Friday, April 4, 2014

ஆமைகள் மட்டுமல்ல! மனிதர்களும் அப்படித்தான்!

சுன்னத்தான இல்லறம்: 

இது ஒரு கதை...

சிறுவன் ஒருவன் கடல் ஆமை ஒன்றைக் கண்டானாம். அவன் அதைச் சோதித்துப் பார்க்க ஆசைப்பட்டானாம். ஆனால் அதனை இவன் தொட்டவுடனேயே அந்த ஆமை தன் தலையையும் கால்களையும் தனது ஓட்டுக்குள்ளே இழுத்துக் கொண்டு விட்டதாம்.


என்னென்னவோ செய்து பார்த்தும் அந்த ஆமை தன் தலையையோ கால்களையோ வெளியே நீட்டிடவே இல்லை!

உடனே ஒரு குச்சியை எடுத்து வந்து அதனைக் குத்திப் பார்க்கலாம் என்று அதனை மீண்டும் நெருங்கினானாம்.

அப்போது அவனது மாமா அங்கே வந்தாராம். அவர், "அது அப்படி இல்லையப்பா! நீ அதனைக் குச்சியால் குத்தினாலும், அது செத்துப் போனாலும் போகுமே தவிர, அது தன் தலையையோ, கால்களையோ வெளியில் நீட்டிடவே நீட்டாது!

உடனே மாமா அந்த ஆமையை அப்படியே எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று கதகதப்பாக இருந்த அடுப்படிக்கு அருகில் சென்று அதனை வைத்தாராம்.

ஒரு சில நிமிடங்களிலேயே அந்த ஆமை, தனது தலையையும் கால்களையும் வெளியே நீட்டி ஊர்ந்து செல்லவும் ஆரம்பித்து விட்டதாம்.

அதனை ஆச்சரியத்துடன் பார்த்த சிறுவனை நோக்கி மாமா, "ஆமைகள் மட்டுமல்ல! மனிதர்களும் அப்படித்தான்!" என்றாராம்.

மாமா மேலும் சொன்னாராம்: "உன்னைச் சுற்றியிருப்பவர்களை நீ மாற்ற விரும்பினால், உனது இனிய முகத்தைக் கொண்டும், உனது கனிவான இரக்கத்தைக் கொண்டும் அவர்களின் இதயத்தைக் "குளிர வை!" அப்போது அவர்கள் தாங்களாகவே முன் வந்து தங்களை உன்னிடம் ஒப்படைத்து விடுவார்கள்! நீ விரும்பும் மாற்றத்தை அவர்களிடம் மிக இலகுவாகக் கொண்டு வந்திட முடியும்!"

கணவன்மார்களே! இந்தக் கதையில் உங்களுக்கு நல்லதொரு பாடம் இருக்கின்றது!

தடியெடுத்து ஒரு கனியைக் கனிய வைத்திட முடியாது! அது பழுத்துக் கனிந்திட வேண்டிய சூழலையை உருவாக்கினாலே போதும். தானே அது கனிந்து விடும்!

மனைவியைப் பொறுத்தவரை கனிவான சூழல் என்பது அன்பும், ஆசை வார்த்தைகளும், காதலும், கனிமொழிகளும், இரக்கமும், மன்னித்தலும் தான்!

ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள்! உங்கள் மனைவி தம்மை அப்படியே உங்களிடம் ஒப்படைத்து விடுகிறாரா இல்லையா என்று பாருங்களேன்!

Thursday, April 3, 2014

சீரியஸான பிரச்னையா? நேரிடையாக எதிர்கொள்க!

சுன்னத்தான இல்லறம்: 

ஆங்கிலத்தில் ஒரு சொல்: ASSERTIVENESS.

ஒருவர் தனது நியாயமான உரிமைகளுக்காக உறுதியுடன் குரல் கொடுக்கின்ற நிலையைக் குறிக்கும் சொல் இது!

தனது கண்ணியத்தையும் விட்டுக் கொடுக்காமல், மற்றவரின் கண்ணியத்திலும் கை வைத்து விடாமல் - ஒருவர் தனது தேவைகளையும் உரிமைகளையும் (needs and rights) தெளிவாக எடுத்துரைத்து தனது உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ளும் அழகிய திறனுக்குப் பெயர் தான் - assertiveness!

சிறிய உதாரணம் ஒன்றுடன் விளக்குவோம் இதனை:


நீங்கள் ஒரு வரிசையில் (queue) நிற்கிறீர்கள். மெதுவாக நகர்கிறது அந்த வரிசை. இப்போது உங்கள் முறை. திடீரென்று ஒருவர் உங்களுக்கு முன்னால் குறுக்கே புகுந்து விடுகிறார். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஒன்று - நீங்கள் மவுனமாக இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் மென்மையானவர்(?). குறுக்கே புகுந்தவர் தன் காரியத்தை கன கச்சிதமாக முடித்துக் கொண்டு போய் விடுகிறார். இதற்குப் பெயர் மென்மை அல்ல! இது கையாலாகாத் தனம். Passiveness.

அல்லது - நீங்கள், "ஏய், முட்டாள்! என்னாச்சு உனக்கு? நாங்கள்ளாம் வரிசையிலே நிக்கிறது கண்ணுக்குத் தெரியலையா?" என்று கேட்கிறீர்கள். இதுவும் தவறு. அது முரட்டுத் தனம். Aggressiveness.

அப்படியானால் எப்படி நடந்து கொள்வது சிறப்பு என்கிறீர்களா?

நீங்கள் குறுக்கே புகுந்தவரிடம் அவருடைய முகத்தை நோக்கி உறுதியான ஒரு பார்வையுடன், "மன்னிக்கவும்! இப்போது எனது முறை! கொஞ்சம் நகருங்கள்!" என்று கூறுகிறீர்கள். அவ்வளவு தான். அவர் நகர்ந்து விடுகிறார். வார்த்தைகளில் கடுகடுப்பு தேவை இல்லை. குரல் உயர்த்திடத் தேவையில்லை. கொஞ்சம் Seriousness. அவ்வளவு தான்.

