Thursday, May 1, 2014

பொருத்தம் பார்ப்பது ஒரு சுன்னத்!

சுன்னத்தான இல்லறம்: 

பொருத்தம் பார்ப்பது ஒரு சுன்னத்!

ஆதாரம் பின் வரும் நபிமொழி தான்:

பாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களை அவர்களது கணவர் விவாகரத்துச் செய்து விட்டார். இத்தா முடிந்ததும் இரண்டு நபித் தோழர்கள் அவரை மணம் முடிக்க விரும்பினார்கள். இந்நிகழ்ச்சியை அவர் பின் வருமாறு விவரிக்கிறார்.


நான் "இத்தா'வை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), "முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்'' என்று சொன்னேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்க மாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்து விடுபவர்). முஆவியோ ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்து கொள்'' என்று கூறினார்கள்.

நான் உசாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீ உசாமாவை மணந்து கொள்'' என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்து கொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன்.

அறிவிப்பவர்: ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2953

பெண் கேட்ட இரண்டு நபித்தோழர்களும் - பாத்திமா பின்த் கைஸ் அவர்களுக்குப் பொருத்தமானவர்கள் அல்ல என்பதனாலும், அவருக்கு உசாமா பின் ஸைத் அவர்களே மிகவும் பொருத்தமானவர் என்பதால் தான் அவரைத் திருமணம் முடித்துக் கொள்ளுமாறு நபியவர்கள் பரிந்துரைத்தார்கள் என்றும் நாம் விளங்கிக் கொண்டால் - பொருத்தம் பார்ப்பதும் சுன்னத் என்றாகிறது அல்லவா?

அல்லாஹ்வே மிக அறிந்தவன்!

No comments:

Post a Comment