Thursday, March 20, 2014

சுன்னத்தான காதல்!

சுன்னத்தான இல்லறம்:  

இன்னும், நீங்கள் அவர்களிடம் மன அமைதி பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே மவத்தத் எனும் அன்பையும், இரக்கத்தையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)

மேற்கண்ட இறைவசனத்தில் "மவத்தத்" என்ற ஒரு சொல் இடம் பெற்றுள்ளதைக் கவனியுங்கள்.

மவத்தத் என்பதற்கு தமிழில் "அன்பு", "உவப்பு", "நேசம்" என்று மொழிபெயர்த்திருக்கின்றார்கள்.

ஆங்கிலத்தில் மவத்தத் என்பதற்கு "Love" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதாவது "காதல்!"


மேலும் அகராதியில் "wadda" என்ற மூலச்சொல்லுக்கு - to love, to like, be fond, to make friends, to show love or affection, to attract, to love each other, be on friendly terms etc., - என்றெல்லாம் பொருள் தருகிறார்கள்.

அப்படியானால் இந்தக் காதல் என்பதை எப்படி விளக்குவது? விளக்குவது சற்றே கடினமாம். இமாம் இப்னுல் கைய்யும் அவர்கள் இந்தக் காதலை விளக்குவதற்கு தனது நூல் ஒன்றில் 464 பக்கங்கள் ஒதுக்கியுள்ளார்களாம்.

அரபி மொழியில் மட்டும் காதல் என்பதைக் குறித்திட அறுபது சொற்களுக்கு மேல் இருக்கின்றனவாம்!

நாம் இங்கே சுருக்கமாக காதல் என்பது எது என்பதைப் பார்ப்போம். அதற்கு முன்னர் - காதல் என்றால் அது எதனையெல்லாம் குறிக்காது என்பதைப் பார்த்து விடுவோம்!

உடற்கவர்ச்சியினால் ஏற்படுவது காதல் அல்ல!

அழகு, பொன், பொருள், சமூக அந்தஸ்து இவற்றால் விளைவது காதலே அல்ல!

ஒருவர் இன்னொருவரின் பேச்சுக்குக் கட்டுண்டு கிடப்பதற்குப் பெயர் காதல் அல்ல!

இரண்டு பேர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதைக் காதல் என்று சொல்லிவிட முடியாது!

இருவருக்குள் சண்டையோ சச்சரவோ வருவதே இல்லை என்றால் அதற்குப் பெயரும் காதல் அல்ல!

அவர் நான் கேட்டதை எல்லாம் எனக்குச் செய்து தருகிறார் என்றால் அது காதல் என்று எண்ண வேண்டாம்!

பலன் எதனையும் எதிர்பார்க்காமல் ஒருவர் இன்னொருவரின் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பெயரும் காதல் அல்ல!

தங்களைக் காதலர்கள் என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்களே! அவர்களுக்கு மத்தியில் இருப்பது உண்மையான காதலே அல்ல!

காதலர் தினத்தன்று ஏற்படுவதும் காதலே அல்ல!

அப்படியானால் உண்மையான காதல் என்பது என்ன?

affection - இதயபூர்வமான அன்பு

appreciation - உயர்வாக மதித்தல்

attention - கவனம் (எந்நேரத்திலும்)

commitment - அர்ப்பணிப்பு

joy - மகிழ்ச்சி

respect - கண்ணியம்

responsibility - பொறுப்பு

sacrifice - தியாகம்

security - பாதுகாவல்

trust - நம்பிக்கை

intimacy - நெருக்கம்

இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தது தான் காதல்!

சுப்ஹானல்லாஹ்! அண்ணலார் (ஸல்) அவர்களின் இல்லற வாழ்வை நுணுகி ஆய்வு செய்து பார்த்தோம் எனில் - காதல் என்பதின் இந்த அனைத்துப் பரிமாணங்களையும் உள்ளடக்கிய ஆழமான, உண்மையான காதலை நம்மால் புரிந்து கொள்ள முடியும்!

அதுவே சுன்னத்தான காதல்!

No comments:

Post a Comment