இந்த அணுகு முறையைத் தான் assertive communication என்கிறார்கள். அதாவது தன் நிலையை உறுதிப் படுத்திக் கொண்டு பேசிடும் முறை.

இத்தகைய தன்னிலை உறுதிப்பாடு (assertiveness) கணவன் மனைவி இருவருக்கும் தேவை! அதுவும் குறிப்பாக இல்லற வாழ்வில் எழுகின்ற பிரச்னை சற்று சீரியஸாக இருந்து விட்டால் கணவனோ அல்லது மனைவியோ தனது உரிமைகளுக்காக உறுதியுடன் எழுந்து நின்று பிரச்னையை எதிர்கொண்டிட வேண்டும்.

குடும்பங்களில் நிகழ்கின்ற ஒரு உதாரணத்தைக் கொண்டு விளக்குவோம் இதனை:

கணவன், மனைவி, மூன்று குழந்தைகளைக் கொண்டதொரு குடும்பம் ஒன்று. கணவன் மது அருந்துபவன். மனைவியைப் போட்டு அடிப்பவன். குழந்தைகளைக் கன்னா பின்னாவென்று திட்டுபவன். இது ஒரு தொடர்கதை.

ஒரு மனைவி:

இவர் என்ன செய்கிறார்? இந்தச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது எங்கேயும் படித்துக் கொள்ளாத ஒரு மனைவி இவர்! ஏதோ அவளுக்குத் தெரிந்தவரையில் கணவனைத் திருத்த முயற்சி செய்கிறாள். கணவன் திருந்திடத் தயாராக இல்லை. மனைவி தன் குழந்தைகளுடன் தற்கொலையை நாடுகிறாள்!

இன்னொரு மனைவி:

கணவன் எப்படியும் போகட்டும் என்று விதியின் மீது பழியைப் போட்டு விட்டு கணவனின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு வாழப் பழகிக் கொள்கிறாள் இவள். இது தான் நாம் முன்பு குறிப்பிட்ட கையாலாகாத் தனம். இங்கே கணவனுக்கு வெற்றி(?). மனைவிக்குத் தோல்வி! (I lose - You win).

மூன்றாவது மனைவி:

இவள் எப்படி நடந்து கொள்கிறாள் பாருங்கள். பொறுமையாகப் பல தடவை சொல்லிப் பார்த்தும் கணவன் திருந்துவதாகக் காணோம்.

ஒரு நாள் கணவன் நிதானமாக இருக்கும் சமயமொன்றைத் தேர்வு செய்து அவன் அருகில் வந்து, "இங்கே பாருங்கள், நான் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பு எப்படிப்பட்டது என்பது உங்களுக்கே தெரியும். ஆனால் அதற்காக நீங்கள் குடித்து விட்டு வந்து, அந்த போதையில் என்னிடமும், குழந்தைகளிடமும் நடந்து கொள்ளும் முறையை இனியும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.

"குழந்தைகளுக்கு நாம் என்ன எதிர்காலத்தைக் கொடுக்கப் போகிறோம்? எப்படிப்பட்ட குழந்தைகளை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்? அவர்கள் பெரியவர்கள் ஆனால் அவர்களும் உங்களைப் போன்று ஆகி விடுவதை நான் அனுமதிக்க முடியாது. நீங்கள் குடிப்பதை நிறுத்தவில்லையென்றால், என்னையும் குழந்தைகளையும் திட்டுவதையும் அடிப்பதையும் நிறுத்தவில்லை என்றால் - அடுத்து நான் காவல் துறையைத் தான் அணுகிட வேண்டியிருக்கும் என்றால் அதற்கும் கூட நான் தயங்கிட மாட்டேன்".

உறுதியாகச் சொல்லி விடுகிறாள் மனைவி. குரலை உயர்த்தி கத்திப் பேசி ஊரைக் கூட்டிடவில்லை! திட்டவில்லை; கணவனை மிரட்டிடவில்லை.

கணவன் மீது தான் வைத்திருக்கும் அன்பையும் வெளிப் படுத்தத் தவறிடவில்லை. இங்கே கணவன் திகைத்துப் போய் விடுகிறான். ஒரு கணம் சிந்திக்கின்றான். மனைவியை உற்றுப் பார்க்கிறான். அவள் முகத்தில் கோபம் தெரியவில்லை. ஆனால் அவள் தன் நிலையில் உறுதியாக இருக்கிறாள் என்பது புரிகிறது. கணவனை அதே நிலையில் விட்டு விட்டு நகர்கிறாள் மனைவி.

அன்று திருந்தியவன் தான் அவன்! அல்ஹம்து லில்லாஹ்! இங்கே இருவரும் வெற்றி பெற்று விடுகிறார்கள் (I win - You also win).

தன் நிலையில் உறுதியுடன் பேச வேண்டிய சமயத்தில் பேச வேண்டிய முறையில் பேசுபவர்கள் - தன்னம்பிக்கை உடையவர்களாகத் திகழ்கிறார்கள். தன் உரிமைகளை யாருக்கும் அவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. மற்றவர்களால் மதிக்கப் படுகின்றார்கள். வாழ்வில் வெற்றியும் பெறுகின்றார்கள்.

இப்படிப்பட்ட பேச்சுத் திறனை ஒவ்வொரு கணவனும் மனைவியும் கற்றுக் கொள்ள வேண்டும். இதனை ஒரே நாளில் ஒருவர் கற்றுக் கொண்டு விட முடியாது! பயிற்சி அவசியம். ஒத்திகை அவசியம்! அதற்குப் பிறகு செயல் படுத்திப் பாருங்கள்! தன்னம்பிக்கை தானாக ஊற்றெடுக்கும்! இந்த அணுகுமுறையில் மட்டும் தான் உங்களுக்கும் வெற்றி! உங்கள் துணைவருக்கும் வெற்றி!

