Thursday, December 19, 2013

நம்பிக்கை மோசம் – நினைத்துக் கூடப் பார்க்க வேண்டாம்!

கணவன் மனைவி உறவை பலப்படுத்துவது எது? அவர்களுக்குள் காதல் உணர்வை நிலைத்திருக்கச் செய்வது எது? அது தான் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் “நம்பிக்கை” (trust)!

ஒருவர் தனது வாழ்க்கைத்துணையை – “இனி நான் இவரை நம்பிடத் தயாரில்லை” – என்று முடிவெடுத்து விட்டால் – அவர்களின் உறவு (relationship) மிகவும் ஆட்டம் கண்டு விட்டது என்று பொருள். அவர்களின் இல்லற எதிர்காலம் இருண்டு விட்டதாக பொருள்.



இவ்வுறவை நீடிப்பதா அல்லது முடித்துக் கொள்வதா – என்று மகா குழப்பத்துக்கு ஆளாகிறார்கள் கணவன் மனைவியர்.

“இவளுடன் இல்லாமல் நான் வேறு ஒருத்தியைத் திருமணம் முடித்திருந்தால் என் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்” – என்று தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கும் கணவன் தான் – வேறு பெண்களை நாடுகிறான். அது போலத்தான் மனைவியரும்.

மனைவியின் குறைகளையே துருவிக் கொண்டிருக்காமல் – அவளுடைய நிறைகளை நினைத்து – அவைகளால் தான் அடையும் “பலன்களுக்கு” நன்றியுணர்ச்சி உடையவனாக கணவன் நடந்து கொள்ளும்போது – கணவன் மனைவி நம்பகத் தன்மை உறுதி செய்யப்படுகின்றது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு இறை நம்பிக்கையுள்ள ஆண் (கணவன்) ஒரு முஃமினான பெண்ணை (அவன் மனைவியை) வெறுக்க வேண்டாம்.அவன் அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால்,அவளிடமுள்ள வேறொரு நற்குணத்தைக் கொண்டு பொருந்திக்கொள்வானாக! என நபி (ஸல்) அவர்கள் ௬றினார்கள்.(முஸ்லிம்-2672)

இதற்குப் பெயர் தான் POSITIVE APPROACH!

மனைவியை வெறுப்பதற்கு பதிலாக –

“நீயே என் எதிர்காலம்! நீ இல்லாவிட்டால் என் வாழ்க்கை ஒரு பாலை வனம்; நீ ஒரு அற்புதமான தாய்! எனக்கு அற்புதமான குழந்தைகளைத் தந்தவள் நீ! நீ எனக்கு சிறந்த நண்பன். ஆலோசகன். நீ கொடுத்துக் கொண்டே இருப்பவள். கிடைப்பது பற்றிக் கவலைப்படாதவள்!”

– என்றெல்லாம் உளமாற மனமாறப் பாராட்டிப் பாருங்கள்!

அட! இதுவும் நபிவழி தாங்க!! அப்புறம் – நம்பகத் தன்மை வலிமை பெறுகிறதா இல்லையா என்று பாருங்கள்.

ஆனால் இந்த நம்பகத் தன்மையை உடைத்தெறிந்திடப் புறப்பட்டவன் யார் தெரியுமா? அவன் தான் ஷைத்தான் – மனிதனின் பொது எதிரி! அவன் கங்கணம் கட்டினான். அல்லாஹ் அனுமதி கொடுத்தான். கணவன் மனைவியரைப் பிரிப்பது தான் மிகச் சிறந்த ஷைத்தானிய வேலை என்று தன் சகாக்களுக்கு “சான்றிதழ்” வழங்கினான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற ஷைத்தானே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் திரும்பி வந்து “நான் இன்னின்னவாறு செய்தேன்” என்று கூறுவான். அப்போது இப்லீஸ், “சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நீ எதையும் செய்யவில்லை” என்று கூறுவான்.

பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, “நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை” என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச் செய்து, “நீதான் சரியான ஆள்” என்று பாராட்டிக் கூறுவான். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி). இந்த ஹதீஸின் இன்னொரு அறிவிப்பின் படி – “அந்த ஷைத்தானை இப்லீஸ் கட்டி அணைத்துக் கொள்கிறான்” – என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. நூல்: முஸ்லிம் (5419)

கணவன் மனைவி நல்லுறவை உடைத்தெறிவதற்கு ஷைத்தான் மேற்கொள்ளும் வழிமுறைகள் என்னென்ன?

கணவன் மனைவி நம்பகத்தன்மையை உடைப்பது; சந்தேக விதைகளை விதைப்பது; சந்தேக சூழலைத் தனக்குச் சாதகமாக்குவது. அதனைப் பரப்பி விடுவது; கணவன் மனைவியருக்குள் சண்டை மூட்டுவது;பெரிது படுத்தி வேடிக்கை பார்ப்பது;

இதனை நாம் நுணுக்கமாக ஆய்வு செய்திட வேண்டியுள்ளது: ஏனெனில் ஷைத்தானின் அடிச்சுவட்டைப் பின் பற்ற வேண்டாம் என்பது இறை கட்டளை!

ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்கவற்றையும், நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் தூய்மையடைந்திருக்க முடியாது – எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான் – மேலும் அல்லாஹ் செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.(24:21)

அடிச்சுவடு என்பது சின்ன சின்ன ஸ்டெப்!

அதாவது ஷைத்தான் நம்மை வழிகெடுக்கும் முறை – நம்மை சின்ன சின்ன “தவறுகளில்” விழ வைத்து – அப்படியே அவன் வழியில் நம்மை வழி கெடுத்து – இறுதியில் ஒரேயடியாக நம்மைப் பாவப் படுகுழியில் தள்ளி விட்டு வேடிக்கை பார்ப்பது தான்!

ஆனால் – அல்லாஹு தஆலா – தன் அடியார்களாகிய நமக்கெல்லாம் மிகத் தெளிவாகவும் மிக விரிவாகவும், மிக விளக்கமாகவும் வழி காட்டியிருக்கின்றான். எந்தெந்த வழிகளில் எல்லாம் அவன் வழி கெடுக்க வருவானோ அத்தனை வழிகளையும் அடைத்துக் கொள்ளச் சொல்லி வழிகாட்டினான்.

வல்லோன் அல்லாஹ்வின் விரிவான வழிகாட்டுதல்கள் என்னென்ன?

சுருக்கமாகப் பட்டியலிடுவோம் இங்கே.

1. பருவம் அடைந்ததும் – தாமதிக்காமல் திருமணம் செய்து வைத்து விடுதல்

2. திருமணம் தாமதமானால் கற்பைப் பாதுகாத்துக் கொள்தல்

3. தூய்மையான துணையைத் தேர்வு செய்தல்

4. திருமணத்தை எளிமையாக்குதல்

5. கணவன் மனைவியரின் திருப்திகரமான பாலுறவுக்கு (sex life) ஊக்கம் அளித்தல்; அதனை உறுதி செய்தல்

6. மகிழ்ச்சிகரமான இல்லற வாழ்வுக்கு எளிமையான வழிகாட்டுதல்கள் (முத்தம்; விளையாட்டு, சேர்ந்து குளித்தல்; சேர்ந்து உண்ணுதல்; வேலைகளைப் பகிர்ந்து கொள்தல்; மென்மையைக் கடைபிடித்தல், நேரம் ஒதுக்குதல்)

7. வாழ்க்கைத் துணையை மதித்தல்; கண்ணியமாக நடத்துதல்; நகைச்சுவை உணர்வு; மன்னிக்கும் மனப்பான்மை; உணர்வுகளை மதித்தல்; தனிமையில் மட்டும் கண்டித்தல்; இரக்கம் காட்டுதல்

