Thursday, December 19, 2013

மனைவியிடம் மென்மை!

பொதுவாகவே எல்லா விஷயங்களிலுமே மென்மையை வலியுறுத்துகின்றான் வல்லோன் அல்லாஹு தஆலா.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையையே நேசிக்கிறான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)



“அல்லாஹ் மென்மையானவன். மென்மையையே நேசிக்கிறான். கடினத் தன்மைக்கும், வேறெந்த பண்புகளுக்கும் அளிக்காத நற்கூலியை மென்மைக்கு அளிக்கிறான். (ஸஹீஹ் முஸ்லிம்)

அதே நேரத்தில் குறிப்பாக இல்லற வாழ்க்கையிலும் மென்மையைக் கடைபிடிக்கும்படி மார்க்கம் நமக்கு போதிக்கிறது:

அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ஆயிஷாவே! மென்மையாக நடந்துகொள். அல்லாஹ் ஒரு குடும்பத்தினருக்கு நன்மையை நாடினால் அவர்களுக்கு மென்மையின்பால் வழிகாட்டுகிறான்.”

மற்றோர் அறிவிப்பில்: “ஒரு குடும்பத்தினருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால் அவர்களிடம் மென்மையைப் புகுத்துகிறான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

பொதுவாகவே கணவன் மனைவியருக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் அனு தினமும் தோன்றும். சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கெல்லாம் சட்டென்று கோபப்பட்டு சீற்றத்தைக் கொட்டி விடுவார்கள் கணவன்மார்கள். எனவே மனைவியைக் கண்டிக்கும் சமயத்திலும் மென்மையைக் கடைபிடிக்க வேண்டும்.

“பெண், விலா எலும்பைப் போன்றவள். அவளை நீ நிமிர்த்தினால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால், அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

கடினமாக நடந்து கொண்டால் – அதாவது மென்மை போய் விட்டால்…கணவன் மனைவி உறவு முறிந்து விட வாய்ப்பளித்ததாக ஆகி விடும்!

பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மனைவியிடத்திலே கடினமாக நடந்து கொண்டால் – மென்மை கடைபிடிக்கப்படவில்லை எனில் – அவர்கள் உறவு என்னவாகும்?

1. காதல் குறைந்து விடும். சிரிப்பு அரிதாகி விடும். வீட்டுக்கு வரும்போதும், வீட்டை விட்டு வெளியேறும்போதும் மயான அமைதி ஒன்று நிலவும்.

2. பாலுறவு பாதிப்புக்குள்ளாகும். ஒருவர் நெருங்கி வந்தால் கூட மற்றவர் தட்டி விட்டு விடுவார். பல இரவுகள் வீணடிக்கப்படும்

3. இரக்க உறவு மறைந்து விடும். மன்னிக்கும் மனப்பான்மை வராது. “ என் மீது என்ன தப்பு? குறை அனைத்தும் என் துணையிடத்திலே தான்!” – என்ற மன நிலையில் இருவருமே இருப்பார்கள்.

4. இருவருக்கிடையில் மனம் விட்டுப் பேசும் வாய்ப்புகள் குறைந்து விடும். பிரச்னை ஒரு முடிவுக்கு வராது. அது மேலும் சிக்கலாகி விட வாய்ப்பு ஏற்பட்டு விடும்.

5. துணை நம் வைத்திருக்கும் கண்ணியம் (respect) குறைந்து விடும். நம்மைப்பற்றிய நல்லெண்ணம் குறைந்து விடும். குறைகளை அடுக்கத் தொடங்கி விடுவார்கள்.

6. நம்பிக்கை (trust) குறைந்து விடும். இது தான் பெரிய ஆபத்து!

7. குழந்தைகளின் மன நலம் பாதிப்படையும். இதுவும் பெரிய ஆபத்தே!

அதே நேரத்தில் மென்மை கடைபிடிக்கப்பட்டால் நன்மைகள் என்னென்ன?

1. கணவன் மனைவி காதல் ஊற்றெடுக்கும். மகிழ்ச்சி பொங்கும். கண் குளிர்ச்சிக்கு வழி வகுக்கும்.

