Sunday, April 13, 2014

உங்கள் மனைவியின் நிலையில் நீங்கள் இருந்தால்...?

சுன்னத்தான இல்லறம் 

கதை ஒன்று உங்களுக்காக...

அது ஒரு குளிர்காலம். அது ஒரு சிறிய நகரம். அங்கே ஒரு சமூக நல மையம். அங்கே சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்! அந்நகரத்தில் வீடில்லாதோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்தும், அதற்கு தாங்கள் என்ன செய்திடலாம் என்பது குறித்தும் தான் பேச்சு!


பல்வேறு கருத்துக்களை முன் வைத்து கவலையுடன் அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென்று கதவைத் திறந்து கொண்டு ஒரு வயதான மூதாட்டி உள்ளே நுழைந்தார். வளைந்து விட்ட முதுகு. முகத்தில் களைப்பு. கந்தல் துணிகளே அவருடைய ஆடைகள்.

சேவை மையத்தின் தலைவி வியப்புடன் கேட்டார்: "என்ன உதவி வேண்டும் உங்களுக்கு?"

"முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் - இவ்வாறு அனுமதி இன்றி உள்ளே நுழைந்து உங்களுக்குச் சிரமம் தந்ததற்காக! இங்கே மிக அருகில் உள்ள இராணுவ மையம் எங்கிருக்கின்றது என்று உங்களால் சொல்ல முடியுமா? எனக்கு அங்கே போய் ஒரு ஜோடி காலணிகள் கிடைக்குமா என்று பார்த்திட வேண்டும்?"

அந்த மையத்தின் தலைவி முதலிலேயே பார்த்து விட்டார் - அந்த மூதாட்டியின் பாத அணிகள் இரண்டிலும் நிறைய ஓட்டைகள்! எந்த நேரத்திலும் அவை பிய்ந்து விடும் நிலையில்.

"உங்கள் அளவு என்னம்மா?" - கேட்டார் அந்தத் தலைவி.

"எட்டரை அம்மா!' என்றார் மூதாட்டி.

உடனே அந்தத் தலைவி கீழே குனிந்து தனது காலணிகளைக் கழற்றி அவர் கையில் கொடுத்து, "இது உங்களுக்கு சரியாக இருக்கிறதா, பாருங்கள்", என்றார்.

"இதனை நான் எப்படி அணிந்திட முடியும்? இது விலை உயர்ந்த புத்தம் புதிதான காலணியாக அல்லவா இருக்கிறது!" என்றார் மூதாட்டி.

தலைவி, "பரவாயில்லை, போட்டுப் பாருங்கள்!" என்றார்.

அந்த மூதாட்டி அந்த புத்தம் புதிய காலணிகளை அணிந்து பார்க்கிறார். "என்ன ஒரு மிருதுவாக கதகதப்பாக இது இருக்கின்றது!" என்று வியக்கிறார். லேசான ஒரு புன்சிரிப்பு அவர் முகத்தில்.

தலைவி அம்மூதாட்டியின் கரம் பிடித்துச் சொன்னார்: "இவை உங்களுக்குத் தான்! எனக்கு வீட்டில் இன்னொன்று இருக்கின்றது!"

அந்த ஏழை மூதாட்டி நன்றி சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டார். "இறைவன் உங்களை வாழ்த்துவானாக!" என்று கூறியவராக.

அம்மூதாட்டி சென்றதும் அங்கே ஒரு பெரிய அமைதி! யாரும் வாய் திறக்கவே இல்லை! அனைவரும் நெகிழ்ந்து போய் விட்டனர்! ஒருவர் மட்டும் கேட்டார்:

"மேடம், ஆனால் நீங்கள் எப்படி வீட்டுக்குச் செல்வீர்கள்?" பனி கொட்டிக் கொண்டிருக்கின்றது; காலணிகள் இல்லாமல் எப்படி நீங்கள் செல்வீர்கள்?"

கருணை உள்ளம் படைத்த அந்தத் தலைவி சொன்னார்: "எனது காலுறைகள் சற்று கனமானவை தான்! பரவாயில்லை! மேலும் எனக்கு இங்கே ஒரு ஜோடி காலணியும் இருக்கத் தானே செய்கிறது!"

அந்த வயதான மூதாட்டி விட்டுச் சென்ற கந்தலான காலணியை அணிந்தவராக புறப்பட்டார் அவர் வீட்டுக்கு!

"மேடம், ஜாக்கிரதை! காலணிகள் ஓட்டையாக இருக்கின்றன! பனிப்பொழியும் பாதையில் எச்சரிக்கையுடன் செல்லுங்கள்! - என்றார் இன்னொருவர்.

புன்சிரிப்புடன் பதில் சொன்னார் அந்தத் தலைவி: "ஆமாம்! நான் பார்த்துக்கொள்கிறேன்; வயதான ஏழை மூதாட்டி ஒருவர் = ஓட்டைக் காலணிகளை அணிந்து கொண்டு எப்படித் தான் நடப்பார் என்பதை நான் அனுபவித்துப் பார்த்திட முடியும் அல்லவா?

ஆம்! இது தான் இரக்கமுள்ள இதயம்!

இந்தக் கதை கணவன் மனைவியருக்கு மிக அற்புதமான ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது.

அது என்ன?

ஆங்கிலத்தில் Empathy என்று ஒரு அருமையான சொல்.

Empathy என்றால் என்ன?

To be empathic is having the ability to identify with and understand another person's situation, feelings, attitudes, or motives.

