Tuesday, March 25, 2014

திருமணத்துக்குப் பின்னர் அசையவும் கூடாது! அலையவும் கூடாது!

சுன்னத்தான இல்லறம்: 

மவத்தத் மற்றும் ரஹ்மத் ஆகிய இரண்டு பண்புகளைத் தொடர்ந்து அடுத்து நாம் பார்க்க இருப்பது - இறை வசனம் 30:21 ல் இடம் பெற்றுள்ள சகீனத் என்ற சொல். அதனை இப்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

இன்னும், நீங்கள் அவர்களிடம் மன அமைதி பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே  அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)

லி தஸ்குனூ இலைஹா - என்பது இவ்வசனத்தில் உள்ள ஒரு சிறு சொற்றொடர்.

இதன் பொருள் என்ன?


So that you might find contentment (sukoon) with them,

அவர்களிடத்தில் நீங்கள் ஆறுதல் பெறுவதற்காக - என்பது ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு.

அவர்களிடத்தில் மன நிம்மதி பெறுவதற்காக என்பது இன்னொரு மொழிபெயர்ப்பு.

அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக என்பது இன்னுமொரு மொழிபெயர்ப்பு.

சகீனத் என்ற அரபிச் சொல்லுக்கு நாம் இன்னும் ஆழமாக பொருள் காண வேண்டியிருக்கின்றது.

சகீனத் என்பதன் பொருள் என்ன?

சகீனத் என்பதன் மூலச்சொல் - சுகூன்.

சுகூன் என்பது நாம் அடிக்கடி கேள்விப்பட்ட சொல் தான். நாம் அரபி பாடசாலையில் குர் ஆன் ஓதக் கற்றுக் கொள்ளும்போது - முதலில் அரபி எழுத்துக்களைக் கற்றுத் தருவார்கள் அல்லவா?

அப்போது எந்த ஒரு எழுத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த எழுத்துக்கு மேலேயோ அல்லது கீழேயோ ஃபதஹ்,  ஜர், ளம் (அல்லது ஜபர், ஜேர், பேஷ்) போன்ற ஏதாவது சிறு குறியீடு ஒன்றை எழுதும் போது - அந்த எழுத்தை எப்படி உச்சரிப்பது என்று சொல்லிக் கொடுப்பார்கள்.

சான்றாக "த அல்லது தே" என்ற எழுத்தின் மேலே ஃபதஹ் எனும் குறியைப் போட்டால் "த" என்றும்; எழுத்தின் கீழே ஜர் எனும் குறியைப் போட்டால் "தி" என்றும் உச்சரிக்க வேண்டும். ஆனால் அதே "தே" எழுத்துக்கு மேலே சுகூன் எனும் குறியைப் போட்டால் அந்த எழுத்தை அசைத்திடாமல் "த்" என்றே உச்சரித்திட வேண்டும்.

இங்கே நாம் கவனித்திட வேண்டியது என்னவெனில் இந்த ஃபதஹ், ஜர், ளம் போன்ற குறியீடுகளுக்கு "ஹரகத்" என்று பெயர். ஹரகத் என்றால் அசைத்தல் என்று பொருள். ஹரகத் எனும் சொல்லுக்கு எதிர்ப்பதம் தான் சுகூன். அதாவது அசைக்காமல் இருத்தல்!

இப்போது ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்குச் செல்வோம்.

சகன என்பதன் பொருள்: to be still, to become still, peaceful, to calm down, repose, rest, to be vowel-less, to remain calm,

சுகூன் என்பதன் பொருள்: calm, tranquility, peace, silence, quiet.

இப்பொது உங்களுக்கு புரிந்திருக்கும் சுகூன் என்று அல்லாஹு தஆலா எதனைச் சொல்ல வருகிறான் என்று.

"அசையாமல் நிறுத்தப்படுதல்" என்ற பொருளை சகீனாவுக்கு நாம் எடுத்துக் கொண்டால் கணவன் மனைவி இருவருமே - திருமணத்துக்குப் பின்னர் எவ்வாறு நடந்து கொண்டால் அமைதியும் ஆறுதலும் கிடைக்கும் என்பதுவும் புரிந்து விடும்.

அதாவது -  திருமணத்துக்குப் பின் கணவனது கண்கள் வேறு எங்கும் அசைந்திடக் கூடாது!

தனது கண்களால் மனைவியை மட்டுமே ரசித்திட வேண்டும். கண் பார்வையை வேறெங்கும் அசைய விட்டு விடக் கூடாது. மனைவியும் அப்படித்தான். தமது கண்களால் கணவனின் அழகை மட்டுமே ரசித்திட வேண்டும். திருமணம் கண்பார்வையைத் தாழ்த்துகிறது என்பது நபிமொழி.

கால்கட்டு என்று தமிழில் சொல்வார்கள்!

ஆனால் அது அப்படி அல்ல! எல்லாவற்றுக்குமே கட்டுப்பாடு தான்!

கைகள் - உங்கள் துணையை மட்டுமே தொட வேண்டும்!

கால்கள் உங்கள் துணையை நோக்கியே ஓடிட வேண்டும்!  

இதயத்தில் உங்கள் துணைக்கு மட்டுமே இடம் அளித்திட வேண்டும்!

இவ்வாறு இல்லற வாழ்வின் அனைத்துத் தேட்டங்களுக்கும் - நாம் நமது துணையை மட்டுமே நாடிட  வேண்டுமே தவிர வேறு எங்கும் அசைய விட்டு விடக் கூடாது. அலைய விட்டு விடக் கூடாது.

பாலுறவையே எடுத்துக் கொள்வோம். அது உங்கள் துணையுடன் மட்டும் தான்! வீட்டுக்கு வெளியே நீங்கள் இருக்கும்போது பாலுணர்வால்  தூண்டப்பட்டால் உடனே நீங்கள் உங்கள் மனைவியிடம் சென்று விடுங்கள் என்பதும் நபிமொழி.

ஒரு தடவை அண்ணல் நபியவர்களுக்கும் இந்நிலை ஏற்பட அவர்கள் தமது மனைவி ஒருவரிடம் உடனே  சென்றார்கள் என்பதும் நபிமொழி நூல்களில் காணக் கிடைக்கின்ற செய்தி தான்.

உங்கள் கணவன் உங்களை அழைத்தால் நீங்கள் என்ன நிலையில் இருந்தாலும் கணவனின் அழைப்பை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு விடுங்கள் என்ற நபிமொழியின் அற்புதமான நுட்பம் இப்போது புரிகின்றதா?

அது போலவே வாழ்வில் கணவனோ மனைவியோ உணர்ச்சிச் சிக்கலில் சிக்கித் தவிப்பார்கள் சில பொழுதுகளில். அந்த சமயங்களில் எல்லாம் உங்கள் துணையை மட்டுமே நீங்கள் நாடிட வேண்டும்! துணைவி தக்க துணை புரிந்திட வேண்டும். அன்னை கதீஜா (ரலி) அவர்கள் இதற்கு ஈடு இணையற்ற ஒரு முன்மாதிரி!

இப்படி உங்கள் துணையை மட்டுமே முன்னிறுத்தி உங்கள் இல்லறத்தை அமைத்துக் கொண்டால் - அல்லாஹு தஆலா உங்களுக்கு வழங்குவது சகீனத் எனும் மன நிம்மதி! மன அமைதி!

No comments:

Post a Comment