Thursday, May 1, 2014

கண்ணியம் காதலாய் மலரட்டும்!

சுன்னத்தான இல்லறம்: 

கண்ணியம் காதலாய் மலரட்டும்!

பின் வரும் மூன்று திருமணங்களையும் குறித்து சற்று ஆழமாக சிந்தியுங்கள்:

1. நபியவர்கள் அன்னை கதீஜாவை எவ்வாறு மணம் முடித்தார்கள்?


அன்னை கதீஜா அவர்கள் நபியவர்களை ஒரு மேலாளராகத் தான் சிரியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இன்னொரு பணியாளரும் நபியவர்கள் கூடவே சிரியாவுக்குச் செல்கிறார். மக்காவுக்குத் திரும்பியதும் - அந்தப் பணியாளர் நபியவர்களின் குண நலன்களை அன்னை கதீஜாவுக்கு எடுத்து விளக்குகின்றார்.

அத்துடன் மக்காவிலே நபியவர்களுக்கு அல் அமீன், அஸ் ஸாதிக் என்ற நற்பெயர்களெல்லாம் ஏற்கனவே உண்டு. அண்ணலார் வணிகப் பயணம் முடிந்து திரும்பியதும், நபியவர்களின் குணநலன் பற்றி (அந்தப் பணியாளர் மூலம்) அறிந்ததும் மேலும் ஒரு மதிப்பு வருகிறது.

தாமும் நபியவர்களின் நடைமுறைகளை உற்று நோக்குகிறார்கள். கண்ணியம் அதிகரிக்கிறது. அந்தக் கண்ணியமே காதலாய் மாறிட நாம் ஏன் இவர்களைத் திருமணம் முடித்திடக் கூடாது என்று எண்ணுகிறார்கள்! தூது அனுப்புகிறார்கள். எல்லாம் நல்லபடியாய் முடிகிறது!

2. நபியவர்கள் தன் அன்பு மகள் பாத்திமாவுக்கு அலீ அவர்களை மணம் முடித்துக் கொடுத்தது எப்படி?

அண்ணல் நபியவர்கள் தன் அன்பு மகளுக்கு ஹள்ரத் அலீ அவர்களைத் திருமணம் முடித்திட விரும்புகிறார்கள். தன் விருப்பத்தை தன் மகளிடம் தெரிவிக்கிறார்கள். அன்னை பாத்திமா (ரலி) அவர்களின் கண்களில் கண்ணீர். அது அவர்களின் தயக்கமா? அல்லது அலீ அவர்கள் குறித்து அச்சமா? என்றெல்லாம் தெரியவில்லை. அப்போது நபியவர்கள் மகள் பாத்திமாவிடம் அலீ அவர்களின் குண நலன் பற்றி எடுத்துச் சொல்கிறார்கள்:

அலீ அவர்கள் அறிவில் சிறந்தவர் என்றும், பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை நிறைந்தவர் என்றும், வீரம் மிக்கவர் என்றும் எடுத்துரைக்கிறார்கள்; பாத்திமா (ரலி) அவர்கள் சம்மதித்திட திருமணம் நடந்தேறுகிறது!

3. உ,மர் (ரலி) அவர்கள் தன் மகன்களில் ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தது எப்படி?

ஒரு தாய் மற்றும் அவருடைய மகள். பாலில் தண்ணீர் கலப்பதைக் கூட அனுமதித்திடாத இறையச்சம் அந்த மகளுக்கு. உமர் (ரலி) அவர்கள் இதனை நேரிடையாகவே அறிந்து கொண்ட பின் தன் மகன்களை அழைத்து அந்தப் பெண்மணியின் இறையச்ச உணர்வை எடுத்துச் சொல்லி "அறிமுகம்" செய்து வைக்கிறார்கள். ஒரு மகன் முன் வர திருமணம் நடந்தேறுகிறது!

இம்மூன்று திருமணங்களிலும் - தான் யாரைத் திருமணம் முடிக்க விரும்புகிறாரோ அவருடைய குணநலன்கள் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன என்பதை உன்னிப்பாக கவனியுங்கள்:

படித்துக் கொள்ள வேண்டிய படிப்பினைகள்:

திருமணத்துக்கு முன்னரேயே - பெண் மற்றும் மாப்பிள்ளை - இவர்களின் குண நலன்கள் (character) எப்படிப் பட்டது என்பது பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.