ஒருவர் - மற்ற இன்னொருவரின் நிலையிலிருந்து கொண்டு அவருடைய சூழ்நிலைகளையும், உணர்வுகளையும், மனோபாவத்தையும், எண்ணங்களையும் புரிந்து கொள்ளும் தன்மைக்கு empathy என்று பெயர்.

இந்தத் தன்மையைத் தான் இந்தக் கதை மிக அழகாக விளக்குகிறது!

இல்லறத்தில் பிரச்னை! கணவனும் மனைவியும் ஆலோசனை கேட்க வருகின்றனர். அங்கே கணவனும் மனைவியும் ஆலோசகரிடம் என்ன சொல்வார்கள் தெரியுமா?

கணவன் என்ன சொல்வார்?

தனக்கும் தன் மனைவிக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை அடுக்குவார்; தன் மீது தவறே இல்லை என்று அடித்துப் பேசுவார். மனைவி செய்கின்ற தவறுகளைப் பட்டியல் போடுவார். பேசுவார், பேசுவார், அடுக்கிக் கொண்டே போவார் மனைவியின் குறைகளை!

பதிலுக்கு மனைவி என்ன சொல்வார்?

கணவனுக்கு சற்றும் தான் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்திடும் வண்ணம் அவரும் அடுக்குவார் - கணவனின் குறைகளை!

ஆலோசகர் (counselor) கேட்பார்: "உங்கள் மனைவியின் நிலையில் நீங்கள் இருப்பதாக எண்ணிக் கோண்டு - உங்கள் மனைவியைப் பற்றிப் பேசுங்கள்" என்றாலோ...

அல்லது "உங்கள் கணவனின் நிலையில் உங்களை வைத்துக்கொண்டு உங்கள் கணவரைப் பற்றிப் பேசுங்கள்" என்றாலோ....

பதில் சொல்வதற்குத் தடுமாறுகிறார்களாம். இருவருமே அமைதியாகி விடுகிறார்களாம்!

அங்கே பேசுவதற்கு ஒன்றும் இருப்பதில்லை! ஏனெனில் ஒருவர் மற்றவரின் மன நிலையில் இருந்து கொண்டு பிரச்சனைகளைப் பார்த்திடும் போது - அவைகளெல்லாம் பிரச்சனைகளே இல்லை என்றாகி விடுகின்றன!

எனவே தான் சொல்கிறோம். கணவன் மனைவியருக்குள் பிரச்சனைகள் தோன்றினால் - உடனே உங்கள் துணைவரின் நிலையில் உங்களை வைத்து சிந்தியுங்கள். உங்கள் கண்ணோட்டம் முழுவதும் மாறிப்போய் விடும்!

இரக்க உணர்வு மேலிடும்! குறைகளைப் பொறுத்துக் கொள்வீர்கள்! மன்னிக்கத்தொடங்கி விடுவீர்கள்! அன்பும் நேசமும் மேலோங்கும்!

அங்கே இருவரும் சேர்ந்தே பிரச்சனையைத் தீர்ப்பது எப்படி என்று பேசத் தொடங்குவார்கள். கருத்துக்கள் அங்கே தாராளமாக பரிமாறப்படும்!

ஒருவர் மற்றவரின் மன நிலையிலிருந்து கொண்டு பிரச்சனைகளைப் பார்த்திடும்போது கருணை தானாகவே சுரக்கும் - அந்த சமூக மையத்தின் தலைவியைப் போல!

இத்தகைய கருணை உள்ளம் கணவன் மனைவி இருவருக்கும் வேண்டும்!

"கருணை உணர்வு எதனையும் அழகாக்கி விடும்!" (முஸ்லிம்)

ஆம்! கருணை உணர்வு திருமண உறவையும் அழகாக்கிவிடும்! தேவை - Empathy மட்டுமே!

எத்தனை சுன்னத்தான பாடங்கள் - ஒரே ஒரு நபிமொழியில்!!

சுன்னத்தான இல்லறம்:

பாடங்களுக்குச் செல்வோமா?

குடும்பச் சண்டைகள் குறைந்திட! - எனும் தலைப்பில் ஸஹீஹுல் புகாரி நபி மொழி நூலிலிருந்து ஒரே ஒரு ஹதீஸை இதற்கு முந்தைய பதிவில் தந்திருந்தோம். (ஸஹீஹுல் புகாரி – மூன்றாம் பாகம் – ஹதீஸ் எண்: 2581)

பெண்களின் இயல்புகளைப் புரிந்துகொள்ளவும், அதற்கொப்ப அவர்களிடம் நடந்து கொள்வது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ளவும் – இந்த ஒரு நபி மொழியிலிருந்து நமக்குக் கிடைக்கும் பாடங்கள் இதோ:
1. குழுவாக செயல்படுவது பெண்களின் இயல்பு! (தனி ஆவர்த்தனம் வாசிப்பது எல்லாம் ஆண்கள் தாம்!)

குடும்பத்தில் பிரச்னை ஏதும் ஏற்பட்டால் – அதன் பின்னணியில் “பெண்கள் குழு” ஒன்று இருந்திட அதிக வாய்ப்பு உள்ளது.

அதைக் கேள், இதைக் கேட்டு வாங்கு – என்று மாமியாரைச் சுற்றி – மகள், அக்கா, தங்கை – போன்ற உறவினர் கூட்டம் ஒன்று போட்டுக் கொடுத்துக் கொண்டே இருப்பதனால் தான் வரதட்சனைப் பிரச்னைகள்.

2. பெண்கள் நம்மிடம் என்ன செய்தி கொண்டு வந்தாலும் – ஆண்கள் – அதனை சீர்தூக்கிப் பார்த்தே முடிவு செய்திட வேண்டும். கொண்டு வரப் படும் செய்தியில் நேர்மை இல்லை எனில் – ஆண்கள் உறுதியாக மறுத்து விட வேண்டும்.

