Thursday, December 19, 2013

எதனால் அடிக்கடி சண்டை வருகிறது?

ஒரு கணவனின் மன நிலை இது:

“என் மனைவி என்னைக் கடுமையாக வெறுக்கிறாள்! அதனால் தான் அவள் அடிக்கடி என்னை ஆழமாகப் புண்படுத்தி வேடிக்கை பார்க்கிறாள்! நான் என்ன நினைக்கிறேன் என்பது குறித்தோ, எனது உணர்வுகள் குறித்தோ கொஞ்சம் கூடக் கவலைப்படாமல் வேண்டுமென்றே என்னைச் சீண்டிக் கொண்டே இருக்கிறாள்!



அவள் சீண்டுதல்கள் தொடர்கதையாகி விட்டன! கொஞ்சம் கூட கணவன் மனைவி உறவு என்னாகும் என்பது குறித்து அவள் கவலைப்படுவதாகவே தெரியவில்லை!”

இப்படிப்பட்ட கடுமையான அச்சமூட்டுகின்ற ஒரு மன நிலையிலேயே பெரும்பாலான நேரம் கழிகின்றது அந்தக் கணவனுக்கு!

இவ்வாறு ஒரு கணவன் அலைமோதும் உணர்ச்சிகளால் அனுதினமும் அலைக்கழிக்கப்படுகின்ற மன நிலை எப்படிப்பட்டதென்றால் - கடுமையான வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஒருவன் எவ்வாறு அங்கும் இங்கும் அலை மோதி அலைக்கழிக்கப் படுகின்றானோ அது போலவே இங்கே கணவன்  ”உணர்ச்சி வெள்ளத்தில்” சிக்கிக் கொண்டு அலைக்கழிக்கப் படுகின்றான்!

ஒரு முறை பெண்களைப்பார்த்து நபியவர்கள் சொன்னார்கள்: “அறிவிலும் மார்க்கத்திலும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் சிந்தனையை போக்கக்கூடியவர்களாக உங்களை விட  வேறு யாரையும் நான் பார்க்கவில்லை!” (புகாரி)

என்ன செய்வது என்று அவனால் சிந்திக்கக் கூட முடிவதில்லை! தவிப்பான்! துடிப்பான்! நாடித்துடிப்பு அதிகரித்திடும்! என்பது, தொண்ணூறு, ஏன் நூறு வரைக்கும் கூட எகிறி விடும்! இதனையே ஆங்கிலத்தில்  emotional flooding in marriage – என்று அழைக்கிறார்கள்! தமிழில் நாம் இதனை “திருமண வாழ்வில் உணர்ச்சி வெள்ளம்” என்று அழைக்கலாம்.

இந்த உணர்ச்சி வெள்ளத்தில் கணவன் மட்டும் தான் சிக்கிக் கொள்கிறான் என்று எண்ண வேண்டாம். ஒரு மனைவியும் கணவனின் சொல் அல்லது செயல்களால் அதே போன்ற மன நிலைக்குத் தள்ளப்படுகின்றாள்.

உணர்ச்சி வெள்ளத்தில் சிக்கியிருக்கின்ற கணவனால் தெளிவாக ஒன்றைக் காதில் வாங்கிக் கொள்ள இயலாது. கேட்கப்படுகின்ற கேள்விக்குத் தெளிவான பதிலையும் அளித்திட முடியாது. மனதை ஒருமுகப்படுத்திட முடியாது. அவனால் செய்ய முடிவதெல்லாம், எங்கேயாவது ஓடி விடலாமா என்று தோன்றும்; அல்லது ஒங்கி மனைவியை அடித்து விடலாமா என்று தோன்றும்;

தனித்தனியே போய்ப் படுத்துக் கொள்வார்கள்; ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மாட்டார்கள். பேசிப் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளலாம் எனில் “யார் முதலில்?” என்ற கேள்வி எழும்.

“என் மேல் என்ன தப்பு?” என்று இருவருமே நினைப்பதனால், “கருத்துப் பரிமாற்றம்” நின்று போய் விடுகிறது.

இத்தனைக்கும், இந்த உணர்ச்சி வெள்ளத்துக்கு ஆரம்ப காரணம் ஏதோ பெரிதான ஒன்றாகத்தான் இருந்திட வேண்டும் என்பதில்லை! ஒரு மிகச் சிறிய பிரச்சனை கூட இறுதியில் இருவரையும் சோகத்துக்கு ஆளாக்கி விடும்.

ஒரு மிகச்சிறிய பிரச்னை குறித்துத்தான்  இருவருக்கும் பேச்சு துவங்கும். ஆனால் அது பெரிய சண்டையாகவே முடியும்! இவ்வாறு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஒவ்வொரு சின்ன சின்னப் பிரச்னைக்கும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள் கணவனும் மனைவியும்!

சமாதானம் செய்திடும் முயற்சியில் யாரேனும் இறங்கினால், யாரேனும் பேச்சைத் திசை திருப்பி வேறு விஷயங்களுக்குச் சென்றால் கூட அதனையும் “நல்ல எண்ணத்துடன்” பார்த்திட மாட்டார் துணைவர்!

“ஏம்மா! இதனைப்பாரு!” என்று என்பான் கணவன்.

“ஏன்? என் கண்ணு என்ன பொட்டையா?” என்பாள் மனைவி!

“சாப்பாடு இன்னைக்கி சூப்பர்! ரொம்ப நல்லா இருந்தது!” என்பான் கணவன்.

“யாராவது நல்லா இல்லாம சமைப்பாங்களா?” என்பாள் மனைவி!

சரி, இதையெலாம் பார்த்தால் சரிவராது, பேசித் தீர்த்துக்கொள்வோம் பிரச்சனையை  என்று கணவன் முன் வந்து, “இதோ பார், இப்படியே போனால் சரி வராது; பேசி ஒரு முடிவுக்கு வருவோம்”, என்பார்.

“ஏன், இன்னொரு தடவை சண்டை போடவா?” என்பாள் மனைவி!

இது இப்படியே தொடர்ந்தால் கணவன் மனைவி உறவு என்னாவது?

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு தான் என்ன?

ஒருவர் இன்னொருவருடைய நிறைகளைப் பார்க்கத் தவறி விடுவதாலேயே இந்தப் பிரச்னை தோன்றுகிறது. மாறாக – உங்கள் துணைவரின் நல்ல அம்சங்களை எண்ணிப்பார்த்திடத் துவங்கினால் – இப்பிரச்னை அடியோடு காணாமல் போய்விடும்! இது தான் கணவன் மனைவி நல்லுறவின் இரகசியம்!

நபி அவர்கள் கூறினார்கள்: “எந்த ஒரு முஃமினும் (நம்பிக்கையாளரும்) முஃமினான பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை அவர் வெறுத்தால் மற்றொரு குணத்தைப் பொருந்திக் கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

இந்த அறிவுரை மனைவிக்கும் பொருந்தும் தானே!

No comments:

Post a Comment