8. கண்ணியமாக பேசுதல்; திட்டுவதைத் தவிர்த்தல்; வாக்குறுதிகளைக் காப்பாற்றுதல்; தவறுகளை ஒத்துக் கொள்தல்; கருத்து வேறுபாடுகளை அழகான முறையில் தீர்த்துக் கொள்தல்

9. கண்ணியமான ஆடை (ஹிஜாப்) அணிதல்; அலங்காரத்தை மறைத்துக் கொள்தல்

10. ஆணும் பெண்ணும் தங்கள் கண் பார்வையைத் தாழ்த்திக் கொள்தல்

11. (அன்னியரான) ஆண் – பெண் தனிமையைத் தவிர்த்தல் / பயணத்தைத் தவிர்த்தல்

12. ஒருவர் வீட்டுக்குள் நுழைவதில் கட்டுப்பாடுகளைக் கடைபிடித்தல்; எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்தல்

13. நடந்து செல்லும்போதும் கட்டுப்பாடு

14. அன்னியருடன் பேசும்போதும் கட்டுப்பாடு

15. சந்தேகமான சூழ்நிலைகளைத் தவிர்த்துக் கொள்தல்

16. கற்புள்ள பெண்கள் மீது அவதூறு பரப்பினால் கடுமையான தண்டனை

17. விபச்சாரத்துக்கு கடுமையான தண்டனை

18. நம்பிக்கை மோசடி செய்த பெண்ணுக்கு கணவனே – இறைச்சாபமிட்டுப் பிரித்து விடுதல் எனும் கடுமையான சட்டம்

இறைவனின் இந்த அழகான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடந்தாலே – நம்பிக்கை மோசடிக்கு வேலையே இல்லை!

ஆனால் – இல்லற வாழ்க்கை குறித்து சரியான வழிகாட்டுதலை அறியாத, நல்லெண்ணம் கொண்ட நமது சகோதர குடும்பங்களில் கூட இந்த நம்பிக்கை மோசடி – தலை விரித்து ஆடுகிறது! பல அவமானகரமான பின் விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது!

அவர்களுக்கு நம் ஆலோசனைகள்:

A. உங்கள் துணை உங்களை மோசம் செய்து விடாமல் இருப்பதற்கு:

ஏழையாக இருந்தாலும், இறையச்சமுள்ள நற்குணம் மிக்க ஒரு துணையைத் தேர்வு செய்யுங்கள்.

பயணம் சென்று பிரிந்து வாழும் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப் புள்ளி வையுங்கள்.

நெருங்கி வாழுங்கள்; நேரம் ஒதுக்குங்கள்; ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்;

துணையின் தேவைகளை நன்றாக நிறைவேற்றிக் கொடுங்கள். வெளியில் அழைத்துச் செல்லுங்கள்; பேசுங்கள்; சிரியுங்கள்; பேச விட்டுக் கேளுங்கள்; விளையாடுங்கள்.

வேலைப்பளுவைக் காரணம் காட்டி – அவர்களின் உணர்வுகளைப் புறக்கணிக்காதீர்கள்.

பாலுறவில் சுய நலம் வேண்டாம்; உங்கள் துணையின் திருப்தியை அலட்சியம் செய்து விடாதீர்கள்!

எதிர்மறைப் பேச்சுக்களை முற்றாகத் தவிர்த்திடுங்கள். இது தான் நம்பிக்கை மோசடிக்கு இட்டுச் செல்ல ஷைத்தான் தேர்வு செய்திடும் முதல் ஸ்டெப்!

சந்தேகம் ஏற்படுகின்றதா? வெளிப்படையாகப் பேசி விடுங்கள்; நீங்களும் வெளிப்படையாக நடந்து கொள்ளுங்கள்.

B. ஏதோ – காரணங்களால் உங்கள் துணையை வெறுத்து – அவருக்கு நம்பிக்கை மோசடி செய்திட ஷைத்தான் உங்களைத் தூண்டுகின்றானா? ஒரு தடவை நீங்கள் ஷைத்தானின் வலையில் வீழ்ந்து விட்டாலும் – அதன் விளைவுகளை சற்றே எண்ணிப் பாருங்கள்:

அனுதினமும் பொய் சொல்ல வேண்டிய அவல நிலைக்கு ஆளாக நேரிடும்.

தெரிந்து போய் விடுமோ என்ற அச்ச உணர்வு அலைக்கழித்துக் கொண்டே இருக்கும்.

யாருடைய வலையில் விழுகின்றீர்களோ – அவர்களின் மிரட்டலுக்கு ஆளாக வேண்டி வரும். திருந்தி வாழும் வாய்ப்பு கூட கடினமாகி விடும்.

வெட்க உணர்வற்றுப் போக நேரிடும்.

எதிர்காலம் இருண்டதாகி விடும், மற்ற உறவுகளும் கூட வர மாட்டார்கள்.

இதுவெல்லாம் ஒரு புறம் இருக்க – உங்கள் தாயின் மனநிலை என்னவாகும்? தந்தையின் தலைகுனிவுக்கு என்ன மருந்து? உங்கள் சகோதரர்களின் கண்ணியம் என்னவாகும்? சகோதரிகளின் திருமண வாழ்க்கை என்னவாகும்? நீங்கள் பெற்ற செல்வங்களின் மன நிலை என்ன பாடுபடும்? என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள். வெளியே தலை காட்டிட முடியாமல் – கூனிக் குறுகி வாழ்ந்திட வேண்டிய அவல நிலைக்கு உங்கள் சுற்றம் ஆளாக நேரிடும்.

இறுதியாக ஒரு அறிவுரை: தப்பு செய்து விட்டு அது தெரிந்த பின்னரும் – உங்கள் துணைவர் உங்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் அது கண்ணாடி ஒன்றை உடைத்து விட்டு – மீண்டும் அதனை ஒட்ட வைப்பது போலத்தான்! கண்ணாடியின் பழைய தோற்றம் வரவே வராது!

எனவே – இறையச்ச மிக்க சமுதாயமே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஹம்மதின் சமுதாயமே!

தன் அடியார்களில் ஆணோ பெண்ணோ யார் விபசாரத்தில் ஈடுபடுவதைக் கண்டாலும் அல்லாஹ்வைவிடக் கடுமையாக ரோஷம் கொள்பவர் வேறெவருமிலர்.  முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதையெல்லாம் நீங்களும் அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள் - என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி  5221)

வல்லோன் அல்லாஹ் நம் சகோதரர்களையும் சகோதரிகளையும் நம்பிக்கை மோசம் செய்வதிலிருந்தும், செய்யப்படுவதிலிருந்தும் பாதுகாப்பானாக! ஆமீன்!

முகத்தைத் திருப்பிக் கொள்ளாதீர்கள்!

இங்கே ஒரு மனைவி:

“ஏங்க! இன்றைக்கு மாலை சற்றே காலாற கடற்கரையில் (ஜோடியாகத் தான்!) நடந்து போய் வரலாம்; வருகிறீர்களா?”

கணவனுக்கு இதில் சற்றும் ஆர்வம் இல்லை. பதில் எதுவும் சொல்லாமல் பேச்சைத் திசை திருப்பி விடுகிறான். அமைதியாக மனதுக்குள் – “இது ஒன்னு தான் பாக்கி!” – என்று சொல்லிக் கொண்டு – “ஆமா! இன்னைக்கு உங்க அண்ணன் வந்திருந்தாரில்ல; என்ன சொன்னார்?”



மனைவிக்கு இது எப்படி இருக்கும்?

மனைவி கணவனோடு சேர்ந்து நடக்க மிகவும் ஆசைப் படுகிறார். இது உணர்வு பூர்வமான ஒரு அழைப்பு! ஆனால் முகத்தைத் திருப்பிக் கொள்கிறான் கணவன்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது – இப்படிப்பட்ட உரையாடல்கள் – கணவன் மனைவியருக்குள் அன்றாடம் நடப்பவை தானே என்று நாம் நினைத்து விடலாம். ஆனால் இப்படிப்பட்ட உரையாடல்களில் – முக்கியமான செய்தி ஒன்று உள்ளே பொதிந்திருக்கின்றது!

