Friday, December 20, 2013

குழந்தைகளும் பள்ளிவாசல்களும்


உங்கள் சிந்தனைக்கு இரண்டு நிகழ்ச்சிகள்!

ஒரு தடவை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்களின் பேரக்குழந்தைகளில் (ஹசன் அல்லது ஹுசைன்) ஒருவரைச் சுமந்தவாறு மக்ரிப் அல்லது இஷா தொழுகைக்கு வந்தார்கள். குழந்தையைக் கீழே இறக்கி விட்டு விட்டு தொழுகையைத் தொடங்கினார்கள். அவர்கள் சஜ்தாவுக்குச் சென்றதும் நீண்ட நேரம் அதே நிலையிலேயே இருந்திடவே – நான் சற்று என் தலையைத் தூக்கி எட்டிப் பார்த்தேன். பேரக்குழந்தை நபியவர்கள் முதுகில் அமர்ந்திருந்தது!


நான் மீண்டும் சஜ்தாவுக்குச் சென்று விட்டேன். தொழுகை முடிந்ததும் நபித்தோழர்கள் கேட்டார்கள்: “யா ரசூலுல்லாஹ்! தாங்கள் நீண்ட நேரம் சஜ்தாவில் இருந்திடவே ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதோ அல்லது தங்களுக்கு வஹி வரத் தொடங்கி வி;ட்டதோ என்று நாங்கள் நினைத்து விட்டோம் என்றார்கள். நபியவர்கள் சொன்னார்கள்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, எனது பேரன் என் முதுகில் அமர்ந்து விட்டார். அவரது மகிழ்ச்சியைக் கெடுத்து விட நான் விரும்பவில்லை! (அன் நசயீ, அஹ்மது, அல் ஹாக்கிம்)

இன்னொரு நிகழ்ச்சி:

அண்ணல் நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் அமர்ந்து அளவளாவும் அவைக்கு, நபித்தோழர் ஒருவர் தம் குழந்தையையும் அழைத்து வருவார். அந்தக் குழந்தை நேரே நபியவர்களிடம் ஓடிச்சென்று அவர்களின் முதுகில் ஏறத் தொடங்கும். நபியவர்கள் அக்குழந்தையை தம் மடியில் அமர்த்திக் கொள்வார்கள். ஆனால் பின்னர் அக்குழந்தை இறந்து விட்டது! எனவே அக்குழந்தையின் தந்தை நபியவர்களின் அவைக்கு வர இயலவில்லை. இதைக் கவனித்த நபியவர்கள் எங்கே "அவரைக் காணோம்?"  என்று கேட்டார்கள்.

நபித்தோழர்கள் அவருடைய குழந்தை இறந்து விட்ட செய்தியைச் சொன்னார்கள். பின்னர் அக் குழந்தையின் தந்தையை நபியவர்கள் சந்தித்து விசாரித்த போது, தமது குழந்தை இறந்து விட்ட விபரத்தைத் தெரிவித்தார் அந்த நபித்தோழர். அவருக்கு ஆறுதல் சொன்ன நபியவர்கள் அவரிடம் கேட்டார்கள்:

தோழரே! எது உங்களுக்கு விருப்பமானது? உங்கள் மகன் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பதையா அல்லது சுவர்க்கத்துக்கு நீங்கள் செல்லும் போது, எந்த வாசல் வழியாக நீங்கள் நுழைந்திட முற்பட்டாலும், உங்கள் மகன் அங்கெல்லாம் வந்து நின்று கொண்டு உங்களை வரவேற்பதற்காக அதன் கதவுகளைத் திறந்து விடக் காத்திருப்பதையா? அவர் சொன்னார்: யா ரசூலுல்லாஹ்! என் மகன் எனக்கு முன்னேயே சுவர்க்கம் சென்று என்னை வரவேற்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன் என்றார். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: உங்களுக்கு அது கிடைக்கும்! (அன் நஸயீ )

இந்த இரண்டு நிகழ்வுகளில் இருந்தும் நாம் நிறைய பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளன. அதே நேரத்தில் இங்கே ஒரே ஒரு பாடத்தை மட்டும் நினைவூட்டுவோம். அதாவது நபியவர்கள் காலத்தில் குழந்தைகள் பள்ளிவாசலோடு இணைக்கப் பட்டிருந்தார்கள் என்பது தான் அந்தப் பாடம்.

இந்தப் ஒரே ஒரு பாடத்தை நாம் மறந்து போய் விட்டதன் பலனைத் தான் இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்! புரிகின்றதா?

ஏழு வயதினிலே!


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களது மக்களுக்கு ஏழு வயதாகும் போது அவர்களுக்குத் தொழுகையைக் கற்றுக் கொடுங்கள். பத்து வயதாகியும் அவர்கள் தொழுகையை விட்டால் அவர்களை அடியுங்கள். அவர்களுடைய படுக்கைகளைப் பிரித்து விடுங்கள். (ஸுனன் அபூ தாவூத்)


“Teach your children to pray when they are seven years old, and smack them if they do not do so when they are ten, and separate them in their beds.” (Narrated by Abu Dawood)

ஏன் ஏழு வயது?

நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்குப் பழக்கி விட (habit formation) நபி (ஸல்) அவர்கள் தேர்வு செய்த வயது ஏழு! ஏனெனில் குழந்தைகளுக்குத் தொழுகையை கற்றுக் கொடுப்பதில் என்னென்ன அம்சங்கள் அடங்கியுள்ளன என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள். நேரத்தைத் திட்டமிடல், கட்டுப்பாடு, முறையான தூக்கம், குறிப்பிட்ட நேரத்தில் எழுதல், கழிவறை சென்று வருதல், பல் துலக்குதல், உடல் சுத்தம், உடை சுத்தம், இடம் சுத்தம், உளு செய்தல், தொழுகையின் சட்டங்களைக் கற்றல், மனனம் செய்தல், போன்ற இன்ன பிற நல்ல விஷயங்களையும் குழந்தைகள் தொழுகையுடன் சேர்ந்தே கற்றுக் கொள்வார்கள்.