அடிப்படையான தேவைகளை விட்டுக் கொடுக்க இயலாது!

சுன்னத்தான இல்லறம்:

கணவனுக்கு – தான் சுத்தமாக இருப்பது, பொருட்களை சுத்தமாக வைத்திருப்பது, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது, பொருட்களை அழகாக அடுக்கி வைத்திருப்பது, குறைவான பொருட்களுடன் எளிமையாக குடும்பம் நடத்துவது, – இவையெல்லாம் மிகவும் பிடிக்கும். அவர் வளர்ந்த விதம் அப்படி.


ஆனால் மனைவிக்கு அப்படியெல்லாம் இல்லை. அவர் வளர்ந்த விதமே வேறு! செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டவர். வீடு நிறைய பொருட்கள் நிறைந்து காணப்படும். சுத்தம் என்பதனை அவ்வளவாக அங்கே கண்டுகொள்பவர் யாரும் இல்லை. மனைவியின் கல்வியறிவும் சுமார் தான்.

திருமணத்துக்குப் பிறகு – கணவன் செய்ததெல்லாம் – மனைவியிடம் இதைச்செய்! அதைச் செய்யாதே! அதை இங்கே வை! இதனை அங்கே வைக்காதே! – போன்ற அன்புக் கட்டளைகள் தான் அனுதினமும். ஆனால் மனைவியோ அவைகளைக் கண்டுகொள்வதாகக் காணோம்.

மனைவிக்கு ஒரு கெட்ட பழக்கம். இது சமையலறை சம்பந்தப்பட்டது. காய்கறி நறுக்குகிறார் மனைவி; ஆனால் சரியாக அவைகளைக் கழுவுவதில்லை! பாத்திரம் கழுவும் தொட்டி அருகே வைத்து காய்கறிகளை நறுக்கி அப்படியே சமையல் பாத்திரத்துக்கு மாற்றி விடுகிறார்.

“அய்யய்யே! இப்படியா செய்வார்கள்! காய்கறிகளைச் சுத்தம் செய்வதன் அவசியத்தை தொலைக்காட்சியில் நீ பார்த்ததில்லையா? இனி மேல் இப்படி செய்யாதே!”

ஆனால், “எங்கள் வீட்டில் நாங்கள் எல்லாம் இப்படித்தான் சமைப்போம். யாருக்கும் ஒன்றும் ஆனது கிடையாது! சும்மா கிடங்க!” – இது மனைவி!

தவறு எங்கே நடந்தது?

கணவன் தனக்கு – தூய்மை – என்பது மிக அடிப்படையான மிக முக்கியமான ஒரு விஷயம் என்பதைத் தனது துணைவிக்குச் சரிவரப் புரிய வைத்திடவில்லை! அது தான் அவர் செய்த தவறு.

பொதுவாகவே – அடிப்படையான நம்பிக்கைகள் (convictions in life) , அடிப்படையான நற்குணங்கள் (core values), அடிப்படையான தனிப்பட்ட தேவைகள் (basic unique needs) – இவைகளை ஒரு போதும் ஒருவர் விட்டுக் கொடுத்திட இயலாது.

எனவே தேவை: சுயபரிசோதனை! உங்களின் அடிப்படையான நம்பிக்கைகள் என்னென்ன? உங்களின் அடிப்படையான நற்குணங்கள் என்னென்ன? உங்களின் அடிப்படையான தனிப்பட்ட தேவைகள் என்னென்ன? – என்பதைக் குறித்த தெளிவான சுயபரிசோதனை மிக அவசியம்.

அதே நேரத்தில் நாம் மேலே குறிப்பிட்டுக் காட்டிய அடிப்படையான விஷயங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து விஷயங்களிலும் – நமக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை மிக அவசியம்.

கணவன் மனைவியர் இருவருமே – தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதனை திருமணம் ஆன புதிதிலேயே மனம் திறந்து பேசி விடுதல் மிகவும் நல்லது. திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகி விட்டனவா? ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை.

ஓய்வான ஒரு நேரத்தில் இருவரும் அமர்ந்து பேசிக் கொள்ளுங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதைப் புரிய வையுங்கள். உங்களின் அடிப்படையான எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது குறித்து அழகாகப் புரிய வையுங்கள். நீங்கள் ஒரு விஷயத்தை ஏன் அது உங்களுக்கு அடிப்படையானது என்பதை உங்கள் துணையிடம் தெளிவு படுத்துங்கள்!

உங்களால் எதனை விட்டுக் கொடுக்க முடியும், எதனை விட்டுக் கொடுக்க இயலாது என்பவைகளை – தெளிவாகப் புரிய வைத்திடுங்கள்.

அதே போல உங்கள் துணையின் அடிப்படையான எதிர்பார்ப்புகளை நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஒருவருக்கொருவர் தங்களின் அடிப்படைத் தேவைகள் என்னென்ன என்பதனைப் புரிந்து கொண்டதற்குப் பிறகு – உங்கள் துணைவரின் தேவைகளை நீங்கள் மதித்திட வேண்டும். அவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டிட வேண்டும். இதில் விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்பதை உணர்ந்திட வேண்டும்.

கணவன் மனைவி உறவின் பலத்துக்கு மிக முக்கியமானவை எவையெனில் – கணவன் மனைவியராகிய – நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறீர்களா, துணைவரின் அடிப்படைத் தேவைகளை நீங்கள் மதிக்கிறீர்களா, அவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுகிறீர்களா, அதன் மூலம் துணைவரை நீங்கள் கண்ணியப் படுத்துகிறீர்களா – என்பவைதான்!

