Thursday, December 19, 2013

உணர்ச்சிகரமான சூழ்நிலைகளை எதிர்கொள்வது எவ்வாறு ?

அறிவுரை முதலில் கணவன்மார்களுக்கு -

பொதுவாகவே பெண்கள் “உணர்வுகளுக்கு” அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதை கணவன்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

பெண்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதில் ஆண்களை விட மிகச் சிறப்பானவர்கள். அது போலவே அந்த உணர்ச்சிகளுக்கு சொல் வடிவம் தந்து விலாவாரியாக வர்ணிப்பதிலும் பெண்கள் கெட்டிக்காரர்கள்.



ஆனால் பரிதாபம்! ஆண்களின் நிலை இதற்கு நேர் மாறானது! அவர்களால் உணர்ச்சிகளைச் சரிவர புரிந்து கொள்ளவே முடியாது! அது போல உணர்ச்சிகளை அவர்களால் விவரித்துச் சொல்லிடவும் முடியாது!

எனவே, மனைவி ஒரு பிரச்னையை உங்களிடம் கொண்டு வந்தால் – அந்தப் பிரச்னைக்குப் பின்னணியில் உள்ள அவளின் உணர்வை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் முதலில் குறிப்பிட்டது போல் பிரச்னை மிக அற்பமானது என்று கணவன் நினைக்கலாம். ஆனால் அது மனைவியை உறுத்துகிறது எனில், ஒன்று – மனைவியின் கோரிக்கையில் நியாயம் இருந்தால் மனைவியின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி விட வேண்டியது தானே! “என் கணவர் என் பேச்சுக்கு (உணர்வுக்கு) மதிப்பளித்து விட்டாரே!” – என்று மனம் குளிர்ந்து போய் விடுவார் அவர்!

ஆனால் உங்கள் மனைவியின் கோரிக்கையில் நியாயம் இல்லை எனில் – அமைதியான சூழல் ஒன்றில் வைத்து மனைவியிடம் உங்கள் நிலையை எடுத்துச் சொல்லலாம். உணர்ச்சிவசப்பட்ட சூழலில் விவாதங்கள் எடுபடாது என்பதால் சற்றே ஒத்திப்போட்டு பின்னர் பேச்சைத் தொடங்குவது நல்லது!

மிக முக்கியமாக கணவன் இங்கே புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் – மனைவி தன் உணர்வுகளை வெளிப்படுத்திப் பேசத்தொடங்கினால் – அவசரப்பட்டு – ஒரு தீர்வை (solution) வழங்கி விடக்கூடாது! அப்படி மனைவியின் பேச்சை இடைமறித்து ஒரு முடிவை முன்வைப்பதை மனைவி எப்படி எடுத்துக் கொள்கிறார் எனில், “நம்மை இவர் பேசவே விட மாட்டேன் என்கிறாரே! முழுமையாக காதில் வாங்கினால் என்ன குறைந்தா போய்விடும்?”

ஆனால் அமைதியாக முகம் பார்த்து காது தாழ்த்திக் கணவன் கேட்கும்போது மனைவி என்ன நினைக்கிறார்: “இவர் என்னைப் புரிந்து கொள்கிறார்! என் உணர்வுகளை மதித்து நான் சொல்ல வருகின்ற அனைத்தையும் பொறுமையாகக் கேட்கின்றார்! என் நிலைமையில் தன்னை வைத்து என் கண்ணோட்டத்தில் இருந்து பிரச்சனையைப் பார்க்கிறார்! அது போதும் எனக்கு!”

இதில் வேடிக்கை என்னவென்றால் – தாங்கள் சொல்வதை முழு மனதுடன் தங்களின் கணவன்மார்கள் காதில் வாங்கிக் கொண்டாலே போதும் என்று நினைக்கிறார்கள் மனைவிமார்கள்! கணவன்மார்கள் தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அது அவர்களுக்கு உறுத்துவதில்லை!

“என் கணவன் என்னை மதிக்கிறாரா? நான் சொல்ல வருவதைப் புரிந்து கொள்கிறாரா? – இதுவே அவர்களுக்கு மிக முக்கியம்!

மனைவிக்கு என்ன அறிவுரை?