இதில் பெற்றோர் கவனித்திட வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

எல்லாப் பழக்கங்களையும் உடனேயே குழந்தைகள் கற்றுக் கொண்டு விட வேண்டும் என்று எதிர்பார்ப்பது, அவசரப் படுவது, குழந்தைகளைத் திட்டுவது, அதட்டுவது, அடிப்பேன் உதைப்பேன் என்று மிரட்டுவது எல்லாம் கூடாது. ஏன்? நபியவர்களே 3 ஆண்டுகள் அவகாசம் அளித்துள்ளார்கள் என்பதைக் கவனிக்க!

குழந்தைகளுக்கு செல்லம் கொடுப்பதெல்லாம் சரிதான். ஆனால் அது எது வரை? ஏழு வயது வரை மட்டுமே! பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக செல்லம் கொடுப்பதைக் குறைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக நல்ல பழக்கங்களை அவர்களுக்குள் உருவாக்கிட வேண்டும். எது வரை? பத்து வயது வரை!

குழந்தைகள் பத்து வயதை அடைந்து விட்டால், செல்லம் கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும.; “அடியுங்கள்” - என்கிறார்கள் நபியவர்கள். எனவே நமது குழந்தைகளை – சின்னப் பிள்ளைகள்தானே, பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விடுதல் ஆபத்து. ஏனெனில் பத்தில் வளையாதது பதினைந்தில் வளையாது. பிறகு இருபதில், இருபத்தைந்தில் எப்படி வளையும்?

இந்த ஏழு வயது இருக்கிறதே அது எப்படிப் பட்டது தெரியுமா? பெரியவர்கள் செய்வதை அப்படியே காப்பி (imitate) அடிக்கும் வயது. அப்படியென்றால் என்ன செய்திட வேண்டும். குழந்தைகளைத் தொழு தொழு என்றால் போதாது. வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் தொழக்கூடியவர்களாக விளங்கிட வேண்டும்.

குழந்தைகள் சில நேரங்களில் அடம் பிடிக்கும். தூங்குவது போல் நடிக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் குறிப்பாக தாய்மார்கள் என்ன செய்திட வேண்டும் தெரியுமா? குழந்தைகளுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டு அன்பாக, ஆதரவாக, மென்மையாக, அதே நேரத்தில் உறுதியாகப் பேசிட வேண்டும். பெற்றோர் கோபத்தை வெளிப்படுத்தினால் குழந்தைகள் தொழுகையையே வெறுத்து விடலாம். எனவே மென்மையான வழிமுறையினை மட்டுமே தொடர்ந்து பொறுமையுடன் கையாள வேண்டும்.

குழந்தைகளிடம் தக்க தருணஙகளில் நாம் – அல்லாஹு தஆலாவைப் பற்றி, அவன் நம் மீது வைத்திருக்கின்ற அளவிட முடியாத அன்பு பற்றி, அவன் நமக்கு வழங்கியிருக்கின்ற எண்ணிலடங்கா அருட்கொடைகளைப் பற்றி, அவன் நமக்கு வழங்க இருக்கின்ற நற்கூலி பற்றி, அவன் நமக்காகத் தயார் செய்து வைத்திருக்கும் சுவர்க்கம் பற்றி – இவ்வாறு நேர்மறையாக (positive approach) எடுத்துச் சொல்லி ஆர்வமூட்டிட வேண்டும.;

இவ்வாறு சிறு வயதிலேயே பழக்கப் படுத்தப் படுகின்ற குழந்தைகள் தாம் – வாழ்நாள் முழுவதும் விடாமல் தொழுகின்ற தொழுகையாளிகளாக மிளிர்கின்றார்கள். இப்படிப்பட்ட குழந்தைத் தொழுகையாளிகளின் பெற்றோர் தாம் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்!

குழந்தைகளை அடிக்காதீர்கள்!


'வாப்பா, அண்ணன் என்னை அடிக்கிறான், பாருங்களேன்.' - என்று ஓடி வருகிறான் தம்பி.

- 'அவன் தான்ப்பா முதலில் என்னை அடித்தான்.' - இது அண்ணன்.

- 'டேய்! யாரடா முதலில் அடித்தது? - இது தந்தை.


- தம்பி தயங்கியபடியே - அவன் ஏன்ப்பா என்னைத் திட்டினான். அதனால் தான் அவனை அடித்தேன்!'

- 'திட்டினால் என்னிடம் வந்து சொல்ல வேண்டியது தானே? அதற்காக ஏன் அண்ணனை அடித்தாய்?' - என்று அதட்டிய படியே தந்தை தம்பியை ஒரு தட்டு தட்டுகிறார். கூடவே அதனை சரி கட்டுவதற்கு அண்ணனையும் ஒரு போடு போடுகிறார்!

- 'இனி மேல் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளக் கூடாது! புரிகிறதா?' என்று அனுப்பி வைக்கிறார்.

இங்கே அந்த இரு சிறுவர்களும் தங்கள் தந்தையிடம் இருந்து கற்றுக் கொண்டதென்ன? இனி நாம் யாரையும் அடித்திடக் கூடாது - என்றா அவர்கள் கற்றுக் கொண்டார்கள்? இல்லை!

மாறாக - அடிப்பது தவறு என்றால் வாப்பா நம்மை ஏன் அடித்திட வேண்டும்? அடிக்காமலேயே சொல்ல வேண்டியது தானே! ஆக தந்தை நம்மிடம் 'அடிக்கக் கூடாது' என்பதெல்லாம் ஒரு பேச்சுக்குத் தான். அவருக்குத் தேவைப் படும்போது அவர் அடிக்கலாம் என்றால் நமக்குத் தேவைப் படும்போது நாமும் அடிக்கலாம் தானே - இதுவே அவர்கள் கற்றுக் கொள்கின்ற பாடம்!

