Thursday, March 20, 2014

அன்னை பாத்திமா (ரலி) வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?

சுன்னத்தான இல்லறம்:

அன்னை பாத்திமா (ரலி) வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?

பாத்திமா (ரலி) அவர்கள் எப்பொழுதும் பொறுமையுடையவராகவும், படைத்தவனுக்கு நன்றியுடைய நல்லடியாராகவும் வாழ்ந்து காட்டினார்கள். எத்தகைய கஷ்டமான சூழ்நிலையிலும் கூட எந்த முனுமுனுப்பும் காட்டாதவர்களாக இருந்தார்கள். இந்த உலகமும், அதன் அலங்காரங்களும் எந்த வகையிலும் அவரது வாழ்வை திசை மாற்றிடவில்லை.

ஒரு தடவை – அலீ அவர்கள் மனைவி பாத்திமா அவர்களைப் பார்த்து, “ஏன் பாத்திமா? உன் முகமெல்லாம் மஞ்சனித்து இருக்கின்றது? -என்று கேட்டார்களாம்.

“நான் சாப்பிட்டு மூன்று நாட்களாகி விட்டன!” – என்றார்கள் அன்னை பாத்திமா அவர்கள்.

“ஏன், என்னிடம் இதனைச் சொல்லவில்லை? நான் ஏதாவது உணவுக்கு ஏற்பாடு செய்திருப்பேனே!”

“அலீ அவர்களே! நீங்கள் கேட்டதனால் சொல்கிறேன்; நம் திருமணத்தின் போது – என் தந்தை எனக்கு உபதேசம் ஒன்றைச் செய்திருந்தார்கள். அது என்ன தெரியுமா? “பாத்திமா! அலீயிடம் எதனையும் கேட்காதே! கொடுத்தால் மட்டும் வாங்கிக் கொள்!” – என்பது தான் அந்த உபதேசம்!

இதுவே சுன்னத்தான இல்லறத்தின் மிக முக்கியமானதொரு இலக்கணம்!

மனைவியின் சிறப்பியல்புகளைக் கொண்டாடுங்கள்!

சுன்னத்தான இல்லறம்: 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்கள்:

”தரீத் என்னும் உணவு மற்ற உணவுகளை விட சிறப்பாக இருப்பது போன்று மற்ற பெண்களைவிட ஆயிஷா(ரலி) அவர்கள் சிறப்பானவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” (திர்மிதி)

அண்ணலார் (ஸல்) அவர்களின் இந்த வழிமுறையை நாம் பின்பற்றுவது எப்படி?


உங்கள் மனைவியின் “சிறப்பியல்புகளை இன்றே பட்டியல் போடத் துவங்கி விடுன்கள்!

உங்கள் மனைவியின் தனித்தன்மைகள் என்னென்ன?

ஒவ்வொரு பெண்ணும் ஒரு பொக்கிஷம் தான்! பல அற்புதங்களைத் தனக்குள் புதைத்து வைத்திருக்கும் புதையல் தான்!

அறிவு சார்ந்த விஷயங்களில் - உங்கள் மனைவியின் தனித்தன்மை என்ன? அது போலவே ஆன்மிக விஷயங்களில் – உங்கள் மனைவியின் தனித்தன்மை என்னென்ன? அன்பு செலுத்துதல், பாசம் காட்டுதல், இரக்கப்படுதல் போன்ற உணர்வு சார்ந்த விஷயங்களில் உங்கள் மனைவி எப்படி? என்னென்ன நற்குணங்கள் உங்கள் மனைவியிடத்தில் குடிகொண்டிருக்கின்றன?

இவை அனைத்தையும் ஒரு சேரப் பெற்றிருக்கின்ற ஒரு பெண்ணை – “எனக்கே எனக்காக!” – என்று வல்லோன் அல்லாஹு வழங்கியிருக்கின்றான் என்று எண்ணும்போது – இரண்டு விஷயங்கள் ஏற்படும்!

ஒன்று: அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் உணர்வு!

இரண்டு: உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் அற்புதமான நெருக்கம் ஒன்று ஏற்பட்டு விடும்! அதுவும் இயல்பாகவே!