இந்த உரையாடலை – ஏதோ மனைவி ஆசைப்பட்டுக் கேட்டாள்; கணவனுக்கு அதில் விருப்பம் இல்லை! அவ்வளவு தான் என்று எடுத்துக் கொள்ள முடியாது,

இங்கே – இந்தக் கணவன் சொல்லாமல் சொல்கின்ற செய்தி என்ன?

- உன் ஆசைகளை நிறைவேற்ற எனக்கு நேரம் இல்லை!
- அதற்கு எனக்கு அவசியமும் இல்லை!
- எனக்கு நீ முக்கியமில்லை!
- நீ என்ன நினைப்பாய் என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை!
- என்னை விட்டு விடு!

இது எதனை உணர்த்துகிறது என்றால் – கணவன் – மனைவி உறவு மிகவும் பாதிப்படைந்திருக்கிறது என்பதைத் தான்!

மாறாக – முகம் கொடுத்துப் பேசும் கணவன் என்ன பதில் தருவான் மனைவிக்கு?

நல்ல ஐடியா! நானும் தான் நினைத்துக் கொண்டிருந்தேன்! நான்கு மணிக்கெல்லாம் தயாராக இரு ஹனீ! இரவு உணவு தயாரிக்க வேண்டாம்; அப்படியே வெளியிலேயே சாப்பிட்டு விட்டு வரலாம்; ரொம்ப நாளாச்சு இல்ல?

இந்த பதில் எதனை உணர்த்துகிறது? இதில் என்ன செய்தி இருக்கின்றது?

கணவன் மனைவி உறவு மிகச் சிறப்பாக இருக்கின்றது என்பதைத் தானே!

- நீ சொல்வதை நான் கேட்கிறேன் – கண்ணே!
- உன்னுடைய தேவைகளை நான் நன்றாகப் புரிந்து வைத்திருக்கின்றேன்!
- உனது விருப்பம் தான் எனது விருப்பமும்!
- நான் எப்போதுமே உன் பக்கம் தான்!
- உன் விருப்பத்தை நிறைவேற்றுதே என் மகத்தான ஆசை!
- உன் விருப்பத்தை நிறைவேற்றுவதை விட எனக்கு இப்போது வேறு எந்த வேலையும் முக்கியம் இல்லை!

மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கணவன் முகம் கொடுத்துப் பேசும்போது – மனைவிக்கு ஏற்படுவது மன அமைதி! – அதாவது சகீனா!

அது போலவே தான் கணவனின் உணர்வுகளுக்கு மனைவி முகம் கொடுக்கும்போது கணவனுக்கு ஏற்படுவது மன அமைதி!

சகீனா என்றால் என்ன? மன நிம்மதி என்றும் மன அமைதி என்றும் மொழிபெயர்க்கிறோம்.

திருமண வாழ்க்கை என்பதன் அடிப்படை நோக்கமே – ஒருவருக்கொருவர் மன நிம்மதி பெறுவதற்காகத் தான் என்பதையும் அறிந்து வைத்திருக்கின்றோம்.

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)

மேற்கண்ட இறை வசனத்தில் சகீனா என்பது (தஸ்குனூ) வினைச்சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்குப் பொருள் – மன அமைதியை ஏற்படுத்துவதற்காக – என்பதாகும். ஆங்கிலத்தில் – REASSURE – to set somebody’s mind at rest – என்று மொழி பெயர்க்கலாம்.

இந்த மன நிம்மதி என்பது – ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் முடித்து விட்டாலே போதும் – அவர்களுக்குள் இந்த மன நிம்மதி என்பது தானாகவே வந்து விடும் என்று சொல்ல முடியாது!

திருமணம் முடித்த பின் ஒருவருக்கொருவர் மன நிம்மதியை அளித்திடும் வண்ணம் கணவனும் மனைவியும் நடந்து கொள்வதால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.

என் மனைவிக்கு மன நிம்மதி அளிக்கும் வண்ணம் நான் நடந்து கொள்ள வேண்டிய கடமை எனக்கு உண்டு என்று கணவன் நினைத்திட வேண்டும்!

அது போலவே – என் கணவனுக்கு மன நிம்மதி அளிக்கும் வண்ணம் நான் நடந்து கொள்ள வேண்டிய கடமை எனக்கு உண்டு என்று மனைவியும் நினைத்திட வேண்டும்!

நினைப்பது மட்டும் போதாது! அதனை செயல் படுத்திக் காட்டிடவும் வேண்டும்!

கணவனின் அழைப்புக்கு மனைவியோ, மனைவியின் அழைப்புக்குக் கணவனோ – முகம் திருப்பிக் கொள்ளும்போது – மன நிம்மதி குலைகிறது!

பின் வரும் நபி மொழிகள் நாம் அறிந்தவை தானே?

அன்னை ஆயிஷா அவர்கள் சொல்கிறார்கள்: ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, ”நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?” எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) ”அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். நான் பார்த்து சலித்த போது, ”உனக்கு போதுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ”அப்படியானால் (உள்ளே) போ!” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ 950

நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல் துண்டால் மறைத்துக் கொண்டிருக்க பள்ளிவாசலில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக சடைந்து விடும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகள் மீது பேராவல் கொண்ட இளம் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்! அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ 5236

நாம் கேட்பது என்னவென்றால் – நபியவர்களை விட நாம் ஒன்றும் “பிஸி”யானவர்கள் அல்லவே?

புரிந்துணர்வு உள்ள கணவரா நீங்கள்?

சூழ்நிலை ஒன்றை கவனியுங்கள்: (பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே)

இங்கே ஒரு மனைவி – காமிலா. கணவன்: நாஸர்.

நாஸரின் சகோதரி – நபீலா.

காமிலாவுக்கு தன் கணவனின் சகோதரி நபீலாவின் பல செயல்பாடுகள் எரிச்சலை உண்டாக்கும். சூழ்நிலை அறிந்து பேசத் தெரியாதவர்.


ஒரு தடவை நபீலா தனது அண்ணன் நாஸர் வீட்டுக்கு வருகிறார். வீட்டில் நாஸர் இல்லை. காமிலா மட்டுமே வீட்டில். உரையாடல் நபீலாவுக்கும் காமிலாவுக்கும் தான்.

நபீலா: காமிலா! நேற்று ஆஸ்பிட்டல் போயிருந்தேனா, ஒரே கூட்டம். அம்மாவுக்கு முதுகு வலி. ஆஸ்பிட்டல் வர இயலவில்லை; லேடி டாக்டரிடம் மருந்து எழுதி வாங்கி வா என்று என்னை அனுப்பி விட்டார்கள். டோக்கன் போடச் சொன்னார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் – ஒரு ஐடியா வந்தது. உன் வாப்பா பெயரைச் சொல்லி டக்கென்று உள்ளே நுழைந்து விட்டேன். (காமிலாவின் வாப்பாவுக்கு அந்த டாக்டர் குடும்பம் மிகவும் பழக்கமான குடும்பம்.) டாக்டர் டோக்கன் கேட்கவில்லை. ஒரு மாதிரி பார்த்து விட்டு மருந்து எழுதித் தந்தார். உடனே திரும்பி விட்டேன். இல்லாவிட்டால் மணிக்கணக்கில் யார் அங்கே காத்திருப்பது?

காமிலா: (சற்றே எரிச்சல் அடைந்தவராக) – ஏன்? என் வாப்பா பெயரை நீங்க தப்பா பயன் படுத்தினீங்க? அதுவும் டோக்கன் வாங்காமலேயே?

