Monday, March 31, 2014

"அவர்களுடன் நீங்கள் நெருங்கிய நண்பர்களாக நடந்து கொள்ளுங்கள்!"

சுன்னத்தான இல்லறம்: 

திருக் குர்ஆனை நாம் ஆழமாக புரிந்து கொள்ள - அதன் மொழிபெயர்ப்புகள் போதாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும்.

ஒரு எடுத்துக் காட்டு: வ ஆஷிரூஹுன்ன பில் ம'-ரூஃப்! - இது சூரத்துன் நிஸாவின் 19 வது வசனத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே. இதற்கு எப்படி மொழிபெயர்க்கப் படுகிறது என்று பார்ப்போமா?

"இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - இது தமிழில் குர்ஆன் வலை தளத்தின் மொழிபெயர்ப்பு. ஜான் ட்ரஸ்ட் மொழிபெயர்ப்பும் இதுவே.

"மேலும் அவர்களுடன் அழகான முறையிலும் நடந்து கொள்ளுங்கள்" - இது சவூதி அரசால் வெளியிடப்பட்டுள்ள சங்கைமிக்க குர் ஆன் மொழிபெயர்ப்பில் இருந்து.


"அவர்களோடு நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள்." - இது IFT - யின் திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பிலிருந்து.

"மேலும் அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத்தன்மையுடனும்) நடந்து கொள்ளுங்கள்" - இது அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்களின் மொழிபெயர்ப்பு.

திருமண ஃகுத்பா ஒன்றில் உரையாற்றும் போது - இவ்வசனத்துக்கு - "உங்கள் இல்லறத்தை நல்லறமாக ஆக்கிக் கொள்ளுங்கள்!" என்று மொழியாக்கம் செய்தார் அறிஞர் ஒருவர்! ஆனால் இவ்வசனத்தில் இல்லறம் என்ற சொல்லும் இல்லை! நல்லறம் என்ற சொல்லும் இல்லை!

அரபி மூலத்தில். இந்த இரண்டு சொற்களுக்கும் என்ன பொருள் என்று பார்ப்போம்:

ஒன்று: ஆஷிர் (அய்ன் - ஷீன் - ரா)

இம்மூலச் சொல்லிலிருந்து பிரிகின்ற பல சொற்களுடன் திருமறை வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

முதலில் ஆங்கில அகராதி மொழிபெயர்ப்பை எடுத்துக் கொள்வோம்.

'Ashara - to divide into tenths; to be on intimate terms, associate (closely with someone). associate with one another

'Ishrah - (intimate) association, intimacy, companionship, relations, (social) intercourse. company. conjugal community, community of husband and wife

'Ishaar - with young, pregnant(animal)

'Asheer - companion, fellow, associate, friend, comrade

'Asheerah - clan, kinsfolk, closest relatives, tribe

அகராதியில் காணப்படும் அனைத்து பொருள்களையும் நாம் உற்று நோக்கினால் - ஆஷிர் என்ற சொல்லின் பொருள் - நெருக்கம், நெருங்கியிருப்பவை, நெருங்கிய தோழமை, நெருக்கமான நண்பன் - ஆகியவற்றைச் சுற்றியே இருக்கின்றன என்றே புரிகிறது. இது ஏன் மொழிபெயர்ப்புகளில் பிரதிபலித்திடவில்லை என்பதே எம் கேள்வி.

அடுத்து இச்சொற்றொடரில் இடம் பெற்றுள்ள இன்னொரு சொல்: ம'-ரூஃப்!

ம'-ரூஃப் - என்ற இச்சொல்லுக்கு "அறியப்பட்டது" என்பதே சரியான பொருளாகும்.

அதாவது - இஸ்லாம் கட்டளையிட்டுள்ள எல்லாவிதமான நன்மைகளையும் குறிக்கும் சொல் இது என்கிறது ஜவாஹிருல் குர்ஆன் எனும் திருக்குர்ஆன் விரிவுரை நூல்.

இவ்வாறு - இந்த இரு சொற்களின் விரிவான பொருள்களை கவனித்துப் பார்க்கும் போது

"அவர்களோடு கனிவோடு நடந்து கொள்ளுங்கள்" என்று பொத்தம் பொதுவாக மொழிபெயர்ப்பதை விடுத்து

" (மார்க்கம் அனுமதித்துள்ள) நன்மையான காரியங்கள் அனைத்திலும் அவர்களுடன் மிக நெருங்கிய உற்ற நண்பர்களாக நடந்து கொள்ளுங்கள்"

- என்று மொழிபெயர்க்கலாமோ என்று தோன்றுகிறது.

"behave with them as intimate companions in all the good things that are allowed in Islam "

- என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என்றும் தெரியவில்லை.

ஆனால் முஹம்மத் அஸத் அவர்கள் மட்டுமே ஆங்கிலத்தில் மிக அழகாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள்:

"And consort with your wives in a goodly manner;"

Consort - என்பதற்கு companion என்று ஒரு பொருள் உண்டு.

கணவன்மார்களே! மனைவிமார்களே! நாம் கேட்க விரும்பும் கேள்வி இது தான்:

நாம் நமது வாழ்க்கைத் துணையுடன் நெருங்கிய நண்பர்களாகத் தான் வாழ்க்கை நடத்துகின்றோமா?

நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய கேள்வி இது?

No comments:

Post a Comment