Showing posts with label மகிழ்ச்சி. Show all posts
Showing posts with label மகிழ்ச்சி. Show all posts

Saturday, December 21, 2013

மனைவிக்கு செல்லப்பெயர் வைத்து விட்டீர்களா?

நபியவர்கள் தம் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் மீது தமக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்திக் காட்டிட சிறப்பான பெயரொன்றைச் சூட்டி அவர்களை அழைப்பார்கள்.

நீங்கள் உங்கள் மனைவிக்கும், உங்கள் மனைவி உங்களுக்கும் இவ்வாறு அழகிய பெயர்களை சூட்டி அவர்களை அழைத்து உங்கள் அன்பை பரஸ்பரம் வெளிப்படுத்திக் கொள்ளலாம் தானே!


உறவினர் ஒருவர். அவர் மனைவியின் பெயரில் வரும் ஒரு எழுத்தை வைத்து செல்லமாக - ஜி- என்று அழைப்பார். 

நீங்களும் இந்த சுன்னத்தைப் பின்பற்றலாம் தானே! 

Friday, December 20, 2013

மகிழ்ச்சி என்பது மலிவானதே!

வசதி வாய்ப்புகள் மகிழ்ச்சியைத் தந்து விடாது!

நபி ஸல் அவர்கள் குடும்பம் வசதி வாய்ப்பில் திளைத்ததில்லை. அறுபது நாட்களுக்கு வெறும் பேரிச்சையும், தண்ணீரும் தான். வசிப்பிடம் என்பது   கூரை வேயப்பட்ட வீடுகள் தான். தண்ணீருக்கு சில மைல் தூரமாவது கால் வலிக்க நடந்து போய் வந்திட வேண்டிய நிலை. திருகையில் மாவு அரைத்துத் தான் ரொட்டி; தொட்டுக் கொள்வதற்கு குழம்பு என்பது எப்போதாவது தான்!

ஆனால் அங்கே மகிழ்ச்சிக்குப் பங்கமில்லை!




மகிழ்ச்சிக்கு இலக்கணமே எளிமை தான்! எளிமை போனால் மகிழ்ச்சி போய்விடும்.

சொல்லப்போனால் - உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்கின்ற கணவனும் மனைவியும் தான் மகிழ்ச்சிக் கடலில் நீந்திட முடியும். இருவரில் ஒருவர் அப்படிப்பட்டவராக இல்லையெனில் இல்வாழ்வில் முதலில் அடிபடுவது மகிழ்ச்சி தான்.

எனவே இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற முஸ்லிம் இளைஞர்கள் தனக்கு மனைவியாக வரக்கூடியவருக்கு உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்கின்ற தன்மை இருக்கின்றதா என்று பார்த்துக் கொள்தல் மிக அவசியம்.

தன் மகன் இஸ்மாயிலின் மனைவியாக வருபவருக்கு இந்த அருங்குணம் இருந்திட வேண்டும் என்று தந்தை இப்ராஹிம் அவர்கள் எதிர்பாத்திருக்கிறார்கள் என்பதை முன்னரே நாம் பார்த்தோம். அதை மீண்டும் இங்கே சுருக்கமாகப் பதிவு செய்வோம்,

இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்துக் கொண்ட பின்பு ஒரு தடவை இப்ராஹிம் (அலை) அவர்கள்  மகனைச் சந்திக்க மக்காவுக்கு வந்திருந்தார்கள். அப்போது இஸ்மாயில் வீட்டில் இல்லை; அவரது மனைவியிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர் நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார். உடனே இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் சொல்; அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் வீட்டிற்கு வந்தபோது - தந்தை வந்து விட்டுப்போன செய்தியையும், தந்தையின் அறிவுரையையும் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு  அந்த் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.

பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார்கள். பிறகு இப்ராஹீம் (அலை) மீண்டும் ஒரு தடவை அவர்களிடம் வந்தார்கள். அப்போதும் இஸ்மாயீல் (அலை) அவர்கள் வீட்டில் இல்லை.  இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய புதிய துணைவியாரிடம் இஸ்மாயீலைப் பற்றியும் அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார்கள். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார் நாஙகள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமாக அல்லாஹ்வைப் புகழ்ந்தார்…….. இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவன் வந்தால் அவரது வீட்டு நிலைப்படியை உறுதிபடுத்தி வைக்கும்படி சொல் என்று சொல்லி விட்டுச் சென்றார்கள்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் வீட்டிற்குத் திரும்பி வந்ததும், தந்தை இப்ராஹிம் (அலை) அவர்கள் வந்து சென்ற செய்தியையும் அவருடைய அறிவுரையையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். வந்திருந்தது தம் தந்தை தான் என்று மனைவியிடம் சொல்லி விட்டு அவர் சொன்ன அந்த நிலைப்படி நீ தான் என்றும், உன்னை அப்படியே மனைவியாக வைத்துக் கொள்ளும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார்கள் என்றும் விளக்கினார்கள்….. ( விரிவாகப் பார்த்திட புகாரி ஹதீஸ் எண் 3364)

இப்போது நமது சூழ்நிலையை எடுத்துக் கொள்வோம். நாம் இங்கே எடுத்துக் கொள்வது நடுத்தர நிலையில் உள்ள முஸ்லிம் குடும்பங்களைத் தான். உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்வதற்குப் பதிலாக - ஒருவரைப் பார்த்து ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு - பொன்னையும் பொருளையும் சேர்த்து வைத்து அடுக்கி வைத்து அழகு பார்க்கின்ற நிலையைத்தான் வேதனையுடன் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்நிலை மாறாமல் - மகிழ்ச்சியை குடும்பத்துக்குள் கொண்டு வர முடியாது.

பல கணவன்மார்கள் - விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக்கொடுப்பதன் மூலமே - தங்கள் மனைவியைத் திருப்திப் படுத்திட முடியும் என்று எண்ணுகிறார்கள்.

ஒரு தடவை - நாங்கள் ஹஜ் சமயத்தில் - மக்காவில் தங்கியிருந்தோம். அப்போது ஒரு கணவன் மனைவி இருவரும் ஜித்தாவுக்குச் சென்று தங்க வளையல்கள் சிலவற்றை வாங்கி வந்தனர். மறு நாளே அதன் டிசைன் நன்றாக இல்லை என்று யாரோ சொல்லிட - மீண்டும் ஜித்தா சென்று - டிசைனை மாற்றிக்கொண்டு வந்தார்கள். இந்த டிசைன் வளையல்களில் இலகுவாக அழுக்கு சேர்ந்து கொள்ளும் என்று எவரோ சொல்லிட மீண்டும் ஜித்தாவுக்குப் படையெடுப்பு! ஒவ்வொரு தடவையும் மாற்றும்போது எவ்வளவு பொருட்செலவு? ஆனால் மகிழ்ச்சி? அது எத்தனை நாட்களுக்கு?

ஆனால் - செலவே இன்றி உங்கள் மனைவிக்கு நீங்கள் மகிழ்ச்சி அளித்திடலாம்! சில நபிவழிகளை மட்டும் பின்பற்றினாலே போதும்.

கணவனும் மனைவியும் சேர்ந்து குளியுங்கள். என்ன செலவாகி விடும்?

எதிர்பாராமல் ஒரு முத்தம் கொடுங்கள். என்ன செலவாகி விடும்?

வீட்டுக்குள்ளேயே - ஓடிப்பிடித்து விளையாடுங்கள்! என்ன செலவாகி விடும்?  

வீட்டை விட்டு வெளியே காலாற நடந்து சென்று வாருங்கள் - உங்கள் மனைவியுடன்! என்ன செலவாகி விடும்?

வெளியூர்களுக்கு உங்கள் மனைவியையும் கூடவே அழைத்துச் செல்லுங்கள். பெரிய செலவு ஒன்றும் ஆகி விடாது! வழக்கமான வேலைகளில் இருந்து விடுதலை என்பதால் மனைவிக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும்!