நாம் ஒரு செயலை குழந்தையிடம் எதிர்பார்க்கும் போது - அக்குழந்தை அதே செயலை அனைவரும் செய்கிறார்களா என்று உன்னிப்பாக கவனிக்கிறது.

சான்றுக்கு - நாம் சிறுவர்களை தொழச் சொன்னால் வாப்பா தொழுகிறாரா, அம்மா தொழுகிறாரா, ஆசிரியர் தொழுகிறாரா - என்று ஒருவர் விடாமல் பார்க்கும். எல்லாரும் கடைப் பிடித்தால் தாமும் செய்யத் தொடங்கும். இல்லையேல் குழந்தை அதனை ஏற்காது.

குழந்தைகளை அடிப்பதற்குத் தான் மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதே என்கிறீர்களா? ஆம்!

'உங்கள் குழந்தை ஏழு வயதை எட்டி விடும் போது தொழுகையை நிறைவேற்றும்படி அவர்களை ஏவுங்கள். அவர்கள் பத்து வயதை எட்டி விடும் போது தொழுகையைத் தவற விட்டால் அவர்களை அடியுங்கள்.' (முஸ்லிம்)

ஆனால் அடிப்பது என்பது ஃபர்ளோ வாஜிபோ கிடையாது!

தவிர்க்க முடியாத ஒரு சில சூழ்நிலைகளில் மட்டும் அடிப்பதை பயன் படுத்திக் கொள்ள 'அனுமதி' உள்ளது. அவ்வளவு தான்.

அண்ணல் நபியவகள் குழந்தைகளை அடித்திருக்கிறார்களா? நபியவர்கள் எவரையும் கை நீட்டி அடித்ததில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

ஒரு முறை ஒரு வேலைக்காரச் சிறுமியை ஒரு பொருள் வாங்கி வருமாறு கடைக்கு அனுப்புகிறார்கள் அண்ணல் நபியவர்கள். சிறுமியோ தெருவில் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று விடுகிறாள். நீண்ட நேரம் காத்திருந்து, காத்திருந்து, பொறுமையிழந்து, சிறுமியைத் தேடி கடை வீதிக்குப் போகிறார்கள் அண்ணலார். அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை நோக்கி அண்ண்லார் என்ன சொன்னார்கள் தெரியுமா?

'மறுமையில் பதில் அளிக்க வேண்டும் என்கிற பொறுப்பு மட்டும் இல்லாமலிருந்தால் உன்னை இந்த மிஸ்வாக் குச்சியால் அடித்திருப்பேன்!' எடை குறைவான, மிருதுவான விழுது தான் மிஸ்வாக்.

அடிக்கவில்லை என்றால் குழந்தைகளை எவ்வாறு கட்டுப் படுத்துவது என்று கேட்கிறீர்களா?

குழந்தைகள் பொதுவாக பல சமயங்களில் நாம் சொன்ன பேச்சைக் கேட்க மாட்டார்கள். பொய் சொல்வார்கள். கண்ட இடத்தில் பொருள்களைப் போட்டு வைப்பார்கள். சுத்தமாக இருக்க மாட்டார்கள், நேரம் கழித்து வீட்டுக்கு வருவார்கள். வீட்டு வேலை ஒன்றை செய்யச் சொன்னால் மாட்டேன் என்பார்கள். இது போன்ற குழந்தைகளைத் திருத்துவது எப்படி?

ஒரு முறை:

அடித்துத் திருத்த நினைப்பது. அதற்கு சொல்லப் படும் 'பொன்மொழிகள்' :

- கோள் எடுத்தால் குரங்கும் ஆடும்!

- அடியாத மாடு படியாது!

- அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்!

- அடி உதவுவது போல் அண்ண்ன் தம்பி உதவ மாட்டான்!

இந்த முறையினால் ஏற்படும் விளைவுகள்:

கட்டுப் படுவார்கள் குழந்தைகள் - பய உணர்ச்சியினால் - அதுவும் தற்காலிகமாக! அதுவும் நமது முன்னிலையில் மட்டும்!

ஆனால் சற்றே வயது வந்த குழந்தைகளை அடித்தால் - அது கோபம், வெறுப்பு போன்ற உணர்ச்சிகளைத் தூண்டி விடும்! கட்டுப் பட மாட்டார்கள். எதிர்த்துப் பேசுவார்கள். விலகிப் போய் விடுவார்கள். மறைவாக செயல் படத் தொடங்கி விடுவார்கள்.

ஆனால் இன்னொரு முறை - மென்மையான முறை - சுன்னத்தான முறை:

- அன்பு செலுத்தி

- அக்கரை காட்டி

- மரியாதை கொடுத்து

- நம்பிக்கையூட்டி

வழி காட்டினால் - கட்டுப் படுவார்கள் - ஆனால் அது மன மாற்றத்தினால்! இது தற்காலிகம் அன்று! ஆனால் ஒரே ஒரு நிபந்தனை: நாம் மேலே சொன்னபடி குழந்தைகள் நம் 'சொல்லை' கவனிப்பதில்லை. மாறாக நமது 'செயலை'த் தான் கவனிக்கிறது என்பதனை மறந்திடக் கூடாது.

குழந்தைகள் உடனடியாக தங்களைத் திருத்திக் கொண்டு விடுவார்கள் என்று நாம் எதிபார்த்திடக் கூடாது. மெதுவாகத் தான் மாறுவார்கள். அதுவரை பொறுமை தேவை.