தான் மணக்க இருக்கும் துணைவர் எப்படிப்பட்ட குணமுடையவர் என்பதை இருவருமே அறிந்து கொள்தல் மிக அவசியமான ஒன்றாகும்!

வாழ்க்கைத்துணையாக வர இருப்பவருடன் பேசுங்கள்!

சுன்னத்தான இல்லறம்: 

வாழ்க்கைத்துணையாக வர இருப்பவருடன் பேசுங்கள்!

வாழ்க்கைத்துணையாக வர இருப்பவருடன் பேசிப் பார்க்கிறீர்களா?

பெற்றோர் முன்னிலையில் உங்கள் வாழ்க்கைத் துணையாவதற்காக அறிமுகம் செய்து வைக்கப்பட்டவருடன் பேசுதல் அவசியம்.


அப்படி ஒரு வாய்ப்பை வலியுறுத்தி ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பின்பு அவர்களுடன் பேசுங்கள்; அவர்கள் பேசுவதைக் கேளுங்கள். நீங்கள் பேசுவதை விட அவரைப் பேச விட்டுக் கேளுங்கள். இந்தப் பேச்சை வைத்துத் தான் "இவர் நமக்குப் பொருத்தமானவர் தானா?" என்று பார்த்திட வேண்டியுள்ளது.

எந்த விஷயங்களை எல்லாம் அவர் அறிந்து வைத்திருக்கிறார்; அவருடைய கண்ணோட்டங்கள் எப்படி இருக்கின்றன; அவருடைய சிந்திக்கும் பாங்கு; சூழ்நிலைகளை சரியாக எடைபோடும் ஆற்றல்... இவைகளை கவனியுங்கள்.

.அவர் சொந்தமாக சிந்திக்கக்கூடியவரா? அல்லது பிறரைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுபவரா என்பதையும் பாருங்கள்!

அவர் என்னவெல்லாம் படிக்கிறார் என்று கேளுங்கள்; எந்த நூலாசிரியரைப் பிடிக்கும் என்று கேளுங்கள்;

பிரச்னைகளைப் பற்றி அதிகம் பேசுபவரா அல்லது தீர்வுகளை முன் வைத்துப் பேசுபவரா என்று கவனியுங்கள்!

எல்லாவற்றிலும் குறை கண்டுபிடிப்பவரா என்று பாருங்கள்; மன்னிக்கும் மனப்பான்மை இருக்கிறதா என்று பாருங்கள்!

அவருடைய மார்க்கப் பற்று எப்படிப்பட்டது என்பதனையும் பாருங்கள். பொருளாசை மிக்கவரா அல்லது மறுமைச் சிந்தனை மிக்கவரா என்றும் எடை போடுங்கள்.

மற்றவர்களை அதிகமாக விமர்சிக்கின்றாரா அல்லது தன்னை திருத்திக் கொள்வது பற்றிப் பேசுகின்றாரா என்றும் பாருங்கள்!

குறிப்பாக அவர் பேசும்போது, பிறர் நலன் (concern for others) பேணுபவரா அல்லது சுயநலம் தென்படுகிறதா என்பதை அவசியம் கண்டுணருங்கள். மேலும் பிறர் பேசும்போது பொறுமையாக (active listening) காது கொடுத்துக் கேட்கக் கூடியவரா அல்லது அடிக்கடி குறுக்கிட்டு மற்றவர் பேசுவதை அலட்சியம் செய்பவரா என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள்

ஏன் இப்படிப்பட்ட உரையாடலை நாம் வலியுறுத்துகிறோம் என்றால் - திருமண வாழ்வின் மிக முக்கியமான பகுதிகளுள் ஒன்று மனம் விட்டு ஒருவருக்கொருவர் பேசிக்கொள்தல் தான்!

ஒரு அறிஞர் சொல்கிறார்: "Conversation is the lifeblood of a marriage."

அதாவது: " கலந்துரையாடுதல் என்பது திருமண வாழ்க்கைக்கு உயிரூட்டும் இரத்தம்!"

உரையாடலைத் தவிர்த்து விட்டால் திருமண வாழ்வு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!

ஆனால் - பெரும்பாலான கணவன் மனைவியர் - திருமணமான ஆறு மாதங்களிலேயே தங்களுக்குள் பேசுவதையே நிறுத்திக் கொள்கிறார்கள்.

