Friday, May 2, 2014

இவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சுன்னத்தான இல்லறம்: 

இவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இவர்கள் சில இளைஞர்கள்.

திருமண விஷயத்தில் இவர்கள் பெற்றோர்கள் வரதட்சனையை வலியுறுருத்துகிறார்கள். ஆனால் இவர்கள் அதனை மறுக்கிறார்கள்.


மார்க்கத்தில் அதற்கு அனுமதியில்லை என்பதை எடுத்துச் சொல்லி பெற்றோர்களை சம்மதிக்க வைக்க முயற்சி செய்கின்றார்கள். ஆனால் பெற்றோர்கள் முரண்டு பிடிக்கிறார்கள். அவர்கள் மசிவதாகத் தெரிவதில்லை! அவர்களுக்கு பெற்ற மகனின் நலனும் கண்ணுக்குத் தெரிவதில்லை! மார்க்கத்தின் நலனும் கண்ணுக்குத் தெரிவதில்லை!

பெற்றோர்கள் இத்தகைய இளைஞர்களிடம் முகம் கொடுத்துப் பேசுவதைக்கூட நிறுத்திக் கொள்கின்றனர்; பெற்றவர்களின் சொத்து இந்த இளைஞர்களுக்கு மறுக்கப்பட்டு விடும் என்று எச்சரிக்கப்படுகின்றனர்.

ஆனால் - அந்த இளைஞர்களோ பெற்றோர் விருப்பத்துக்கெல்லாம் ஆடுவதில்லை என்று திட்டவட்டமாக முடிவு செய்து கொள்கிறார்கள். பொறுமையைக் கடைபிடித்துப் பார்க்கிறார்கள்; எந்த மன மாற்றத்துக்கும் பெற்றவர்கள் வரத் தயாரில்லை!

இறுதியில் இறைவனை அஞ்சும் அந்த இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்?

வீட்டை விட்டு வெளியேறி விடுகின்றார்கள்! தான் விரும்பிய இறையச்சமிக்க பெண்ணை மணம் முடிக்கிறார்கள்! மஹர் கொடுத்துக் கரம் பிடிக்கிறார்கள்! இறை விருப்பத்துக்கேற்ற முறையில் திருமணத்தை நடத்துகிறார்கள்!

இறையச்சம் மிக்க ஒரு சில சகோதரர்கள் இத்தகைய இளைஞர்களுக்கு அனைத்து உதவிகளையும்  செய்து தருகின்றார்கள். குறிப்பாக பொருளாதார உதவியை மனம் உவந்து செய்து தருகின்றார்கள்.

இவர்கள் எளிமையாக வாழ்கிறார்கள்; ஆனால் அடிமைகளாக வாழவில்லை! பெரிய சொத்துக்கள் இல்லை தான்! ஆனால் சுதந்திரம் இருக்கின்றது! பெரிய வீடு என்று ஒன்று இல்லை தான்! ஆனாலும் வாடகை வீட்டில் மன நிம்மதியுடன் வாழ்கிறார்கள்! தலை நிமிர்ந்து வாழ்கின்றார்கள்!

இவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

No comments:

Post a Comment