Thursday, December 19, 2013

அடிப்படையான தேவைகளை விட்டுக் கொடுக்க இயலாது!

கணவனுக்கு – தான் சுத்தமாக இருப்பது, பொருட்களை சுத்தமாக வைத்திருப்பது, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது, பொருட்களை அழகாக அடுக்கி வைத்திருப்பது, குறைவான பொருட்களுடன் எளிமையாக குடும்பம் நடத்துவது, – இவையெல்லாம் மிகவும் பிடிக்கும். அவர் வளர்ந்த விதம் அப்படி.




ஆனால் மனைவிக்கு அப்படியெல்லாம் இல்லை. அவர் வளர்ந்த விதமே வேறு! செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டவர். வீடு நிறைய பொருட்கள் நிறைந்து காணப்படும். சுத்தம் என்பதனை அவ்வளவாக அங்கே கண்டுகொள்பவர் யாரும் இல்லை. மனைவியின் கல்வியறிவும் சுமார் தான்.

திருமணத்துக்குப் பிறகு – கணவன் செய்ததெல்லாம் – மனைவியிடம் இதைச்செய்! அதைச் செய்யாதே! அதை இங்கே வை! இதனை அங்கே வைக்காதே! – போன்ற அன்புக் கட்டளைகள் தான் அனுதினமும். ஆனால் மனைவியோ அவைகளைக் கண்டுகொள்வதாகக் காணோம்.

மனைவிக்கு ஒரு கெட்ட பழக்கம். இது சமையலறை சம்பந்தப்பட்டது. காய்கறி நறுக்குகிறார் மனைவி; ஆனால் சரியாக அவைகளைக் கழுவுவதில்லை! பாத்திரம் கழுவும் தொட்டி அருகே வைத்து காய்கறிகளை நறுக்கி அப்படியே சமையல் பாத்திரத்துக்கு மாற்றி விடுகிறார்.

“அய்யய்யே! இப்படியா செய்வார்கள்! காய்கறிகளைச் சுத்தம் செய்வதன் அவசியத்தை தொலைக்காட்சியில் நீ பார்த்ததில்லையா? இனி மேல் இப்படி செய்யாதே!”

ஆனால், “எங்கள் வீட்டில் நாங்கள் எல்லாம் இப்படித்தான் சமைப்போம். யாருக்கும் ஒன்றும் ஆனது கிடையாது! சும்மா கிடங்க!” – இது மனைவி!

தவறு எங்கே நடந்தது?

கணவன் தனக்கு – தூய்மை – என்பது மிக அடிப்படையான மிக முக்கியமான ஒரு விஷயம் என்பதைத் தனது துணைவிக்குச் சரிவரப் புரிய வைத்திடவில்லை! அது தான் அவர் செய்த தவறு.

பொதுவாகவே – அடிப்படையான நம்பிக்கைகள் (convictions in life) , அடிப்படையான நற்குணங்கள் (core values), அடிப்படையான தனிப்பட்ட தேவைகள் (basic unique needs) – இவைகளை ஒரு போதும் ஒருவர் விட்டுக் கொடுத்திட இயலாது.

எனவே தேவை: சுயபரிசோதனை! உங்களின் அடிப்படையான நம்பிக்கைகள் என்னென்ன? உங்களின் அடிப்படையான நற்குணங்கள் என்னென்ன? உங்களின் அடிப்படையான தனிப்பட்ட தேவைகள் என்னென்ன? – என்பதைக் குறித்த தெளிவான சுயபரிசோதனை மிக அவசியம்.

அதே நேரத்தில் நாம் மேலே குறிப்பிட்டுக் காட்டிய அடிப்படையான விஷயங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து விஷயங்களிலும் – நமக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை மிக அவசியம். (இது குறித்துப் பின்னர் எழுதுவோம்)

கணவன் மனைவியர் இருவருமே – தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதனை திருமணம் ஆன புதிதிலேயே மனம் திறந்து பேசி விடுதல் மிகவும் நல்லது. திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகி விட்டனவா? ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை.

ஓய்வான ஒரு நேரத்தில் இருவரும் அமர்ந்து பேசிக் கொள்ளுங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதைப் புரிய வையுங்கள். உங்களின் அடிப்படையான எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது குறித்து அழகாகப் புரிய வையுங்கள். நீங்கள் ஒரு விஷயத்தை ஏன் அது உங்களுக்கு அடிப்படையானது என்பதை உங்கள் துணையிடம் தெளிவு படுத்துங்கள்! உங்களால் எதனை விட்டுக் கொடுக்க முடியும், எதனை விட்டுக் கொடுக்க இயலாது என்பவைகளை – தெளிவாகப் புரிய வைத்திடுங்கள்.

அதே போல உங்கள் துணையின் அடிப்படையான எதிர்பார்ப்புகளை நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஒருவருக்கொருவர் தங்களின் அடிப்படைத் தேவைகள் என்னென்ன என்பதனைப் புரிந்து கொண்டதற்குப் பிறகு – உங்கள் துணைவரின் தேவைகளை நீங்கள் மதித்திட வேண்டும். அவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டிட வேண்டும். இதில் விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்பதை உணர்ந்திட வேண்டும்.

கணவன் மனைவி உறவின் பலத்துக்கு மிக முக்கியமானவை எவையெனில் – கணவன் மனைவியராகிய – நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறீர்களா, துணைவரின் அடிப்படைத் தேவைகளை நீங்கள் மதிக்கிறீர்களா, அவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுகிறீர்களா, அதன் மூலம் துணைவரை நீங்கள் கண்ணியப் படுத்துகிறீர்களா – என்பவைதான்!

No comments:

Post a Comment