உங்களுக்கு அந்த நிலை வேண்டுமா?

வாழ்க்கைத்துணை என்பது - ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவதற்காக; தமது ஆர்வங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக; ஒன்றை மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்வதற்காக; இந்தப் பரிமாற்றம் இருவருக்குள் ஒரு நெருக்கத்தை உண்டாக்கி விடும்! இந்த நெருக்கத்தினை ஆங்கிலத்தில் intellectual intimacy என்கிறார்கள்.

இது இல்லாவிட்டால் - திருமணம் ஒரு குறுகிய வட்டத்துக்குள் வந்து நின்று விடும்!!

"ஆமாம்......? இதெல்லாம் யாருக்காக இப்படி எழுதிக்கிட்டு இருக்கீங்க? இதெல்லாம் நடக்கற காரியமாங்க?" - என்று கேட்கிறீர்களா?

நிலைமை மாறித்தான் ஆக வேண்டும்! முயற்சி செய்யுங்கள்!

வல்லோன் உதவி நிச்சயம் உங்களுக்கு உண்டு!

பொருத்தம் பார்ப்பது ஒரு சுன்னத்!

சுன்னத்தான இல்லறம்: 

பொருத்தம் பார்ப்பது ஒரு சுன்னத்!

ஆதாரம் பின் வரும் நபிமொழி தான்:

பாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களை அவர்களது கணவர் விவாகரத்துச் செய்து விட்டார். இத்தா முடிந்ததும் இரண்டு நபித் தோழர்கள் அவரை மணம் முடிக்க விரும்பினார்கள். இந்நிகழ்ச்சியை அவர் பின் வருமாறு விவரிக்கிறார்.


நான் "இத்தா'வை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), "முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்'' என்று சொன்னேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்க மாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்து விடுபவர்). முஆவியோ ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்து கொள்'' என்று கூறினார்கள்.

நான் உசாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீ உசாமாவை மணந்து கொள்'' என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்து கொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன்.

அறிவிப்பவர்: ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2953

பெண் கேட்ட இரண்டு நபித்தோழர்களும் - பாத்திமா பின்த் கைஸ் அவர்களுக்குப் பொருத்தமானவர்கள் அல்ல என்பதனாலும், அவருக்கு உசாமா பின் ஸைத் அவர்களே மிகவும் பொருத்தமானவர் என்பதால் தான் அவரைத் திருமணம் முடித்துக் கொள்ளுமாறு நபியவர்கள் பரிந்துரைத்தார்கள் என்றும் நாம் விளங்கிக் கொண்டால் - பொருத்தம் பார்ப்பதும் சுன்னத் என்றாகிறது அல்லவா?

அல்லாஹ்வே மிக அறிந்தவன்!

பொருத்தம் பார்ப்பது அவசியம்!

சுன்னத்தான இல்லறம்: 

பொருத்தம் பார்ப்பது அவசியம்!

திருமணத்துக்கு முன்பு – இல்லற வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்திடும் முன்பு – ஆணுக்கும், பெண்ணுக்கும் பல பொருத்தங்கள் – பார்த்துத் தான் திருமணம் முடிவு செய்திட வேண்டும்.


அவை என்னென்ன?

மார்க்கப் பொருத்தம் (Religious Compatibility): மார்க்கத்தைப் பின் பற்றும் மணமகன், மார்க்கத்தைப் பின் பற்றாத மண மகள் – அல்லது மார்க்கத்தைப் பின் பற்றும் மணமகள், மார்க்கத்தைப் பின் பற்றாத மண மகன் – இவை சாதகமான பொருத்தம் அன்று. பாதகமே விளையும்.

எல்லாம் திருமணத்திற்குப் பின் “அவரை” நீ திருத்தி விடலாம்” என்பார்கள். ஆனால் அதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது

கல்விப் பொருத்தம் (Educational Compatibility): படித்த மணமகன், படிக்காத மணமகள், அல்லது படித்த பெண் படிக்காத பையன் – இதுவும் பொருந்தாத ஜோடியே!

“என்ன படித்த திமிரில் பேசுகிறாயா?” -என்று கணவன் பேசும் நிலை ஏற்படலாம்.