Wednesday, April 2, 2014

"அந்தப் பணம் என்னுடையது! அதனை இவர் எடுத்து எப்படி செலவு செய்யலாம்?"

சுன்னத்தான இல்லறம்:

இனி கணவன் மனைவியர் கருத்து வேறுபாடுகளைக் கலைவது சம்பந்தமாக கொஞ்சம் எழுதுவோமே!

கணவன்-மனைவி இருவர். என்னதான் எல்லாப் பொருத்தங்களையும் பார்த்துப் பார்த்துத் திருமணம் முடித்தாலும் ஆண் என்பவன் வேறு, பெண் என்பவள் வேறு என்பதால், இருவரும் வளர்ந்து வந்த சூழல்கள் வேறு வேறு என்பதால் இருவரின் ஆளுமையும் வேறு வேறு என்பதால் இல்லற வாழ்வில் கருத்து வேறுபாடுகள் வரத் தான் செய்யும்.


அது ஏன் இப்படி என்று கேட்க வேண்டியதில்லை. அது அப்படித்தான்!

கருத்து வேறுபாடுகள் எந்தெந்த விஷயங்களில் தலையெடுக்கலாம்?

பொருளாதாரம் காரணமாக இருக்கலாம். அல்லது மாமியார்-நாத்தனார் காரணமாக இருக்கலாம். குழந்தை வளர்ப்பு குறித்ததாக இருக்கலாம். இஸ்லாமிய மரபுகளைப் பேணுவதில் இருக்கலாம். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் இருக்கலாம். அது சிறியதாகவும் இருக்கலாம். பெரியதாகவும் இருக்கலாம்.

ஆனால் கருத்து வேறுபாடு தோன்றி விட்டால் அடுத்து கணவன் மனைவியர் என்ன செய்திட வேண்டும். அது குறித்து மனம் திறந்து பேசிட வேண்டும்.

ஆனால், பல கணவன் மனைவியர் அவ்வாறு பேசிடுவதில்லை. மனதுக்குள் போட்டு அடக்கி வைத்திருப்பார்கள். கோபம் வரும். சோகம் தலையெடுக்கும். அநியாயம் இழைக்கப்பட்டதாக, அவமானப்படுத்தப் பட்டதாக, காயப்படுத்தப்பட்டதாக எண்ணுவார்கள். ஆனால் வாயைத் திறக்க மாட்டார்கள்.

இதற்குப் பெயர் தான் ஆங்கிலத்தில் Resentment என்கிறார்கள். இதனை "அடக்கி வைக்கப்பட்ட கோபம்" எனலாம். இது பாட்டிலில் அடைக்கப்பட்ட உணர்வு ஆகும். இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அழுத்தம் கொடுக்கத் தொடங்கும்.

கணவன் மனைவியரிடையே இந்த கோபம் உருவாகி வளர்ந்தால் என்ன விளைவுகளை இது ஏற்படுத்திடும்?

முதலில் தனது கணவனைப் பற்றிய அல்லது மனைவியைப் பற்றிய "உயர்ந்த எண்ணம்" அடி பட்டுப்போகும். நம்பிக்கை குறைந்து விடும். முன்னர் எவ்வாறு தமக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று அவர் எண்ணிக் கொண்டாரோ அதே கோணத்திலேயே அடுத்து நிகழும் அனைத்து சம்பவங்களையும் கற்பனை செய்யத் தொடங்கி விடுவார்.

இங்கே ஒரு கணவன் மனைவி கதையை எடுத்துக் கொள்வோம்.

இருவருக்கும் திருமணம் ஆன போது மனைவியின் நெருங்கிய உறவினர் ஒருவர் திருமண நன்கொடையாக ஒரு தொகையை அந்தப் பெண்ணிடம் கொடுக்கிறார். ஆனால் மனைவியிடம் பணம் இருப்பது தெரிந்த கணவன் அந்தப் பணத்தை மனைவியிடம் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்டு வாங்கி முழுவதையும் செலவு செய்து விடுகிறார்.

அந்தப் பெண்ணுக்குக் கோபமோ கோபம்!

"அந்தப் பணம் என்னுடையது! அதனை இவர் எடுத்து எப்படி செலவு செய்யலாம்?" என்று தனக்குள்ளேயே அடிக்கடிக் கேட்டுக் கொள்கிறார்.

ஆனால், வேறு சில தருணங்களில், "சே! இது ஒரு பெரிய தொகையா? இவர் எனக்கு செய்கின்ற செலவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது ஒரு சாதாரண தொகை தானே! இதற்கு ஏன் போய் நான் இப்படி அலட்டிக் கொள்கிறேன்?" - என்றும் எண்ணிக் கொள்கிறார்.

இந்த சிந்தனை வட்டத்தில் சிக்கிக் கொண்ட அந்தப் பெண்மணிக்கு இது குறித்து கணவனிடம் பேசிட இயலவில்லை!

அடுத்து என்ன நடந்தது?

"நீ ஏன் பகுதி நேர வேலை ஒன்றில் சேர்ந்திடக் கூடாது?" என்று கணவன் ஆலோசனை சொல்கிறார். ஆனால் மனைவி அவரது நோக்கத்தையே சந்தேகிக்கிறார்.

கணவன், மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு மனைவியையும் அழைத்துச் செல்கிறார். போகும்போது சில பரிசுப் பொருட்களையும் வாங்கிச் செல்கிறார். மனைவி இதனையும் சந்தேகிக்கிறார். "எதற்காக இவர் இப்படி ஐஸ் வைக்கிறார்?"

மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே செல்கிறார். மனைவிக்காக செலவுகள் செய்கிறார். "இதுவெல்லாம் வெறும் நடிப்பு" என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறார்.