நபியவர்களைப் போல! “நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றார்கள்” என்ற குற்றச்சாட்டில் என்ன நியாயம் உள்ளது? ஒவ்வொரு மனைவிக்கும் ஒவ்வொரு நாளை ஒதுக்கியது நபியவர்களின் நீதியை உணர்த்திடவில்லையா? அதில் ஏதும் குறை வைத்தார்களா நபியவர்கள்?

3. உம்மு சலமா அவர்களிடம் நபியவர்களின் மனைவியர் “அவர்கள் உனக்கு பதில் தரும் வரை நீ அவர்களிடம் இது குறித்துப் பேசிக் கொண்டே இரு” என்று கூறினார்கள் என்பதைக் கவனியுங்கள்.

உம்மு சலமாவைத் தொடர்ந்து அன்னை ஃபாத்திமா அவர்களை அணுகுகின்றார்கள். தொடர்ந்து ஸைனபையும் அனுப்பி வைக்கிறார்கள்! தங்களுக்குச் சாதகம் ஏற்படும் வரை – தொடர்ந்து – முயற்சி செய்து கொண்டே இருப்பது – பெண்களின் கை வந்த கலை.

4. பெண்களிடம் – மறுத்துப் பேசுவதை விட மவுனத்துக்கு வலிமை அதிகம். இரண்டு தடவை மவுனம் காக்கிறார்கள் நபியவர்கள். இதுவும் சுன்னத் ஆகி விடுகிறது நமக்கு.

5. பெண்களிடம் பேசும்போது நமது பேச்சோ அல்லது மறுப்போ – சுருக்கமாக நறுக்கென்று அமைந்திட வேண்டும். வள வள என்று பேசி – அது ஒரு விவாதமாக மாறிட நாம் அனுமதிக்கக்கூடாது.

6. பெண்களை – இது போன்ற “நச்சரிப்பு” வேலைகளில் இருந்து காக்கக் கூடியது – இறையச்சம் ஒன்று மட்டுமே. உம்மு சலமா அவர்கள் இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டு. உம்மு சலமா அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்குத் துன்பம் தந்ததற்காக அல்லாஹ்விடம் நான் பாவ மன்னிப்புக் கோருகிறேன் என்று கூறினார்களே- அது தான் பாராட்டப் பட வேண்டும்.

7. முகத்தில் தெரிகின்ற உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதிலும், அந்த உணர்ச்சிகளை சொற்களால் விவரித்துக் காட்டுவதிலும் பெண்களே ஆண்களை விட சிறந்தவர்கள். எவ்வளவு அழகாக ஹதீஸை விவரிக்கிறார்கள் அன்னை ஆயிஷா அவர்கள்! நபியவர்களின் முகக் குறிப்பை எவ்வளவு துல்லியமாகவும் விரைவாகவும் புரிந்து கொண்டு விடுகிறார்கள்.

8. ஒன்றை கவனித்தீர்களா? எல்லாவற்றையும் விலா வாரியாக விவரித்த அன்னையவர்கள் – ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்கள் நபியவர்களைக் கடுமையாக என்ன பேசினார்கள் என்பதையோ, தம்மைத் திட்டியதையோ, இறுதியில் அவர்களை எப்படி வாயடைக்கச் செய்தார்கள் என்பதையோ – விவரிக்காமல் விட்டு விட்டார்கள் – பார்த்தீர்களா?

இப்படித் தான் பெண்கள் “வடிகட்டிப் பேசிடத்” பழகிக் கொள்ள வேண்டும்! வடிகட்டிப் பேசினாலே பல பிரச்னைகளைத் தவிர்த்து விடலாம்.

9. இந்த ஹதீஸிலே வருகின்ற சம்பவம் போன்று நம் வாழ்வில் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆண்களாகிய நாம் எப்படி நடந்து கொண்டிருப்போம்?
வீட்டில் ரகளை ஒன்றை நடத்தி முடித்து விடுவோம். இதற்குக் காரணம் ஆண்களின் ஈகோ தான்! இந்த ஒட்டு மொத்த சம்பவத்திலும் – நபியவர்களின் மவுனத்தையும் ஒரே ஒரு கருத்தையும் மட்டுமே இங்கே நாம் காண்கிறோம். தம்மிடம் கடுமையாகப் பேசும் மனைவிக்கு எதிராகக் கூட அவர்கள் வாயைத் திறக்கவேயில்லை!

10. பெண்களின் தன்மைகளை ஆண்கள் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தால் – கணவன் – மனைவி சண்டைகள் வெகுவாகக் குறைந்து விடும் குடும்பங்களில்.

11. ஒரு உணர்ச்சிகரமான சூழலில் நமது குடும்பம். கடுமையான வாக்குவாதம். ஆளுக்கு ஆள் பேசுகின்றார்கள். சப்தம் உயர்ந்து கொண்டே போகிறது. இந்தச் சூழ்நிலையை உங்களால் மாற்றிட முடியுமா? உணர்ச்சிகள் தணிந்து – குடும்பத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு எப்படிக் கொண்டு வருவீர்கள்? நபியவர்களிடமே கற்றுக் கொள்வோம். என்ன செய்கிறார்கள்?
அன்னை ஆயிஷா அவர்கள் ஸைனப் அவர்களை வாயடைக்கச் செய்தவுடன் நபியவர்கள் “இவர் உண்மையிலேயே அபூ பக்ரின் மகள் தான்” என்று நகைச் சுவையாக ஒரு போடு போடுகின்றார்கள். அவ்வளவு தான். சூழ்நிலை மாறி விடுகிறது! உணர்ச்சித் திறன் (Emotional Wisdom) உள்ளவர்களால் தான் இது சாத்தியப் படும்.