இவ்வாறு உங்கள் மனைவியின் “சிறப்பியல்புகளை” அனு தினமும் உங்கள் பேச்சின் மூலமாகவும், செயல்பாடுகள் மூலமாகவும் – கொண்டாடுங்கள்! கொண்டாடுங்கள்! கொண்டாடிக் கொண்டே இருங்கள்!

இந்தக் கொண்டாட்டத்துக்கு நடுவிலே இயல்பாக - ஏற்படுகின்ற உடல் ரீதியான நெருக்கம் இருக்கின்றதே – அது –கணவன் மனைவி பாலுறவை அற்புதமான அனுபவமாக ஆக்கிக் காட்டி விடும்!

ஆனால் அதற்கு நேர் மாற்றமாக – மனைவியின் – குறைகளையே பட்டியல் போட்டுக் கொண்டிருந்தால் – கணவன் மனைவி நெருங்கி வாழவே முடியாது! உடல் நெருக்கம் கூட – சடங்காகிப் போய்விடும்!

அது போலவே மனைவியர்களும் தங்கள் கணவன்மார்களின் சிறப்பியல்புகளைப் பட்டியல் போடுங்கள்! அவைகளை சொல்லாலும் செயலாலும் கொண்டாடிக் கொண்டே இருங்கள்! கணவனின் நெருக்கத்தை உணர்வு பூர்வமாக அனுபவிக்கத் தவறி விடாதீர்கள்!

இது நுட்பம் நிறைந்த ஒரு சுன்னத் ஆகும்!

Saturday, March 15, 2014

கவிதை ஒன்று எழுதத் துவங்குங்கள்! உங்கள் கணவருக்காக!!

சுன்னத்தான இல்லறம்:

நாம் அடிக்கடி கேட்கின்ற துஆக்களும் ஒன்று தான் இது:

“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!” (குர் ஆன் 25: 74)

இங்கே கண்களுக்குக் குளிர்ச்சி –என்பதன் பொருளை சற்றே ஆழமாகப் பார்ப்போம்:

நபியவர்கள் மக்காவிலே தோன்றுவதற்கு முன்னர் – அரபுக்களிடம் ஒரு பழக்கம் இருந்ததாம். யாரையாவது அவர்கள் கடுமையாகத் திட்ட வேண்டும் என்றால் -   அத்ஃகனல்லாஹு ஐனஹு (adkhanallahu ‘ainahu) என்று திட்டுவார்களாம்.

இதனை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்றால் அவன் கண்கள் புகையை வெளிப்படுத்தட்டும் என்று திட்டுவதாக சொல்லலாம். அதாவது அவன் கண்கள் சோகக் கண்ணீர் சொரியட்டும் என்று திட்டுவதாக பொருளாம். அப்படியானால் இதற்கு நேர் எதிர்ப்பதம் தான் “குர்ரத ஐன்!” அதாவது  உன் கண்கள் ஆனந்தக் கண்ணீரை சொரியட்டும் (tears of joy)!    

“குர்ரத ஐன்” – என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு. அந்தக் கால அரபுக்கள் - பாலைவனத்தில் பயணிக்கும்போது மணல் புயல் வீசினால் தங்களைக் காத்துக் கொள்ள ஏதாவது குகை போன்ற ஒதுங்குமிடம் கிடைத்து விட்டால்  - குர்ரத ஐனைய! “qurrata ‘ainayya” – என்பார்களாம். அதாவது என் கண்கள் குளிர்ந்து விட்டது என்று பொருள்!

இந்தப் பின்னணியில் நாம் மேலே சுட்டிக்காட்டிய துஆவை எடுத்துக் கொண்டோம் என்றால் – கண்களுக்குக் குளிர்ச்சி என்பது எதனைக் குறிக்கின்றது?

கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ, குழந்தைகள் பெற்றோர்களையோ அல்லது பெற்றோர்கள் குழந்தைகளையோ பார்க்கும்போது என்ன கிடைக்க வேண்டும்?

ஒன்று: அவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வெளிப்பட வேண்டுமே தவிர சோகக் கண்ணீர் வந்து விடக்கூடாது.

இரண்டு: குழந்தைகளையும் துணைவர் அல்லது துணைவியையும் கண்ட மாத்திரத்திலேயே – தங்களுக்கு “அடைக்கலம்” கிடைத்து விட்டது போன்று அவர்கள் உணர வேண்டும்!

