Thursday, May 9, 2013

எங்கள் கணவர்களை எங்களின் கண்களுக்குக் குளிர்ச்சியாக ஆக்கி வைப்பாயாக!

நாம் அடிக்கடி கேட்கின்ற துஆக்களுள்  ஒன்று திருமறை – அத்தியாயம் 25 வசனம் 74 – ல் வரும் பின் வரும் துஆ தான்:

மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள். (25: 74)


மேற்கண்ட திருமறை வசனத்தில் “மின் அஸ்வாஜினா” / min azwaajinaa / என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு என்ன?

அஸ்வாஜினா என்பதற்கு எங்களின் மனைவியர் என்று மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. இது சரியா என்பதே நம் கேள்வி.


ஸவ்ஜ் என்பது ஒருமை. அஸ்வாஜ் என்பது பன்மை.

ஸவ்ஜ் என்பதன் முழுமையான பொருள் என்ன?

ஆங்கிலத்தில் ஸவ்ஜ் என்பதற்கு  one of a pair, partner, couple, mate, husband, wife என்றெல்லாம் மொழிபெயர்க்கப்படுகின்றது.

“ஜோடி” என்பது பொருத்தமான மொழிபெயர்ப்பாக தெரிகிறது.

தமிழில் இதற்கு – துணை, துணைவர், துணைவி – என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம்.

மேற்கண்ட திருமறை வசனத்தை -

மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் துணைவர்களிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.” -

என்று மொழி பெயர்ப்பதே சரியானது.  (அல்லாஹ்வே மிக அறிந்தவன்.)

முஹம்மது அஸத் அவர்கள் தமது ஆங்கில மொழிபெயர்ப்பில் azwaaj என்பதற்கு spouses என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.

“and who pray: “O our Sustainer! Grant that our spouses and our offspring be a joy to our eyes, and cause us to be foremost among those who are conscious of Thee!”

Spouses  என்பதற்கு துணைவர்கள் என்பதே சரியான மொழிபெயர்ப்பு!
எனவே – கணவர்கள் துஆ செய்திடும்போது “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!”  – என்றும்,

அது போலவே – மனைவியர் துஆ செய்திடும்போது “எங்கள் இறைவா! எங்கள் கணவர்களிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!” – என்றும் பொருள் எடுத்துக் கொள்ளலாம்.

துணைவர்கள் என்ற மொழிபெயர்ப்பை நாம் வலியுறுத்துவதற்கு இன்னொரு காரணம்:

அல்லாஹு தஆலா கணவனையும் மனைவியையும் இங்கே ஒரே “அந்தஸ்தில்” வைத்து துஆ கேட்கச் சொல்லியிருக்கும் அழகினை நமது மனைவிமார்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்!

No comments:

Post a Comment