Thursday, May 23, 2013

கருத்து வேறுபாடுகள் தலைதூக்கும்போது!

கணவன்-மனைவி இருவர். என்னதான் எல்லாப் பொருத்தங்களையும் பார்த்துப் பார்த்துத் திருமணம் முடித்தாலும் ஆண் என்பவன் வேறு, பெண் என்பவள் வேறு என்பதால், இருவரும் வளர்ந்து வந்த சூழல்கள் வேறு வேறு என்பதால் இருவரின் ஆளுமையும் வேறு வேறு என்பதால் இல்லற வாழ்வில் கருத்து வேறுபாடுகள் வரத் தான் செய்யும்.


அது ஏன் இப்படி என்று கேட்க வேண்டியதில்லை. அது அப்படித்தான்!

கருத்து வேறுபாடுகள் எந்தெந்த விஷயங்களில் தலையெடுக்கலாம்?

பொருளாதாரம் காரணமாக இருக்கலாம். அல்லது மாமியார்-நாத்தனார் காரணமாக இருக்கலாம். குழந்தை வளர்ப்பு குறித்ததாக இருக்கலாம். இஸ்லாமிய மரபுகளைப் பேணுவதில் இருக்கலாம். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் இருக்கலாம். அது சிறியதாகவும் இருக்கலாம். பெரியதாகவும் இருக்கலாம்.

ஆனால் கருத்து வேறுபாடு தோன்றி விட்டால் அடுத்து கணவன் மனைவியர் என்ன செய்திட வேண்டும். அது குறித்து மனம் திறந்து பேசிட வேண்டும்.

ஆனால், பல கணவன் மனைவியர் அவ்வாறு பேசிடுவதில்லை. மனதுக்குள் போட்டு அடக்கி வைத்திருப்பார்கள். கோபம் வரும். சோகம் தலையெடுக்கும். அநியாயம் இழைக்கப்பட்டதாக, அவமானப்படுத்தப் பட்டதாக, காயப்படுத்தப்பட்டதாக எண்ணுவார்கள். ஆனால் வாயைத் திறக்க மாட்டார்கள்.

இதற்குப் பெயர் தான் ஆங்கிலத்தில் Resentment என்கிறார்கள். இதனை "அடக்கி வைக்கப்பட்ட கோபம்" எனலாம். இது பாட்டிலில் அடைக்கப்பட்ட உணர்வு ஆகும். இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அழுத்தம் கொடுக்கத் தொடங்கும்.

கணவன் மனைவியரிடையே இந்த கோபம் உருவாகி வளர்ந்தால் என்ன விளைவுகளை இது ஏற்படுத்திடும்?

முதலில் தனது கணவனைப் பற்றிய அல்லது மனைவியைப் பற்றிய "உயர்ந்த எண்ணம்" அடி பட்டுப்போகும். நம்பிக்கை குறைந்து விடும். முன்னர் எவ்வாறு தமக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று அவர் எண்ணிக் கொண்டாரோ  அதே கோணத்திலேயே அடுத்து நிகழும் அனைத்து சம்பவங்களையும் கற்பனை செய்யத் தொடங்கி விடுவார்.

இங்கே ஒரு கணவன் மனைவி கதையை எடுத்துக் கொள்வோம்.

இருவருக்கும் திருமணம் ஆன போது மனைவியின் நெருங்கிய உறவினர் ஒருவர் திருமண நன்கொடையாக ஒரு தொகையை அந்தப் பெண்ணிடம் கொடுக்கிறார். ஆனால் மனைவியிடம் பணம் இருப்பது தெரிந்த கணவன் அந்தப் பணத்தை மனைவியிடம் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்டு வாங்கி முழுவதையும் செலவு செய்து விடுகிறார்.

அந்தப் பெண்ணுக்குக் கோபமோ கோபம்!

"அந்தப் பணம் என்னுடையது! அதனை இவர் எடுத்து எப்படி செலவு செய்யலாம்?" என்று தனக்குள்ளேயே அடிக்கடிக் கேட்டுக் கொள்கிறார்.

