Thursday, December 19, 2013

இப்படிப் பேசினால் எப்படி இருக்கும்?

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு உபதேசம் செய்திடும்போது இவ்வாறு கூறினார்கள்: ‘பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது’ என்று கூறினார்கள். அது ஏன் என்று அப்பெண்கள் கேட்டதற்கு, அதற்கான காரணங்களில் ஒன்றாக பெண்கள் அதிகமாகச் சாபமிடுவதைக் குறிப்பிட்டார்கள் நபியவர்கள். (புகாரி) .



பொதுவாகவே கணவன்மார்களை விட மனைவிமார்களே – கடுமையான சொற்களால் வசை பாடுவதில் (harsh criticism) முன்னணியில் நிற்கிறார்கள். பெண்களின் கடுமையான விமர்சனம் எப்படி இருக்கும் எனில் தவறு எதுவோ அதனை விமர்சிப்பதற்கு பதிலாக தவறு செய்த கணவனை நோக்கியே விமரிசனம் அமைந்திருக்கும்.

சான்றுக்காக சில கற்பனை உரையாடல்கள்:

ஒன்று:

கணவர் இன்னும் வீட்டுக்குத் திரும்பவில்லை. “வீட்டுக்கு வரத் தாமதமாக ஆகும்; நீ சாப்பிட்டு விட்டு ஓய்வெடு; நான் வந்து விடுகிறேன், என்று செல்பேசியில் ஒரு சேதி சொல்லியிருக்கலாம். மனைவி தொலைபேசியில் அழைத்தால் அழைப்பை ஏற்க மறுப்பு. மிகவும் தாமதமாக வீட்டுக்கு வருகிறார் கணவர். மனைவிக்கு கஷ்டம் தான். ஆனால் இதனை எப்படிப் பேசுவது கணவனிடத்தில்?

“வீட்டுக்கு வர தாமதமாக ஆகும் என்றால் ஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருக்கலாமில்ல? எவ்வளவு நேரம் நான் வருவீங்க, வருவீங்க என்று காத்திருப்பது?” – என்று சொல்வது அழகானது;

சாரி டார்லிங்! பிசியிலே மறந்து விட்டேன், இனி அப்படி நடக்காது. ஓக்கே? – இது கணவன்.

ஆனால் பின் வரும் உரையாடலை கவனியுங்கள்:

“ஏங்க, இப்படி டார்ச்சர் பண்றீங்க? வர முடியலைன்னு சொன்னா ஒரு ஃபோன் பண்ணித் தொலைக்கிறதுக்கென்ன?

உனக்கென்ன தெரியும் என்னோட கஷ்டம்? டயர்டா வீட்டுக்கு வர்ர புருஷன்கிட்ட இப்படித்தான் பேசுவியா?

என்னோட கஷடத்தை நீங்கள் என்னைக்காவது நினைச்சுப் பார்த்ததுண்டா? என்னைக்காவது நீங்க நேரத்துக்கு வந்ததுண்டா? நீங்க ஒரு படு சுயநலக்காரர்தானே?

சற்றே அமைதி. அடுத்தது….

ஆளுக்கொரு பக்கம் திரும்பிப் படுத்துக் கொள்கின்றனர்!

இரண்டு:

வாங்கி வைத்த பேரிச்சம் பழங்களை சாப்பிடுகின்றான் கணவன், அதில் ஒரு விதமான வாடை வருகின்றது.

கணவன் மனைவியிடம்: “பேரிச்சம் பழத்தில் ஒரு விதமான வாடை (smell) வருகின்றது! சாப்பிட்டுப் பாரேன்…

மனைவி: நீங்க வாங்கி வச்சது தானே! என்றைக்கு நீங்க ஒழுங்கா பார்த்து வாங்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்? – என்பதற்கும் -

“ஆமாங்க! நானே உங்க கிட்ட சொல்லனும்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். நாளைக்கு நானே போய் மாற்றி வாங்கி வந்து விடுகிறேன்.’ என்பதற்கும் வித்தியாசம் உண்டு தானே?

மூன்று:

கணவனிடம் ஒரு கெட்ட பழக்கம். பல் இடுக்கில் உள்ள உணவை சுண்டு விரலை விட்டு எடுக்கும் பழக்கம் தான் அதுவும் பிறர் முன்னிலையிலேயே!

தனிமையில், “ஏங்க இது நல்லாவாங்க இருக்கு? “ஏன் உன் புருஷன் இப்படி இருக்கார்னு என்னைக் கேட்டா நான் என்னங்க பதில் சொல்வேன்?” – என்று தனிமையில் சொல்லி உணர்த்துவதற்கும், -

“ஏங்க! திருந்தவே மாட்டீங்களா? உங்களுக்கும் சுத்தத்துக்கும் சம்பந்தமே கிடையாதுங்க! ” என்று திட்டுவதற்கும் வித்தியாசம் உண்டு தானே!

நன்றாகக் கவனியுங்கள். தவறைக் கண்டிப்பது என்பது வேறு. தவறு செய்பவரைக் கடுமையான சொற்களால் விமர்சிப்பது என்பது வேறு!

இப்போது நபிமொழியைக் கவனியுங்கள்:

அந்தப்பெண்களின் ஒருத்திக்கு காலம் முழுக்க உபகாரம் செய்து, பின்பு உங்களில் ஒரு தவறை அவள் கண்டுகொண்டால், நான் உன்னிடத்தில் எந்த நலவையும் கண்டதில்லை என்று கூறிவிடுவாள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

இப்படிப்பட்ட – கடுமையான விமர்சனங்கள் தொடருமானால் – அது கணவன் மனைவி உறவை மிகவும் பாதித்து விடும்!

எனவே பேசுகின்ற முறையை சற்றே மாற்றி ஒருவருக்கொருவர் ஆறுதல் அளிக்கும் வகையில் பேசிக்கொள்வது கணவன் மனைவி உறவை சீராக்கும் என்பதே ஆய்வுகளின் முடிவு ஆகும்.

இங்கே கணவன்மார்களுக்கும் நாம் ஒன்றைச் சொல்ல வேண்டியுள்ளது.

திட்டுவது என்பது எப்போது மனைவியின் பழக்கமாக மாறுகிறது தெரியுமா?

அவர்களின் உணர்வுகளுக்கு நீங்கள் தொடர்ந்து மதிப்பளிக்காமல் போய் விடும்போது தான். அதாவது நீங்கள் உங்கள் மனைவியை அலட்சியப் படுத்துவதாக அவர் உறுதியாக நம்பத்தொடங்கும்போது தான்! எனவே மனைவியின் சின்னச் சின்ன ஆசைகளையெல்லாம் நிறைவேற்றிப் பாருங்கள். மனைவி நிச்சயம் மாறுவார். முயற்சியுங்களேன்!

No comments:

Post a Comment