12. இறுதியாக – இன்னொரு பாடமும் இங்கே நாம் படித்துக் கொள்வோம். கணவனும் மனைவியும் ஒரே போர்வையில் தூங்குவது தான் அது! அதாவது இதுவும் ஒரு சுன்னத் எனபதை மறந்து விட வேண்டாம்.

(அல்லாஹு தஆலா – நபியவர்களின் மனைவியர் – நமது அன்னையர் – அனைவரையும் பொருந்திக் கொள்வானாக! அவர்களைக் குறித்த நமது எழுத்துக்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!)

குடும்பச் சண்டைகள் குறைந்திட!

சுன்னத்தான இல்லறம்:

ஸஹீஹுல் புகாரி எனும் நபி மொழி நூலிலிருந்து ஒரே ஒரு ஹதீஸை எடுத்து ஆய்வோம் – இங்கே:

இது சற்றே ஒரு பெரிய நபிமொழி. பொறுமையாகப் படித்துப் பாருங்கள்:

ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது; அல்லாஹ்வின் தூதருடைய மனைவிமார்களான நாங்கள் இரு குழுக்களாக இருந்தோம். ஒரு குழுவில் நானும் ஹஃப்ஸா, ஸஃபிய்யா, மற்றும் சவ்தா ஆகியோரும் இருந்தோம். மற்றெhரு குழுவில் உம்மு சலமா அவர்களும் அல்லாஹ்வின் தூதருடைய மற்ற மனைவிமார்களும் இருந்தனர்.


அல்லாஹ்வின் தூதர் என்னை எவ்வளவு (ஆழமாக) நேசித்து வந்தார்கள் என்பதை முஸ்லிம்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே, அன்பளிப்பு செய்பவர் தம்மிடம் பரிசுப் பொருள் ஏதும் இருந்தால், அதை அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்புச் செய்ய அவர் விரும்பினால், அதை தள்ளிப் போட்டு, என் வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தங்கும் நாள்) வரும்போது என் வீட்டிற்கு அன்பளிப்பு கொடுத்தனுப்புவார்.

ஆகவே, (இது தொடர்பாக) உம்மு சலமா குழுவினர் (தங்களிடையே கலந்து) பேசினர். பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் பேசி, எவர் எனக்கு ஓர் அன்பளிப்பைத் தர விரும்புகிறாரோ அவர், நான் என் மனைவிமார்களின் வீடுகளில் எங்கிருந்தாலும் அங்கு அந்த அன்பளிப்பை அனுப்பி வைக்கட்டும் என்று கூறும்படி (அல்லாஹ்வின் தூதரை) கேட்டுக் கொள் என்று உம்மு சலமா அவர்களிடம் அவர்களின் குழுவினர் கூறினர்.

அவ்வாறே உம்மு சலமா அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் தம் குழுவினர் கூறியதை எடுத்துச் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் ஏதும் கூறவில்லை. பிறகு, உம்மு சலமா அவர்களின் குழுவிலிருந்த மற்ற மனைவிமார்கள் உம்மு சலமா அவர்களிடம், (நமது கோரிக்கையை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்களா? என்று) கேட்டனர். உம்மு சலமா அவர்கள், எனக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை என்று சொன்னார்கள்.

அவர்கள், மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் (இது பற்றிப்) பேசு என்று கூறினர். உம்மு சலமா அவர்களும் அடுத்து தமது முறை வந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் அது குறித்துப் பேசினார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை. மீண்டும் உம்மு சலமா (ரலி) அவர்களின் குழுவினர், அவர்களிடம் (நபி (ஸல்) அவர்கள் என்ன பதில் சொன்னர்கள் என்று) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எனக்கு பதில் எதுவும் கூறவில்லை என்று உம்மு சலமா அவர்கள் கூறினார்கள்.

அதற்கு அவர்கள், அவர்கள் உனக்கு பதில் தரும்வரை நீ அவர்களிடம் (இது குறித்துப்) பேசிக் கொண்டேயிரு என்று கூறினார்கள். மீண்டும் உம்மு சலமா (அவர்களின் முறை வந்தபோது) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். உம்மு சலமா அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மீண்டும் (இது குறித்துப்) பேசினார்கள்.

அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், ஆயிஷாவின் விஷயத்தில் எனக்குத் துன்பம் (மன வேதனை) தராதே. ஏனெனில், ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு) எனக்கு வருவதில்லை என்று கூறினார்கள்.

உம்மு சலமா அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்குத் துன்பம் தந்ததற்காக அல்லாஹ்விடம் நான் பாவ மன்னிப்புக் கோருகிறேன் என்று கூறினார்கள்.

பிறகு, அந்த மனைவியர் அல்லாஹ்வின் தூதருடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அணுகி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், உங்கள் மனைவிமார்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மக(ளான ஆயிஷா(ரலி) அவர்க)ளின் விஷயத்தில் (தாங்கள் நடந்து கொள்வது போன்றே பிற மனைவியரிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறார்கள் எள்று கூறுமாறு (சொல்லி) அனுப்பினார்கள்.

(அவ்வாறே) ஃபாத்திமாவும் நபி (ஸல்) அவர்களிடம் பேசினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், என் அன்பு மகளே! நான் நேசிப்பதை நீயும் நேசிக்கவில்லையா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ஆம் (தாங்கள் நேசிப்பதை நானும் நேசிக்கிறேன்) என்று கூறிவிட்டு திரும்பிச் சென்று அவர்களிடம் (தன் சின்னம்மாக்களிடம்) செய்தியைத் தெரிவித்து விட்டார்கள்.

அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் மறுபடியும் போ(ய்ச் சொல்) என்று கூறினார்கள். மீண்டும் (இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம்) செல்ல ஃபாத்திமா அவர்கள் மறுத்து விட்டார்கள்.

ஆகவே, அவர்கள் (தம் சார்பாக) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் அவர்களை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, (சற்று) கடுமையாகப் பேசி, உங்கள் மனைவிமார்கள் அபூ குஹாஃபாவின் மகனுடைய (அபூபக்ருடைய) மகள் ஆயிஷா(ரலி)வின் விஷயத்தில் (நடந்து கொள்வது போன்றே பிற மனைவிமார்களிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றார்கள் என்று கூறினார்கள்.

நான் (ஆயிஷா) அமர்ந்து கொண்டிருக்க, அவரது குரல் உயர்ந்தது. அவர் என்னைக குறை கூறித் திட்டினார். எந்த அளவுக்கென்றால், அல்லாஹ்வின் தூதர் நான் பதில் பேசுவேனா என்று எதிர்பார்ப்பது போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே, நான் ஸைனபுக்கு பதில் சொல்லி, இறுதியில் அவரை வாயடைக்கச் செய்து விட்டேன்.

நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, இவள் (உண்மையிலேயே) அபூபக்ருடைய மகள் தான் என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது, ஃபாத்திமா அனுமதி கேட்டு உள்ளே வந்தார் என்று ஆயிஷா(ரலி) கூறியுள்ளார்கள். (ஸஹீஹுல் புகாரி – மூன்றாம் பாகம் – ஹதீஸ் எண்: 2581)

என்ன அற்புதமான காட்சிகள் – நபியவர்களின் குடும்பத்தில்!

பெண்களின் இயல்புகளைப் புரிந்துகொள்ளவும், அதற்கொப்ப அவர்களிடம் நடந்து கொள்வது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ளவும் – இந்த ஒரு நபி மொழியில் இருந்தே நாம் நிறைய பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

சுன்னத்தான பாடங்களுக்குச் செல்வோமா?

இஸ்லாத்தில் ஆண் ஆதிக்கம் உண்டா? - பகுதி 2

சுன்னத்தான இல்லறம்:

ஆண்கள் என்ன அதிகாரிகளா?

காலாகாலமாகவோ அல்லது தலைமுறை தலைமுறையாகவோ ஒரு தவறை முஸ்லிம் கணவன்மார்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அது - உயர்ந்தோன் அல்லாஹ் - பெண்களுக்கு அளித்திருக்கும் கண்ணியத்தையும், உரிமைகளையும் அவர்களுக்குத் தர மறுப்பது தான்!


ஏனோ தெரியவில்லை. முஸ்லிம் கணவன்மார்கள் தங்களின் மனைவியர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனை இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை!

தங்களின் உரிமைகளைப் பெறுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் கணவன்மார்கள், தங்களின் மனைவியரின் உரிமைகளைக் காற்றில் பறக்க விட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

திருமணம் முடித்து கணவன் வீட்டுக்கு வந்த பிறகு கணவன் மனைவியிடம் என்ன எதிர்பார்க்கின்றார் தெரியுமா? தன் மனைவி தனது தாய்க்கும், சகோதரிகளுக்கும் (அதாவது அவளது மாமியாருக்கும், நாத்தனார்களுக்கும்) அடங்கிய பெட்டிப் பாம்பாக இருந்திட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கின்றார்.

இளம் மனைவி ஒருவர் சொல்கிறார்:

"நான் சொல்வதை என் கணவன் கேட்பதில்லை. அவரின் அக்காள், தங்கை, குடும்பத்தார் பேச்சை மட்டுமே கேட்கிறார். என்னுடைய பெற்றோரிடம் பேசுவதை வெறுக்கிறார். பெற்றோர் வேண்டுமா, கணவன் வேண்டுமா நீயே தீர்மானித்துக்கொள் என்று என் கணவன் கூறுகிறார். யாரைத் தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் நான் இருந்து வருகிறேன்."

கணவனும் மனைவியும் இப்படித்தான் வாழ்ந்திட வேண்டும் என்று அல்லாஹ் கற்றுத் தந்திருக்கின்றானா?

இவ்வாறு குழப்பத்தில் இருக்கின்ற மனைவியிடம் கணவன் நடத்தும் இல்லறம் இனிக்குமா?

ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்......... (4:34).

ஆனால் இந்தத் திருமறை வசனத்தை, புரிந்து கொள்ள வேண்டிய விதத்தில் புரிந்து கொள்ளாமல் நமது கணவன்மார்கள் காலா காலமாக தமது மனைவிமார்களுக்கு அநீதி இழைத்து வந்திருக்கிறார்கள். இந்த அநீதி இன்றும் தொடர்கிறது! அதுவும் மார்க்கத்தைப் பின்பற்றுகிறோம் என்ற பெயரிலேயே!?

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுவது என்ன?

ஆண்களே பெண்களை நிர்வகிப்போர் ஆவர். அவர்களில் சிலரை விட வேறு சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி இருப்பதும், ஆண்கள் தங்கள் செல்வங்களை பெண்களுக்காகச் செலவு செய்வதுமே இதற்குக் காரணம். (4: 34)

முஹம்மத் அஸத் என்ற அமெரிக்க இஸ்லாமிய அறிஞர் இவ்வசனத்தின் இப்பகுதிக்கு இவ்வாறு மொழி பெயர்த்துள்ளார்கள்:

"MEN SHALL take full care of women with the bounties which God has bestowed more abundantly on the former than on the latter, and with what they may spend out of their possessions.

