Friday, March 28, 2014

"உனக்கு விருப்பம் இல்லாவிட்டால் வேண்டாமம்மா!"

சுன்னத்தான இல்லறம்: 

ஒரு ஆணாக இருக்கட்டும் அல்லது ஒரு பெண்ணாக இருக்கட்டும். ஒரு சிலரைப் பார்க்கிறோம்; கொஞ்சமே அவர்களைப் பற்றிக் கேள்விப் படுகிறோம்; அவர்களை நமக்கு அப்படியே பிடித்துப் போய் விடுகிறது.

ஆனால் வேறு சிலரைப் பார்த்தால் நமக்கு அறவே பிடிப்பதில்லை! அவர்களாகவே நெருங்கி வந்தாலும் ஒதுங்கிப் போய் விடுகிறோம்! இது ஏன்?

நபி மொழி ஒன்று அற்புதமாக இதனை விளக்குகிறது!

‘Aa’ishah (may Allaah be pleased with her) said: “I heard the Prophet (peace and blessings of Allaah be upon him) saying: ‘Souls are like conscripted soldiers; those whom they recognize, they get along with, and those whom they do not recognize, they will not get along with.’” (Bukhaari and Muslim).
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: " ஆன்மாக்கள் என்பவை பணிக்கு அமர்த்தப்பட்ட படை வீரர்களைப் போல. அவர்களில் யாரெல்லாம் ஒருவரை ஒருவர் இலகுவாக புரிந்து கொள்கிறார்களோ, அவர்கள் மிக இலகுவாக நண்பர்களாகி விடுகிறார்கள்; அவர்களில் யாரெல்லாம் முன்பின் தெரியாதவர்கள் போல் தெரிகிறாகளோ, அவர்கள் விலகிப்போய் விடுகின்றார்கள்." (புகாரி, முஸ்லிம்)

ஆழமாக ஆய்வு செய்திட வேண்டிய நபிமொழி இது!

இந்த நபிமொழியிலிருந்து நமக்குத் தெரிய வருவது என்னவெனில், நம்மில் சிலர், நம்மை ஒத்த சிலருடன் பழகுவதும், நண்பர்களாகி விடுவதும், வேறு சிலரை நமக்குப் பிடிக்காமல் போய் அவர்களிடமிருந்து நாம் விலகி விடுவதும் - இவையெல்லாம் - வல்லோன் இறைவனின் இயல்பான படைப்பின் இரகசியங்களில் உள்ளவையாகும்.

இது திருமண உறவில் இணையும் ஆண் - பெண்ணுக்கும் பொருந்தும் தானே!

அதனால் தானோ என்னவோ அண்ணல் நபியவர்கள் நீங்கள் திருமணம் முடிக்க விரும்பும் பெண்ணைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று நம்மை அறிவுறுத்தியிருக்கின்றார்கள்.

நபித்தோழர் முகீரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“நான் ஒரு பெண்ணை மணமுடித்துக்கொள்ள பேசியிருந்தேன். இதனை அறிந்த ரசூல் , நீர் அப்பெண்ணைப் பார்த்துக் கொள்ளும், ஏனெனில் அது உங்களிருவருக்கிடையில் உவப்பையும், நட்பையும், இணக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும் என் அறிவுரை பகன்றார்கள்.” ஆதாரங்கள்: நஸயீ, திர்மிதி, முஸ்னத் அஹ்மத்.

சுப்ஹானல்லாஹ்! எப்படிப்பட்ட மார்க்கம் நமது மார்க்கம்!

ஆனால் சில பெற்றோர்கள் தங்களுக்குப் பிடித்த ஒரு பையனையே தங்கள் மகளுக்கும், தங்களுக்குப் பிடித்த ஒரு பெண்ணையே தங்கள் மகனுக்கும் திருமணம் முடித்து விட முயற்சிக்கிறார்கள்.

வாப்பா! எனக்குப் பிடிக்கவில்லை என்று பிள்ளைகள் சொன்னால் கூட - "திருமணம் செய்து கொண்டால் எல்லாம் சரியாகிப் போய் விடும்" என்று போலிச் சமாதானம் செய்து திருமணத்தையும் செய்து வைத்து விடுகிறார்கள்.

எப்படிச் சரியாகப் போகும்?

என்ன சொல்கிறார்கள் அந்தப் பெற்றோர்கள்?

"நாங்கள் எல்லாம் பெண்ணை அல்லது மாப்பிள்ளையைப் பார்த்துத் தானா திருமணம் செய்து கொண்டோம்! பெற்றோர்கள் யாரைக் கட்டிக் கொள்ளச் சொன்னார்களோ அவர்களைக் கட்டிக் கொண்டு குடும்பம் நடத்திடவில்லையா? என்ன எங்களுக்குக் குறைந்து போய் விட்டது?"

ஆனால் இங்கே பாருங்கள் ஒரு தந்தையை!

ஒரு பெண்! படித்த பெண்! மார்க்கமான பெண்! இறையச்சம் உள்ள பெண்! தந்தையும் இறையச்சம் மிக்கவர் தான்; தந்தை தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்; ஒரு இளைஞர் - இக்குடும்பத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு பெண் கேட்டுத் தூது அனுப்புகிறார்;

அந்த இளைஞரும் நன்றாகப் படித்தவர்; நல்ல வேலையில் இருக்கிறார்; நல்ல வருமானம்; அந்த இளைஞரைப் பற்றி அவர் தொழும் பள்ளி இமாமை அணுகி விசாரிக்கிறார்.

அந்த இமாம் சொல்கிறார்: "அந்த இளைஞனைத் திருமணம் செய்து கொள்ளும் பெண் மிகவும் கொடுத்து வைத்த பெண்ணாகத் தான் இருக்க வேண்டும்! அந்த அளவுக்கு மிக நல்ல இளைஞர் அவர்!"

தந்தைக்குத் திருப்தி ஏற்படவே - தன் மகளிடம் விவரங்கள் அனைத்தையும் சொல்லி அவரது விருப்பத்தைக் கேட்கிறார்; ஆனால் அப்பெண் அந்த இளைஞரைத் திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டார்!

இவ்வளவு நல்ல பையனை ஏன் அந்தப் பெண் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை?

அது ஆன்மாக்கள் சம்பந்தப்பட்ட விஷயம்! மேலே குறிப்பிட்ட நபிமொழி இதனைத் தான் உணர்த்துகிறது! அதனால் தான் இறையச்சம் மிக்க அந்தத் தந்தை - மகளுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்ததும் அந்த வரனை விட்டு விட்டார்!

"உனக்கு விருப்பம் இல்லாவிட்டால் வேண்டாமம்மா!" என்று விட்டு விட்டார் தந்தை!

இப்படிப்பட்ட பெற்றோர்களைப் பெற்றவர்கள் தான் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்!

No comments:

Post a Comment