இதனை – இன்றைய சூழலோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். கணவன் பொருள் ஈட்டவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெளியே செல்கிறார். வெளி உலகம் என்பது “பாலைவனப் புயல்” போன்றது எனில் அவர் வீட்டுக்குத் திரும்பும் போது – தனக்கு அடைக்கலம் தரும் இல்லத்துக்கு வந்து விட்டதாக  அவர் உணர வேண்டும். இதனை மனைவியர் புரிந்து கொள்வது நலம்.

அது போலவே - மனைவியர் வீட்டிலிருக்கும்போது - சில உறவுகள் - வீட்டிலேயே ஒரு பாலைவனப் புயலைக் கிளப்பி விட்டுப் போயிருப்பார்கள். மனைவி சோர்ந்து போயிருப்பார். கணவர் வரட்டும் என்று காத்திருப்பார். கணவனைக் கண்ட மாத்திரத்திலேயே - தனது உணர்வுகளைக் கொட்டித் தீர்க்க முன் வருவார். கணவன் அடைக்கலம் தந்து அரவணைத்துக் கொள்ள வேண்டும் மனைவியை!

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டுக்கு வரும்போது ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு கவிதை வாசிப்பதுண்டாம்! கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?

அந்தக் கவிதையின் வரிகளில் சில இதோ..

அல்லாஹ் வானத்தில் ஒரு சூரியனைப் படைத்திருக்கிறான்!
அல்லாஹ் எனக்கென்றே ஒரு சூரியனையும் தந்திருக்கின்றான்!

எனது சூரியன் வானத்தில் உள்ள சூரியனை விட மிகச் சிறந்தது!

வானத்துச் சூரியன் ஃபஜ்ருக்கு பின்னால் உதிக்கும்!
ஆனால் எனது சூரியனோ இஷாவுக்குப் பின்னால் தான் என் பக்கமாக  உதிக்கும்!!

எப்படி இருக்கின்றது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் கவிதை வரிகள்?

இப்படிக் கவிதை பாடி கணவனை வரவேற்றால் – எந்தக் கணவனுக்குத்தான் தன் மனைவி “கண் குளிர்ச்சியாகத்” தெரிய மாட்டாள்?  

கணவனை வரவேற்க கவிதை பாடுவதும் ஒரு சுன்னத் தான்!

எழுதத் துவங்குங்கள் – உங்கள் கவிதைகளை – உங்கள் கணவருக்காக!

பின் குறிப்பு:

ஆனால் நமது நிலை என்னவெனில் நமது வீடுகள் – “பாலைவனப் புயலால்” சூழப்பட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது! கணவனோ அடைக்கலம் தேடி வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்! அல்லாஹ் – இப்படிப்பட்ட நிலையிலிருந்து நம்மைக் காப்பானாக!

Friday, March 7, 2014

திருமணத்துக்கு முன் - வழிகாட்டும் ஆலோசனை!

திருமணத்துக்கு முன் - வழிகாட்டும் ஆலோசனை!
(Premarital Counselling)

திருமணம் ஆகாத ஒரு இருபது மாணவிகளுக்கு திருமணத்துக்கு முன் - வழிகாட்டும் ஆலோசனை (Premarital Counselling) கடந்த 13 - 05 - 2012 அன்று வழங்கப்பட்டது.

அதில் கலந்து கொண்ட மாணவிகள், வழங்கப்பட்ட ஆலோசனைகள் பற்றி தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து தந்தார்கள். அவற்றில் சில் இதோ:

நீங்கள் சொன்ன அனைத்து ஆலோசனைகளும் பயன் உள்ளதாக இருந்தன. எங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்தீர்கள். எங்கள் வாழ்க்கையில் எதையும் யோசித்து செயல் படுத்தும் முறையை நீங்கள் சொன்னீர்கள். இன்ஷா அல்லாஹ், நாங்கள் அவை அனைத்தையும் கடைபிடிப்போம். - ஒரு மாணவி  


இந்தப் பருவத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் எல்லாரும் சொல்கிற மாதிரி தான் நீங்களும் சொல்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால் புது மாதிரியாக இருந்தது உங்கள் ஆலோசனை.    - ஒரு மாணவி