ஆனால், வேறு சில தருணங்களில், "சே! இது ஒரு பெரிய தொகையா? இவர் எனக்கு செய்கின்ற செலவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது ஒரு சாதாரண தொகை தானே! இதற்கு ஏன் போய் நான் இப்படி அலட்டிக் கொள்கிறேன்?" - என்றும் எண்ணிக் கொள்கிறார்.

இந்த சிந்தனை வட்டத்தில் சிக்கிக் கொண்ட அந்தப் பெண்மணிக்கு இது குறித்து கணவனிடம் பேசிட இயலவில்லை!

அடுத்து என்ன நடந்தது?

"நீ ஏன் பகுதி நேர வேலை ஒன்றில் சேர்ந்திடக் கூடாது?" என்று கணவன் ஆலோசனை சொல்கிறார். ஆனால் மனைவி அவரது நோக்கத்தையே சந்தேகிக்கிறார்.

கணவன், மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு மனைவியையும் அழைத்துச் செல்கிறார். போகும்போது சில பரிசுப் பொருட்களையும் வாங்கிச் செல்கிறார். மனைவி இதனையும் சந்தேகிக்கிறார். "எதற்காக இவர் இப்படி ஐஸ் வைக்கிறார்?"

மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே செல்கிறார். மனைவிக்காக செலவுகள் செய்கிறார். "இதுவெல்லாம் வெறும் நடிப்பு" என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறார்.

இவ்வாறு எவ்வளவு காலம் இந்த உணர்வுகளை அடக்கிக் கொண்டிருந்தார் இவர் தெரியுமா? நான்கு ஆண்டுகள்! பின்னர் தான் அது வெடிக்கிறது!

இவ்வாறு மவுனமானதொரு கோபம் ஏற்பட்டு, அது அடக்கப்பட்டு, அதற்கு அழுத்தம் தரப்பட்டு பின்னர் வெடித்திட ஏன் அனுமதித்திட வேண்டும்?

இந்த நிலை ஏன் ஏற்படுகின்றது என்பதை அறிந்து கொண்டால் தான் இந்நிலையிலிருந்து கணவன் மனைவியர் தம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

காரணங்கள்:

1. வெளிப்படையாகப் பேசிடத் தயக்கம். தனது கருத்துக்களில் உண்மை இருக்கின்றது என்று தெரிந்தால் பேசிவிட வேண்டியது தானே?

2. தம்மை ஒரு பலிகடாவாக (victim) கற்பனை செய்து கொள்தல்.

3. மற்றவர்களுடைய சின்னச் சின்ன சொற்களுக்கும் செயல்களுக்கும் கூட பெரிதாக அலட்டிக் கொள்தல்; தப்பர்த்தம் செய்தல்.

4. தன்னைப் பாதுகாக்க யாரும் இல்லை என்ற கழிவிரக்க உணர்வு.

5. எல்லாவற்றையும்  "தீய கண்ணோட்டத்துடனேயே" பார்த்துக் கொண்டு மற்றவர் செய்கின்ற நன்மைகளுக்குக் கூட  நன்றி செலுத்தத் தவறுவது.

இதற்குத் தீர்வு என்ன?

1 உங்கள் துணைவரின் எல்லா சொல் செயல்களையும் "தவறான கண்ணோட்டத்தில்" துருவிக் கொண்டிருக்காதீர்கள்.

2. உங்கள் எல்லாவிதமான் உணர்வுகளையும் உங்கள் துணைவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்- இதைத் தொடர்ந்து செய்து வாருங்கள்.

3. துணைவரின் குறைகளை மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

4. உங்களை நீங்களே - "நான் கண்ணியமானவன்!" என்று சொல்லிக் கொள்ளுங்கள். உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ளுங்கள்.

5. அல்லாஹ்வின் அருளை நாடி துஆ செய்து கொண்டே இருங்கள்.

இனிக்கட்டும் இல்லறம்!

No comments:

Post a Comment