அவ்வளவாக செலவு வைக்காத - சின்னச் சின்ன ஆசைகள் நிறைய இருக்கும் உங்கள் மனைவிக்கு. ஒரு முழம் பூ, தலைக்கு வைத்துக் கொள்ளக் கூடிய சின்னச் சின்ன அலங்காரப் பொருட்கள். உங்கள் மனைவிக்குப் பிடித்த ஒரு இனிப்புப் பண்டம்.....

மனைவிக்குச் செலவு செய்திடும்போது - அதன் " உயர்ந்த விலை" மகிழ்ச்சியை உறுதிப்படுத்திடாது! மாறாக அது சில சமயங்களில் சோகப்படுத்தி விடுவதும் உண்டு!

மாறாக நீங்கள் செலவு செய்வதன் பின்னணியில் உள்ள உங்களின் அன்பு, அக்கரை மற்றும் உங்கள் துணையின் உணர்வுகளுக்கு நீங்கள் அளிக்கும் மதிப்பு - இவைகளே மகிழ்ச்சியை உறுதிப்படுத்தும்.

இந்த அன்பையும், அக்கரையையும், மதிப்பையும் தான் அண்ணலாரின் குடும்ப அமைப்பில் நாம் காண்கிறோம்.

மகிழ்ச்சி என்பது மலிவானதே! 

Thursday, December 19, 2013

வீட்டுக்காரியின் வேலைகள்!

கணவன்மார்களே! மனைவியின் நிலையில் உங்களை வைத்து சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

அவர்களின் அன்றாட வேலைகள் என்னென்ன என்று பட்டியலிட்டுப் பாருங்கள். சமைப்பது, துணி துவைப்பது, குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது என்று அந்தப் பட்டியலை சுருக்கி விடலாம் நாம்.



ஆனால் அவர்கள் செய்கின்ற சிறிய சிறிய வேலைகளை சற்றே உற்று கவனியுங்கள். அதில் அவர்கள் படுகின்ற அல்லல்களை கவனியுங்கள். அந்த சிறிய வேலைகளைக்கூட ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நம்மால் செய்திட முடியுமா என்று எண்ணிப்பாருங்கள்.

காலையில் குழந்தைகளை எழுப்பி விடுதல் என்று ஒரு வேலை! கணினியில் – Enter – பட்டன் தட்டுவதைப்போல அல்ல இந்த வேலை! சில குழந்தைகள் என்னமாய் பாடாய் படுத்தும் தெரியுமா?

அது இருக்கட்டும்; நீங்கள் அனுதினமும் குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து விடுபவர் தானா?

குழந்தைகளை எழுப்பி, அவர்களை பல் துலக்க வைத்து, குளிப்பாட்டி, உடை அணிவித்து, தலை சீவி, உணவு ஊட்டி விட்டு, மதிய உணவையும் தயாரித்து டப்பாவில் அடைத்து, பாட்டிலில் தண்ணீர் நிரப்பி – அனைத்தையும் குறித்த நேரத்துக்குள் செய்து முடித்து – குழந்தைகளை பள்ளிகளுக்கும் அனுப்பி விட்டு -

- அதே நேரத்தில் – உங்களையும் அது போன்றே கவனித்து – உங்களை அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கின்ற – இந்த காலை நேர ஒரே ஒரு வேலையை மட்டும் ஒரு மூன்று நாட்களுக்கு நீங்களே செய்து பாருங்களேன்!

அந்த மனைவிக்கு நீங்கள் தருவது என்ன?

ஒரு பாராட்டு? புன்னகை கலந்த ஒரு பார்வை? நன்றியான சொற்களுடன் ஒரு ஆசை முத்தம்?

நமது அவசர கதியில் இதற்கெல்லாம் எங்கே நேரம் என்கிறீர்களா?

சரி! காலை வேலைகளை முடித்து விட்டு அவர்கள் சிற்றுண்டி சாப்பிடும் நேரம் என்ன? பத்து அல்லது பத்தரை மணி!

அடுத்தது – அடுக்களைப் பணி! சமையலறையை சுத்தம் செய்வது! முதல் நாள் சமையல் மிச்சங்களின் “வாசனையை” முகர்ந்து பார்த்ததுண்டா நீங்கள்?