எனக்கு கல்யாணம் அப்படின்னா ரொம்ப பயமா இருந்தது. ஆனா இப்போ ஓரளவுக்கு அந்த பயம் போயிடுச்சு. - ஒரு மாணவி

இந்த தலைப்பை எப்படி இஸ்லாத்தோடு இணைத்து சொல்வீர்கள் (?) என்று நினைத்தேன். மாஷா அல்லாஹ்! நினைத்ததை விட அருமையாக வகுப்பு எடுத்தீர்கள். - ஒரு மாணவி

கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தணும் என்பதை அருமையாகச் சொன்னீர்கள். - ஒரு மாணவி

இந்த வயதில் எங்களுக்கு அவசியமான ஆலோசனைகளையும், காதல் (love) பற்றியும், இந்த வயசில் நாங்கள் தவறு செய்யாமல் இருக்க அதற்கு அல்லாஹ் கூறியுள்ள வழிகளையும் சரியான நேரத்தில் எங்களுக்கு தந்ததற்கு நன்றி. - ஒரு மாணவி

இந்த தலைப்பில் நீங்கள் வெளிப்படையாக பேசியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. - ஒரு மாணவி

இந்த வகுப்பில் நான் அதிகமான விஷயங்களை புரிந்து கொண்டேன். வாழ்க்கையின் முக்கியமான பகுதியை பற்றி தெரிந்து கொண்டேன். என்னுடைய குழப்பமான கேள்விக்கு தீர்வு கிடைத்தது. மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. யாரும் இதைப்பற்றி என்னிடம் சொன்னது இல்லை. முதன் முதலாக நீங்கள் நடத்தியது எனக்கு பயனாக இருந்தது. - ஒரு மாணவி

Monday, March 3, 2014

சகீனா வழங்கும் பயிலரங்கங்கள்

1 மனைவி ஒரு பொக்கிஷம்! (Wife is a Treasure!)

இது இல்லறத்தை இனிமையாக்கிட விரும்பும் கணவன் – மனைவி இருவருக்கும் ஒரு சேரப் பயிற்சி அளித்திடும் பயிலரங்கம். நவீன ஆய்வுகளின் உதவியோடு, இறை வழிகாட்டுதலின் அடிப்படையில் அளிக்கப்படும் பயிற்சி இது!

2.  குழந்தைகள் சுரங்கங்கள்! (Children are Mines!) 

குழந்தை வளர்ப்பு ஒரு பெரிய பொறுப்பு. இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு பெரிய சவால்! இப்பொறுப்பை செவ்வனே நிறைவேற்றிட பெற்றோர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பயிற்சியே – 'குழந்தைகள் சுரங்கங்கள்!'   பயிலரங்கம்.

3. உனக்குள் ஒரு சுரங்கம்! (You are a Mine! Explore Yourself!) 

ஒவ்வொரு தனி மனிதனின் எல்லாவிதமான திறமைகளையும் ஆற்றல்களையும் வளங்களையும் ஒரு சேர வளர்த்திடுவற்காக இஸ்லாமிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட மனித வள மேம்பாட்டுப் பயிற்சியே (Human Resource Development) 'உனக்குள் ஒரு சுரங்கம்!'

4. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? (Emotional Wisdom) 

உணர்ச்சிகளால் மனிதன்  அலைக்கழிக்கப்படும்போது பொறுமையுடனும், சற்று நிதானத்துடனும் சிந்தித்து செயல் பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் பயிலரங்கமே  'உணர்ச்சிகளைக் கையாள்வது எப்படி?

5. திருமணத்துக்கு முன் வழிகாட்டும் ஆலோசனை! (Premarital Counselling) 

தங்களின் திருமண வாழ்வு குறித்து மிகச் சரியான முடிவெடுத்திட – இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் அவசியத் தேவை – திருமணத்துக்கு முன் வழிகாட்டும் ஆலோசனை! கேள்வி-பதில்,கலந்துரையாடல்களுடன் இது ஒரு புதுமையான பயிலரங்கம்!

6. வாழ்க்கை என்பது இவ்வளவு தானா? (Conviction in Faith)

சிந்தனையைத் தூண்டும் கேள்வி பதில்களுடன் நமது நம்பிக்கைகளை புதுப்பித்துக் கொள்ளும் ஒரு ஆய்வு அரங்கமே -  'வாழ்க்கை என்பது இவ்வளவு தானா?' பயிலரங்கம்.

