Tuesday, November 18, 2014

இது யார் சொல்லித்தந்ததோ தெரியவில்லை!

"பெண்களைப் போல் அழாதே?!"

"உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்! அதனை வெளிக்காட்டாதே!

"உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என்பதெல்லாம் பெண்களுக்கு மட்டும் தான். ஆண்களுக்கு அது பலவீனம்!"

"ஆண்களைப் பொருத்தவரையில் - அவர்கள் - வெளிப்படுத்திடத் தக்க  ஒரு உணர்ச்சி இருக்கிறதென்றால் அது கோபம்மட்டும் தான்!"


"கோபத்தை வெளிப்படுத்துவது மட்டும் தான் "ஆண்மையின்" அடையாளம்!"

மற்ற உணர்வுகளையெல்லாம் உள்ளுக்குள்ளேயே வைத்து அடக்கிக் கொள்!"

இப்படிச் சொல்லித் தான் நாம் ஆண் பிள்ளைகளை  வளர்த்து வந்திருக்கின்றோம்.

**

இது யார் சொல்லித்தந்ததோ தெரியவில்லை! பெரும்பாலான ஆண்கள் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்!

ஆனால் - நபியவர்களின் சுன்னத் இதற்கு நேர் மாற்றமாக இருக்கின்றது!

ஆனால் உணர்வுகள் உணர்ச்சிகள் விஷயத்தில் - நபியவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் பாருங்கள்:

நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் (ரலி) மரண வேளையில் நபி (ஸல்) அவர்கள் தூக்கி முத்தமிட்டார்கள் முகர்ந்தார்கள் அவரது உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்களின் இரு கண்களும் கண்ணீரை சிந்தின.

அப்போது அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே தாங்களுமா என்று கேட்டார்.
அதற்கு அவ்ஃபின் மகனே இது கருணையாகும் என்று கூறிவிட்டு கண்கள் கண்ணீரை சொரிகின்றது உள்ளம் மிகவும் வருந்துகின்றது என்றாலும் எங்கள் இறைவன் பொருந்திக் கொள்ளாத வார்த்தைகளை நாம் சொல்ல மாட்டோம்.

இப்ராஹீமே உன் பிரிவால் நாங்கள் பெரும் கவலையில் இருக்கிறோம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அனஸ்(ரலி)) (ஆதாரம் : புஹாரி முஸ்லிம்)

கண்ணீர் சிந்துவது கருணையின் அடையாளம் என்று நவில்கிறார்கள் காருண்ய நபியவர்கள்!

அது போலவே பாசம், அன்பு போன்ற நல்ல (POSITIVE) உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதும் நம்மைப் பொருத்தவரை ஆண்களுக்கும் நபி வழி தான்!

ஒரு நாள் கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் “நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்கள் முத்தமிடுவதில்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா?” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

கவனியுங்கள். அந்த அறியாமைக் காலத்திலும் - ஆண்மக்கள் - உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பதைப் பெருமையாகவே கருதி வந்திருப்பதும் இங்கே தெரிய வருகின்றது!  ஆனால் நபியவர்கள் அறியாமைக் காலத்து நடைமுறையை மறுத்து - அன்பை வெளிப்படுத்துவதை இறைக் கருணையோடு இணைத்துச் சொல்கின்றார்கள்.

அது போலவே கோபத்தில் எரிந்து விழுகின்ற கெட்டதொரு (NEGATIVE) உணர்ச்சியை எடுத்துக் கொள்வோம். இன்றைய நவ நாகரிக உலகில் - ஆண்கள் கோபத்தை வெளிப்படுத்துவதை ஒரு "வீரச்செயலாக" எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் - கோபத்தை வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்திக் கொள்வதையே வீரம் என்று வர்ணிக்கிறார்கள் - அண்ணல் நபியவர்கள்.

 “மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.ஆதாரம்: புகாரி

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் - இறை விருப்பத்திற்கு நேர் மாறாகவே ஆண்களில் பெரும்பாலோர் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தான்!

எனவே நாம் படித்துக் கொள்ள வேண்டியது நபியவர்களின் முன்மாதிரியையே தவிர - மற்றவைகளை அல்ல!

ஆண் மக்களே! உங்கள் இல்லற வாழ்க்கை சிறந்து விளங்கிட - உங்கள் மனைவி மக்களிடத்தில் - நல்ல உணர்வுகளைத் தவறாமல் வெளிப்படுத்துங்கள்! கெட்ட உணர்ச்சிகளை மட்டும் கட்டுப் படுத்திக் கொள்ளுங்கள்!

பின் வரும் ஒரே ஒரு நபிமொழி போதும்.  ஆண்கள் தங்களை மாற்றிக் கொள்ள:

அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தாத்துஸ் ஸலாஸில்' எனும் படைப் பிரிவுக்கு என்னை அனுப்பிவைத்தார்கள். அப்போது அவர்களிடம் நான் சென்று, "மக்களிலேயே உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆயிஷா' என்று பதிலளித்தார்கள். நான், "ஆண்களில் யார்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆயிஷாவின் தந்தை" -  என்று பதிலளித்தார்கள். "பிறகு யார்?'' என்று கேட்டதற்கு, "உமர்''என்று கூறிவிட்டு, மேலும் பலருடைய பெயர்களைக் குறிப்பிட்டார்கள்.

இந்த நபிமொழியில் ஒரு நுணுக்கமாக இழையோடக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது!

அது என்ன?

மக்களிலேயே உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்? என்ற கேள்விக்கு, "ஆயிஷா'' என்று பதிலளிக்கிறார்கள் நபியவர்கள்.

அடுத்து "ஆண்களில் உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்?'' என்ற கேள்விக்கு - "ஆயிஷாவின் தந்தை" -  என்று பதிலளிக்கிறார்கள் நபியவர்கள்.

ஏன்? அது அபூ பக்ர் அவர்கள் தான் என்று அவருடைய பெயரைச் சொல்லிக் குறிப்பிட்டிருக்கலாமே?

அவ்வாறு அவருடைய பெயரைச் சொல்லிக் குறிப்பிடாமல் - தன் மனைவியின் பெயரோடு சேர்த்து - "ஆயிஷாவின் தந்தை" என்று ஏன் குறிப்பிட வேண்டும்?

அபூ பக்ர் அவர்களைக் கூட - "ஆயிஷாவின் தந்தை" என்று குறிப்பிடுவதன்மூலம் - அன்னை ஆயிஷா அவர்களை மேலும் கண்ணியப்படுத்தியதாக ஆகி விடுகிறது அல்லவா?

உணர்வுகளை வெளிப்படுத்தும் விஷயத்தில் நபிவழியை நாம் பின்பற்றினால் - நமது இல்லறம் - இனிக்கும் இல்லறம் தான்! 

No comments:

Post a Comment