ஒரு தடவை பாத்திரங்கள் கழுவும் வேலையைச் செய்து பாருங்களேன்! தோள் பட்டை மற்றும் இடுப்பு வலி என்று மூன்று நாட்களுக்குச் சொல்லிக் காட்டிக் கொண்டிருப்போம் நாம்!

ஒரு நாள். ஒரே ஒரு நாள். சமையல் பொறுப்பு முழுவதையும் நீங்களே ஏற்றுக் கொண்டு செய்து பாருங்களேன்! அவ்வளவு வேண்டாம். காய்கறிகளை நறுக்குவது மட்டும்? ஒரு நாள் செய்து பாருங்களேன். பொறுமை இருக்காது நமக்கு!

ஆனால் ஒவ்வொரு நாளும் – தொடர்ந்து செய்திட வேண்டி இருக்கின்றதே என்று அலுத்துக் கொள்ள முடியுமா அவர்களால்? செய்து தானே தீர வேண்டும்!

மதியம் சற்றே அவர்களுக்கு ஓய்வு கிட்டும் தான். ஆனால் – அவர்களின் கவலை என்னென்ன தெரியுமா?

வீட்டுக்கு ஒட்டடை அடிப்பது எப்போது? ஜன்னல்களைத் துடைப்பது எப்போது? தரைகளைக் கழுவி விடுவது எப்போது? கழிவறைகளை சுத்தம் செய்வது எப்போது?

ஒவ்வொன்றாக நிதானமாகப் பார்ப்பார்கள்! உங்களை எப்போதாவது துணைக்கு அழைப்பார்கள்.

நமது பதில்: “ம்ஹூம்! நான் மாட்டேன்ப்பா!”

இதற்கிடையில் – உடல் நலம் இல்லாத மாமனாரை / மாமியாரைக் கவனித்துக் கொள்ள வேண்டும்; வீட்டுக்கு வரும் விருந்தினர்களைக் கவனித்து அனுப்ப வேண்டும்;

பல வீடுகளில் – மாதாந்திர பட்ஜெட் போடுதல், ரேஷன் கடைக்குப் போய் வருதல், காய்கறி வாங்கி வருதல்….. எல்லாமே “வீட்டுக்காரியின்” வேலைகள் தான்.

குடும்பத்தில் யாருக்கேனும் உடல் நலம் இல்லையா? கவலை மட்டுமல்ல; கூடுதல் வேலைகளும் மனைவிக்குத்தான்!

ஆனால் – மனைவிக்கு உடல் நலம் இல்லாமல் போய் விட்டால்?

சிரமம் பார்க்க மாட்டார்; முடிந்த வரை எல்லா வேலைகளையும் தொடர்ந்து செய்திட முயற்சித்துக் கொண்டே இருப்பார்! இயலாமல் போகும் வரை!

வேலை! வேலை! வேலை!

வேலை செய்யும் மெஷின்! அயராது வேலை செய்திடும் மெஷின்! குறை சொல்லாத மெஷின்!

அவர்களுக்கு கணவன்மார்கள் தரப்போவது என்ன?

இரண்டு ஆலோசனைகள்:

ஒன்று

வீட்டு வேலைகளில் இயன்ற அளவு பங்கெடுங்கள். இது நபியவர்களின் முன்மாதிரி என்பதை மறக்க வேண்டாம்.

ஆயிஷா (ரலி) சொல்கிறார்கள்: நபிகளார் மனிதர்களில் ஒரு மனிதராக இருந்தார்கள். தம் ஆடைகளைத் தாமே துவைப்பார்கள். ஆட்டில் பால் கறப்பார்கள். தம் வேலையைத் தாமே செய்து கொள்வார்கள். (முஸ்னது அஹ்மது 26237)

தம் ஆடையைத் துவைப்பார்கள். அறுந்து விட்ட தம் செருப்பையும் தைப்பார்கள். வீட்டில் ஆண்கள் செய்ய முடிகின்ற வேலைகளைச் செய்வார்கள். (முஸ்னது அஹ்மது 26282)

இரண்டு:

உங்கள் மனைவியை – நீங்கள் வெளியே அழைத்துச் செல்லுங்கள்! அவ்வப்போது! அவர்களுடன் ஆசை தீர உரையாடுங்கள். அவர்களின் மனத்தைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பாக அந்த சூழலைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களுக்காக சற்றே தாராளமாகச் செலவு செய்யுங்கள்.