7. உண்மையான வெற்றி – தொழுகை மூலமே! (Success Through Salat) 

தொழுகைக்கும் வெற்றிக்கும் என்ன உறவு? வெற்றி என்பது இவ்வுலகிலா? மறு உலகிலா? அல்லது இரண்டு உலகிலுமா? – போன்ற ஆழமான கேள்விகளுக்கு விடை தேடிடும் முயற்சியே – 'உண்மையான வெற்றி – தொழுகை மூலமே!' பயிலரங்கம்!

நமது பயிலரங்கங்கள் அனைத்தும் – முற்றிலும் புதுமையானவை!

நவீன ஆய்வுகளின் உதவியோடு,இறை வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைக்கப்பட்டவை!

சிந்தனையைத் தூண்டும் கேள்வி-பதில்கள், அழகிய விவாதங்கள், மற்றும் கலந்துரையாடல்களுடன் அளிக்கப்படும்  பயிற்சிகள் இவை!

மேலும் விவரங்களுக்கு:  

sakeenatun@gmail.com

கணவன் மனைவியரே! வாங்க பேசலாம்!!

இல்லற வாழ்வில் மகிழ்ச்சியே இல்லையா?

குழந்தை பிறந்த பிறகு குறைந்து விட்டதா இல்லற சுகம்?

நச்சரித்துக் கொண்டே இருக்கிறாள் என் மனைவி என்ற புலம்பலா?

இவளை இனி திருத்தவே முடியாது என்றா முடிவு செய்து விட்டீர்கள்?

நான் பேசுவதை இவர் காது கொடுத்துக் கேட்பதே இல்லை என்ற கவலையா?

சின்ன பிரச்னைகள் கூட பெரிதாக வெடித்து விடுகிறதா?

ஆளுக்கொரு பக்கமாகத் திரும்பிப் படுத்துக் கொள்கிறீர்களா?

மண விலக்கு செய்து விட்டால் என்ன? - என்ற நினைப்பு அடிக்கடி வருகின்றதா?

தலாக் என்று முடிவெடுத்து விட்டால் அதனைத் தடுத்து விட முடியுமா என்ன?

வாங்க பேசலாம்!

விரைவில் எதிர்பாருங்கள்!

மனைவி ஒரு பொக்கிஷம்! பயிலரங்கம் குறித்த அறிவிப்பை!  

பாலுறவை - மிகச் சிறப்பான அனுபவமாக ஆக்கிக் கொள்வது எப்படி?

“வ ஆஷிரூஹுன்ன பில் ம'-ரூஃப்!”

- இது சூரத்துன் நிஸாவின் 19 வது வசனத்தின் ஒரு சிறிய பகுதி தான்!

இதன் பொருள்:

" நன்மையான காரியங்கள் அனைத்திலும் அவர்களுடன் மிக நெருங்கிய உற்ற நண்பர்களாக நடந்து கொள்ளுங்கள்"

ஆங்கிலத்தில்:

"behave with them as intimate companions in all the good things that are allowed in Islam "

இப்போது கேள்வி என்னவென்றால் –

நெருக்கம் என்றால் என்ன? – என்பது தான்!


நெருக்கம் என்பது உடலளவில் மட்டும் தான் என்றால் – அது கணவன் மனைவி உறவையே கொச்சைப் படுத்துவது போல் ஆகி விடும்.

கணவன் – மனைவியர் தங்களின் இல்லற வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களிலும் நெருங்கி வாழ்வதைத் தான் நெருக்கம் என்ற சொல் பொதுவாகக் குறிக்கின்றது.

அறிவு பூர்வமான நெருக்கம்,

ஆன்மிக விஷயங்களில் உணர்வு பூர்வமான நெருக்கம், 

அன்பு, காதல், இரக்கம் போன்ற விஷயங்களில் இதய பூர்வமான நெருக்கம், 

கணவன் மனைவி – இருவரிடமும் சிறப்பாக அமைந்திருக்கின்ற நற்குணங்களினால் (unique positive qualities) ஏற்படுகின்ற நெருக்கம், 

இறுதியாக – இவை அனைத்தும் ஒன்று சேர்வதால் ஏற்படுகின்ற உடல் ரீதியான நெருக்கம் 

 - இவை அனைத்திலும் ஏற்படுகின்ற நெருக்கமே பரிபூரணமான நெருக்கம் ஆகும்!