நபீலா: அதுவெல்லாம் ஒரு அர்ஜென்டுக்குத் தான் காமிலா; இதுக்கு ஏன் உனக்கு இப்படி கோபம் வருது? இதுவெல்லாம் ஒரு தப்பா? ஒரு சமயத்துக்கு இப்படி செய்றதெல்லாம் தப்பே கிடையாது! தேவைப்பட்டா உங்க வாப்பா பெயரையும் பயன்படுத்துவேன்; உங்க உம்மா பெயரையும் பயன்படுத்துவேன்!

காமிலாவுக்குக் கோபம் தலைக்கேற – பேச்சு வாக்குவாதமாக மாற – நபீலா காமிலாவைத் திட்டிக் கொண்டே வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்.

என்ன திமிர் இவளுக்கு? – என்று மனதுக்குள்ளேயே புழுங்குகிறார் காமிலா.

கணவர் வீட்டுக்கு வந்ததும் மனைவியைக் கவனிக்கிறார். மனைவியின் முகத்தில் ஒரு வாட்டம்.

காமிலா தன் கணவனிடம் அனைத்தையும் சொல்கிறார்.

இப்போது கணவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எப்படி நடந்து கொள்ளக் கூடாது?

புரிந்துணர்வு கொண்ட கணவன் எப்படி பேசுவார்; புரிந்துணர்வு இல்லாத கணவன் எப்படி நடந்து கொள்வார் என்று இரண்டு முன்மாதிரிகளையும் இங்கே பார்ப்போம்.

காட்சி 1:

காமிலா: காலையிலே உங்க தங்கை வந்திருந்தாங்களா…. டாக்டர்கிட்ட மாமிக்கு மருந்து எழுதி வாங்குவதற்கு – டோக்கன் வாங்காமலேயே – என் வாப்பா பெயரை பயன்படுத்தி மருந்து வாங்கிட்டு வந்தாங்களாம். ஏங்க என் வாப்பா பெயரைத் தவறாக பயன்படுத்தினீங்கன்னு கேட்டா – இதுவெல்லாம் ஒரு தப்பா? ஒரு சமயத்துக்கு இப்படி செய்றதெல்லாம் தப்பே கிடையாது! தேவைப்பட்டா உங்க வாப்பா பெயரையும் பயன்படுத்துவேன்; உங்க உம்மா பெயரையும் பயன்படுத்துவேன் – என்று அவங்க இஷ்டத்துக்குப் பேசுறாங்க! இது நல்லாவா இருக்கு?

நாஸர்: நபீலாவப் பத்தித் தான் உனக்கு நல்லா தெரியுமில்ல? ஏன் அவளிடம் போய் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிற! விடும்மா அத! போய் நல்லா ரெண்டு டீ போட்டு எடுத்துக்கிட்டு வா! குடிப்போம்!

இந்த பதில் காமிலாவுக்கு திருப்தி அளிக்குமா? நிச்சயமாக அளிக்காது! இங்கே கணவன் மனைவிக்குச் சொன்னது “அறிவுரை!”. மனைவியின் உள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் வழங்கப்பட்ட அறிவு+உரை!

காமிலா என்ன பதில் சொல்வார்?

“உங்க அட்வைஸ்க்காகவா இதனை நான் உங்களிடம் சொன்னேன்?”

விருட்டென்று எழுந்து அடுக்களைக்குச் சென்று விடுகிறார். “இவருக்குத் தேவையெல்லாம் டீயும் சாப்பாடும் தான்!”

இந்தக் கணவரே புரிந்துணர்வு இல்லாத கணவர். No attunement!

காட்சி 2:

காமிலா: காலையிலே உங்க தங்கை வந்திருந்தாங்களா…. டாக்டர்கிட்ட மாமிக்கு மருந்து எழுதி வாங்குவதற்கு – டோக்கன் வாங்காமலேயே – என் வாப்பா பெயரை பயன்படுத்தி மருந்து வாங்கிட்டு வந்தாங்களாம். ஏங்க என் வாப்பா பெயரைத் தவறாக பயன்படுத்தினீங்கன்னு கேட்டா – இதுவெல்லாம் ஒரு தப்பா? ஒரு சமயத்துக்கு இப்படி செய்றதெல்லாம் தப்பே கிடையாது! தேவைப்பட்டா உங்க வாப்பா பெயரையும் பயன்படுத்துவேன்; உங்க உம்மா பெயரையும் பயன்படுத்துவேன் – என்று அவங்க இஷ்டத்துக்குப் பேசுறாங்க! இது நல்லாவா இருக்கு?

நாஸர்: “ஏன் இப்படி நபீலா நடந்துக்கிறா? ஒருவருடைய பெற்றோர் பெயரைத் தவறாகப் பயன்படுத்தினால் யாருக்குத் தான் கோபம் வராது? உன்னுடைய கோபத்தை என்னால புரிஞ்சுக்க முடியுது காமிலா! உன் பெற்றோர்களை நீ எப்படி மதிக்கிறாய் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

காமிலா சற்றே ஆறுதல் அடைகிறார்.

“சரி, விட்டுத் தள்ளுங்க! என்ன, டீ போட்டு எடுத்துக்கிட்டு வரவா?

இங்கே என்ன நடந்தது?

கணவன் முற்றிலும் தன் மனைவியின் உள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு உரையாடியதால் – அந்த விஷயம் அத்துடன் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது.

மனைவி என்ன நினைக்கிறார்? என் கணவன் என்னைப் புரிந்து வைத்திருக்கின்றார்! என் உணர்வுகளைப் புரிந்து வைத்திருக்கிறார். என்னையும் என் பெற்றோர்களையும் மதிக்கிறார். நான் ஏதாவது எதிர்மறை உணர்வுகளுக்கு ஆட்பட்டால் நான் ஆறுதல் அடைய என் கணவன் எப்போதுமே எனக்கென்று இருக்கின்றார்!!

***
இங்கே கவனித்திட வேண்டியது என்னெவென்றால் – கணவன் தன் மனைவிக்கு “அறிவுரை” வழங்கவே இல்லை! மனைவி அப்படிப்பட்ட ஒரு அறிவுரையை எதிர்பார்க்கவும் இல்லை!

இந்த இரண்டாம் கணவன் பின்பற்றியது தான் நபிவழியாகும் என்றால் வியப்பாக இல்லை?

நபியவர்களின் ஒரு மனைவிக்குக் கோபம். ஆனால் நபியவர்கள் அந்த சமயத்தில் மனைவிக்கு எந்த அறிவுரையும் வழங்கிடவில்லை!

பின்வரும் நபிமொழி இதனை நமக்குக் கற்றுத்தருகிறது:

நபியவர்கள் தமது மனைவியர்களில் ஒருவரிடம் இருந்தார்கள். மூமின்களின் அன்னையரில் ஒருவர் பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். வீட்டிலிருந்த நபி அவர்களின் (மற்றொரு) மனைவி அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்து விட்டார்கள்.

நபி அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்) உண்ணுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் உண்டு முடிக்கும் வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப் பெண்ணையும் அங்கேயே நிறுத்திக் கொண்டார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்து விட்டார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலீ) நூல்: புகாரீ 2481

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் வீட்டில் இருந்த போது தான் இச்சம்பவம் நடந்தது. நபியவர்களுக்கும், நபியவர்களின் தோழர்கள் சிலருக்கும் – ஆயிஷா அவர்களே உணவு சமைத்துக் கொண்டிருந்த நேரம் அது. அந்நேரத்தில் இன்னொரு மனைவியின் வீட்டிலிருந்து உணவு வந்ததும் ஆயிஷா அவர்களுக்குக் கோபம் வந்து விட்டது.

இந்தச் சமயத்தில் நபியவர்களின் செயலை சற்று கூர்ந்து கவனியுங்கள்:

உணவுத்தட்டை ஓங்கி அடிக்கிறார்கள் அன்னை ஆயிஷா அவர்கள்.