கணவனின் எந்த செயல் உங்களுக்குப் பிடிக்கவில்லையோ, உங்களுக்கு எது உறுத்தலாக இருக்கிறதோ – அந்த செயலை மட்டுமே விமர்சியுங்கள்!

கணவனின் அந்தச் செயலால் நீங்கள் எப்படி பாதிக்கப்படுகிறீர்கள் என்பதை உணர்த்திடுங்கள்! ஆனால் – அதனை விமர்சிக்கும்போது அந்தச் செயலைச் செய்திட்ட உங்கள் கணவனை விமர்சித்திட வேண்டாம்! அது உங்கள் கணவனை அவமானத்துக்கு உள்ளாக்குகிறது!

சுற்றுலா ஒன்றுக்குத் திட்டமிடுகிறார் கணவர். மனைவி எல்லா முன்னேற்பாடுகளையும் செய்து விடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக பயணம் மேற்கொள்ள இயலாமல் போய் விடுகிறது!

ஊர் முழுவதும் ஒரே அரசியல் போராட்டம். வாகனங்களின் மீது கல்லெறிகின்றார்கள்! ஒரு பயணி இறந்தும் போய் விடுகின்றார். பலருக்குக் காயம். பேருந்துகள் எரிக்கப்படுகின்றன! ஒரு பதற்றமான சூழ்நிலையில் வேண்டாமே ஒரு சுற்றுலா என்று கணவன் தன் முடிவை மாற்றிக் கொண்டு விடுகிறார்!.

அவ்வளவு தான்! மனைவிக்கு வந்ததே கோபம்.

“போடுகின்ற எந்த திட்டத்தையாவது நீங்கள் உருப்படியாகச் செய்து முடித்ததுண்டா? எத்தனை தடவை இது போல ஏற்பாடு செய்து பின்பு அதனை கேன்ஸல் செய்திருக்கிறீர்கள்! உங்களை நம்பி நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்தேனே! எனக்கு வேண்டும்! – என்று பேசுவதற்கு பதிலாக,

“ஏங்க! பிள்ளைகள் எல்லாம் ஆசையாக ரெடியாகி விட்டார்கள்; நானும் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன்; ஊரில் போராட்டங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும்; மற்றவர்கள் எல்லாம் போய்க் கொண்டு தானே இருக்கிறார்கள்! இப்படி திடீரென்று நீங்கள் வேண்டாம், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்வது எனக்குச் சரியாகப் படவே இல்லைங்க! உங்கள் முடிவை மாற்றிக் கொண்டு நீங்கள் புறப்பட்டால் எனக்கும் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சி தானே!” – என்று பேசிடலாம் அல்லவா?

எனவே தான் சொல்கிறார்கள் – செயலை விமர்சியுங்கள்! செய்தவரை விமர்சிக்க வேண்டாம்! அது உறவுகளைக் கெடுத்து விடும்!

சுருக்கமாகச் சொல்வதென்றால் – உணர்ச்சிகரமான சூழ்நிலை கணவன் மனைவியருக்குள் ஏற்படும்போது

1. இருவருமே அமைதி காத்தல் அவசியம் (calm down)

2. ஒருவர் மற்றவரின் கண்ணோட்டதிலிருந்து பிரச்சனையைப் பார்த்திட முன் வர வேண்டும். (empathy)

3. ஒருவர் மற்றவரின் கருத்துக்களை காது தாழ்த்திக் கேட்டிட வேண்டும். குறுக்கீடுகள் கூடாது! (மனைவிமார்கள் சற்று சுருக்கமாகப் பேசிட கற்றுக்கொள்தல் அவசியம்) (active listening)

4. நமக்குப் பழகி விட்ட எந்த ஒரு “பழக்கமும்” ஒரே நாளில் மாறி விடாது. பயிற்சி தேவை (practice)! அதற்குப் பொறுமை தேவை! பொறுமையுடன் பயிற்சி செய்து அதன்படி நம் செயல்பாடுகளை நாம் மாற்றிக் கொண்டால் இல்லறம் பாதுகாக்கப்படும் – அது முறிக்கப்படுவதிலிருந்து!

No comments:

Post a Comment