நபியவர்கள் போர்க்களங்களுக்குச் செல்லும்போது கூட தமது மனைவியருள் ஒருவரை அழைத்துச் செல்வது வழக்கம்!

உங்களுக்கு என்ன தான் வேலைப்பளு இருந்தாலும் – மனைவிக்கென குறிப்பிட்ட நேரத்தை நீங்கள் ஒதுக்கியே ஆக வேண்டும்.

மார்க்கம் தடுத்திடாத எந்த ஒன்றாக இருந்தாலும் – அது உங்கள் மனைவியின் விருப்பமானால் அந்தத் தேவைகளை அவர்களோடு சேர்ந்து நிறைவேற்றிக் கொடுங்கள். “இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை!” – என்று அலட்சியம் செய்து விடாதீர்கள்!

நீங்கள் உங்கள் மனைவியை நேசிப்பது உண்மையானால்  அவர்களுடைய சிறிய சிறிய ஆசைகளையும் – சலிக்காமல் நிறைவேற்றிக் கொடுங்கள்!

என்ன நடக்கும்?

அவர்களின் களைப்பு தீரும். புத்துணர்வு பெறுவார்கள்! அதனால் காதல் மலரும் – உங்களுக்குள்!!

Thursday, May 9, 2013

கண் குளிர்ச்சி! - Coolness of Eyes! Qurrata Ayn

நாம் அடிக்கடி கேட்கின்ற துஆக்களுள்  ஒன்று திருமறை – அத்தியாயம் 25 வசனம் 74 – ல் வரும் பின் வரும் துஆ தான்:

மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள். (25: 74)


மேற்கண்ட திருமறை வசனத்தில் “மின் அஸ்வாஜினா” / min azwaajinaa / என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு என்ன?

அஸ்வாஜினா என்பதற்கு எங்களின் மனைவியர் என்று மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. இது சரியா என்பதே நம் கேள்வி.


ஸவ்ஜ் என்பது ஒருமை. அஸ்வாஜ் என்பது பன்மை.

ஸவ்ஜ் என்பதன் முழுமையான பொருள் என்ன?

ஆங்கிலத்தில் ஸவ்ஜ் என்பதற்கு  one of a pair, partner, couple, mate, husband, wife என்றெல்லாம் மொழிபெயர்க்கப்படுகின்றது.

“ஜோடி” என்பது பொருத்தமான மொழிபெயர்ப்பாக தெரிகிறது.

தமிழில் இதற்கு – துணை, துணைவர், துணைவி – என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம்.

மேற்கண்ட திருமறை வசனத்தை -

மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் துணைவர்களிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.” -

என்று மொழி பெயர்ப்பதே சரியானது.  (அல்லாஹ்வே மிக அறிந்தவன்.)

முஹம்மது அஸத் அவர்கள் தமது ஆங்கில மொழிபெயர்ப்பில் azwaaj என்பதற்கு spouses என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.

“and who pray: “O our Sustainer! Grant that our spouses and our offspring be a joy to our eyes, and cause us to be foremost among those who are conscious of Thee!”

Spouses  என்பதற்கு துணைவர்கள் என்பதே சரியான மொழிபெயர்ப்பு!
எனவே – கணவர்கள் துஆ செய்திடும்போது “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!”  – என்றும்,

அது போலவே – மனைவியர் துஆ செய்திடும்போது “எங்கள் இறைவா! எங்கள் கணவர்களிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!” – என்றும் பொருள் எடுத்துக் கொள்ளலாம்.

துணைவர்கள் என்ற மொழிபெயர்ப்பை நாம் வலியுறுத்துவதற்கு இன்னொரு காரணம்:

அல்லாஹு தஆலா கணவனையும் மனைவியையும் இங்கே ஒரே “அந்தஸ்தில்” வைத்து துஆ கேட்கச் சொல்லியிருக்கும் அழகினை நமது மனைவிமார்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்!