குழந்தைகளிடம் தனியே உட்கார்ந்து பேசிட வேண்டும். அவர்களிடம் பேசிட வேண்டிய நேரத்தைத் தேர்வு செய்திட வேண்டும். அதைச் செய் இதைச் செய்யாதே என்று உத்தரவுகள் போடக் கூடாது. அது ஒரு கலந்துரையாடலாக அமைந்திட வேண்டும். கேள்விகள் கேட்டு அவர்களிடம் பதில்களை வரவழைத்திட வேண்டும். அவர்களை சிந்திக்க விட வேண்டும். அவர்களின் தவறுகளால் ஏற்படுகின்ற விளைவுகளை (consequences) அவர்களுக்கு சுட்டிக் காட்டிட வேண்டும். அவர்களின் அறிவுக்குப் படுகின்ற மாதிரியும் அவர்களின் உள்ளத்தைத் தொடுகின்ற வகையிலும் நமது பேச்சு அமைந்திட வேண்டும். அதில் அவர்கள் மீது நமக்கு இருக்கின்ற கருணையும் அக்கரையும் வெளிப் பட வேண்டும்.

இந்த முறையில் தான் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் படிப்படியாக!

பின் வரும் நபி மொழி நாம் அடிக்கடி கேள்விப் பட்டது தானே.

'குழந்தைகளிடம் இரக்கம் காட்டாதவனும் பெரியவர்களிடம் மரியாதை செலுத்தாதவனும் நம்மைச் சேர்ந்தவன் இல்லை!' (அஹ்மத்)

குழந்தைகளை அடிக்காதீர்கள் அடிக்காதீர்கள் என்று நாம் அழுத்திச் சொல்வது ஏன் தெரியுமா? குழந்தைகளைப் பிரம்பினால் அடிப்பது, கன்னத்தில் அறைவது, தலையில் குட்டுவது போன்ற 'தண்டனைகள்' குழந்தைகளின் உடலளவிலும் மனத்தளவிலும் ஏற்படுத்துகின்ற விளைவுகள் பாரதூரமானவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளை வன்முறையாளர்களாக மாறுவது, அவர்களிடம் தற்கொலை எண்ணம் தலை தூக்குவது, அவர்கள் வீட்டை விட்டு ஓட நினைப்பது எல்லாமே - குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளும் பெற்றோர்களால் தான். நம்மிடம் மென்மை இல்லாவிட்டால் நமது குழந்தைகள் நம்மிடமிருந்து வெருண்டோடத் தான் செய்வார்கள்!

பின் வரும் ஒரு இறை வசனமே இதற்குச் சான்று:

'(நபியே!) அல்லாஹ்வின் மாபெரும் அருளின் காரணமாகவே நீர் இவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும் கடின சித்தமுள்ளவராகவும் இருந்திருந்தால், இவர்களெல்லாம் உம்மிடமிருந்து வெருண்டோடி இருப்பார்கள்.' (குர் ஆன் 3:159)

இத்த்னைக்குப் பிறகும் மென்மையான அன்பான அக்கரையான முறைகள் எல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்து வராது என்று சொல்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் யார் தெரியுமா?

- குழந்தைகளை செல்லம் கொடுத்துக் கெடுத்தவர்கள்.

- தாமே முன் மாதிரியாக நடக்கத் தவறியவர்கள்.

இவர்கள் தாம்.

நீங்கள் அப்படி இல்லையே?


குழந்தைகளை திட்டாதீர்கள்!


எந்த ஒரு தாயாவது தான் பெற்றெடுத்த குழந்தைகயை 'சனியனே!' என்று அழைப்பாளா? ஆனால் அழைக்கிறார்களே! இதை எங்கே போய் சொல்வது? 'சனியனே! இங்கே வந்து தொலையேன், உன்னை எத்தனை தடவைக் கூப்பிடறது!' என்று திட்டுகின்ற தாய்மார்களை நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.


இன்னும் எப்படியெல்லாம் திட்டுகிறோம் தெரியுமா?

'இங்கே வாடா நாயே!'

'உயிரை வாங்காதேடா'

'நீ ஒன்னுக்கும் லாயக்கில்லைடா'.

'டேய்! சோம்பேறிக் கழுதை'.

குழந்தைகளை திட்டுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன தெரியுமா?

1. 'நீ எங்கேடா உருப்படப் போகிறாய்' என்று குழந்தைகளை திட்டுவதால் - அவர்களின் தன்னம்பிக்கையை நாம் அழித்து விடுகிறோம் தெரியுமா? அவர்களுக்குள் பொதிந்திருக்கின்ற ஆற்றல்கள் அனைத்தும் எப்படி வெளிப்படும் சொல்லுங்கள்?

2. மற்றவர்கள் முன்பு திட்டப் படும் போது - நமது குழந்தைகள் கூனிக் குறுகி விடுகிறார்கள். திட்டுவது குழந்தைகளின் மனத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி விடுகிறது. அவர்களின் சுய மரியாதை பறிக்கப் படுகிறது. ஒரு தடவை திட்டுவதால் ஏற்பட்ட காயத்தை ஆற்றிட பத்து தடவை நாம் 'மருந்து' இட வேண்டுமாம்.

3, குழந்தைகளை திட்டுவதால் - பெற்றோர் ஒரு அழகற்ற முன்மாதிரியாக (அழகான முன்மாதிரிக்கு எதிர்ப்பதம்) ஆகி விடுகிறார்கள். திட்டுவது குழந்தைகளின் கோப உணர்ச்சியைத் தூண்டி விடுகிறது. இதன் மூலம் - நமது குழந்தைகள் மற்றவர்களை திட்டுவதற்கும் அவர்கள் எதிர்காலத்தில் வன்முறை மிக்கவர்களாக மாறுவதற்கும் வழி வகுத்து விடுகிறோம்.

4. நாம் விளையாட்டுக்காக திட்டி விடலாம். ஆனால் நமது திட்டு இறைவனிடத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டால் நமது குழந்தைகளின் கதி என்னவாகும்?

