Wednesday, May 7, 2014

நம்பிக்கை மோசம் – நினைத்துக் கூடப் பார்க்க வேண்டாம்!

சுன்னத்தான இல்லறம்:

கணவன் மனைவியருக்குள் அசைக்க முடியாத நம்பிக்கை (trust) என்பது மிக அவசியம். ஒருவர் தனது வாழ்க்கைத்துணையை – “இனி நான் இவரை நம்பிடத் தயாரில்லை” – என்று முடிவெடுத்து விட்டால் – அவர்களின் உறவு (relationship) மிகவும் ஆட்டம் கண்டு விட்டது என்று பொருள். அவர்களின் இல்லற எதிர்காலம் இருண்டு விட்டதாக பொருள்.


இவ்வுறவை நீடிப்பதா அல்லது முடித்துக் கொள்வதா – என்று மகா குழப்பத்துக்கு ஆளாகிறார்கள் கணவன் மனைவியர்.

“இவளுடன் இல்லாமல் நான் வேறு ஒருத்தியைத் திருமணம் முடித்திருந்தால் என் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்” – என்று தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கும் கணவன் தான் – வேறு பெண்களை நாடுகிறான். அது போலத்தான் மனைவியரும்.

மனைவியின் குறைகளையே துருவிக் கொண்டிருக்காமல் – அவளுடைய நிறைகளை நினைத்து – அவைகளால் தான் அடையும் “பலன்களுக்கு” நன்றியுணர்ச்சி உடையவனாக கணவன் நடந்து கொள்ளும்போது – கணவன் மனைவி நம்பகத் தன்மை உறுதி செய்யப்படுகின்றது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு இறை நம்பிக்கையுள்ள ஆண் (கணவன்) ஒரு முஃமினான பெண்ணை (அவன் மனைவியை) வெறுக்க வேண்டாம்.அவன் அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால்,அவளிடமுள்ள வேறொரு நற்குணத்தைக் கொண்டு பொருந்திக்கொள்வானாக! என நபி (ஸல்) அவர்கள் ௬றினார்கள்.(முஸ்லிம்-2672)

இதற்குப் பெயர் தான் POSITIVE APPROACH!

மனைவியை வெறுப்பதற்கு பதிலாக –

“நீயே என் எதிர்காலம்! நீ இல்லாவிட்டால் என் வாழ்க்கை ஒரு பாலைவனம்; எனக்கு அற்புதமான குழந்தைகளைத் தந்தவள் நீ! நீ அன்பைப் பொழிகின்ற ஒரு அருமையான தாய்! நீ எனக்கு சிறந்த நண்பன். ஆலோசகன். நீ கொடுத்துக் கொண்டே இருப்பவள். கிடைப்பது பற்றிக் கவலைப்படாதவள்!” – என்றெல்லாம் உளமாற மனமாறப் பாராட்டிப் பாருங்கள்!

இதுவே நபிவழியாகும்! அப்புறம் – நம்பகத்தன்மை வலிமை பெறுகிறதா இல்லையா என்று பாருங்கள்.

ஆனால் – இல்லற வாழ்க்கை குறித்து சரியான வழிகாட்டுதலை அறியாத, நல்லெண்ணம் கொண்ட நமது சகோதர குடும்பங்களில் கூட இந்த நம்பிக்கை மோசடி – தலை விரித்து ஆடுகிறது! பல அவமானகரமான பின் விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது!

அவர்களுக்கு நம் ஆலோசனைகள்:

A. உங்கள் துணை உங்களை மோசம் செய்து விடாமல் இருப்பதற்கு:

ஏழையாக இருந்தாலும், இறையச்சமுள்ள நற்குணம் மிக்க ஒரு துணையைத் தேர்வு செய்யுங்கள்.

பயணம் சென்று பிரிந்து வாழும் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப் புள்ளி வையுங்கள்.