தட்டு உடைகிறது, உணவுப்பண்டம் சிதறுகிறது.

நபியவர்கள் அமைதியாக அதை ஒன்று சேர்க்கிறார்கள். தோழர்களை உண்ணச் செய்கின்றார்கள். உடைந்த தட்டுக்குப் பதிலாக நல்ல தட்டு ஒன்றைக் கொடுத்து அனுப்புகிறார்கள்.

நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் -

நபியவர்கள் ஏன் வாயைத் திறக்கவே இல்லை?

எதிர்மறை உணர்வுகளுள் ஒன்றுக்கு ஆளாகி இருக்கும் ஒருவருக்கு - அறிவுரை சொல்வதில் எந்தப் பயனும் இல்லை!

கணவன்மார்களே! இந்த நபிவழியைச் செயல்படுத்திப் பாருங்கள்!

புரிந்துணர்வு – attunement – தாமாகவே ஏற்படும் – உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையில்!

மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி?


ஒருவர் தன் துணையின் உள் மன உணர்வுகளை புரிந்து கொள்ள என்ன செய்திட வேண்டும்?

உங்கள் துணையின் பக்கம் நீங்கள் முழுமையாகத் திரும்பிட வேண்டும்! அவர்களுக்கென்று நேரம் ஒதுக்கிட வேண்டும்.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகை முடிந்தவுடன் தம் துணைவியரிடம் செல்வார்கள். அப்போது அவர்களில் சிலருடன் நெருக்கமாக இருப்பார்கள். அவ்வாறே (ஒருநாள்) தம் துணைவியாரான ஹஃப்ஸாவிடம் சென்று வழக்கமாகத் தங்கும் நேரத்தைவிட அதிக நேரம் தங்கினார்கள். (புகாரி – 5216)

உங்களவருடன் நீங்கள் அனுசரணையாகப் பேசிட வேண்டும். அவர் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்டிட வேண்டும்.

நபியவர்களிடம் யாராவது பேசினால் – அவர் பேசி முடியும் வரை – அமைதியாகக் காது கொடுத்துக்கேட்பார்கள் என்பது நபிமொழி;

உங்களவர் பேசும்போது – குறுக்கிட்டுப் பேசக்கூடாது. அவர் கருத்துக்களை மறுத்துப் பேசிடக்கூடாது. பேச்சைத் திசைத் திருப்பிடக் கூடாது.

உங்களவர் உங்களிடம் பகிர்ந்து கொள்ள எடுத்துக் கொள்ளும் விஷயம் உங்களுக்கு “அற்பமானதாக” இருக்கலாம்! ஆனால் அதனை அப்படியே அலட்சியப் படுத்தி விடக்கூடாது. “இதற்குப்போய் ஏன் அலட்டிக் கொள்கிறார் இவர்?” – என்று எண்ணி விடக் கூடாது.

மாறாக – அந்தச் சின்ன விஷயம் உங்கள் துணையை எப்படிப் பாதித்திருக்கின்றது என்பதையே நீங்கள் கவனித்திட வேண்டும்.

உங்களவருடைய உணர்வுகளை உதாசீனம் செய்திடக் கூடாது. அவர் நிலையில் உங்களை வைத்து (empathy) – அவர் தம் மன நிலையைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

உங்களவரின் முக பாவனை, பேச்சின் தொனி, கண்கள் சொல்லும் சேதி, உடல் மொழி (body language) – அனைத்தையும் உற்று கவனித்திட வேண்டும். அவருடைய உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிப்பதை அவர் உணரச் செய்திட வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்திட்டால் – உங்கள் துணையின் உள் மனத்து உணர்வுகளை நீங்கள் துல்லியமாகக் கணித்திட முடியும். அதற்குத் தக நடந்து கொள்ளவும் முடியும்.

உங்களுக்குள் காதலை வளர்த்திடவும், நம்பிக்கையை (trust) உருவாக்கிடவும், உறவை சிறக்க வைத்திடவும் – இதுவே மிகச் சிறந்த வழியாகும்!

அடுத்து ஒரு சூழ்நிலையை முன் வைத்து இதனை மேலும் விளக்குவோம்.

உங்கள் மனைவியை நீங்கள் புரிந்து வைத்திருக்கின்றீர்களா?


நமது வாழ்க்கைத்துணையின் உள் உணர்வுகளைப் புரிந்து கொள்தல் சிறப்பானதொரு இல்லற வாழ்க்கைக்கு மிக அவசியம்.

நமது துணை – கோபமாக இருக்கின்றாரா?

கவலையுடன் இருக்கின்றாரா?

அவர் மனம் புண்பட்டிருக்கின்றதா?


- என்பதையெல்லாம் மிகத்துல்லியமாகக் கணித்து விடுதல் – கணவன் – மனைவி உறவை மிக அழகாக்கி விடும்.

அழகான நபிமொழி ஒன்றை வைத்து இதனைப் புரிந்து கொள்வோம்.

அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்” என்று கூறினார்கள்.

அதற்கு நான், ‘எப்படி நீங்கள் அறிந்துகொள்வீர்கள்?’ என்று கேட்டேன்.

அதற்கவர்கள், ‘என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும்போது (பேசினால்), ‘முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்!

என் மீது கோபமாய் இருந்தால், ‘இப்ராஹீம்(அலை) அவர்களின் அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்” என்று கூறினார்கள்.

நான், ‘அல்லாஹ்வீன் மீதாணையாக! ஆம் (உண்மைதான்,) இறைத்தூதர் அவர்களே! நான் தங்களின் பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்களின் மீதுன்று)” என்று கூறினேன். (புகாரி – 5228)

இது ஆழமாக சிந்தித்திட வேண்டிய ஒரு நபிமொழியாகும்.

இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்தும் பாடம் என்னவெனில் – கணவன்-மனைவியர் ஒவ்வொருவரும் – தம் துணையின் உள் மனத்து உணர்வுகளை மிகச்சரியாக புரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதுதான்!

இவ்வாறு புரிந்து கொள்வதை ஆங்கிலத்தில் attunement என்று சொல்கிறார்கள். தமிழில் “புரிந்துணர்வு” என்று சொல்லலாம்.

உணர்வுகளைப் புரிந்து கொள்வது தான் புரிந்துணர்வு!

நாம் இங்கே சொல்ல வருவது – உங்கள் கணவருக்குப் பிடித்த கலர் எது? உங்கள் மனைவிக்குப் பிடித்த உணவுப் பண்டம் எது? என்பன போன்ற சாதாரண விஷயங்கள் குறித்து அன்று.

நாம் இங்கே வலியுறுத்திச் சொல்ல வருவது – “உணர்வுகள்” சம்பந்தப்பட்ட ஒரு சூழலை – உங்கள் துணைவர் எவ்வாறு எதிர்கொள்வார்? அவர் எப்படி நடந்து கொள்வார் என்பது குறித்துத் தான்.

உணர்வு சம்பந்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட சூழலில் உங்கள் துணைவர் ஒன்றைப் பேசிட நினைக்கிறார். அவர் என்ன பேசுவார் என்பது உங்களால் ஊகித்து விட இயல வேண்டும்.

ஒரு விஷயம் உங்கள் துணையை எவ்வாறு பாதிக்கும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஒரு தோல்வியை அவர் எவ்வாறு எடுத்துக் கொள்வார்?

ஒருவரால் அவமானப்படுத்தப் படுவதை (hurt) எவ்வாறு எதிர்கொள்வார்?

எந்த விஷயங்கள் எல்லாம் அவரைக் கோபப்படுத்தும்? – இவை எல்லாம் உங்களுக்குத் தெள்ளெனத் தெரிந்து இருக்க வேண்டும்.