5. நாம் ஏதாவது ஒரு வேலையைக் கொடுத்திருப்போம். நமது செல்வம் அதனை எக்குத் தப்பாக செய்து விட்டு வந்திருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு பொருளை வாங்கிக் கொடுத்திருப்போம். ஒன்று தொலைத்து விட்டு வந்திருப்பான். அல்லது அதனை உடைத்து விட்டு வந்திருப்பான். 'நீ ஒன்னுக்கும் லாயக்கில்லைடா' என்று வசை பாடி விடுவோம். பத்தொன்பது வயது பையன் ஒருவன். அப்பா ஒரு கைபேசி ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். ஒரே வாரத்தில் அதனைத் தொலைத்து விட்டான். தந்தை திட்டுவார் என்று பயந்து மகன் தற்கொலை செய்து கொண்ட செய்தியை சமீபத்தில் படித்திருப்பீர்கள்.

ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது - ஒரு குழந்தை தனது பதினாறு வயதை அடைவதற்குள் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் மொத்தம் 17000 முறை திட்டு வாங்குகிறதாம். என்னவாகும் குழந்தைகள்?

திட்டுவதால் - நமது குழந்தைகளின் கண்ணியம் பாதிக்கப் படுகிறது.

அண்ணல் நபியவர்கள் சொன்னார்கள்: ' உங்கள் குழந்தைகளை கண்ணியப் படுத்துங்கள்' என்று! எப்படி கண்ணியப் படுத்துவது? நாம் அழகாக அவர்களிடம் பேசிட வேண்டும். அழகாக அவர்களைப் பேச வைத்திட வேண்டும். மற்றவர்களிடம் அழகாக அவர்களை அறிமுகப் படுத்திட வேண்டும். இறை வாக்கு ஒன்றை உங்களுக்கு நினைவு படுத்துகிறோம்.

இப்போது ஒரு திருமறை வசனத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருவோம்:

'மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்' என்கிறான் வல்லோன் அல்லாஹூ தஆலா. (2:83)

அழகாகப் பேசுவது என்பது மற்றவர்களைப் பாராட்டிப் பேசுவதும் தான். ஆனால் இந்த இறைக் கட்டளைக்கு முன்னும் பின்னும் அல்லாஹ் என்ன சொல்லியிருக்கிறான் என்று பாருங்கள்:

- அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்கக் கூடாது.

- பெற்றோருக்கு நன்மை செய்யுங்கள்.

- உறவினர்க்கும் நன்மை செய்யுங்கள்.

- அநாதைகளுக்கும் நன்மை செய்யுங்கள்.

- ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள்.

- மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்.

- தொழுகையை நிலை நிறுத்துங்கள்.

- ஸகாத்தையும் கொடுத்து வாருங்கள்.

எப்படிப்பட்ட உயர்ந்த வணக்க வழிபாடுகளுடன் மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள் என்ற கட்டளையையும் இணைத்துச் சொல்கிறான் அல்லாஹ் என்று ஒரு கணம் சிந்தியுங்கள். மேற்கண்ட வல்லோன் அல்லாஹ் பனி இஸ்ரவேலர்களிடம் வாங்கிய உறுதி மொழிகள் தான் மேற்கண்ட இறைக் கட்டனைகள் அனைத்தும். அல்லாஹ்விடம் உறுதி மொழி செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம்! சிந்தியுங்கள்.

குழந்தைகளை பாராட்டுங்கள்!

ஒரு வயது கூட நிரம்பியிருக்காது அக்குழந்தைக்கு. அதன் தாய் அந்தக் குழந்தை விளையாடுவதற்காக சில ப்ளாஸ்டிக் டப்பாக்களை எடுத்து வருகிறார். குழந்தைக்கு முன்னே அமர்ந்து கொண்டு அவைகளை எப்படி அடுக்கிட வேண்டும் என்று செய்து காட்டுகிறார். குழந்தை அந்த டப்பாக்களை எடுத்து வைத்துக் கொண்டு அடுக்கத் தொடங்குகிறது. ஒரு டப்பா உருண்டோடுகிறது.




அம்மா அதனை எடுத்து மீண்டும் குழந்தையிடம் கொடுக்கிறார். குழந்தை அம்மாவைப் பார்த்து சிரித்த படி மீண்டும் முயற்சி செய்கிறது. இதோ அடுக்கியும் விட்டது. கண்கள் பளிச்சிட அம்மாவை கவனிக்கிறது. அதன் பொருள் என்ன? ‘அம்மா, எப்படி என் சாதனை?’ அம்மாவும் கை கொட்டி சிரிக்கிறார். அப்படியே தன் குழந்தையை வாரி அணைத்து முத்தமிடுகிறார். குழந்தை தன் தாயின் பாராட்டு மழையில் அப்படியே நனைகின்றது.

இந்தக் குழந்தைக்கு அதன் தாய் கற்றுக் கொடுத்தது என்னென்ன தெரியுமா? தன்னம்பிக்கையும், ஒன்றைக் கற்றுக் கொள்வதில் ஆவலும் ஆர்வமும், மேலும் சாதித்திட வேண்டும் என்ற ஊக்கமும் தான். இப்படி அம்மாவினால் ஊக்கம் பெறுகின்ற குழந்தைகள் பள்ளிக்கூடத்திலும் சாதிக்கின்றன. தன் வாழ்க்கையிலும் சாதிக்கின்றன.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் நமது குழந்தைகள் ஏதாவது ஒரு மிகச்சிறிய செயலை செய்து முடித்தால் கூட அதனை வாய் விட்டுப் பாராட்டி விட வேண்டும். இதனையே ஆங்கிலத்தில் “Celebrating small success” என்று அழைக்கிறார்கள். நமது பெற்றோர்கள் சிலர் அப்படிப் பாராட்டினால் குழந்தைகளுக்கு கர்வம் வந்து விடும் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறு.

குழந்தைகளின் எல்லா வளர்ச்சிக் கட்டங்களிலும் அவர்களை நாம் ஊக்கப் படுத்திட வேண்டும். குழந்தைகளைப் பாராட்டுவதற்கு அவர்கள் ஏதாவது பெரிதாகத் தான் செய்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மிகச் சிறிய ‘சாதனை’ ஒன்றை அவர்கள் செய்து விட்டால் கூட அவர்களைப் பாராட்டி விடுங்கள்.

