Thursday, December 19, 2013

எது எதற்கெல்லாம் கணவன் தன் மனைவி மீது கோபப்படலாம்?

பின் வரும் சூழ்நிலைகளில் – எது எதற்கெல்லாம் கணவன் தன் மனைவி மீது கோபப்படலாம்.?

1. வெளியூர் புறப்பட வேண்டும். வாசலில் கால் டாக்ஸி காத்திருக்கிறது. மனைவி புறப்பட தாமதிக்கிறார்.

2. நீங்கள் வெளியூர் பயணம் புறப்படுகிறீர்கள்.  ரயிலுக்கு நேரமாகிக் கொண்டிருக்கிறது. டின்னர் இன்னும் ரெடியாகவில்லை என்கிறார் மனைவி.



3. முதல் நாள் இரவே சட்டையை அயர்ன் பண்ணி வைக்கச் சொல்லியிருந்தீர்கள். காலையில் புறப்படும்போது எங்கே சட்டை என்கிறீர்கள். மறந்து விட்டது என்கிறார் மனைவி.

4. சரியான பசியுடன் நீங்கள். தீய்ந்து போன தோசையைப் பரிமாறுகிறார் மனைவி.

5, ஒரு செல்ஃபோன் அழைப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மனைவி உங்கள் செல்ஃபோனை எடுத்து உறவினர் ஒருவரிடம் நீண்ட நேரம் பேசுகிறார். நீங்கள் செல்ஃபோனைக் கேட்கிறீர்கள். இருங்கள் கொஞ்ச நேரம் என்கிறார். நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது.

6. பீரோவில் முக்கிய ஆவணம் ஒன்றை நீங்கள் அவசரமாக எடுத்திட வேண்டும். சாவி எங்கே என்று மனைவியைக் கேட்கிறீர்கள். “எங்கே வைத்தேன் என்று தெரியவில்லைங்க!” – என்கிறார் அவர்.

7. விருந்தினர் வந்திருக்கின்றனர். மனைவி சமைத்த உணவில் உப்பு மிக அதிகம். வந்த விருந்தினர்கள் – ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே சாப்பிடுகின்றனர்.

8. எண்ணை பாட்டில் கீழே தவறி விழுந்து உடைந்து விடுகிறது. அவ்வளவு எண்ணையும் வீணாகி விட்டது.

9. உங்கள் மீதுள்ள கோபத்தில் – குரலை உயர்த்திப் பேசுகிறார் மனைவி.

10. உங்கள் தம்பி மனைவி அருகில் இருக்கும்போதே – உங்களைத் திட்டுகிறார் மனைவி.

மேற்கண்ட சூழ்நிலைகளில் எது எதற்கெல்லாம் கணவன் கோபப்படுவது “நியாயம்” என்று நினைக்கிறீர்களோ அந்த எண்ணைச் சுற்றி ஒரு சிறிய வட்டமிடுங்கள்.

இப்போது கீழ்வரும் நபிமொழியைப் படியுங்கள்:

நாங்கள் ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களுடன் சென்றோம். ‘பைதாவு’ அல்லது ‘தாத்துல் ஜைஷ்’ என்ற இடத்தை வந்தடைந்ததும் என்னுடைய கழுத்தணி அறுந்து (தொலைந்து)விட்டது.

அதைத்தேடுவதற்காக நபி(ஸல்) அவர்களும் மற்றவர்களும் அந்த இடத்தில் தங்கினோம். நாங்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் இல்லை.

அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சிலர் வந்து, ‘(உங்கள் மகளான) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் இங்கே தங்கச் செய்துவிட்டார். அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களுடனும் தண்ணீர் எடுத்து வரவில்லை’ என்று முறையிட்டனர்.

அபூ பக்ர்(ரலி) (என்னருகே) வந்தபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலையை என்னுடைய மடி மீது வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ‘நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் தங்க வைத்துவிட்டாயே?

அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களிடமும் தண்ணீர் இல்லை’ என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, தங்களின் கையால் என்னுடைய இடுப்பில் குத்தினார்கள்.

நபி(ஸல்) அவர்களின் தலை என் மடியின் மீது இருந்ததால் நான் அசையாது இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் காலையில் விழித்தெழிந்தபோதும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ் தயத்தின் வசனத்தை அருளினான். எல்லோரும் தயம்மும் செய்தார்கள்.

இது பற்றிப் பின்னர் உஜைத் இப்னு ஹுளைர்(ரலி) ‘அபூ பக்ரின் குடும்பத்தார்களே! உங்களின் மூலமாக ஏற்பட்ட பரக்கத்துக்களில் இது முதலாவதாக இல்லை. (இதற்கு முன்பும் உங்களின் மூலம் எத்தனையோ பரக்கத்துக்கள் ஏற்பட்டுள்ளன)’ எனக் கூறினார். அப்போது நான் இருந்த ஒட்டகத்தை எழுப்பியபோது அதனடியில் (காணாமல் போன) என் கழுத்தணி கிடந்ததைக் கண்டோம்”என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (புகாரி 334).

என்ன புரிகிறது?

No comments:

Post a Comment