இவ்வாறு மாதக் கணக்கில் தனது கோபத்தை அடக்கிக் கொண்டிருந்த அவருக்கு ஒரு நாள் அந்த கோபம் திடீரென்று வெடிக்கிறது!

இவ்வாறு மவுனமானதொரு கோபம் ஏற்பட்டு, அது அடக்கப்பட்டு, அதற்கு அழுத்தம் தரப்பட்டு பின்னர் வெடித்திட ஏன் அனுமதித்திட வேண்டும்?

இந்த நிலை ஏன் ஏற்படுகின்றது என்பதை அறிந்து கொண்டால் தான் இந்நிலையிலிருந்து கணவன் மனைவியர் தம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

காரணங்கள்:

தன்னைப் பற்றிய குறைவான சுய மதிப்பீடு (low self esteem)

எதனையும் வெளிப்படையாகப் பேசிடத் தயக்கம் மற்றும் பயம்.

தம்மை ஒரு பலிகடாவாக (victim) கற்பனை செய்து கொள்தல்.

தன்னைப் பாதுகாக்க யாரும் இல்லை என்ற கழிவிரக்க உணர்வு.

இதற்குத் தீர்வு என்ன?

தனது சுய மதிப்பீட்டை உயர்த்திக் கொள்தல்; வல்லோன் அல்லாஹு தஆலாவிடம் உங்கள் நெருக்கத்தை அதிகரித்துக் கொள்ளும்போது - சுய மதிப்பு தானாக உயரும்!

உங்களின் எல்லாவிதமான உணர்வுகளையும் - எப்போதுமே உங்கள் துணைவரிடமே பகிர்ந்து கொள்தல்;

கருத்து வேறுபாடு மிகச் சிறிய விஷயமாக இருந்தால் - அதனைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுதல்;

ஆனால் கருத்து வேறுபாடு ஒரு பெரிய விஷயமாக இருந்தால் அது குறித்து வெளிப்படையாக அதே நேரத்தில் மென்மையாகப் பேசி விடுதல் (open and assertive communication with your spouse).

பொதுவாகவே கணவன் மனைவியர் தங்களுக்குள் "பேசிக் கொள்வது எப்படி?" (communication skills) எனும் கலையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொண்டாக வேண்டும்! கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ள இது மிகவும் அவசியம்!

தேவை: குடும்ப நல ஆலோசகர்கள்!

சுன்னத்தான இல்லறம்:

ஆமாம்! திருமணமான புதிதில் எல்லா ஜோடிகளும் மகிழ்ச்சிக் கடலில் தான் மிதப்பார்கள். தனக்கு ஒரு பொக்கிஷமே கிடைத்து விட்டதாகத் தான் பூரிப்படைந்து விடுவார்கள். (எடை கூட அதிகரிக்கும்!)

ஆனால் இதுவெல்லாம் எவ்வளவு காலத்துக்கு? ஒரு ஆண்டு? அல்லது இரண்டு ஆண்டுகள்? அதே நேரத்தில் வேறு சிலருக்கோ துவக்க கால மகிழ்ச்சியெல்லாம் ஒரு சில மாதங்கள் தான்!


பின்னர் கருத்து வேறுபாடுகள் தலை தூக்கும். ஒருவருடைய குறைகள் மற்றவருக்குத் தெரியத் துவங்கும். இல்லறம் அதற்கே உரித்தான சவால்களை இருவருக்கும் முன் வைத்திடும். பிரச்சனைகள் பூதாகாரமாக உருவெடுப்பதாக எண்ணிக் கொள்வார்கள் இளம் கணவன் மனைவியர்.

கருத்து வேறுபாடுகள் எதற்காகவெல்லாம் ஏற்படும்?

ஒன்றுமில்லாத சிறு விஷயத்திலும் ஏற்படலாம். பெரிய விஷயங்களிலும் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம்.

விவரம் அறியாத அந்த இளம் கணவனும் மனைவியும் செய்வதறியாது தவிப்பார்கள். பிரச்சனைகளை வெளியில் சொல்ல மாட்டார்கள். "எல்லாம் தானாகவே சரியாகி விடும்" என்று நினைப்பார்கள். ஆனால் சரியாகாது!

யாரிடமாவது சொல்லலாமா என்று எண்ணுவார்கள்.

பெரும்பாலான கணவன்மார்கள் யாரிடமும் போய் தங்களின் பிரச்சனைக்கு தீர்வு கேட்க மாட்டார்கள். வெகு சிலர் தங்களின் (சற்று விபரமுள்ள) தந்தையிடம் போய் பேசுவார்கள். இன்னும் சிலர் மார்க்க அறிஞர்களின் உதவியை நாடுவார்கள்.

மனைவிமார்கள் தங்கள் தாயிடமோ, சகோதரியிடமோ போய் அடைக்கலம் தேடுவார்கள்.

பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால் - அல்ஹம்து லில்லாஹ்! ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பிரச்சனைகள் தீர்வதில்லை!

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கணவன் மனைவியர் எவ்வாறு இல்லறத்தை வழிநடத்துகிறார்கள்?

ஒன்று: ஒருவர் மீது ஒருவர் கோபத்தை அள்ளிக் கொட்டுகிறார்கள். (emotional outburst)

அல்லது: கோபத்தை அடக்கிக் கொள்கிறார்கள். (resentment)

அல்லது: ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக் கொள்கிறார்கள் (blaming). இது அனுதினமும் தொடர்கிறது.

அல்லது: "மவுனமே" சிறந்தது என்று வாயைப் பொத்திக் கொண்டு (stone walling) "தேமே" என்று வாழ்ந்து விட்டுப் போய் விடலாம் என்று முடிவு கட்டி விடுகின்றார்கள்.

ஆனால் இவை அனைத்துமே தீர்வுகள் அல்ல! இது அவர்களுக்குத் தெரிவதும் இல்லை!

இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து கணவன் - மனைவியரைக் காப்பாற்றுவதற்காக உண்டாக்கப்பட்டதே - marital counselling - அதாவது "குடும்ப நல ஆலோசனை".

இது குறித்த விழிப்புணர்ச்சி இன்னும் நமது மக்களுக்குச் சென்றடையவில்லை!

குடும்ப நல ஆலோசனைக்கு என்ன தகுதிகள் தேவை?

ஒன்று: ஏழாண்டு அல்லது ஐந்தாண்டு மதரஸா மார்க்கக் கல்வி அல்லது இஸ்லாமியக் கல்வியில் ஒரு முதுகலைப்பட்டம் (M.A. Islamic Studies).

இரண்டு: உளவியலில் ஒரு முதுகலைப்பட்டம். (M.Sc., Psychology / Clinical Psychology / Counseling Psychology)

இந்த இரண்டு தகுதிகளையும் பெற்றுக் கொண்டு கணவன் மனைவியருக்கு ஆலோசனை சொல்லக் கூடியவர்கள் நமக்கு நூற்றுக் கணக்கில் தேவைப்படும் காலம் இது!

எனினும் தகுதிமிக்க ஆலோசகர்கள் நமக்குக் கிடைக்கும் வரை நாம் செய்திட வேண்டியதெல்லாம் -

ஒன்று: இது குறித்த விழிப்புணர்ச்சியை மக்களிடத்தில் ஏற்படுத்துதல்

இரண்டு: குடும்ப உறவுகளை மேம்படுத்துவது குறித்த இஸ்லாமிய நூல்களை வாங்கிப் படித்தல், கணவன் மனைவியர் தங்களது கருத்து வேறுபாடுகளை அழகாகத் தீர்த்துக் கொண்டு மன நிம்மதியுடன் மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி என்று வழிகாட்டுகின்ற இஸ்லாமிய - உளவியல் கட்டுரைகளை (ஆங்கிலத்திலும் மற்றும் தமிழிலும்) இணைய தளங்களில் இருந்து படித்து கருத்துக்களை சேகரித்தல், அக்கருத்துக்களை முன் வைத்து உறவினர்கள் வட்டத்திலும், நண்பர்கள் வட்டத்திலும் கலந்துரையாடுதல்;

மூன்று: குடும்ப உறவுகளை மேம்படுத்திட வழிகாட்டும் பயிலரங்கங்களை கணவன் மனைவியருக்கு நடத்துதல்.

இளம் கணவன் மனைவியர் விழித்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்!

நீங்கள் வலைதளங்களில் மூழ்கிக் கிடப்பவரா?

சுன்னத்தான இல்லறம்: 

இன்று மேற்குலகில் ஒரு விஷயம் மிக ஆழமாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கின்றது.

அந்த விஷயம் என்ன தெரியுமா?

அது தான் DISTRACTION எனும் கவனச் சிதறல்!

இது எதனால் ஏற்படுகின்றது?

நமது கம்ப்யூட்டர் மற்றும் அது வழங்கும் இணைய தள வசதிகளால் ஒரு விதமான கவனச் சிதறலுக்கு நாம் ஆளாகி இருக்கின்றோம் என்கிறார்கள் வல்லுனர்கள்.


கம்ப்யூட்டரும், இணைய தள வசதியும் நமக்கு வழங்கி இருக்கின்ற வசதிகள் எதனையும் நாம் மறுத்திடவில்லை!

ஆனால் அதே நேரத்தில் – எந்த ஒரு பயனும் இல்லாமல் எந்த ஒரு குறிப்பிட்ட வேலைக்கு என்றில்லாமல் கம்ப்யூட்டருக்கு முன்னால் அமர்ந்து கொண்டு (இப்போது லேப்டாப், ஐபாட், ஐஃபோன் – இவையும் அடங்கும்) மணிக்கணக்கில் – உணர்வற்றுப் போய் – நேரத்தை நம்மில் பலர் வீணடித்துக் கொண்டிருக்கின்றோமே – இது ஏற்படுத்தியிருக்கும் நவீன நோய் தான் DISTRACTION – கவனச் சிதறல் என்கிறார்கள்.

அதனை நாம் நோய் என்று சொல்வதற்குக் காரணம் இருக்கின்றது.

சற்றே கவனமாக இதனைப் படியுங்கள்:

நமது மூளை இருக்கின்றதே – அது ஒரு அற்புதமான மனித உறுப்பு. அதன் அற்புதங்களில் இரண்டை மட்டும் இங்கே பார்ப்போம்.

ஒன்று:

மனிதனின் இதயமும் மனிதனின் மூளையும் – அவைகளின் இயல்பிலேயே மற்றவர்களுடன் நல்லுறவு வைத்துக் கொள்ளும் தன்மையைப் பெற்றிருக்கின்றன! அப்படித்தான் அவைகளை வடிவமைத்திருக்கின்றான் வல்லோன் அல்லாஹ்! ”we are wired to connect with others” என்கிறது neuroscience. அதாவது மூளை நரம்பியல்.

இரண்டு:

மனித மூளை – தனது மூளை நரம்புகளை (neurons) வைத்து பல நுணுக்கமான இணைப்புகளைத் தனக்குள் ஏற்படுத்திக் கொள்கின்றது.

சற்றே புரியுமாறு சொல்வோம். வீடு ஒன்றைக் கட்டுகின்றோம். அதில் மின் இணைப்புகளை நம் வசதிக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்கிறோம். பின்னர் அந்த இணைப்புகளின் அமைப்பினை வைத்தே நமது வசதிக்கேற்றவாறு மின்சாரத்தை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம். அது போலத்தான் நமது மூளை நரம்புகள் தமக்குள்ளே ஏற்படுத்திக் கொள்ளும் இணைப்புகளும்.

