மறந்து போகலாம். ஆனால் இரண்டு நாளைக்கு ஒரு முறை அல்லது ஒரு நாளிலேயே பல முறை என்று ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயத்துக்கும் கணவனை மனைவி குற்றம் சுமத்திக் கொண்டிருந்தால் என்னவாகும்?
“இவரை இனி நாம் நம்பவே முடியாது!” என்று முடிவு கட்டி விடுகிறார் மனைவி!
இவ்வாறு தொடர்ந்து ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக்கொண்டிருக்கும் நிலையிலிருந்து இருவரும் மீள்வது எப்படி என்பதை அடுத்து நாம் பார்ப்போம்.
ஆனால் - ஒன்றை இங்கே வலியுருத்திச் சொல்ல விரும்புவது என்னவென்றால் - இது போன்ற குற்றம் சுமத்தும் கணவன் மனைவியர்கள் இரண்டு ஆண்டுகளிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குள் விவாக விலக்கை நாடி விடுகின்றார்கள்!
தொடர்ந்து குற்றம் சுமத்துதல் என்பது விவாக விலக்கு ஏற்படுவதற்கான ஒரு முன்னெச்சரிக்கை!

குற்றம் சுமத்திக் கொண்டே இருந்தால் குடும்பத்தில்
அமைதி குலைந்து விடும்!
எதற்கெடுத்தாலும் குற்றம் பிடிப்பவரின் மனநிலை என்ன தெரியுமா?
"எடுத்துக் கொண்ட காரியம் ஒன்றில் எனக்குத் தோல்வி ஒன்று ஏற்பட்டு விட்டால் அதன் பொருள் என்ன? அந்தக் காரியத்தை செய்வதற்கு நான் இலாயக்கானவன் இல்லை என்றல்லவா ஆகி விடும்?
அத்தோடு என்னுடைய தவறான நடைமுறைகள் தான் இந்தத் தோல்வியை எனக்குத் தேடித் தந்தது என்பதை நானே ஒத்துக் கொண்டால் என்னை யார் மதிப்பார்கள்? அப்படியானால் நான் என்ன செய்யலாம்? பழியை இன்னொருவர் மீது போட்டு விட்டால் நான் தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா?
Exactly - இதனைத் தான் செய்கிறார்கள் - மற்றவர்கள் மீது குற்றம் பிடிப்பவர்கள்!
"நான் என் மேலதிகாரியிடம் திட்டு வாங்கியதற்குக் காரணமே என் மனைவி தான்! அவள் மட்டும் அன்றைக்கு சரியான நேரத்தில் என் சட்டையையும் பேண்ட்ஸையும் அயர்ன் பண்ணிக் கொடுத்திருந்தால் எனக்குக் கோபம் வந்திருக்குமா?
கோபம் இல்லை என்றால் நான் எனது கோப்புகளை மறந்து விட்டுச் சென்றிருப்பேனா? ஆக எனக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு என் மனைவியே முழுக் காரணம்!
இப்படிக் குற்றம் பிடித்தலில் ஒருவர் சுவை கண்டு விட்டார் எனில் அது ஒரு தொடர் கதையாகி விடும். தனக்கு எப்போது தோல்வி ஏற்பட்டாலும் இவர் பிறர் மீது பழியைப் போட்டுவிட்டு தான் குற்றமற்றவர் என்று காட்டிக் கொள்பவராக ஆகி விடுவார்!
இப்படிப்பட்டவர்கள் தங்களைத் திருத்திக் கொண்டு முன்னேறிச் சென்றிடும் வாய்ப்பை முற்றிலும் இழந்து விடுகிறார்கள்!
அடுத்தது இன்னொன்றையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். குற்றத்தை மற்றவர் மீது சுமத்திடும் கெட்ட பழக்கம் ஒரு தொற்று நோய் போல!
கணவனிடமிருந்து மனைவிக்குத் தான் தொற்றும் என்பதில்லை!
குழந்தைகளுக்கும் இந்த நோய் தொற்றிக் கொண்டால் என்னவாகும் குடும்பத்தின் நிலைமை?
இந்தக் கெட்டப் பழக்கம் குடும்பத்தில் ஏற்படுத்தும் விளைவுகள்:
- குடும்பத்தினர் யாரும் தங்களின் கருத்துக்களை வெளியே சொல்ல பயப்படுவார்கள்!
- ஒருவரும் தங்களின் தவறுகளை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்!
- எந்த ஒரு விஷயத்திற்கும் தாமாகவே நல்லதொரு முடிவை எடுத்திட அஞ்சுவார்கள்!
- புதிதாத எந்த ஒன்றையும் சாதித்திட வேண்டும் என்ற ஊக்கம் மங்கிப்போய் விடும்!
- குற்றம் சுமத்தப்படுபவர் தனது கோபத்தை அடக்கிக் கொள்வார்; வாய் திறக்க முடியாது!
- மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள்! வீடே சோக மயமாகக் காணப்படும்!
- தங்களுக்கு எந்த ஒரு மதிப்புமில்லையே என்று கையறு நிலைக்கு ஆளாகுவர்!
- அங்கே தட்டிக் கொடுப்பார் யாரும் இருக்க மாட்டார்கள்! மட்டம் தட்டுதல் மட்டும் தவறாமல் நடந்து கொண்டிருக்கும்!
இப்படிப்பட்ட குடும்பத்தில் மன அமைதி இருக்குமா? கிஞ்சிற்றும் இருக்காது! ஏன்? அங்கே அன்பு, காதல், நேசம், இரக்க உணர்வு எதற்கும் இடமில்லை எனும்போது மன அமைதி எப்படி கிட்டும்!
இல்லற வாழ்வை இதற்காகவா தந்தான் வல்லோன் அல்லாஹ்?
எனவே - இன்றே அப்படிப்பட்ட கணவன் மனைவியர் ஒரு முடிவுக்கு வந்திட வேண்டும். அது என்ன?
"நம் குடும்பத்தில் இனி இந்தக் குற்றம் சுமத்தும் கெட்டப் பழக்கத்துக்கு இடமே கிடையாது!"
முடிவு எடுத்து விட்டீர்களா?
அப்படியானால் குடும்பத்தினர் தவறுகள் செய்திடும்போது எப்படி அவர்களைத் திருத்துவது என்று கேட்கிறீர்களா?
இன்ஷா அல்லாஹ் தொடர்வோமே!

தவறு அவர் மீது மட்டும் அல்லவே!
குற்றம் சுமத்திக் கொண்டே இருக்கும் கெட்டப் பழக்கத்திலிருந்து விடுபட ஒரு உதாரணம் சொல்லப்படுகின்றது.
ஒரு கொடிய விஷப்பாம்பு அது! வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அது மற்றவர்களைக் கொட்டி விடும்! அந்தப் பாம்பு கொட்டினால் எப்படி வலிக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியும்; அது மரணத்துக்கும் வழி வகுக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியும்; அப்படிப்பட்ட பாம்பு ஒன்றிடம் போய் நீங்கள் உங்கள் கையை நீட்டுவீர்களா?
நாம் சொல்வதெல்லாம் நாம் கொடிய பாம்பாகவும் இருந்திட வேண்டாம்!
அந்தப் பாம்பிடம் போய் கொட்டு வாங்குபவர்களாகவும் இருந்திட வேண்டாம்!
இப்பிரச்னை தீர பின் வருபவற்றை சற்றே நினைவில் வையுங்கள்:
கணவன் (அல்லது மனைவி) ஏதாவது ஒரு தவறைச் செய்து, அதனால் நினைத்த ஒன்று நடக்காமல் போய் விட்டால், மனைவி (அல்லது கணவன்) உடனே உணர்ச்சி வசப்பட்டு அதற்கு சட்டென்று எதிர்வினையாக (react) திட்டத் தொடங்கி விடுகிறார். "உன்னால் தான் இந்த நிலை" என்று!
இந்தச் சட்டென்ற எதிர்வினை அறிவுபூர்வமானதாக இருக்காது. உணர்ச்சியால் உந்தப்பட்டு சட்டெனப் பேசி விடுவோம்! வரம்பு மீறி வார்த்தைகளைக் கொட்டி விடுவோம்!
எனவே நாம் என்ன செய்திட வேண்டும்? பிரவாகம் எடுத்துப் பொங்கி எழுகின்ற உணர்ச்சியை நாம் சற்றே அடக்கிக் கொள்ள முயல வேண்டும்.
கோப உணர்ச்சியை விழுங்கிட வேண்டும். (இதற்குப் பயிற்சி தேவை. அனால் முடியாதது ஒன்றும் இல்லை). வாய்க்குப் பூட்டு போட்டு விட வேண்டும்.
நின்று கொண்டிருந்தால் அப்படியே உட்கார்ந்து விட வேண்டும். நன்றாக மூச்சை இழுத்து ஆசுவாசப் படுத்திக் கொள்ள வேண்டும்.
நிதானத்துக்கு வந்த பிறகு, என்ன நடந்ததோ - அதனை வேறு கோணத்தில் சிந்தித்துப் பார்த்திட முயற்சிக்க வேண்டும்.
நாம் முன்பு காட்டிய உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம். கணவன் வீட்டுக்குத் திரும்பும்போது, முந்திரியும் திராட்சையும் வாங்கி வர மறந்து விட்டார் அல்லவா? இதனை மனைவி எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும்?
"அவர் வேண்டுமென்று மறந்திருக்க மாட்டார்! அலுவலக வேலை அவருக்கு மறதியைத் தந்திருக்க வேண்டும்!"
"எத்தனையோ தடவை நாம் சொல்வதை அப்படியே வாங்கிக் கொடுப்பவர் தானே இவர்?
"நாம் அவரைத் திட்டி விட்டால், அவர் மனம் என்ன பாடுபடும்? அவர் மனத்தை புண்படுத்தி நமக்கு என்ன ஆகப்போகின்றது!"
"நாம் இடையே ஒரு போன் செய்து நினைவூட்டி யிருக்கலாம் தானே! தவறு அவர் மீது மட்டும் அல்லவே!"
"மாதத் துவக்கத்திலேயே மளிகைப்பொருட்களை வாங்கும்போதே - தேவையான அனைத்தையும் சேர்த்து வாங்கிக் கொள்!" - என்று பல தடவை அவர் என்னிடம் சொல்லியிருக்கும்போது அப்படி வாங்கி வைக்காதது என் தவறு தானே!
இந்தக் கோணத்தில் மனைவி சிந்தித்தால், கணவன் மேல் உள்ள கோபம் பறந்து போய் விடும்! மாறாக அவர் மீது இரக்கப்படத் துவங்கி விடுவார் மனைவி!
அதோடு விட்டு விடாமல், இனி அடுத்து இது போன்று நடக்காமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை இருவரும் சேர்ந்தே யோசிக்கலாம் தானே!
இந்த அணுகு முறையில் கணவன் மனைவி நல்லுறவு, நேசம், கருணை, எல்லாம் பாதுகாக்கப்படுகிறது!
குற்றம் சுமத்தும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? இந்த மாற்று வழியில் கொஞ்சம் முயற்சித்துப் பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் நிச்சயம் மாறி விடுவீர்கள்! அல்லாஹ் அருள் புரிவானாக!


என்னிடம் திரும்பு! என்னைக் கவனி! நான் சொல்வதைக் கேள்! அது போதும் எனக்கு!
சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள் மனைவியருக்கு நிறைய இருக்கும். கணவன்மார்களுக்கோ – “இது ஒரு பெரிய விஷயமா? இதற்குப் போய் ஏன் இவள் இப்படி அலட்டிக் கொள்கிறாள்?” என்றே எண்ணத் தோன்றும்.
ஆனால் தமது சின்னச் சின்ன ஆசைகள் – கணவனால் – தொடர்ச்சியாக அலட்சியப்படுத்தப் படும்போது மனைவி என்ன நினைக்கிறாள்? “நான் இவ்வளவு சொல்லியும் இவர் கேட்கவில்லை என்றால் என்ன பொருள்? எனது உணர்வுகளை இவர் மதிப்பதே இல்லை!” என்பது தான்!
எனவே கணவன்மார்களே! உங்கள் மனைவியின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றுவதை நீங்கள் உங்கள் இல்லற வாழ்வின் ஒரு மிக முக்கியமான அங்கமாகவே ஆக்கிக் கொள்ள வேண்டும்!
“இதப்பாருங்க, இன்னிக்கு உங்க அம்மா படுத்துன பாட்டை உங்களிடம் நான் சொல்லியே ஆக வேண்டும். உட்காருங்க!” – இது மனைவி.
“அதை எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதற்கு எனக்கு நேரமில்லை!” என்று நீங்கள் சொல்ல வேண்டாம்.
மாறாக – “இப்போது வேண்டாமே! நாளை காலையிலே பேசிக் கொள்வோமே!” – என்று சொல்லிப்பாருங்கள்.
சொன்னபடியே மறுநாள் காலையில் உட்கார்ந்து பொறுமையாக உங்கள் மனைவி சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டிருங்கள். இதுவே அவர்களின் பெரிய எதிர்பார்ப்பு உங்களிடம்.
(எச்சரிக்கை: அவர்கள் பேசும்போது நீங்கள் குறுக்கிடக்கூடாது; விமர்சிக்கக் கூடாது! புத்திமதி சொல்லிடக்கூடாது!)
“என்னிடம் திரும்பு! என்னைப் பார்! என்னைக் கவனி! நான் சொல்வதைக் கேள்! அது போதும் எனக்கு!” – இதுவே மனைவியரின் தாரக மந்திரம்!
நபியவர்களின் முன்மாதிரி நமக்கெல்லாம் தெரியும் தானே? தம் மனைவியரின் சின்னச் சின்ன ஆசைகளையெல்லாம் – அவர்களின் ஆசை தீர நிறைவேற்றிக் கொடுப்பவர்கள் தானே அண்ணலார் அவர்கள்!
பின்பற்றிப்பாருங்கள்! பன்மடங்கு பலனை அனுபவிப்பீர்கள்!!

உங்க கிட்ட எதையுமே ஷேர் பண்ணிக்க முடியாதே!
பொதுவாக ஆண்களைப் பொருத்தவரை - அவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் அதன் முடிவுக்கே (result) முக்கியத்துவம் அளிப்பார்கள். அந்த முடிவுக்கு முன்னால் நடக்கின்ற எந்த விஷயமும் ஆண்களுக்கு அவ்வளவாக இனிப்பதில்லை!
சான்றாக - குடும்பத்தினர் - ஊர் போய்ச் சேர்ந்து விட்டார்களா என்பதை அறிந்திட மட்டுமே ஆவல். எப்படிப்போய்ச் சேர்ந்தார்கள் என்பது அவர்களுக்கு முக்கியம் அல்ல.
ஆனால் பெண்களைப் பொருத்தவரை அது அப்படியல்ல! எந்த ஒரு விஷயத்திலும் அவர்களுக்கு முக்கியமானது எல்லாம் - அந்த விஷயம் எவ்வாறு நடந்தது என்கின்ற வழிமுறை தான் (process). முடிவு அவர்களுக்கு முக்கியம் அல்ல!
இதனால் ஒவ்வொரு விஷயமும் எவ்வாறு நடந்தது என்பதை அவர்கள் விவரிக்கும்போது அவர்கள் விலாவாரியாகத் தான் பேசுவார்கள். சுருக்கமாக அவர்களுக்குப் பேசத் தெரியாது.
பயணம் புறப்பட்ட இடத்திலிருந்து ஊர் போய் சேர்ந்தது வரை நடந்த அத்தனையையும் பிட்டுப் பிட்டு வைத்தால் தான் அவர்களுக்கு நிம்மதி!
இதனை எல்லாக் கணவன்மார்களும் மிக நன்றாகப் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மனைவி ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு கணவனிடம் வருவார். கணவனும் காது கொடுத்துக் கேட்பார். ஆனால் மனைவி விவரித்துக் கொண்டே போவார். கணவனுக்கு அது bore அடிக்கும். சுருக்கமாகச் சொல் என்பார் கணவர். "இதைக் கேளுங்க!" என்று தொடர்வார் மனைவி.
கணவனுக்கு இருப்புக் கொள்ளாது. அங்கும் இங்கும் பார்ப்பார். தான் சொல்வதை கணவன் சரியாகக் காதில் வாங்கவில்லை என்று தெரிந்தால் கோபம் வந்து விடும் மனைவிக்கு.
இங்கே என்ன நடந்தது என்று பாருங்கள்.
மனைவி கொல்லைப்புறத்தில் நிற்கிறார். தண்ணீர் மோட்டாரைப் போட்டு விட்டு டாங்க் நிறைவதற்காகக் காத்திருக்கிறார். ஆட்டோமாடிக் ஸ்விட்ச் கிடையாது. நாம் தான் ஸ்விட்சை அடக்க வேண்டும். தொழுது விட்டு வீடு திரும்பிய கணவன், மனைவியைப் பார்த்து விட்டு அவரும் கொல்லைப்புறத்துக்குச் செல்கிறார்.
மனைவி, “இங்க பாருங்க…. உங்க கிட்ட சொல்லனும்னு நினைச்சிட்டு இருந்தேன். நீங்களே வந்துட்டீங்க… பெரிய மச்சி வந்திருந்தாங்களா? (மருமகள்) பர்வீன் வந்து மச்சி கிட்ட பர்மிஷன் வாங்காமயே அம்மா வீட்டுக்குக் கிளம்பிடுச்சாங்க… மச்சி உடனே ஃபோன் பண்ணி சம்பந்தி கிட்ட சொன்னாங்களாம்…. அவங்க என்ன நடந்ததுன்னு கேட்காமயே மச்சியையே குறை சொல்றாங்களாம்; அவங்க எப்போதுமே….”
இந்தச் செய்தியில் கணவனுக்கு சற்றும் விருப்பம் கிடையாது! காதில் வாங்குவது போல் "ம்.....ம்.." என்று சொல்கிறார். பேச்சைத் திசை திருப்பிட தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
கணவன் திடீரென சற்றே இடைமறித்து, “டாங்க் நிரம்பி விட்டது போல் இருக்கே; ஸ்விட்சை அடக்கி விடவா?” என்று கேட்கிறார்.
பேச்சைக் கணவன் திசை திருப்புகிறார் என்பதைத் துல்லியமாகக் கவனித்து விடுகிறார் மனைவி.
"ஏங்க? நான் இங்கே எதற்கு நின்று கொண்டிருக்கிறேன்? எனக்குத் தெரியாதா டாங்க் நிரம்பி விட்டதா, இல்லையா என்று? உங்க கிட்ட எதையுமே ஷேர் பண்ணிக்க முடியாதே!” – என்று சொல்லி விட்டு விருட்டென்று வீட்டுக்கு உள்ளே சென்று விடுகிறார்.
அடுத்த வினாடியே – டாங்க் நிரம்பி தண்ணீர் வழியத் தொடங்குகிறது! கணவன் ஸ்விட்சை அடக்கி விட்டு அமைதியாக உள்ளே திரும்புகிறார்.
ஆனால் மனைவியின் மனநிலை இப்போது எப்படி இருக்கும்? சிந்தியுங்கள்!
இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்.

இவர் கிட்ட பகிர்ந்து கொள்ளாமல் நான் யாரிடம் பகிர்ந்து கொள்வது?
இன்னொரு சம்பவம்.
கணவனுக்கு டின்னர் பரிமாறுகிறார் மனைவி. தோசை தான். மனைவி பேசத்தொடங்குகிறார். கணவன் சாப்பிட்டுக் கொண்டே – மனைவி பேசுவதைக் காதில் வாங்குகிறார்.
“ஏங்க, சம்சாத் மச்சி வந்திருந்திச்சா? எல்லாத்தையும் மச்சி கிட்ட நான் சொன்னேங்க. அவங்க நேரா அம்மாகிட்ட போய், “ஏம்மா, மச்சி தான் உங்களை நல்லா கவனிச்சுக்குதே; ஏங்க, அவங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டாமா? ஏன் இப்படி அவங்கள தொந்தரவு பண்ணுகிறாயாம்?" - என்று கேட்டாங்களாம். அதுக்கு உங்க அம்மா சொல்றாங்களாம்…
கணவன் மனதுக்குள் - "ஆரம்பிச்சாச்சா! அவ்வளவு தான்! எப்படி தப்பிப்பது இதிலிருந்து?"
கணவனின் முகத்தில் அதிருப்தியின் ரேகைகள் தெரிந்தாலும், மனைவி "கதையைத்" தொடர்ந்து கொண்டே செல்ல....
கணவன் (கையிலே கறிவேப்பிலையை வைத்துக் கொண்டு): ஏம்மா, அந்த வேஸ்ட் ப்ளேட்டை எடுத்து வையேன் இங்கே!”- என்று சொல்ல.... அவ்வளவு தான்! கோபம் வந்து விட்டது மனைவிக்கு!
பேச்சைத் திசை திருப்பிடத்தான் கணவன் இப்படி இடை மறிக்கிறார் என்று - “உங்க கிட்ட போய் சொல்ல வந்தேனே?" – என்று சொல்லி விட்டு – அடுத்த தோசையை சற்றே வேகமாக தட்டில் போட்டு விட்டுப் போய் விடுகிறார் மனைவி: .
இங்கே மனைவி பேசிக் கொண்டிருக்கும் போதே கணவன் இடை மறித்துப் பேசியது நமக்கொன்றும் பெரிய தவறாகத் தெரிய வாய்ப்பில்லை. கணவன் பேசியது நமக்கு யதார்த்தமாகவே தெரியும்.
ஆனால் மனைவி என்ன நினைக்கிறார்?
“நான் பேசுவதைக் கொஞ்சம் காதில் வாங்கினால் தான் என்ன? என்னை முழுசாகப் பேச விடாமல் – இடைமறித்தால் என்ன அர்த்தம்? இதையெல்லாம் என்கிட்ட வந்து சொல்லாதே என்று தானே அர்த்தம்? இவர் கிட்ட பகிர்ந்து கொள்ளாமல் நான் யாரிடம் பகிர்ந்து கொள்வது?”
மனைவியின் இந்த நினைப்பில் வெளிப்படுவது என்ன தெரியுமா?
“என் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் என் கணவர் மதிப்பதே இல்லை!” – என்பது தான்!
எனவே தான் சொல்கிறோம்: மனைவி பேசினால் – அவர்களை முழுமையாகப் பேச விடுங்கள்!
இதுவும் ஒரு சுன்னத் என்பதை மறந்து விட வேண்டாம். நபியவர்களிடம் யாராவது பேச்சுக் கொடுத்தால் – அவர் பேசி முடிக்கும் வரை – வாய் திறக்கவே மாட்டார்களாம். அவரை விட்டுத் திரும்பவும் மாட்டார்களாம்.
மற்றவர்கள் பேச்சை மணிக்கணக்கில் கேட்டுக் கொண்டிருப்போம். மனைவி பேசும்போது மட்டும் ஏன் குறுக்கிட வேண்டும்?
மனைவி பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பது என்பது வீணான ஒன்று அல்ல! அது உங்கள் மனைவியின் காதல் கணக்கில் நீங்கள் சேமித்து வைக்கும் வைப்பு நிதி! அது உங்களுக்கே திரும்பவும் வந்து சேரும்!
இதில் இன்னொரு விஷயமும் உண்டு. அதனை வெளிப்படையாகவே இங்கே எழுதிட வேண்டியுள்ளது.
டின்னர் முடிந்து விட்டது. படுக்கச் சென்று விட்டார்கள் கணவனும் மனைவியும். இந்த இரவில் அவர்களுக்குள் பாலுறவுக்கு சாத்தியம் இருக்கிறதா?
நாம் மேலே விவரித்தது போன்ற சூழ்நிலைகளில் - கணவன் மனைவி பாலுறவுக்கு சாத்தியமே இல்லை என்று அடித்துச் சொல்கிறது உளவியலும், ஆய்வுகளும்!
இந்த ஆய்வுகளின் முடிவுகளைப் பார்த்து விட்டு, நாம் நபியவர்களின் இல்லற வாழ்வை ஆய்வு செய்திடும்போது - நபியவர்கள் தங்களின் கடுமையான நபித்துவப் பணிகளுக்கு மத்தியிலும், மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்கு நேரம் ஒதுக்கியிருப்பதைக் கண்டு வியந்து போகின்றோம்!
ஆனால் நம் சகோதரர்கள் சொல்வதென்ன?
மனைவியிடம் கதை கேட்டுக் கொண்டிருந்தால் வேலைக்கு யார் போவது என்று!
கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்:
மனைவிமார்களே!
ஒரு விஷயத்தைப் பற்றிப்பேச விரும்பினால் தொடர்ச்சியாக நீங்களே பேசிக் கொண்டு செல்லாதீர்கள். உங்கள் கணவரையும் கொஞ்சம் பேச விடுங்கள். அதாவது மாறி மாறிப் பேசுங்கள்! கருத்துக்களுடன் சேர்ந்து உணர்வுகளையும் பரிமாறிக் கொள்ள இதுவே சிறந்த வழி!
சூழ்நிலை அறிந்து பேச்சைத் துவக்குங்கள்! கணவன் பசியுடன் இருக்கும்போது பேச்சைத் துவக்க வேண்டாம்; களைப்புடன் இருக்கும்போதும் பேச வேண்டாம்; முக்கிய வேலை ஒன்றில் அவர் ஈடுபட்டிருக்கும்போதும் வேண்டாம்; தூங்கப் போவதற்கு முன்பும் வேண்டாம்.
கணவன்மார்களே! மனைவியிடம் வரும்போது கலகலப்பான முகத்துடன் வாருங்கள். இன்றைக்கு என்ன நடந்தது டியர்? - என்று நீங்களே அவர்களைப் பேச வையுங்கள். மகிழ்ச்சியுடன் தன் உணர்வுகளையெல்லாம் அவர் உங்களிடம் கொட்டுவார். அவர் பேசுவதை மனம் வைத்துப் பொறுமையாகக் கேளுங்கள்.
Listen! Listen!Listen!
அவர் கொண்டு வரும் செய்தி ஒன்றும் அப்படி முக்கியம் இல்லாமல் இருக்கலாம் தான். ஆனால் அந்தச் செய்தி உங்கள் மனைவியை எப்படி பாதித்திருக்கிறது என்பது தான் முக்கியம்.
பேச்சினூடே, உங்கள் மனைவியின் உணர்வுகளை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உங்கள் முக பாவனையால் புரிய வைத்திடத் தவறாதீர்கள். இப்படிப்பட்ட மகிழ்ச்சிகரமான உரையாடல்கள் தான் (communication) உணர்வுரீதியாக உங்கள் இருவரையும் பிணைத்து விடும். இப்படிப்பட்ட உணர்வுப் பிணைப்பு ஒன்று இல்லாவிட்டால் - கணவன் மனைவி உறவே சடங்குரீதியான உறவாகிப் போய்விடும். பாலுறவு உட்பட!
வல்லோன் அல்லாஹு தஆலா நம் அனைவரின் இல்லற வாழ்க்கையையும் - சுன்னத்தான இல்லறமாக ஆக்கி வைப்பானாக! ஆமீன்! ஃதும்ம ஆமீன்!

புரிந்துணர்வு உள்ள கணவரா நீங்கள்?
சூழ்நிலை ஒன்றை கவனியுங்கள்: (பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே)
இங்கே ஒரு மனைவி – காமிலா. கணவன்: நாஸர்.
நாஸரின் சகோதரி – நபீலா.
காமிலாவுக்கு தன் கணவனின் சகோதரி நபீலாவின் பல செயல்பாடுகள் எரிச்சலை உண்டாக்கும். சூழ்நிலை அறிந்து பேசத் தெரியாதவர்.
ஒரு தடவை நபீலா தனது அண்ணன் நாஸர் வீட்டுக்கு வருகிறார். வீட்டில் நாஸர் இல்லை. காமிலா மட்டுமே வீட்டில். உரையாடல் நபீலாவுக்கும் காமிலாவுக்கும் தான்.
நபீலா: காமிலா! நேற்று ஆஸ்பிட்டல் போயிருந்தேனா, ஒரே கூட்டம். அம்மாவுக்கு முதுகு வலி. ஆஸ்பிட்டல் வர இயலவில்லை; லேடி டாக்டரிடம் மருந்து எழுதி வாங்கி வா என்று என்னை அனுப்பி விட்டார்கள். டோக்கன் போடச் சொன்னார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் – ஒரு ஐடியா வந்தது. உன் வாப்பா பெயரைச் சொல்லி டக்கென்று உள்ளே நுழைந்து விட்டேன். (காமிலாவின் வாப்பாவுக்கு அந்த டாக்டர் குடும்பம் மிகவும் பழக்கமான குடும்பம்.) டாக்டர் டோக்கன் கேட்கவில்லை. ஒரு மாதிரி பார்த்து விட்டு மருந்து எழுதித் தந்தார். உடனே திரும்பி விட்டேன். இல்லாவிட்டால் மணிக்கணக்கில் யார் அங்கே காத்திருப்பது?
காமிலா: (சற்றே எரிச்சல் அடைந்தவராக) – ஏன்? என் வாப்பா பெயரை நீங்க தப்பா பயன் படுத்தினீங்க? அதுவும் டோக்கன் வாங்காமலேயே?
நபீலா: அதுவெல்லாம் ஒரு அர்ஜென்டுக்குத் தான் காமிலா; இதுக்கு ஏன் உனக்கு இப்படி கோபம் வருது? இதுவெல்லாம் ஒரு தப்பா? ஒரு சமயத்துக்கு இப்படி செய்றதெல்லாம் தப்பே கிடையாது! தேவைப்பட்டா உங்க வாப்பா பெயரையும் பயன்படுத்துவேன்; உங்க உம்மா பெயரையும் பயன்படுத்துவேன்! காமிலாவுக்குக் கோபம் தலைக்கேற – பேச்சு வாக்குவாதமாக மாற – நபீலா காமிலாவைத் திட்டிக் கொண்டே வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்.
என்ன திமிர் இவளுக்கு? – என்று மனதுக்குள்ளேயே புழுங்குகிறார் காமிலா.
கணவர் வீட்டுக்கு வந்ததும் மனைவியைக் கவனிக்கிறார். மனைவியின் முகத்தில் ஒரு வாட்டம்.
காமிலா தன் கணவனிடம் அனைத்தையும் சொல்கிறார்.
இப்போது கணவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எப்படி நடந்து கொள்ளக் கூடாது?
புரிந்துணர்வு கொண்ட கணவன் எப்படி பேசுவார்; புரிந்துணர்வு இல்லாத கணவன் எப்படி நடந்து கொள்வார் என்று இரண்டு முன்மாதிரிகளையும் இங்கே பார்ப்போம்.
காட்சி 1:
காமிலா: காலையிலே உங்க தங்கை வந்திருந்தாங்களா…. டாக்டர்கிட்ட மாமிக்கு மருந்து எழுதி வாங்குவதற்கு – டோக்கன் வாங்காமலேயே – என் வாப்பா பெயரை பயன்படுத்தி மருந்து வாங்கிட்டு வந்தாங்களாம். ஏங்க என் வாப்பா பெயரைத் தவறாக பயன்படுத்தினீங்கன்னு கேட்டா – இதுவெல்லாம் ஒரு தப்பா? ஒரு சமயத்துக்கு இப்படி செய்றதெல்லாம் தப்பே கிடையாது! தேவைப்பட்டா உங்க வாப்பா பெயரையும் பயன்படுத்துவேன்; உங்க உம்மா பெயரையும் பயன்படுத்துவேன் – என்று அவங்க இஷ்டத்துக்குப் பேசுறாங்க! இது நல்லாவா இருக்கு?
நாஸர்: நபீலாவப் பத்தித் தான் உனக்கு நல்லா தெரியுமில்ல? ஏன் அவளிடம் போய் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிற! விடும்மா அத! போய் நல்லா ரெண்டு டீ போட்டு எடுத்துக்கிட்டு வா! குடிப்போம்!
இந்த பதில் காமிலாவுக்கு திருப்தி அளிக்குமா? நிச்சயமாக அளிக்காது! இங்கே கணவன் மனைவிக்குச் சொன்னது “அறிவுரை!”. மனைவியின் உள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் வழங்கப்பட்ட அறிவு+உரை!
காமிலா என்ன பதில் சொல்வார்?
“உங்க அட்வைஸ்க்காகவா இதனை நான் உங்களிடம் சொன்னேன்?”
விருட்டென்று எழுந்து அடுக்களைக்குச் சென்று விடுகிறார். “இவருக்குத் தேவையெல்லாம் டீயும் சாப்பாடும் தான்!”
இந்தக் கணவரே புரிந்துணர்வு இல்லாத கணவர். No attunement!
காட்சி 2:
காமிலா: காலையிலே உங்க தங்கை வந்திருந்தாங்களா…. டாக்டர்கிட்ட மாமிக்கு மருந்து எழுதி வாங்குவதற்கு – டோக்கன் வாங்காமலேயே – என் வாப்பா பெயரை பயன்படுத்தி மருந்து வாங்கிட்டு வந்தாங்களாம். ஏங்க என் வாப்பா பெயரைத் தவறாக பயன்படுத்தினீங்கன்னு கேட்டா – இதுவெல்லாம் ஒரு தப்பா? ஒரு சமயத்துக்கு இப்படி செய்றதெல்லாம் தப்பே கிடையாது! தேவைப்பட்டா உங்க வாப்பா பெயரையும் பயன்படுத்துவேன்; உங்க உம்மா பெயரையும் பயன்படுத்துவேன் – என்று அவங்க இஷ்டத்துக்குப் பேசுறாங்க! இது நல்லாவா இருக்கு?
நாஸர்: “ஏன் இப்படி நபீலா நடந்துக்கிறா? ஒருவருடைய பெற்றோர் பெயரைத் தவறாகப் பயன்படுத்தினால் யாருக்குத் தான் கோபம் வராது? உன்னுடைய கோபத்தை என்னால புரிஞ்சுக்க முடியுது காமிலா! உன் பெற்றோர்களை நீ எப்படி மதிக்கிறாய் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
காமிலா சற்றே ஆறுதல் அடைகிறார்.
“சரி, விட்டுத் தள்ளுங்க! என்ன, டீ போட்டு எடுத்துக்கிட்டு வரவா?
இங்கே என்ன நடந்தது?
கணவன் முற்றிலும் தன் மனைவியின் உள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு உரையாடியதால் – அந்த விஷயம் அத்துடன் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது.
மனைவி என்ன நினைக்கிறார்? என் கணவன் என்னைப் புரிந்து வைத்திருக்கின்றார்! என் உணர்வுகளைப் புரிந்து வைத்திருக்கிறார். என்னையும் என் பெற்றோர்களையும் மதிக்கிறார். நான் ஏதாவது எதிர்மறை உணர்வுகளுக்கு ஆட்பட்டால் நான் ஆறுதல் அடைய என் கணவன் எப்போதுமே எனக்கென்று இருக்கின்றார்!!
***
இங்கே கவனித்திட வேண்டியது என்னெவென்றால் – கணவன் தன் மனைவிக்கு “அறிவுரை” வழங்கவே இல்லை! மனைவி அப்படிப்பட்ட ஒரு அறிவுரையை எதிர்பார்க்கவும் இல்லை!