உங்கள் குழந்தை – புதிதாக ஒரு வார்த்தையைச் சொல்லி விட்டதா – பாராட்டுங்கள்.

உங்கள் மகன் ஏதாவது படம் ஒன்றை வரைந்து வந்து காட்டுகின்றானா – பாராட்டுங்கள்;

கீழே சிந்தாமல் ஒரு நாள் உணவு உண்டு விட்டானா – பாராட்டுங்கள்.

உங்கள் மகன் ஒரு தேர்வில் 15 மதிப்பெண் பெற்று வந்திருப்பான். ஆனால் அடுத்த தேர்வில் 25 மதிப்பெண் பெற்றிருப்பான். அடடா! இந்தத் தடவை 10 மதிப்பெண்கள் அதிகம் பெற்றிருக்கிறாயே – இன்னும் முயற்சி செய் – வெற்றி பெற்று விடுவாய் என்று பாராட்டுங்கள்.

உங்கள் மகனுக்கு படிப்பு வரவில்லையா? வேறு ஏதாவது திறமைகள் அவனுக்குள் ஒளிந்திருக்கும். ‘அத்தா! இதைப் பார்த்தீர்களா’ என்று ஏதாவது ஒன்றை செய்து வந்து காட்டுவான். பாராட்டுங்கள்.

ஒரு சிறுவன் தெருவில் மட்டைப் பந்து விளையாட வத்தானாம். ஆனால் அவன் நண்பர்கள் யாரும் வந்து சேரவில்லை. அவனே பந்தை ஒரு கையால் தூக்கிப் போட்டு இன்னொரு கையில் உள்ள மட்டையால் பந்தை அடிக்க முயற்சி செய்தானாம். ஆனால் பந்து அடிபடவில்லை. தவறி விட்டது. இதனைக் கவனித்த பெரியவர் ஒருவர் Good என்றாராம். சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவரை ஒரு கணம் பார்த்து விட்டு மீண்டும் பந்தைப் போட்டு மட்டையை விளாசினான் சிறுவன். இப்போதும் பந்து அடிபடவில்லை. பெரியவர் இப்போது Very Good என்றாராம். சிறுவனுக்கு சற்றே கோபம். அவரை முறைத்துப் பார்த்து விட்டு மூன்றாவது தடவை சற்றே எச்சரிக்கையுடன் பந்தைப் போட்டு மட்டையை வீசினான். ஆனால் இப்போதும் பந்து அடிபடவில்லை. பெரியவர் இப்போது Superb என்றாராம். சிறுவனுக்கு கோபம் இப்போது தலைக்கு மேல். கடைசியாக இந்தத்; தடவை எப்படியும்; பந்தை அடித்தே தீர்வது என்று உறுதியுடன் பந்தைப் போட்டு மட்டையை வீசினான். ஆனால் பரிதாபம். இந்தத் தடவையும் பந்து அடிபடவில்லை. பெரியவரோ தனது கைகளைத் தட்டிக் கொண்டே Excellent என்றாராம். வந்ததே கோபம் சிறுவனுக்கு. நேரே அவரிடம் வந்து என்ன கிண்டலா? என்று அவரைத் திட்டினானாம். அதற்கு அந்தப் பெரியவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘தம்பி! நான் உனது மட்டை வீசும் திறமையைப் பற்றி ஒன்றும் சொல்லிடவில்லை. ஆனால் நான் பாராட்டியதெல்லாம் லாகவமாக நீ பந்தை வீசியதைத் தான். எவ்வளவு அற்புதமாக பந்து வீசுகிறாய் தெரியுமா!’

ஆமாம்! இப்படித் தான் பாராட்டிட வேண்டும் நமது குழந்தைகளை! பாராட்டுவதால் என்ன நன்மை? ஏதாவது ஒன்றில் ஒரு சிறு வெற்றி பெறுகின்ற குழந்தை பாராட்டப் படுகின்ற போது அதற்கு தன் மீது ஒரு நம்பிக்கை வருகிறது! இன்னும் இதை விட ஏதாவது பெரிதாக ஒன்றைச் செய்திட வேண்டும் என்ற வேட்கை அதற்கு ஏற்படுகிறது. துணிந்து இறங்கி இன்னொன்றை சாதித்துக் காட்டுகிறது. அது மீண்டும் பாராட்டைப் பெறுகிறது. இந்த சுழற்சி அந்தக் குழந்தையை சாதனையின் உச்சிக்கு அழைத்துச் செல்கிறது. இது தான் ரகசியம்.

இப்போது நபிவழிக்கு வருவோம். ஆமாம் பாராட்டுவதும் நபிவழியே! இதோ சான்றுகள்:

அப்போது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒரு சிறுவர். ஓரு நாள் நபி (சல்) அவர்கள் பின்னிரவில் தொழுவதற்காக எழுந்து சிறுநீர் கழித்து வி;ட்டு திரும்புகிறார்கள். அப்போது உளு செய்வதற்காக தண்ணீர் தயாராக எடுத்து வைக்கப் பட்டிருந்தது. யார் வைத்திருப்பார்கள் என்று பார்த்தால் சிறுவர் இப்னு அப்பாஸ் தான் அது என்று தெரிய வருகிறது. தமக்குத் தெரியாமலேயே பணிவிடை செய்த இப்னு அப்பாஸ் அவர்களை நபியவர்கள் பாராட்டுகிறார்கள். அவருடைய கல்வியாற்றல் பெறுகிட துஆவும் செய்கிறார்கள். பின்னாளில் இப்னு அப்பாஸ் அவர்கள் மிகச் சிறந்த திருக்குர்ஆன் விரிவுரையாளராக விளங்கினார்கள் என்பது வரலாறு.

சிறு வயதிலேயே விளையாட்டுச் சாமான்களை வைத்து வியாபாரத்தில் ஈடுபட்ட சஹாபி ஒருவரை நபியவர்கள் பாராட்டி துஆ செய்ததாக நபிமொழி உண்டு.

