Thursday, December 19, 2013

என்னிடம் திரும்பு! என்னைக் கவனி! நான் சொல்வதைக் கேள்! அது போதும் எனக்கு!

சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள் மனைவியருக்கு நிறைய இருக்கும். கணவன்மார்களுக்கோ – “இது ஒரு பெரிய விஷயமா? இதற்குப் போய் ஏன் இவள் இப்படி அலட்டிக் கொள்கிறாள்?” என்றே எண்ணத் தோன்றும்.

ஆனால் தமது சின்னச் சின்ன ஆசைகள் – கணவனால் – தொடர்ச்சியாக அலட்சியப்படுத்தப் படும்போது மனைவி என்ன நினைக்கிறாள்? “நான் இவ்வளவு சொல்லியும் இவர் கேட்கவில்லை என்றால் என்ன பொருள்? எனது உணர்வுகளை இவர் மதிப்பதே இல்லை!” என்பது தான்!



அடுத்து என்ன செய்வார் மனைவி? கடுமையான சொற்களால் வசைபாடத் தொடங்கி விடுவார்.

இங்கே ஒரு மனைவி தன் கணவனைத் திட்டி விடுகிறார் – கடுமையாக! அதுவும் கணவனின் தம்பி மனைவி அருகில் இருப்பதைக்கூட கவனிக்காமல்!

கணவனுக்குக் கோபம் தலைக்கேறுகிறது!

“ஏன்? என் தம்பி மனைவி அருகில் இருக்கும்போது தான் என்னை இப்படி திட்டுவியா?

மனைவிக்கு – தனது தவறை ஒத்துக் கொள்ள மனம் இடம் கொடுக்காது! சமாளித்து விடுவார்.

“ஆமாம், அவங்க நாம பேசுறத எல்லாம் காதில வாங்கிக்கிட்டுத் தான் உட்கார்ந்து இருக்கிறாங்களாக்கும்!”

இவளிடம் இனியும் பேசினால் இன்னும் என்னென்ன பதில்கள் எல்லாம் அவள் வாயிலிருந்து வருமோ என்று அஞ்சியவனாக “அமைதி வழி” ஒதுங்க ஆரம்பிக்கிறான்! பின் வாங்கி விடுகிறான் கணவன்!

He wants to withdraw!

கணவன் – “ஒரு பாவமும் அறியாத சூழ்நிலைக் கைதி” (innocent victim!) என்று தன்னை நினைத்துக் கொள்கிறார்!

ஆனால் மனைவி?

கணவனிடம் பதில் இல்லை! சுவர் போல! தனக்கு பதில் ஏதும் சொல்லாமல் சுவர் போல் நிற்கும் கணவன் இந்த அமைதி மூலம் தன்னை அவமானப் படுத்துவதாகவும் தன்னை தன் கணவன் தண்டிப்பதாகவும் எண்ணுகிறாள்.

இவ்வாறு கணவன் ஒதுங்கிப் போனால் – மனைவி விட மாட்டார். தனது உணர்வுகளை சற்றும் மதிக்காத கணவன் மீது கோப உணர்ச்சி கொப்பளிக்கிறது! குரலை உயர்த்தி மேலும் திட்டுகிறாள் கணவனை! “ஏன், இப்படி ஓடி ஒளியறீங்க?”

She wants to engage!

பொதுவாக – பெண்களே அதிமாக கணவன்மார்களைக் கடுமையான சொற்களால் வசை பாடுகிறார்கள். (harsh criticism)

அது போல – ஆண்களே அதிகமாக “அமைதி வழி பின்வாங்குதலை” (stonewalling) நாடுகிறார்கள்!

மனைவியின் கடுமையான விமர்சனங்களும், கணவனின் அமைதி வழிப் பின்வாங்கலும் தொடர்ந்து கொண்டிருக்குமானால் – இல்லற வாழ்க்கை அறுபட்டுப் போய்விடும் என்பதே ஆய்வுகளின் தீர்க்கமான முடிவாக உள்ளது!

தீர்வு எதிலே இருக்கின்றது?

மனைவியின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றுவதை – கணவன்மார்கள் – தன் இல்லற வாழ்வின் ஒரு மிக முக்கியமான அங்கமாகக் கொள்ள வேண்டும்!

“இதப்பாருங்க, இன்னிக்கு உங்க அம்மா படுத்துன பாட்டை உங்களிடம் நான் சொல்லியே ஆக வேண்டும். உட்காருங்க!” – இது மனைவி.

“அதை எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதறகு எனக்கு நேரமில்லை!” என்று நீங்கள் சொல்ல வேண்டாம்.

மாறாக – “இப்போது வேண்டாமே! நாளை காலையிலே பேசிக் கொள்வோமே!” – என்று சொல்லிப்பாருங்கள்.

சொன்னபடியே மறுநாள் காலையில் உட்கார்ந்து பொறுமையாக உங்கள் மனைவி சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டிருங்கள். இதுவே அவர்களின் பெரிய எதிர்பார்ப்பு உங்களிடம்.

(எச்சரிக்கை: அவர்கள் பேசும்போது நீங்கள் குறுக்கிடக்கூடாது; விமர்சிக்கக் கூடாது! புத்திமதி சொல்லிடக்கூடாது!)

“என்னிடம் திரும்பு! என்னைப் பார்! என்னைக் கவனி! நான் சொல்வதைக் கேள்! அது போதும் எனக்கு!” – இதுவே மனைவியரின் தாரக மந்திரம்!

இதனை செய்து கொடுக்காமல் போவதால் தான் – மனைவியின் கடுமையான சொற்களும், அதனைத் தொடர்ந்து – கணவனின் பின்வாங்குதலும்!

நபியவர்களின் முன்மாதிரி நமக்கெல்லாம் தெரியும் தானே? தம் மனைவியரின் சின்னச் சின்ன ஆசைகளையெல்லாம் – அவர்களின் ஆசை தீர நிறைவேற்றிக் கொடுப்பவர்கள் தானே அண்ணலார் அவர்கள்!

பின்பற்றிப்பாருங்கள்! பன்மடங்கு பலனை அனுபவிப்பீர்கள்!!

No comments:

Post a Comment