சீரியஸான பிரச்னையா? நேரிடையாக எதிர்கொள்க!
ஆங்கிலத்தில் ஒரு சொல்: ASSERTIVENESS
இதனை - "தன் முனைப்பு" என்று மொழிபெயர்த்துள்ளனர். தனது நிலையில் உறுதி காட்டுவதை இது குறிக்கும்.
தனது தேவைகளுக்காகவும் (needs), உரிமைகளுக்காகவும் (rights)  ஒருவர் உறுதியுடன் நிற்கின்ற நிலை இது.
சிறிய உதாரணத்துடன் இதனை விளக்குவோம்:
நீங்கள் ஒரு வரிசையில் (queue) நிற்கிறீர்கள். மெதுவாக நகர்கிறது அந்த வரிசை. இப்போது உங்கள் முறை.
திடீரென்று ஒருவர் உங்களுக்கு முன்னால் குறுக்கே புகுந்து விடுகிறார். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
ஒன்று - நீங்கள் மவுனமாக இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் மென்மையானவர்(?). குறுக்கே புகுந்தவர் தன்
காரியத்தை கன கச்சிதமாக முடித்துக் கொண்டு போய் விடுகிறார். இதற்குப் பெயர் மென்மை அல்ல! இது கையாலாகாத் தனம். Passiveness.
அல்லது - நீங்கள், "ஏய், முட்டாள்! என்னாச்சு உனக்கு? நாங்கள்ளாம் வரிசையிலே நிக்கிறது கண்ணுக்குத் தெரியலையா?" என்று கேட்கிறீர்கள். இதுவும் தவறு. அது முரட்டுத் தனம். Aggressiveness.
அப்படியானால் எப்படி நடந்து கொள்வது சிறப்பு என்கிறீர்களா?
நீங்கள் குறுக்கே புகுந்தவரிடம் அவருடைய முகத்தை நோக்கி உறுதியான ஒரு பார்வையுடன், "மன்னிக்கவும்! இப்போது எனது முறை!" என்று கூறுகிறீர்கள். அவ்வளவு தான். அவர் நகர்ந்து விடுகிறார். வார்த்தைகளில் கடுகடுப்பு தேவை இல்லை. குரல் உயர்த்திடத் தேவையில்லை. கொஞ்சம் ளுநசழைரளநௌள. அவ்வளவு தான். இந்த அணுகு முறையைத் தான் assertive communication என்கிறார்கள். அதாவது தன் நிலையை உறுதிப் படுத்திக் கொண்டு பேசிடும் முறை.
இத்தகைய தன் முனைப்பு (assertiveness)  கணவன் மனைவி இருவருக்கும்  தேவை! அதுவும் குறிப்பாக இல்லற வாழ்வில் எழுகின்ற பிரச்னை சற்று சீரியஸாக இருந்து விட்டால் கணவனோ அல்லது மனைவியோ இத்தகைய தன் முனைப்புடன் எழுந்து நின்று பிரச்னையை எதிர்கொண்டிட வேண்டும்.
கணவன், மனைவி, மூன்று குழந்தைகளைக் கொண்டதொரு குடும்பம் அது. கணவன் மது அருந்துகிறான். மனைவியைப் போட்டு அடிக்கிறான். குழந்தைகளைக் கன்னா பின்னாவென்று திட்டுகிறான். இது ஒரு தொடர்கதை.
மனைவி என்ன செய்வாள்? இந்தச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது அவள் எங்கேயும் படித்துக் கொள்ளவில்லையே! ஏதோ அவளுக்குத் தெரிந்தவரையில் கணவனைத் திருத்த முயற்சி செய்கிறாள். கணவன் திருந்திடத் தயாராக இல்லை. மனைவி தன் குழந்தைகளுடன் தற்கொலையை நாடுகிறாள். இதுவே இங்கே அன்றாட நடப்பாகி விட்டது.
சில மனைவிமார்கள், கணவன் எப்படியும் போகட்டும் என்று விதியின் மீது பழியைப் போட்டு விட்டு கணவனின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு வாழப் பழகிக் கொள்கிறாள். இது தான் நாம் முன்பு குறிப்பிட்ட கையாலாகாத் தனம். இங்கே கணவனுக்கு வெற்றி(?). மனைவிக்குத் தோல்வி! (I lose - You win).
ஆனால் இதே போன்ற சூழ்நிலையில் வேறொரு மனைவி எப்படி நடக்கிறாள் பாருங்கள். பொறுமையாகப் பல தடவை சொல்லிப் பார்த்தும் கணவன் திருந்துவதாகக் காணோம்.
ஒரு நாள் கணவன் நிதானமாக இருக்கும் சமயமொன்றைத் தேர்வு செய்து அவன் அருகில் வந்து, "இங்கே பாருங்கள், நான் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பு எப்படிப்பட்டது என்பது உங்களுக்கே தெரியும். ஆனால் அதற்காக நீங்கள் குடித்து விட்டு வந்து, அந்த போதையில் என்னிடமும், குழந்தைகளிடமும் நடந்து கொள்ளும் முறையை இனியும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. குழந்தைகளுக்கு நாம் என்ன எதிர்காலத்தைக் கொடுக்கப் போகிறோம்? எப்படிப்பட்ட குழந்தைகளை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்? அவர்கள் பெரியவர்கள் ஆனால் அவர்களும் உங்களைப் போன்று ஆகி விடுவதை நான் அனுமதிக்க முடியாது. நீங்கள் குடிப்பதை நிறுத்தவில்லையென்றால், என்னையும் குழந்தைகளையும் திட்டுவதையும் அடிப்பதையும் நிறுத்தவில்லை என்றால் - அடுத்து நான் காவல் துறையைத் தான் அணுகிட வேண்டியிருக்கும் என்றால் அதற்கும் கூட நான் தயங்கிட மாட்டேன்".
உறுதியாகச் சொல்லி விடுகிறாள் மனைவி. குரலை உயர்த்தி கத்திப் பேசி ஊரைக் கூட்டிடவில்லை! திட்டவில்லை; கணவனை மிரட்டிடவில்லை. கணவன் மீது தான் வைத்திருக்கும் அன்பையும் வெளிப் படுத்தத் தவறிடவில்லை.
இங்கே கணவன் திகைத்துப் போய் விடுகிறான். ஒரு கணம் சிந்திக்கின்றான். மனைவியை உற்றுப் பார்க்கிறான். அவள் முகத்தில் கோபம் தெரியவில்லை. ஆனால் அவள் தன் நிலையில் உறுதியாக இருக்கிறாள் என்பது புரிகிறது. கணவனை அதே நிலையில் விட்டு விட்டு நகர்கிறாள் மனைவி.
அன்று திருந்தியவன் தான் அவன்! அல்ஹம்து லில்லாஹ்! இங்கே இருவரும் வெற்றி பெற்று விடுகிறார்கள் (I win - You also win).
தன் நிலையில் உறுதியுடன் பேச வேண்டிய சமயத்தில் பேச வேண்டிய முறையில் பேசுபவர்கள் - தன்னம்பிக்கை உடையவர்களாகத் திகழ்கிறார்கள். தன் உரிமைகளை யாருக்கும் அவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.
மற்றவர்களால் மதிக்கப் படுகின்றார்கள். வாழ்வில் வெற்றியும் பெறுகின்றார்கள்.

ஆமைகள் மட்டுமல்ல! மனிதர்களும் அப்படித்தான்!
இது ஒரு கதை...
சிறுவன் ஒருவன் கடல் ஆமை ஒன்றைக் கண்டானாம். அவன் அதைச் சோதித்துப் பார்க்க ஆசைப்பட்டானாம்.
ஆனால் அதனை இவன் தொட்டவுடனேயே அந்த ஆமை தன் தலையையும் கால்களையும் தனது ஓட்டுக்குள்ளே இழுத்துக் கொண்டு விட்டதாம். என்னென்னவோ செய்து பார்த்தும் அந்த ஆமை தன் தலையையோ கால்களையோ வெளியே நீட்டிடவே இல்லை!
உடனே ஒரு குச்சியை எடுத்து வந்து அதனைக் குத்திப் பார்க்கலாம் என்று அதனை மீண்டும் நெருங்கினானாம்.
அப்போது அவனது மாமா அங்கே வந்தாராம். அவர், "அது அப்படி இல்லையப்பா! நீ அதனைக் குச்சியால் குத்தினாலும், அது செத்துப் போனாலும் போகுமே தவிர, அது தன் தலையையோ, கால்களையோ வெளியில் நீட்டிடவே நீட்டாது!
உடனே மாமா அந்த ஆமையை அப்படியே எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று கதகதப்பாக இருந்த அடுப்படிக்கு அருகில் சென்று அதனை வைத்தாராம். ஒரு சில நிமிடங்களிலேயே அந்த ஆமை, தனது தலையையும் கால்களையும் வெளியே நீட்டி ஊர்ந்து செல்லவும் ஆரம்பித்து விட்டதாம். அதனை ஆச்சரியத்துடன் பார்த்த சிறுவனை நோக்கி மாமா, "ஆமைகள் மட்டுமல்ல! மனிதர்களும் அப்படித்தான்!" என்றாராம்.
மாமா மேலும் சொன்னாராம்: "உன்னைச் சுற்றியிருப்பவர்களை நீ மாற்ற விரும்பினால், உனது இனிய முகத்தைக் கொண்டும், உனது கனிவான இரக்கத்தைக் கொண்டும் அவர்களின் இதயத்தைக் "குளிர வை!" அப்போது அவர்கள் தாங்களாகவே முன் வந்து தங்களை உன்னிடம் ஒப்படைத்து விடுவார்கள்! நீ விரும்பும் மாற்றத்தை அவர்களிடம் மிக இலகுவாகக்  கொண்டு வந்திட முடியும்!"
கணவன்மார்களே! இந்தக் கதையில் உங்களுக்கு நல்லதொரு பாடம் இருக்கின்றது!
தடியெடுத்து ஒரு கனியைக் கனிய வைத்திட முடியாது! அது பழுத்துக் கனிந்திட வேண்டிய சூழலையை உருவாக்கினாலே போதும். தானே அது கனிந்து விடும்!
மனைவியைப் பொறுத்தவரை கனிவான சூழல் என்பது அன்பும், ஆசை வார்த்தைகளும், காதலும், கனிமொழிகளும், இரக்கமும், மன்னித்தலும் தான்!
ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள்! உங்கள் மனைவி தம்மை அப்படியே உங்களிடம் ஒப்படைத்து விடுகிறாரா இல்லையா என்று பாருங்களேன்!

செயலை விமர்சியுங்கள்! செய்தவரை விமர்சிக்க வேண்டாம்!
சுற்றுலா ஒன்றுக்குத் திட்டமிடுகிறார் கணவர். மனைவி எல்லா முன்னேற்பாடுகளையும் செய்து விடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக பயணம் மேற்கொள்ள இயலாமல் போய் விடுகிறது!
ஊர் முழுவதும் ஒரே அரசியல் போராட்டம். வாகனங்களின் மீது கல்லெறிகின்றார்கள்! ஒரு பயணி இறந்தும் போய் விடுகின்றார். பலருக்குக் காயம். பேருந்துகள் எரிக்கப்படுகின்றன! ஒரு பதற்றமான சூழ்நிலையில் வேண்டாமே ஒரு சுற்றுலா என்று கணவன் தன் முடிவை மாற்றிக் கொண்டு விடுகிறார்!.
அவ்வளவு தான்! மனைவிக்கு வந்ததே கோபம்.
“போடுகின்ற எந்த திட்டத்தையாவது நீங்கள் உருப்படியாகச் செய்து முடித்ததுண்டா? எத்தனை தடவை இது போல ஏற்பாடு செய்து பின்பு அதனை கேன்ஸல் செய்திருக்கிறீர்கள்! உங்களை நம்பி நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்தேனே! எனக்கு வேண்டும்! – என்று பேசுவதற்கு பதிலாக,
“ஏங்க! பிள்ளைகள் எல்லாம் ஆசையாக ரெடியாகி விட்டார்கள்; நானும் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன்; ஊரில் போராட்டங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும்; மற்றவர்கள் எல்லாம் போய்க் கொண்டு தானே இருக்கிறார்கள்! இப்படி திடீரென்று நீங்கள் வேண்டாம், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்வது எனக்குச் சரியாகப் படவே இல்லைங்க! உங்கள் முடிவை மாற்றிக் கொண்டு நீங்கள் புறப்பட்டால் எனக்கும் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சி தானே!” – என்று பேசிடலாம் அல்லவா?
முதல் விமர்சனத்துக்கும் இரண்டாவது விமர்சனத்துக்கும் என்ன வேறுபாடு?
முதல் விமர்சனத்தில் கணவனின் ஆளுமையே (personality) அவமானப் படுத்தப்பட்டது! அவரது கண்ணியம் குத்திக் கிழிக்கப்பட்டது. கூனிக் குறுகிப் போய் விடுவார்கள் கணவர்கள்.
ஆனால் இரண்டாவது விமர்சனத்தில் கணவனின் முடிவு மட்டுமே தவறு என்று சுட்டிக்காட்டப் பட்டது! அவர் மனம் புண்படும்படியாக எதுவுமே சொல்லப்படவில்லை!
எனவே தான் சொல்கிறோம்: கணவனின் எந்த செயல் உங்களுக்குப் பிடிக்கவில்லையோ, உங்களுக்கு எது உறுத்தலாக இருக்கிறதோ – அந்த செயலை மட்டுமே விமர்சியுங்கள்!
கணவனின் அந்தச் செயலால் நீங்கள் எப்படி பாதிக்கப்படுகிறீர்கள் என்பதை உணர்த்திடுங்கள்! ஆனால் – அதனை விமர்சிக்கும்போது அந்தச் செயலைச் செய்திட்ட உங்கள் கணவனை கடுமையான சொற்களால் (harsh criticism) விமர்சித்திட வேண்டாம்!
எனவே மீண்டும் சொல்கிறோம்:
செயலை விமர்சியுங்கள்! செய்தவரை விமர்சிக்க வேண்டாம்! அது உறவுகளைக் கெடுத்து விடும்!

உங்கள் மனைவியின் நிலையில் நீங்கள் இருந்தால்...?
ஆங்கிலத்தில் Empathy என்று ஒரு அருமையான சொல்.
Empathy என்றால் என்ன?
To be empathic is having the ability to identify with and understand another person's situation, feelings, attitudes, or motives.
ஒருவர் - மற்ற இன்னொருவரின் நிலையிலிருந்து கொண்டு அவருடைய சூழ்நிலைகளையும், உணர்வுகளையும், மனோபாவத்தையும், எண்ணங்களையும் புரிந்து கொள்ளும் தன்மைக்கு நஅpயவால என்று பெயர்.
இந்தத் தன்மையை மிக அழகாக விளக்குகிறது ஒரு கதை.
இதோ அந்தக் கதை!
அது ஒரு குளிர்காலம். அது ஒரு சிறிய நகரம். அங்கே ஒரு சமூக நல மையம். அங்கே சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்! அந்நகரத்தில் வீடில்லாதோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்தும், அதற்கு தாங்கள் என்ன செய்திடலாம் என்பது குறித்தும் தான் பேச்சு!
பல்வேறு கருத்துக்களை முன் வைத்து கவலையுடன் அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென்று கதவைத் திறந்து கொண்டு ஒரு வயதான மூதாட்டி உள்ளே நுழைந்தார். வளைந்து விட்ட முதுகு. முகத்தில் களைப்பு. கந்தல் துணிகளே அவருடைய ஆடைகள்.
சேவை மையத்தின் தலைவி வியப்புடன் கேட்டார்: "என்ன உதவி வேண்டும் உங்களுக்கு?"
"முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் - இவ்வாறு அனுமதி இன்றி உள்ளே நுழைந்து உங்களுக்குச் சிரமம் தந்ததற்காக! இங்கே மிக அருகில் உள்ள இராணுவ மையம் எங்கிருக்கின்றது என்று உங்களால் சொல்ல முடியுமா? எனக்கு அங்கே போய் ஒரு ஜோடி காலணிகள் கிடைக்குமா என்று பார்த்திட வேண்டும்?"
அந்த மையத்தின் தலைவி முதலிலேயே பார்த்து விட்டார் - அந்த மூதாட்டியின் பாத அணிகள் இரண்டிலும் நிறைய ஓட்டைகள்! எந்த நேரத்திலும் அவை பிய்ந்து விடும் நிலையில்.
"உங்கள் அளவு என்னம்மா?" - கேட்டார் அந்தத் தலைவி.
"எட்டரை அம்மா!' என்றார் மூதாட்டி.
உடனே அந்தத் தலைவி கீழே குனிந்து தனது காலணிகளைக் கழற்றி அவர் கையில் கொடுத்து, "இது உங்களுக்கு சரியாக இருக்கிறதா, பாருங்கள்", என்றார்.
"இதனை நான் எப்படி அணிந்திட முடியும்? இது விலை உயர்ந்த புத்தம் புதிதான காலணியாக அல்லவா இருக்கிறது!" என்றார் மூதாட்டி.
தலைவி, "பரவாயில்லை, போட்டுப் பாருங்கள்!" என்றார்.
அந்த மூதாட்டி அந்த புத்தம் புதிய காலணிகளை அணிந்து பார்க்கிறார். "என்ன ஒரு மிருதுவாக கதகதப்பாக இது இருக்கின்றது!" என்று வியக்கிறார். லேசான ஒரு புன்சிரிப்பு அவர் முகத்தில்.
தலைவி அம்மூதாட்டியின் கரம் பிடித்துச் சொன்னார்: "இவை உங்களுக்குத் தான்! எனக்கு வீட்டில் இன்னொன்று இருக்கின்றது!"
அந்த ஏழை மூதாட்டி நன்றி சொல்லி விட்டு அங்கிருந்து  புறப்பட்டார். "இறைவன் உங்களை வாழ்த்துவானாக!" என்று கூறியவராக.
அம்மூதாட்டி சென்றதும் அங்கே ஒரு பெரிய அமைதி! யாரும் வாய் திறக்கவே இல்லை! அனைவரும் நெகிழ்ந்து போய் விட்டனர்! ஒருவர் மட்டும் கேட்டார்: "மேடம், ஆனால் நீங்கள் எப்படி வீட்டுக்குச் செல்வீர்கள்?" பனி கொட்டிக் கொண்டிருக்கின்றதுஇ காலணிகள் இல்லாமல் எப்படி நீங்கள் செல்வீர்கள்?"
கருணை உள்ளம் படைத்த அந்தத் தலைவி சொன்னார்: "எனது காலுறைகள் சற்று கனமானவை தான்! பரவாயில்லை! மேலும் எனக்கு இங்கே ஒரு ஜோடி காலணியும் இருக்கத் தானே செய்கிறது!"
அந்த வயதான மூதாட்டி விட்டுச் சென்ற கந்தலான காலணியை அணிந்தவராக புறப்பட்டார் அவர் வீட்டுக்கு!
"மேடம், ஜாக்கிரதை! காலணிகள் ஓட்டையாக இருக்கின்றன! பனிப்பொழியும் பாதையில் எச்சரிக்கையுடன் செல்லுங்கள்! - என்றார் இன்னொருவர்.
புன்சிரிப்புடன் பதில் சொன்னார் அந்தத் தலைவி: "ஆமாம்! நான் பார்த்துக்கொள்கிறேன்; வயதான ஏழை மூதாட்டி ஒருவர் ஓட்டைக் காலணிகளை அணிந்து கொண்டு எப்படித் தான் நடப்பார் என்பதை நான் அனுபவித்துப் பார்த்திட முடியும் அல்லவா?”
ஆம்! இது தான் இரக்கமுள்ள இதயம்!
இந்தக் கதை கணவன் மனைவியருக்கு மிக அற்புதமான ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது.
இல்லறத்தில் பிரச்னை! கணவனும் மனைவியும் ஆலோசனை கேட்க வருகின்றனர். அங்கே கணவனும் மனைவியும் ஆலோசகரிடம் என்ன சொல்வார்கள் தெரியுமா?
கணவன் என்ன சொல்வார்?
தனக்கும் தன் மனைவிக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை அடுக்குவார்; தன் மீது தவறே இல்லை என்று அடித்துப் பேசுவார். மனைவி செய்கின்ற தவறுகளைப் பட்டியல் போடுவார். பேசுவார், பேசுவார், அடுக்கிக் கொண்டே போவார் மனைவியின் குறைகளை!
பதிலுக்கு மனைவி என்ன சொல்வார்?
கணவனுக்கு சற்றும் தான் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்திடும் வண்ணம் அவரும் அடுக்குவார் - கணவனின் குறைகளை!
ஆலோசகர் (counselor) கேட்பார்: "உங்கள் மனைவியின் நிலையில் நீங்கள் இருப்பதாக எண்ணிக் கோண்டு - உங்கள் மனைவியைப் பற்றிப் பேசுங்கள்" என்றாலோ... அல்லது "உங்கள் கணவனின் நிலையில் உங்களை வைத்துக்கொண்டு உங்கள் கணவரைப் பற்றிப் பேசுங்கள்" என்றாலோ.... பதில் சொல்வதற்குத் தடுமாறுகிறார்களாம்.
இருவருமே அமைதியாகி விடுகிறார்களாம்!
அங்கே பேசுவதற்கு ஒன்றும் இருப்பதில்லை! ஏனெனில் ஒருவர் மற்றவரின் மன நிலையில் இருந்து கொண்டு பிரச்னைகளைப் பார்த்திடும் போது - அவைகளெல்லாம் பிரச்சனைகளே இல்லை என்றாகி விடுகின்றன!
எனவே தான் சொல்கிறோம். கணவன் மனைவியருக்குள் பிரச்சனைகள் தோன்றினால் - உடனே உங்கள் துணைவரின் நிலையில் உங்களை வைத்து சிந்தியுங்கள். உங்கள் கண்ணோட்டம் முழுவதும் மாறிப்போய் விடும்!
இரக்க உணர்வு மேலிடும்! குறைகளைப் பொறுத்துக் கொள்வீர்கள்! மன்னிக்கத்தொடங்கி விடுவீர்கள்! அன்பும் நேசமும் மேலோங்கும்!
அங்கே இருவரும் சேர்ந்தே பிரச்னையைத் தீர்ப்பது எப்படி என்று பேசத் தொடங்குவார்கள். கருத்துக்கள் அங்கே தாராளமாக பரிமாறப்படும்!
ஒருவர் மற்றவரின் மன நிலையிலிருந்து கொண்டு பிரச்சனைகளைப் பார்த்திடும்போது கருணை தானாகவே சுரக்கும் - அந்த சமூக மையத்தின் தலைவியைப் போல!
இத்தகைய கருணை உள்ளம் கணவன் மனைவி இருவருக்கும் வேண்டும்!
"கருணை உணர்வு எதனையும் அழகாக்கி விடும்!" (முஸ்லிம்)
ஆம்! கருணை உணர்வு திருமண உறவையும் அழகாக்கிவிடும்! தேவை - Empathy மட்டுமே!
மாய சுழற்சி மறைந்து விட்டதா?
ஒரு ஆண் - தன் மனைவியிடமும், தான் பெற்ற பிள்ளைகளிடமும், மற்றவர்களிடமும் மிக மிக முக்கியமாக எதிர்பார்ப்பது என்ன?
மற்றவர்களால் - தான் - கண்ணியப்படுத்தப்பட வேண்டும்! (To be respected). இதுவே ஒவ்வொரு ஆண்மகனின் முதன்மையான தேவையும், எதிர்பார்ப்பும் ஆகும்! (Primary Need for men).
இதனை அனைவருக்கும் முதலாக ஒரு மனைவி புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதாவது ஒரு கணவனின் முதல் தேவையே - அவன் கண்ணியப் படுத்தப்படுவது தான்!
ஒரு கணவன் எப்போது தன் மனைவி தன்னைக் கண்ணியப்படுத்துவதாக உணர்கிறான் எனில் அவள் தன் பேச்சைக் கேட்டு நடக்கும்போது தான்!
தன் பேச்சைக் கேட்டு நடக்கத் தவறும்போது தான் - கணவன் நினைக்கிறான்:
"என் மனைவி என்னை மதிப்பதே இல்லை!"
எந்த நிலையிலும் ஒரு மனைவி தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடந்திட வேண்டும் என்று நபிமொழிகள் மூலமாக நமக்கு வழிகாட்டப்பட்டிருக்கும் சூட்சுமமே - ஒரு கணவனின் முதன்மையான தேவையான  "கண்ணியத்தில்"  ஒரு மனைவி குறை வைத்திடக்கூடாது என்பதற்காகத்தான்!
ஆனால் பெரும்பாலான மனைவியருக்கு இது புரிவதே இல்லை! இதுவே திருமணப் பிரச்னைகளுக்கு பாதிக் காரணமாகும்.
அது போலவே - ஒரு பெண் - தன் கணவனிடமும், தான் பெற்ற பிள்ளைகளிடமும், மற்றவர்களிடமும் மிக மிக முக்கியமாக எதிர்பார்ப்பது என்ன?
மற்றவர்கள் தன் மீது அன்பு செலுத்திட வேண்டும்! (To be loved). தம்மிடம் பாசம் காட்டிட வேண்டும்; தம்மை மற்றவர்கள் நேசித்திட வேண்டும்! அவ்வளவு தான் அவர்களின் முதன்மையான எதிர்பார்ப்பு! (Primary Need for women).
இதனை அனைவருக்கும் முதலாக ஒரு கணவன் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதாவது தன் கணவன் தன்மீது அன்பு செலுத்திட வேண்டும்; காதல் மழையைப் பொழிந்திட வேண்டும்; பாசம் காட்டிட வேண்டும் - என்று தான் ஒவ்வொரு மனைவியும் தம் கணவனிடம் எதிர்பார்க்கின்றனர்.
அதாவது ஒரு மனைவியின் முதல் தேவையே - தன் கணவனின் முழுமையான அன்புக்குச் சொந்தக்காரியாக -  தான் நடத்தப்பட வேண்டும் என்பது தான்!
ஒரு மனைவி தன் கணவன் தன்னை நேசிப்பதாக எப்படி உணர்ந்து கொள்கிறாள் தெரியுமா?
தன் கணவனின் ஒவ்வொரு சொல்லிலிருந்தும், ஒவ்வொரு சின்னச் சின்ன செயலிலிருந்தும் - ஏன்? தன் கணவனின் முக பாவத்திலிருந்தும் கூட - அவள் தெரிந்து கொண்டு விடுகிறாள் - தன் கணவன் தன் மீது அன்பு வைத்திருக்கின்றானா இல்லையா என்று!
ஒரு சிறிய சொல்லை வைத்தே அல்லது  ஒரு சிறிய செயலை வைத்தே சொல்லி விடுவாள் மனைவி:
"என் கணவன் என் மீது அன்பு செலுத்துவதே இல்லை!"
ஆனால் பெரும்பாலான கணவன்மார்களுக்கு இது புரிவதே இல்லை! இதுவே திருமணப் பிரச்னைகளுக்கு இன்னொரு பாதிக் காரணமாகும்.
***
இந்த சூட்சுமம் புரியாத பெரும்பாலான கணவன் மனைவியர்கள் தான் - ஒரு விதமான - "மாய சுழற்சி" ஒன்றில் சிக்கிக் கொள்கிறார்கள்!  அது என்ன மாய சுழற்சி?
தன் மீது அன்பு செலுத்தாத கணவனை - ஒரு மனைவி கண்ணியப்படுத்திட மாட்டாள்!
தனக்குக் கண்ணியம் அளித்திடாத மனைவியின் மீது - ஒரு கணவன் - அன்பு செலுத்திட மாட்டான்!
மேலே இருக்கும் இரண்டு வரிகளை மீண்டும் மீண்டும் படியுங்கள்!
மாய சுழற்சி ஒன்று தென்படுகிறதா?
இந்த மாய சுழற்சியை  - Crazy Cycle - என்று அழைக்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்.
கண்ணுக்குத் தெரியாத சுழற்சி என்பதால் அதனை நாம் மாய சுழற்சி என்று சொல்லலாம்.
இந்த மாய சுழற்சியை உடைக்காத வரை - கணவன் மனைவி பிரச்னை தீர வாய்ப்பே கிடையாது!
இந்த மாய சுழற்சியை உடைத்திட முடியுமா?
அது மிக மிக இலகுவானது!
***
அது ஒரு மிகச் சிறிய பயிற்சி தான்!
முதலில் ஒரு நாள்! ஒரே ஒரு நாள் மட்டும் தான்!
இதனை மட்டும் செய்து பாருங்கள்:
இதனை கணவனும் மனைவியும் சேர்ந்து தான் செய்திட வேண்டும் என்பதில்லை!
துவக்கி வைப்பவர்கள் ஏராளமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம்! அவ்வளவு தான்!!
அந்தப் பயிற்சி இது தான்!
கணவன்மார்களே! எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்த வித நிபந்தனையும் இல்லாமல் - உங்கள் மனைவியின் மீது முழுமையான "அன்பைச் செலுத்துங்கள்!" அதில் எந்தக்குறையும் வைத்து விடாதீர்கள்! அவர்கள் இதற்கு முன்னர் உங்களைக் கண்ணியக் குறைவாக நடத்தியிருந்தாலும் சரியே!
அவர்களிடம் அன்பாகப் பேசுங்கள்! அன்பை உங்கள் செயல்களால் வெளிப்படுத்துங்கள்! அன்பை உங்கள் நெருக்கத்தாலும் வெளிப்படுத்துங்கள்! Tell me! Show me! Touch me! - ஃபார்முலா நினைவுக்கு வருகிறதா! அதனை அப்படியே செயல்படுத்துங்கள்! முதலில் ஒரே ஒரு நாள் மட்டும்!
அதாவது - "Show your wife complete love - "unconditionally" - at least for one day as a starting point!"
இப்படிச் செய்கின்ற கணவன் அந்த மாய சுழற்சியை உடைத்தெறிந்து விட்டார்!
அடுத்து -
மனைவியரே! அது போலவே  எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்த வித நிபந்தனையும் இல்லாமல் - உங்கள் கணவரின் எல்லாவிதமான எதிர்பார்ப்புகளுக்கும், கட்டளைகளுக்கும், கொஞ்சம் கூட முகம் கோணாமல் - செவி சாய்த்து உங்கள் கணவரை மிக மிக கண்ணியமாக நடத்துங்கள்! அதில் எந்தக்குறையும் வைத்து விடாதீர்கள்! அவர்கள் இதற்கு முன்னர் உங்கள் மீது பாசம் காட்டிடாதவராக இருந்திருந்தாலும் சரியே!
அவரிடம் கண்ணியமாகப் பேசுங்கள்; கண்ணியமாக நடத்துங்கள்; கண்ணியக் குறைவான ஒரு வார்த்தை கூட வேண்டாம்; அப்படியே அவருக்குக் கட்டுப்பட்டு விடுங்கள்; கொஞ்சம் கூட முகம் சுழித்து விடக்கூடாது; அது போல முதலில் ஒரே ஒரு நாள் மட்டும்!
அதாவது - "Show your husband complete respect - "unconditionally" - at least for one day as a starting point!"
இப்படிச் செய்கின்ற மனைவி அந்த மாய சுழற்சியை உடைத்தெறிந்து விட்டார்!
***
பின்னர் இப்பயிற்சியை - தொடர்ந்து ஒரு மூன்று நாட்களுக்கு - விரிவு படுத்துங்கள்! இடையிலே சிறு சிறு "தவறுகள்" (lapses) நிகழ்ந்து விட்டாலும், மீண்டும் பயிற்சியை மனம் தளராமல் தொடருங்கள்! உங்கள் துணைவர்/ துணைவியரிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை என்றாலும் - பயிற்சியைக் கைவிட்டு விட வேண்டாம்! அல்லாஹ்வின் மீது "நம்பிக்கை" வைத்து விடாப்பிடியாகத் தொடருங்கள்!
பின்னர் இதே பயிற்சியை பத்து நாட்கள், இருபது நாட்கள் என்று விரிவு படுத்துங்கள்!
என்ன நடக்கும்?
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் மீது அன்பு மழை பொழியும் கணவனுக்கு அப்படியே கட்டுப்பட்டு விடுவாள் மனைவி! தன் கணவனைக் கண்ணியப்படுத்திடுவாள் மனைவி!
அது போல எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னை மதித்து நடக்கும் மனைவியின் மீது காதல் கொள்வான் கணவன்; அவள் மீது அன்பு மழையைப் பொழிந்திடுவான் கணவன்!
மேலே இருக்கும் இரண்டு வரிகளை மீண்டும் மீண்டும் படியுங்கள்!
மாய சுழற்சி மறைந்து விட்டதா?

இல்லறம் காக்கப்பட இறைவன் போட்டுத் தரும் பாதுகாப்பு வளையங்கள்!

கணவன் மனைவி உறவை பலப்படுத்துவது எது? அவர்களுக்குள் காதல் உணர்வை நிலைத்திருக்கச் செய்வது எது? அது தான் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் “நம்பிக்கை” (trust)!

ஆனால் இந்த நம்பகத் தன்மையை உடைத்தெறிந்திடப் புறப்பட்டவன் தான் ஷைத்தான் – மனிதனின் பொது எதிரி! அவன் கங்கணம் கட்டினான். அல்லாஹ் அனுமதி கொடுத்தான்.