அதே நேரத்தில் – மனித மூளை – அதனை நாம் பயன்படுத்தும் விதத்துக்குத் தகுந்தாற்போல் தன்னுடைய நரம்பியல் இணைப்புகளை நெகிழ்ச்சியுடன் (neural plasticity) மாற்றிக் கொள்ளும் தன்மையும் அதற்கு உண்டு!

இப்போது வலைதளங்களில் அளவுக்கு அதிகமாகத் தங்களின் கவனத்தையும் நேரத்தையும் செலவழிப்பவர்களின் நிலை என்ன என்று பார்ப்போம்.

தங்கள் முழுக் கவனத்தையும் வலையிலே தொலைத்து விட்டு நிற்கும் ஒரு மனிதனின் மூளை – தனது நரம்பியல் இணைப்புகளையே மாற்றிக் கொள்கிறதாம்! அதுவும் அதி விரைவாக! Our brain maps are rapidly changing!

இதன் தவிர்க்க முடியாத மாபெரும் விளைவு என்ன தெரியுமா?

செய்கின்ற ஒன்றையே திரும்பவும் திரும்பவும் செய்திடத் தூண்டுகின்ற ஒரு கெட்ட பழக்கம் (compulsion)

இயல்பான மனித வாழ்க்கையிலிருந்து திசை திரும்பி விடுதல் (distraction from mainstream life)

மாய வலைக்கு வெளியே, மற்றவர்களுடன் நாம் நேருக்கு நேர் நல்ல முறையில் பழகுவதற்குத் தேவைப்படும் அழகிய திறமைகள் (relationship skills) எல்லாம் அடிபட்டுப் போய்விடுதல்!

எந்த ஒன்றையும் குறித்து தெளிவாக சிந்திக்க இயலாத குழப்பமான மனநிலை (scattered thinking)

முடிவெடுக்கும் திறனில் தெளிவற்ற நிலை (difficulties in making good decisions)

ஆம்! நமக்கு பல்வேறு “வசதிகளை” அள்ளித்தந்த அதே வலை தான் இப்படிப்பட்ட பின் விளைவுகளையும் சேர்த்தே நமக்கு வழங்கியிருக்கின்றது!

அதீதமான மின்னணுத் தொடர்பு சாதனங்களைச் சார்ந்து தங்களை அதற்கு அடிமைப்படுத்திக் கொள்பவர்கள் – மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தங்களின் உறவுகளை செம்மைப்படுத்திக் கொள்ளும் திறனை இழந்து கொண்டிருக்கின்றார்கள் – அவர்களை அறியாமலேயே!

இதன் பாதிப்பு குடும்பத்துக்குள்ளேயே எனில் கணவன் மனைவி உறவு என்னவாகும்?

சான்று ஒன்றுடன் விளக்குவோம்.

சற்று கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு கணவன் - அவர் எப்போது பார்த்தாலும் வலைதளத்துக்கு உள்ளேயே வாழ்ந்து கொண்டிருப்பவர் என்று வைத்துக் கொள்வோம்.

அவரது மனைவி ஏதோ ஒன்றை (ஏங்க! வரும்போது குழந்தைக்கு “இது” வாங்கிட்டு வாங்க!) வாங்கி வரச் சொல்லியிருப்பார். அது “எது” என்று அவர் நினைவில் பதிந்தே இருக்காது! அவர் "தேமே" என்று வந்து நிற்பார் வெறுங்கையுடன். வருமே கோபம் அவரது மனைவிக்கு!

அது போலவே - குழந்தைகளை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்து விடுங்கள் என்று சொல்வார் மனைவி. OK என்று மனைவியிடம் போனில் சொல்வார் கணவர். ஆனால் கவனம் இருந்திருக்காது. வீட்டுக்கு வந்து சேர்வார். குழந்தைகளின் நிலைமை?

இது ஒரு சிறிய“வாக்குறுதி” (promise) தான்! இதனை கணவன் மறந்து விடும்போது கணவனின் சொற்களுக்கு என்ன மதிப்பு தருவாள் மனைவி? தன் மறதியை கணவன் நியாயப்படுத்தலாம். ஆனால் கணவன் தன் மனைவியின் “நம்பிக்கையை” (trust –அமானத்) இழந்து விடுவார்!

நாம் சொன்ன உதாரணங்கள் நமக்குச் சாதரணமாகத் தோன்றலாம். அடிப்படையான விஷயத்தையே எடுத்துக் கொள்வோமே. கணவன் மனைவி பாலியலின் நிலைமை (sexual intimacy) என்னவாகும்? அடி வாங்கியிருக்கின்றது என்பது தான் அதிர்ச்சித் தகவல்! ஏனெனில் தாம்பத்திய உறவுக்கும் கூட கவனக் குவிப்பு மிக மிக அவசியமாம்!

இவ்வளவு விளைவுகளுக்கும் அடிப்படைக் காரணம் வலை உலகம் நமக்களித்த distraction தான்!

சகோதரர்களைக் கேட்டுக் கொள்வது:

நீங்கள் வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கின்றீர்களா?

உங்கள் மனைவி உங்களுடன் அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபடுகின்றாரா?

உங்களுடைய தாம்பத்திய வாழ்வில் தொய்வு ஏற்பட்டிருக்கின்றதா?

இவை எல்லாவற்றுக்கும் உங்கள் பதில் “ஆம்!” எனில் உங்களுக்கு எமது ஆலோசனைகள்:

வலை உலகத்தை விட்டு சற்றே வெளியே வாருங்கள்!

மனித உறவுகளை பலப்படுத்திக் கொள்ளுங்கள்! குறிப்பாக குடும்ப உறவுகளை!

மனைவியுடனும், குழந்தைகளுடனும் சற்று அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள்!

