Saturday, May 10, 2014

பாலுறவுக்கு மென்மை மிக மிக அவசியம்!

சுன்னத்தான இல்லறம்:

(Tips on Sex)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “மென்மை ஒரு விஷயத்திலிருந்தால் அதை அலங்கரிக்கவே செய்யும். மென்மை எந்த விஷயத்தில் அகற்றப்பட்டுள்ளதோ அதைக் கோரப்படுத்திவிடும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

மென்மை கடைபிடிக்கப்பட்டால் பாலுறவு கூட அலங்காரம் தான்!


**

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஜரீர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எவர் மென்மையை இழந்தாரோ அவர் நன்மையை இழந்தார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

பாலுறவில் போய் நன்மையை இழப்பார்களோ?

**

முதலிரவில்....

குறிப்பாக - முதலிரவில் கணவன் மென்மையை அவசியம் கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் முதல் அனுபவமே கசந்து போய் விட்டால்? சற்றே சிந்தியுங்கள்.

திருமணம் செய்து வைக்கும் இமாம், திருமணம் முடிந்தவுடன் மாப்பிள்ளையை அழைத்து இது சம்பந்தமாக அறிவுறுத்தி அனுப்பி வைத்தல் மிக நன்று!

**

பாலுறவில் முரட்டுத் தனம் வேண்டாம்!

அனஸ்(ரலி) அறிவிக்க்கிறார்கள்: (ஒரு பயணத்தில் என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்கள் பயணப் பொருட்களுடன் (அவற்றின் காவலராக) இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் அடிமையான ‘அன்ஜஷா’ (நபியவர்களுடைய) துணைவியரின் ஒட்டகங்களைப் பாட்டுப் பாடி ஓடச் செய்து கொண்டிருந்தார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அன்ஜஷ்! நிதானமாக ஓட்டிச் செல்! (ஒட்டகச் சிவிகைக்குள் இருக்கும்) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே!’ என்றார்கள். (புகாரி – 6202)

பாடம்: பெண்கள் மென்மையானவர்கள். அவர்களை மென்மையாகவே காயாண்டிட வேண்டும்:

**
பாலுறவில் அவசரம் வேண்டாம்!

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார்கள்: தபூக் போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த என்னிடம் நபி(ஸல்) அவர்கள், ‘நீ இரவில் மதீனாவுக்குள் நுழைந்த கையோடு உன் வீட்டாரிடம் சென்றுவிடாதே!

வெளியூர் சென்ற கணவரைப் பிரிந்திருக்கும் பெண் சவரக்கத்தியைப் பயன்படுத்தித் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் வரை, தலைவிரி கோலமாயிருக்கும் பெண் தலைவாரிக்கொள்ளும் வரை பொறுமையாயிரு!” என்று கூறிவிட்டு, ‘புத்திசாலித்தனமாக நடந்து கொள்; புத்திசாலித்தனமாக நடந்துகொள்!” என்று கூறினார்கள். (புகாரி 5246)

கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போய் விடும்? எதற்கு அவசரம்?

**

பாலுறவில் நிதானமான அணுகுமுறை தேவை!

"நிதானம் என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருவது; அவசரம் என்பது ஷைத்தானிடமிருந்து வருவது!" (திர்மிதி)

பாலுறவுக்கும் நிதானம் தேவை தான்! இதில் உங்களை அவசரப்படுத்துவதெல்லாம் ஷைத்தான் தான்!

**

முன் விளையாட்டு – வலியுறுத்தப்பட்ட சுன்னத்!

இமாம் முனவி ரஹ்மதுல்லாஹி அலைஹி உரைக்கிறார்கள்: “பாலுறவுக்கு முன் – முன்விளையாட்டும் அழுத்தமான காதல் முத்தங்களும் வலியுறுத்தப்பட்ட நபிவழியாகும். (ஸுன்னா முஅக்கதா) .

அதற்கு மாற்றமாக நடப்பது விரும்பத்தகாததாகும் (மக்ரூஹ்)”. (ஆதாரம்: ஃபைழ் அல்-காதிர் ஷரஹ் அல்-ஜாமிஃ அல்-ஸகீர் 5:115)

முன் விளையாட்டு இல்லாத உறவில் கணவனின் தேவை விரைவில் நிறைவேறிவிடும்! ஆனால் மனைவியின் தேவை நிறைவேறவே செய்யாது! கவனம்!!

**

தேவை முழு திருப்தி!

பாலுறவில் திருப்தி என்பது உங்களுக்கு எந்த அளவு முக்கியமோ, அவர்களுக்கும் அதேபோன்று திருப்தி என்பது மிக முக்கியம்!

கணவர்களுக்குத் தம் மனைவியரிடம் இருக்கும் உரிமைகள் போன்றே, முறைப்படி அந்தக் கணவர்கள் மீது அவர்களின் மனைவியருக்கும் சமமான உரிமைகள் உண்டு; (2:228)

பாலுறவும் பெண்ணுரிமைகளுள் ஒன்று தான் என்பதை மறந்து விட வேண்டாம்!

பாலுறவு கசந்து போவதும் கூட – மன விலக்கு கோருவதற்கு ஒரு வலிமையான காரணமாக அமைந்து விடுவதுண்டு!

**

அனுபவியுங்கள்!

பாலுறவு என்பது குழந்தை பெற்றுக் கொள்வதற்கு மட்டும் அல்ல! பாலுறவின் முக்கியமான நோக்கமே இன்பம் அனுபவிப்பது தான்! அதற்கு வயது ஒரு தடையே கிடையாது!

இதனைப் புரிந்து கொண்டவர்களே புத்திசாலிகள்!

No comments:

Post a Comment