கணவன் மனைவியரைப் பிரித்து வைப்பது தான் மிகச் சிறந்த ஷைத்தானிய வேலை என்று தன் சகாக்களுக்கு “சான்றிதழ்” வழங்கினான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை அனுப்புகிறான்.
அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றவனெனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான்.
அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் வந்து "நான் இன்னின்னவாறு செய்தேன்'' என்று கூறுவான். அப்போது இப்லீஸ், "(சொல்லிலிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை'' என்று கூறுவான்.
பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, "நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை'' என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச் செய்து, "நீதான் சரி(யான ஆள்)'' என்று (பாராட்டிக்) கூறுவான்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் (5419)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) அபூசுஃப்யான் தல்ஹா பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள், "அப்போது அந்த ஷைத்தானை இப்லீஸ் கட்டியணைத்துக்கொள்கிறான் (பிறகு அவ்வாறு பாராட்டுகிறான்)" என்று கூறியதாகவே நான் கருதுகிறேன்.
இப்போது கேள்விஎன்னவெனில் - மிகப்பெரும் குழப்பமாக - கணவன் மனைவியரைப் பிரித்து வைப்பதை இப்லீஸ் தேர்வு செய்தது ஏன்?
சிந்தியுங்கள்! ஆழமாக சிந்தியுங்கள்! கவலையுடன் சிந்தியுங்கள்!
கணவன் மனைவி நல்லுறவை உடைத்தெறிவதற்கு ஷைத்தான் மேற்கொள்ளும் வழிமுறைகள் என்னென்ன என்பதைப்பார்ப்போம்.

கணவன் மனைவி நம்பகத்தன்மையை உடைப்பது; சந்தேக விதைகளை விதைப்பது; சந்தேக சூழலைத் தனக்குச் சாதகமாக்குவது. அதனைப் பரப்பி விடுவது; கணவன் மனைவியருக்குள் சண்டை மூட்டுவது; பெரிது படுத்தி வேடிக்கை பார்ப்பது;

இதனை நாம் நுணுக்கமாக ஆய்வு செய்திட வேண்டியுள்ளது: ஏனெனில் ஷைத்தானின் அடிச்சுவட்டைப் பின் பற்ற வேண்டாம் என்பது இறை கட்டளை!

ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; (24:21)

அடிச்சுவடு என்பது சின்ன சின்ன ஸ்டெப்!

அதாவது ஷைத்தான் நம்மை வழிகெடுக்கும் முறை – நம்மை சின்ன சின்ன “தவறுகளில்” விழ வைத்து – அப்படியே அவன் வழியில் நம்மை வழி கெடுத்து – இறுதியில் ஒரேயடியாக நம்மைப் பாவப் படுகுழியில் தள்ளி விட்டு வேடிக்கை பார்ப்பது தான்!

ஆனால் – அல்லாஹு தஆலா – தன் அடியார்களாகிய நமக்கெல்லாம் மிகத் தெளிவாகவும் மிக விரிவாகவும், மிக விளக்கமாகவும் வழி காட்டியிருக்கின்றான்.

எந்தெந்த வழிகளில் எல்லாம் அவன் வழி கெடுக்க வருவானோ அத்தனை வழிகளையும் அடைத்துக் கொள்ளச் சொல்லி வழிகாட்டியுள்ளான் அல்லாஹு தஆலா.

வல்லோன் அல்லாஹ்வின் விரிவான வழிகாட்டுதல்கள் என்னென்ன?

சுருக்கமாகப் பட்டியலிடுவோம் இங்கே.
1. பருவம் அடைந்ததும் – தாமதிக்காமல் திருமணம் செய்து வைத்து விடுதல்
2. திருமணம் தாமதமானால் கற்பைப் பாதுகாத்துக் கொள்தல்
3. தூய்மையான துணையைத் தேர்வு செய்தல்
4. திருமணத்தை எளிமையாக்குதல்
5. கணவன் மனைவியரின் திருப்திகரமான பாலுறவுக்கு (sex life) ஊக்கம் அளித்தல்; அதனை உறுதி செய்தல்
6. மகிழ்ச்சிகரமான இல்லற வாழ்வுக்கு எளிமையான வழிகாட்டுதல்கள் (முத்தம்; விளையாட்டு, சேர்ந்து குளித்தல்; சேர்ந்து உண்ணுதல்; வேலைகளைப் பகிர்ந்து கொள்தல்; மென்மையைக் கடைபிடித்தல், நேரம் ஒதுக்குதல்)
7. வாழ்க்கைத் துணையை மதித்தல்; கண்ணியமாக நடத்துதல்; நகைச்சுவை உணர்வு; மன்னிக்கும் மனப்பான்மை; உணர்வுகளை மதித்தல்; தனிமையில் மட்டும் கண்டித்தல்; இரக்கம் காட்டுதல்
8. கண்ணியமாக பேசுதல்; திட்டுவதைத் தவிர்த்தல்; வாக்குறுதிகளைக் காப்பாற்றுதல்; தவறுகளை ஒத்துக் கொள்தல்; கருத்து வேறுபாடுகளை அழகான முறையில் தீர்த்துக் கொள்தல்
9. கண்ணியமான ஆடை (ஹிஜாப்) அணிதல்; அலங்காரத்தை மறைத்துக் கொள்தல்
10. ஆணும் பெண்ணும் தங்கள் கண் பார்வையைத் தாழ்த்திக் கொள்தல்
11. (அன்னியரான) ஆண் – பெண் தனிமையைத் தவிர்த்தல் / பயணத்தைத் தவிர்த்தல்
12. ஒருவர் வீட்டுக்குள் நுழைவதில் கட்டுப்பாடுகளைக் கடைபிடித்தல்; எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்தல்
13. நடந்து செல்லும்போதும் கட்டுப்பாடு
14. அன்னியருடன் பேசும்போதும் கட்டுப்பாடு
15. சந்தேகமான சூழ்நிலைகளைத் தவிர்த்துக் கொள்தல்
16. கற்புள்ள பெண்கள் மீது அவதூறு பரப்பினால் கடுமையான தண்டனை
17. நம்பிக்கை மோசடி செய்த பெண்ணுக்கு கணவனே – இறைச்சாபமிட்டுப் பிரித்து விடுதல் எனும் கடுமையான சட்டம்
18. விபச்சாரத்துக்கு கடுமையான தண்டனை
இல்லறம் பாதுகாக்கப்பட இறைவன் போட்டுத் தந்திருக்கும் இந்தப் பாதுகாப்பு வளையங்களைப் பேணிக்கொள்தல் மிக அவசியம்!

நம்பிக்கை மோசம் – நினைத்துக் கூடப் பார்க்க வேண்டாம்!

கணவன் மனைவியருக்குள் அசைக்க முடியாத நம்பிக்கை (trust) என்பது மிக அவசியம். ஒருவர் தனது வாழ்க்கைத்துணையை – “இனி நான் இவரை நம்பிடத் தயாரில்லை” – என்று முடிவெடுத்து விட்டால் – அவர்களின் உறவு (relationship) மிகவும் ஆட்டம் கண்டு விட்டது என்று பொருள். அவர்களின் இல்லற எதிர்காலம் இருண்டு விட்டதாக பொருள்.

இவ்வுறவை நீடிப்பதா அல்லது முடித்துக் கொள்வதா – என்று மகா குழப்பத்துக்கு ஆளாகிறார்கள் கணவன் மனைவியர்.

“இவளுடன் இல்லாமல் நான் வேறு ஒருத்தியைத் திருமணம் முடித்திருந்தால் என் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்” – என்று தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கும் கணவன் தான் – வேறு பெண்களை நாடுகிறான். அது போலத்தான் மனைவியரும்.

மனைவியின் குறைகளையே துருவிக் கொண்டிருக்காமல் – அவளுடைய நிறைகளை நினைத்து – அவைகளால் தான் அடையும் “பலன்களுக்கு” நன்றியுணர்ச்சி உடையவனாக கணவன் நடந்து கொள்ளும்போது – கணவன் மனைவி நம்பகத் தன்மை உறுதி செய்யப்படுகின்றது.

அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு இறை நம்பிக்கையுள்ள ஆண் (கணவன்) இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (அவன் மனைவியை) வெறுக்க வேண்டாம்.அவன் அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால்,அவளிடமுள்ள வேறொரு நற்குணத்தைக் கொண்டு பொருந்திக்கொள்வானாக! என நபி (ஸல்) அவர்கள் ௬றினார்கள்.(நூல்: முஸ்லிம்)

இதற்குப் பெயர் தான் POSITIVE APPROACH!

மனைவியை வெறுப்பதற்கு பதிலாக – “நீயே என் எதிர்காலம்! நீ இல்லாவிட்டால் என் வாழ்க்கை ஒரு பாலைவனம்; எனக்கு அற்புதமான குழந்தைகளைத் தந்தவள் நீ! நீ அன்பைப் பொழிகின்ற ஒரு அருமையான தாய்! நீ எனக்கு சிறந்த நண்பன். ஆலோசகன். நீ கொடுத்துக் கொண்டே இருப்பவள். கிடைப்பது பற்றிக் கவலைப்படாதவள்!” – என்றெல்லாம் உளமாற மனமாறப் பாராட்டிப் பாருங்கள்!

இதுவே நபிவழியாகும்! அப்புறம் – நம்பகத்தன்மை வலிமை பெறுகிறதா இல்லையா என்று பாருங்கள்.

ஆனால் – இல்லற வாழ்க்கை குறித்து சரியான வழிகாட்டுதலை அறியாத, நல்லெண்ணம் கொண்ட நமது சகோதர குடும்பங்களில் கூட இந்த நம்பிக்கை மோசடி – தலை விரித்து ஆடுகிறது! பல அவமானகரமான பின் விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது!

அவர்களுக்கு நம் ஆலோசனைகள்:

A. உங்கள் துணை உங்களை மோசம் செய்து விடாமல் இருப்பதற்கு:

ஏழையாக இருந்தாலும், இறையச்சமுள்ள நற்குணம் மிக்க ஒரு துணையைத் தேர்வு செய்யுங்கள்.

பயணம் சென்று பிரிந்து வாழும் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப் புள்ளி வையுங்கள்.

நெருங்கி வாழுங்கள்; நேரம் ஒதுக்குங்கள்; ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்;

துணையின் தேவைகளை நன்றாக நிறைவேற்றிக் கொடுங்கள். வெளியில் அழைத்துச் செல்லுங்கள்; பேசுங்கள்; சிரியுங்கள்; பேச விட்டுக் கேளுங்கள்; விளையாடுங்கள்.

வேலைப்பளுவைக் காரணம் காட்டி – அவர்களின் உணர்வுகளைப் புறக்கணிக்காதீர்கள்.

பாலுறவில் சுய நலம் வேண்டாம்; உங்கள் துணையின் திருப்தியை அலட்சியம் செய்து விடாதீர்கள்!

எதிர்மறைப் பேச்சுக்களை முற்றாகத் தவிர்த்திடுங்கள். இது தான் நம்பிக்கை மோசடிக்கு இட்டுச் செல்ல ஷைத்தான் தேர்வு செய்திடும் முதல் ஸ்டெப்!

சந்தேகம் ஏற்படுகின்றதா? வெளிப்படையாகப் பேசி விடுங்கள்; நீங்களும் வெளிப்படையாக நடந்து கொள்ளுங்கள்.

B. ஏதோ – காரணங்களால் உங்கள் துணையை வெறுத்து – அவருக்கு நம்பிக்கை மோசடி செய்திட ஷைத்தான் உங்களைத் தூண்டுகின்றானா? ஒரு தடவை நீங்கள் ஷைத்தானின் வலையில் வீழ்ந்து விட்டாலும் – அதன் விளைவுகளை சற்றே எண்ணிப் பாருங்கள்:

அனுதினமும் பொய் சொல்ல வேண்டிய அவல நிலைக்கு ஆளாக நேரிடும்.

தெரிந்து போய் விடுமோ என்ற அச்ச உணர்வு அலைக்கழித்துக் கொண்டே இருக்கும்.

யாருடைய வலையில் விழுகின்றீர்களோ – அவர்களின் மிரட்டலுக்கு ஆளாக வேண்டி வரும். திருந்தி வாழும் வாய்ப்பு கூட கடினமாகி விடும்.

வெட்க உணர்வு அற்றுப்போக நேரிடும்.

எதிர்காலம் இருண்டதாகி விடும், மற்ற உறவுகளும் கூட வர மாட்டார்கள்.

இதுவெல்லாம் ஒரு புறம் இருக்க – உங்கள் தாயின் மனநிலை என்னவாகும்? தந்தையின் தலைகுனிவுக்கு என்ன மருந்து? உங்கள் சகோதரர்களின் கண்ணியம் என்னவாகும்? சகோதரிகளின் திருமண வாழ்க்கை என்னவாகும்? நீங்கள் பெற்ற செல்வங்களின் மன நிலை என்ன பாடுபடும்? என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

வெளியே தலை காட்டிட முடியாமல் – கூனிக் குறுகி வாழ்ந்திட வேண்டிய அவல நிலைக்கு உங்கள் சுற்றம் ஆளாக நேரிடும்.

இறுதியாக ஒரு அறிவுரை: தப்பு செய்து விட்டு அது தெரிந்த பின்னரும் – உங்கள் துணைவர் உங்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் அது கண்ணாடி ஒன்றை உடைத்து விட்டு – மீண்டும் அதனை ஒட்ட வைப்பது போலத்தான்! கண்ணாடியின் பழைய தோற்றம் வரவே வராது!

எனவே – இறையச்ச மிக்க சமுதாயமே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஹம்மதின் சமுதாயமே!

தன் அடியார்களில் ஆணோ பெண்ணோ யார் விபசாரத்தில் ஈடுபடுவதைக் கண்டாலும் அல்லாஹ்வைவிடக் கடுமையாக ரோஷம் கொள்பவர் வேறெவருமிலர். முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதையெல்லாம் நீங்களும் அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள் - என ஆயிஷா(ரளி) அறிவிக்கிறார்கள். (புகாரி 5221)

வல்லோன் அல்லாஹ் நம் சகோதரர்களையும் சகோதரிகளையும் நம்பிக்கை மோசம் செய்வதிலிருந்தும், செய்யப்படுவதிலிருந்தும் பாதுகாப்பானாக! ஆமீன்!
உணர்ச்சி வெள்ளத்தில் கணவன்-மனைவி!
ஒரு கணவனின் மன நிலை இது: "என் மனைவி என்னைக் கடுமையாக வெறுக்கிறாள்! அதனால் தான் அவள் அடிக்கடி என்னை ஆழமாகப் புண்படுத்தி வேடிக்கை பார்க்கிறாள்! நான் என்ன நினைக்கிறேன் என்பது குறித்தோ, எனது உணர்வுகள் குறித்தோ கொஞ்சம் கூடக் கவலைப்படாமல் வேண்டுமென்றே என்னைச் சீண்டிக் கொண்டே இருக்கிறாள்! அவள் சீண்டுதல்கள் தொடர்கதையாகி விட்டன! கொஞ்சம் கூட கணவன் மனைவி உறவு என்னாகும் என்பது குறித்து அவள் கவலைப்படுவதாகவே தெரியவில்லை!"
இப்படிப்பட்ட கடுமையான அச்சமூட்டுகின்ற ஒரு மன நிலையிலேயே பெரும்பாலான நேரம் கழிகின்றது அந்தக் கணவனுக்கு!
இவ்வாறு ஒரு கணவன் (அல்லது மனைவி)  அலைமோதும் உணர்ச்சிகளால் அனுதினமும் அலைக்கழிக்கப்படுகின்ற மன நிலை எப்படிப்பட்டதென்றால் - கடுமையான வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஒருவன் எவ்வாறு அங்கும் இங்கும் அலை மோதி அலைக்கழிக்கப் படுகின்றானோ அது போலவே இங்கே கணவன் "உணர்ச்சி வெள்ளத்தில்" சிக்கிக் கொண்டு  அலைக்கழிக்கப்படுகின்றார்கள்!
ஒரு முறை பெண்களைப்பார்த்து நபியவர்கள் சொன்னார்கள்: "அறிவிலும் மார்க்கத்திலும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் சிந்தனையை போக்கக்கூடியவர்களாக உங்களை விட  வேறு யாரையும் நான் பார்க்கவில்லை!" (புகாரி)
என்ன செய்வது என்று அவனால் சிந்திக்கக் கூட முடிவதில்லை! தவிப்பான்! துடிப்பான்! நாடித்துடிப்பு அதிகரித்திடும்! எண்பது, தொண்ணூறு, ஏன் நூறு வரைக்கும் கூட எகிறி விடும்! இதனையே ஆங்கிலத்தில்  நஅழவழையெட கடழழனiபெ in அயசசயைபந - என்று அழைக்கிறார்கள்! தமிழில் நாம் இதனை "திருமண வாழ்வில் உணர்ச்சிப் பிரவாகம்" என்று அழைக்கலாம்.
இந்த உணர்ச்சி வெள்ளத்தில் கணவன் மட்டும் தான் சிக்கிக் கொள்கிறான் என்று எண்ண வேண்டாம். ஒரு மனைவியும் கணவனின் சொல் அல்லது செயல்களால் அதே போன்ற மன நிலைக்குத் தள்ளப்படுகின்றாள்.
உணர்ச்சி வெள்ளத்தில் சிக்கியிருக்கின்ற கணவனால் (அல்லது மனைவியால்) தெளிவாக ஒன்றைக் காதில் வாங்கிக் கொள்ள இயலாது. கேட்கப்படுகின்ற கேள்விக்குத் தெளிவான பதிலையும் அளித்திட முடியாது. மனதை ஒருமுகப்படுத்திட முடியாது. அவனால் செய்ய முடிவதெல்லாம், எங்கேயாவது ஓடி விடலாமா என்று தோன்றும்;. அல்லது ஒங்கி மனைவியை அடித்து விடலாமா என்று தோன்றும்;
தனித்தனியே போய்ப் படுத்துக் கொள்வார்கள்; ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மாட்டார்கள். பேசிப் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளலாம் எனில் "யார் முதலில்?" என்ற கேள்வி எழும்.
"என் மேல் என்ன தப்பு?" என்று இருவருமே நினைப்பதனால், "கருத்துப் பரிமாற்றம்" நின்று போய் விடுகிறது.
ஆனால் இது இத்துடன் நிற்பதில்லை! அது தான் வேதனை. ஒவ்வொரு நாளும் – பல தடவைகள் –சின்ன சின்ன பிரச்னைகள் –கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்படும் போதெல்லாம் - இருவருக்கும் இடையே பேச்சு துவங்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் அது பெரிய "சண்டையாகவே" முடியும்!
சமாதானம் செய்திடும் முயற்சியில் யாரேனும் இறங்கினால், யாரேனும் பேச்சைத் திசை திருப்பி வேறு விஷயங்களுக்குச் சென்றால் கூட அதனையும் "நல்ல எண்ணத்துடன்" பார்த்திட மாட்டார் துணைவர்!
"ஏம்மா! இதனைப்பாரு!" என்று என்பான் கணவன்.
"ஏன்? என் கண்ணு என்ன பொட்டையா?" என்பாள் மனைவி!
"சாப்பாடு இன்னைக்கி சூப்பர்! ரொம்ப நல்லா இருந்தது!" என்பான் கணவன்.
"யாராவது நல்லா இல்லாம சமைப்பாங்களா?" என்பாள் மனைவி!
சரி, இதையெலாம் பார்த்தால் சரிவராது, பேசித் தீர்த்துக்கொள்வோம் பிரச்னையை  என்று கணவன் முன் வந்து, "இதோ பார், இப்படியே போனால் சரி வராது; பேசி ஒரு முடிவுக்கு வருவோம்", என்பார்.
"ஏன், இன்னொரு தடவை சண்டை போடவா?" என்பாள் மனைவி!
இது இப்படியே தொடர்ந்தால் .....
தலாக்கை நோக்கி இல்லறக் கப்பல்…..

எவ்வளவு தான் கத்திப் பேசினாலும், சுவர் பதில் தருமா?
மனைவி ஒரு பிரச்னை குறித்து அல்லது தனது உணர்வுகள் குறித்து கணவனிடம் பேசிட விருப்பம் தெரிவிக்கின்றார்.
ஆனால் கணவனோ - இதற்கு முன்னர்,  இது போன்ற அழைப்புகளுக்கு இணங்கி உரையாடியதால் ஏற்பட்ட கசப்பு அனுபவங்கள் நினைவுக்கு வர, அமைதி காக்கின்றார். பேசுவதற்கு விருப்பம் இல்லை. அந்த இடத்தை விட்டு நகர்கிறார். இப்படிப்பட்ட அமைதியை, பேசிட மறுக்கும் நிலையையே ஆங்கிலத்தில் stonewalling என்று அழைக்கின்றார்கள். "To shutdown emotionally and withdraw into silence!"
தமிழில் இதனை "உதாசீனப்படுத்துதல்" என்று மொழிபெயர்த்தாலும், இதனை இப்படிப் புரிந்து கொள்ளலாம்: ஒருவர் ஒரு சுவருக்கு முன்னால் நின்று எவ்வளவு கத்திப் பேசினாலும், சுவர் அமைதியாகவே இருக்கும். எந்த ஒரு பதிலையும் அந்த சுவரிடம் நாம் எதிர்பாத்திட முடியாது! அது போலத்தான் கணவனோ, மனைவியோ இப்படிப்பட்ட மயான அமைதி நிலைக்குச் சென்று விடுகின்றார்கள்! இது கணவன் மனைவி இல்லறச் சிக்கல்களுக்குத் தீர்வாகாது!
இந்த "அமைதிப் போராட்ட" வழியை மிக அதிகமாகத் தேர்ந்தெடுப்பவர்கள் கணவன்மார்களே!
அதற்குக் கணவன்மார்கள்சொல்கின்ற காரணங்கள்:
ஒன்று - "அவள் என்னைக் கோபப்படுத்துகிறாள்!
இரண்டு: "நான் என்ன சொன்னாலும் அதனை அவள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை! பின் பேசுவதால் என்ன பயன்?"
மூன்று: "நானே நொந்து போயிருக்கின்றேன்! என்னை அவள் எவ்வளவு அவமதிக்கிறாள்?" அவளுடன் அமர்ந்து பேசினாலே என்னை என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை; என்னைப் பாதுகாத்துக் கொள்ளவே நான் வாயை மூடிக்கொள்கிறேன்!"
ஆனால் - மனைவி என்ன நினைக்கிறார்?
"இவர் - இந்த அமைதியை எனக்கெதிரான "ஆயுதமாக" பயன்படுத்திட நினைக்கிறார்!"
"இவர் - இந்த அமைதியை எனக்கு வழங்குகின்ற "தண்டனை" என்று நினைக்கிறார்!"
இந்த அமைதி ஏதோ ஒரு சில மணி நேரங்களோ அன்று! சிலருக்கு ஆண்டுக் கணக்கில் கூட இந்த அமைதி வாழ்க்கை தானாம்!
ஆனால் - பிரச்னைகளை ஒரு முடிவுக்குக்கொண்டு வர இந்த அமைதி வழி ஒரு தீர்வே அல்ல என்பதை கணவன்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட உணர்ச்சிச் சிக்கல்களிலிருந்து இருவரும் வெளி வருவது எப்படி?உணர்ச்சி வயப்பட்டிருக்கும்போது பேசிடக்கூடாது என்பது உண்மையே! எனவே மனைவியிடம் இப்படிச் சொல்லலாம். நான் அரைமணி நேரம் கழித்து உன்னிடம் இது பற்றிப் பேசுகின்றேன்."
கணவனுக்கும் மனைவிக்கும் பிரச்னைகள் எழுவது என்பது இல்லற வாழ்வில் தவிர்க்கவே இயலாது! எனவே செய்திட வேண்டியது என்னவெனில் கணவனும் மனைவியும் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளும் திறமைகளைக் (conflict resolution skills) கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். அவற்றுள், ஒருவர் தனது கருத்தினை பாங்காக எடுத்து வைப்பது எப்படி எனும் - communication skill - கருத்துப் பரிமாற்றத் திறனையும் வளர்த்துக் கொள்வதும் அடங்கும்.

கணவன் மனைவியருக்குள் விவாதமா?
கணவன் மனைவி விவாதங்களின் போது மூன்று விஷயங்களைக் கடைபிடிப்பது அவசியம் என்று இஸ்லாமிய அறிஞரும், குடும்ப நல ஆலோசகருமான ஷேஃக் யாசிர் ஃபஸாஃகா அவர்கள் கற்றுத் தருகிறார்கள்:
1 நாம் சொல்ல வருகின்ற கருத்து ஒன்றும் அவ்வளவு முக்கியம் அல்ல! நாம் யாரிடம் அந்தக் கருத்தைச் சொல்ல வருகின்றோமோ அந்தத் துணை நமக்கு முக்கியம். இதனையே அவர் - "The person is always more important than the point!" என்கிறார்.
2 நாம் சொல்ல வருகின்ற கருத்து மிகவும் சரியாகக்கூட இருக்கலாம். ஆனால் - யாரிடம் அந்தக் கருத்தைச் சொல்ல வருகின்றோமோ அவர் மீது கருணை காட்டுதல் அந்தக் கருத்தைவிட முக்கியம். இதனையே அவர் - "Being kind is more important than being right!" என்கிறார்.
3 உங்கள் உள்ளத்தில் எதனை நீங்கள் எண்ணுகின்றீர்களோ அதனையே நேரடியாகச் சொல்லுங்கள்; எதனை நீங்கள் சொல்கின்றீர்களோ - அதனையே உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். இதனையே - "Say what you mean and mean what you say! " என்கிறார் அவர்.
கடைபிடித்துப் பாருங்கள்! இது முழுக்க முழுக்க சுன்னத்தான ஒரு அணுகுறை!

சூழ்நிலை அறிந்து பேசுங்கள்!
கணவன் மனைவி இருவருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் கடுமையான கருத்து வேறுபாடு. கோப உணர்ச்சி கொப்பளிக்கிறது. அது குறித்துப் பேசி விடலாம் என்று கணவனோ அல்லது மனைவியோ நினைக்கிறார்கள்.
ஆனால் கருத்து வேறுபாடுகள் குறித்துப் பேசிடத் தகுந்த சூழல் அந்த சமயத்தில் அங்கு இல்லையெனில் - கணவனும் மனைவியும் சற்றே பொறுமை காப்பது நல்லது. தகுந்த சூழல் ஒன்று உருவாகும் வரை அவர்கள் அது குறித்து வாய் திறக்காமல் இருப்பதே சாலச் சிறந்தது.
எல்லாச் சூழ்நிலைகளிலும், எல்லா இடங்களிலும் அவர்கள் தங்கள் பிரச்னைகள் குறித்துப் பேசிடத் துவங்கி விடக்கூடாது.
எந்தெந்தச் சூழலிலெல்லாம் அவர்கள் பேசிடக் கூடாது?
வீட்டில் மற்ற உறவினர்கள் இருக்கிறார்களா? அவர்களுக்கு மத்தியில் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் குறித்து வாய் திறக்க வேண்டாம். அங்கே ஈகோ தலையெடுக்கத் துவங்கி விடும்.
குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு உங்கள் விவாதங்களைத் தொடங்கிட வேண்டாம். அது அவர்களை மிகவும் பாதிக்கும்.
வீட்டில் குழந்தைகளும் இல்லை; உறவினர்களும் இல்லை. நீங்கள் இருவர் மட்டும் தனியே என்றாலும் கூட உரத்தக் குரலில் இருவரும் பேசிட வேண்டாம். அக்கம்பக்கத்தார் இருக்கிறார்கள்.
கணவன் மனைவி இருவரும் பஸ் அல்லது ரயிலில் பயணிக்கிறீர்களா? சுற்றிலும் பயணிகள் சூழ்ந்திருக்க நீங்கள் உங்கள் பாட்டுக்கு உங்கள் கருத்து வேறுபாடுகளைப் பேசிடத் துவங்கி விடாதீர்கள்.
அல்லது நீங்கள் இருவருமாக காரில் செல்கிறீர்களா? நீங்களே ஓட்டுனர் என்றால் பரவாயில்லை. ஆனால் காரை ஓட்டுவது ஒரு டிரைவர் எனில் உங்கள் குடும்ப விஷயங்களைப் பேசாதீர்கள். அங்கே டிரைவர் நீங்கள் பேசுவதை உற்றுக் கேட்கக்கூடும்.
வெளியே இருவரும் நடந்து செல்கிறீர்களா? முன்னும் பின்னும் யாருமே இல்லை என்று நினைத்துக் கொண்டு பேச்சைத் துவக்கி விடாதீர்கள். “ஆமா! யாரு நாம பேசுறத கேட்டுக்கிட்டு இருக்காங்க?” என்று உங்கள் துணை பேசத் தொடங்கினால் பதில் பேசாதீர்கள்.
குடும்ப விஷயங்களை கடைகளில் பொருட்கள் வாங்கும் சமயத்திலும் பேச வேண்டாம்!
கணவன் – மனைவி கருத்துரையாடலுக்கு மேற்கண்ட சூழ்நிலைகளை நாம் தவிர்க்கச் சொல்வதற்குக் காரணம் – ஒருவர் மானத்தை மற்றவர் காத்திட வேண்டும் என்பதற்காகத் தான்.
சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல் பேசத் தொடங்கினால் என்னவாகும்? சாதாரணமாகத் தான் பேச்சு தொடங்கும். ஒரே ஒரு வார்த்தை உங்கள் உரையாடலை – விவாதமாக மாற்றி விடும்! அடுத்து என்ன நடக்கும் என்று நாம் சொல்லத் தேவையில்லை.
கணவனோ அல்லது மனைவியோ – இருவரில் ஒருவர் எதற்கெடுத்தாலும் “சண்டை போடக்கூடிய” மனிதராக இருந்து விட்டால் கேட்கவே வேண்டியதில்லை. மேற்கண்ட சூழ்நிலைகளில் எதுவாக இருந்தாலும் – பேசுவதைத் தவிர்த்திடா விட்டால் அது கணவன் மனைவி உறவை மேலும் சிக்கலாக்கி விடும்.
எனவே தான் சொல்கிறோம்: சூழ்நிலை அறிந்து பேசுங்கள்!

பாடம் படித்துக் கொள்ள வேண்டியது கணவன் மனைவி இருவரும் தான்!
கணவன் மனைவி குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பும் நேரம்.
"ஏங்க! லேட்டாயிடுச்சுங்க! ஏதாவது ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டு விட்டுப் போயிடலாங்க!" - இது மனைவி.
"ஓக்கே!" - ஒரே வார்த்தையில் பதில்! - இது கணவன்.
"எந்த ஹோட்டல் போகலாம்னு நீங்களே சொல்லுங்க!" - இது மனைவி.
"எதுவானாலும் பரவாயில்லை!" -  நீயே முடிவு பண்ணு!"
"சரிங்க! பிள்ளைகளை அழைச்சிக்கிட்டு "அந்த" ஹோட்டலுக்குப் போகலாம்னு ரொம்ப நாளா எனக்கு ஆசைங்க. அங்கே போகலாமா?"
"ஓக்கே!" - மறுபடியும் ஒரே வார்த்தையில் பதில்.
ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குத் திரும்பியும் ஆகி விட்டது!
இப்போது தான் வேடிக்கை ஆரம்பம்.
***
கணவன் நேரே சமையல் கட்டுக்குச் செல்கிறார்.
பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து "நூடுல்ஸ்" ஒரு ப்ளேட் சமைக்கத் தொடங்குகிறார்.
மனைவிக்கு ஆச்சரியம்.
"ஏங்க! இந்த வேலையெல்லாம் வேண்டாம்னு தானே ஹோட்டலில் சாப்பிட்டோம்; மறுபடியும் இங்கே வந்து என்னங்க பண்ணிகிட்டு இருக்கீங்க?"
"எனக்கு அங்கு சாப்பிட்டது போதவில்லை!!"
மனைவிக்கு இது எப்படி இருக்கும்?
***
இந்த சம்பவத்தை கொஞ்சம் அலசுவோமா?
இதற்கு முன் எழுதிய கட்டுரையில் கணவன் மனைவி கலந்துரையாடலில் மூன்று பாடங்களைச் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறதா?
அதில் மூன்றாவது பாடம் என்ன?
"உள்ளத்தில் உள்ளதைச் சொல்லுங்கள்; உள்ளத்தில் இல்லாததைச் சொல்லாதீர்கள்!"
இங்கே அந்தக் கணவன் செய்த தவறு இது தான்!
ஹோட்டலில் சாப்பிடுவது என்பது அப்போது அவருக்குப் பிடிக்கவில்லை!
அடுத்தது: மனைவி தேர்ந்தெடுத்த ஹோட்டலிலும் அவருக்கு உடன்பாடில்லை!
அவருடைய உள்ளத்தில் இருந்தது இது தான்!
ஆனால் அதனை அவர் சொல்லவில்லை!
அவர் சொன்னது என்ன?
"ஓக்கே!"
ஆனால் அவர் உள்ளத்தில் இருந்தது அதுவல்ல!
ஹோட்டலில் சாப்பிடலாமா என்று மனைவி ஆலோசனை கேட்ட போது கணவன் என்ன சொல்லியிருக்க வேண்டும்?
"வேண்டாம் டியர்! வீட்டுக்கே போய் சாப்பிட்டுக் கொள்ளலாம்!"
அது தானே அவர் உள்ளத்தில் இருந்தது! ஆனால் அவர் அதனைச் சொல்லிடவில்லையே!
ஏன்? ஏன்? ஏன்?
**
பெரும்பாலான கணவன் மனைவியர் பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணமே - இந்த அடிப்படைப் பாடத்தைக் இருவருமே கற்றுக் கொள்ளாததால் தான்!
***
கணவன் என்ன சொல்வார் தெரியுமா?
"நான் ஒரு ஒப்புக்குத் தானே சொன்னேன்! என் முகத்தைப் பார்த்தாலே உனக்குத் தெரியலையா எனக்குப் பிடிக்கவில்லைன்னு!
"அது எப்படிங்க எனக்குத் தெரியும்?" - இது மனைவி
இங்கே மனைவி சொன்னது தான் உண்மை!
சில நேரங்களில் மனைவியரும் இது போல் நடந்து கொள்வதுண்டு!
பாடம் படித்துக் கொள்ள வேண்டியது கணவன் மனைவி இருவரும் தான்!
அந்தப் புதிய பாடம் என்ன தெரியுமா?
ஒருவர் உள்ளத்தில் உள்ளதை இன்னொருவர் அறிந்து கொள்ள முடியாது;
அவர் வாய் திறந்து சொன்னாலே தவிர!
சில கணவன் மனைவியர் அடிக்கடி வாக்குவாதம் செய்வார்கள்; இரண்டு பேருமே தாம் சொல்வது தான் சரி என்று விவாதித்துக் கொண்டே இருப்பார்கள். முடிவு ஒன்று எட்டப்படாமலேயே அதனை அப்படியே விட்டு விடுவார்கள்.
மீண்டும் மீண்டும் இது தொடரும். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடக்கும். விவாதம் சூடேறும். ஆனால் முடிவு மட்டும் ஏற்படவே ஏற்படாது;
காரணம் அதுவே தான்!
உள்ளத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு இன்னொன்றைப் பேசுவது தான் அது!
சுன்னத்தான ஆறு அறிவுரைகள்!
(இது கணவன்மார்களுக்கு)
1. பொதுவாகவே பெண்கள் “உணர்வுகளுக்கு” அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதை கணவன்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும்! பெண்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதில் ஆண்களை விட மிகச் சிறப்பானவர்கள்.
அது போலவே அந்த உணர்ச்சிகளுக்கு சொல் வடிவம் தந்து விலாவாரியாக வர்ணிப்பதிலும் பெண்கள் கெட்டிக்காரர்கள். ஆனால் பரிதாபம்! ஆண்களின் நிலை இதற்கு நேர் மாறானது! அவர்களால் உணர்ச்சிகளைச் சரிவர புரிந்து கொள்ளவே முடியாது! அது போல உணர்ச்சிகளை அவர்களால் விவரித்துச் சொல்லிடவும் முடியாது!
எனவே உங்கள் மனைவி உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் - அந்த உணர்வுகளை முதலில் புரிந்து கொள்ளமுயற்சி செய்யுங்கள்! (try to understand their feelings).
2. அவர் தங்கள் உணர்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வந்தால் - அமைதியாக உள் வாங்கிக் கொள்ளுங்கள்! அது போதும் அவர்களுக்கு! கேள்வியாக ஏதாவது ஒன்றைக் கேட்டால் கூட ஓரிரு வார்த்தைகளில் பதிலைச் சுருக்கி விடுங்கள்!
3. உங்கள் மனைவியின் உணர்வுகளை அங்கீகரியுங்கள் (recognize and validate their feelings); மதியுங்கள்! (respect their feelings); ஏனெனில் உணர்வுகள் அனைத்தும் முற்றிலும் இயல்பானவை! இயற்கையானவை! எல்லோருக்கும் பொதுவானவை! "உன் கோபம் எனக்குப் புரிகிறது ஆமினா!" - என்று சொல்லிப் பாருங்கள்! கோபம் எல்லாம் அடங்கிப் போய்விடும்!
4. உணர்வு ரீதியான கலந்துரையாடல்களில் - புத்திமதி (advice) சொல்லத் தொடங்கி விடாதீர்கள்! கோபம் வரும் அவர்களுக்கு! மனைவி தன் உணர்வுகளை வெளிப்படுத்திப் பேசத்தொடங்கினால் – அவசரப்பட்டு – ஒரு தீர்வை (solution) வழங்கி விடாதீர்கள்! (do not offer any solutions!). ஏனெனில் அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது தீர்வுகள் அல்ல! புரிந்துணர்வைத் தான்!
5. அவர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தியை நீங்கள் மிக அற்பமானது என்று நினைக்கலாம். உங்களுக்கு அவர்கள் பேசுவது bore அடிக்கிறது என்று பேச்சைத் திசை திருப்பப் பார்க்காதீர்கள். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க எனக்கு நேரம் இல்லை என்று உதறி விடாதீர்கள்! நாளைக்குப் பேசிக் கொள்ளலாமே ப்ளீஸ்! என்று கேட்டுக் கொள்ளுங்கள். அதன்படி நேரம் கொடுத்து விடுங்கள்!
6. ஆனால் உங்கள் மனைவி சொல்கின்ற செய்தியில் எந்த நியாயமும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போதும் கூட = விவாதம் (argument) ஒன்றில் இறங்கி விட வேண்டாம். உணர்ச்சிவசப்பட்ட சூழலில் விவாதங்கள் எடுபடாது என்பதால் அமைதியாக இருந்து விடுங்கள்! பின்னர் அமைதியான சூழல் ஒன்றில் வைத்து மனைவியிடம் உங்கள் நிலையை எடுத்துச் சொல்லிக் கொள்ளலாம்!
பின்பற்றிப் பாருங்களேன்!