இதன் கருத்து என்னவெனில் அல்லாஹ் பெண்களை விட ஆண்களுக்கு எந்தெந்த விஷயங்களில் மேன்மையைத் தந்துள்ளானோ அவைகளைக் கொண்டு பெண்களை ஆண்கள் முழுமையாகப் பாதுகாத்திட வேண்டும்;

அது போலவே ஆண்கள் தங்கள் செல்வங்களை பெண்களுக்காகச் செலவு செய்வதைக் கொண்டும் பெண்களை முழுமையாகப் பாதுகாப்பவர்களாக விளங்கிட வேண்டும்; இவற்றைத்தான் வல்லோன் அல்லாஹ் ஆண்களிடம் எதிர்பார்க்கின்றான்.

இவ்வசனத்தில் - "ஆண்களே பெண்களை நிர்வகிப்போர் ஆவர். " - என்ற சொற்றொடருக்கான அரபிச் சொற்றொடர் - "அர்ரிஜாலு கவ்வாமூன 'அலன்-னிஸாஇ".

இதில் உள்ள கவ்வாமூன என்ற அரபிச்சொல்லுக்கு என்ன பொருள்?

The expression qawwam is an intensive form of qa'im ("one who is responsible for" or "takes care of" a thing or a person).

அதாவது - கவ்வாமூன என்பதற்கு "பொறுப்பேற்றிட வேண்டிய ஒருவர்" என்றும் " ஒன்றை அல்லது ஒருவரைப் பாதுகாப்பவர் என்றும் பொருள் படும்.

பொறுப்பேற்றுக் கொள்ளும் ஒருவரையே நாம் தலைவர் என்கிறோம். இவ்வாறு பெண்கள் விஷயத்தில்; அவர்களைப் பாதுகாத்திடும் பொறுப்பேற்றுக் கொண்ட ஆண்கள் தாங்களே குடும்பத்தின் தலைவர்கள் என்று மட்டும் எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் அது ஒரு மகத்தான பொறுப்பு என்பதனை வசதியாக மறந்து விடுகிறார்கள்!!

சரி, அவ்வாறே எண்ணிக் கொள்ளட்டும்! தலைவன் என்பதால் தன்னை ஒரு "சர்வ அதிகாரி" என்று அவர் நினைத்துக் கொண்டால் அந்தக் குடும்பம் எப்படி இருக்கும்? அங்கே மனைவியின் கண்ணியம் என்னவாகும்? மனைவியின் கருத்துக்களுக்கு அங்கே என்ன மதிப்பு இருக்கும்?

ஒரு நபி மொழியை இங்கே நினைவூட்டுவது பொறுத்தமாக இருக்கும்.

"உங்களில் தலைவன் என்பவன் மக்களுக்கு சேவை செய்பவனே!" - இது அண்ணலார் வாக்கு அல்லவா?

அண்ணலார் அவர்கள் தமது குடும்பத்தாரிடம் வந்து விட்டால், ஒரு சர்வாதிகாரியைப் போலவா தங்கள் மனைவியரிடம் நடந்து கொண்டார்கள்?

உமர் (ரலி) அவர்கள் பற்றி அவரது குடும்பத்தார் சொல்வது என்ன தெரியுமா? உமர் (ரலி) அவர்கள் மிக உறுதியான மனிதர் தான்; ஆனால் அவர் எங்களிடம் வந்து விட்டால், அவர் ஒரு குழந்தையைப் போலவே நடந்து கொள்வார்!

கணவன்மார்களே! உடனே வீட்டுக்குச் செல்லுங்கள்! அண்ணலாரின் முன்மாதிரியைச் செயல்படுத்திப் பாருங்கள். சிரித்த முகத்துடன் மனைவியைச் சந்தியுங்கள். போகும்போது உங்கள் மனைவிக்குப் பிடித்த ஏதாவது ஒரு பொருளை பரிசாக வாங்கிச் செல்லுங்கள்.

மனைவி ஒரு பொக்கிஷம் என்றார்கள் நபியவர்கள். அந்தப் பொக்கிஷம் உங்களுக்காகக் காத்திருக்கும். உங்களை வரவேற்கும். அதன் அளப்பரிய செல்வங்களை உங்கள் காலடியில் கொண்டு வந்து கொட்டும்.

வீணடித்து விடாதீர்கள் உங்கள் பொக்கிஷத்தை!

உங்கள் தாயும் உங்கள் சகோதரிகளும் அந்தப் பொக்கிஷத்தை நீங்கள் அடைவதிலிருந்து உங்களைத் தடுத்திட அனுமதிக்காதீர்கள்!

இல்லறம் இனிக்கட்டும்!

Sunday, April 6, 2014

இஸ்லாத்தில் ஆண் ஆதிக்கம் உண்டா? - பகுதி 1

சுன்னத்தான இல்லறம்: 

ஆண்கள் என்ன உயர்ந்தவர்களா?

ஒரு கணவன்-மனைவி. திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் தான் ஆகின்றன. ஆனாலும் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்திடவில்லை. மனைவி சொல்கிறாள்: என் கணவன் என்னிடத்தில் ஒரு “அதிகாரியைப் போல் நடந்து கொள்கிறார்; என்னை அவமானப்படுத்துகிறார். என்னை மதிப்பதே இல்லை. கேட்டால் தான் ஒரு ஆண் மகன் என்றும் ஆண்களுக்கே இஸ்லாம் உயர்வைத் தந்துள்ளது என்றும் அதற்கேற்பவே தான் நடந்து கொள்வதாகவும் சொல்கிறார்.”


