Thursday, May 23, 2013

உங்கள் மனைவியின் நிலையில் நீங்கள் இருந்தால்...?

ஆங்கிலத்தில் Empathy என்று ஒரு அருமையான சொல்.

Empathy என்றால் என்ன?

To be empathic is having the ability to identify with and understand another person's situation, feelings, attitudes, or motives.

ஒருவர் - மற்ற இன்னொருவரின் நிலையிலிருந்து கொண்டு அவருடைய சூழ்நிலைகளையும், உணர்வுகளையும், மனோபாவத்தையும், எண்ணங்களையும் புரிந்து கொள்ளும் தன்மைக்கு empathy என்று பெயர்.
இந்தத் தன்மையை மிக அழகாக விளக்குகிறது ஒரு கதை.


இதோ அந்தக் கதை!

அது ஒரு குளிர்காலம். அது ஒரு சிறிய நகரம். அங்கே ஒரு சமூக நல மையம். அங்கே சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்! அந்நகரத்தில் வீடில்லாதோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்தும், அதற்கு தாங்கள் என்ன செய்திடலாம் என்பது குறித்தும் தான் பேச்சு!

பல்வேறு கருத்துக்களை முன் வைத்து கவலையுடன் அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென்று கதவைத் திறந்து கொண்டு ஒரு வயதான மூதாட்டி உள்ளே நுழைந்தார். வளைந்து விட்ட முதுகு. முகத்தில் களைப்பு. கந்தல் துணிகளே அவருடைய ஆடைகள்.

சேவை மையத்தின் தலைவி வியப்புடன் கேட்டார்: "என்ன உதவி வேண்டும் உங்களுக்கு?"

"முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் - இவ்வாறு அனுமதி இன்றி உள்ளே நுழைந்து உங்களுக்குச் சிரமம் தந்ததற்காக! இங்கே மிக அருகில் உள்ள இராணுவ மையம் எங்கிருக்கின்றது என்று உங்களால் சொல்ல முடியுமா? எனக்கு அங்கே போய் ஒரு ஜோடி காலணிகள் கிடைக்குமா என்று பார்த்திட வேண்டும்?"

அந்த மையத்தின் தலைவி முதலிலேயே பார்த்து விட்டார் - அந்த மூதாட்டியின் பாத அணிகள் இரண்டிலும் நிறைய ஓட்டைகள்! எந்த நேரத்திலும் அவை பிய்ந்து விடும் நிலையில்.

"உங்கள் அளவு என்னம்மா?" - கேட்டார் அந்தத் தலைவி.

"எட்டரை அம்மா!' என்றார் மூதாட்டி.

உடனே அந்தத் தலைவி கீழே குனிந்து தனது காலணிகளைக் கழற்றி அவர் கையில் கொடுத்து, "இது உங்களுக்கு சரியாக இருக்கிறதா, பாருங்கள்", என்றார்.

"இதனை நான் எப்படி அணிந்திட முடியும்? இது விலை உயர்ந்த புத்தம் புதிதான காலணியாக அல்லவா இருக்கிறது!" என்றார் மூதாட்டி.

தலைவி, "பரவாயில்லை, போட்டுப் பாருங்கள்!" என்றார்.

அந்த மூதாட்டி அந்த புத்தம் புதிய காலணிகளை அணிந்து பார்க்கிறார். "என்ன ஒரு மிருதுவாக கதகதப்பாக இது இருக்கின்றது!" என்று வியக்கிறார். லேசான ஒரு புன்சிரிப்பு அவர் முகத்தில்.

தலைவி அம்மூதாட்டியின் கரம் பிடித்துச் சொன்னார்: "இவை உங்களுக்குத் தான்! எனக்கு வீட்டில் இன்னொன்று இருக்கின்றது!"

அந்த ஏழை மூதாட்டி நன்றி சொல்லி விட்டு அங்கிருந்து  புறப்பட்டார். "இறைவன் உங்களை வாழ்த்துவானாக!" என்று கூறியவராக.

அம்மூதாட்டி சென்றதும் அங்கே ஒரு பெரிய அமைதி! யாரும் வாய் திறக்கவே இல்லை! அனைவரும் நெகிழ்ந்து போய் விட்டனர்! ஒருவர் மட்டும் கேட்டார்:

"மேடம், ஆனால் நீங்கள் எப்படி வீட்டுக்குச் செல்வீர்கள்?" பனி கொட்டிக் கொண்டிருக்கின்றது; காலணிகள் இல்லாமல் எப்படி நீங்கள் செல்வீர்கள்?"