நபிமொழி ஒன்றைக் கொண்டு நிறைவு செய்வோம்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘விடைபெறும் ஹஜ்’ஜின்போது ஆற்றிய பேருரையில், “பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடந்துகொள்ளுங்கள். அல்லாஹ்விடம் உடன்படிக்கை செய்தே அவர்களைக் கரம் பிடித்துள்ளீர்கள்; அல்லாஹ்வின் ஆணையின் பேரிலேயே அவர்களின் கற்புக்கு உரிமை பெற்றுள்ளீர்கள்” என்று கூறினார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)

Tuesday, April 1, 2014

முகத்தைத் திருப்பிக் கொள்ளாதீர்கள்!

சுன்னத்தான இல்லறம்: 

இங்கே ஒரு மனைவி:

“ஏங்க! இன்றைக்கு மாலை சற்றே காலாற கடற்கரைப் பக்கமாக (ஜோடியாகத் தான்!) நடந்து போய் வரலாம்; வருகிறீர்களா?”

கணவனுக்கு இதில் சற்றும் ஆர்வம் இல்லை. பதில் எதுவும் சொல்லாமல் பேச்சைத் திசை திருப்பி விடுகிறான். அமைதியாக மனதுக்குள் – “இது ஒன்னு தான் பாக்கி!” – என்று சொல்லிக் கொண்டு – “ஆமா! இன்னைக்கு உங்க அண்ணன் வந்திருந்தாரில்ல; என்ன சொன்னார்?”


மனைவிக்கு இது எப்படி இருக்கும்?

மனைவி கணவனோடு சேர்ந்து நடக்க மிகவும் ஆசைப் படுகிறார். இது உணர்வு பூர்வமான ஒரு அழைப்பு! ஆனால் முகத்தைத் திருப்பிக் கொள்கிறான் கணவன்.

இங்கே – இந்தக் கணவன் சொல்லாமல் சொல்கின்ற செய்தி என்ன?

- உன் ஆசைகளை நிறைவேற்ற எனக்கு நேரம் இல்லை!
- அதற்கு எனக்கு அவசியமும் இல்லை!
- எனக்கு நீ முக்கியமில்லை!
- நீ என்ன நினைப்பாய் என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை!
- என்னை விட்டு விடு!

இது எதனை உணர்த்துகிறது என்றால் – கணவன் – மனைவி உறவில் "நட்பு" (companionship) என்பது அறவே இல்லை என்பதைத் தான்!

மாறாக – முகம் கொடுத்துப் பேசும் கணவன் என்ன பதில் தருவான் மனைவிக்கு?

"நல்ல ஐடியா! நானும் தான் நினைத்துக் கொண்டிருந்தேன்! நான்கு மணிக்கெல்லாம் தயாராக இரு ஹனீ! இரவு உணவு தயாரிக்க வேண்டாம்; அப்படியே வெளியிலேயே சாப்பிட்டு விட்டு வரலாம்; ரொம்ப நாளாச்சு இல்ல?"

இந்த பதில் எதனை உணர்த்துகிறது? இதில் என்ன செய்தி இருக்கின்றது?

கணவன் மனைவி உறவும் நெருக்கமும் மிகச் சிறப்பாக இருக்கின்றது என்பதைத் தானே!

- நீ சொல்வதை நான் கேட்கிறேன் – கண்ணே!

- உன்னுடைய தேவைகளை நான் நன்றாகப் புரிந்து வைத்திருக்கின்றேன்!

- உனது விருப்பம் தான் எனது விருப்பமும்!

- நான் எப்போதுமே உன் பக்கம் தான்!

- உன் விருப்பத்தை நிறைவேற்றுதே என் மகத்தான ஆசை!

- உன் விருப்பத்தை நிறைவேற்றுவதை விட எனக்கு இப்போது வேறு எந்த வேலையும் முக்கியம் இல்லை!

மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கணவன் முகம் கொடுக்கும் போது – மனைவிக்கு கணவன் மீது ஏற்படுவது அசைக்க முடியாத நம்பிக்கையும் (trust), பிரிக்க முடியாத நெருங்கிய நட்பும் (intimate friendship)!

அது போலவே தான் கணவனின் உணர்வுகளுக்கு மனைவி முகம் கொடுக்கும்போது அதே நம்பிக்கையும் நட்பும் கணவனுக்கும் ஏற்படுவது உறுதி!

கணவனின் அழைப்புக்கு மனைவியோ, மனைவியின் அழைப்புக்குக் கணவனோ – முகம் திருப்பிக் கொள்ளும்போது – ஒருவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை குலைகிறது! நெருக்கம் குறைகிறது!

இது ஏதோ "நேரமில்லாப்" பிரச்னை என்று எடுத்துக் கொண்டு விடக் கூடாது! அப்படி சில சமயங்களில் நேரம் ஒதுக்க முடியவில்லை என்றால் கூட கணவன் அது குறித்து வெளிப்படையாகப் பேசி விடலாம் தானே!

"ஸாரிம்மா! இன்னைக்கு வேண்டாமே! வியாழன் மாலையில் வைத்துக் கொள்ளலாமே!" - என்றால் மனைவி உங்களைப் புரிந்து கொள்ளாமலா போய் விடுவார்?

பின் வரும் நபி மொழிகள் குறித்து ஆழமாக சிந்தியுங்கள்:

அன்னை ஆயிஷா அவர்கள் சொல்கிறார்கள்: ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, ”நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?” எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) ”அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். நான் பார்த்து சலித்த போது, ”உனக்கு போதுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ”அப்படியானால் (உள்ளே) போ!” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ 950

நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல் துண்டால் மறைத்துக் கொண்டிருக்க பள்ளிவாசலில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக சடைந்து விடும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகள் மீது பேராவல் கொண்ட இளம் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்! அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ 5236

நாம் கேட்பது என்னவென்றால் – நபியவர்களை விட நாம் ஒன்றும் “பிஸி”யானவர்கள் அல்லவே?