Sunday, January 4, 2015

முதல் மூன்று நிமிடங்கள் மிகவும் முக்கியம்!

கருத்து வேறுபட்ட கணவன் மனைவியர் உரையாடத் தொடங்கினால் - அவர்களின் உரையாடலின் முதல் மூன்று நிமிடங்கள் எப்படிச் செல்கிறது என்பதை வைத்தே - அவர்கள் கணவன் மனைவியராகத் தொடர்வார்களா அல்லது அது மண விலக்கில் போய் முடியுமா என்று சொல்லி விட முடியுமாம்!

அந்த முதல் மூன்று நிமிடங்கள் அவ்வளவு முக்கியமாம்!


அந்த முதல் மூன்று நிமிடங்களை அற்புதமான தருணங்களாக மாற்றிக் கொள்வது எப்படி?
 
அறிந்து கொள்வோமா?

வரலாற்றுச் சம்பவம் ஒன்று:

மூஸா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னுக்கு முன்னே சென்று அழைப்பு கொடுத்திட வேண்டும் என்பது இறை கட்டளை.

ஆனால் ஃபிர் அவ்ன் எப்படிப்பட்டவன்?

தன்னை "ரப்புகுமுல் அஃலா" - மகத்தான இறைவன் - என்று அறிவித்துக் கொண்டவன்.

தன்னை "இலாஹ்" எனப்படும் வணக்கத்துக்குரிய இறைவன் என்றும் வாதிட்டவன்.

கொடுங்கோல் மன்னன். சர்வாதிகாரி.

அப்படிப்பட்டவனுக்கு முன்னால் நின்று அழைப்பு கொடுக்கும்போது - ஃபிர் அவன் அதனை எவ்வாறு எதிர்கொள்வான்?

அவனுக்குக் கோபம் வரும்; கடும் சொற்களைப் பயன்படுத்தித் திட்டவும் செய்யலாம்;

ஆனால் மூஸா (அலை) அவர்களும் சற்றே உணர்ச்சி வசப்பட்டு விடுபவர்கள் தானே!

அழைப்பின்போது ஹள்ரத் மூஸா (அலை) அவர்களும் உணர்ச்சி வசப்பட்டு விட்டால் அழைப்பு என்னாகும்?

எனவே துஆ கேட்கிறார்கள் அவர்கள்!

(அதற்கு மூஸா) கூறினார்: “இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ விரிவாக்கி தருவாயாக! (20:25)

நெஞ்சத்தை விரிவாக்குதல் என்றால் என்ன?

நெஞ்சத்தை நல்ல உணர்வுகளால் நிரப்புவாயாக என்று பொருள். அதாவது அழைப்பின்போது அவர்களின் நெஞ்சம் - அமைதியுடன் இருக்க வேண்டும்; பதற்றம் அடைந்து விடக்கூடாது. நல்லதொரு மன நிலை வேண்டும். இருக்கமான சூழலாக அது மாறிவிடக் கூடாது. நெஞ்சத்தை விரிவு படுத்துதல் என்பது இது தான்!

***

இந்த வரலாற்றுச் சம்பவத்தில் - கருத்து வேறுபாடுகளால் சூழப்பட்டிருக்கும் - கணவன் மனைவியருக்கு நல்லதொரு படிப்பினை இருக்கின்றது.

கருத்து வேறுபாடு சம்பந்தப்பட்ட முக்கியமான விஷயம் ஒன்றைப் பேசிட வேண்டுமா?

முதலில் இரண்டு ரக்அத் தொழுது கொள்ளுங்கள்; அடுத்து ஹள்ரத் மூஸா (அலை) அவர்கள் கேட்ட  அதே துஆவை நீங்களும் கேட்டுக் கொள்ளுங்கள். இந்த துஆ கணவன் மனைவி உரையாடலுக்கு மிக மிக அவசியம்!

அதன் பின்னர் - அமைதியுடனும், நிதானத்துடனும் துணையுடன் பேச்சைத் துவக்குங்கள்.  நல்லதொரு மன நிலையுடன் நீங்கள் பேச்சைத் துவக்கி அப்படியே தொடர்ந்தால் போதும்; ஒரு மூன்று நிமிடங்களுக்கு மட்டும் தான்! அது போதும். பின்னர் - வெற்றி உங்களுக்குத் தான். நல்லதொரு விளைவை ஏற்படுத்திட அல்லாஹ் ஒருவனே போதுமானவன்.

ஏனெனில் இந்த து ஆவைக் கற்றுக் கொடுத்தவனே அல்லாஹ் தான்!

No comments:

Post a Comment