கருணை உள்ளம் படைத்த அந்தத் தலைவி சொன்னார்: "எனது காலுறைகள் சற்று கனமானவை தான்! பரவாயில்லை! மேலும் எனக்கு இங்கே ஒரு ஜோடி காலணியும் இருக்கத் தானே செய்கிறது!"

அந்த வயதான மூதாட்டி விட்டுச் சென்ற கந்தலான காலணியை அணிந்தவராக புறப்பட்டார் அவர் வீட்டுக்கு!

"மேடம், ஜாக்கிரதை! காலணிகள் ஓட்டையாக இருக்கின்றன! பனிப்பொழியும் பாதையில் எச்சரிக்கையுடன் செல்லுங்கள்! - என்றார் இன்னொருவர்.

புன்சிரிப்புடன் பதில் சொன்னார் அந்தத் தலைவி: "ஆமாம்! நான் பார்த்துக்கொள்கிறேன்; வயதான ஏழை மூதாட்டி ஒருவர் = ஓட்டைக் காலணிகளை அணிந்து கொண்டு எப்படித் தான் நடப்பார் என்பதை நான் அனுபவித்துப் பார்த்திட முடியும் அல்லவா?

ஆம்! இது தான் இரக்கமுள்ள இதயம்!

இந்தக் கதை கணவன் மனைவியருக்கு மிக அற்புதமான ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது.

இல்லறத்தில் பிரச்னை! கணவனும் மனைவியும் ஆலோசனை கேட்க வருகின்றனர். அங்கே கணவனும் மனைவியும் ஆலோசகரிடம் என்ன சொல்வார்கள் தெரியுமா?

கணவன் என்ன சொல்வார்?

தனக்கும் தன் மனைவிக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை அடுக்குவார்; தன் மீது தவறே இல்லை என்று அடித்துப் பேசுவார். மனைவி செய்கின்ற தவறுகளைப் பட்டியல் போடுவார். பேசுவார், பேசுவார், அடுக்கிக் கொண்டே போவார் மனைவியின் குறைகளை!


பதிலுக்கு மனைவி என்ன சொல்வார்?

கணவனுக்கு சற்றும் தான் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்திடும் வண்ணம் அவரும் அடுக்குவார் - கணவனின் குறைகளை!

ஆலோசகர் (counselor) கேட்பார்: "உங்கள் மனைவியின் நிலையில் நீங்கள் இருப்பதாக எண்ணிக் கோண்டு - உங்கள் மனைவியைப் பற்றிப் பேசுங்கள்" என்றாலோ... அல்லது "உங்கள் கணவனின் நிலையில் உங்களை வைத்துக்கொண்டு உங்கள் கணவரைப் பற்றிப் பேசுங்கள்" என்றாலோ.... பதில் சொல்வதற்குத் தடுமாறுகிறார்களாம். இருவருமே அமைதியாகி விடுகிறார்களாம்!

அங்கே பேசுவதற்கு ஒன்றும் இருப்பதில்லை! ஏனெனில் ஒருவர் மற்றவரின் மன நிலையில் இருந்து கொண்டு பிரச்சனைகளைப் பார்த்திடும் போது - அவைகளெல்லாம் பிரச்சனைகளே இல்லை என்றாகி விடுகின்றன!

எனவே தான் சொல்கிறோம். கணவன் மனைவியருக்குள் பிரச்சனைகள் தோன்றினால் - உடனே உங்கள் துணைவரின் நிலையில் உங்களை வைத்து சிந்தியுங்கள். உங்கள் கண்ணோட்டம் முழுவதும் மாறிப்போய் விடும்!

இரக்க உணர்வு மேலிடும்! குறைகளைப் பொறுத்துக் கொள்வீர்கள்! மன்னிக்கத்தொடங்கி விடுவீர்கள்! அன்பும் நேசமும் மேலோங்கும்!

அங்கே இருவரும் சேர்ந்தே பிரச்சனையைத் தீர்ப்பது எப்படி என்று பேசத் தொடங்குவார்கள். கருத்துக்கள் அங்கே தாராளமாக பரிமாறப்படும்!

ஒருவர் மற்றவரின் மன நிலையிலிருந்து கொண்டு பிரச்சனைகளைப் பார்த்திடும்போது கருணை தானாகவே சுரக்கும் - அந்த சமூக மையத்தின் தலைவியைப் போல!

இத்தகைய கருணை உள்ளம் கணவன் மனைவி இருவருக்கும் வேண்டும்!

"கருணை உணர்வு எதனையும் அழகாக்கி விடும்!" (முஸ்லிம்)

ஆம்! கருணை உணர்வு திருமண உறவையும் அழகாக்கிவிடும்! தேவை - Empathy மட்டுமே!

No comments:

Post a Comment