சிறுவர்களுக்கு ஓட்டப் பந்தயம் வைத்து அதில் வெற்றி பெறுபவரை முத்தம் கொடுத்துப் பாராட்டுவார்கள் நபியவர்கள் என்றும் நபிமொழி உண்டு.

இப்போது சிந்தியுங்கள். எத்தனைத் தடவை உங்கள் குழந்தைகளைப் பாராட்டும் தருணங்களைத் தவற விட்டிருப்பீர்கள் என்பது புரிய வரும். இனியேனும் உங்கள் குழந்தைகளைப் பாராட்டுவீர்களா?

குழந்தைகளைக் கொஞ்சுங்கள்!

பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை ஒன்று. இரவில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று விழித்துக் கொள்கிறது. அழத் தொடங்குகிறது. நீங்கள் ஒரு தாய். என்ன செய்வீர்கள்?




இங்கே ஒரு தாய். அவர் பாசத்துடன் தனது குழந்தையை வாரி அணைத்துத் தூக்கிக் கொள்கிறார். 'என்னம்மா, முழிச்கிக்கிட்டியா? என்னம்மா வேணும், இதோ நான் இருக்கேன் உனக்காக!' என்று கொஞ்சுகிறார். கைகளில் அரவணைத்துக் கொண்டே பால் கொடுக்கத் தொடங்குகிறார். குழந்தை தனது அம்மாவைப் பார்த்து சிரித்த முகத்துடன் பால் குடித்து விட்டு அப்படியே திருப்தியுடன் தூங்கி விடுகிறது.

இன்னொரு தாய். இவர் தனது குழந்தையை இரவில் தூங்க வைக்கிறார். தானும் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு தூங்கப் போகும் சமயம் மாமியார் சண்டைக்கு வரகிறார். எல்லாம் வரதட்சனைப் பிரச்னை தான். ஒருவாறு சண்டை ஓய்ந்து அந்த இளந்; தாய் தூங்கப்;போகிறார். தூக்கம் வரவில்லை. இரவு ஒரு மணி இருக்கும். அப்போது தான் அசந்து தூங்கியிருப்பார். திடீரென்று கண் விழித்துக் கொண்டு அழத் தொடங்குகிறது குழந்தை. 'ஏய்! சும்மா இரு, தூங்க விட மாட்டியா என்னை!' என்று அதட்டியவாறே குழந்தையைத் தூக்குகிறார் தாய். குழந்தை பால் குடிக்க மறுக்கிறது. மீண்டும் அதட்டுகிறார் அந்தத் தாய் சற்றும் முகத்தில் பாசம் இல்லாத படி. குழந்தை தாயை அச்சத்துடன் பார்க்கிறது. நெளிகிறது. அப்படியே விரைத்துக் கொள்கிறது குழந்தை. பால் குடிக்காமல் பசியுடனேயே அசந்து தூங்கி விடுகிறது. இதுவே ஒரு தொடர்கதையானால்?

மேற்கண்ட இரு விதமான தாய்மார்களிடத்தில் வளர்கின்ற குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படிப்பட்டவர்களாக வளர்கிறார்கள் தெரியுமா? முதல் தாயின் குழந்தை சாதனையாளனாக மாறுகிறது. ஆனால் இரண்டாவது தாயின் குழந்தை யாரையும் நம்புவதில்லை. யாரையும் ஒரு உதவிக்குக் கூட அணுகுவதில்லை. ஒட்டு மொத்த உலகமே தனக்கு எதிரானது என்று ஒதுங்கி ஒதுங்கி சென்று பயந்து பயந்து வாழும் இவன் எதனை சாதிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

மைக்கேல் ஜோர்டன் (Mickhal Jordan) ஒரு தலை சிறந்த முன்னணி கூடைப்பந்து ஆட்டக்காரர். அவர் சொல்கிறார்: நான் கூடைப்பந்தில் மிகச் சிறந்த ஆட்டக்காரராக வந்திட வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அதற்கென தி;ட்டமி;ட்டு நான் உழைத்தேன். முயற்சிகள் மேற்கொண்டேன். எனக்கு உதவி தேவைப்படின் யாரையும் அணுகுவதற்குத் தயங்கவே மாட்டேன். நான் ஏன் அதற்கு பயப்பட வேண்டும்?'

இங்கே தான் நாம் நன்றாக சிந்தித்தாக வேண்டும். ஒருவர் சாதித்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் முதலில் அவர் தயக்கங்களைத் தூக்கி யெறிந்திட வேண்டும். உதவி தேடுவதற்கு வெட்கப்படக் கூடாது. அதற்கு மற்றவர்கள் நமக்கு உதவிடுவார்கள் என்று நம்பிக்கை அவசியம். கைக்குழந்தையாக இருக்கும் நிலையில் தன் தாயே தன் உதவிக்கு வராத போது அக்குழந்தை வளர்ந்து ஆளாகும் போது வேறு யாரை நம்பிடும்? மைக்கேல் ஜோர்டனின் தாய் தனது மகனைக் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்திருப்பாரோ என்றே நமக்கு நினைக்கத் தோன்றுகிறது!

எனவே தான் சொல்கிறோம் - கொஞ்சுங்கள்!

விளையாட்டுக்குக் கூட குழந்தைகளை அதட்டிப் பேசாதீர்கள். 'கோபம்! ரோஷம்! பொத்துக்கிட்டு வர்ரதைப் பாரு!' என்று சில பெற்றோர்கள் சிறு குழந்தைகளை அதட்டி அழ வைத்து வேடிக்கைப் பார்ப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இதை விட ஒரு கொடுமையை நாம் ஒரு குழந்தைக்குச் செய்து விட முடியாது.

பெற்றோர்கள் இதனை உணர்வார்களா?