முஸ்லிம் கணவன்மார்களில் பெரும்பாலோரும் இப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்:

“நாம் தான் குடும்பத்தின் தலைவர்கள். நாம் சொல்வதைத் தான் மனைவி கேட்க வேண்டும். ஏன், எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்டிட அவர்களுக்கு அனுமதி இல்லை. மார்க்கமும் இவ்வாறு தான் கணவன்மார்களுக்கு இந்த உயர்வையும் அதிகாரத்தை வழங்கியுள்ளது.”

ஆனால் – இது மிகவும் தவறான ஒரு கண்ணோட்டம்!

பெண்களை விட ஆண்களே உயர்ந்தவர்கள் என்றால், ஆண்களுக்கே எல்லா உரிமைகளும் சலுகைகளும் என்றால், குடும்பத்தில் எல்லா விஷயங்களிலும் எதேச்சையாக முடிவெடுப்பவர்கள் ஆண்கள் தாம் என்றால், அவர்கள் தாங்கள் வைத்ததே சட்டம் என்று கருதிக் கொண்டால், கணவனும் மனைவியும் எவ்வாறு “உற்ற நண்பர்களாக” விளங்க முடியும்? உற்ற துணைவர்களாக விளங்கிட முடியும்?

முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; (9:71)

இவ்வசனம் முஃமினான கணவன்-மனைவி இருவருக்கும் பொருந்தும் தானே?

“அவர்களுடன் மிக நெருங்கிய உற்ற நண்பர்களாக நடந்து கொள்ளுங்கள்”(4:19)

கணவனும் மனைவியும் நெருங்கிய நண்பர்களே எனும்போது ஆண்கள் தங்களை உயர்ந்தவர்களாக எப்படிக் காட்டிக்கொள்ள முடியும்?

“அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; (2: 187)

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடையாக விளங்கிட வேண்டும் எனும்போது – இருவருக்கும் இங்கே சம அந்தஸ்தினை உயர்ந்தோன் அல்லாஹ் வழங்கிடவில்லையா?

கணவனுக்கு மனைவி கண்குளிர்ச்சி என்பது போலவே மனைவிக்கும் கணவன் கண்குளிர்ச்சியாக விளங்கிட வேண்டும் என்று இருவருக்கும் இறைவன் துஆ கற்றுத்தந்திடவில்லையா?

பின்னர் எப்படி ஆண்கள் தங்களை உயர்த்திக் கொள்ள முடியும்?

உண்மைதான்! கணவன் தான் குடும்பத்தின் தலைவன் (அமீர்) என்பது உண்மையே!

“ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளியாவார். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார். பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளது பொறுப்புக்குட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்…. ” (ஸஹீஹுல் புகாரி- 2558)

ஆனால் குடும்பத்தின் பொறுப்பு (guardianship) ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் ஆண்களே உயர்ந்தவர்கள் (gender superiority) என்றாகி விடுமா? ஒரு போதும் ஆகாது!

உயர்வையும் சிறப்பையும் அல்லாஹு தஆலா ஆண்-பெண் பாலைப் பொறுத்து வழங்குவதே இல்லை!

இதனை சற்று ஆழமாக நாம் பார்த்திட வேண்டியுள்ளது. பின் வரும் இறை வசனங்களை சற்று நிதானமாகப் படித்து சிந்தியுங்கள்:

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்……… (4:34).

மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்; ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு; (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு; (4:32)

மேற்கண்ட இரண்டு இறை வசனங்களிலும் – “அல்லாஹ் சிலரை சிலரை விட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான்” என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. இந்த “மேன்மைப்படுத்துதல்” என்பது திருமறையில் வேறு சில இடங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது எதனைக் குறிக்கின்றது என்றால் -

அல்லாஹு தஆலா ஒரு சிலருக்கு வேறு சிலரை விட சிலவற்றை சற்று அதிகமாக “வெகுமதியாக” (gifts) வழங்கியிருக்கின்றான்.

இது எதற்காக என்றால் அல்லாஹு தஆலா எவைகளை ஒருவருக்கு வெகுமதியாக வழங்கியிருக்கின்றானோ அவற்றை (திறமைகள், ஆற்றல்கள்) பயன்படுத்திட வேண்டிய முறையில் பயன்படுத்தி அல்லாஹு தஆலாவின் திருப் பொருத்தத்தை அவர் “சம்பாதித்துக் கொள்ள வேண்டும்”! அவ்வளவு தான்!

இங்கே நாம் கவனித்திட வேண்டியது என்னவெனில்-

மனிதர்கள் என்ற அடிப்படையில் கணவனும் மனைவியும் ஒரே நேர்கோட்டில் தான் நிற்கிறார்கள்!

குடும்பத்தின் பொறுப்பாளர்கள் என்ற அடிப்படையிலும் கணவனும் மனைவியும் சம அந்தஸ்தில் தான் இருக்கின்றார்கள்!

இறைவனுக்கு முன்னால் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் எனும் அடிப்படையிலும் அவர்கள் சமமானவர்களே!

இறைப் பொறுத்தத்தைச் சம்பாதித்திடும் இலக்கில் முன்னேறிச் சென்றிட வேண்டும் எனும் ஊக்கத்திலும் அவர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அன்று!

அல்லாஹு தஆலா அவர்களுக்கு வழங்கியுள்ள தனிப்பட்ட ஆற்றல்களில் மட்டுமே அவர்களுக்குள் வேறுபாடு! இந்த வேறுபாடு ஒருவரை விட ஒருவர் தம்மை உயர்த்திக் கொள்வதற்காக நிச்சயமாக அன்று!