அல்லது அறிவு பூர்வமான கணவன் ஒன்றைச் சொல்லும் போது, படிக்காத மனைவி அதனை ஏற்காமல், ஊரில் உள்ளவர்கள் எல்லாம் இப்படியா இருக்கிறார்கள் என்று வாதாடும் நிலை ஏற்படலாம்.

பொருளாதாரப் பொருத்தம் (Economic Compatibility): பணக்காரப் பையன், ஏழைக் குடும்பத்துப் பெண் அல்லது பணக்கார வீட்டுப் பெண், ஏழை வீட்டு மாப்பிள்ளை – இதுவும் பொருந்தாது.

“என்னை மதிக்கவே இல்லை” எனும் பிரச்னை பூதாகாரமாக உருவெடுக்கும்.

கலாச்சாரப் பொருத்தம் (Cultural Compatibility): நமது சமூகம் உலகளாவிய சமூகம் எனினும் பல் வேறு கலாச்சார சூழலில் நமது வாழ்க்கை பின்னப் பட்டிருக்கின்றது எனபதை மறுக்க முடியாது. இப்படிப்பட்ட நிலையில், மாறு பட்ட இரு கலாச்சாரங்களில் வளர்க்கப் பட்டவர்கள் திருமணம் செய்திடும் போது – பொருத்தமற்ற நிலையையே அது உருவாக்கிடும்.

குடும்பப் பொருத்தம் (Family Compatibility): மணமக்கள் எப்படிப் பட்ட குடும்ப சூழலில் வளர்க்கப் பட்டவர்கள் என்பதும் கவனிக்கப் பட வேண்டியதே.

ஆளுமைப் பொருத்தம் (Temperamental Compatibility): மணமக்கள் எப்படிப் பட்ட ஆளுமை கொண்டவர்கள் என்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட வேண்டும். வேறு பட்ட ஆளுமை கொண்ட மண மக்கள் இல்லற வாழ்வில் நுழையும் போது அதுவும் பல சிக்கல்களைக் கொண்டு வரலாம்.

இவையே சாதகமான விளைவுகளை ஏற்படுத்த வல்ல நல்ல பொருத்தங்கள்.

திருமணத்துக்கு பெண் அல்லது மாப்பிள்ளை தேடுபவர்கள் இவைகளைக் கவனத்தில் கொண்டால் நல்லது

பொருத்தம் பார்த்து மணந்து கொண்டால் - இங்கேயும் சொர்க்கம் தான்!

சுன்னத்தான இல்லறம்: 

பொருத்தம் பார்த்து மணந்து கொண்டால் - இங்கேயும் சொர்க்கம் தான்!

நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி; அப்பெண்களைக் கன்னிகளாகவும்; பாசமுடையோராகவும், சம வயதினராகவும், வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்). (56:35-38)


சூரத்துல் வாகியாவின் 37 - ஆம் வசனத்தில் வரும் ஒரு சொல் தான்: "அத்ராப்"

அத்ராப் என்பதற்கு - "சம வயதினர்" என்று பொருள். அதே வேளையில் மேலதிக விளக்கம் ஒன்றைத் தருகிறார்கள் திருமறை விரிவுரையாளர் முஹம்மத் அஸத் அவர்கள்:

Muhammad Asad: “As regards the term atrab, it primarily denotes "[persons] of equal age“; however, as pointed out by all philological authorities, this term is also used in the sense of "[persons] equal in quality that is, "well-matched":

முஹம்மத் அஸத் அவர்கள்: "அத்ராப் என்ற சொல் முதன்மையாக சம வயதுடையவர்களையே குறிக்கும் சொல்லாகும்; எனினும் எல்லா மொழியியல் வல்லுனர்களும் சுட்டிக் காட்டுவது போல் - இந்தச் சொல் ஒரே விதமான பண்புடையவர்களைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்படும். அதாவது - மிகச் சிறப்பான பொருத்தம் உடையவர்களையும் (well matched) இச்சொல் குறிக்கும் என்பதாம்."

அதாவது நாளை மறுமையில் - இறைவனின் நாட்டப்படி நீங்கள் வலப்புறத்தார்களில் ஒருவராக இருந்தால் - உங்களுக்கு மட்டுமே பொருத்தமான, உங்கள் மீது பாசம் உள்ள, புத்தம் புதிய ஒரு கன்னிப் பெண்ணை வல்லோன் உங்களுக்கென்றே படைத்துத் தருகிறான் என்பது தான் இதன் விளக்கம்!