ஆனால் பெரும்பாலான கணவன் மனைவியருக்கு இப்படிப்பட்ட புரிதல் இல்லை என்பது கசப்பான ஒரு உண்மை.

கணவன் மனைவியருக்கு இடையே இப்படிப்பட்ட புரிந்துணர்வு இல்லாமல் போய் விட்டால் – அது அவர்களின் உறவில் விரிசலை நிச்சயம் ஏற்படுத்தும்!

சரி, அப்படியானால் ஒருவர் தன் துணையின் உள் மன உணர்வுகளை புரிந்து கொள்ள என்ன செய்திட வேண்டும்?

அடுத்து வரும் கட்டுரையில் பார்ப்போமே! – இன்ஷா அல்லாஹ்

சூழ்நிலை அறிந்து பேசுங்கள்!

கணவன் மனைவி இருவருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் கடுமையான கருத்து வேறுபாடு. கோப உணர்ச்சி கொப்பளிக்கிறது.

அது குறித்துப் பேசி விடலாம் என்று கணவனோ அல்லது மனைவியோ நினைக்கிறார்கள். ஆனால் அதற்குத் தகுந்த சூழல் ஒன்றை அவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். எல்லாச் சூழ்நிலைகளிலும், எல்லா இடங்களிலும் அவர்கள் தங்கள் பேச்சைத் துவங்கி விடக்கூடாது.


ஒரு சூழ்நிலை.

கணவனும் மனைவியும் வீட்டில்…

“ஏம்மா! சாயங்காலம் அஞ்சு மணிக்கு ரெடியாக இரு! பீச்சுக்குப் போகலாம்! இது கணவன்.

ஆமா! அது ஒண்ணு தான் குறைச்சல்!” இது மனைவி.

ஆமாம்மா! உன் கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு; பீச்சிலே பேசுவதற்கு வசதியாக இருக்கும்ல!

ஆமாம்! நீங்க பேசிக் கிழிச்சதெல்லாம் போதும்!

உடனே கணவன் தன் மனைவியைக் கோபமாகத் திட்ட மனைவியும் பதிலுக்குத்திட்ட இந்த இந்த “அழகிய உரையாடலைக்” காதில் வாங்குவது யார் யார்?

அவர்களுடைய பன்னிரெண்டு வயது மகள்! ஹாலில் அமர்ந்து கொண்டு பாடம் படித்துக் கொண்டிருக்கின்றாள்.

கணவனின் தம்பி மனைவி! தம்பியின் அறையிலிருந்து சமையலைக்குச் செல்லும் சமயத்தில் அவர் காதிலும் விழுகிறது!

இங்கே கணவனின் ஈகோ தலையெடுக்குமா எடுக்காதா?

சுர்ர்ரென்று கோபம் தலைக்கேறிய கணவன் என்ன செய்வான்?

“உன்னிடம் பேச நினைத்தேனே! என்னைச் செருப்பால் தான் அடித்துக் கொள்ள வேண்டும்!”

“ஆமா! அது ஒன்னு தான் பாக்கி!”

***

எனவே தான் சொல்கிறோம்: சூழ்நிலை அறிந்து பேசுங்கள்!

எந்தெந்தச் சூழலிலெல்லாம் அவர்கள் பேசிடக் கூடாது?

வீட்டில் மற்ற உறவினர்கள் இருக்கிறார்களா? அவர்களுக்கு மத்தியில் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் குறித்து வாய் திறக்க வேண்டாம். அங்கே ஈகோ தலையெடுக்கத் துவங்கி விடும்.

குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு உங்கள் விவாதங்களைத் தொடங்கிட வேண்டாம். அது அவர்களை மிகவும் பாதிக்கும்.

வீட்டில் குழந்தைகளும் இல்லை; உறவினர்களும் இல்லை. நீங்கள் இருவர் மட்டும் தனியே என்றாலும் கூட உரத்தக் குரலில் இருவரும் பேசிட வேண்டாம். அக்கம்பக்கத்தார் இருக்கிறார்கள்.

கணவன் மனைவி இருவரும் பஸ் அல்லது ரயிலில் பயணிக்கிறீர்களா? சுற்றிலும் பயணிகள் சூழ்ந்திருக்க நீங்கள் உங்கள் பாட்டுக்கு உங்கள் கருத்து வேறுபாடுகளைப் பேசிடத் துவங்கி விடாதீர்கள்.

அல்லது நீங்கள் இருவருமாக காரில் செல்கிறீர்களா? நீங்களே ஓட்டுனர் என்றால் பரவாயில்லை. ஆனால் காரை ஓட்டுவது ஒரு டிரைவர் எனில் உங்கள் குடும்ப விஷயங்களைப் பேசாதீர்கள். அங்கே டிரைவர் நீங்கள் பேசுவதை உற்றுக் கேட்கக்கூடும்.

வெளியே இருவரும் நடந்து செல்கிறீர்களா? முன்னும் பின்னும் யாருமே இல்லை என்று நினைத்துக் கொண்டு பேச்சைத் துவக்கி விடாதீர்கள். “ஆமா! யாரு நாம பேசுறத கேட்டுக்கிட்டு இருக்காங்க?” என்று உங்கள் துணை பேசத் தொடங்கினால் பதில் பேசாதீர்கள்.

குடும்ப விஷயங்களை கடைகளில் பொருட்கள் வாங்கும் சமயத்திலும் பேச வேண்டாம்!

கணவன் – மனைவி கருத்துரையாடலுக்கு மேற்கண்ட சூழ்நிலைகளை நாம் தவிர்க்கச் சொல்வதற்குக் காரணம் – ஒருவர் மானத்தை மற்றவர் காத்திட வேண்டும் என்பதற்காகத் தான்.

சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல் பேசத் தொடங்கினால் என்னவாகும்? சாதாரணமாகத் தான் பேச்சு தொடங்கும். ஒரே ஒரு வார்த்தை உங்கள் உரையாடலை – விவாதமாக மாற்றி விடும்! அடுத்து என்ன நடக்கும் என்று நாம் சொல்லத் தேவையில்லை.

கணவனோ அல்லது மனைவியோ – இருவரில் ஒருவர் எதற்கெடுத்தாலும் “சண்டை போடக்கூடிய” மனிதராக இருந்து விட்டால் கேட்கவே வேண்டியதில்லை. மேற்கண்ட சூழ்நிலைகளில் எதுவாக இருந்தாலும் – பேசுவதைத் தவிர்த்திடா விட்டால் அது கணவன் மனைவி உறவை மேலும் சிக்கலாக்கி விடும்.

எனவே தான் சொல்கிறோம்: சூழ்நிலை அறிந்து பேசுங்கள்!

Wednesday, November 6, 2013

தாம்பத்திய வாழ்வில் தடுமாற்றமா?

திருமறையின் 23 வது அத்தியாயத்தின் முதல் 11 வசனங்களின் தமிழ் மொழிபெயர்ப்பைக் கீழே தந்துள்ளேன் உங்கள் சிந்தனைக்கு.

இவ்வசனங்கள் எனக்குள் ஏற்படுத்திய சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் சிந்தியுங்கள்.

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.


அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.

இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.

ஸகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.

மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.

ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர – (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.

ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.

இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.

மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.

இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள்.

இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். (23:1-11)

இந்த இறை வசனங்களில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?

வெற்றி, ஈமான், தொழுகை, உள்ளச்சம், ஸகாத், ”வீணானவை”, பாலியல், அமானத், வாக்குறுதி, சுவனம் - இவை தான்!

இவ்வசனங்களை நாம் இரண்டு கண்ணோட்டங்களில் வைத்து அணுகுவோம்.

ஒன்று: சமூக அளவில்; மற்றொன்று: குடும்ப அளவில்

முதலில் குடும்ப அளவில் வைத்து இவ்வசனங்களை ஆய்வோம்.

எங்கிருந்து துவங்கலாம்?

