Thursday, March 20, 2014

மூன்று காதல் மொழிகள்: 2

சுன்னத்தான இல்லறம்:

மூன்று காதல் மொழிகள்:

இரண்டாவது: எனக்குப்புரிய வை! (SHOW ME!)

நீங்கள் உங்கள் கணவரை (அல்லது) மனைவியை நேசிப்பது என்பது உண்மையே! அதனை நீங்கள் உங்கள் துணைக்கு எப்படி புரிய வைப்பீர்கள்? ஆயிரக்கணக்கான வழிகள் இருக்கின்றன!

ஒரு அன்பளிப்பை பரிசாக வழங்குங்கள் உங்கள் துணைக்கு! அது அப்படி ஒன்றும் பெரிதாக இருந்திட வேண்டும் என்ற அவசியம் இல்லை!


அவர்களுக்கு எது மகிழ்ச்சியூட்டுமோ அது போதும். ஒரு முழம் பூ, அல்லது அவர்களுக்குப் பிடித்த ஒரு இனிப்பு அல்லது பண்டம், அவர்களுக்குப் பிடித்த கலரில் ஒரு கைக்குட்டை, அல்லது அவர் விரும்பிப் படிக்க விரும்பும் ஒரு புத்தகம்.....

"அன்பளிப்புகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள், அது அன்பை வளர்க்கும்" என்பது நபிமொழி.

ஏதாவது ஒன்றை அன்பளிப்பாக வழங்குவது என்பது வேறு; உங்கள் துணைக்குப் பிடித்த ஒன்றை – அவர் எதிர்பார்க்காத நேரத்தில் வாங்கிக் கொடுத்து அவரை அசத்துவது என்பது வேறு! இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் – உங்கள் துணைக்குப் பிடித்ததெல்லாம் என்னென்ன என்பதை முன்பேயே நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

எப்படித் தெரிந்து கொள்வது என்று கூட சில அப்பாவிக் கணவன்மார்கள் கேட்பார்கள். துணையின் அன்றாட செயல்களை சற்றே கூர்ந்து நீங்கள் கவனித்தாலே போதும்! அவர்கள் சாதாரணமாக உங்களிடம் பேசும்போது சற்றே கவனமாகக் காது கொடுத்துக் கேட்டால் போதும். தெரிந்து கொண்டு விடலாம்.

அடுத்து -

உங்கள் துணைவரை நீங்கள் பார்க்கும்போதெல்லாம் புன்சிரிப்பு ஒன்றைத் தவழ விடுங்களேன்!

"உங்கள் சகோதரரை புன்புறுவலுடன் சந்திப்பதும் ஒரு தர்மம்" என்பதும் நபிமொழி தானே!

"மிகச் சிறிய நற்செயல்தானே என்று குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம்; அது உங்கள் சகோதரரைப் புன்முறுவலுடன் பார்ப்பதாயினும் சரியே!" (ஸஹீஹ் முஸ்லிம்)

புன்புறுவல் காட்டுவது, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது, நகைச்சுவை உணர்வுடன் நடந்து கொள்வது - இவையெல்லாம் வீட்டுக்கு வெளியே மட்டுமே என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோம் நாம்! வீட்டில் கலந்துரையாடல்கள் எல்லாம் பெரிய சீரியஸ் சமாச்சாரமாக ஆக்கி விட்டிருக்கின்றோம்!

நபியவர்கள் தங்கள் மனைவியருடன் இருக்கும்போதெல்லாம் வீடே “கலகலப்பாகத் தான்” இருக்கும்! நாமும் கொஞ்சம் மாறி விடலாம் தானே!

அடுத்து -

மனைவி, வீட்டு வேலைகள் அனைத்தையும் தானே சுமந்து கொண்டு கஷ்டப்படுகின்றாரா? நீங்கள் அவற்றுள் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம் தானே?

பாத்திரங்களைக் கழுவுவது ஒன்று போதுமே!

இங்கே ஒரு கணவன். தன் மனைவி சமையலறையில் படும் கஷ்டங்களைப் பார்த்து - பாத்திரங்களைக் கழுவும் வேலையை நாமே எடுத்துக் கொண்டால் என்ன என்று முடிவு செய்து “களத்தில்” இறங்கி விட்டாராம்! என்ன நடந்தது? ஒரே நாளில் பாதி சோப் காலி! சமையலறை முழுவதும் தண்ணீர் தெளித்தது போல் தான்! ஆனால் அவர் விடுவதாக இல்லை; தொடர்ந்து காரியமாற்றி இப்போது அது அவருக்குக் கை வந்த கலையாம்! அவர் என்ன சொல்கிறார் என்றால் – பாத்திரங்களைக் கழுவுவது என்பது அலுவலக வேலை தருகின்ற மன அழுத்தத்திலிருந்து விடுபடும் வழியாக தனக்கு இருக்கின்றது என்கிறாராம்.

அடுத்து -

உங்கள் துணைக்கு உடல் நலம் இல்லையா? உங்கள் அன்பை வெளிப்படுத்திடும் அருமையான வாய்ப்பு அது!

அருகில் அமர்ந்து கொண்டு ஆதரவாகக் கரம் பிடித்து, “கண்ணே! இன்று நன்றாக ஓய்வெடுத்துக் கொள்; மற்ற எல்லா வேலைகளையும் நானே பார்த்துத் தருகின்றேன்!” என்று சொல்லி அலுவலகத்துக்கு விடுப்பு போட்டு விட்டு மனைவியைக் கவனித்துக் கொள்ளுங்கள்! அப்போது வெளிப்படும் காதல் உணர்வுகளுக்கு ஈடு இணையே கிடையாது!

உடல் நலமின்மை என்பது ஒரு சோதனை தான்! ஆனால் அந்த சோதனையிலும் ஒரு வாய்ப்பு (opportunity) என்பது மனைவியைக் கவனித்துக் கொள்வது தான்! இந்த வாய்ப்பை சரிவரப் பயன்படுத்திக் கொண்டால் என்னென்ன நடக்கும்? நோய் குணமாகி யிருக்கும். காதல் மலர்ந்திருக்கும். வல்லோன் இறைவனுக்கு நன்றி சொல்வீர்கள்!

No comments:

Post a Comment