தாயாக….தந்தையாக…

தாய்மையின் சிறப்பு!

ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லதொரு குடும்பச் சூழல் அவசியம். ஒரு குழந்தையைப் படைத்து அதனை உலகுக்கு அனுப்பி வைக்கு முன்பேயே அக்குழந்தையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவன் அல்லாஹூ தஆலா!

எனவே ஒரு இல்லத்திலே குழந்தை ஒன்று பிறப்பதற்கு முன்பேயே அந்தக் குழந்தையின் தாயின் மனநிலையை (psychological preparation) எவ்வாறு தயார் செய்கிறான் என்பதைப் பார்ப்போமா?

ஒரு முறை அண்ணல் நபி(சல்) அவர்களின் மகன் இப்ராஹிமின் வளர்ப்புத் தாய் சலமா (ரளி) அவர்கள் நபி (சல்) அவர்களிடத்திலே வந்து கேட்டார்கள்: யா ரஸூலுல்லாஹ்! நீங்கள் ஆண்களுக்கு அதிக நன்மைகளை வாக்களிக்கிறீர்கள்.

ஆனால் பெண்களுக்கு அது போல் செய்வதில்லையே! நபி(சல்) அவர்கள் கேட்டார்கள்: உங்கள் பெண் நண்பர்கள் உங்களை இவ்வாறு கேட்கச் சொல்லித் தூண்டி விட்டார்களா? ஆம் என்றார்கள் சலமா (ரளி) அவர்கள். நபி(சல்) அவர்கள் பதிலளித்தார்கள்:

தன் கணவன் மகிழ்ச்சியுற்றிருக்கும் நிலையில் உங்களில் ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளே அவள் - அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்ற ஒரு நோன்பாளி பெறுகின்ற அதே நன்மைகளைப் (reward) பெறுகிறாளே அது உங்களுக்கு திருப்தியளித்திடவில்லையா?

பிரசவ வலியால் துடித்திடும் அந்தப் பெண்ணுக்காக எப்படிப்பட்ட அளவிலா நன்மைகள் காத்திருக்கின்றன என்பதை வானத்திலோ பூமியிலோ உள்ள எந்தப் படைப்பினமும் அறிந்திடாது.

அவள் குழந்தையைப் பெற்றெடுத்து அக்குழந்தை குடிக்கின்ற ஒவ்வொரு மிடறு பாலுக்காகவும் அவளுக்கு நன்மைகள் வழங்கப் படும்.

அக்குழந்தைக்காக அதன் தாய் இரவில் கண் விழிக்கிறாளே அதற்காக அவளுக்கு வழங்கப் படும் கூலி என்ன தெரியுமா? 70 அடிமைகளை அல்லாஹ்வுக்காக உரிமை விட்டவர் பெறுகின்ற அதே அளவு கூலியைத்தான்! (நூல்: தபரானி)

தாய்மார்களே! தாய்மையைக் கொண்டாடுங்கள்!!
தந்தைக்கும் சிறப்பு உண்டு!
இரண்டு நபிமொழிகளைப் பதிவு செய்வோம் இங்கே!
நபித்தோழர் ஒருவர் தமது குழந்தையை தமது கைகளில் அரவணைத்து அணைத்துக் கொண்டவராக நபி (சல்) அவர்களை சந்திக்க வந்திருந்தார்.
இதனைக்கண்ட நபியவர்கள் 'உங்கள் குழந்தையின் மீது கொண்ட அன்பினாலும் இரக்க குணத்தாலும் தான் இவ்வாறு செய்கிறீர்களா?' என்று கேட்டார்கள்.
ஆம் என்றார் அந்த நபித்தோழர். நபி (சல்) அவர்கள் அவரிடம் தெரிவித்தார்கள்.
'நீங்கள் எப்படிப்பட்ட அன்பையும் இரக்க குணத்தையும் கொண்டு உங்கள் குழந்தையை இவ்வாறு நடத்துகிறீர்களோ அதை விட பன்மடங்கு அதிகமாக அல்லாஹுதஆலா விடமிருந்து அவன் அன்பையும் அருளையும் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.
ஏனெனில் அல்லாஹுதஆலாவின் அன்பும் இரக்க குணமும் அவன் படைப்பினங்கள் அனைத்தின் இரக்க குணத்தை மிகைத்து நிற்கக் கூடியது!' (நூல்: அல் அதபுல் முஃப்ரத்)
நபி (சல்) அவர்கள் சொன்னார்கள்: ஒரு தந்தை தமது மகனது முகத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைகின்றார் எனில், அதற்காக அவருக்கு ஒரு அடிமையை உரிமை விட்ட நற்கூலி வழங்கப்படுகிறது.
நபித்தோழர் ஒருவர் : முன்னூற்று அறுபது தடவை அப்படிச் செய்தாலுமா என்று கேட்டார்? நபி (சல்) அவர்கள் பதிலளித்தாரகள்: அல்லாஹுதஆலாவைப் பற்றி நீங்கள் எண்ணுவதை விட அவன் மிகப்பெரியவன் (நூல்: தபரானி)
தந்தைமார்களே! இப்போது உங்களுக்கும் சந்தோஷம் தானே?
ஒரு குழந்தையின் வருகைக்குப் பின்…
குழந்தை ஒன்று வீட்டுக்குள் வருவது மிகவும் குதூகலமான ஒரு நிகழ்வு தான். அந்த இளந்தாயும் தந்தையும் தங்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து விட்டதாக எண்ணத் தொடங்குகின்றனர். தாங்கள் சிறந்த பெற்றோர்களாக விளங்கிட வேண்டும் என்று எண்ணுகின்றனர். குழந்தைக்காக இருவரும் மனம் உவந்து சிரமங்களை ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால் அந்த மகிழ்ச்சிக்கிடையே இன்னொன்றும் அரங்கேறி விடுகிறது பல இளம் பெற்றோர்களுக்கு. கணவன் மனைவியருக்கிடையே முன்பு இருந்த நெருக்கத்தில் இப்போது ஏற்படுகின்ற ஒரு நெருடல் தான் அது!
கணவன் மனைவி உறவில் குறிப்பிடத் தக்க மாற்றத்தை இப்போது காண முடியும்! அதாவது குழந்தை வருவதற்கு முன் அவர்கள் உறவின் தன்மை வேறு; குழந்தை வந்த பின் அவர்கள் உறவின் தன்மை வேறு!
குழந்தை ஒன்று பிறந்ததும் - மனைவி முற்றிலும் ஒரு தாயாக மாறி விடுகிறார். கைக்குழந்தைக்குத் தேவை - தாயின் தொடர்ந்த கவனம்! Frequent and Immediate Attention. இதனால் அந்த இளந்தாயின் தூக்கம் கெட்டுப் போகின்றது; சில நேரங்களில் எரிச்சல் ஒன்றும் சேர்ந்து கொள்கிறது! தாய் தன் குழந்தைக்கென அதிக கவனமும் நேரமும் தர வேண்டியிருப்பதால் - அவர் சோர்ந்து போய் விடுகிறார்.
அதனால் அவரால் தன் கணவனைக் கவனித்துக் கொள்ளவோ, கணவனின் உணர்வறிந்து செயல்படவோ  இயலாமல் போய் விடுகிறது. போதாக் குறைக்கு - குழந்தை பிறந்ததுமே - தாய்க்கு உதவி செய்திட அவரைச் சுற்றி ஒரு உறவு வட்டம் சூழ்ந்து கொள்வதையும் நாம் பார்க்கலாம்.
இவை அனைத்தையும் கணவன் (பாவமான அந்த இளந்தந்தை) சற்று தூரவே நின்று கவனிக்கத் தொடங்குகிறார். தாம் ஒதுக்கப்பட்டு விட்டோமோ என்ற அச்சம் மேலிட அவர்கள் தாங்களாகவே தாயிடமிருந்தும், குழந்தையிடமிருந்தும் ஒதுங்கிக் கொள்ளத் தொடங்கி விடுகின்றார்!
மனைவிக்கோ ஒரு ஆண்டு வரை மனைவியின் பாலுறவு ஆசை கணிசமாகக் குறைந்து விடுகிறது. பாலுறவின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து விடுகிறது. குறிப்பாக குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டும் காலமெல்லாம்!
கணவன் முகத்தை சோகத்துடன் வைத்துக் கொள்கிறார். புதிய சூழ்நிலையில் எவ்வாறு நடந்து கொள்வது என்று கணவனுக்குத் தெரிவதில்லை! சில நேரங்களில் மனைவியுடன் "விவாதம்" செய்து பார்க்கிறார். அது சண்டையாக மாறி விடுகிறது. சில சமயங்களில் சண்டையைத் தவிர்த்திட கணவன் வீட்டை வீட்டு வெளியே அதிக நேரம் செலவிடுகின்றார். இந்த கணவன் மனைவி சண்டை சச்சரவு என்பது - குழந்தை பிறந்த அந்த ஆண்டு முழுவதும் தொடர்கிறது.
கணவன் தன் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளவில்லையே என்று மனைவியையும் சோகம் தொற்றிக் கொள்கிறது!
இப்படிப்பட்ட சூழ்நிலை ஒன்று உருவாகும் என்று இதனை அவர்கள் இருவருமே எதிர்பார்த்திடவில்லை! புதிய சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமல் தேவையில்லாமல் சண்டை போட்டுக் கொண்டு சோகத்தை வரவழைத்துக் கொள்கின்றார்கள்!
இதனை "குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் சோகம்" (postpartum depression) - என்று அழைக்கின்றார்கள். இது ஒரு மனச்சோர்வு ஆகும்!  அவர்கள் முன்பு போல் மகிழ்ச்சியாக வாழ்ந்திட இயலவில்லை! இதனை பல இளம் பெற்றோர்கள் அனுபவிக்கிறார்களாம்!
இந்த நிலைக்குக் காரணம் குழந்தையின் வருகை கணவன் மனைவியருக்குள் கொண்டு வந்திருக்கும் புதிய யதார்த்தத்தை அவர்கள் இருவருமே புரிந்து கொள்ளத் தவறி விடுவதால் தான்! .
இந்த சோகத்தின் விளைவுகள் என்னென்ன?
ஹார்மோன் சுரப்பதில் மாறுதல்கள்; தூங்கும் நேரங்களில் மாற்றம்; பசி உணர்ச்சியில் மாற்றம்; சோகமான தோற்றம்; எதிலும் மகிழ்ச்சியடைய முடியாத மன நிலை; தன்னையே நொந்து கொள்தல்; தண்டித்துக் கொள்தல்; குழந்தையையும் தண்டித்தல் - இவை எல்லாமே இந்த சோகத்தின் விளைவுகள் தான்!
இந்த சோகம் தாயுடன் நின்று விடுவதில்லை! அது குழந்தையையும் தொற்றிக் கொள்கிறது! ஏனெனில் சோகமான தாய் சோகமான குழந்தையையே உருவாக்குகிறார்!
இதோ ஒரு மோசமான சுழற்சி: கணவன் மனைவி சண்டையிட்டுக் கொள்கிறார்கள்; அது குழந்தைக்கு எரிச்சலைத் தருகிறது;  எனவே அது அழுகின்றது; இதனை வைத்து தாயும் தந்தையும் மேலும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்! குழந்தை இப்போது மேலும் அதிகமாக அழுகின்றது! என்னவாகும் இந்தக் குழந்தை??
மன அழுத்தம் இருவரையும் வாட்டி வதைக்கும்; இளம் தந்தை செய்வதறியாது விழிப்பார்; ஆனால் இளந்தாய் அப்படியல்ல! அவர் தன் மன அழுத்தத்தில் இருந்து விரைவில் விடுபட்டு விடுகிறார்! காரணம் அவர் தாய்ப்பால் கொடுக்குபோது கூடவே சுரக்கின்ற ஆக்ஸிடோசின் (oxytocin) எனும் ஹார்மோன் தாய்மார்களை அமைதிப்படுத்தி விடுகிறது! இது ஒன்றே சற்று ஆறுதல் அந்தத் தாய்க்கு! சுப்ஹானல்லாஹ்!!
தீர்வு என்ன?
இப்படிப்பட்ட இளம் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
1 கணவன் மனைவி நல்லுறவைப் பேணுவது எப்படி?
2 மன அழுத்தத்தை எதிர்கொள்வது எப்படி?
3 கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்வது எப்படி?
4 துணையின் மனச்சோர்வைப் போக்குவது எப்படி?
5 குழந்தையின் மன நலத்தேவைகளை நிறைவேற்றித்தருவது எப்படி?
6 குழந்தை வளர்ப்பில் இருவருமே சேர்ந்து ஈடுபடுவது எப்படி?
சற்று விளக்கமாக இன்ஷா அல்லாஹ் அடுத்து பார்ப்போம்.

உங்கள் மனைவி - குழந்தையையும் உங்களையும்
சேர்த்தே கவனித்துக் கொள்கிறார்!!
இதற்கு முன் "குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் சோகம்" (postpartum depression) - பற்றி எழுதியிருந்தோம்.  இப்படிப்பட்ட சோகத்துக்கு 67% இளம் பெற்றோர்கள் ஆளாகிறார்களாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலைக்குக் காரணம் குழந்தையின் வருகை கணவன் மனைவியருக்குள் கொண்டு வந்திருக்கும் புதிய யதார்த்தத்தை அவர்கள் இருவருமே புரிந்து கொள்ளத் தவறி விடுவதால் தான்! எனவே  கணவன் மனைவி இருவருமே இந்தப் புதிய சூழ்நிலையை நன்கு புரிந்து கொண்டு பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக கணவன்மார்கள் சற்று அதிகமாகவே!
ஒரு உண்மையை கணவனும் மனைவியும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்; அது என்னவெனில் - குழந்தை வந்ததற்குப் பிறகு - உங்கள் நேரம் என்பது உங்களுக்குச் சொந்தமானதே இல்லை என்பது தான்! குழந்தையின் கால அட்டவணை (time schedule) தான் உங்களுடையதும்.
குழந்தைக்கு அது பிறந்து ஒரு வருடம் ஆகும் வரை மிக முக்கியமான கால கட்டம் ஆகும். பெற்றவர்களிடமிருந்து அந்தக் குழந்தைக்குத் தேவை - நம்பகத்தன்மை (trust)!  இந்தக் கைக்குழந்தைப் பருவத்தில் குழந்தை என்ன உணர்வுகளுக்கு ஆளாகின்றதோ, எப்படிப்பட்ட உறவுகளை அது சந்திக்கின்றதோ - அதன் பாதிப்பு அக்குழந்தையின்  வாழ்நாள் முழுவதிலும் பிரதிபலிக்கின்றது. பெற்றோர்களிடம் அக்குழந்தை எப்படி நடந்து கொள்கிறதோ - முழுக்க முழுக்க அப்படியே தான் - அது மற்றவர்களிடமும் நடந்து கொள்ளும் எதிர்காலத்தில்!
இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத கணவன் மனைவியரே  ஒருவருக்கொருவர் பழியைத் தன் துணையின் மீதே போட்டு விடுகிறார்கள். குழந்தை வளர்ப்பில் ஒரு அலட்சியம் ஏற்படுகிறது. பெற்றவர்களுக்கு மனச்சோர்வு ஏற்பட்டால் அது குழந்தையை பாதிக்கிறது! பெற்றவர்கள் குழந்தைக்குத் தர வேண்டிய நேரத்தை சரியாக ஒதுக்குவதில்லை! குழந்தையின் மன வளர்ச்சி கேள்விக் குறியாகிறது.
தாயிடம் மகிழ்ச்சி இல்லை என்றாலோ - குழந்தை ஒதுங்கிக் கொள்வதில்லை; ஆனால் தந்தை மகிழ்ச்சியாக இல்லை என்றால் - குழந்தை தந்தையிடமிருந்து ஒரேயடியாக விலகிக் கொண்டு விடுகிறது!
ஒரு சில விவேகமான தந்தையர் மட்டுமே - தங்கள் இல்லறத்தின் இந்த நுணுக்கமான சவாலை மிக நன்றாகக் கையாள்கின்றனர்.
இளந்தாய் புரிந்து கொள்ள வேண்டியது - "நடுநிலைமை!" அவர் தனது குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் அதே வேளையிலேயே - தன் துணையையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அது.
இங்கே நாம் தந்தைமார்களுக்கு ஒன்று சொல்ல வேண்டியுள்ளது. அது - குழந்தை வளர்ப்பு என்பது - முழுக்க முழுக்க தாயின் பொறுப்பே என்று தனது பொறுப்பைத் தட்டிக் கழித்து விடுகின்றார்கள் பல தந்தையர்கள். இது சுன்னத்துக்கு மாற்றமானது!
குழந்தை வளர்ப்பில் தந்தைக்கும் மிகுந்த பொறுப்பு உண்டு என்பதைக் குறிக்கும் நபிமொழிகளை நாம் முன்பே பதிவு செய்துள்ளோம்.
இதில் ரகசியம் ஒன்று உண்டு: கணவன் குழந்தையைக் கவனித்துக் கொள்வதனால் ஏற்படும் நன்மை என்ன? தாய்க்குக் கொஞ்சம் அவகாசம் கிடைக்கிறது; தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்கிறார் (she relaxes!) அந்த சமயங்களில். அந்த ஆசுவாசம் - அந்தத் தாயை சிறந்ததொரு தாயாகவும் ஆக்குகிறது; சிறந்ததொரு மனைவியாகவும் ஆக்கி விடுகிறது.
அதாவது நீங்கள் உங்கள் குழந்தையைக் கவனித்துக் கொள்கிறீர்கள்; உங்கள் மனைவி குழந்தையையும் உங்களையும் சேர்த்தே கவனித்துக் கொள்கிறார்!!
ஆனால் பல தந்தையர்கள் செய்கின்ற மிகப்பெரிய தவறே - அவர்கள் குழந்தை வளர்ப்பிலிருந்து முற்றிலும் விலகிக் கொண்டு விடுவது தான்! அதாவது ஓடி ஒளிந்து கொள்கிறார்கள் பல இளம் தந்தையர்கள்!!
அதனை விடுத்து ஒரு கணவன்: குழந்தை வந்த பின் - என் மனைவியுடனான உறவை இன்னும் ஆழமாக ஆக்கிக் கொள்வது எப்படி என்று சிந்தித்திட வேண்டும். அதற்கு குழந்தை வளர்ப்பில் தனது பங்களிப்பை அளித்திடுவது ஒன்றே சரியான வழியாகும்!
குழந்தை வளர்ப்பிற்காக நான் எதனையும் அர்ப்பணிப்பேன் என்று சொல்லும் தந்தையரே - பொறுப்பு மிக்க தந்தையர் ஆவர்! அவர்கள் சோகத்தில் சிக்கிக் கொள்வதில்லை! மனைவியுடனான உறவில் சிக்கலை ஏற்படுத்திக் கொள்வதுமில்லை! குழந்தை வளர்ப்பில் எந்த ஒரு குறையையும் வைத்து விடுவதில்லை!
இளம் மனைவியருக்கும் சில ஆலோசனைகள்:
கணவருக்காக உங்களை அலங்கரித்துக் கொள்வதில் அலட்சியம் வேண்டாம். குழந்தை வளர்ப்பின் போது சில சங்கடங்கள் இருந்தாலும் - அலங்கரித்துக் கொள்ளத் தவறி விட வேண்டாம். உடல் தூய்மை மிக முக்கியம். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி செய்து - அழகைத் தக்க வைத்துக்கொள்ளுங்கள்;
அவர் உங்களிடமிருந்து விலகிச் செல்வது உங்களை எப்படி வாட்டுகிறது என்பதை அவருக்கு உரிய முறையில் புரிய வைக்க வேண்டும். (register your feelings); ஆனால் பெரும்பாலான கணவன்மார்கள் மனைவியின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில்லை! பொறுமை காட்டுங்கள்; அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
வாழ்த்துக்கள் - குழந்தை வந்த பின் சூழ்நிலை அறிந்து செயல்படும் இளம் பெற்றோர்கள் அனைவருக்கும்!
*** ***
Part 3
நமது குடும்பங்களில் மகிழ்ச்சி தொலைந்து போனது ஏன்?
இந்தப் பகுதியில் –நாம் நமது இன்றைய தலைமுறை மக்களின் இல்லற வாழ்வின் யதார்த்த நிலையை – இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சற்றே அலச இருக்கின்றோம்.
இல்லறம் என்பது என்ன?
மகிழ்ச்சி, அன்பு, அரவணைப்பு, காதல், பரிவு, பாசம், நெருக்கம், தாம்பத்யம்….. இவற்றோடு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, விட்டுக் கொடுப்பது, மன்னிப்பது, அர்ப்பணிப்பது……இவைகளால் குடும்பத்தில் குதூகலம்,   கொண்டாட்டம், சந்தோஷம், நிம்மதி…இதுவே இனிக்கும் இல்லற வாழ்க்கை!
பொதுவாகவே இஸ்லாம் – இலகுவானது; மகிழ்ச்சிக்குரியது; அமைதி தருவது; மன நிம்மதி தருவது; நற்பாக்கியங்களைக் கொண்டு வருவது. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1 மகிழ்ச்சி:
இஸ்லாமிய இல்லறம் என்பது இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் அமைந்தது. வழிகாட்டும் திருமறை குர்ஆனை நமக்கென்று அனுப்பி வைக்கப்பட்டதை நினைத்து "அவர்கள் மகிழ்ச்சியடையட்டும்!" என்கிறான் வல்லோன் அல்லாஹு தஆலா!
"மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது; ) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.
“அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) - இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும் (rejoice!);  அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது” என்று (நபியே!) நீர் கூறும். (10: 57-58)
மகிழ்ச்சி அடையுங்கள் என்றால் என்ன பொருள்? மார்க்கத்தைப் பின்பற்றி மகிழ்ச்சியாக வாழுங்கள் என்பது தானே? மார்க்கத்தில் பாதி என்பது நல்லதொரு பெண்ணைத் திருமணம் முடித்து வாழ்வது தானே?
“யாருக்கு அல்லாஹ் நல்ல மனைவியைக் கொடுக்கின்றானோ அவனது மார்க்கத்தின் பாதி நிறைவுபெற அல்லாஹ் உதவி விட்டான் அடுத்த பாதியில் அல்லாஹ்வை அவன் பயந்து நடந்து கொள்ளட்டும்.” (தபரானி, பைஹகி, ஹாகிம்)
ஆனால் நமது குடும்பங்களில் மகிழ்ச்சியைக் காண முடியவில்லையே? ஏன்?
2 அமைதி:
இஸ்லாம் என்றாலே அமைதி தரும் மார்க்கம் என்று தான் பொருள்!
மனிதர்களின் வாழ்வில் அமைதியையும், நிம்மதியையும், சாந்தியையும், சமாதானத்தையும் - கொண்டு வரவே - அல்லாஹு தஆலா தனது பேரொளி மிக்க திருமறையை நமக்கென இறக்கியருளினான்.
"அல்லாஹ்விடமிருந்து - பேரொளி மிக்க, சத்தியத்தைத் தெளிவாக எடுத்துரைக்கின்ற, திருமறை உங்களிடம் வந்துள்ளது. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை விரும்புவோருக்கு அல்லாஹ் அதன்மூலம் அமைதிக்கான வழியைக் காண்பிக்கின்றான்; மேலும் அவன் தன் கட்டளைகளைக் கொண்டு இருள்களிலிருந்து அவர்களை வெளியாக்கி ஒளியின் பக்கம் கொண்டு வருகின்றான்; இன்னும் அவர்களை நேர்வழியின் பக்கம் வழிகாட்டவும் செய்கின்றான்." (5:15-16)
மீண்டும் நாம் கேட்கும் கேள்வி என்னவெனில் - நம் குடும்பங்களில் எங்கே அமைதி? எங்கே நிம்மதி? எங்கே சாந்தியும் சமாதானமும்?
3 நற்பாக்கியங்கள்:
ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்தால் நற்பாக்கியங்கள் உண்டு என்கிறான் வல்லோன் அல்லாஹ்!
எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு (எல்லா) நற்பாக்கியங்களும் உண்டு; இன்னும் அழகிய இருப்பிடமும் உண்டு. (13:29)
நமது குடும்பங்களிலிருந்து எங்கே போனது (தூபா எனும்) நற்பாக்கியங்கள் அனைத்தும்?
**
4 இலகுவான வாழ்க்கை:
இஸ்லாம் மார்க்கம் பின்பற்றுவதற்கு எளிதானது! இலகுவானது!
இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; (22:78)
இலகுவான (யுஸ்ர்) பாதையை நாம் உமக்கு எளிதாக்கித் தருவோம்! (87:8)
நம் இல்லற வாழ்க்கை இலகுவாகப் போய்க் கொண்டிருக்கின்றதா? அல்லது சிக்கல் நிறைந்து காணப்படுகின்றதா?
5 மன நிம்மதி:
அல்லாஹு தஆலா நம்மை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்ததன் நோக்கமே மன நிம்மதி, காதல் மற்றும் கருணைக்காகத் தான்!
இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.(குர்ஆன் 30: 21)
எங்கே போனது சகீனா எனும் மன நிம்மதியும் ஆறுதலும்? எங்கே போனது மவத்தத் எனும் காதலும் ரஹ்மத் எனும் கருணையும்?
6 கண் குளிர்ச்சி:
மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் துணைவர்களிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.” (25:74)
எங்கே சொல்லுங்கள்? கணவன் மூலம் மனைவிக்கும், மனைவி மூலம் கணவனுக்கும் கண் குளிர்ச்சி என்பது – நம் குடும்பங்களில் இருக்கிறதா என்ன?
**
இவ்வாறு - எல்லாவற்றையும் நாம் சேர்த்துப்பார்த்தால் - நமது இல்லற வாழ்வில் மகிழ்ச்சி இல்லை! அமைதி இல்லை! கண் குளிர்ச்சி இல்லை! ஆறுதல் இல்லை! அன்பு இல்லை! கருணை இல்லை! நற்பாக்கியங்கள் இல்லை!
ஆமாம்! இன்றைய நமது முஸ்லிம்களின் இல்லற வாழ்க்கை முறையில் பல குளறுபடிகள் காணப்படுகின்றன.  ஒரு நெருக்கடியின் நிமித்தமாகவே கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்கிறார்கள்! அவர்களுக்குள் அன்பு, காதல், நேசம், பரிவு, இரக்கம், கருணை, அனுசரித்துப் போகும் பண்பு (adjustment), மன்னிக்கும் பண்பு - இவைகளெல்லாம் அரிதாகி விட்டன!
உள்ளத்தின் ஆழத்தில் ஒரு கேள்வி ஒலித்துக் கொண்டே இருக்கின்றது: இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா?
ஆதங்கம் ஒன்று இருக்கின்றது. மீண்டும் நல் இல்லங்களில் மகிழ்ச்சியை, அமைதியை, கண் குளிர்ச்சியை, ஆறுதலை, அன்பை, கருணையை நம்மால் கொண்டு வர முடியாதா?
இன்ஷா அல்லாஹ் – நிச்சயம் முடியும்! மீண்டும் நமது குடும்பங்களில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் கொண்டு வருவதற்கான  நல்லதொரு தீர்வை எட்டுவதே இப்பகுதியின் நோக்கம்.
நமது முஸ்லிம்களின் இல்லற வாழ்க்கை முறையில் காணப்படும் குளறுபடிகளுக்கு அடிப்படையான மூன்று காரணங்களை நாம் சொல்லலாம்.
1 இல்லறம் குறித்த அறிவு பெறாமை
2 பொருத்தமில்லாத் திருமணங்கள்
3 தேவையற்ற பெற்றோர் தலையீடு
நாம் இந்த மூன்று காரணங்களையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கின்றோம் இங்கே. தீர்வுகளையும் முன் வைப்போம் –இன்ஷா அல்லாஹ்.
** *
பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாமா?
இஸ்லாமிய அறிஞர் ஒருவரிடம் பின் வருமாறு ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது:
கணவனின் பெற்றோர்களும், மனைவியின் பெற்றோர்களும் எந்த அளவுக்கு தங்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாம்?
ஒளிவு மறைவின்றி அந்த அறிஞரிடமிருந்து வந்த பதில் இதோ:
தலையிடுதல் கூடவே கூடாது! தங்களுடைய பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடுவதற்கு இரு பெற்றோர்களுக்கும் எந்த ஒரு உரிமையும் கிடையாது! ஒரு திருமணத்தை நாசம் செய்வதற்கு இதனை விட வேறொன்றும் கிடையாது!
பெற்றோர்கள் தங்கள் திருமண வாழ்வில் (மட்டும்) கவனம் செலுத்தட்டும்.
பெற்றோர்களே! உங்களுடைய "குழந்தைகளுக்கு" நீங்கள் திருமணம் செய்து வைத்து விட்டால் - அவர்கள் இன்னும் "சின்னஞ்சிறுசுகள்" அல்ல! அவர்களை அவர்கள் வழிக்கு விட்டு விடுங்கள்! அவர்களுடைய "திருமண மாளிகையை" அவர்களே கட்டி எழுப்பிக் கொள்ளட்டும்! அவர்களும் வயதுக்கு வந்து விட்ட பெரியவர்கள் (adults) தான்! அதனால் தானே நீங்கள் அவர்களுக்குத் திருமணமே செய்து வைத்தீர்கள்?
இங்கே நம் சமூகத்தில் உள்ள பெற்றோர்களுக்கு (குறிப்பாக அம்மாக்களுக்கு) ஒரு பெரிய "சங்கடம்" என்னவென்றால் - தங்களின் மகனுக்குத் திருமணம் ஆகி ஒரு மருமகள் வீட்டுக்கு வந்து விட்டால் - தான் "அவசியமற்ற ஒரு பிறவியாக" ஆகி விட்டது போல் அஞ்சுகிறார்கள்! இந்த அச்சத்தினால் - "தன் மகனிடமிருந்து தன்னைப் பிரிக்க வந்திட்ட எதிரியாக" தனது மருமகளைப் பார்க்கிறார்கள்.
மகனை உங்கள் பக்கம் வைத்துக் கொள்வதற்காக - நீங்கள் உங்கள் மருமகளையே ஒரு எதிரியாக்கி அதில் வெற்றி பெற்றாலும் நீங்கள் தோற்று விட்டீர்கள்! அதில் நீங்கள் தோற்று விட்டாலும் உங்களுக்குத் தோல்வி தான்! என்னவாயினும் தோல்வி உங்களுக்குத்தான்!
எனவே "அவர்களை அவர்கள் வழியே விட்டு விடுங்கள்! அவர்கள் திருமண வாழ்வில் குறுக்கிடாதீர்கள்!
இளம் தம்பதியர்களுக்கு நாம் சொல்வது:
உங்கள் பெற்றோர்கள் உங்கள் திருமண வாழ்வில் தேவையின்றி குறுக்கிட்டால் அதனை விவேகமான முறையில் தவிர்த்து விடுங்கள்! உங்கள் திருமண வாழ்வின் சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கெல்லாம், உங்கள் பெற்றோர்களிடம் ஓடிக் கொண்டிருக்காதீர்கள்!
உங்களுக்குத் திருமணம் செய்வதற்குத் தகுதி வந்து விட்டதென்றால், உங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் உங்களுக்குத் தகுதி இருக்கின்றது! உங்கள் பிரச்னைகளை உங்களால் தீர்த்துக் கொள்ள முடியாது என்றால், பின்னர் ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள்? (அதாவது நீங்கள் இன்னும் திருமணத்துக்குத் தயாராகவில்லை என்பதே அதன் பொருள்).
நாம் மேலே எழுதியிருப்பவை அனைத்தும் அந்த இஸ்லாமிய அறிஞரின் கருத்துக்களே!
(இந்நூல் ஆசிரியரான எமக்கு இதில் முழு உடன்பாடு என்பதாலேயே தமிழில் மொழி பெயர்த்து இங்கே தந்திருக்கின்றோம்).
இந்தக் கருத்துக்களை என் உறவினர் வீட்டுப்பெண்மணி ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் கேட்டார்:
அப்படியானால் பிள்ளைகளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட்டு எங்களைச் செத்துப் போகச் சொல்கிறீர்களா?
காலா காலமாகப் பின்பற்றப்பட்டு வருகின்ற "கலாச்சார" வாழ்வு தரும் "சுகத்தை" அனுபவித்துக் கொண்டு அடுத்த தலைமுறையையும் அதன் அடிப்படையிலேயே வார்த்தெடுக்க விரும்பும் இத்தகைய பெற்றோர்கள் இஸ்லாம் காட்டித் தரும் வழிகாட்டுதல்களை முற்றிலும் புறக்கணித்து விடுகிறார்கள்!
புதிதாகத் திருமணம் முடித்த கணவன் மனைவியருக்கு இரு தரப்புப் பெற்றோர்களும் தாங்கள் பெற்ற அனுபவங்களிலிருந்து நேர்மையான நல்ல அறிவுரைகளை வழங்கி வழிகாட்டுதல் நல்லதே! நன்மையே!
ஆனால் .....
இங்கே பெரும்பாலான பெற்றோர்களின் நிலை வேறு விதமாகவே இருக்கின்றது! அளவுக்கு அதிகமான குறுக்கீடுகளையும், (interference), உள் நோக்கத்துடன் கொடுக்கப்படும் அறிவுறுத்தல்களையுமே இங்கே நாம் காண முடிகின்றது!
பெற்றோர்களின் இப்படிப்பட்ட தேவையற்ற குறுக்கீடுகள் - திருமண வாழ்வையே இறுக்கமானதாக (stressful) ஆக்கி விடுகின்றன! கணவன் மனைவி புரிந்துணர்வையே சிதைத்து விடுகின்றன!
இதனை எல்லோருக்கும் முன்னதாக கணவனும் மனைவி இருவருமே புரிந்து கொள்தல் அவசியம்.
கணவனும் மனைவியும் மிக அருகில் உள்ள நகரத்துக்குச் சென்று தாங்கள் புதிதாகக் குடியேற இருக்கும் வீட்டுக்கு ஜன்னல் திரைகளை வாங்கிடப் புறப்படுகின்றனர்!
"ஜன்னல் திரைகளை வாங்குவதற்கு ஆண்கள் போனால் போதாதா? நீ வேறு எதற்குப் போக வேண்டும்?"
துப்பட்டியைப் போட்டுக் கொண்டு புறப்பட்டு விட்ட மருமகள் - அப்படியே மனம் குன்றி அமர்ந்து விடுகிறார்!!
அருகில் உள்ள ஊரில் ஒரு விஷேசம்! அண்ணன், அண்ணன் மனைவி, தம்பி, தம்பி மனைவி, இரண்டு சகோதரிகள், குழந்தைகளுடன் காரில் புறப்பட இருக்கும் சமயம். திடீரென்று செல்போன் அழைப்பு அம்மாவிடமிருந்து.
"ஏன் இத்தனை பேர்? தம்பி மனைவி போக வேண்டாம்! மற்றவர்கள் போய் வந்தால் போதும்!"
அந்தத் தம்பி மனைவிக்கு எப்படி இருக்கும்? இத்தனைக்கும் இந்தத் "தம்பி" தான் காருக்கு வாடகை தருபவர்!
"இல்லையம்மா! நான் மனைவியை அழைத்துக் கொண்டுதான் போகிறேன்!" என்று அந்தத் தம்பி சொல்லலாம் அல்லவா?
ஏன் சொல்லவில்லை என்பதே நம் கேள்வி!
திருமணம் முடித்து பயணம் சென்று விட்டு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் பயணத்திலிருந்து வருகிறார் பெற்ற மகன்! இரண்டு மாத விடுமுறை; இரு வீட்டாருக்கும் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை! மகனை மாமியார் வீட்டுக்கு (அதாவது மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு) அனுப்பவில்லை தாய்!
மனைவி வீட்டார் தங்கள் மகளை அனுப்பி வைக்கிறார்கள்;
ஆனால் மகன் மருமகள் உறவுக்கு இடம் அளிக்க மறுத்து விட்டார் அந்தத் தாய்!
தாய் பேச்சைத் தட்டாத அருமை மகன் - இரண்டு மாதங்களையும் கூடத்திலேயே பாய் போட்டுப் படுத்து விட்டு பயணம் புறப்பட்டுப் போய் விடுகிறார்! என்ன செய்வது? பெற்ற தாயின் பேச்சை எப்படி மீறுவது?
கணவன் வெளி நாட்டில் வேலை பார்க்கிறார்; குடும்பத்துடன் தங்குவதற்கு வீடும் கம்பெனியில் தருகிறார்கள்; மனைவியுடன் சேர்ந்து வாழவும், நல்ல உணவுக்காகவும் மனைவியை அங்கு அழைத்துக் கொள்ள கணவன் விரும்பினால் அதில் தலையிட பெற்றோர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
இங்கேயும் பெற்ற தாய்மார்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றேன் என்று தாம் ஏதோ பெரிய தியாகம் செய்வதாக எண்ணிக் கொள்கின்றனர் ஆண்மகன்கள்!
மனைவியின் உரிமை? அது பற்றி யாருக்குக் கவலை?
தன் மகனுக்கு அழகான ஒரு பெண்ணைத் தேடுகிறார் ஒரு தாய்! உறவினர் ஒருவர் அந்தத் தாயிடம் கேட்ட கேள்வி: "நீ உனக்கு ஒரு மருமகளைப் பார்க்கிறாயா? உன் மகனுக்கு அழகு சுந்தரி ஒருவரைப் பார்க்கிறாயா?"
என்ன எச்சரிக்கை இது?
ஏன் இப்படி விளையாடுகிறார்கள் – பெற்றோர்களும் சகோதரிகளும்?
மகனின் இல்லற வாழ்வில் பெற்றோர் குறுக்கிடுவதன் பின்னணியை பிற்சேர்க்கையாக இணைத்துள்ளோம்.  படியுங்கள் பிற்சேர்க்கை 5.