நான் “வீணானவை” என்பதிலிருந்து துவங்கிட விரும்புகிறேன்.

“இன்னும், அவர்கள் வீணானவற்றை விட்டு விலகியிருப்பார்கள்.”

வீணானவை என்பது எவற்றையெல்லாம் குறிக்கும்?

நமக்குப் பயனளிக்காத அனைத்தையும் குறிக்கும்!

இன்று மேற்குலகில் ஒரு விஷயம் மிக ஆழமாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கின்றது.

அந்த விஷயம் என்ன தெரியுமா?

அது தான் DISTRACTION! கவனச் சிதறல்!

இது எதனால் ஏற்படுகின்றது?

நமது கம்ப்யூட்டர் மற்றும் அது வழங்கும் இணைய தள வசதிகளால் ஒரு விதமான கவனச் சிதறலுக்கு நாம் ஆளாகி இருக்கின்றோம் என்கிறார்கள் வல்லுனர்கள்.

கம்ப்யூட்டரும், இணைய தள வசதியும் நமக்கு வழங்கி இருக்கின்ற வசதிகள் எதனையும் நாம் மறுத்திடவில்லை!

ஆனால் அதே நேரத்தில் – எந்த ஒரு பயனும் இல்லாமல் எந்த ஒரு குறிப்பிட்ட வேலைக்கு என்றில்லாமல் கம்ப்யூட்டருக்கு முன்னால் அமர்ந்து கொண்டு (இப்போது லேப்டாப், ஐபாட், ஐஃபோன் – இவையும் அடங்கும்) மணிக்கணக்கில் – உணர்வற்றுப் போய் – நேரத்தை நம்மில் பலர் வீணடித்துக் கொண்டிருக்கின்றோமே – இது ஏற்படுத்தியிருக்கும் நவீன நோய் தான் distraction – கவனச் சிதறல் என்கிறார்கள்.

அதனை நாம் நோய் என்று சொல்வதற்குக் காரணம் இருக்கின்றது.

சற்றே கவனமாக இதனைப் படியுங்கள்:

நமது மூளை இருக்கின்றதே – அது ஒரு அற்புதமான மனித உறுப்பு. அதன் அற்புதங்களில் இரண்டை மட்டும் இங்கே பார்ப்போம்.

ஒன்று:

மனிதனின் இதயமும் மனிதனின் மூளையும் – அவைகளின் இயல்பிலேயே மற்றவர்களுடன் நல்லுறவு வைத்துக் கொள்ளும் தன்மையைப் பெற்றிருக்கின்றன! அப்படித்தான் அவைகளை வடிவமைத்திருக்கின்றான் வல்லோன் அல்லாஹ்! ”we are wired to connect with others” என்கிறது neuroscience. அதாவது மூளை நரம்பியல்.

இரண்டு:

மனித மூளை – தனது மூளை நரம்புகளை (neurons) வைத்து பல நுணுக்கமான இணைப்புகளைத் தனக்குள் ஏற்படுத்திக் கொள்கின்றது.

சற்றே புரியுமாறு சொல்வோம். வீடு ஒன்றைக் கட்டுகின்றோம். அதில் மின் இணைப்புகளை நம் வசதிக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்கிறோம். பின்னர் அந்த இணைப்புகளின் அமைப்பினை வைத்தே நமது வசதிக்கேற்றவாறு மின்சாரத்தை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம். அதுபோலத்தான் நமது மூளை நரம்புகள் தமக்குள்ளே ஏற்படுத்திக் கொள்ளும் இணைப்புகளும்.

அப்படியானால் நமது மூளையில் ஏற்படுத்தப்படும் அந்த நரம்பு இணைப்புகள் எதனை வைத்து அல்லது எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன எனில் – ஒரு மனிதன் அவன் பார்க்கும் உலகம், அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள், அவனது சிந்தனை மற்றும் அவன் தேர்வு செய்கின்ற செயல்பாடுகள் (choices) – இவைகளை வைத்துத் தான்.

ஒரு தடவை ஒரு இணைப்பு ஏற்படுத்தப்பட்டால் – அவனுக்கு ஏற்படுகின்ற அதே போன்ற அனுபவங்கள் அல்லது சற்று ஆழமான அனுபவங்கள், அது அவனது மூளையில் ஏற்படுத்தும் தாக்கத்துக்குத் (impact) தகுந்தவாறு அவனது மூளையின் நினைவாற்றலில் பதிவு செய்யப்பட்டு – அதே போன்று அவன் சிந்திக்கவும் செயல்படவும் அந்த இணைப்பு அவனை வழி நடத்துகிறது. இது தொடரத் தொடர அந்த இணைப்பு வலிமை பெற்று விடுகின்றது! அந்த இணைப்பின் அடிப்படையிலேயே ஒருவன் தொடர்ந்து சிந்திக்கவும் செயல்படவும் செய்திடும்போது அதுவே அவனது பழக்கமாக மாறி விடுகின்றது. இதனைத் தான் habit formation என்கிறார்கள்.

அதே நேரத்தில் – மனித மூளை – அதனைப் பயன்படுத்தும் விதத்துக்குத் தகுந்தாற்போல் தன்னுடைய நரம்பியல் இணைப்புகளை நெகிழ்ச்சியுடன் (neural plasticity) மாற்றிக் கொள்ளும் தன்மையும் அதற்கு உண்டு!

இப்போது வலைதளங்களில் அளவுக்கு அதிகமாகத் தங்களின் கவனத்தையும் நேரத்தையும் செலவழிப்பவர்களின் நிலை என்ன என்று பார்ப்போம்.

பின் வரும் சொல்லாடல்கள் எல்லாம் வலைப்பிரியர்களுக்கு மிகவும் அத்துப்படியானவை: tweets, texts, notifications, blogs, shares, and tags….

இவ்வாறு தங்கள் முழுக் கவனத்தையும் வலையிலே தொலைத்து விட்டு நிற்கும் ஒரு மனிதனின் மூளை – தனது நரம்பியல் இணைப்புகளையே மாற்றிக் கொள்கிறதாம்! அதுவும் அதி விரைவாக! Our brain maps are rapidly changing!

இதன் தவிர்க்க முடியாத மாபெரும் விளைவு என்ன தெரியுமா?

செய்கின்ற ஒன்றையே திரும்பவும் திரும்பவும் செய்திடத் தூண்டுகின்ற ஒரு கெட்ட பழக்கம் (compulsion)

இயல்பான மனித வாழ்க்கையிலிருந்து திசை திரும்பி விடுதல் (distraction from mainstream life)

மாய வலைக்கு வெளியே, மற்றவர்களுடன் நாம் நேருக்கு நேர் நல்ல முறையில் பழகுவதற்குத் தேவைப்படும் அழகிய திறமைகள் (relationship skills) எல்லாம் அடிபட்டுப் போய்விடுதல்!

ஏனெனில் எந்த ஒன்றையும் குறித்து தெளிவாக சிந்திக்க இயலாத குழப்பமான மனநிலை (scattered thinking)

முடிவெடுக்கும் திறனில் தெளிவற்ற நிலை (difficulties in making good decisions)

ஆம்! நமக்கு பல்வேறு “வசதிகளை” அள்ளித்தந்த அதே வலை தான் இப்படிப்பட்ட பின் விளைவுகளையும் சேர்த்தே நமக்கு வழங்கியிருக்கின்றது!

இதனை இன்னும் சற்று ஆழமாகப் பார்ப்போம்.

எந்த ஒன்றையும் ஆழமாக சிந்திப்பதற்கு அமைதியான மனம் தேவை என்பது எப்படி ஒரு உண்மையோ அது போலவே நம்மைச் சுற்றியிருப்பவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்கும் அமைதியான மனநிலை ஒன்று அவசியம் தேவை!