உயர்வும் கண்ணியமும் எதனைப் பொறுத்தது?

உங்களில் எவர் மிகவும் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். (49:13)

மேலும் எழுதுவோம் இன்ஷா அல்லாஹ்...

மனைவியிடம் மென்மை!

சுன்னத்தான இல்லறம்: 

பொதுவாகவே எல்லா விஷயங்களிலுமே மென்மையை வலியுறுத்துகின்றான் வல்லோன் அல்லாஹு தஆலா.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையையே நேசிக்கிறான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


“அல்லாஹ் மென்மையானவன். மென்மையையே நேசிக்கிறான். கடினத் தன்மைக்கும், வேறெந்த பண்புகளுக்கும் அளிக்காத நற்கூலியை மென்மைக்கு அளிக்கிறான். (ஸஹீஹ் முஸ்லிம்)

அதே நேரத்தில் குறிப்பாக இல்லற வாழ்க்கையிலும் மென்மையைக் கடைபிடிக்கும்படி மார்க்கம் நமக்கு போதிக்கிறது:

அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ஆயிஷாவே! மென்மையாக நடந்துகொள். அல்லாஹ் ஒரு குடும்பத்தினருக்கு நன்மையை நாடினால் அவர்களுக்கு மென்மையின்பால் வழிகாட்டுகிறான்.”

மற்றோர் அறிவிப்பில்: “ஒரு குடும்பத்தினருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால் அவர்களிடம் மென்மையைப் புகுத்துகிறான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

பொதுவாகவே கணவன் மனைவியருக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் அனு தினமும் தோன்றும். சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கெல்லாம் சட்டென்று கோபப்பட்டு சீற்றத்தைக் கொட்டி விடுவார்கள் கணவன்மார்கள். எனவே மனைவியைக் கண்டிக்கும் சமயத்திலும் மென்மையைக் கடைபிடிக்க வேண்டும்.

“பெண், விலா எலும்பைப் போன்றவள். அவளை நீ நிமிர்த்தினால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால், அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

கடினமாக நடந்து கொண்டால் – அதாவது மென்மை போய் விட்டால்…கணவன் மனைவி உறவு முறிந்து விட வாய்ப்பளித்ததாக ஆகி விடும்!

பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மென்மை பற்றி நாம் அறிந்தே இருக்கின்றோம்! ஆனால் ஏன் நம்மால் செயல் படுத்திட முடியவில்லை? சிந்திப்போமா?

"உங்கள் உள்ளத்திலும் அறிவிலும் சுமந்திருக்கும் சிந்தனைகளை மக்கள் மயப்படுத்துவதற்கு சிறந்த வழி, அதை நீங்கள் செயட்படுத்துவதுதான். இதை தவிர வேறு குறுக்கு வழிகள் எதுவும் ஒரு சிந்தனையின், கோட்பாட்டின் வெற்றிக்கு காரணமாக இருக்க முடியாது."

- உஸ்தாத் முஹம்மத் குத்ப்(ரஹ்)

திருமண வாழ்வில் எனக்கு நம்பிக்கை இல்லை! சொல்வது யார்?

சுன்னத்தான இல்லறம்: 

28 வயது முஸ்லிம் இளைஞன் ஒருவன். பொறியியல் இளங்கலைப் படிப்பு படித்து முடித்து விட்டு முதுகலைப் படிப்புச் செலவுக்காக பகுதி நேர வேலை ஒன்றில் வேலை பார்ப்பவன். அவன் தன்னோடு பணியாற்றும் இன்னொரு முஸ்லிம் சக ஊழியரிடம் பின் வருமாறு பேசிக் கொண்டதாக வலைதளம் ஒன்று செய்தி தருகிறது:

“திருமணம் செய்து கொண்டு தான் குடும்பம் நடத்திட வேண்டும் என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை!

“he told that he did not believe in the institution of marriage".

"ஏனெனில் என்னுடைய உறவினர்களில் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துபவர்கள் யாருமே மகிழ்ச்சியாகவே இல்லை! (were very unhappy!). கணவன் மனைவியருக்குள் அன்பு (love) இல்லை; நம்பிக்கை (trust) இல்லை; மதிப்பு-மரியாதை (respect) இல்லை; அவர்களைப் போல் திருமணம் செய்து கொண்டு நானும் ஏன் சோகத்தை விலைக்கு வாங்கிட வேண்டும்! தேவையே இல்லை இந்தத் திருமணம்!"

இப்படிப்பட்ட முஸ்லிம் இளைஞனுக்கு நாம் “ஆலோசனை” சொல்வது ஒரு புறம் இருக்கட்டும்!

நமது பெற்றோர்கள் ஆழமாக சிந்திக்க வேண்டிய விஷயம் இது:

இவ்வாறு - திருமண வாழ்வில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லும் இளைஞன் ஒரு வேளை நமது மகனாக இருந்து விட்டால்? அல்லது நமது மகள் இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டால்?

பெற்றோர்களே! – நமது இல்லறத்தில் எல்லாம் இருக்கின்றது! ஒன்றைத் தவிர!!

அது என்ன? அது தான் மென்மை!

பெற்றோர்களின் திருமண வாழ்வில் மென்மை என்பது பற்றாக்குறையாகிப் போனதால் தான் - இது போன்ற இளைஞர்கள் இப்படிப்பட்ட தவறான ஒரு முடிவின் பக்கம் தள்ளப் பட்டிருக்கின்றார்கள்!

எனவே – அடுத்து வருவது – “மனைவியிடம் மென்மை!”

இன்ஷா அல்லாஹ்!