Part 4:  
வாழ்க்கைத்துணையைத் தேர்வு செய்வது எப்படி?
ஒருவர் தனது வாழ்க்கைத்துணையைத் தேர்வு செய்திடும் போது கவனித்திட வேண்டிய மிக முக்கியமான இரண்டு விஷயங்கள்:
1. இறைவனுக்கும் அவருக்கும் உள்ள உறவு 2. அவருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள உறவு
1. இறைவனுக்கும் அவருக்கும் உள்ள உறவு:
“ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக மணம் முடிக்கப்படுகிறாள். அவளின் செலவத்திற்காக, அவளது குடும்ப கௌரவத்திற்காக, அவளது அழகிற்காக, அவளது மார்க்க விழுமியங்களுக்காக. நீர் மார்க்கமுடையவளைப் பற்றிக் கொள். உன் கரத்தை அழிவிலிருந்து பாது காத்துக்கொள்வாய்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள நபி மொழி அறிவுறுத்துவது போல  மார்க்கப்பற்றுள்ள ஒரு பெண்ணையே தேர்வு செய்யுங்கள். அது போல - மார்க்கப்பற்றுள்ள ஆண்மகனையே பெண்கள் தேர்வு செய்திடட்டும்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
A . ஐந்து வேளை தொழுபவரா அவர்? நோன்பு வைப்பவரா? தங்கு தடையின்றி அவருக்குக் குர்ஆன் ஓதத் தெரிகிறதா? இது பற்றிக் கேட்டு விடுங்கள் அவரையே!
B. தோற்றம்: ஹிஜாப் அணியும் பெண், தாடி வைத்திருக்கும் ஆண் (பெண்கள் இதனை வலியுறுத்தட்டும் - ஏன் ஒரு பெண்ணைப் போல் தோற்றமுடையவரை மணக்கிறீர்கள்?). இவை தவிர்த்த "ஸ்டைல்"களில் மயங்கி விட வேண்டாம்!
C. நற்குணங்கள்: உண்மையைப் பேசுவதற்கு தைரியம், கண்ணியம், தன்னம்பிக்கை, கம்பீரம் (ஆண்களிடத்தில்), நாணம் (பெண்களிடத்தில்), வெட்க உணர்ச்சி (இருவருக்கும்), பதற்றமடையாத நிதானம், அமைதியில் அழகு காணும் நேர்த்தி, நடுநிலையான பேச்சு.
ஆணோ அல்லது பெண்ணோ - அல்லாஹு தஆலா என்ன சொல்கிறான் என்பது பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை என்றால் - திருமணத்திற்குப் பின் - அவர்கள் - நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது பற்றிக் கவலைப் படுவார்கள் என்றா எண்ணுகிறீர்கள்?
திருமணம் ஆன புதிதில் இருக்கும் அழகு, ஈர்ப்பு, கவர்ச்சி - இவைகளெல்லாம் சில மாதங்களுக்குத் தான்! அதன் பிறகு, உங்கள் வாழ்க்கைக்கு அழகு கூட்டிட உதவிக்கு வருவது தக்வா எனும் இறையச்சமே!
எனவே தான் சொல்கிறோம்! துவக்கத்திலேயே இது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்! மார்க்கத்தைப் பற்றிக் கவலைப்படாத வாழ்க்கைத் துணை வேண்டவே வேண்டாம்! அவர்கள் எவ்வளவு கவர்ச்சியாக இருந்தாலும் சரியே!
2. அவருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள உறவு
மார்க்கப் பற்று என்பதனைத் தொடர்ந்து - நீங்கள் அடுத்து கவனித்திட வேண்டிய விஷயம் - அவர் மற்றவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறார் - என்பதனைத் தான்.
ஒரு ஆணோ அல்லது பெண்ணோ - ஒருவரை "நல்லவர் இவர்" என்று அறிவது எப்படி? அவருடைய தொழுகை, நோன்பு, குர்ஆன் ஓதுதல், அவருடைய தோற்றம் - இவைகளை வைத்தா என்றால் நிச்சயம் இல்லை! பின் எதனை வைத்து? அவர் பிறருடன் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை வைத்துத் தான்!
உமர் (ரலி) அவர்கள் கேட்கும் நிபந்தனைகள்:
"நீ அவர் பக்கத்து வீட்டுக்காரரா?" அல்லது " நீ அவருடன் பயணம் செய்திருக்கிறீர்களா?" அல்லது "நீ அவருடன் கொடுக்கல் வாங்கல் செய்ததுண்டா?"
இம்மூன்று கேள்விகளிலும் காணப்படும் பொதுவான ஒரே அம்சம் - "நீ மற்றவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறாய்?" - என்பது தான்!
நீங்கள் தேர்வு செய்திடும் வாழ்க்கைத் துணைவர் / துணைவி - அவர்களுடைய பணியாளர்களுடன், பெற்றோர்களுடன், உடன் பிறந்தவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனியுங்கள்.
மற்றவர்களுடன் பழகும் போது, மென்மையாக நடக்கிறார்களா (குறிப்பாக அவர்களுக்குக் கீழே பணியாற்றுகின்ற வேலையாட்கள், கார் டிரைவர்) என்பதை நன்கு கவனியுங்கள்;
அவர்களுக்கு இரக்க உணர்வு இருக்கிறதா? மற்றவர் நிலை குறித்து (empathy) அக்கரைப் படுகிறாரா? கண்ணியமாக மற்றவர்களிடம் பேசுகின்றாரா? நன்றி சொல்கின்றாரா? சிறிய தவறுகள் ஏதாவது நிகழ்ந்தால் "மன்னிக்கவும்" என்று சொல்கிறாரா? புன்முறுவல் முகம் காட்டுகின்றாரா? சிடுசிடுவென்று பேசுகின்றாரா? நகைச்சுவை உணர்வு இருக்கின்றதா?- என்பதையெல்லாம் அவசியம் கவனியுங்கள்!
பிறருடன் பழகுதல் எனும் விஷயம் மிக முக்கியம். ஒருவருடைய வணக்க வழிபாடுகள் மற்றும் தோற்றம் – இவைகளை மட்டுமே கவனித்து ஒருவரைத் தேர்வு செய்து விட வேண்டாம்.  ஏனெனில் - வேடதாரிகள் அங்கிங்கெனாத படி எங்கும் நிறைந்து காணப்படுகின்றார்கள்!
உங்கள் எதிர்காலத் துணைவர் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பார்ப்பது மிகவும் அவசியம், ஏனெனில் - பிறரிடம் அவர் எவ்வாறு நடந்து கொள்கிறாரோ exactly அவ்வாறே தான் அவர் உங்களிடமும் நடக்க இருக்கின்றார் என்பதனை மறந்து விட வேண்டாம்!
என் மகளை எத்தகைய ஆணுக்கு மணம் முடிக்கட்டும் என இமாம் ஹசன் பசரி (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட து .
அதற்கு இமாம் அவர்கள் சொன்னார்கள்: "அல்லாஹ்வை அஞ்சுபவனுக்குக் மணம் முடியுங்கள். ஏனென்றால், அவளை நேசித்தால் அவளை கண்ணியப் படுத்துவான்; அவளின் மீது கோபம் கொண்டால் அவளுக்கு அநீதிஇழைக்க மாட்டான்"

கண்ணியம் காதலாய் மலரட்டும்!
பின் வரும் மூன்று திருமணத் தேர்வுகளை சற்று ஆழமாக சிந்தித்துப் பாருஙகள்:
1. நபியவர்கள் அன்னை கதீஜாவை எவ்வாறு மணம் முடித்தார்கள்?
அன்னை கதீஜா அவர்கள் நபியவர்களை ஒரு மேலாளராகத் தான் சிரியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இன்னொரு பணியாளரும் நபியவர்கள் கூடவே சிரியாவுக்குச் செல்கிறார். மக்காவுக்குத் திரும்பியதும் – அந்தப் பணியாளர் நபியவர்களின் குண நலன்களை அன்னை கதீஜாவுக்கு எடுத்து விளக்குகின்றார். அத்துடன் மக்காவிலே நபியவர்களுக்கு அல் அமீன், அஸ் ஸாதிக் என்ற நற்பெயர்களெல்லாம் ஏற்கனவே உண்டு. அண்ணலார் வணிகப் பயணம் முடிந்து திரும்பியதும், நபியவர்களின் குணநலன் பற்றி அந்தப் பணியாளர் மூலம் அறிந்ததும் மேலும் ஒரு மதிப்பு வருகிறது.  தாமும் நபியவர்களின் நடைமுறைகளை உற்று நோக்குகிறார்கள். கண்ணியம் அதிகரிக்கிறது. அந்தக் கண்ணியமே காதலாய் மாறிட நாம் ஏன் இவர்களைத் திருமணம் முடித்திடக் கூடாது என்று எண்ணுகிறார்கள்!  தூது அனுப்புகிறார்கள். எல்லாம் நல்லபடியாய் முடிகிறது!
2. நபியவர்கள் தன் அன்பு மகள் பாத்திமாவுக்கு அலீ (ரளி ) அவர்களை மணம் முடித்துக் கொடுத்தது எப்படி?
அண்ணல் நபியவர்கள் தன் அன்பு மகளுக்கு ஹள்ரத் அலீ அவர்களைத் திருமணம் முடித்திட விரும்புகிறார்கள். தன் விருப்பத்தை தன் மகளிடம் தெரிவிக்கிறார்கள். அன்னை பாத்திமா (ரளி) அவர்களின் கண்களில் கண்ணீர். அது அவர்களின் தயக்கமா? அல்லது அலீ அவர்கள் குறித்து அச்சமா? என்றெல்லாம் தெரியவில்லை. அப்போது நபியவர்கள் மகள் பாத்திமாவிடம் அலீ அவர்களின் குண நலன் பற்றி எடுத்துச் சொல்கிறார்கள்:
அலீ அவர்கள் அறிவில் சிறந்தவர் என்றும், பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை நிறைந்தவர் என்றும், வீரம் மிக்கவர் என்றும் எடுத்துரைக்கிறார்கள்; பாத்திமா (ரளி) அவர்கள் சம்மதித்திட திருமணம் நடந்தேறுகிறது!
3. உமர் (ரளி) அவர்கள் தன் மகன்களில் ஒருவருக்குத்  திருமணம் செய்து வைத்தது எப்படி?
ஒரு தாய் மற்றும் அவருடைய மகள். பாலில் தண்ணீர் கலப்பதைக் கூட அனுமதித்திடாத இறையச்சம் அந்த மகளுக்கு. உமர் (ரளி) அவர்கள் இதனை நேரிடையாகவே அறிந்து கொண்ட பின் தன் மகன்களை அழைத்து அந்தப் பெண்மணியின் இறை உணர்வை எடுத்துச் சொல்லி “அறிமுகம்” செய்து வைக்கிறார்கள். ஒரு மகன் முன் வர திருமணம் நடந்தேறுகிறது!
இம்மூன்று திருமணங்களிலும் – தான் யாரைத் திருமணம் முடிக்க விரும்புகிறாரோ அவருடைய குணநலன்கள் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன என்பதை உன்னிப்பாக கவனியுங்கள்:
படித்துக் கொள்ள வேண்டிய படிப்பினை:
திருமணத்துக்கு முன்னரேயே – பெண் அல்லது மாப்பிள்ளை – இவர்களின் குண நலன்கள்  எப்படிப் பட்டது என்பது பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். தான் மணக்க இருக்கும் துணைவர் எப்படிப்பட்ட குணமுடையவர் என்பது இருவருக்குமே தெரிதல் நலம். அதுவே கண்ணியமாய் மாறும். காதலாய் மாறும். இதுவே திருமணத்துக்கு இட்டுச் செல்லும். இதுவே வெற்றித் திருமணத்தின் இலக்கணமும் ஆகும்!

வாழ்க்கைத்துணையாக வர இருப்பவருடன் பேசிப் பார்க்கிறீர்களா?
பெற்றோர் முன்னிலையில் உங்கள் வாழ்க்கைத் துணையாக வர இருப்பவருடன் பேசுதல் அவசியம். அப்படி ஒரு வாய்ப்பை வலியுறுத்தி ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
பின்பு அவர்களுடன் பேசுங்கள்; அவர்கள் பேசுவதைக் கேளுங்கள். நீங்கள் பேசுவதை விட அவரைப் பேச விட்டுக் கேளுங்கள். இந்தப் பேச்சை வைத்துத் தான் "இவர் நமக்குப் பொருத்தமானவர் தானா?" என்று பார்த்திட வேண்டியுள்ளது.
எந்த விஷயங்களை எல்லாம் அவர் அறிந்து வைத்திருக்கிறார்; அவருடைய கண்ணோட்டங்கள் எப்படி இருக்கின்றன;அவருடைய சிந்திக்கும் பாங்கு; சூழ்நிலைகளை சரியாக எடைபோடும் ஆற்றல்... இவைகளை கவனியுங்கள். அவர் சொந்தமாக சிந்திக்கக்கூடியவரா அல்லது பிறரைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுபவரா என்பதையும் பாருங்கள்!
என்ன அவர் படிக்கிறார் என்று கேளுங்கள்; எந்த நூலாசிரியரைப் பிடிக்கும் என்று கேளுங்கள்; பிரச்னைகளைப் பற்றி அதிகம் பேசுபவரா அல்லது தீர்வுகளை முன் வைத்துப் பேசுபவரா என்று கவனியுங்கள்!
எல்லாவற்றிலும் குறை கண்டுபிடிப்பவரா என்று பாருங்கள்; மன்னிக்கும் மனப்பான்மை இருக்கிறதா என்று பாருங்கள்!
அவருடைய மார்க்கப் பற்று எப்படிப்பட்டது என்பதனையும் பாருங்கள். பொருளாசை மிக்கவரா அல்லது மறுமைச் சிந்தனை மிக்கவரா என்றும் எடை போடுங்கள்.
மற்றவர்களை அதிகமாக விமர்சிக்கின்றாரா அல்லது தன்னை திருத்திக் கொள்வது பற்றிப் பேசுகின்றாரா என்றும் பாருங்கள்!
குறிப்பாக அவர் பேசும்போது, பிறர் நலன்  பேணுபவரா அல்லது சுயநலம் தென்படுகிறதா என்பதை அவசியம் கண்டுணருங்கள். மேலும் பிறர் பேசும்போது பொறுமையாக காது கொடுத்துக் கேட்கக் கூடியவரா அல்லது அடிக்கடி குறுக்கிட்டு மற்றவர் பேசுவதை அலட்சியம் செய்பவரா என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள்
“எங்கள் பகுதியில் உள்ள “கலாச்சார” சூழலில் இதற்கு வாய்ப்பு கிடைப்பது மிகக் கடினம்;  இது போன்ற சூழலில் – வாழ்க்கைத் துணையைத் தேடும் ஒருவர் – புறத் தோற்றத்தை மட்டுமே வைத்துத் தான் ஒருவரை கணித்திட வேண்டியிருக்கின்றது?” – என்று திருமண ஆலோசகர் ஒருவரிடம் ஒரு சகோதரி கேட்டார்; அதற்கு அந்த ஆலோசகரும் மார்க்க அறிஞருமான அவர் சொன்னது இது தான்:
“புறத் தோற்றத்தை மட்டுமே வைத்து ஒருவரை கணித்து திருமணம் முடித்தால் – அது ஒரு சூதாட்டத்தைப் போலத்தான்!” என்றார். Yes, it is like gambling!  
நிலைமை மாறித்தான் ஆக வேண்டும்! முயற்சி செய்யுங்கள்!
வல்லோன் உதவி நிச்சயம் உங்களுக்கு உண்டு!
சாதகப் பொருத்தம் பார்ப்பது அவசியம்!
திருமணத்துக்கு முன்பு – இல்லற வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்திடும் முன்பு – ஆணுக்கும், பெண்ணுக்கும் பல பொருத்தங்கள் – பார்த்துத் தான் திருமணம் முடிவு செய்திட வேண்டும்.
அவை என்னென்ன?
மார்க்கப் பொருத்தம் (Religious Compatibility): மார்க்கத்தைப் பின் பற்றும் மணமகன், மார்க்கத்தைப் பின் பற்றாத மண மகள் – அல்லது மார்க்கத்தைப் பின் பற்றும் மணமகள், மார்க்கத்தைப் பின் பற்றாத மண மகன் – இவை சாதகமான பொருத்தம் அன்று. பாதகமே விளையும்.
எல்லாம் திருமணத்திற்குப் பின் “அவரை” நீ திருத்தி விடலாம்” என்பார்கள். ஆனால் அதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது
கல்விப் பொருத்தம் (Educational Compatibility): படித்த மணமகன், படிக்காத மண மகள், அல்லது படித்த பெண் படிக்காத பையன் – இதுவும் பொருந்தாத ஜோடியே!
“என்ன படித்த திமிரில் பேசுகிறாயா?” -என்று கணவன் பேசும் நிலை ஏற்படலாம்.
அல்லது அறிவு பூர்வமான கணவன் ஒன்றைச் சொல்லும் போது, படிக்காத மனைவி அதனை ஏற்காமல், ஊரில் உள்ளவர்கள் எல்லாம் இப்படியா இருக்கிறார்கள் என்று வாதாடும் நிலை ஏற்படலாம்.
பொருளாதாரப் பொருத்தம் (Economic Compatibility): பணக்காரப் பையன், ஏழைக் குடும்பத்துப் பெண் அல்லது பணக்கார வீட்டுப் பெண், ஏழை வீட்டு மாப்பிள்ளை – இதுவும் பொருந்தாது.
“என்னை மதிக்கவே இல்லை” எனும் பிரச்னை பூதாகாரமாக உருவெடுக்கும்.
கலாச்சாரப் பொருத்தம் (Cultural Compatibility): நமது சமூகம் உலகளாவிய சமூகம் எனினும் பல் வேறு கலாச்சார சூழலில் நமது வாழ்க்கை பின்னப் பட்டிருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. இப்படிப்பட்ட நிலையில், மாறு பட்ட இரு கலாச்சாரங்களில் வளர்க்கப் பட்டவர்கள் திருமணம் செய்திடும் போது – பொருத்தமற்ற நிலையையே அது உருவாக்கிடும்.
குடும்பப் பொருத்தம் (Family Compatibility): மணமக்கள் எப்படிப் பட்ட குடும்ப சூழலில் வளர்க்கப் பட்டவர்கள் என்பதும் கவனிக்கப் பட வேண்டியதே.
ஆளுமைப் பொருத்தம் (Temperamental Compatibility): மணமக்கள் எப்படிப் பட்ட ஆளுமை கொண்டவர்கள் என்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட வேண்டும். வேறு பட்ட ஆளுமை கொண்ட மண மக்கள் இல்லற வாழ்வில் நுழையும் போது அதுவும் பல சிக்கல்களைக் கொண்டு வரலாம்.
இவையே சாதகமான விளைவுகளை ஏற்படுத்த வல்ல நல்ல பொருத்தங்கள்.
திருமணத்துக்கு பெண் அல்லது மாப்பிள்ளை தேடுபவர்கள் இவைகளைக் கவனத்தில் கொண்டால் நல்லது!
பொருத்தம் பார்ப்பது ஒரு சுன்னத்!
பாத்திமா பின்த் கைஸ் (ரளி) அவர்களை அவர்களது கணவர் விவாகரத்துச் செய்து விட்டார். இத்தா முடிந்ததும் இரண்டு நபித் தோழர்கள் அவரை மணம் முடிக்க விரும்பினார்கள். இந்நிகழ்ச்சியை அவர் பின் வருமாறு விவரிக்கிறார்.
நான் "இத்தா'வை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), "முஆவியா பின் அபீசுஃப்யான் (ரளி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரளி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்'' என்று சொன்னேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்க மாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்து விடுபவர்). முஆவியா ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்து கொள்,'' என்று கூறினார்கள்.
நான் உசாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீ உசாமாவை மணந்து கொள்'' என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்து கொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன். அறிவிப்பவர்: ஃபாத்திமா பின்த் கைஸ் (ரளி); (நூல்: முஸ்லிம்)
பெண் கேட்ட இரண்டு நபித்தோழர்களும் - பாத்திமா பின்த் கைஸ் அவர்களுக்குப் பொருத்தமானவர்கள் அல்ல என்பதனாலும், அவருக்கு உசாமா பின் ஸைத் அவர்களே மிகவும் பொருத்தமானவர் என்பதால் தான் அவரைத் திருமணம் முடித்துக் கொள்ளுமாறு நபியவர்கள் பரிந்துரைத்தார்கள் என்றும் நாம் விளங்கிக் கொண்டால் - பொருத்தம் பார்ப்பதும் சுன்னத் என்றாகிறது அல்லவா?
அல்லாஹ்வே மிக அறிந்தவன்!
பொருத்தம் பார்த்து மணந்து கொண்டால் - இங்கேயும் சொர்க்கம் தான்!
நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி, அப்பெண்களைக் கன்னிகளாகவும், பாசமுடையோராகவும், சம வயதினராகவும், வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்). (குர் ஆன் 56 : 35-38)
சூரத்துல் வாகியாவின் 37 - ஆம் வசனத்தில் வரும் ஒரு சொல் தான்: "அத்ராப்"
அத்ராப் என்பதற்கு - "சம வயதினர்" என்று பொருள். அதே வேளையில் மேலதிக விளக்கம் ஒன்றைத் தருகிறார்கள் திருமறை விரிவுரையாளர் முஹம்மத் அஸத் அவர்கள்:
Muhammad Asad: “As regards the term atrab, it primarily denotes "[persons] of equal age“; however, as pointed out by all philological authorities, this term is also used in the sense of "[persons] equal in quality that is, "well-matched":
முஹம்மத் அஸத் அவர்கள்: "அத்ராப் என்ற சொல் முதன்மையாக சம வயதுடையவர்களையே குறிக்கும் சொல்லாகும்; எனினும் எல்லா மொழியியல் வல்லுனர்களும் சுட்டிக் காட்டுவது போல் - இந்தச் சொல் ஒரே விதமான பண்புடையவர்களைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்படும். அதாவது - மிகச் சிறப்பான பொருத்தம் உடையவர்களையும் (well matched) இச்சொல் குறிக்கும் என்பதாம்."
அதாவது நாளை மறுமையில் - இறைவனின் நாட்டப்படி நீங்கள் வலப்புறத்தார்களில் ஒருவராக இருந்தால் - உங்களுக்கு மட்டுமே பொருத்தமான, உங்கள் மீது பாசம் உள்ள, புத்தம் புதிய ஒரு கன்னிப் பெண்ணை வல்லோன் உங்களுக்கென்றே படைத்துத் தருகிறான் என்பது தான் இதன் விளக்கம்!
மகிழ்ச்சி தானே!
இதிலிருந்து நாம் இன்னொரு கருத்தையும் எடுக்கலாம்:
அதாவது - உங்களுக்கு முற்றிலும் பொருத்தமான ஒரு பெண்ணை (made for each other) நீங்கள் திருமணம் முடித்தீர்கள் என்றால் - இவ்வுலக வாழ்க்கையே உங்களுக்குச் சொர்க்கம் தான்!! சரிதானே?
Couples who are compatible live a Heavenly life in this world!
இமாம் இப்னு தைமிய்யா அவர்களின் பின் வரும் கூற்றை சற்றே சிந்தித்துப் பாருங்கள். மேலும் உங்களுக்கு அது விளங்கும்!
இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் சொல்கிறார்கள்: நிச்சயமாக இந்த பூமியிலேயே ஒரு சொர்க்கம் இருக்கின்றது; யாரெல்லாம் இந்தப் பூவுலக சுவர்க்கத்தில் நுழைந்திடவில்லையோ, அவர்கள் மறு உலக சுவர்க்கத்திலும் நுழைந்திட மாட்டார்கள்!
And Imam Ibn Taymiyyaah said, "Indeed, there is a paradise here on earth and whoever does not enter it here, will not enter the Paradise of the hereafter."
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? அவள் தான்- நல்லதொரு மனைவியாவாள். அறிவிப்பவர்: உமர் (ரளி); (நூல்: அபூதாவூத்)
“உலகம் அனைத்தும் இன்பமானது. அதில் தலைசிறந்த இன்பம் நற்குணமுள்ள மனைவி.” (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)