நெருங்கி வாழுங்கள்; நேரம் ஒதுக்குங்கள்; ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்;

துணையின் தேவைகளை நன்றாக நிறைவேற்றிக் கொடுங்கள். வெளியில் அழைத்துச் செல்லுங்கள்; பேசுங்கள்; சிரியுங்கள்; பேச விட்டுக் கேளுங்கள்; விளையாடுங்கள்.

வேலைப்பளுவைக் காரணம் காட்டி – அவர்களின் உணர்வுகளைப் புறக்கணிக்காதீர்கள்.

பாலுறவில் சுய நலம் வேண்டாம்; உங்கள் துணையின் திருப்தியை அலட்சியம் செய்து விடாதீர்கள்!

எதிர்மறைப் பேச்சுக்களை முற்றாகத் தவிர்த்திடுங்கள். இது தான் நம்பிக்கை மோசடிக்கு இட்டுச் செல்ல ஷைத்தான் தேர்வு செய்திடும் முதல் ஸ்டெப்!

சந்தேகம் ஏற்படுகின்றதா? வெளிப்படையாகப் பேசி விடுங்கள்; நீங்களும் வெளிப்படையாக நடந்து கொள்ளுங்கள்.

B. ஏதோ – காரணங்களால் உங்கள் துணையை வெறுத்து – அவருக்கு நம்பிக்கை மோசடி செய்திட ஷைத்தான் உங்களைத் தூண்டுகின்றானா? ஒரு தடவை நீங்கள் ஷைத்தானின் வலையில் வீழ்ந்து விட்டாலும் – அதன் விளைவுகளை சற்றே எண்ணிப் பாருங்கள்:

அனுதினமும் பொய் சொல்ல வேண்டிய அவல நிலைக்கு ஆளாக நேரிடும்.

தெரிந்து போய் விடுமோ என்ற அச்ச உணர்வு அலைக்கழித்துக் கொண்டே இருக்கும்.

யாருடைய வலையில் விழுகின்றீர்களோ – அவர்களின் மிரட்டலுக்கு ஆளாக வேண்டி வரும். திருந்தி வாழும் வாய்ப்பு கூட கடினமாகி விடும்.

வெட்க உணர்வு அற்றுப்போக நேரிடும்.

எதிர்காலம் இருண்டதாகி விடும், மற்ற உறவுகளும் கூட வர மாட்டார்கள்.

இதுவெல்லாம் ஒரு புறம் இருக்க – உங்கள் தாயின் மனநிலை என்னவாகும்? தந்தையின் தலைகுனிவுக்கு என்ன மருந்து? உங்கள் சகோதரர்களின் கண்ணியம் என்னவாகும்? சகோதரிகளின் திருமண வாழ்க்கை என்னவாகும்? நீங்கள் பெற்ற செல்வங்களின் மன நிலை என்ன பாடுபடும்? என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

வெளியே தலை காட்டிட முடியாமல் – கூனிக் குறுகி வாழ்ந்திட வேண்டிய அவல நிலைக்கு உங்கள் சுற்றம் ஆளாக நேரிடும்.

இறுதியாக ஒரு அறிவுரை: தப்பு செய்து விட்டு அது தெரிந்த பின்னரும் – உங்கள் துணைவர் உங்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் அது கண்ணாடி ஒன்றை உடைத்து விட்டு – மீண்டும் அதனை ஒட்ட வைப்பது போலத்தான்! கண்ணாடியின் பழைய தோற்றம் வரவே வராது!

எனவே – இறையச்ச மிக்க சமுதாயமே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஹம்மதின் சமுதாயமே!

தன் அடியார்களில் ஆணோ பெண்ணோ யார் விபசாரத்தில் ஈடுபடுவதைக் கண்டாலும் அல்லாஹ்வைவிடக் கடுமையாக ரோஷம் கொள்பவர் வேறெவருமிலர். முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதையெல்லாம் நீங்களும் அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள் - என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி 5221)

வல்லோன் அல்லாஹ் நம் சகோதரர்களையும் சகோதரிகளையும் நம்பிக்கை மோசம் செய்வதிலிருந்தும், செய்யப்படுவதிலிருந்தும் பாதுகாப்பானாக! ஆமீன்!

No comments:

Post a Comment