இங்கேயும் இரண்டு நபிமொழிகளைப் பதிவு செய்வோம்:

அண்ணல் நபியவர்கள் குழந்தைகளுடன் எவ்வாறு நடந்து கொள்வார்கள் தெரியுமா? 'நபியவர்கள் தங்களின் பேரக்குழந்தைகள் ஹசன் மற்றும் ஹூசைன் இருவரையும் தங்களிடம் வரச்சொல்லி அழைத்து இருவரையும் ஆரத் தழுவிக்கொள்வார்கள்' என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நான் அல்லாஹ்வின் தூதர் (சல்) அவர்களுடன் முதல் தொழுகையைத் தொழுதேன். பின்னர் நபியவர்கள் தங்கள் வீட்டிற்குத் திரும்பினார்கள். நானும் அவர்களுடன் கூடவே சென்றேன். வழியில் அவர்கள் சில சிறுவர்களைச் சந்தித்தார்கள். ஒவ்வொரு குழந்தையின் கன்னத்தையும் அன்போடு அவர்கள் தட்டிக் கொடுத்தார்கள். எனது கன்னத்தையும் அவர்கள் தட்டிக் கொடுத்த போது நான் நபியவர்களின் கரங்களின் குளிர்ச்சியையும் வாசனையையும் உணர்ந்தேன். அது எப்படி இருந்தது என்றால் ஒரு வாசைன திரவியம் நிரம்பிய பையில் கையை விட்டு எடுத்தவர் கைகள் போன்று இருந்தது. (முஸ்லிம்)

குழந்தைகளைக் கொஞ்சுவதும் ஒரு சுன்னத். சரி தானே?

(இன்ஷா அல்லாஹ் தொடர்வோமே)

தந்தையின் பொறுப்பு!

ஒப்பு நோக்குங்கால் தந்தையை விட தாய்க்கே குழந்தை வளர்ப்பில் பொறுப்பு அதிகம் என்பது உண்மைதான். ஆனால் தந்தையின் பொறுப்பு என்பது தன் குழந்தைகளுக்கு செலவு செய்வது மட்டும் தான் என்று பல தந்தைமார்கள்; நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அப்படியல்ல.




குழந்தை வளர்ப்பு என்பது பின்வரும் ஐந்து பரிணாமங்களைக் கொண்ட ஒரு பெரும் பொறுப்பு ஆகும்.

1. உடல் வளர்ச்சி (Physical Development)

2. மன வளர்ச்சி (Psychological Development)

3. அறிவு வளர்ச்சி (Intellectual Development)

4. ஆன்மிக வளர்ச்சி (Spiritual Development)

5. ஒழுக்க வளர்ச்சி (Character Development)

பெற்றோர் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் போது மேற்கண்ட ஐந்து பரிணாமங்களிலும் தங்கள் குழந்தைகள் வளர்கிறார்களா என்று கண் காணித்திட வேண்டும். அதுவே முழுமையான குழந்தை வளர்ப்பு முறை ஆகும். இப்பெரும் பொறுப்பினை தாயும் தந்தையும் சேர்ந்தே ஏற்றுக்கொள்ள வேண்டுமேயல்லாமல் எனக்கு எங்கே இருக்கிறது நேரம் என்று ஒரு தந்தை ஒதுங்கி விடக் கூடாது. அப்படி ஒதுங்கினால் பின்னர் 'என் பிள்ளை என் பேச்சைக் கேட்பதேயில்லை, எதிர்த்து எதிர்த்துப் பேசுகிறான், நான் அவனுக்கு என்ன குறை வைத்தேன், எவ்வளவு அவனுக்காக செலவு செய்திருக்கறேன் தெரியுமா' என்றெல்லாம் ஒப்பாரி வைப்பதில் எந்தப் பயனும் இல்லை!

இங்கே இரண்டு நபிமொழிகளைப் பதிவு செய்வோம்:

நபித்தோழர் ஒருவர் தமது குழந்தையை தமது கைகளில் அரவணைத்து அணைத்துக் கொண்டவராக நபி (சல்) அவர்களை சந்திக்க வந்திருந்தார். இதனைக்கண்ட நபியவர்கள் 'உங்கள் குழந்தையின் மீது கொண்ட அன்பினாலும் இரக்க குணத்தாலும் தான் இவ்வாறு செய்கிறீர்களா?' என்று கேட்டார்கள். ஆம் என்றார் அந்த நபித்தோழர். நபி (சல்) அவர்கள் அவரிடம் தெரிவித்தார்கள். 'நீங்கள் எப்படிப்பட்ட அன்பையும் இரக்க குணத்தையும் கொண்டு உங்கள் குழந்தையை இவ்வாறு நடத்துகிறீர்களோ அதை விட பன்மடங்கு அதிகமாக அல்லாஹுதஆலா விடமிருந்து அவன் அன்பையும் அருளையும் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். ஏனெனில் அல்லாஹுதஆலாவின் அன்பும் இரக்க குணமும் அவன் படைப்பினங்கள் அனைத்தின் இரக்க குணத்தை மிகைத்து நிற்கக் கூடியது!' (அல் அதபுல் முஃப்ரத்)

நபி (சல்) அவர்கள் சொன்னார்கள்: ஒரு தந்தை தமது மகனது முகத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைகின்றார் எனில், அதற்காக அவருக்கு ஒரு அடிமையை உரிமை விட்ட நற்கூலி வழங்கப்படுகிறது. நபித்தோழர் ஒருவர் : முன்னூற்று அறுபது தடவை அப்படிச் செய்தாலுமா என்று கேட்டார்? நபி (சல்) அவர்கள் பதிலளித்தாரகள்: அல்லாஹுதஆலாவைப் பற்றி நீங்கள் எண்ணுவதை விட அவன் மிகப்பெரியவன் (தபரானி)

தந்தையின் பொறுப்பு என்பது தன் குழந்தைகளுக்கு செலவு செய்வது மட்டும் அல்ல என்பதை இப்போதாவது ஒத்துக் கொள்கிறீர்களா தந்தைமார்களே?

(இன்ஷா அல்லாஹ் தொடர்வோமே)