திருமணம் ஒரு திருப்பு முனை!
உங்களுக்கு நீண்ட கால இலட்சியம் எதுவும் இருக்கின்றதா? குறிப்பாக உங்களுக்கு ஏதேனும் ஒரு விஷயத்தில் மிகுந்த ஆர்வம் உண்டா?
அப்படியெனில் அதே விஷயத்தில் ஆர்வமும், இலட்சியமும் உள்ளவராக உங்கள் வாழ்க்கைத்துணை அமைந்திட்டால் – உங்கள் இலட்சியத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் உங்களால் செயல்பட முடியும்!
அப்படி அமைந்திடாவிட்டால் உங்கள் இலட்சியப் பயணத்தில் நீங்கள் தனித்து விடப்படுவீர்கள்; போதாததற்கு நிறைய நேரம் உங்கள் துணையுடன் சண்டை போட வேண்டியிருக்கும்!
உங்கள் வாழ்வின் இலட்சியம் – அது உலகத்தையே “மாற்றிக் காட்டுவதாக” இருந்தாலும் சரி அல்லது உங்கள் குழந்தைகளை வல்லவர்களாக வளர்த்தெடுப்பதாக இருந்தாலும் சரி! - இரண்டுமே ஒன்று தானாமே! - எந்நேரத்திலும் ஆதரவுக்கரம் நீட்டுபவரே உங்களுக்குத் தேவை!
உங்கள் இலட்சியத்தில் உங்கள் மகிழ்ச்சியையும், அல்லது வலியையும், பகிர்ந்து கொள்ள ஒரு துணை தேவை! உங்களுக்கு ஆலோசனை வழங்கிடவும், நீங்கள் சொல்ல வருவதை ஆவலுடன் கேட்டிடவும், ஒரு துணை அவசியம்!  “இதுவெல்லாம் ஒரு இலட்சியமா?” என்று அலட்சியம் செய்து அதற்கு முட்டுக்கட்டை போட்டு விடாமல் இருப்பவர்களே உங்களுக்குத் தேவை!
திருமணத்துக்கு முன்  இளம் வயதில் சாதித்துக் காட்டிய ஒரு சிலர் – திருமணத்திற்குப் பின் சிகரம் தொட்டிருக்கின்றார்கள் என்பதும் உண்மை!
அதற்கு நேர் மாற்றமாக – இளம் வயதில் சாதித்துக் காட்டிய இன்னும் பலர் – திருமணத்திற்குப் பின் காணாமல் போயிருக்கின்றார்கள் என்பதும் கசப்பானதொரு உண்மை!
எனவே தான் சொன்னார் எகிப்தில் உள்ள ஓர் இஸ்லாமிய அறிஞர்:
“திருமணம் ஒரு திருப்பு முனை!”
அது போலவே – தனக்கென்று ஒரு இலட்சியம் வைத்திருக்கும் துணையே உங்களுக்குத் தேவை! உங்கள் துணையின் லட்சியத்தில் அவர் வெற்றி பெற, நீங்கள் உறுதுணையாக விளங்கிடவும்; உங்களின் நேரத்தையும், அறிவையும், ஆற்றலையும் அதற்கென செலவழித்து அவர் சாதிக்கும் போது தட்டிக் கொடுத்திடவும், சோதனைகள் வரும்போது – அவருக்கு ஆறுதல் அளித்திடவும் – ஒரு துணையாக நீங்கள் விளங்கினால் உங்கள் இல்லறவாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை! அது ஒரு மகிழ்ச்சிக் கடல்!!
இதனை எழுதிடும்போது – அன்னை கதீஜா (ரளி) அவர்களே நம் மனக்கண் முன்னால் தோன்றுகிறார்கள்!!
தேடுங்கள் – அப்படி ஒரு துணையை!
வ ஆஃகிருத் தஃவானா அனில்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்!
** ************* **
பிற்சேர்க்கை: 1
திருமணம் தாமதமானால்?
பலருக்கு - தனிப்பட்ட அல்லது குடும்ப சூழல் காரணமாக அவர்களின் திருமணம் தாமதமாகி கொண்டே போக வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் அது வரை அவர்கள் தங்களது திருமண உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமே! என்ன செய்வது?
அவர்களுக்காக சில வழி காட்டும் ஆலோசனைகள்:
1. உள்ளச்சத்துடன் தொழுதிட வேண்டும். ஆனால் தொழுகை சடங்காகிப் போய்விடக் கூடாது.
2. உபரியான நோன்புகளை வைத்துக் கொள்ள வேண்டும்.
3. வெளியே செல்லும்போது - கண் பார்வையைத் தாழ்த்திக்கொண்டு செல்ல வேண்டும்.
4. பெண்கள் முழுமையாக ஹிஜாப் - பேணிட வேண்டும்.
5. பெண்கள், ஆண்கள் கூடுகின்ற பகுதிக்கு செல்வதைத் தவிர்த்திட வேண்டும். ஆண்கள், பெண்கள் இருக்கும் பகுதிக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இருபாலர் படிக்கின்ற கல்லூரியில் சேர்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
6. பாலியல் சம்பந்தப்பட்ட பேச்சுக்களைப் பேசுகின்ற இடங்களைத் தவிர்க்க வேண்டும்.
7. பாலியல் சம்பந்தப்பட்ட வார மாத இதழ்கள், வலைதளங்கள் இவற்றை முற்றாகத் தவிர்த்திட வேண்டும்.
8. உடற்பயிற்சி அவசியம்.
9. திருமணம் ஆகும் வரையிலான கால கட்டம் வரை - ஒரு குறிப்பிட்ட லட்சியத்தை நிறைவேற்றிட தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
10. இறைவனைப் பற்றி அதிகம் அதிகம் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். எப்போதும் திருக்குர்ஆனும் கையுமாக இருந்திட வேண்டும்.
**
பிற்சேர்க்கை: 2
முதன் முதலாக உங்கள் மனைவியின் பெற்றோர் வீட்டுக்குச் செல்கிறீர்களா?
திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு முதன் முதலாக நீங்கள் செல்கிறீர்கள். அங்கே நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
அங்கே உங்கள் மனைவியின் உறவினர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுவார்கள். அனைவருக்கும் உங்கள் புன்சிரிப்பு உரித்தாகட்டும்!
இயன்றவரை அவர்களது பெயர்களையும், உங்கள் மனைவிக்கு அவர்கள் என்ன உறவு என்பதையும் நினைவில் வையுங்கள்.
அவர்களிடம் பேசும்போது முகம் பார்த்துப் பேசுங்கள். செவி தாழ்த்திக் கேளுங்கள். பொதுவாகக் குறைவாகவே பேசுங்கள் அவர்களிடம்.
அங்கே உங்களுடைய தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். அங்கே போய் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டு அவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள்.
பெண்கள் இருக்கும் பகுதிக்கு அறவே செல்லாதீர்கள். அவர்களில் யாரேனும் வந்து உங்களிடம் பேச்சுக் கொடுத்தாலும் சற்று தூரத்திலேயே நின்று பேசுங்கள்.
கேள்விகளுக்கு பதில்களைச் சுருக்கமாக ஓரிரு வார்த்தைகளில் முடித்துக் கொள்ளுங்கள்.
தேவையற்ற பேச்சுக்களை நாகரிகமாகத் தவிர்த்து விடுங்கள்.
அங்கே குழந்தைகள் இருப்பார்கள். உங்களை சூழ்ந்து கொள்வார்கள். பாசத்துடன் அவர்களுடன் நடந்து கொள்ளுங்கள்.
அதே நேரத்தில் நேரம் அறிந்து அவர்களுக்கு நடந்திடத் தெரியாது. கடுகடுப்பான முகம் காட்ட வேண்டாம். அவர்கள் யாரையும் திட்டவும் வேண்டாம்.
அங்கு நடக்கும் எல்லாவற்றையும் உடனுக்குடன் விமர்சிக்காதீர்கள்.
மார்க்க விஷயத்தில் கூட உங்களுக்குப் பிடிக்காத ஏதாவது ஒன்று அங்கே நடந்தால் கூட சற்றே பொறுமை காக்கவும். பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.
உங்கள் வீட்டில் உள்ள வசதிகளில் சில அங்கே உங்களுக்கு இல்லாமல் போகலாம். அனுசரித்துக் கொள்ளுங்கள். முகத்தில் எரிச்சலைக் காட்டாதீர்கள்.
நம்பிக்கையாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் அவர்கள் மக்களுடன் இலகுவாகக் கலந்து பழகி விடுவார்கள். மக்களும் அந்த நம்பிக்கையாளர்களிடம் இதமான தன்மையையே கண்டு கொள்வார்கள். (நூல்: அஹ்மத்)

பிற்சேர்க்கை: 3
தேவை: குடும்ப நல ஆலோசகர்கள்!
ஆமாம்! திருமணமான புதிதில் எல்லா ஜோடிகளும் மகிழ்ச்சிக் கடலில் தான் மிதப்பார்கள். தனக்கு ஒரு பொக்கிஷமே கிடைத்து விட்டதாகத் தான் பூரிப்படைந்து விடுவார்கள். (எடை கூட அதிகரிக்கும்!)
ஆனால் இதுவெல்லாம் எவ்வளவு காலத்துக்கு? ஒரு ஆண்டு? அல்லது இரண்டு ஆண்டுகள்? அதே நேரத்தில் வேறு சிலருக்கோ துவக்க கால மகிழ்ச்சியெல்லாம் ஒரு சில மாதங்கள் தான்!
பின்னர் கருத்து வேறுபாடுகள் தலை தூக்கும். ஒருவருடைய குறைகள் மற்றவருக்குத் தெரியத் துவங்கும். இல்லறம் அதற்கே உரித்தான சவால்களை இருவருக்கும் முன் வைத்திடும். பிரச்சனைகள் பூதாகாரமாக் உருவெடுப்பதாக எண்ணிக் கொள்வார்கள் இளம் கணவன் மனைவியர்.
கருத்து வேறுபாடுகள் எதற்காகவெல்லாம் ஏற்படும்?
ஒன்றுமில்லாத சிறு விஷயத்திலும் ஏற்படலாம். பெரிய விஷயங்களிலும் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம்.
விவரம் அறியாத அந்த இளம் கணவனும் மனைவியும் செய்வதறியாது தவிப்பார்கள். பிரச்னைகளை வெளியில் சொல்ல மாட்டார்கள். "எல்லாம் தானாகவே சரியாகி விடும்" என்று நினைப்பார்கள். ஆனால் சரியாகாது!
யாரிடமாவது சொல்லலாமா என்று எண்ணுவார்கள்.
பெரும்பாலான கணவன்மார்கள் யாரிடமும் போய் தங்களின் பிரச்னைக்கு தீர்வு கேட்க மாட்டார்கள். வெகு சிலர் தங்களின் (சற்று விபரமுள்ள) தந்தையிடம் போய் பேசுவார்கள். இன்னும் சிலர் மார்க்க அறிஞர்களின் உதவியை நாடுவார்கள்.
மனைவிமார்கள் தங்கள் தாயிடமோ, சகோதரியிடமோ போய் அடைக்கலம் தேடுவார்கள்.
பிரச்னைகள் தீர்க்கப்பட்டால் - அல்ஹம்து லில்லாஹ்! ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பிரச்னைகள் தீர்வதில்லை!
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கணவன் மனைவியர் எவ்வாறு இல்லறத்தை வழிநடத்துகிறார்கள்?
ஒன்று: ஒருவர் மீது ஒருவர் கோபத்தை அள்ளிக் கொட்டுகிறார்கள். (emotional outburst)
அல்லது: கோபத்தை அடக்கிக் கொள்கிறார்கள். (resentment)
அல்லது: ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக் கொள்கிறார்கள் (blaming). இது அனுதினமும் தொடர்கிறது.
அல்லது: "மவுனமே" சிறந்தது என்று வாயைப் பொத்திக் கொண்டு (stonewalling) "தேமே" என்று வாழ்ந்து விட்டுப் போய் விடலாம் என்று முடிவு கட்டி விடுகின்றார்கள்.
ஆனால் இவை அனைத்துமே தீர்வுகள் அல்ல! இது அவர்களுக்குத் தெரிவதும் இல்லை!
இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து கணவன் - மனைவியரைக் காப்பாற்றுவதற்காக உண்டாக்கப்பட்டதே - marital counselling - அதாவது "குடும்ப நல ஆலோசனை".
இது குறித்த விழிப்புணர்ச்சி இன்னும் மக்களுக்குச் சென்றடையவில்லை!
குடும்ப நல ஆலோசனைக்கு என்ன தகுதிகள் தேவை?
ஒன்று: ஏழாண்டு அல்லது ஐந்தாண்டு மதரஸா மார்க்கக் கல்வி அல்லது இஸ்லாமியக் கல்வியில் ஒரு முதுகலைப்பட்டம் (M.A. Islamic Studies).
இரண்டு: உளவியலில் ஒரு முதுகலைப்பட்டம். (M.Sc - Psychology / Clinical Psychology / Counseling Psychology)
இந்த இரண்டு தகுதிகளையும் பெற்றுக் கொண்டு கணவன் மனைவியருக்கு ஆலோசனை சொல்லக் கூடியவர்கள் நமக்கு நூற்றுக் கணக்கில் தேவைப்படும் காலம் இது!
எனினும் தகுதிமிக்க ஆலோசகர்கள் நமக்குக் கிடைக்கும் வரை நாம் செய்திட வேண்டியதெல்லாம் -
ஒன்று: இது குறித்த விழிப்புணர்ச்சியை மக்களிடத்தில் ஏற்படுத்துதல்
இரண்டு: குடும்ப உறவுகளை மேம்படுத்துவது குறித்த இஸ்லாமிய நூல்களை வாங்கிப் படித்தல், இணைய தளங்களில் இருந்து கருத்துக்களை சேகரித்தல், அக்கருத்துக்களை முன் வைத்து கலந்துரையாடுதல்
மூன்று: குடும்ப உறவுகளை மேம்படுத்திட வழிகாட்டும் பயிலரங்கங்களை கணவன் மனைவியருக்கு நடத்துதல்.
அத்துடன் - கணவன் மனைவியர் தங்களது கருத்து வேறுபாடுகளை அழகாகத் தீர்த்துக் கொண்டு மன நிம்மதியுடன் மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி என்று வழிகாட்டுகின்ற இஸ்லாமிய- உளவியல் கட்டுரைகளை இணைய தளங்களில் தேடிப்பிடித்துப் படித்தல்; பகிர்தல்.


பிற்சேர்க்கை 4:
நீங்கள் வலைதளங்களில் மூழ்கிக் கிடப்பவரா?
இன்று மேற்குலகில் ஒரு விஷயம் மிக ஆழமாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கின்றது.
அந்த விஷயம் என்ன தெரியுமா?
அது தான் DISTRACTION எனும் கவனச் சிதறல்!
இது எதனால் ஏற்படுகின்றது?
நமது கம்ப்யூட்டர் மற்றும் அது வழங்கும் இணைய தள வசதிகளால் ஒரு விதமான கவனச் சிதறலுக்கு நாம் ஆளாகி இருக்கின்றோம் என்கிறார்கள் வல்லுனர்கள்.
கம்ப்யூட்டரும், இணைய தள வசதியும் நமக்கு வழங்கி இருக்கின்ற வசதிகள் எதனையும் நாம் மறுத்திடவில்லை!
ஆனால் அதே நேரத்தில் – எந்த ஒரு பயனும் இல்லாமல் எந்த ஒரு குறிப்பிட்ட வேலைக்கு என்றில்லாமல் கம்ப்யூட்டருக்கு முன்னால் அமர்ந்து கொண்டு (இப்போது லேப்டாப், ஐபாட், ஐஃபோன் – இவையும் அடங்கும்) மணிக்கணக்கில் – உணர்வற்றுப் போய் – நேரத்தை நம்மில் பலர் வீணடித்துக் கொண்டிருக்கின்றோமே – இது ஏற்படுத்தியிருக்கும் நவீன நோய் தான் DISTRACTION – கவனச் சிதறல் என்கிறார்கள்.
அதனை நாம் நோய் என்று சொல்வதற்குக் காரணம் இருக்கின்றது.
சற்றே கவனமாக இதனைப் படியுங்கள்:
நமது மூளை இருக்கின்றதே – அது ஒரு அற்புதமான மனித உறுப்பு. அதன் அற்புதங்களில் இரண்டை மட்டும் இங்கே பார்ப்போம்.
ஒன்று:
மனிதனின் இதயமும் மனிதனின் மூளையும் – அவைகளின் இயல்பிலேயே மற்றவர்களுடன் நல்லுறவு வைத்துக் கொள்ளும் தன்மையைப் பெற்றிருக்கின்றன! அப்படித்தான் அவைகளை வடிவமைத்திருக்கின்றான் வல்லோன் அல்லாஹ்! ”we are wired to connect with others” என்கிறது neuroscience. அதாவது மூளை நரம்பியல்.
இரண்டு:
மனித மூளை – தனது மூளை நரம்புகளை (neurons) வைத்து பல நுணுக்கமான இணைப்புகளைத் தனக்குள் ஏற்படுத்திக் கொள்கின்றது.
சற்றே புரியுமாறு சொல்வோம். வீடு ஒன்றைக் கட்டுகின்றோம். அதில் மின் இணைப்புகளை நம் வசதிக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்கிறோம். பின்னர் அந்த இணைப்புகளின் அமைப்பினை வைத்தே நமது வசதிக்கேற்றவாறு மின்சாரத்தை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம். அது போலத்தான் நமது மூளை நரம்புகள் தமக்குள்ளே ஏற்படுத்திக் கொள்ளும் இணைப்புகளும்.
அதே நேரத்தில் – மனித மூளை – அதனை நாம் பயன்படுத்தும் விதத்துக்குத் தகுந்தாற்போல் தன்னுடைய நரம்பியல் இணைப்புகளை நெகிழ்ச்சியுடன் (neural plasticity) மாற்றிக் கொள்ளும் தன்மையும் அதற்கு உண்டு!
இப்போது வலைதளங்களில் அளவுக்கு அதிகமாகத் தங்களின் கவனத்தையும் நேரத்தையும் செலவழிப்பவர்களின் நிலை என்ன என்று பார்ப்போம்.
தங்கள் முழுக் கவனத்தையும் வலையிலே தொலைத்து விட்டு நிற்கும் ஒரு மனிதனின் மூளை – தனது நரம்பியல் இணைப்புகளையே மாற்றிக் கொள்கிறதாம்! அதுவும் அதி விரைவாக! Our brain maps are rapidly changing!
இதன் தவிர்க்க முடியாத மாபெரும் விளைவு என்ன தெரியுமா?
செய்கின்ற ஒன்றையே திரும்பவும் திரும்பவும் செய்திடத் தூண்டுகின்ற ஒரு கெட்ட பழக்கம் (compulsion)
இயல்பான மனித வாழ்க்கையிலிருந்து திசை திரும்பி விடுதல் (distraction from mainstream life)
மாய வலைக்கு வெளியே, மற்றவர்களுடன் நாம் நேருக்கு நேர் நல்ல முறையில் பழகுவதற்குத் தேவைப்படும் அழகிய திறமைகள் (relationship skills) எல்லாம் அடிபட்டுப் போய்விடுதல்!
எந்த ஒன்றையும் குறித்து தெளிவாக சிந்திக்க இயலாத குழப்பமான மனநிலை (scattered thinking)
முடிவெடுக்கும் திறனில் தெளிவற்ற நிலை (difficulties in making good decisions)
ஆம்! நமக்கு பல்வேறு “வசதிகளை” அள்ளித்தந்த அதே வலை தான் இப்படிப்பட்ட பின் விளைவுகளையும் சேர்த்தே நமக்கு வழங்கியிருக்கின்றது!
அதீதமான மின்னணுத் தொடர்பு சாதனங்களைச் சார்ந்து தங்களை அதற்கு அடிமைப்படுத்திக் கொள்பவர்கள் – மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தங்களின் உறவுகளை செம்மைப்படுத்திக் கொள்ளும் திறனை இழந்து கொண்டிருக்கின்றார்கள் – அவர்களை அறியாமலேயே!
இதன் பாதிப்பு குடும்பத்துக்குள்ளேயே எனில் கணவன் மனைவி உறவு என்னவாகும்?
சான்று ஒன்றுடன் விளக்குவோம்.
சற்று கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு கணவன் - அவர் எப்போது பார்த்தாலும் வலைதளத்துக்கு உள்ளேயே வாழ்ந்து கொண்டிருப்பவர் என்று வைத்துக் கொள்வோம்.
அவரது மனைவி ஏதோ ஒன்றை (ஏங்க! வரும்போது குழந்தைக்கு “இது” வாங்கிட்டு வாங்க!) வாங்கி வரச் சொல்லியிருப்பார். அது “எது” என்று அவர் நினைவில் பதிந்தே இருக்காது! அவர் "தேமே" என்று வந்து நிற்பார் வெறுங்கையுடன். வருமே கோபம் அவரது மனைவிக்கு!
அது போலவே - குழந்தைகளை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்து விடுங்கள் என்று சொல்வார் மனைவி. OK என்று மனைவியிடம் போனில் சொல்வார் கணவர். ஆனால் கவனம் இருந்திருக்காது. வீட்டுக்கு வந்து சேர்வார். குழந்தைகளின் நிலைமை?
இது ஒரு சிறிய“வாக்குறுதி” (promise) தான்! இதனை கணவன் மறந்து விடும்போது கணவனின் சொற்களுக்கு என்ன மதிப்பு தருவாள் மனைவி? தன் மறதியை கணவன் நியாயப்படுத்தலாம். ஆனால் கணவன் தன் மனைவியின் “நம்பிக்கையை” (trust –அமானத்) இழந்து விடுவார்!
நாம் சொன்ன உதாரணங்கள் நமக்குச் சாதரணமாகத் தோன்றலாம். அடிப்படையான விஷயத்தையே எடுத்துக் கொள்வோமே. கணவன் மனைவி பாலியலின் நிலைமை (sexual intimacy) என்னவாகும்? அடி வாங்கியிருக்கின்றது என்பது தான் அதிர்ச்சித் தகவல்! ஏனெனில் தாம்பத்திய உறவுக்கும் கூட கவனக் குவிப்பு மிக மிக அவசியமாம்!
இவ்வளவு விளைவுகளுக்கும் அடிப்படைக் காரணம் வலை உலகம் நமக்களித்த distraction தான்!
சகோதரர்களைக் கேட்டுக் கொள்வது:
நீங்கள் வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கின்றீர்களா?
உங்கள் மனைவி உங்களுடன் அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபடுகின்றாரா?
உங்களுடைய தாம்பத்திய வாழ்வில் தொய்வு ஏற்பட்டிருக்கின்றதா?
இவை எல்லாவற்றுக்கும் உங்கள் பதில் “ஆம்!” எனில் உங்களுக்கு எமது ஆலோசனைகள்:
வலை உலகத்தை விட்டு சற்றே வெளியே வாருங்கள்!
மனித உறவுகளை பலப்படுத்திக் கொள்ளுங்கள்! குறிப்பாக குடும்ப உறவுகளை!
மனைவியுடனும், குழந்தைகளுடனும் சற்று அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள்!
நபிமொழி ஒன்றைக் கொண்டு நிறைவு செய்வோம்:
நபி (ஸல்) அவர்கள் ‘விடைபெறும் ஹஜ்’ஜின்போது ஆற்றிய பேருரையில், “பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடந்துகொள்ளுங்கள். அல்லாஹ்விடம் உடன்படிக்கை செய்தே அவர்களைக் கரம் பிடித்துள்ளீர்கள்; அல்லாஹ்வின் ஆணையின் பேரிலேயே அவர்களின் கற்புக்கு உரிமை பெற்றுள்ளீர்கள்” என்று கூறினார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)

பிற்சேர்க்கை 5:
மகனின் இல்லற வாழ்வில் பெற்றோர் குறுக்கிடுவதன் பின்னணி என்ன? /3  ஒரு குடும்பத்தில் தந்தைக்கு அடுத்த படி, குடும்பப் பொறுப்புகள் அனைத்தும் யார் மீது சுமத்தப் படுகிறது? அக்குடும்பத்தின் ஆண் மகன்களிடத்தில் தான்!
நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்த தந்தை உடல் நலம் குன்றி விட்டாலோ, அல்லது அவரால் போதுமான அளவுக்கு பொருளீட்ட இயலாமல் போய் விட்டாலோ, அல்லது தந்தை இறந்து போய் விட்டாலோ - அக்குடும்பத்தின் எல்லாப் பொறுப்புகளையும் அவரது மகன் அல்லது மகன்கள் சுமந்து கொள்கிறார்கள். அந்த சுமையை ஒரு சுமையாகக் கருதாமல் ஒரு சுகமாகக் கருதுகின்ற பல இளைஞர்களை நாம் பார்க்கலாம்.
இப்படிப் பட்ட குடும்பப் பொறுப்பு, ஒரு இளைஞனுக்கு எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். பள்ளிக் கூடத்திலோ கல்லூரியிலோ படித்துக் கொண்டிருக்கும் போது கூட வரலாம். குடும்பப் பொறுப்புக்காக தன் படிப்பைக் கை விட வேண்டிய நிலை ஏற்படலாம்.
தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு விட்டது என்பதால், ப்ளஸ் டூ படித்து விட்டு மேற்படிப்புக் கனவைத் தூக்கி எறிந்து விட்டு ஜவுளிக்கடை வேலை ஒன்றுக்கு வருகிறான் ஒரு இளைஞன்.
தன் தந்தைக்கு அடுத்த படி ஒரு இளைஞன் தன் குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய "கடமைகள்" என்று எவைகளைத் தன் தலை மீது சுமத்திக் கொண்டிருக்கின்றான்?
- தன் தந்தை வாங்கிய கடனை அடைப்பது. (அவர் அடகு வைத்த சொத்துக்களை மீட்பது)
- குடும்பச் செலவுகளை கவனித்துக் கொள்வது.
- தன் கூடப் பிறந்த சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைப்பது.
- குடும்பத்தின் இதர செலவுகளையும் கவனித்துக் கொள்வது.
இப்படி எந்த ஒரு சுய நலமும் இல்லாமல் - குடும்பத்தின் எல்லாப் பொறுப்புகளையும் தன் தலை மீது சுமந்து கொள்கின்ற அந்த மகனிடம் அவரது தாயும் சகோதரிகளும் - எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
நன்றாகவே நடந்து கொள்கிறார்கள்! "எங்கள் அண்ணனைப் போல் வருமா?" என்கிறார்கள்! குறிப்பாக அண்ணன் பயணம் போய் வருபவனாக இருந்து விட்டால் நன்றாக ஆக்கிப் போட்டு விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள்!
ஆனால் அது எது வரை? அந்த இளைஞன் தான் சம்பாதிப்பதை எல்லாம் தன் தாயையும் சகோதரிகளையும் "கவனித்துக் கொள்கின்ற" காலம் வரை தான்!
அவனுக்குத் திருமணம் ஆகி , குழந்தை குட்டிகள் பெற்றுக் கொண்ட பின்பு அவன் தன் எதிர் காலத்துக்கு என்று திட்டமிடத் தொடங்கி விட்டால் வந்து விடும் பேராபத்து!
பயணம் சென்றவன் முன்பு போல் பணம் அனுப்புவதில்லை என்றால் அவ்வளவு தான்! மனைவிக்கு ஏதாவது நகை செய்து போட்டு விட்டாலோ அவ்வளவு தான்! நிலைமை தலை கீழாக மாறி விடும்.
தாயைப் பார்க்க வந்தால், முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ளுவார்கள். தந்தை வீட்டில் இருந்தால் மகனிடம் "கணக்குக்" கேட்கத் துவங்கி விடுவார்.
அப்படியானால் ஒரு தாய் தன் மகனிடம், இன்னும் என்ன தான் எதிர் பார்க்கிறாள்?
தன் மகன் "கடைசி வரைக்கும்" குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டுமாம். சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டு தானும் திருமணம் செய்து கொண்டு வாழத் தொடங்கும் இளைஞன், தன் மனைவி மக்கள் குறித்து சிந்தித்திடக் கூடாது; தன் சகோதரிகளுக்கும், ஏன், இன்னும் ஒரு படி மேலே போய் சகோதரிகளின் குழந்தைகளுக்கும் "செலவு" செய்திட வேண்டும் என்று தாயும் சகோதரிகளும் எதிர் பார்க்கிறார்கள், இது எந்த விதத்தில் நியாயம்?
மகனிடமிருந்து காசு பறித்து அவற்றை தன் மகள்கள் வீட்டுக்கு சேர்த்து வைப்பதில் ஒரு தாய்க்கு இருக்கும் சுகம் அலாதியானது! அடடா!
மகன் சொத்து சேர்த்து விடக் கூடாது! அவன் சிறிது சேமித்து வைத்து விடக் கூடாது! மனைவிக்கு ஒரு நகை நட்டு செய்து விடக் கூடாது!
தன் எதிர் காலம் குறித்துத் திட்டமிடத் தொடங்கும் ஒரு மகனை - அவனது தாய் எப்படி "மூளைச் சலவை" செய்கிறாள் தெரியுமா?
இதோ - வெளி நாட்டில் இருக்கும் மகனிடத்திலிருந்து தொலைபேசி அழைப்பு. மனைவியிடத்தில் பேசலாம் என்று அழைக்கிறான் இளைஞன். ஆனால் போனை எடுத்துப் பேசுவது தாய்.....!
"தம்பீ! எப்படி இருக்கே! நல்லா இருக்கியா?" போன்ற நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு....
"தம்பீ! அவசரப் பட்டு ஊருக்கு இப்ப வந்துடாதேப்பா! அக்கா மகள் சமீமாவை பெண் கேட்டு வர்ராங்கப்பா! நல்ல இடமெல்லாம் நிறைய வருது. மச்சானைப் பத்தித் தான் உனக்குத் தெரியுமே! அவரை நம்ப முடியாதுப்பா! நம்ம தாம்ப்பா எப்படியாவது தோது செய்து ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கணும்"
அடுத்து அக்கா போனை வாங்கி "ஆமாம் தம்பி, அல்லாஹ்வுக்கு அடுத்த படி, உன்னைத் தான் தம்பி நான் மலை போல் நம்பியிருக்கேன்.... எப்படியாவது தோது பண்ணி பணம் அனுப்பி வை தம்பி...... "
மனைவியிடம் பேசுவதை மறந்தே போய் போனை வைத்து விடுகிறான் நமது இளைஞன்!
மகனின் இல்லற வாழ்வில் பெற்றோர் குறுக்கிடுவதன் பின்னணி என்ன என்பது இப்போது புரிகிறதா?
இது நமது சமூகத்தில் புரையோடிப் போய் விட்ட ஆழமான ஒரு நோய்!
இந்த ஆழமான நோய்க்கு நாம் மருந்து கண்டு பிடித்தே ஆக வேண்டும்!
எப்படி கண்டுபிடிப்பது?

மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மனநல நோயாளிகள் இவர்கள்!/ 4
இதற்கு முன்னர் நாம் எழுதியிருந்த உதாரணச் சம்பவங்களை வைத்து எல்லாப் பெற்றோர்களுமே இப்படித்தானோ என்று நினைத்து விட வேண்டாம்! ஒரு சில நல்ல பெற்றோர்களும் நமக்கு மத்தியில் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட நல்ல பெற்றோர்கள் நம்மிடம் மிகக் குறைவு என்பதே வருத்தத்துக்குரிய கசப்பான உண்மை!
இறையச்சம் மிக்க ஒரு சில பெற்றோர்களை விட்டு விட்டு, நம் முகத்தை சற்றே திருப்பி நம் சமூகத்தில் இருக்கும் பெரும்பாலான தாய்மார்களைப் பார்த்தால் - ஒரு தாய் இப்படியெல்லாம் கூட நடந்து கொள்வாரா என்று வியக்கும் அளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டு அமைந்திருக்கின்றன! இத்தகைய மனிதத் தன்மையற்ற தாய்மார்களைப் பற்றித்தான் நாம் ஆய்வு செய்திட இருக்கின்றோம்.
இப்போது கொஞ்சம் உளவியல். அதாவது - psychology!
மகள்கள் விஷயத்தில் ஒரு விதமாக நடந்து கொள்ளும் தாய்மார்கள் மகன்கள் விஷயத்தில் மட்டும் வேறொரு விதமாக ஏன் நடந்து கொள்கிறார்கள்?
நாம் இதற்கு முன்னர் empathy பற்றி சில கட்டுரைகளில் எழுதியிருக்கின்றோம். அடுத்தவர் நிலையில் நம்மை வைத்து சிந்தித்தால் அவருடைய உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள முடியும். இதற்கு ஆங்கிலத்தில் empathy என்று பெயர்.
இவ்வாறு மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்வது நபி வழியாகும். நபியவர்கள் மற்றவர்கள் உணர்வுகளுக்கு எந்த அளவுக்கு மதிப்பளிப்பவர்கள் என்பதை சில நபிமொழிகளைக் கொண்டு ஆய்வோம்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக்கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக்கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ‘ஒரு பிடி அல்லது இருபிடிகள்’ அல்லது ‘ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள்’ உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார். (புகாரி)
இன்னொரு நபிமொழியைப் பார்ப்போம்:
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”நீங்கள் மூவர் இருந்தால் ஒருவரைத் தவிர்த்து இருவர் மட்டும் உரையாட வேண்டாம், நீங்கள் மக்களுடன் கலக்கும்வரை. ஏனெனில் அது மூன்றாமவரைக் கவலையில் ஆழ்த்திவிடும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இந்த மனநலம் சார்ந்த நற்பண்பை குழந்தைகளுக்கு ஊட்டி வளர்த்திட வேண்டியது பெற்றோர் கடமை!
இந்தப் பண்பு எப்படிப்பட்டவர்களை உருவாக்கிடும்?
இந்த நற்பண்பு அடுத்தவர் மீது அக்கரை காட்டுபவர்களை உருவாக்கிடும்! (care for others); இந்த நற்பண்பை உடையவர்கள் அடுத்தவர்களுக்கு எந்தத் தீங்கையும் செய்திட மாட்டார்கள்.
நியாய உணர்வு இவர்களிடத்தில் மிகைத்திருக்கும்; இவர்கள் - நியாய உணர்வு அற்றவர்களை - அவர்கள் தங்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் - விரும்பிட மாட்டார்கள்! எதிரியாக இருந்தாலும் அவர்கள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துப்பேசிடத் தயங்க மாட்டார்கள். எப்போதும் இவர்கள் நியாயத்தின் பக்கமே நிற்பார்கள்!
இவர்கள் பொது நலம் மிக்கவர்களாக விளங்குவார்கள்! சமூக சேவை செய்பவர்களாக இருப்பார்கள்! நன்றி உடையவர்களாக இருப்பார்கள்!
அடுத்தவர் உணர்வைப் புரிந்து கொண்டு செயல் பட உதவுகின்ற empathy எனப்படும் இந்த நற்பண்பு இல்லாதவர்கள் எப்படிப்பட்டவர்களாக விளங்குவார்கள்?
நியாய உணர்வு சுத்தமாக இவர்களிடத்தில் இருக்காது; நியாயம் பேசுபவர்களை இவர்களுக்குப் பிடிக்காது! நியாயம் பேசுபவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் அவர்களை இவர்கள் விரும்பிட மாட்டார்கள்.
குழு உணர்வே இவர்களிடத்தில் மிகைத்திருக்கும்! தாங்கள் செய்வதையெல்லாம் நியாயப் படுத்துவார்கள்!
சுயநலம் மிக்கவர்களாக விளங்குவார்கள்! இத்தகையவர்களிடம் "உண்மையான நட்பை" எதிர்பார்க்க முடியாது! நயவஞ்சகத்தனமே இவர்களிடத்தில் குடிகொண்டிருக்கும்!
இந்த நற்பண்பு இல்லாதவர்கள் அடுத்தவர்களுக்கு எந்தத் தீங்கையும் செய்திடத் தயங்க மாட்டார்கள். சில சமயங்களில் குற்றம் (crime) புரிவதற்குக் கூடத் தயங்க மாட்டார்கள். சதி செய்வார்கள்.
குற்றவாளிகளின் மனநிலையை ஆய்வு செய்பவர்கள் சொல்வது: lack of empathy leads to crimes! அதாவது அடுத்தவர் உணர்வுகளை ஒரு பொருட்டாகக் கருதாதவர்கள் தான் குற்றவாளிகளாக மாறுகிறார்கள்.
இத்தகையவர்கள் என்னென்ன குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் தெரியுமா?
கற்பழிப்புக் குற்றங்கள், குழந்தைகள் பலாத்காரம் (child molesters) மற்றும் குடும்ப வன்முறை (domestic violence) இவற்றில் ஈடுபடுபவர்கள் அனைவருமே அடுத்தவர் உணர்வைப் புரிந்து கொள்ள மறுப்பவர்கள் தாம்.
இவர்களால் பாதிப்புக்குள்ளானவர்கள் (victims) எப்படிப்பட்ட உணர்வுகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள இயலாதவர்கள்; அல்லது புரிந்து கொள்ள மறுப்பவர்கள்.
தங்களுக்குத் தாங்களே, தாங்கள் செய்கின்ற கொடுமையான குற்றங்களை நியாயப் படுத்திக் கொள்வார்களாம்.
குழந்தையை மானபங்கப் படுத்துபவன் அதனை எப்படி நியாயப் படுத்துகிறான் தெரியுமா?
"இதுவும் ஒரு விதமான அன்பு செலுத்துதல் தான்!" (just showing love!)
"அந்தக் குழந்தைக்கு நான் செய்வது பிடிக்கவில்லை என்றால் என்னைத் தடுத்திருக்கும் தானே? தடுக்கவில்லையே!"
வீட்டில் மனைவியையும் குழந்தைகளையும் அடித்து நொறுக்குபவன் கூட அதனை எப்படி நியாயப் படுத்துகிறான்?
"இது ஒரு வகையில் "அவர்களை சீர்திருத்திடத் தான்!" (this is just good discipline!)
இப்படிப்பட்டவர்கள் ஒரு விதத்தில் "மனநலக் குறைபாடு" உடையவர்களே!
சரி, இப்போது நம் விஷயத்துக்கு வருவோம். பெற்றோர்கள் தங்கள் மகனின் இல்லற விஷயங்களில் தேவையின்றித் தலையிடுவதை எவ்வாறு "நியாயப் படுத்திக்" கொள்கிறார்கள் தெரியுமா?
"என் மகள் மட்டும் அங்கே கொடுமைப் படுத்தப் படுகிறாளே! நான் இவளை அந்த அளவுக்கா கொடுமைப் படுத்துகிறேன்?"
"நம் மகளுக்கு நாம் வாரி வாரிக் கொடுத்திருக்கும்போது, நம் மகனுக்கு வாங்குவதில் என்ன தப்பு?"
"என் மகள் அவள் மாமியார் வீட்டில் எவ்வளவு வேலை பார்க்கிறாள் தெரியுமா? என் மருமகள் மட்டும் இங்கே சுகமா தூங்க விட்டு விடுவோமா?" (தனியொரு சம்பவமே இருக்கிறது; பின்னர் பகிர்ந்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ்)
இப்போது சொல்லுங்கள்! தங்கள் செயல்களை நியாயப் படுத்திக் கொண்டு பெரும் குற்றங்களைச் செய்பவர்கள் மன நலக் குறைபாடு உடையவர்கள் என்றால் - அதே போன்று தங்கள் செயல்களை நியாயப்படுத்திக் கொண்டு கணவன் மனைவியர் உரிமைகளைப் பறித்திடும் பெற்றோர்களும் மன நலக்குறைபாடு உடையவர்கள் தானே?
இது தான் நாம் எடுத்துக் கொண்ட பிரச்னையின் ஆணி வேர்!
அதாவது - அடுத்தவர் உணர்வுகளுக்கு எந்த மதிப்பும் அளிக்காத மனநலக் குறைபாடே (lack of empathy) பிரச்னையின் ஆணிவேர்!
சரி! நமது பெற்றோருக்கு இந்த empathy எனும் உணர்வு இருக்கிறதா இல்லையா என்பதை எப்படி அறிவது?
யார் பக்கம் நியாயம்?
இங்கே ஒரு இளைஞர். வெளி நாடு சென்று சம்பாதித்து வந்தவர். அவர் தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்னார்:
"கடந்த எழுபது எண்பதுகளில் (1970 - 1980) நான் முதன் முதலில் பயணம் சென்ற போது மாதா மாதம் இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பி வைப்பேன் அம்மாவுக்கு. இரண்டு வருடம் கழித்து ஊருக்கு வந்து அம்மா எவ்வளவு பணம் பாக்கி வைத்துள்ளார் என்று பார்த்தால் எல்லாம் செலவாகி யிருக்கும்.
தந்தை தான் (இன்னொரு வெளி நாட்டிலிருந்து) குடும்ப செலவுக்குப் பணம் அனுப்புகிறாரே, நாம் அனுப்பி வைப்பதை சேமிக்கலாமே என்றால் அது அம்மாவால் முடியாது.
"நான் வேறு திறமைகளை வளர்த்துக் கொண்டதால் பின்னர் எனது சம்பளம் உயர்ந்தது. மாதா மாதம் ஐந்தாயிரம் ரூபாய் அனுப்பிக் கொண்டிருப்பேன். மீண்டும் விடுமுறையில் ஊருக்கு வந்து பார்த்தால் அம்மா அவ்வளவையும் செலவு செய்து விட்டிருப்பார்.
"ஏனம்மா, ஐந்தாயிரத்தில் செலவுக்கு இரண்டாயிரம் போக மீதி மூவாயிரம் ரூபாயை சேமித்திருக்கலாம் தானே என்றால், அம்மா கணக்கு சொல்வார்கள்.
குடும்ப செலவுகள் போக - மீதமிருந்த பணத்தை, "மாமா மகன் கல்யாணத்துக்கு ஆயிரம் ரூபாய் வைத்தேன், மச்சி மகள் வயதுக்கு வந்ததுக்கு ஒரு பவுன் போட வேண்டியிருந்தது.....கொழுந்தனுக்கு பேரன் பிறந்து நாற்பதுக்கு அரை பவுன் போட்டேன், வீட்டிலே "இந்த" விருந்துக்கு நூறு பேருக்கு சாப்பாடு ஆக்கிப் போட்டதில் மூவாயிரம் செலவு.....
இப்படி - சேமித்து வைக்கத் தெரியாத பெற்றோருக்கு எல்லாவற்றையும் அனுப்பி வைத்த அவருக்கு - ஒரு முறை பணம் அனுப்ப இயலாமல் போய் விட்டது. அவருக்கே சில முக்கியமான செலவுகள். ஊருக்கு வரும் முன்னர் மூன்று மாத சம்பளத்தை சேர்த்து - "பயண சாமான்களை" வாங்கிக் கொண்டு ஊர் வந்து சேர்கின்றார் நமது உறவினர்.
பயணக் களைப்பு கூட நீங்கியிருக்காது. கணக்குக் கேட்கத் தொடங்கி விட்டனர் பெற்றவர்கள். அருகில் இருந்து கொண்டு மூட்டி விட்டுக் கொண்டிருக்கிறாள் தங்கை.
ஏன் இந்த விசாரிப்பு தெரியுமா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் முடிந்திருந்தது! பெற்றோருக்கு வந்த சந்தேகம் - மகன் பணத்தை தங்களுக்கு அனுப்பி வைக்காமல், மனைவிக்கு அனுப்பி விட்டான்!!!
"இல்லையம்மா! நான் கன ரக வாகனங்களை ஓட்டுவதற்காக பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது; உரிமம் பெற வேண்டியிருந்தது. விசா புதுப்பிக்க வேண்டி "இவ்வளவு" பணம் தேவைப் பட்டது. அதற்கு முன்னர் நாற்பதாயிரம் அனுப்பி வைத்தேனே. ஊருக்கு வரும் முன்பு மூன்று மாத சம்பளத்தில் தான் பயண சாமான்கள் வாங்கி வந்துள்ளேன்... இது தானம்மா கணக்கு...."
பெற்றோர் இந்தக் கதையை நம்பிடத் தயாராக இல்லை!
"எல்லாப் பணத்தையும் எடுத்துக் கொண்டு வருவதாக இருந்தால் வீட்டுக்கு வா.... இல்லாவிட்டால் உன் மனைவி- குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விடு...."
இரவு நேரம். கொட்டுகின்ற மழை. மனைவியையும், கைக்குழந்தையையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான் நம் இளைஞன். மாமனார் வீட்டுக்குச் செல்கிறான். சில தினங்களில் வாடகை வீடு ஒன்றை பிடித்துக் குடியேறுகிறான். பயணம் சென்று தனக்கென்று புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்குகிறான்.
மகனைத் துரத்தியடித்த பெற்றவர்கள் தங்களது சொத்துக்களை மகள்கள் பேருக்கு எழுதி வைத்து விடுகின்றனர்....
இப்போது சொல்லுங்கள்! இதிலே யார் பக்கம் நியாயம்?
இதைப் போன்ற நிறைய "உண்மைச் சம்பவங்கள்" உங்களைச் சுற்றியே நிறைய நடந்து கொண்டிருக்கும். எல்லாவற்றையும் பற்றியும் உங்கள் பெற்றோர்களிடமும், சகோதரிகளுடனும் பேசிப்பாருங்கள். கலந்தரையாடுங்கள். விவாதமாக்குங்கள்.
கொஞ்ச நாட்களிலேயே அவர்களின் மன நிலையை நீங்கள் துல்லியமாக அறிந்து கொண்டு விடலாம்.
உங்கள் பெற்றோர்கள் நியாய உணர்வு மிக்கவர்களாக இருந்தால் அல்ஹம்துலில்லாஹ்!
ஆனால் அவர்களிடம் நியாய உணர்வு இல்லையெனில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் - "நம் பெற்றோர்கள் மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர்கள் அன்று"- என்பதைத் தான்!
உங்கள் பெற்றோர்கள் அடுத்தவர் உணர்வுகளை மதிப்பவர்களே இல்லை; அவர்களிடம் நியாய உணர்வும் இல்லை எனில் என்ன செய்வது?

மூன்று தங்கைகளுக்கும் திருமணம் முடிந்த பிறகே உனக்குத் திருமணம்! / 6
ஒரு இளைஞன். பெயர் பஷீர் அஹமத். அவனுக்கு மூன்று தங்கைகள். பஷீருக்கு பதினைந்து வயதாகும் போது தந்தை மாரடைப்பில் இறந்து விட்டார். சொத்துக்கள்? வீடு, கட்டிடம், வயல் என்று - அது ஒரு கோடிக்கு மேல் தேறும்.
பஷீருக்கு படிப்பு வரவில்லை. (எதிர்பார்த்தது தானே!). ஒரு சில ஆண்டுகளிலேயே பயணம் புறப்பட்டு விட்டான், அதாவது அனுப்பி வைக்கப் பட்டு விட்டான். துவக்கத்தில் மாதச் சம்பளம் குறைவாக இருந்தாலும், தொடர்ந்து வந்த ஆண்டுகளில் சம்பளம் கணிசமாக உயர்ந்து கொண்டே சென்றது. எல்லாவற்றையும் தன் அம்மாவுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தான் பஷீர். ஆண்டுகள் உருண்டோடுகின்றன.
பஷீருக்கு இருபத்து ஐந்து வயது ஆன போது மூத்த தங்கை பாத்திமா நஸ்ரினுக்குத் திருமணம் நடந்தேறியது. மாப்பிள்ளைக்கும் வயது இருபத்து ஐந்து தான்.
பஷீருக்குத் திருமணம் எப்போது? அம்மா அவர்கள் சொல்லி விட்டார்கள் - மூன்று தங்கைகளுக்கும் திருமணம் முடிந்த பிறகே பஷீருக்குத் திருமணம் என்று!
பாத்திமா நஸ்ரினுக்கு வேறு சில இடங்களில் இருந்து பெண் கேட்டு வந்த போது, "மாப்பிள்ளைக்கு முப்பது வயது இருக்கும்போல் தெரிகிறதே" என்று பஷீரின் தாயார் மறுத்து விட்டதெல்லாம் தனி விஷயம். ஏன் இந்த இரட்டை நிலை?
தங்கைகள் அனைவருக்கும் திருமணம் முடித்து விட்டுத் தான் அண்ணன் ஒருவன் தனது திருமணம் குறித்து சிந்தித்திட வேண்டும் என்பது என்ன நியாயம்?
"வயதுக்கு வந்த தங்கைகளை வீட்டில் வைத்துக் கொண்டு அண்ணன்காரனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிறீர்களா?" - என்பது பெற்றோரின் நியாயமற்ற வாதம்!
பெண்மக்களை எப்படி "குமரிகளாகப்" பார்க்கிறோமோ அதுபோல் ஆண்மகன்களை ஏன் நாம் "குமரர்களாகப்" பார்க்க மறுக்கின்றோம்? மகளுக்கு காலா காலத்தில் திருமணம் செய்து வைப்பதை எப்படி பெற்றோர்கள் விரும்புகிறார்களோ அது போலவே மகனுக்கும் காலா காலத்தில் திருமணம் செய்து வைப்பது தானே நியாயம்?
நியாய உணர்வற்ற பெற்றோர்கள் - இதற்கு சொல்கின்ற இன்னொரு காரணத்தைப் பாருங்கள்:
மகனுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டால், அதன் பிறகு அவன் தன் தங்கைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதில் அலட்சியம் வந்து விடுமாம்!?
ஒரு இளைஞனுக்கு வயது இருபத்தியேழு! அவன் தனது திருமணத்தைப் பற்றி சிந்தித்துக் கூட பார்ப்பதற்கு இயலாத சூழலாம்! ஆனால் நாம் கேட்பது என்னவென்றால் - அவனுக்குத் திருமண ஆசை இருக்குமா,இருக்காதா?
உளவியல் அறிஞர்கள் சொல்வது என்னவென்றால் - அந்த வயதில் ஆண்களுக்கான செக்ஸ் ஹார்மோனாகிய - டெஸ்டோஸ்டரோன் - இரண்டு மடங்கு (200%) சுரக்கின்றதாம்!
இப்படிப்பட்ட பாலியல் தூண்டல் (sexual urge) ஒரு இளைஞனுக்கு வந்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் அதை யாரிடம் போய் சொல்வான்? திருமணம் குறித்தெல்லாம் சிந்தித்திட முடியாத "சூழ்நிலை" குடும்பத்தில்!
அவன் தனது பாலியல் தூண்டல்களை எப்படித் தணித்துக் கொள்வான்? அவன் கெட்ட வழிகளை நாடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது பெற்றோர்களுக்குச் சம்மதம் தானா?
என்ன செய்கிறார்கள் நம் இளைஞர்கள்? நோன்பு வைத்துக் கொள்கிறார்கள்! பெற்றோர் பேச்சை மீற முடியாமல் முப்பது வயதைத் தாண்டியும் தன் கடைசித் தங்கைக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கின்றார்கள்!
தனது திருமணம் குறித்து வீட்டில் பேசத் தயங்குகின்றார்கள். மனம் புழுங்குகின்றார்கள்! வெளியே சொல்ல முடியவில்லை! பிரச்னை எதுவும் இல்லாதது போல் நடித்துக் கொண்டு தங்கள் இளமையை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்!
என் அருமை இளைஞர்களே! நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ உங்கள் திருமணத்தை - ஒத்திப் போட்டு விடுவதன் மூலம் - உங்கள் பெற்றோர்கள் வெற்றி பெற்று விடுகிறார்கள்! நீங்களோ தோற்றுப் போய் விடுகிறீர்கள்!
YOU LOSE! THEY WIN!!
அப்படியானால் இப்பிரச்னைக்குத் தீர்வு என்ன?

பெற்றவங்க சொல்லும் போது அத மீறி செயல்பட முடியுமா? /7
ஒரு வழியாக தங்கைகளுக்கெல்லாம் திருமணம் முடித்து, அடுத்து உங்கள் வீட்டில் இப்போது தான் உங்கள் திருமணத்தைப் பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
இப்போது தான் மிக முக்கியமான திருப்பு முனை உங்கள் வாழ்வில்! அல்லாஹு தஆலா உங்களுக்கு வைக்க இருக்கின்ற மகத்தான சோதனை இதோ!
மார்க்கம் காட்டியிருக்கின்ற வழியில் நீங்கள் மணம் முடிக்கப் போகின்றீர்களா? பெற்றோர் காட்டித் தருகின்ற வழியில் திருமணம் செய்யப் போகின்றீர்களா? இந்த இரண்டில் நீங்கள் எதனைத் தேர்வு செய்திடப் போகின்றீர்கள்?
இறை வழிகாட்டுதல் என்ன?
இறையச்சத்தின் அடைப்படையில் மணப்பெண்ணைத் தேர்வு செய்யுங்கள்! மஹர் கொடுத்துத் திருமணம் முடியுங்கள்! எளிமையாகத் திருமணத்தை நடத்திக் கொள்ளுங்கள்!
இவையே மிக முக்கியமான இறை வழிகாட்டுதல்கள்!
ஆனால் பெற்றோர் சொல்வதென்ன?
பொருளாதார வசதியின் அடிப்படையில் பெண்ணெடுப்போம்! முடியுமட்டும் வரதட்சணை வாங்கிக் கொள்வோம்! நன்றாக செலவு செய்து திருமணத்தை நடத்துவோம்!
"அவ்வளவு பணம் என்னிடம் இல்லையே!" என்று சொல்லிப் பாருங்கள். "சம்பாதித்துக் கொண்டு வா! அப்புறம் திருமணம் செய்து கொள்ளலாம்", என்பார்கள்.
"வரதட்சணையெல்லாம் கேட்க வேண்டாம் அம்மா!" என்று சொல்லிப் பாருங்கள். அதனை நியாயப் படுத்தி உங்களை சம்மதிக்க வைப்பார்கள்! நீங்களும் சம்மதித்து விடுவீர்கள்!
நாம் கேட்போம் இப்படிப்பட்ட மணமகன்களைப் பார்த்து: "ஏனப்பா வரதட்சணைக்கு ஒத்துக் கொண்டாய்?"
அவர்கள் சொல்வார்கள்: "என்னண்ணே செய்றது? பெற்றவங்க சொல்லும் போது அவங்களை மீறி நாம செயல்பட முடியுமா?"
இறுதியில் உங்கள் பெற்றோருக்கே வெற்றி! மார்க்கம் தோற்றுப் போய் விடுகிறது! (நஊது பில்லாஹி மின்ஹா!)
திருமணத்துக்கு முன்னரேயே உங்கள் திருமணத்தின் கடிவாளத்தை உங்கள் பெற்றோர்கள் உங்களிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு விடுகிறார்கள் என்பது ஏன் உங்களுக்குப் புரிவதில்லை?
ஏன் பெற்றோர் தோண்டிய படுகுழியில் போய் நீங்களாகவே வழுக்கி விழுந்து விடுகின்றீர்கள்?
நீங்கள் விழுந்து விட்டதை நீங்கள் உணராமல் இருக்கலாம்; ஆனால் உங்கள் பெற்றோர்கள் அதனை நன்றாக உணர்ந்திருக்கின்றார்கள்!
"பையன் நம்ம கையில் தான்!"
பிறகு என்ன நடக்கும்?
"ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா!"
உங்கள் இல்லற வாழ்வின் சிறிய பெரிய விஷயங்கள் அனைத்திலும் உங்கள் பெற்றோர் சொல்வதே வேத வாக்கு! உங்கள் மனைவியின் உரிமைகள்??
இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள்! - ஆம் - அது ஒரு அழகிய தலைப்பு! சிறப்புப் பேச்சாளர்கள் அழகாக மேடையில் பேசிடுவதற்கு!!
பெற்றோர் விருப்பங்களின் அடிப்படையில் வரதட்சணை வாங்கி திருமணம் முடிக்கும் இளைஞர்கள் எப்படிப்பட்டவர்களாக விளங்குவார்கள்?
சாட்சாத் அவர்கள் பெற்றோர்களைப் போலவே உருவெடுப்பார்கள்! இவர்களும் அடுத்தவர் உணர்வைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்! இவர்களிடத்திலும் நியாய உணர்வு இருக்காது! சுய நலம் மிகுந்திருக்கும்! நன்றி உணர்ச்சி அற்றுப் போய் விடும்! நயவஞ்சகம் குடிகொண்டு விடும்!! தவறுகளை நியாயப் படுத்திக் கொள்வார்கள்!
Exactly - இவர்களும் இவர்களுடைய பெற்றோர்களும் இப்போது ஒன்று போலத்தான்! நியாய உணர்வற்ற, அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொள்ள மறுக்கின்ற, lack of empathy எனும் மன நலக் குறையுடன் அடுத்த தலைமுறை இதோ தயார்!
இந்த இழி நிலையிலிருந்து இந்த சமூகத்தை மீட்டெடுப்பது எப்படி? சிந்தியுங்கள்!
இவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?/8
இவர்கள் சில இளைஞர்கள்.
திருமண விஷயத்தில் இவர்கள் பெற்றோர்கள் வரதட்சனையை வலியுறுத்துகிறார்கள். ஆனால் இவர்கள் அதனை மறுக்கிறார்கள்.
மார்க்கத்தில் அதற்கு அனுமதியில்லை என்பதை எடுத்துச் சொல்லி பெற்றோர்களை சம்மதிக்க வைக்க முயற்சி செய்கின்றார்கள். ஆனால் பெற்றோர்கள் முரண்டு பிடிக்கிறார்கள். அவர்கள் மசிவதாகத் தெரிவதில்லை!
அவர்களுக்கு பெற்ற மகனின் நலனும் கண்ணுக்குத் தெரிவதில்லை! மார்க்கத்தின் நலனும் கண்ணுக்குத் தெரிவதில்லை!
பெற்றோர்கள் இத்தகைய இளைஞர்களிடம் முகம் கொடுத்துப் பேசுவதைக்கூட நிறுத்திக் கொள்கின்றனர்; பெற்றவர்களின் சொத்து இந்த இளைஞர்களுக்கு மறுக்கப்பட்டு விடும் என்று எச்சரிக்கப்படுகின்றனர்.
ஆனால் - அந்த இளைஞர்களோ பெற்றோர் விருப்பத்துக்கெல்லாம் ஆடுவதில்லை என்று திட்டவட்டமாக முடிவு செய்து கொள்கிறார்கள். பொறுமையைக் கடைபிடித்துப் பார்க்கிறார்கள்; எந்த மன மாற்றத்துக்கும் பெற்றவர்கள் வரத் தயாரில்லை!
இறுதியில் இறைவனை அஞ்சும் அந்த இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்?
வீட்டை விட்டு வெளியேறி விடுகின்றார்கள்! தான் விரும்பிய இறையச்சமிக்க பெண்ணை மணம் முடிக்கிறார்கள்! மஹர் கொடுத்துக் கரம் பிடிக்கிறார்கள்! இறை விருப்பத்துக்கேற்ற முறையில் திருமணத்தை நடத்துகிறார்கள்!
இறையச்சம் மிக்க ஒரு சில சகோதரர்கள் இத்தகைய இளைஞர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து தருகின்றார்கள். குறிப்பாக பொருளாதார உதவியை மனம் உவந்து செய்து தருகின்றார்கள்.
இவர்கள் எளிமையாக வாழ்கிறார்கள்; ஆனால் அடிமைகளாக வாழவில்லை! பெரிய சொத்துக்கள் இல்லை தான்! ஆனால் சுதந்திரம் இருக்கின்றது! பெரிய வீடு என்று ஒன்று இல்லை தான்! ஆனாலும் வாடகை வீட்டில் மன நிம்மதியுடன் வாழ்கிறார்கள்! தலை நிமிர்ந்து வாழ்கின்றார்கள்!
இவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு....
இது வரை நாம் ஆய்வு செய்தது – இன்றைய நமது சமூகத்தின் அப்பட்டமான நிலைமை. கூடுதல் குறைவாக நாம் இங்கே எதனையும் எழுதி விடவில்லை; நேரடியாகக் கண்டும், கேட்டும், அனுபவித்தும் தான் சொல்கிறோம்.
எமக்குத் தெரிந்தவரை கடந்த நாற்பது ஆண்டுகளாக – திருமண சீர்திருத்தத்துக்காக எடுக்கபட்ட முயற்சிகள் – அவ்வளவாகப் பலன் தரவில்லை என்பதே எம் கணிப்பு. அடுத்த தலைமுறையையேனும் காப்பாற்றியாக வேண்டும் எனும் நோக்கத்தில்தான் பின் வரும் கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.
 இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டு என்பது "பிரச்னைகளின் உலகமாக" மாறி விட்டிருக்கின்றது. எந்த ஒரு பிரச்னையை எடுத்துக் கொண்டாலும் அது தீர்க்கப்படவே முடியாத சிக்கலாக (crisis) மாறி மனித சமூகத்தை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது.
ஆனால் புதிய தலைமுறை ஒன்று முளைத்து வந்து இதோ பிரச்னைகளுக்கு நாங்கள் தீர்வு சொல்கிறோம் என்று புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது.
Critical thinking, creative thinking, lateral thinking, complex thinking, - என்று புதுப்புது வழிமுறைகளை எல்லாம் கையிலெடுத்துக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றது இந்தப் புதிய தலைமுறை!
இறை வழிகாட்டுதல் என்றால் என்னவென்றே தெரியாத இந்தத் தலைமுறை, ஏதோ அவர்களுக்குத் தெரிந்த அறிவை வைத்துக் கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டு - எடுத்துக் கொண்ட பிரச்னைகளுக்குத் தீர்வும் சொல்கிறார்கள்; தீர்த்தும் வைக்கின்றார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
அவர்கள் முன் வைக்கும் எல்லாத் தீர்வுகளுமே சரியானவை என்று நம்மால் சொல்ல முடியாது தான்! அதே நேரத்தில் அவர்களின் எல்லாத் தீர்வுகளுமே தவறானவை என்றும் சொல்லி விட முடியாது!
அவர்கள் தரும் தீர்வுகளுள் சிலவற்றை நாம் ஆய்வு செய்து பார்த்தால் அது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கண்ட தீர்வுகளை ஒத்திருப்பது தெரிய வருகிறது!
ஆனால் - எங்களிடம் குர்ஆன் இருக்கின்றது, நபிவழி இருக்கின்றது என்று சொல்லிக் கொண்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காண இயலாதவர்களாக நாம் இருந்து கொண்டு இருக்கின்றோம்.
இது உண்மையா? இல்லையா?
இங்கே - நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பிரச்னை - சாதாரணமானதாக ஒன்றாக இருந்தால் - ஒரு வரியில் தீர்ப்பு சொல்லி விடலாம் தான்!
நாம் இங்கே பேசிக் கொண்டிருப்பது சாதாரணப் பிரச்னை அல்லவே! சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்ற ஆழமான தீமை ஒன்றைப் பற்றியல்லவா நாம் விவாதித்துக் கொண்டிருக்கின்றோம்!
உன்னைப் பார்த்து நான், என்னைப்பார்த்து என் பக்கத்து வீட்டுக்காரன் என்று - தலைமுறை தலைமுறையாய் ஒரு தொடர்கதையாய்ப் போய் விட்ட தொற்று நோய் அல்லவா இது!
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒட்டு மொத்த சமூகத்தையும் அழிவின் விளிம்பிற்கு இட்டுச் சென்று "அடித்தளத்தில் ஓட்டை போடப்பட்ட கப்பலாய்" நம்மை மாற்றியிருக்கும் பிரச்னை தானே இது!
எனவே நாம் - குர் ஆன் மற்றும் நபிவழி ஆகியவற்றுடன் - Critical thinking, creative thinking, lateral thinking, complex thinking - போன்ற நவீன வழிமுறைகளையும் கையிலெடுத்துக் கொண்டு நடைமுறையில் சாத்தியப்படுத்திக் காட்டிடும் அழகிய தீர்வு ஒன்றை நாம் கண்டாக வேண்டும். இது காலத்தின்கட்டாயம். இதற்கு ஆய்வுக் கண்ணோட்டம் மிக்க சகோதர சகோதரிகளின் கருத்து ரீதியான பங்களிப்பு மிகவும் அவசியம்.
நமது நோக்கமெல்லாம் நமது சகோதர சகோதரிகளின் இல்லற வாழ்வில் மகிழ்ச்சியையும், குதூகலத்தையும், மன நிம்மதியையும், நேசத்தையும், கருணையையும் மீண்டும் கொண்டு வந்து சேர்ப்பது தான்!
நாம் சொல்ல வரும் தீர்வு என்னவெனில் - திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையம் – ஒன்றை – ஏற்படுத்துதல்  தான். பிற்சேர்க்கை ஒன்றில் எமது கருத்துக்களை முன் வைத்துள்ளோம்.  பொறுமையாகப் படித்து சிந்தியுங்கள். இறைவன் நாடினால் – அது நிறைவேறும்.  (பார்க்க: பிற்சேர்க்கை  7)

பிற்சேர்க்கை 6:

தொலைபேசி தலாக்!
இஸ்லாமிய மாத இதழ்களில் இப்படி சில கேள்விகள் கேட்கப் படுகின்றன:
“எஸ்.எம்.எஸ் வழியே அல்லது தொலைபேசி வழியே தலாக் சொன்னால் தலாக் நிகழ்ந்து விடுமா?” ஆம்! நிகழ்ந்து விடும் என்று ஒரே வரியில் பதில் அளிக்கப் படுகிறது.
ஆனால் பின்னணி என்ன என்பது புரிந்து கொள்ளப் படாமலே பதில்கள் அளிக்கப் படுவதால், பலரது வாழ்க்கை பாதிக்கப் படுகிறது என்பதை ஏனோ புரிந்து கொள்ளத் தவறி விடுகிறோம். சாதாரணமாக மருத்துவம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மருத்துவர்கள் கூட, தங்கள் ஆலோசனைகளை எழுதி விட்டு, இறுதியில் அருகில் உள்ள மருத்துவரை அணுகவும் என்று முடிக்கிறார்கள். ஏன் அப்படிப் பட்ட ஒரு அணுகுமுறையை நாம் மேற்கொள்ளக் கூடாது? தலாக் சம்பந்தப் பட்ட கேள்விகளுக்கு அளிக்கின்ற பதில்களோடு சேர்த்து, அருகிலுள்ள இமாமையோ, அரபுக் கல்லூரியையோ அணுகவும் என்று எழுதலாம் தானே? விஷயத்துக்கு வருவோம்.
முஸ்லிம் சமுகத்தில் தலாக் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று சமூக ஆர்வலர்கள் பலரும் தங்கள் கவலையை வெளிப் படுத்தி வருகின்றனர். குடும்ப நீதி மன்றங்களுக்கு அதிக அளவில் வருபவர்கள் முஸ்லிம்களே என்றும் ஒரு தகவல்.
“அல்லாஹ் அனுமதித்தவற்றில் அவனிடம் மிகவும் வெறுப்புக்குரியது தலாக்கை விட வேறு எதுவும் இல்லை” (நபிமொழி.ஆதார நூல்: அபூ தாவூத்)
இருந்தும் அடிக்கடி தலாக் நிகழ்வதற்குக் காரணங்கள் என்ன? ஏன் நமது கணவன்மார்கள் தலாக்கை நாடுகிறார்கள்? அதுவும் தொலைபேசி வழியேயும், எஸ்.எம்.எஸ் வழியேயும், மின்னஞ்சல் வழியேயும் ஏன் தலாக் விடுகிறார்கள்? காரணங்களை ஆய்வோம்.
1. மனைவியை விட்டு விட்டு வெளி நாடுகளுக்கு கணவன் வேலைக்குச் செல்வது தான் – பெரும்பாலும் – தொலைபேசி / எஸ்.எம்.எஸ் – தலாக்குக்கு வழி வகுக்கின்றன. திருமணம் முடித்து ஒரு சில மாதங்களுக்குள்ளேயே கணவன் வெளி நாடு புறப்பட்டு விடுவதாலும்இ இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் ஊருக்கு வந்து ஒன்றிரண்டு மாதங்கள் தங்கிச் செல்வதாலும் – கணவன் மனைவிக்கு இடையே உள ரீதியான புரிந்துணர்வு ஏற்படுவது இல்லை. கணவன், மனைவியோடு சேர்ந்து செலவு செய்திடும் நேரம் மிகவும் குறைவே.
2. வரதட்சனை மற்றும் கொடுக்கல் வாங்கல் பிரச்னைகளும் தலாக் விடக் காரணமாகி விடுகின்றன. “சொன்ன படி நகை செய்து போடவில்லை, சீர் எடுத்துத் தரவில்லை; பாலும் பழமும் சீர் நாம் எதிர்பார்த்த படி செய்யவில்லை. எதிர் வீட்டில் இவ்வளவு வாங்கினார்கள், அந்த வீட்டுக்கு அவ்வளவு வந்து சேர்ந்தது. எனவே தலாக் ஒன்று தான் இதற்குத் தீர்வு” என்று முடிவு கட்டி விடுகிறார்கள். இது போன்ற காரணங்களுக்காக ஒரு பெண்ணை தலாக் விடுவதில் கணவனை விட அவனது தாயே முன்னே நிற்கின்றாள். 3. தலாக் விடுவதற்கான காரணங்களில் பல “அற்பமானவை”. “மாமியார் பேச்சைக் கேட்பதிலை. நாத்தனாரை மதிப்பதில்லை. அனுமதி வாங்காமல் ‘அம்மா வீட்டுக்குப் போகிறேன்’ என்று ஒரு வரியில் சொல்லி விட்டுப் போய் விடுகிறாள்…”. இப்படிப் பட்ட காரணங்களுக்கெல்லாம் விவாக ரத்து தான் தீர்வா? கணவன் அருகில் இருந்திருந்தால் உடனுக்குடனேயே திருத்தி விடலாம் தானே!
ஆக, இது போன்ற சூழ்நிலைகளில் “அப்பாவிக் கணவன்மார்கள்” தொலை தூரத்தில் இருந்து கொண்டு அம்மா பேச்சைக் கேட்டு அவசரப் பட்டு தலாக் விட்டு விட்டு பின்னர் “உண்மை நிலவரம்” வெளிப்பட்ட உடன் மனம் வருந்தி இனி சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கின்றதா என்று அறிந்திடத் தான் பத்திரிகைகளுக்கு எழுதிக் கேட்கின்றார்கள்.
இது போன்ற சிக்கல்களிலிருந்து நம் சமுதாயம் விடுபடும் வழி வகைகளை இங்கு ஆய்வோம்.
1. திருமணத்தை “கலாச்சார” வழியில் நடத்தி விட்டு, தலாக் கூடுமா என்று மார்க்க அறிஞர்களைக் கேள்வி கேட்பவர்களைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்போம். வரதட்சனை கூடுமா என்று எந்தப் பத்திரிகைக்காவது எழுதிக் கேட்டதுண்டா? திருமணத்துக்கு “கலாச்சாரம்”. விவாகரத்துக்கு மார்க்கமா? ஏன் இந்த இரட்டை நிலை? எனவே தான் சொல்கிறோம். சீர்திருத்தம் என்பது திருமணத்துக்கு முன்பேயே துவங்கி விட வேண்டும்.
2. மனைவியை விட்டு விட்டு வெளி நாடு செல்வதற்கு எந்த அறிஞர் நமக்கு “ஃபத்வா” கொடுத்திருக்கிறார்? இளைஞர்களே! இளம் கணவன்மார்களே! இன்று ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவு உங்களுக்கு ஒரு வாய்ப்பைத் தந்துள்ளது. எதிர்காலம் குறித்து இப்போதே திட்டமிடுங்கள். ஒன்று மனைவியோடு சேர்ந்து வாழ “கஞ்சியோ கூழோ” அது போதும் என்று புறப்பட்டு விடுங்கள். அல்லது வசதி இருப்பின் மனைவியை உடன் அழைத்துச் சென்று விடுங்கள்.