சந்தோஷம் தானே!

இதிலிருந்து நாம் இன்னொரு கருத்தையும் எடுக்கலாம்:

அதாவது - உங்களுக்கு முற்றிலும் பொருத்தமான ஒரு பெண்ணை (made for each other) நீங்கள் திருமணம் முடித்தீர்கள் என்றால் - இவ்வுலக வாழ்க்கையே உங்களுக்குச் சொர்க்கம் தான்!! சரிதானே?

Couples who are compatible live a Heavenly life in this world!

இமாம் இப்னு தைமிய்யா அவர்களின் பின் வரும் கூற்றை சற்றே சிந்தித்துப் பாருங்கள். மேலும் உங்களுக்கு அது விளங்கும்!

இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் சொல்கிறார்கள்: நிச்சயமாக இந்த பூமியிலேயே ஒரு சொர்க்கம் இருக்கின்றது; யாரெல்லாம் இந்தப் பூவுலக சுவர்க்கத்தில் நுழைந்திடவில்லையோ, அவர்கள் மறு உலக சுவர்க்கத்திலும் நுழைந்திட மாட்டார்கள்!

And Imam Ibn Taymiyyaah said, "Indeed, there is a paradise here on earth and whoever does not enter it here, will not enter the Paradise of the hereafter."

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? அவள் தான்- நல்லதொரு மனைவியாவாள். (அறிவிப்பவர்: உமர் (ரலீ); நூல்: அபூதாவூத் 1412)

உலகம் அனைத்தும் இன்பமானது. அதில் தலைசிறந்த இன்பம் நற்குணமுள்ள மனைவி. (ஸஹீஹ் முஸ்லிம்)

மனதுக்குப் பிடித்தவரை மணம் முடியுங்கள்!

சுன்னத்தான இல்லறம்: 

மனதுக்குப் பிடித்தவரை மணம் முடியுங்கள்!


فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ

“ஃபன்கிஹூ மா தாப லகும் மினன்-னிஸாஇ”


இதன் பொருள்: “உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள்!” (4:3)

இச்சொற்றொடரில் “பிடித்தமான” என்ற சொல்லுக்குரிய அரபிச்சொல் “தாப” என்பதாகும்

ஆனால் இந்தத் “தாப” என்ற சொல் மிகவும் அருமையான ஒரு சொல் ஆகும்.

இந்தச் சொல்லுக்கு விரிவான பல பொருள்கள் உண்டு.

அதன் விரிவான பொருள்களையெல்லாம் உள்ளடக்கினால் - இவ்வசனத்தின் பொருள் எப்படியெல்லாம் விரிவடையும் பார்ப்போமா?

உங்கள் மனதிற்கு இன்பம் அளிக்கின்ற (pleasant);

உங்கள் மனதிற்கு ஒத்துப்போகின்ற (agreeable);

உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்ற (to please someone);

உங்களுக்கு இனிப்பான (to make something sweet);

உங்களுக்கு நறுமணம் அளிக்கின்ற (to scent, to perfume, to spice);

உங்கள் மனதிற்கு அமைதி அளிக்கின்ற (to set someone’s mind at rest);

நகைச்சுவையால் உங்களை மகிழ்விக்கின்ற (to joke, jest, make fun with someone)

- பெண்களை மணந்து கொள்ளுங்கள்!”

**

என்ன ஒரு அற்புதமான அறிவுரை இது!

அல்லாஹு தஆலாவுக்கு நன்றி செலுத்த வேண்டாமா நாம்?

பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்களே!

சுன்னத்தான இல்லறம்: 

பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்களே!

உங்களுக்கு ஒரு செய்தி!


என் மகளை எத்தகைய ஆணுக்கு மணம் முடிக்கட்டும் என இமாம் ஹசன் பசரி (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட து .

அதற்கு இமாம் அவர்கள் சொன்னார்கள்:

"அல்லாஹ்வை அஞ்சுபவனுக்குக் மணம் முடியுங்கள்

ஏனென்றால், அவளை நேசித்தால் அவளை கண்ணியப் படுத்துவான்;

அவளின் மீது கோபம் கொண்டால் அவளுக்கு அநீதிஇழைக்க மாட்டான்"