ஆனால் அதீதமான மின்னணுத் தொடர்பு சாதனங்களைச் சார்ந்து தங்களை அதற்கு அடிமைப்படுத்திக் கொள்பவர்கள் – மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தங்களின் உறவுகளை செம்மைப்படுத்திக் கொள்ளும் திறனை இழந்து கொண்டிருக்கின்றார்கள் – அவர்களை அறியாமலேயே!

Functional memory என்று ஒன்று சொல்வார்கள். இது என்னவென்றால் – குறிப்பிட்ட ஒரு செயலில் நாம் ஈடுபடும்போது அந்த உடனடிச் செயலைச் செய்வதற்கான நினைவாற்றலையே இது குறிக்கும். இது மிகவும் சிறப்பாகச் செயல்பட்டால் தான் – எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் தேவையான முழுமையான கவனமும் (attention), ஒருமுகப்படுத்தும் திறனும் (concentration) கைவரப் பெறும்.

இந்த உடனடி நினைவாற்றல் நமது மூளையின் எந்தப் பகுதியில் உள்ளது என்றால் நமது முன் நெற்றிக்கு சற்று உள்ளே உள்ள பகுதியில் தான். அதனை ஆங்கிலத்தில் pre-frontal lobe என்று சொல்வார்கள்.

வலை உலகத்தில் தம்மை மறந்து ஒரு மாய உலகத்தில் உலவிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த உடனடி நினைவாற்றல் வெகுவாக பாதிப்படைந்து விடுகின்றது!

இதனால் ஏற்படுகின்ற மிகப்பெரும் நஷ்டம் – அவர்களால் மற்றவர்களுடன் நல்ல உறவை அமைத்துக் கொள்ளவே இயலாது என்பது தான்! இதன் பாதிப்பு குடும்பத்துக்குள்ளேயே எனில் கணவன் மனைவி உறவு என்னவாகும்?

சான்று ஒன்றுடன் விளக்குவோம்.

சற்று கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் எப்போது பார்த்தாலும் வலைதளத்துக்கு உள்ளேயே வாழ்ந்து கொண்டிருப்பவர் என்று வைத்துக் கொள்வோம். (மன்னியுங்கள்!)

உங்கள் மனைவி ஏதோ ஒன்றை (ஏங்க! வரும்போது குழந்தைக்கு “இது” வாங்கிட்டு வாங்க!) வாங்கி வரச் சொல்லியிருப்பார். அது “எது” என்று உங்கள் நினைவில் பதிந்தே இருக்காது! நீங்கள் தேமே என்று வந்து நிற்பீர்கள் வெறுங்கையுடன். வருமே கோபம் உங்கள் மனைவிக்கு!

இந்நிலை தொடர்ந்தால் கணவன் மனைவி உறவு என்னாகும்?

நாம் சொன்ன உதாரணம் நமக்குச் சாதரணமாகத் தோன்றலாம். அடிப்படையான விஷயத்தையே எடுத்துக் கொள்வோமே. கணவன் மனைவி பாலியலின் நிலைமை (sexual intimacy) என்னவாகும்? அடி வாங்கியிருக்கின்றது என்பது தான் அதிர்ச்சித் தகவல்!

மனைவி என்ன சொல்கிறாள் என்பதுவும் உங்கள் மூளையில் பதிவாகாது. நீங்கள் உங்கள் மனைவியுடன் என்ன பேசினீர்கள் என்பதுவும் உங்கள் நினைவில் தங்காது. தாம்பத்திய உறவுக்கும் கூட கவனக் குவிப்பு (excellent working memory) மிக மிக அவசியமாம்!

குழந்தைகளை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்து விடுங்கள் என்று சொல்வார் மனைவி. OK என்று மனைவியிடம் போனில் சொல்வார் கணவர். ஆனால் கவனம் இருந்திருக்காது. வீட்டுக்கு வந்து சேர்வார். குழந்தைகளின் நிலைமை? இது ஒரு சிறிய“வாக்குறுதி” (promise) தான்! இதனை கணவன் மறந்து விடும்போது கணவனின் சொற்களுக்கு என்ன மதிப்பு தருவாள் மனைவி? தன் மறதியை கணவன் நியாயப்படுத்தலாம். ஆனால் கணவன் தன் மனைவியின் “நம்பிக்கையை” (trust –அமானத்) இழந்து விடுவார்!

விளைவு? கணவன் மனைவியருக்குள் சண்டை சச்சரவு, வாக்குவாதம், அதிரடி விமர்சனங்கள், அவமானப்படுத்துதல், அமைதியாக ஒதுங்கிக் கொண்டு விடுதல்… இறுதியில் விவாக விலக்கு!

இவ்வளவு விளைவுகளுக்கும் அடிப்படைக் காரணம் வலை உலகம் நமக்களித்த distraction தான்!

இப்போது நாம் இறை வசனங்களுக்குச் செல்வோம்:

நாம் எடுத்துக் கொண்ட இறை வசனங்களில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான விஷயங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவோம்.

அவை என்னென்ன?

வெற்றி, ஈமான், தொழுகை, உள்ளச்சம், “வீணானவை”, பாலியல், அமானத், வாக்குறுதி, சுவனம் – இவை தான்!

வெற்றியுடன் துவங்குகிறது இறைவசனம். வெற்றியை இறை நம்பிக்கையோடு சேர்த்துச் சொல்கிறான் வல்லோன் அல்லாஹ்!

ஈமான் தொழுகையுடன் இணைக்கப்படுகிறது.

தொழுகை உள்ளச்சத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளச்சம் நமக்கு கவனக் குவிப்பை (concentration and mindfulness) வழங்குகிறது.

ஐந்து வேளை தொடர்ந்து தொழுபவர்கள் “வீணானவற்றில்” மூழ்கிட முடியாது.

அதாவது இறை நம்பிக்கையாளர்களை நவீன கால distraction – ஒன்றும் செய்து விட முடியாது.

தொழுகை தரும் கவனக் குவிப்பு – இறைநம்பிக்கையாளனின் தாம்பத்திய வாழ்க்கையைச் சிறப்பாக ஆக்கி விடுகின்றது. எனவே அவன் தன் திருமண பந்தத்தைத் தவிர்த்த வழிகளில் செல்வதில் இருந்து காக்கப்படுகின்றான்.

மனைவியிடம் தரும் வாக்குறுதிகளை அவை மிகச் சிறியதாக இருந்தாலும் தவறாது நிறைவேற்றுகிறான். மனைவி குளிர்ந்து போய் விடுகின்றாள். கணவன் எந்நேரத்திலும் தனக்காகவே இருக்கின்றான் என்று நம்புகிறாள்.

இது தான் உலகிலேயே அவர்களுக்குச் சுவர்க்கம்!

இவர்களே சுவனத்தின் வாரிசுதாரர்கள்!

சகோதரர்களைக் கேட்டுக் கொள்வது:

1. நீங்கள் வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கின்றீர்களா?

2. உங்கள் மனைவி உங்களுடன் அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபடுகின்றாரா?

3. உங்களுடைய தாம்பத்திய வாழ்வில் தொய்வு ஏற்பட்டிருக்கின்றதா?

இவை எல்லாவற்றுக்கும் உங்கள் பதில் “ஆம்!” எனில் – நீங்கள் மாறிட வேண்டிய தருணம் இப்போதே தான்!

நபிமொழி ஒன்றைக் கொண்டு நிறைவு செய்வோம்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘விடைபெறும் ஹஜ்’ஜின்போது ஆற்றிய பேருரையில், “பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடந்துகொள்ளுங்கள். அல்லாஹ்விடம் உடன்படிக்கை செய்தே அவர்களைக் கரம் பிடித்துள்ளீர்கள்; அல்லாஹ்வின் ஆணையின்பேரிலேயே அவர்களின் கற்புக்கு உரிமை பெற்றுள்ளீர்கள்” என்று கூறினார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)