3. தாய் பேச்சைக் கேட்பதற்கு ஒரு வரம்பு இருக்கின்றது. படைத்தவனுக்கு மாறு செய்யும் வகையில் படைப்பினங்களுக்குக் கட்டுப்படுதல் கூடாது என்பது நபி மொழி. எனவே “எந்த ஒரு நியாயமான காரணமுமின்றி – அம்மா தலாக் விடச் சொன்னார். அதனால் தான் சொன்னேன்” என்றெல்லாம் கூறுவது ஆண்மையற்ற செயல்.
4. வெளி நாட்டில் இருக்கும் போதே – மனைவியுடன் பிணக்கா? உங்களை மதிக்கவில்லையா? உங்கள் பேச்சைக் கேட்பதில்லையா? எதிர்த்துப் பேசுகிறாளா? அவமதித்து விட்டாளா? உடனேயே தலாக் விட்டு விடலாம் என்று தோன்றுகிறதா? அவசரப் படாதீர்கள். முதலில் உங்கள் கோபம் தணியட்டும். பின்பு நேரடியாக மனைவியுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் மனைவியின் தரப்பை செவி தாழ்த்திக் கேளுங்கள். இது மிகவும் முக்கியம். பின்னர் பொறுமையாக உங்கள் எதிர்பார்ப்பை வெளிப் படுத்துங்கள். ஈகோவை விட்டு விடுங்கள். நபியவர்கள் கூட தங்கள் மனைவிமார்களிடம் எப்படி நடந்து கொண்டிருந்தார்கள் என்று ஆலிம்களிடம் கேட்டுப் பாருங்கள். தொலைபேசியில் நேரடியாக பேசிட தயக்கமா? இருவருக்கும் பொதுவான இன்னொருவர் மூலமாக உங்கள் கருத்துக்களை தெரியப் படுத்துங்கள். அவர் மூலம் உங்கள் மனைவியின் கருத்துக்களைப் புரிந்து கொள்ளுங்கள்.
5. இதுவெல்லாம் சரிப்படாதா? தலாக்குக்கு அவசரப் படுவதற்கு பதிலாக ஒரு தடவை ஊருக்கு வந்து செல்லுங்கள். வந்ததும் ஆலிம்களை அணுகி விளக்கம் கேட்டுக் கொள்ளுங்கள். பிரச்னையை சுமுகமாகத் தீர்த்திட முயற்சி செய்யுங்கள். “துபாயிலிருந்து” புறப்படும்போது உங்கள் மனைவியிடம் இருந்த வெறுப்பு உங்கள் மனைவியை நேரில் பார்த்ததுமே பறந்து போய் விட வாய்ப்பு இருக்கிறது. அல்லாமல் தொலைபேசித் தலாக்கின் பக்கம் நாடினால் என்னென்ன “வாய்ப்புகளை” நீங்கள் இழக்கிறீர்கள் என்பதை சற்றே சிந்தியுங்கள்.
6. தலாக் விடுவது என்று முடிவெடுத்து விட்டால் மார்க்கம் எப்படி அதனைக் கற்றுத் தருகிறது தெரியுமா?
அ. உங்கள் மனைவி மாதவிடாயிலிருக்கும் போது நீங்கள் தலாக் விடக்கூடாது. அல்லாஹ் இதனை விதித்திருப்பதில் ஒரு பெரிய உளவியல் தத்துவமே அடங்கியுள்ளது! ஆனால் தொலைபேசியில் தலாக் சொல்ல முற்பட்டால், உங்கள் மனைவியிடம் “ஏண்டீ! நீ இப்போ மென்ஸஸில் இருக்கிறாயா? சுத்தமாக இருக்கிறாயா” என்று கேட்கப் போகிறீர்களா? சொல்லுங்கள்?

ஆ. மாதவிடாயிலிருந்து சுத்தமான பின்னர், மனைவியுடன் உடலுறவு கொள்ளாத நிலையில் ஒரே ஒரு தலாக் விடலாம். உங்கள் மனைவி மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்த நிலையில் இருவருக்குமே உடலுறவு ஆசை மேலோங்கியிருக்கும். அந்த ஆசையை விட உங்கள் வெறுப்பு மிகைத்தால் மட்டுமே தலாக் சொல்லிட இயலும். ஆனால் ஒரே ஒரு தடவை நீங்கள் சேர்ந்து விட்டாலும், அவ்வளவு தான். அந்த மாதம் நீங்கள் தலாக் விடவே முடியாது. சுப்ஹானல்லாஹ்! எஸ்.எம்.எஸ் – தலாக் இந்த வாய்ப்பை உங்களுக்கு வழங்கிடுமா?
இ. ஒரு தலாக் சொல்லி விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் மனைவியை நீங்கள் அவருக்கு வழங்கியிருந்த வீட்டை விட்டு வெளியேற்றிட முடியாது. அவர்களாகவும் வெளியேறிச் சென்றிடவும் கூடாது. இப்போது இருவரும் ஒரே வீட்டில். தலாக் விட்டிருக்கும் நிலையில் நீங்கள் உங்கள் மனைவியைத் தீண்டக் கூட முடியாது. தீண்டினாலே தலாக் முறிந்து விடும் தெரியுமா? சரி, தீண்டவும் இல்லை. அவர் பாட்டுக்கு அவர் வேலையைப் பார்க்கிறார். நீங்கள் பாட்டுக்கு உங்கள் வேலையைப் பார்க்கிறீர்கள். என்ன நடக்கும்? பழைய நினைவுகள் உங்களை பின்னோக்கி அழைத்துச் செல்லும். நீங்கள் உல்லாசமாக இருந்த கணங்களை மீட்டிப் பார்ப்பீர்கள்.
இப்போது சோகமே உருவான முகத்துடன் உங்கள் மனைவி உலா வருவதையும் கவனிப்பீர்கள். இரக்கம் வரும் உங்கள் மனைவி மீது. உங்கள் மனைவியின் ஒரு குறை உங்களுக்குப் பெரிதாகத் தெரிந்தால், அவருடைய இன்னொரு நிறையை நினைவு கூற வாய்ப்பு இப்போது. இப்படி ஒரு மாத கால அவகாசம் உங்களுக்குத் தரப் பட்டிருப்பதன் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள மாட்டீர்களா? நீங்கள் இரண்டாவது தலாக் விட்டாலும், இதே நடைமுறையைத் தான் கையாள வேண்டும். இன்னொரு வாய்ப்பு! இன்னொரு மாதம்! என் அன்புச் சகோதரர்களே! தொலை பேசித் தலாக்கில் இதற்கெல்லாம் சாத்தியம் உண்டா?
ஈ. எனவே கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து பிரச்னை தலைதூக்கினால் – முதலில் கணவன் தன்னளவில் – மார்க்க அறிஞர்களின் வழி காட்டுதல்களுடன் – பிரச்னையைத் தீர்க்க முயல வேண்டும். அடுத்து குடும்ப அளவில் ஒன்று கூடி சுமுகமான ஒரு தீர்வுக்கு வழி காண வேண்டும். தேவைப் படின் மன நல ஆலோசகர் ஒருவரையும் தம்பதிகள் இருவரும் சேர்ந்து சென்று சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். அப்படியும் பிரச்னை தீரவில்லை எனில் மார்க்க அறிஞர்களிடம் தலாக் விடும் முறைகள் குறித்தும், அதன் நிபந்தனைகள் குறித்துமான வழி காட்டுதல்களை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். உ. தலாக் பிரச்னையில் அவசரம் காட்டக் கூடாது. ஏனெனில் பாதிக்கப் படுவது ஒரு பெண் மட்டுமல்ல. அந்த பெண்ணின் குடும்பத்தார்களும் சேர்ந்து பாதிப்புக்குள்ளாகிறார்கள். அவர்களின் குழந்தைகளும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். ஏன், ஒரு தலைமுறையின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடுகிறது. இதில் கணவன், மனைவி, குடும்பம், உறவினர்கள், ஜமாஅத் தலைவர்கள், ஆலிம் பெருமக்கள், முஸ்லிம் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது. ஏனெனில் இது குறித்து ஒவ்வொருவரும் அல்லாஹ்வுக்கு பதில் சொல்லக் கடமைப் பட்டவர்களே என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
7. இறுதியில் ஒரு வேண்டுகோள். நம் சமுகத்தின் “பயணக் கலாச்சாரம்” பல பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ந்மது சமுகத்தின் புதிய தலைமுறை மீளாய்வு செய்திடும் காலம் வந்து விட்டது. இனியும் இதில் தாமதிப்பதில் பொருள் இல்லை. “நாங்கள் எல்லாம் இல்லையா? உங்கள் வாப்பா சிங்கப்பூரில் இருந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வருவார்கள். அப்படி என்ன உங்களுக்கு பொண்டாட்டி சுகம் கேட்கிறது? ” என்று சில தாய்மார்கள் இன்னும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். “ஊம். ஊருக்கு வந்து விட்டால் செலவுக்கு என்ன பண்ணுவதாம்?” என்று வீட்டுச் செலவுக்கு ஒரு பெரிய்ய பட்டியல் போட்டுக் கொண்டு மகன்களின் உழைப்பையும இல்லற வாழ்க்கையையும் சூரையாடிக் கொண்டிருக்கும் தாய்மார்களுக்குக் கட்டுப் பட்டுத் தான் ஆக வேண்டுமா? சொல்லுங்கள்!
8. என் அன்புக்குரிய தாய்மார்களே! இறுதியில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அதிகம் பாதிக்கப் படுவது பெண்ணினம் தான் என்பதை எப்போது தான் உணர்வீர்களோ?

பிற்சேர்க்கை 7:
தேவை: திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையம்!
முதலில் - ஒத்த கருத்துடைய, ஆய்வுக் கண்ணோட்டம் மிக்க, குடும்ப நல சீர்திருத்தத்தில் மிகுந்த ஆர்வமுடைய ஒரு சிலர் ஒன்று சேருங்கள்.
திருமண சீர்திருத்தம் குறித்த ஆழமான அறிவைப் பெற்றுக் கொள்ளுங்கள். நான் இங்கே நான்கு அறிஞர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கின்றேன்.
அ. யாஸிர் ஃபஸாகா (Yasssir Fazaga) எனும் இஸ்லாமிய அறிஞர்; இவருடைய சொற்பொழிவுகளை YouTube ல் சென்று கேளுங்கள். குறிப்பாக குடும்ப நலன் குறித்த இவரது பேச்சுக்களை அவசியம் கேளுங்கள்.
ஆ. யாவர் பைஃக் (Yawar Baig) எனும் அறிஞர். இவர் திருமணம் குறித்து எழுதிய நூல் ஒன்று இணைய தளத்தில் கிடைக்கிறது. அவசியம் படியுங்கள்.
Link: http://www.yawarbaig.org/yawarbaig/my-books/marriage-the-making-and-living-of-it
மேலும் இவருடைய சொற்பொழிவுகளையும் YouTube ல் சென்று கேளுங்கள்.
இ. கமால் ஸஹ்ராவி (Kamal Zahraawi) எனும் அறிஞர். இவர் நடத்தும் இணைய தளம்:
http://salaamhearts.com/
திருமணம் இல்லறம் குறித்த வழிகாட்டுதலுக்கு இது ஒரு மிக முக்கியமான இணையதளம் ஆகும்.
ஈ. ருகையா வாரிஸ் மக்ஸூத் (Ruqayya Warith Maqsood) எனும் அறிஞர். இவருடைய Marriage guide அவசியம் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று. இணைய தளத்தில் கிடைக்கிறது.
http://www.biharanjuman.org/MarriageGuide.pdf
எமக்குத் தெரிந்த பெயர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். ஆழ்ந்து படியுங்கள்; சிந்தியுங்கள்; ஒத்த கருத்துடையவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அடுத்து ஒத்த கருத்துடைய நீங்கள் ஒன்று சேர்ந்து திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையம் (Marriage Research and Guidance Centre) ஒன்றைத் துவங்குங்கள்; அதனை இஸ்லாமியக் கல்லூரி அல்லது பல்கலைக் கழகம் ஒன்றுடன் இணைத்தல் நலம்.
திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையத்தின்
நோக்கம், அமைப்பு, மற்றும் செயல்திட்டம்
A நோக்கம்:
அ. திருமணம் ஆகாதவர்களுக்கு
முறையான இஸ்லாமியத் திருமணம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் (Bringing an awareness about Islamic Marriage)
இளைஞர்களுக்கு இஸ்லாமிய வாழ்க்கை நெறிப் பயிற்சி அளித்தல் ( Providing Tarbiyyah and Tazkiyah training )
இளைஞர்களையும் இளைஞிகளையும் திருமணத்துக்கு முன் தயார் படுத்துதல் (Preparing the youth before marriage)
பொருத்தமான திருமணத் தேர்வுக்கு வழிகாட்டுதல் (Guidance for making a compatible marital choice)
கணவன் மனைவி இல்லறம் குறித்த தெளிவான வழி காட்டுதலை வழங்குதல் (Guidance for a happy married life)
கருத்து வேறுபாடுகளின் போது நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து கணவன் மனைவி இருவருக்கும் கவுன்ஸலிங் வழங்குதல் (Counselling for conflict resolution)
பயிற்சி பெற்று திருமணம் முடித்த தம்பதியர்களின் திருப்தியான இல்லற வாழ்வை ஆய்வு செய்தல் (Conducting surveys on the lives of couples who were trained)
குழந்தை வளர்ப்பில் வழிகாட்டுதல் (Guidance on Islamic parenting)
ஆ. திருமணம் ஆனவர்களுக்கு
கணவன் மனைவி இல்லறம் குறித்த தெளிவான வழி காட்டுதலை வழங்குதல் (Guidance for a happy married life)
குழந்தை வளர்ப்பில் வழிகாட்டுதல் (Guidance on Islamic parenting)
கருத்து வேறுபாடுகளின் போது நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து கணவன் மனைவி இருவருக்கும் கவுன்ஸலிங் வழங்குதல் ம்(Counselling for conflict resolution)
B அமைப்பு:
திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையத்தின் அமைப்பு ஒரு இயக்கம் சாராத அமைப்பாக விளங்கிட வேண்டும். சமூகத்தின் அனைத்து அங்கத்தினர்களுக்கும் அது பயன்படக் கூடியதாக விளங்கிட வேண்டும். பல்கலைக்கழகம் ஒன்றுடன் இணைந்து செயல்படுதல் மிக நன்று! அல்லது பொதுவான சமூக நல அமைப்பு ஒன்றுடன் இணைந்து செயல்படலாம்.
இந்த ஆய்வு மையம் இரண்டு பிரிவுகளாக செயல் பட வேண்டும். ஆண்களுக்கு என்று ஒரு பிரிவு; பெண்களுக்கென்று ஒரு பிரிவு.
இவ்விரண்டு பிரிவுகளும் தனித்தனியே இயங்க வேண்டிய தளங்களில் தனித்தனியாகவே இயங்கிட வேண்டும்; ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தளங்களில் - இஸ்லாமிய விழுமியங்களுக்கு உட்பட்டு ஒருங்கிணைந்து செயல்படலாம்.
இங்கே நாம் சில குறிப்புகளை மட்டுமே வழங்கியிருக்கின்றோம். இவைகளை களத்தில் இறங்குவோர் விரிவு படுத்திக் கொள்வார்களாக!
C செயல் திட்டம்:
திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையத்தின் விரிவான செயல்பாடுகள் குறித்து பின்னர் நாம் சிந்திபோம். இப்போது - ஆய்வு மையத்தின் மிக முக்கியமான ஒரு செயல்பாடு குறித்து மட்டும் பார்ப்போம்:
இது ஒரு ஆய்வுக்கான செயல் திட்டம்!
என்ன செய்திட வேண்டும்?
இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட அல்லது ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ள திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு ஒரு அழைப்பு விடுங்கள். திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையத்தின் நோக்கம் என்ன என்பதைக் குறித்து அவர்களுக்கு விளக்குங்கள்.
சுருக்கமாக மீண்டும் சொல்வோம்: ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள திருமணம் ஆகாத இளைஞர்களை அழைக்கிறோம்; அவர்களைப் பதிவு செய்து கொள்கிறோம்; பயிற்சி அளிக்கிறோம்; திருமணத்துக்கு அவர்களைத் தயார் செய்கிறோம்; நல்லதொரு துணையைத் தேர்வு செய்திட வழிகாட்டுகிறோம்; திருமணத்துக்குப் பின் அவர்களின் வாழ்வின் திருப்தி குறித்து ஆய்வு செய்கிறோம்; மேலும் அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறோம்; அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். அவ்வளவு தான்!
ஆர்வத்துடன் முன் வருபவர்களை முறைப்படி பதிவு செய்து கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.
அடுத்து கேள்விப்படிவம் (Questionnaire) ஒன்று தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்; அதில் பின் வரும் கேள்விகளை சேர்த்துக் கொள்ளுங்கள்:
இஸ்லாமிய மார்க்கம் குறித்த உங்கள் பார்வை என்ன?
நீங்கள் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றிடத் தயாரா?
இஸ்லாமிய திருமணம் குறித்து உங்கள் கண்ணோட்டம் என்ன?
நீங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றும் ஒரு பெண்ணையே மனைவியாகத் தேர்வு செய்திடத் தயாரா?
உங்கள் கணவராக / மனைவியாக வர இருப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
நீங்கள் விரும்பும் நற்பண்புகள் என்னென்ன?
என்னென்ன நற்பண்புகளை உங்கள் வருங்காலத் துணையிடம் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
உங்கள் பெற்றோர்கள் மார்க்கத்தை முழுமையாகப் பின்பற்றுபவர்களா?
இஸ்லாத்தில் பெண்ணுரிமை குறித்து உங்கள் கருத்து என்ன?
எமது திருமண வழிகாட்டும் மையம் உங்களைப்போன்ற திருமணம் ஆகாதவர்களை வைத்து ஒரு ஆய்வை மேற்கொள்ள இருக்கின்றது. அந்த ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு தரத் தயாரா?
மேலும் தேவைக்கேற்ப கேள்விகளை சேர்த்துக் கொள்ளலாம்.
படிவங்களை நிரப்பி வாங்கி கோப்புகளில் வரிசைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.
இதே போன்று திருமணம் ஆகாத இளைஞிகளுக்கும் தனியே அழைப்பு அனுப்பப்பட்டு ஆர்வத்துடன் வருபவர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து திருமணத்துக்கு முன் அவர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகள் குறித்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்..
தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்ட இளைஞர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பயிற்சிகள்:
தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்ட இளைஞர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பயிற்சிகள் பற்றி பார்ப்போம்:
அ. இறையச்சப் பயிற்சி (tazkiyah and tarbiyyah);
ஆ. திருமணத்துக்கு அவர்களைத் தயார் படுத்தும் பயிற்சி (preparation for marriage)
இ. மனித உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் பயிற்சி (developing inter-personal skills)
ஈ. கருத்துப் பரிமாற்றப் பயிற்சி (communciation skill)
உ. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திடும் பயிற்சி (soft skills / emotional skills)
ஊ. கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ளும் பயிற்சி (conflict resolution skill)
எ. மனித வள மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் வாழ்க்கையின் இலட்சியம் (human resource development and life goal)
இவை அனைத்தும் சொற்பொழிவுகளாக அல்லாமல் பயிலரங்கங்களாக வைத்து நடத்தப்பட வேண்டும்.
பயிற்சிகள் குறித்து மேலும் நாம் விரிவாக விவாதிக்க வேண்டியுள்ளது. பிறகு பார்ப்போம்.
அதனைத் தொடர்ந்த செயல்பாடுகள் குறித்து மேலும் சிந்திப்போம் இன்ஷா அல்லாஹ்.

ஒவ்வொருவரின் ஆளுமை குறித்த மதிப்பீடும் அவசியம்!
ஒவ்வொருவரின் ஆளுமை குறித்த மதிப்பீடும் அவசியம்!
http://salaamhearts.com/
இந்த இணைய தளம் 65 கேள்விகளைக் கொண்டு தனிப்பட்ட ஒருவரின் ஆளுமை பற்றிய மதிப்பீடு ஒன்றை (personality assessment) வழங்குகிறது. முன்னேற்றத்திற்கான வழிமுறைகளையும் சொல்லித் தருகிறது அந்த இணைய தளம்.
அது போலவே ஒவ்வொருவருடைய ஆளுமைகளை வகைப்படுத்தித் தரும் (personality types) இணைய தளங்கள் நிறைய இருக்கின்றன. பின் வரும் இணைய தளம் அவற்றுள் ஒன்று:
http://www.myersbriggs.org/my-mbti-personality-type/mbti-basics/
இவைகளைப் பயன்படுத்தி - நமது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இளைஞர்களின் ஆளுமைகளை தனித்தனியே மதிப்பீடு செய்து கோப்புகளில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட ஒருவரின் ஆளுமை மதிப்பீடு அவரை எப்படிப்பட்டவர் என்று தெளிவு படுத்திக் கொள்ள பெரிதும் உதவும்.
ஒருவர் தனிமை (introvert) விரும்பியா? அல்லது வெளியே சென்று (extrovert) மற்றவர்களுடன் பழகுவதை விரும்பக்கூடியவரா என்பதை மதிப்பீடு செய்து தரும்.
ஒருவர் உணர்வுக்கு (feeling oriented) மதிப்பளிப்பவரா? அல்லது அறிவின் (thinking oriented) அடிப்படையிலேயே செயல்படுபவரா என்பதை எடுத்துச் சொல்லும்!
ஒருவருடைய பலம் என்னென்ன, பலவீனங்கள் என்னென்ன என்பதை கோடிட்டுக் காட்டும்.
இப்படிப்பட்ட ஆளுமை மதிப்பீட்டின் அடிப்படையில் - ஒருவர் தன் பலங்களை வலுப்படுத்திக் கொண்டு பலவீனங்களை வெல்வது எப்படி என்பதை நமது பயிற்சிகளின் வழியே அவர்களுக்கு வழிகாட்டலாம்.
இவ்வாறு நமது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இளைஞர்கள் - குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு தடவை நேர்காணல் செய்யப்பட வேண்டும்; அவர்களின் முன்னேற்றம் குறித்த மதிப்பீடுகளும் கோப்புகளில் சேர்க்கபட வேண்டும். அவர்கள் மேலும் முன்னேறிச் சென்றிட ஊக்கப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு ஒரு ஆண்டு கால பயிற்சிக்குப் பிறகே அவர்கள் திருமணத்துக்குத் தயாராக வேண்டும்.
திருமணத்துக்கு ஒருவர் தயாராவது எப்படி?
ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:
இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் திருமணம் என்றால் என்ன, அது கொண்டு வரும் பொறுப்புகள் யாவை என்பது குறித்து தெளிவான அறிவைப் பெற்றுக் கொள்தல்;
திருமணம் செய்து கொண்டு - இல்லற வாழ்வைத் தொடங்கி - இல்லறத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் நிறைவேற்றிடும் தகுதி தமக்கு முழுவதும் இருக்கின்றதா என்று சுய பரிசோதனை செய்து கொள்தல்;
தனது பலம் பலவீனம் குறித்த மதிப்பீட்டினை தெளிவாக உணர்ந்து கொள்தல்;
திருமணம் தாமதமானால் தனது கற்பைப் பாதுகாத்துக் கொள்தல்; கண் பார்வையைத் தாழ்த்திக் கொள்தல்; நஃபிலான நோன்புகளை வைத்துக் கொள்தல்; ஆண்களிடமிருந்து பெண்களும், பெண்களிடமிருந்து ஆண்களும் இயன்ற வரை ஒதுங்கியே இருத்தல்;
ஒருவரை திருமணம் செய்திட நமக்குப் பரிந்துரைக்கப்பட்டால் - அவர் நமக்குப் பொருத்தமானவர் தானா என்று அறிந்திட நேர்மையான முயற்சிகளை மேற்கொள்தல்; அவருடைய கல்வி பற்றி, மார்க்கம் பற்றி, பொருளாதார நிலை பற்றி, அவருடைய ஆளுமை பற்றி, அவருடைய குண நலன் பற்றி, அவர் மற்றவர்களுடன் பழகிடும் விதம் பற்றி - இயன்ற வரை தகவல்களை அறிந்து கொள்ள முயற்சி செய்தல்;
அவ்வாறு ஒருவர் நமக்குப் பொருத்தமானவர் தான் என்று நமக்குத் தோன்றி விட்டால் - அவரை - மற்ற உறவினர்கள் முன்னிலையில் சந்தித்து - மேலும் அவரைப்பற்றியும், அவருடைய ஆளுமை பற்றியும், அவருடைய எதிர்பார்ப்புகள் பற்றியும், அவர் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் பற்றியும், திருமணத்துக்குப்பின் எந்தெந்த விஷயங்களில் எல்லாம் கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்று சந்தேகம் வருகிறதோ - அவை அனைத்தையும் பற்றியும் - எந்த ஒரு தயக்கமும் இன்றி - கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்தல்;
திருமண சட்டங்களையும், திருமண ஒப்பந்தம் குறித்த மார்க்க வழிகாட்டுதலையும் நன்றாக அறிந்து கொள்தல்;
இஸ்திஃகாரா நஃபில் தொழுது வல்லோன் அல்லாஹு தஆலாவிடம் உதவி கேட்டல்;
பின் திருமண ஏற்பாடுகளில் - அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து காரியமாற்றுதல்;
நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட இளைஞர் / இளைஞிகள் அனைவருக்கும் நாம் மேலே சொன்ன வழிகாட்டுதல்கள் அனைத்தையும் முழுமையாக வழங்குதல் அவசியம்!
http://salaamhearts.com/ - இணைய தளம் மிக விளக்கமாக வழிகாட்டுகிறது இவ்விஷயத்தில்!
திருமண வழிகாட்டும் ஆய்வு மையத்தை நிர்வகிப்பவர்கள் இந்த இணைய தளத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.
இயன்றால் - இஸ்லாமிய அறிஞரும் ஆலோசகருமாகிய கமால் ஸஹ்ராவி அவர்களை வைத்தே - இப்பயிற்சியை நமது இளைஞர் இளைஞிகளுக்குத் தரலாம் என்பது என் கருத்து!
அவருடைய "Dwell in Tranquility: an Islamic roadmap to the vibrant marriage " - எனும் நூலையும் வாங்கிப் படிக்கலாம்.
எனது சொந்தக் கருத்து ஒன்று!
திருமண ஆய்வு மையம் பற்றி எழுதி வருகிறோம் அல்லவா? தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளைஞிகளுக்கு திருமணப் பயிற்சி அளிப்பது குறித்தும் எழுதி வருகிறோம் அல்லவா? அவர்களுடைய ஆளுமை மதிப்பீடுகளையும் கோப்புகளில் தயாராக வைப்பது பற்றியும் எழுதியிருக்கிறோம் அல்லவா?
எல்லாவிதமான பயிக்சிகளையும் வழங்கிய பின்பு - அடுத்து என்ன செய்திட வேண்டும் என்றால் -
ஆய்வு செய்திடும் உயர்மட்ட மேலாண்மைக் குழு ஒன்று பதிவு செய்யப்பட்ட ஆண்களின் கோப்புகளையும் பெண்களின் கோப்புகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஆணுக்குப் பொருத்தமான பெண் யார் யார் எல்லாம் நம்மிடம் இருக்கின்றார்கள் என்று பார்த்திட வேண்டும்; அது போலவே ஒரு பெண்ணுக்குப் பொருத்தமான மணமகன்கள் யார் யார் நம்மிடம் உள்ளார்கள் என்றும் பார்த்திட வேண்டும்.
பொருத்தப் பட்டு வரும் ஒரு பெண் பற்றிய தகவல்களை அவருடைய பெற்றோர் அனுமதியுடன் குறிப்பிட்ட இளைஞனுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும். இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க ஏற்பாடு செய்யப்படலாம். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள அந்த சந்திப்பு உதவிட வேண்டும். இருவர் குடும்பங்கள் பற்றிய தகவல்களும் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டும்.
அந்தக் கருத்துப் பரிமாற்றம் திருமணத்தை நோக்கி அழைத்துச் சென்றால் அல்ஹம்து லில்லாஹ். இல்லாவிட்டால் - இப்படி ஒரு ஏற்பாடு நடந்தது என்று கூட யாருக்கும் தெரியாமல் (confidential) பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் நிபந்தனைகள்:
இது விஷயத்தில் யாருக்கும் எந்த ஒரு நிர்ப்பந்தமும் இருக்கக் கூடாது!
மிக மிக முக்கியமாக - இது விஷயத்தில் எடுக்கப்படும் முயற்சிகள் அனைத்தும் முற்றிலும் confidential - ஆக அமானத்தாக பாதுகாக்கப்பட வேண்டும்; மேலாண்மைக் குழு - இது விஷயத்தில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர்களுக்கு உறுதியான வாக்குறுதியை வழங்கிட வேண்டும்.
இது எனது சொந்தக் கருத்து மட்டுமே!
"நல்ல தூய்மையுள்ள பெண்கள் நல்ல தூய்மையான ஆண்களுக்கும், நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் ( உரியவர்கள் ஆவார்கள்)". (24: 26)
ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கும் செய்திகள் என்ன?
திருமணத்துக்குப் பின்னர் கொஞ்ச காலம் அவர்களை அப்படியே விட்டு விடுவோம்; அவர்களுக்காக நாம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து துஆ செய்வோம்.
"பாரகல்லாஹு லக வ பாரக 'அலைக்க வ ஜம'அனா பைனகுமா ஃபீ ஃக்ஹைர்!"
சரியாக ஒரு ஆண்டு கழித்து - மீண்டும் அவர்களை திருமண வழிகாட்டும் மையத்துக்கு தனித்தனியே அழைப்போம்.
இதற்கென ஒரு கேள்விப்படிவம் தயாரிக்கப்பட்டு அது அந்த தம்பதியரால் தனித்தனியாக நிரப்பப்பட வேண்டும்.
அந்தப் படிவங்களும் அமானத்தாக பாதுகாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு ஒரு சில ஆண்டுகளிலேயே நம்மிடம் பயிற்சி பெற்றுத் திருமணம் செய்து கொண்ட அனைவரின் இல்லற வாழ்க்கை குறித்த மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு விடலாம்.
இறுதியாக நமது ஆய்வின் முடிவில் நமக்குத் தெரிய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
திருமணம், இல்லறம் குறித்து வழிகாட்டப்பட்ட இளைஞர்கள், இளைஞிகளில் எத்தனை சதவிகிதம் பேர் - மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்கின்றார்கள்; ஒருவருடைய உரிமைகளை இன்னொருவர் மதித்து வாழ்கிறார்கள்; ஒருவருடைய உணர்வுகளை மற்றவர் மதித்து வாழ்கின்றார்கள்?
திருமணத்துக்குப் பின் எந்தெந்த விஷயங்களில் எல்லாம் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றின?
எத்தனை சதவிகிதம் பேர் தங்களுக்குள் தோன்றக்கூடிய கருத்துவேறுபாடுகளின் போது தொடர்ந்து பேசிக் கொண்டு கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க வேண்டிய முறையில் தீர்த்துக் கொண்டார்கள்?
மேலும் அவர்களுக்குள் சவாலாக விளங்கக் கூடிய பிரச்னைகள் என்னென்ன? (அந்தப் பிரச்னைகளுக்கு கவுன்ஸலிங் மூலம் தீர்வு காணவும் வழி வகை செய்யப்படலாம்).
இன்னும்... இன்னும்..
**
அதன் பின்னர் - நமது ஆய்வுகள் தெரிவிக்கின்ற செய்திகளை நமது முஸ்லிம் சமூகத்துடன் பரிமாறிக் கொள்ளலாம்.
இப்படிப்பட்ட ஆய்வுகளிலிருந்து முஸ்லிம்களின் புதிய தலைமுறை எண்ணற்ற பாடங்களை நிச்சயமாகப் படித்துக் கொள்ளும்! நல்லதொரு மாற்றம் ஏற்படும் இன்ஷா அல்லாஹ்!!
மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான். (29:69)


4 comments:

  1. Assalamu Alaikum Kaka enaku indha book udaya full pdf kidaikuma please +971566184666 mail id (smartrawoouf03@gmail.com) please forward pannunga

    ReplyDelete
  2. எனக்கு உதவி செய்யும் தலைமை எலி டோடோருவின் நல்ல பணி குறித்த எனது சான்று இது .... நான் வட கரோலினா அமெரிக்காவைச் சேர்ந்த ஆன் எர்னிஸ். இந்த எழுத்துப்பிழை உதவியுடன், கடந்த 3 ஆண்டுகளாக என்னை விட்டு வெளியேறிய என் கணவர் திரும்பி வந்தார், இறுதியில் இந்த நபரை ஒரு வலைப்பதிவு தளத்தில் சந்தித்தேன், ஒருவரால் ஒருவர் உதவிக்காக வாடிக்கையாளர் இடுகையிட்டார், நான் அவருக்கு எல்லாவற்றையும் விளக்கினேன், அவர் என்னிடம் ஒரு பற்றி கூறினார் அவர் அறிந்த ஸ்பெல் கேஸ்டர் மற்றும் என் பிரச்சினைகளை அவரிடம் சொல்ல ஸ்பெல் கேஸ்டருக்கு எழுத அவர் தனது வாட்ஸ்அப்பை எனக்குக் கொடுத்தார். வெறும் 2 வாரங்களில், என் கணவர் என்னிடம் திரும்பி வந்தார். இந்த உண்மையுள்ள மற்றும் நேர்மையான எழுத்துப்பிழைக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன், ஐயா நீங்கள் என்னிடம் சொன்னதெல்லாம் நிறைவேறி வந்து நன்றி ஐயா. தயவுசெய்து நான் அவர்களின் பிரச்சினைக்கு எந்தவொரு தீர்வையும் எதிர்பார்க்கும் அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன், தயவுசெய்து இந்த எழுத்துப்பிழை ஆலோசகரை அணுகவும், அவர் உண்மையானவர், அவர் சக்திவாய்ந்தவர் மற்றும் எழுத்துப்பிழை கேஸ்டர் என்ன சொன்னாலும் என்ன நடக்கும், ஏனென்றால் எழுத்துப்பிழை என்ன சொன்னது எல்லாம் வந்தது கடந்து செல்ல. தயவுசெய்து அவரை தொடர்பு கொள்ளலாம்: whatsapp +2349015088017

    ReplyDelete