2. பாலுறவு சிறப்பாக அமையும்.

3. தவறுகளை மன்னித்துக் கொள்வார்கள். தனது குறைகளை ஒத்துக் கொள்வார்கள்.

4. கணவன் மனைவி உரையாடல்கள் (communication) ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும்.

5. துணையிடத்தில் உள்ள நிறைகளை மட்டுமே பார்த்துக் கொள்வார்கள். குறைகளைப் பெரிது படுத்த மாட்டார்கள்.

6. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் தம் வாழ்வையே அர்ப்பணித்துக் (commitment) கொள்வார்கள்.

7. குழந்தைகள் சிறப்பாக வளர்வார்கள்.

அடுத்து – பாலுறவிலும் மென்மை கடைபிடிக்கப்பட வேண்டும்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “மென்மை ஒரு விஷயத்திலிருந்தால் அதை அலங்கரிக்கவே செய்யும். மென்மை எந்த விஷயத்தில் அகற்றப்பட்டுள்ளதோ அதைக் கோரப்படுத்திவிடும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

பாலுறவில் அவசரம் வேண்டாம்!

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார்கள்: தபூக் போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த என்னிடம் நபி(ஸல்) அவர்கள், ‘நீ இரவில் மதீனாவுக்குள் நுழைந்த கையோடு உன் வீட்டாரிடம் சென்றுவிடாதே! வெளியூர் சென்ற கணவரைப் பிரிந்திருக்கும் பெண் சவரக்கத்தியைப் பயன்படுத்தித் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் வரை, தலைவிரி கோலமாயிருக்கும் பெண் தலைவாரிக்கொள்ளும் வரை பொறுமையாயிரு!”) என்று கூறிவிட்டு, ‘புத்திசாலித்தனமாக நடந்து கொள்; புத்திசாலித்தனமாக நடந்துகொள்!” என்று கூறினார்கள். (புகாரி 5246)

முன் விளையாட்டு – பாலுறவை மென்மையாக்கி விடும்!

இமாம் முனவி ரஹ்மதுல்லாஹி அலைஹி உரைக்கிறார்கள்: “பாலுறவுக்கு முன் – முன்விளையாட்டும் அழுத்தமான காதல் முத்தங்களும் வலியுறுத்தப்பட்ட நபிவழியாகும். (ஸுன்னா முஅக்கதா) அதற்கு மாற்றமாக நடப்பது விரும்பத்தகாததாகும் (மக்ரூஹ்)”. (ஆதாரம்: ஃபைழ் அல்-காதிர் ஷரஹ் அல்-ஜாமிஃ அல்-ஸகீர் 5:115)

குறிப்பாக முதலிரவில் கணவன் மென்மையைக் கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் முதல் அனுபவமே கசந்து போய் விட்டால்? சற்றே சிந்தியுங்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஜரீர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எவர் மென்மையை இழந்தாரோ அவர் நன்மையை இழந்தார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

எனவே திருமணமாகும் இளைஞர்களுக்கு இது குறித்து அறிவுறுத்துவது – இமாம்களின் கடமை. பாலுறவு கசந்து போவதும் கூட – மன விலக்கு கோருவதற்கு ஒரு வலிமையான காரணமாக அமைந்து விடுவதுண்டு!

பெண்கள் மென்மையானவர்கள். அவர்களை மென்மையாகவே காயாண்டிட வேண்டும்:

அனஸ்(ரலி) அறிவிக்க்கிறார்கள்: (ஒரு பயணத்தில் என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்கள் பயணப் பொருட்களுடன் (அவற்றின் காவலராக) இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் அடிமையான ‘அன்ஜஷா’ (நபியவர்களுடைய) துணைவியரின் ஒட்டகங்களைப் பாட்டுப் பாடி ஓடச் செய்து கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அன்ஜஷ்! நிதானமாக ஓட்டிச் செல்! (ஒட்டகச் சிவிகைக்குள் இருக்கும்) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே!’ என்றார்கள். (புகாரி – 6202)

No comments:

Post a Comment