Thursday, March 20, 2014

மூன்று காதல் மொழிகள்! - 1

சுன்னத்தான இல்லறம்:

மூன்று காதல் மொழிகள்!

முதலாவது: என்னிடம் சொல்! (TELL ME!)

கணவன்-மனைவியர் காதலை ஒரு பூஞ்செடியுடன் ஒப்பிட்டுவோம். எந்த ஒரு பூஞ்செடியும் தானாகவே வளர்ந்து, தானாகவே மொட்டு விட்டு, தானாகவே மலர்ந்து வாசனை பரப்புவதில்லை!

ஒரு பூஞ்செடி வளர்ந்து பூத்துக் குலுங்குவதற்கு - அது அழகாக வளர்வதற்கேற்ற சூழல் ஒன்றை நாம் உருவாக்கித் தந்திட வேண்டும். அந்தச் செடிக்கு அனு தினமும் நாம் நீரூற்ற வேண்டும். அதனைத் தொடர்ச்சியாக நாம் பராமரித்திட வேண்டும்.

அது போலத்தான் கணவன்-மனைவியர் காதலும்! அந்தக் காதல் வளர்வதற்கேற்ற சூழல் ஒன்று நிச்சயம் தேவை! பராமரிப்பு தேவை! அனு தினமும் அதற்குக் கண்காணிப்பும் அவசியம்!


நீரூற்றுவது நிறுத்தப்பட்டால், எவ்வாறு ஒரு பூஞ்செடி வாடி வதங்கி விழுந்து விடுமோ, அது போலவே கணவன் மனைவி காதலுக்குப் புத்துயிர் ஊட்டுதல் நிறுத்தப்பட்டால், இல்லற வாழ்வும் வாடி வதங்கி வெறுமையானதாக ஆகி விடும்.

அல் குர்ஆன் ஒரு அழகிய உவமையை நமக்குச் சொல்லித் தருகிறது.

"அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்!" (2:187)

ஆடை என்றால் அப்படியே அது நமக்குக் கிடைத்து விடுவதில்லை! அதற்கான துணி என்பது ஒவ்வொரு இழையாக நெய்யப்பட வேண்டும். நெய்வதிலும் நேர்த்தி ஒன்று அவசியம். அது போலத்தான் - கணவன் மனைவி காதலும். ஒவ்வொரு இழையாக அது நெய்யப் படுதல் அவசியம்!

இப்படிப் பார்க்கும்போது - கணவன் மனைவி காதல் என்பது கூட ஒரு கலை தான்! அது ஒரு திறமையும் கூட (SKILL)! அதனை கணவன் மனைவியர் வளர்த்துக் கொண்டு தான் ஆக வேண்டும்!

இந்தத் திறமையை எவ்வாறு வளத்துக் கொள்வது?

அண்ணலார் வாழ்விலிருந்து மூன்று காதல் மொழிகளை - three languages of love - கற்றுக் கொள்வோம்!

ஒவ்வொன்றாகப் பார்ப்போமே!

என்னிடம் சொல்! (TELL ME!)

உங்கள் துணையிடம் நீங்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருங்கள்! நீங்கள் எந்த அளவுக்கு அவரை
நேசிக்கிறீர்கள் என்பதை!

காதல் என்பது உங்கள் இதயத்தில் இருந்தால் மட்டும் போதாது! அது உங்கள் வார்த்தைகளால் வெளிப்படுத்தப்பட வேண்டியதும் அவசியம்.

உங்களில் யாராவது ஒருவர் தனது சகோதரரை நேசித்தால், அதனை அவரிடம் தெரிவித்து விடுங்கள்." (அபூ தாவூத்)

ஆனால் நமது சமூகத்தில் இவ்வாறு கணவன் மனைவியரிடையே அன்பை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொள்வதற்கு நாம் இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லை! அதிலும் குறிப்பாக கணவன்மார்கள்!

நபியவர்களின் வாழ்க்கையில் இருந்தாவது பாடம் கற்போமே!

நபியவர்கள் தம் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் மீது தமக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்திக் காட்டிட சிறப்பான பெயரொன்றைச் சூட்டி அவர்களை அழைப்பார்கள்.

நீங்கள் உங்கள் மனைவிக்கும், உங்கள் மனைவி உங்களுக்கும் இவ்வாறு அழகிய பெயர்களை சூட்டி அவர்களை அழைத்து உங்கள் அன்பை பரஸ்பரம் வெளிப்படுத்திக் கொள்ளலாம் தானே!

உங்கள் துணை உங்களுக்கு ஒரு உதவி செய்து விட்டாரா? "ஜஸாகல்லாஹ் க்ஹைர்" சொல்லலாம் தானே!

அதுவும் உங்கள் உள்ளத்திலிருந்து!

என்னது? கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருப்பார்களா, என்ன?" என்று கேட்காதீர்கள்!

இதுவும் சுன்னத் தான்!

“அல்லாஹ்வின் தூதருக்கு யாரேனும் ஏதாவது அன்பளிப்பை வழங்கினால் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு நன்றி தெரிவிப்பார்கள். இறைத் தூதரின் காரியமொன்றை யாரேனும் நிறைவேற்றினால் தன்னுடைய திருப்தியை மனப்பூர்வமாக தெரிவிப்பார்கள்.” (அத் திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “மனிதர்களுக்கு நன்றி
செலுத்தாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த மாட்டான்.” (அஹ்மத், அபூ தாவுத்)

அட! மனைவியும் ஒரு மனுஷி தானே!

நன்றி சொல்லிப்பாருங்கள்! காதல் வெளிப்படுகிறதா என்றும் சோதித்துப் பாருங்கள்! அதிசயம் நடக்கும் உங்கள் இல்லற வாழ்வில்!

உங்கள் துணைவர்/ துணைவி எங்காவது பயணம் புறப்படுகிறாரா? ஃபீ அமானில்லாஹ், அல்லது ஃபீ
ஹிஃப்ஸில்லாஹ் என்று முகம் மலர்ந்து சொல்லி அனுப்புங்களேன்!

நீங்கள் வேலை நிமித்தம் வெளியே சென்றிருக்கும்போது தொலைபேசியில் அழைத்து விசாரியுங்களேன்! அவரை நீங்கள் பிரிந்திருப்பது உங்களை எவ்வளவு வாட்டுகிறது என்று அழகிய வார்த்தைகளால் தெரிவியுங்களேன்! ஒரு SMS அனுப்புங்களேன், உங்கள் துணைவரை நீங்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பதை அதன் மூலம் சொல்லுங்களேன்!

என்ன? இன்றே செயல்படுத்தலாம் தானே!

No comments:

Post a Comment