இப்படிப்பட்ட பரிபூரணமான நெருக்கம் கணவனுக்கும் மனைவிக்கும் எவ்வாறு ஏற்படும்?

இப்படிப்பட்ட நெருக்கம் ஏற்பட கணவன்மார்கள் செய்திட வேண்டியது என்ன?

மனைவி என்பவள் ஒரு பொக்கிஷம்! ஒவ்வொரு பெண்ணும் ஒரு பொக்கிஷம் தான்! பல அற்புதங்களைத் தனக்குள் புதைத்து வைத்திருக்கும் புதையல் தான்!

எனவே கணவன்மார்கள் செய்திட வேண்டியதெல்லாம் - தன் மனைவியின் “சிறப்பியல்புகளைப்” பட்டியல் போடத் துவங்கி விட வேண்டும்!

உங்கள் மனைவியின் தனித்தன்மைகள் என்னென்ன?

அறிவு சார்ந்த விஷயங்களில் - உங்கள் மனைவியின் தனித்தன்மை என்ன? 

அது போலவே ஆன்மிக விஷயங்களில் – உங்கள் மனைவியின் தனித்தன்மை என்னென்ன? 

அன்பு செலுத்துதல், பாசம் காட்டுதல், இரக்கப்படுதல் போன்ற உணர்வு சார்ந்த விஷயங்களில் உங்கள் மனைவி எப்படி? 

என்னென்ன நற்குணங்கள் உங்கள் மனைவியிடத்தில் குடி கொண்டிருக்கின்றன?

இவை அனைத்தையும் ஒரு சேரப் பெற்றிருக்கின்ற ஒரு பெண்ணை – “எனக்கே எனக்காக!” – என்று வல்லோன் அல்லாஹு வழங்கியிருக்கின்றான் என்று எண்ணும்போது – இரண்டு விஷயங்கள் ஏற்படும்!

ஒன்று: அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் உணர்வு!

இரண்டு: உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் அற்புதமான நெருக்கம் ஒன்று ஏற்பட்டு விடும்! அதுவும் இயல்பாகவே!

இவ்வாறு உங்கள் மனைவியின் “சிறப்பியல்புகளை” அனு தினமும் உங்கள் பேச்சின் மூலமாகவும், செயல்பாடுகள் மூலமாகவும் – கொண்டாடுங்கள்! கொண்டாடுங்கள்! கொண்டாடிக் கொண்டே இருங்கள்! 

இந்தக் கொண்டாட்டத்துக்கு நடுவிலே இயல்பாக - ஏற்படுகின்ற உடல் ரீதியான நெருக்கம் இருக்கின்றதே – அது –கணவன் மனைவி பாலுறவை அற்புதமான அனுபவமாக ஆக்கிக் காட்டி விடும்!

ஆனால் அதற்கு நேர் மாற்றமாக – மனைவியின் – குறைகளையே பட்டியல் போட்டுக் கொண்டிருந்தால் – கணவன் மனைவி நெருங்கி வாழவே முடியாது! உடல் நெருக்கம் கூட – சடங்காகிப் போய்விடும்!

அது போலவே மனைவியர்களும் தங்கள் கணவன்மார்களின் சிறப்பியல்புகளைப் பட்டியல் போடுங்கள்! அவைகளை சொல்லாலும் செயலாலும் கொண்டாடிக் கொண்டே இருங்கள்! கணவனின் நெருக்கத்தை உணர்வு பூர்வமாக அனுபவிக்கத் தவறி விடாதீர்கள்!

நபியவர்களின் இல்லற வாழ்வை சற்று நோக்கினால் இது இன்னும் தெள்ளென விளங்கும்!

சான்றுக்கு ஒன்று: 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை நபியவர்கள் எப்படிக் கொண்டாடினார்கள்?

”தரீத் என்னும் உணவு மற்ற உணவுகளை விட சிறப்பாக இருப்பது போன்று மற்ற பெண்களைவிட ஆயிஷா(ரலி) அவர்கள் சிறப்பானவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” (திர்மிதி)

எழுதியவர்: S A மன்சூர் அலி